உதவிக்கரம்
கதையாசிரியர்: என்.ஸ்ரீதரன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 1, 2026
பார்வையிட்டோர்: 114
(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதல் மணி அடித்து விட்டது.
எல்லோரும் அவரவர் வகுப்புகளுக்கு விரைந்தனர் .சீக்கிரமா வாடி” என்று கூவிய படி ரஞ்சனி தன் வகுப்பறையை நோக்கி ஓடினாள். மீனாவும் அவளுடன் சேர்ந்து ஓடினாள்.
இரண்டாவது மணி அடித்தது. இறைவணக்கம் முடிந்தது.
அதைத் தொடர்ந்து மைக்கில் ஒரு அறிவிப்பு.
பன்னிரண்டாவது வகுப்பு ‘ஏ’ செக்ஷனில் படிக்கும் மாணவி மீனா நேற்று நடந்த ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார்.
மாணவர்களின் கைதட்டல் கேட்டது.
வகுப்பில் எல்லா மாணவர்களும் மாணவியர்களும் பேசிக் கொண்டிருந்ததால் சப்தம் அதிகமாக இருந்தது.
ரஞ்சனியும் மீனாவும் பிளஸ் டூ படிக்கும் மாணவிகள். இணை பிரியாத் தோழிகள். ரஞ்சனி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அப்பா மத்திய அரசாங்க நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறார். அம்மா இல்லத்தரசி.
மீனா மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு அப்பா, அம்மா கிடையாது. பூக்காரிப் பாட்டியுடன் வசிக்கிறாள்.
அப்போது தமிழ் டீச்சர் சரஸ்வதி வகுப்பில் நுழைந்தார். சரஸ்வதி டீச்சர் ரொம்பக் கண்டிப்பானவர். வகுப்பில் கேட்ட கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்லிவிட்டால் கைதட்டத் சொல்லுவார். அவர் வகுப்பில் அடிக்கடி கரகோஷம் கேட்கும்.
தேன் போல் இனிக்கும் சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பாடம் எடுத்தார்..
ரஞ்சனி படிப்பில் மிகுந்த கவனம் செலுத்திப் படித்தாள். நேரத்தை வீணாக்க மாட்டாள். எறும்பைப் போல் உழைத்தாள். ஆனால் தினந்தோறும் வீட்டுக்கு எதிரில் அவள் வைத்த மரக்கன்றுகளுக்குத் தவறாமல் தண்ணீர் விடுவாள்.
நீ எதுக்கு இந்த பொறுப்பை எடுத்துக்கிறே? படிக்கிறதை விட்டு நேரத்தை வீணாக்குகிறாயே ? என்று அடிக்கடி அங்கலாய்ப்பார் அவள் அப்பா சுந்தரம். அவர் எப்பவும் அப்படிதான். வீட்டு நிழலில் நாய் படுத்திருந்தால் கூட அவருக்குப் பொறுக்காது. விரட்டி விடுவார்.
தேர்வு முடிவுகள் வந்து விட்டன. ரஞ்சனி 1194 மதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே இரண்டாவது இடம் பிடித்திருந்தாள். பள்ளிக்கூடத்தில் முதல் மாணவியாய் வந்திருந்தாள்.
பேப்பரில் அவள் புகைப்படமும் பேட்டியும் வந்திருந்தது. ஆசிரியரும் பெற்றோரும்தான் தான் அதிக மார்க வாங்கியிருப்பதற்கு முக்கிய காரணம் என்று பேட்டி கொடுத்தாள். பார்வதி தன் மகளை நினைத்து மிகவும் பெருமைப் பட்டாள்.
சுந்தரத்துக்கு இரட்டை மகிழ்ச்சி . ரஞ்சனியின் படிப்புக்காக இரண்டு லட்சம் சேர்த்து வைத்திருந்தார். பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு மேனேஜ்மெண்ட் கோட்டாவிற்கு பணம் தேவையாய் இருக்கும் என்று முன் ஜாக்கிரதையாய் பேங்கிலிருந்து பணத்தை எடுத்து வீட்டில் வைத்திருந்தார். பணம் மிச்சமாச்சு. இரண்டாவது ரஞ்சனி விரும்பிய பாடப் பிரிவு கிடைத்துவிடும். ”சாதிச்சுட்டே ரஞ்சனி, உனக்கு இனிமே நல்ல காலம் என்று குதூகலத்துடன் சொன்னார்.
மீனாவும் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டாள். ஆனால் மதிப்பெண் அதிகமில்லை. எண்பது விழுக்காடுதான். ரஞ்சனியின் வீட்டுக்கு மீனா வந்தாள். தோழியை ஆரத்தழுவிக் கொண்டாள்.
”நீ எந்தக் கல்லூரியில் சேரப்போகிறாய் மீனா?”
”எனக்கு பிஎஸ்சி கம்பூட்டர் சயின்ஸ் படிக்க ஆசை. ஆனால் நான் படிக்கவே போறதில்லை.”
”ஏன்?”
“வேறென்ன, பணமில்லமைதான். பூ வியாபாரத்திலே வர்ற பணம் சாப்பாட்டுக்குத்தான் சரியா இருக்கு. பாட்டிக்குப் பூ விற்க உதவப் போகிறேன்.”
மீனா நகர்ந்தவுடன் பார்வதி கேட்டாள்.
“ஏண்டி, மீனா எந்த காலேஜில் சேரப் போறா?”
”அவள் எந்த காலேஜிலும் சேரப் போறதில்லையாம். சாதாரண டிகிரி படிக்கிறத்துக்குக் கூட பணமில்லை. அப்பா, அம்மா அவளுக்கு கிடையாது. அவளுக்கு ஏதாவது செய்யணும் என்று பார்க்கிறேன்.“
”நீ என்னடி செய்ய முடியும்?”
“எனக்கு அப்பா படிப்புக்காகச் சேர்த்து வைத்த பணம் மிச்சமாச்சு இல்லயா? நாம் ஏன் மீனாவின் படிப்புக்கு உதவி செய்யக் கூடாது. அவளுக்கு மூன்று வருடப் படிப்புத்தான்…”
”ஏண்டி, நீ சொல்றது நடக்கிற காரியமா? பணம் மிச்சமானால் என்ன? உன்னை கட்டிக் கொடுக்கும்போது தேவையாய் இருக்கும். அப்பாவைப் பத்தி தான் உனக்கு தெரியுமே? எச்சக் கையிலே காக்கா ஓட்ட மாட்டார்.
சரியான கஞ்ச பிசுநாறி. அப்படின்னு நான் சொல்லல. மத்தவங்க எல்லாம் சொல்றா. அவர் இதுக்கெல்லாம் ஒத்துக்கவே மாட்டார்.” என்று கூறிச் சிரித்தாள்.
“அம்மா, எனக்காக அப்பாவிடம் பேசிப் பாரேன். ப்ளீஸ், ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
எனக்குப் படிப்பை பற்றி எதுவும் தெரியாது. சரஸ்வதி டீச்சரிடம் கேக்கறேன். அவங்க என்ன சொல்றாங்கன்னு கேக்கலாம்.
பார்வதி வீட்டுக்கு வெளியே வந்த போது சரஸ்வதி டீச்சர் எதேச்சையா அந்தத் தெரு வழியாக வந்து கொண்டிருந்தார். பார்வதி டீச்சரைப் பார்த்து, ”அவள் தோழி மீனா பிஎஸ்சி கம்ப்யூட்டர் படிக்க வசதியில்லையாம்.. மீனாவின் படிப்பு செலவை நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்று ரஞ்சனி கூறுகிறாள். இப்ப இருக்கும் விலைவாசியில் ஒரு குழந்தையைப் படிக்க வைப்பதே கடினம். இன்னொன்று என்றால் சொல்லவே வேண்டாம். முழி பிதுங்கி விடும். அவள் சொல்வது சரியா? தவறா ? என்று எனக்குத் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் டீச்சர்.”
ரஞ்சனியின் எண்ணம் மிகவும் உயர்ந்தது. மற்றவர்களுக்கு உதவி செய்வது மிக நல்ல பண்பு ; ரொம்பப் பெரிய விசயமாச்சே.வசதி இல்லாதோருக்கு உதவுதை ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான சேவை,
”அன்னசத்திரமும் ஆலயம் கட்டுவதைவிடச் சிறந்தது, ”ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றான் கவி பாரதி. அடிமட்டத்திலிருக்கும் ஏழைகளுக்குச் செய்யும் உதவி நாம் கடவுளுக்கு செய்யும் உதவியாகத்தான் கருதப்படும்.” என்று பார்வதி.
ரஞ்சனி செய்ய நினைப்பது மிகவும் நல்ல செயல் என்ற தெளிவு பெற்ற பார்வதி மனநிறைவுடன் வீட்டுக்கும் நுழைந்தாள்.
சுந்தரம் ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் நெற்றியில் பட்டை பட்டையாய் வீபூதி. “ பித்தா… பிறை சூடி…… வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது.
“ஏங்க, ஓண்ணு உங்க கிட்டே கேட்கணும்.”
“என்ன வேணும் சொல்லு.. பணத்தைத் தவிர எது வேண்டுமானாலும் கேள்.”
”அதானே பார்த்தேன்! நீங்களாவது பணத்தைக் கொடுக்கிறதாவது. பண விசயம்தான். ஆனால் நல்ல விசயத்துக்கு. மீனா பிஎஸ்சி கம்பூட்டர் கோர்ஸ் சேர்க்கறதுக்கு ரஞ்சனி, பணம் கொடுக்க ஆசை பட்றா. நான் சரஸ்வதி டீச்சரைக் கேட்டேன். கல்விக்கு உதவி செய்றது ரொம்ப உத்தமமான விசயம்னு சொன்னா. அப்படி செய்கிறது நல்லதுன்னு எனக்கும் தோன்றது. ரஞ்சனிக்குத்தான் பணம் கொடுக்காமே சீட் கிடைக்கப் போகிறதே. சேர்த்து வைத்த பணத்தில் மீனாவுக்குப் படிக்க உதவி செய்யுங்களேன்.”
”அவளுக்கு அப்பா, அம்மா கிடையாது. மூணு வருஷம் சீக்கிரமாய் பறந்துவிடும்.அவளை என் சகோதரி மாதிரி நினைத்து உதவுங்களேன்“ என்றாள் ரஞ்சனி.
சுந்தரின் முகம் இருண்டது. பார்வதியைப் பார்த்து சினத்துடன் சொன்னார்.
“மீனா என் அக்கா பெண்ணா? இல்லை உன் அண்ணன் பெண்ணா ? அவள் படிப்புக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்?.. நான் மீனாவுக்குப் பண உதவி செய்ய மாட்டேன்” என்று இதயம் படபடக்க பேசி, அலமாரியிலிருந்த பண கவரை ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டு நான் இப்போதே பேங்கில் பணத்தைப் போட்டுவிட்டு வருகிறேன் என்று அவசரமாக வீட்டை விட்டு விரைந்தார்.
தெருவில் நடந்தார். அந்த வீதியின் கடைசியில்தான் மீனாவின் பாட்டி பூ விற்றுக் கொண்டிருப்பாள். அன்று மீனா பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். பூக் கடைக்குப் பக்கத்தில் ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் முன்னால் ஒரு தட்டு இருந்தது.
அவர் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அவர் பக்கத்தில் வேகமாகச் சென்ற ஒரு இரண்டு சக்கர வாகனத்தின் பின் பக்கம் அமர்ந்திருந்தவர் கையில் வைத்திருந்த இரும்பு தடி அவர் மண்டையில் பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார்.. அவர் கையிலிருந்த பையிலிருந்து பண கவர் விர்ரென்று பறந்து சென்று குருட்டுப் பிச்சைக்காரன் முன் வைத்திருந்த தட்டில் பொத்தென்று விழுந்தது.
சுந்தரம் இதைக் கவனிக்கவில்லை. அதற்குள் நான்கு பேர் அவரைச் சூழ்ந்து கொண்டு அவர் எழுந்திருக்க உதவி செய்தனர். ஒருவர் அவர் கையைப் பிடித்து வீட்டில் கொண்டு போய் விட்டார்.
பார்வதி திடுக்கிட்டுப் போனாள். பணம் பத்திரமாய் இருக்கிறதா? உங்களுக்கு அடி படவில்லையே? என்று கேட்டாள்.. காலியாய் இருந்த பையைப் பார்த்து சுந்தரம் தலையில் இடி விழுந்த மாதிரி அதிர்ச்சி அடைந்தார். “ப ண..ம்”. என்று சொல்லிக்கொண்டே பொத்தென்று சோபாவில் விழுந்தார்.
“இரண்டு லட்சங்க… எங்கே விட்டீங்க? எங்கேயோ விழுந்து விட்டிருக்கு வாங்க போய்த் தேடலாம்” என்று பார்வதி சொல்லிக் கொண்டிருக்கும் போது மீனா பண கவருடன் வந்தாள் மீனா. ”உங்க பையிலிருந்த பண கவர் குருட்டுப் பிச்சைக்கரன் தட்டில் விழுந்து விட்டது. நான் அவனிடம் சண்டை போட்டு எடுத்து வந்தேன். இந்தாங்க பணம்” என்றாள். ‘பணம்’ என்னும் வார்த்தையைக் கேட்டவுடன் சுந்தரத்திற்குப் போன உயிர் திரும்பியது. அதற்கு அறிகுறியாக உடம்பு அசைந்தது. கண்ணைத் திறந்து எழுந்தவர், கையை நீட்டி கவரிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து மீனாவிடம் கொடுத்து “ரொம்ப நன்றி மீனா. உன் படிப்புக்கு நான் உதவி செய்கிறேன் உனக்கு உதவ கூடாதுன்னு சொன்னேன். ஆனால் எனக்கு நீ உதவி செஞ்சுட்டே. நான் கெட்டதை நினைச்சேன். அதனால் விபத்தைச் சந்தித்தேன். என் தவறை உணர்ந்துவிட்டேன். நீயும் என் பெண் மாதிரிதான்” என்றார்.
தன் கணவனின் மனமாற்றத்தை நினைத்து அதிக மகிழ்வு கொண்ட பார்வதி திருப்தியுடன் சமையலறைக்குள் சென்றாள்.
ரஞ்சனியின் உள்ளம் மகிழ்ச்சியினால் திக்கு முக்காடியது.
அடுத்த நாள் காலை பள்ளியில் முதல் மணி அடித்துவிட்டது.
எல்லோரும் அவரவர் வகுப்புகளுக்கு விரைந்தனர்.
இரண்டாவது மணி அடித்தது. இறைவணக்கம் முடிந்தது.
அன்று சரஸ்வதி டீச்சர் அறிவிப்பு செய்தார்
”வாழ்க்கை வாழ்வதற்காகவும் இருக்கலாம் ; வாழ வைப்பதற்காகவும் இருக்கலாம். சமீபத்தில் ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் இரண்டாவது இடத்தில் வந்த நம் பள்ளி மாணவி ரஞ்சனி, நம் பள்ளியில் படித்த இன்னொரு ப்ளஸ் 2 மாணவியான மீனாவுக்குக் கல்லூரியில் படிக்க உதவிக்கரம் நீட்டி அவள் வாழ்க்கையில் ஒளியேற்றி இருக்கிறார். ரஞ்சினியால் நம் பள்ளிக்குப் பெருமை சேருகிறது.”
மாணவர்களின் கரகோஷம் எழுந்தது. அது மட்டுமல்ல அந்த அறிவிப்பு சில மாணவர்களின் பிஞ்சு இதயத்திலும் ஒரு நல்ல எண்ணத்தை வித்தாக ஆழ வேருன்றியது.
– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com
தொடர்புள்ள சிறுகதைகள்
அகல் விளக்கு
மு.வரதராசன்
August 1, 2026
அகல் விளக்கு
மு.வரதராசன்
July 29, 2026
வெள்ளை நிறத்தொரு பூனை
எஸ்.மதுரகவி
July 26, 2026