அம்மா வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 10, 2026
பார்வையிட்டோர்: 28 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்


(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மணி 11.00.அந்த வேளையில் கோயம்பத்தூர் சிறைச்சாலை அமைதியாய் இருந்தது.

வேணு சிறை வளாகத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னைப் போலவே குழந்தைகளும் சிறையில் இருக்க வேண்டியாதாயிற்றே என்று நினைத்து வருந்தினான். குழந்தைகளின் தலைஎழுத்து … என்று மனம் நொந்தான்.

“என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய் ?” என்று அவன் சக ஜெயில் கைதியான சரவணனின் குரல் கேட்டு நனவுலகத்துக்கு வந்தான்.

“ஒன்றுமில்லை அந்தக் குழந்தைகளின் விதியை நினைத்தேன்”.

”என் குழந்தைகள்தான் அவை. இரட்டைக் குழந்தைகள். ஓட்டு மொத்த குடும்பமே சிறையில் அடைக்கப்பட்டால் குழந்தைகள் ஐந்து வயதுவரை பெற்றோருடன் சிறையில் இருக்கலாம். இன்று அவர்களுக்கு ஐந்து வயது முடியப் போகிறது .”

அவர்கள் எங்கே போவார்கள்?

“யாரோ ஒரு பெண்மணி. பெயர் வந்தனா. புண்ணியவதி அவர் சிறையிலுள்ள கைதிகளின் குழந்தைகளுக்காக ஒரு காப்பகம் நடத்திக் கொண்டிருக்கிறாராம். அவர் நடத்தும் காப்பகத்தின் பெயர் அம்மா வீடு. ஆதரவற்ற குழந்தைகளுக்காக அவர் அம்மாவாக இருக்கிறார். அவர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நாங்கதான் கொலை செய்துவிட்டு அடைபட்டுக் கிடக்கிறோம். குழந்தைகளாவது நல்லபடியாக வளரட்டும் “ என்றான்.

“நானும்தான் கொலைகாரன்” என்றான் வேணு.

அவன் மனத்திரையில் நினைவலைகள் பின்னோக்கிச் சென்றது.

கல்யாணம் ஆகி இருபது வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை என்பதால் அவன் பெற்றோர் அவனுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்தனர். பணக்காரக் குடும்பம். அரண்மனை போன்ற வீடு, நிலம், தோட்டம் எல்லாம் ஏராளம் என்பதால் அவன் கேட்டதெல்லாம் கிடைத்தது.

அவன் குழந்தையாய் இருக்கும்போதே செல்லமாய் வளர்க்கப்பட்டதாலோ என்னமோ அடிக்கடி கோபப்படுவான். கோபப்படுவது அவன் சுபாவம். குழந்தையிலிருந்தே அவன் ஆத்திரக்காரன் : முன்கோபியும் கூட.

அவன் பத்தாவது படிக்கும் போது அவன் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார்..அம்மாதான் அவனை வளர்த்தாள். வளர்த்தாள். அவன் வளர்ந்தான், மிகவும் கோபக்காரனாக வளர்ந்தான்.

கோபம் வந்தால் அவனுக்குக் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்துவிடும். உதட்டைக் கடிப்பது, கையை உதறுவது போன்ற உடல் மொழிகளில் அவன் கோபத்தை வெளிப்படுத்துவான். கோபப்படுவதைத் தவிர அவனிடம் வேறு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கோபம்தான் அவனுடைய பலவீனம்.

அவனுக்குத் திருமணம் நடந்தது. ஏழையானாலும் நளினமும் அழகும் நிறைந்த பெண். அவனும் அவளிடத்தில் ஆசையாகத்தான் இருந்தான். திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.

காபியில் சூடு குறைவு போன்ற சின்ன விசயத்திற்குக் கூட மனைவியிடம் சீறுவான். ரொம்பக் கோபம் வந்தால் கையில் கிடைத்ததைத் தூக்கி முகத்தில் எறியாத குறையாக விட்டெறிவான். கோபம் வருவது இயற்கை. ஆனால் அளவுக்கு மிஞ்சின கோபம் ஆபத்து என்பதை அவன் உணரவில்லை.

அவன் தந்தை விட்டுப் போன சொத்து ஏராளம். ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம். அதனால்தான் என்னமோ அவன் வேலைக்குப் போய் சம்பாதிக்கவில்லை.

ஒரு நாள் அந்த விபரீதம் நடந்து விட்டது. மனைவியிடம் உணவு கொண்டு வரச் சொன்னான். அவள் உடனே வரவில்லை.

சாப்பிட்டுவிட்டு வேலைக்கா போகப் போகிறீர்கள்? என்று சமையலறையிலிருந்து சிரித்தாள். அவன் வேலைக்குப் போகாததைக் கேலி செய்வது போல தோன்றியதால் கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவளருகிலிருந்த கத்தியை எடுத்து மனைவியின் வயிற்றில் பலமுறை குத்தினான். மனைவி ரத்தவெள்ளத்தில் மிதந்தாள். “என்ன காரியம் செஞ்சுட்டீங்க. உங்கள் கோபத்தால்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் உயிர் பிரிந்தது. அவன் அதிர்ச்சி அடைந்தான்.

அவள் உடலை மடியில் போட்டுக் கொண்டு கதறி அழுதான். ”ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு” என்னும் பழமொழிக்கு உதாரணமானான். தாகம் போன்று தன்னுள் எழும் உணர்ச்சிக்கு ஒரு மனிதன் அடிபணிந்துவிட்டால் அந்தக் கோபம் அவனை அழிவுக்கு இழுத்துச் செல்கிறது.

கையில் கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தான். சிறைச்சாலை என்னும் கூட்டுக்குள் அடைக்கப்பட்டான். அவன் தாயார் பெரிய வழக்கறிஞரை வைத்து அவனை விடுவிக்க முயற்சி செய்தாள்.

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் அவனுக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கியது. ஒரு நொடிப்பொழுது சிந்திக்காமல் ஒருவன் செய்யும் தவற்றுக்கு பரிகாரம்தான் சிறைத்தண்டனை.

வெளி உலகில் வாழ்வதுபோல் சிறையிலும் வாழலாம். ஆனால் அங்குக் கட்டுப்பாடுகள் உண்டு. அந்தக் கட்டுப்பாடுகள்தான் சிறையில் மனித வாழ்வில் மாற்றங்களை உண்டாக்குகிறது.

சிறையில் இருப்பது முதலில் அவனுக்குக் கடினமாகத்தான் இருந்தது. தனி அறையில் தத்தளித்தான். போகப்போகப் பழகி விட்டது . செய்த தவறை நினைத்து நினைத்து வருந்துவான். ஆறு மாதத்திற்குள் அவன் தாயார் மறைந்து விட்டார். அவன் தனிமைப்பட்டுப் போனான். துன்பம் சேர்ந்தாற்போல் வரும் என்பது அவன் விஷயத்தில் உண்மை.

சிறையிலும் நேரத்தை உபயோகமாகச் செலவழிக்கலாம். அங்குள்ள நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படிப்பான். தொலைதுர கல்வியில் தமிழ் இலக்கியத்தில் “ எம். ஏ “ பட்டப்படிப்பும் படித்து தேர்ச்சிப் பெற்றான். கவிதையும் எழுதுவான்.

மனத்தைக் கட்டுப்படுத்த தியானம், மூச்சுப் பயிற்சி தினந்தோறும் செய்வான். அவன் மனம் மெல்ல மெல்லத் தூய்மை அடைந்தது. புத்தகங்களைப் படித்ததால் அவன் அறிவும் பண்பும் வளர்ந்தது. பிறைச் சந்திரன் வளர்ந்து நிறைவாகி குளிர்ச்சி தரும் முழு நிலா ஆவது போல் கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தை விட்டு விட்டு சாந்தமூர்த்தி ஆகிவிட்டான்.கடன்பட்டவன் ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு மாயமாகி விடுவதைப் போல் அவனுள் இருந்த கோபம் என்னும் கெட்ட மிருகம் திடீரென்று ஒரு நாள் அவனை விட்டு ஓடிப் போய்விட்டது.

சிறையிலிருந்து விடுதலையானவுடன் வாழ்க்கையில் மற்றவருக்குப் பயனுள்ளதாக ஒத்தாசையாக வாழ வேண்டும் என்று அவன் மனம் அடிக்கடி நினைத்தது.

தான் படித்ததோடு இல்லாமல் அங்கிருந்த ல்லாமல் அங்கிருந்த சிறையிலிருக்கும் கைதிகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறான்.

”400 (நானுறு), உன்னைச் சிறைக்காவலர் அழைக்கிறார் “ என்று சொன்னவுடன் அவன் உடனே சிறைக்காவலர் அறைக்குள் சென்றான்.

”வேணு, உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. உன் நன்னடத்தை காரணமாக உன் தண்டனைக் காலம் பதினைந்து வருடங்களிலிருந்து பத்து வருடங்களாகக் குறைத்து விடுதலை செய்ய அரசாங்க உத்தரவு வந்திருக்கிறது. இன்றோடு நீ சிறைக்கு வந்து பத்து வருடங்கள் முடிகிறது எனவே இன்று உனக்கு விடுதலை “ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சிறைக்காவலர்.

“நான் இவ்வளவு சீக்கிரம் விடுதலை ஆவேன் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை” என்று முணுமுணுத்துக் கொண்டே வேணு தன் அறைக்குத் திரும்பினான்.

சரவணிடம் சொல்லிவிட்டு விடைபெறச் சென்றபோது ஒரு வெள்ளை பெண்மணியை அவ்விடத்தில் கண்டான். உடல் முழுவதும் வெண்மையாய் செய்த லீகோடெர்மா என்னும் நோய் அவளுக்கு வந்திருக்கிறது என்பது பார்த்தாலே தெரியும். வெள்ளை வெளேரென்றிருந்த அவளைப் பார்த்ததும் அவன் அதிர்ந்து போய் விட்டான். வயது நிச்சயமாக நாற்பதுக்கு மேல் இருக்கும். தனித்துப் பார்ப்பவரை உற்று நோக்க வைக்கும் வெள்ளைத் தோல். கண் இரப்பைகள் கூட வெண்மையாய் இருந்தது. நெஞ்சில் ஈரமும் உணர்ச்சி மிகுந்தவளாகவும் காணப்பட்டாள். சரவணன், ”இவர்தான் வந்தானா. ”அம்மா வீடு” குழந்தைகள் காப்பகத்தைக் காந்தி நகரில் வைத்திருக்கிறார். பணம் இல்லாவிட்டாலும் கஷ்டப்பட்டுக் காப்பகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். என் குழந்தைகளை அழைத்துப் போக வந்திருக்கிறார்” என்று அறிமுகம் செய்து வைத்தான்.

”என்னிடம் பணம் இருந்தும் என்னால் நல்ல செயல்களைச் செய்ய முடியவில்லை. பணமில்லாமலே மனிதத் தொண்டு செய்கிறாளே” என்று மரியாதையோடு அவளை நோக்கி கைகுவித்து வணங்கினான். அவளும் இவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள்.

அவன் சிறைச்சாலை சீருடைகளைக் களைந்து விட்டு தன் உடைகளை அணிந்து கொண்டு கூண்டிலிருந்து வெளிப்பட்ட பறவையைப் போல் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தான். பேருந்தில் ஏறி தன் வீட்டை அடைந்தான்.

வேணுவிடம் சிலர் பணம் கேட்டு வந்தனர். அவனைப் பலர் மதிக்கவில்லை. எல்லாரும் பயத்துடனுடம் வெறுப்புடன் பார்த்தார்கள். துஷ்டனைக் கண்டது போல் தூர விலகினார்கள். அவன் பிறரிடம் பேச முயற்சி செய்து தோல்வியே அடைந்தான். கோடி கோடியாய் பணம் இருந்தால் போதுமா? யாரும் மதித்துப் பேச வேண்டாமா? அவனும் யாரையும் பொருட்படுத்தவில்லை. ”சமூகம் ஏன் தன்னை உதாசீனம் படுத்துகிறது? தவறு செய்தவன் திருந்தவே மாட்டானா?” என்று எண்ணினான்.

காலை எழுந்து ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி செய்வான். அன்றும் வழக்கம் போல் நடைப் பயிற்சி செய்யக் கிளம்பி விட்டான். அவன் அப்படிப் போகும்போது ஒரு வீட்டிலுள்ள ஒரு பெண்மணி முறத்திலுள்ள குப்பையைப் பக்கத்து வீட்டில் கொட்டியதைப் பார்த்து அதிர்ந்து விட்டான். இதுதான் மனித நியதி போலும். எல்லோரும் சுயநலத்துடன் இருக்கிறார்கள். யாராவது ஓரிருவர் மட்டும் பொதுச்சேவை செய்யும் எண்ணத்துடன் இருக்கிறார்கள் சிறையில் பார்த்த வெள்ளைப் பெண் வந்தனாவைப் போல் என்று நினைத்தான். சிறைக்கைதிகளின் குழந்தைகளைக் காப்பகத்தில் வளர்த்து உன்னத சேவை செய்யும் வந்தனா மீது அவன் மதிப்பு அதிகமாகியது. அவள் காப்பகத்துக்குப் போய் சரவணனின் குழந்தைகளைப் பார்க்க வேண்டுமென நினைத்தான். அவனுக்கு வாழ்க்கை இனிக்கவில்லை. வீடு பற்றி எரியும்போது தண்ணீருக்காகக் கிணறு வெட்டுவதுபோலில்லாமல் இப்போதே ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று மனம் அடிக்கடி நினைத்தது .சமூகத்திற்குப் பயனுள்ள செயலைச் செய்ய வேண்டுமென உறுதி பூண்டான்,

காந்திபுரம் மூன்றாவது மெயின் ரோடு 33 எண் . அங்கிருந்த ”அம்மா வீடு” குழந்தைகள் காப்பகம் அன்று பரபரப்பாக காணப்பட்டது. வந்தனா நடத்தும் அக்காப்பகத்தில் ஐம்பது சிறுவர்கள் இருந்தனர். காலைச் சிற்றுண்டிக்கு வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள் . அந்தக் காப்பகத்தில் ஒரு டாக்டரும் உண்டு. ”பசங்களா கூச்சல் போடாமல் சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு வந்தனா வெளியே கிளம்ப தயாரானாள். காப்பகத்துக்குப் பணம் பத்தாயிரம் தேவையாய் இருந்தது. அதற்காக ஒரு புரவலரைப் பத்தாவது முறையாகப் பார்க்கப் போகிறாள்.

வேணு காலை வழக்கம்போல் நடந்து போகும்போது நெஞ்சு வலி வந்ததால் தள்ளாடி ஒரு வீட்டின் முன் விழப் போனவன் அந்த வீட்டின் பெரிய இரும்பு கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். அப்போது கதவைத் திறந்து வெளியே வந்த வந்தனா அவனைப் பார்த்து என்ன ஆச்சு ஐயா உங்களுக்கு ” பதறினாள்.

அவன் மார்பில் கையை வைத்துக்கொண்டு, ”நெஞ்சு வலிக்கிறது” என்று முனகினான். “இவரை உள்ளே கூட்டிட்டு வாங்க“ என்று அங்கு நின்றிருந்த செக்குரிட்டியிடம் சொல்லி விட்டு ,” டாக்டர்” என்று கத்திக் கொண்டே ஓடினாள் வந்தனா. அவனுக்கு அவளைப் பார்த்தவுடன் சிறைச்சாலையில் முன்னொரு நாள் அவளைப் பார்த்தது ஞாபகம் வந்து விட்டது. காவலாளி அவன் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான். டாக்டர் சந்திரன் அவனைப் பரிசோதனை செய்து விட்டு உடனடியாக மருந்து கொடுத்தார். ”நிலைமை சீரியஸ்” என்று சொல்லி உடனே பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்க அம்புலன்ஸக்கு ஏற்பாடு செய்தார். அங்கிருந்த சிறுவர்களைப் பார்த்த அவன் எப்படி வந்தனா பணமில்லாமல் இவ்வளவு குழந்தைகளைக் காப்பாற்றுகிறாள்” என்று எண்ணி ஆச்சர்யப்பட்டான்.சரவணின் குழந்தைகள் அவனருகில் வந்தனர். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ”நான் பணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நான் கிளம்புகிறேன் “ என்று சொல்லிவிட்டு வந்தனா வெளியே போய் விட்டாள்.

டாக்டர் அனுப்பிய ஆளுடன் வேணு அங்கிருந்து கிளம்பி ஆஸ்பத்திரிக்குப் போகும்போது மொபைல் போனைக் காப்பகத்திலே விட்டு விட்டதை யாரும் கவனிக்கவில்லை.

ஆஸ்பத்திரியில் அவனுக்கு ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்த பிறகு அவனுக்கு நா வறட்சி ஏற்பட்டது. கட்டிலிருந்தபடியே சைகை காட்டி ”குடிக்கத் தண்ணீர்” என்றவன் கேட்டதும் அங்கிருந்த நர்ஸ் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவளிடம் என் அலைபேசியை “அம்மா வீடு” காப்பகத்திலே விட்டு விட்டு வந்து விட்டேன். தயவு செய்து யாரையாவது அனுப்பி அதை எடுத்து வரச் சொல்லுங்கள்” கெஞ்சினான். டாக்டர் இப்போ வந்து விடுவார் அவர் வந்ததும் நான் ஏற்பாடு செய்கிறேன். கவலைப் படாதீர்கள்” என்றாள் நர்ஸ்.

பணம் கிடைக்காத ஏமாற்றத்துடன் காப்பகத்துள் நுழைந்த வந்தனா, வேணுவின் அலைபேசியைப் பார்த்துவிட்டு, ”அடடா, இதை விட்டுவிட்டுப் போய்விட்டாரே, நான் உடனே போய் கொடுத்துவிட்டு அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டாள்.

வேணுவுக்கு இருதய வலி லேசாக இருப்பது போல் தோன்றியது. அறைக்குள் வந்த நர்ஸிடம், ‘நெஞ்சு வலிக்கிறது, டாக்டரை வரச்சொல்லுங்கள் என்றான். நர்ஸ் நகர்ந்ததும், ஒரு தாளில் ஏதோ எழுதத் தொடங்கினான். அவன் எழுதிக் கொண்டே இருந்தான். வந்தனா அவன் இருந்த அறைக்குள் நுழையும்போது அவன் கையிலிருந்த பேனா திடீரென்று கீழே விழுந்தது. அவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். டாக்டரும் அந்தச் சமயம் வந்து விடவே உடனே சிகிட்சை செய்தார்.

வந்தனா மொபைலை கட்டிலில் அவன் பக்கத்தில் வைத்துவிட்டுக் கிளம்ப யத்தனித்தாள். அவன் கீழே விழுந்த தாளைக் காண்பித்து முனகினான். வந்தனா அதை எடுத்தாள்.

அப்போது வேணுவிடமிருந்து ஒரு சப்தம் வந்தது . அவன் கண் குத்திட்டு நின்றது. டாக்டர் அவனைப் பரிசோதித்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார். ”உயிர் போய்விட்டது என்றார். வந்தனாக்கு கண்கள் பனித்தது . அறிமுகம் அதிகமாகவில்லையென்றாலும் மனிதாபிமானத்தால் அவள் கலங்கினாள். கையிலிருந்த தாளை டாக்டரிடம் கொடுத்தாள்.அவர் அதை வாங்கி ஒரு கண்ணோட்டம் விட்டு அட! உயில் ”என்று திகைப்போடு சொல்லிவிட்டு உரக்கப் படித்தார்.

“வேணுவாகிய நான் சுய நினைவோடு எழுதிய உயில். எனக்கு வாரிசுகள் யாருமில்லை. என்னிடம் பல கோடி மதிப்புள்ள பணமிருந்தும் நான் இதுவரை ஒரு நல்ல செயலையும் செய்ததில்லை. எனக்கு நெஞ்சு வலி அடிக்கடி வருகிறது. எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. சாவதற்குள் நல்ல செயல் செய்ய வேண்டும் என்பதால் நான் தீர யோசித்து இந்த உயிலை எழுதுகிறேன். என்னுடைய எல்லாச் சொத்துகளையும் வந்தனா நடத்தும் அம்மா வீடு” காப்பகத்துக்குக் கொடுத்து விடுகிறேன். அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு என் பணம் பயன்படட்டும்.

இப்படிக்கு
வேணு

வந்தனாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *