சாணை  பிடிக்கலையோ சாணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 27, 2026
பார்வையிட்டோர்: 18 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

காலை 7 மணி இருக்கும். சாணை பிடிக்கலையோ சாணை… என்று கூவியபடி கத்தி அருவா கத்தரிக்கோல் அருவாமணைகளுக்கு சாணை பிடிக்கும் வீரப்பன் முதுகில் சாணை மிஷினை தொங்கவிட்டபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.

மூணடி உயரத்தில் நாலு இரும்புக்குழாய்களாலான ஒரு ஸ்டாண்டின் நடுவில் ஒரு சைக்கிள் ரிம்தான் வீல். காலடியில் மேலும் கீழும் தையல் மிஷினை மிதிக்கும் பெடல் போல மரப்பலகையாலான ஒரு கட்டை. நாலு இரும்புக் குழாய்களையும் ஒன்று சேர்த்து அதோடு மேல் பகுதியில் இணைத்து பத்த வைக்கப்பட்ட சாணைக்கல்.

ரிம்மும் சானைக்கல்லையும் இணைக்கும் தோல் அல்லது ரப்பராலான வார். பலகையை மிதிக்கும்போது ரிம்மோடு சேர்ந்து சுழலும் சாணைக்கல்லில் இரும்பாலான உபகரணங்களை வாகாக பிடித்து உராய விட்டால் தீப்பொறி பறக்கும். பத்து நிமிடங்களில் மழுங்கிப்போன கத்தி அருவாமணைகள் புதுப் பொலிவுடன் கூராகும். இதுதான் வீரப்பனின் பின்புற முதுகில் தொங்கி முன்புர வயிற்றை ரொப்பும் வாழ்வாதாரம்.

அந்த காலை நேரத்திலேயே அவனது உடம்பு வேர்த்திருந்தது.முகத்தில் சோர்வு தெரிந்தது. வேலை முடித்து வீட்டுக்குத் திரும்புபவனின் களைப்பு அப்பதான் வேலையை ஆரம்பிக்கும் வீரப்பனின் தளர்ந்த நடையில் தெரிந்தது.

அவனுக்கு முன்னால் அம்பது அடி தூரத்தில் இவனது கூவலின் எதிரொலி போல் சாணை பிடிக்கலையோ சாணை என்று கூவியபடி விசுக் விசுக் என்று நடந்து கொண்டிருந்தாள் அவனது மனைவி முத்துப்பேச்சி. நாலரை அடி உயரத்தில் குச்சியாக இருந்த முத்துப்பேச்சி வாக்கப்பட்டு வரும்போது அத்தனை அழகாக இருந்தாள். வறுமை அவளை வறுத்தெடுத்து வரட்டியாகத்தட்டி தெருக்களில் உருட்டி விட்டிருக்கிறது

இடை இடையே திரும்பிப்பார்த்து சாணை பிடிப்பவனையே சாணை தீட்டுவது போல தன் கூர் நாக்கால் அவனை குத்திக் கிளறி வைதாள். எல்லாம் வஞ்சு உரிச்சு உப்பைத் தடவிய பின் முத்தாய்ப்பாக விளங்காதவன் எனும் மங்கள வார்த்தை மட்டும் வீரப்பன் காதில் விழும். கேட்டு கேட்டு சலித்து விட்டது.

இவனுக்கு வசவு கேட்கும் இடைவெளி தூரத்தில் சீராக நடந்து கொண்டிருந்தாள் முத்துப்பேச்சி. இவனை நம்பி வாக்கப்பட்டு வந்த மனைவி வேறு யாரைப்போய் வைவாள்.

சாணை பிடிப்பவன் மழுங்கிப்போனவனாக கூர் நாக்கு மனைவியின் குத்தலுக்கு பழகி சுரணை கெட்டு நடந்து கொண்டிருந்தான் மிஷினோடு மிஷினாக. 

சரியான வரும்படி இல்லை. சிவகங்கை சீமையிலிருந்து மாவட்டம் மாவட்டமாக கடந்து நெல்லைக்கு வந்தும் தொழில் விருத்தி இல்லை. மூணு வேளை சாப்பிடு மளவுக்கு வரும்படியுமில்லை.

கத்திகள் அருவாமணைகள் கோடாலி சூரிக்கத்தி கோழிவால் அருவா என்று எல்லா ஆயுதங்களும் சமூக விரோதிகளின்  துஷ்பிரயோகத்தால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடுமென்று பயந்து புழக்கத்தில் இருந்து காணாமல் போய் விட்டதா ? அல்லது பதுங்கிக்கொண்டதா என்ன?

ஊர் முழுக்க எம்புட்டு மரங்களை வெட்டுகிறார்கள் எத்தனை ஆடு மாடுகள் கோழிகள் வெட்டப்படுகின்றன  ? எத்தனை கொலைகள் வெட்டு குத்துகள்?

இதுக்கெல்லாம் ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன. எப்படி கூர் தீட்டுகிறார்கள்?

என்று யோசித்தபடியே தெரு வலம் வந்தான் வீரப்பன்.

அந்தக்காலத்தில் இவனது அப்பா இதே தொழிலைச் செய்த போது சாணை பிடிப்பவர்களைக்கண்டால் என் வீட்டுக்கு வா ஒன் வீட்டுக்கு வா என்று எசலிப்பு போட்டு அழைப்பார்கள். 

கோடாலியில் இருந்து பன்னருவா வரை அடேய்க்க சாணை பிடித்துக் கொடுப்பார்.

அப்பா சிங்காரம்.சில வீடுகளில் காப்பித்தண்ணியும்  சில வீடுகளில் கம்மங்கஞ்சியும் தருவார்கள். வேலை முடிந்ததும் உழக்கு,ஆளாக்கு,காப்புடி, அரப்படி ,முக்காப்படி, நாழி, பக்கா, மரக்கா என்று அளவில்லாமல் தானியம்,தவசு, பயறு, பச்சைகள் கிடைக்கும்.

தலையில் கட்டியிருக்கும் லேஞ்சை அவுத்து ரெண்டு பக்கமும் மூட்டை கட்டி சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு போய் தேவைப்படாத தானிய தவசுகளை கடைகளில் போட்டு மளிகை சாமான்கள் தின்பண்டங்கள் வாங்கி வருவார். 

அதெல்லாம் சன்னஞ்சன்னமாக குறைந்து இப்போ கோடாலி, அருவா, மம்பட்டி, சூரிக்கத்திகளின் பயன்பாடே இல்லாம அவைகளைப் பார்ப்பதே அரிதாப் போச்சு.

பெரும்பாலான  உலோகக்கருவிகள்  சமூக விரோதிகளோடு சேர்ந்து அதுவும் தலைமறைவாக ஆகிவிட்டன போலும்.

பல ஊர்களில் துருத்தி வைத்து ஊதி பழுக்க காய்ச்சிய இரும்பை சம்மட்டியால் நச்சு நச்சு நச்சு என்று அடித்து பெண்டு நிமுத்தி கடப்பாரை, சம்மட்டி,  ஆப்பு, மம்பட்டி, களகொத்தி, பன்னருவா, கோழிவால் அருவா, சூரிக்கத்தி, வண்டிப் பைதா இரும்பு வளையம், அச்சாணி என்று வித விதமாக செய்து குவிக்கும் கொல்லாசாரிகளையும் கொல்லுப்பட்டறைகளையும் இப்பெல்லாம் கண்ணுலேயே காங்கல.

யாராவது அழைக்கிறார்களா எந்த வீட்டு வாசலிலாவது பெண்களின் தலை தெரிகிறதா என்று இரு புறமும் கடுப்புடன் பார்த்தபடி வியர்வை சொட்டச் சொட்டச் சாணையைச் சுமந்தபடி நடந்தான் வீரப்பன். 

ஒரு அருவாமணையை சாணை பிடித்துக்கொடுத்தால் அம்பது ரூபாய் சொல்லி பேரம் படிந்து 20ரூபாய் கிடைக்கும். ஆளுக்கொரு டீ குடிக்கலாம். ஒரு மணி நேரப்பசி தாங்கும். நாலு சாமான்கள் சாணை பிடிக்கக் கிடைத்தால் அன்றைய பாடு தீர்ந்து விடும் என்கிற யோசனையோடு ஒரு கசாப்புக்கடை வாசலில் நின்றான்.

பால் சுரக்காத மார்பை சப்பி ஏமாற்றத்துடன் அம்மா முகம் பார்க்கும் குழந்தை போல அழைக்கிறாரா பாய் என்று கவனித்தான். அவர்கள்தான் இறைச்சி  வெட்ட நிறைய வித விதமான அருவா கத்திகளை பயன்படுத்துபவர்கள். 

ஆனா அது அப்போ. இப்பெல்லாம் கசாப்புக்கடைக்காரர்களும் கூட சாணை பிடிக்கும் மிஷின்களை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களே கத்திகளை அதில் தீட்டிக் கொள்கிறார்கள். இது போன்ற கடைகளில் ஒரு நாலு கத்தி சாணை பிடித்துக் கொடுத்தால் கூடப் போதும். இன்றைய பாடு தீர்ந்து விடும்.

கத்தி கத்தி வாணாலையும் விட வேண்டாம். என்ன செய்ய என்ற யோசனையுடன் நடந்தவனை ஒரு வேன் கடந்தது.வேனிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஒரு குரல் இடை விடாது கத்திக் கொண்டே இருந்தது-

பெரியோர்களே தாய்மார்களே உங்கள் வீட்டு பழைய பீரோ, கட்டில் ஃபேன், பிரிஜ்,சேர், மேஜை, பிளாஸ்டிக் குடம், பக்கெட், பழைய இரும்பு, தகரம்,பேப்பர் எதுவானாலும் வாங்கிக் கொள்கிறோம் கை மேல் பணம்….

அந்தக்காலத்தில் ஒரு பழைய சைக்கிளில் பழங்கோட்டை யாவாரி ஒருத்தர் ஈ….யம் பித்தா…. ளைக்குப் பேரீ….ச்சம் பழம் என்று கூவிக்கொண்டே தனது கிராமத்துத் தெருவில் வலம் வருவார். பள்ளிக்கொடம் போகும் சிறுவர்கள் யார் வீட்டு வாசலில் ஆனாலும் கிடந்து உருளும் பழைய ஈய டம்ளர்களை  கண்டு விட்டார்களானால் தூக்கி எடகோடிகள் சோளத்தட்டை படப்படிகளில் தூக்கி ஒளித்து வைத்து விடுவார்கள். அப்படி சுட்ட சாமான்களை இவர் வரும்போது எடைக்குப் போட்டு பேரீச்சம் பழம் வாங்கித்தின்பார்கள். அப்படி தின்று துப்பிய பேரீச்சம்பழக்கொட்டைகள் ஊர் முழுக்க முளைத்துக்கிடக்கும். ஒருச்சாணுக்கு மேல்அது வளர்ந்து மரமானதை இந்த அம்பது வருஷத்தில் எந்த ஊரிலும் வீரப்பன் பார்த்ததில்லை.

அப்படி சம்பாதிச்சவர் கூட தன் மகளுக்கு அம்பது பவுன் நகை போட்டு கட்டிக் கொடுத்திருந்தார். நம்ம பொழப்பு நாறப்பொழப்பா இருக்கே என்று எரிச்சலுடன் காதைப் பொத்திக் கொண்டான் வீரப்பன்.இந்த அரை மணி நேரத்தில் அந்த வேன் இரண்டாவது தடவையாக கூவிக்கொண்டு அவனைக் கடக்கிறது.

இந்த வேன் கூவிய கூவலில் பின்னாடி கூவிக்கொண்டு வந்த மனைவியின் சத்தமும் கேக்கல.ஆள் அருவத்தையும் காங்கல. சமயத்தில் தன்னைத்திட்டிய களைப்பில் எங்காவது ஓரம் சாரத்தில் உட்கார்ந்து விடுவாள்.

திரும்பிப் பார்த்தான்.தூரத்தில் தெரிந்த வேப்பமரத்து வீட்டில் முத்துப் பேச்சி தண்ணீர் வாங்கிக்குடிப்பது தெரிந்தது. அவளுக்கும் பசிக்கும்தானே எனும் நினைப்பில் அவனது பசி மறந்து விட்டது. அவள் மேல் இரக்கம் சுரந்தது. எலிதான் காய்கிறது எனில் எலிப்புழுக்கையும் ஏன் காயணும்?.

இப்போது மூன்றாவது தடவையாக அதே பழைய இரும்பு யாவாரியின் வேன் அதே பதிவு செய்யப்பட்ட கூவல்… உங்கள் வீட்டு பழைய இரும்பு, பிளாஸ்டிக்…

அந்த சத்தத்தையும் மீறி ஒரு பெண் அழைப்பது தேனாகக்காதில் விழுந்தது. 

ஏம்ப்பா சாணை ஏ சாணை…

ஆஹா காலை டிபனுக்கு வழி பிறந்துடுச்சுடா கைப்புள்ள என்று சந்தோஷமாக திரும்பி காம்பவுண்ட் சுவருக்குள் நின்று அழைத்த பெண்மணியை நோக்கி ஒரு எட்டு வைத்தான் …

அட உன்ன இல்லப்பா அந்தப்பழைய இரும்பு வாங்குறானே வேன்காரன் அவனை இங்க வரச்சொல்லேன் அதுக்குத்தான் உன்னைக்கூப்பிட்டேன்…என்றாள் அந்தப்பெண்மணி.

வேன்காரன் ஒரு யூ டர்ன் போட்டு திரும்பி வந்தான். அந்தப்பெண்ணின் கையிலிருந்த பழைய பிளாஸ்டிக் பக்கெட் நிறைய துருப்பிடித்த கத்திகள், கத்தரிக்கோல்கள், அருவா, அருவாமணை, கிடந்தன எப்படியும் நாலஞ்சு கிலோ தேறும்…!

இப்பெல்லாம் மார்க்கெட்டுல அருவா, கத்தி, கட்டிங் பிளேயர், கத்திரிக்கோல், சுத்தியல் எல்லாம் கூறு வச்சு விக்கிறாங்க… பாருங்க ஒரு கத்தியும், கத்தரிக் கோலும் நக வெட்டியும் பர்மா பஜார்ல பிளாட்பார யாவாரி கிட்ட பத்து ரூபா, இருபது ரூபாவுக்குத்தான் வாங்கினேன். ஏழெட்டு வருஷமா மழுங்கவே இல்ல. துருப்புடிக்கவும் இல்ல மேட் இன்னுன்னு ஏதோ ஒரு நாடு பேர் போட்டிருந்தது…

அத விட்டுபுட்டு நம்ம இரும்புக்கடைகளில் வாங்கின சாமான்களை சாணை பிடிக்க அம்பது நூறு கேக்குறானுவ. அதுக்கு புதுசே வாங்கிரலாம் பாரு…அதோடு காய் கறி நறுக்க, பழங்கள் சீவ, தேங்கா துருவ, சுவரில் ஆணி அடிக்க, இப்பிடி எல்லாத்துக்கும் மிஷின்கள் வேற வந்துருச்சு என்று அந்தப்பெண்மணி வீரப்பனின் பொழப்பில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள்.

முத்துப்பேச்சி உட்கார்ந்திருந்த வீட்டு மரத்தடியில் ஒரு சாயாக்கடை இருந்தது. முத்து உங்கிட்ட பைசா இருக்கா அண்ணாச்சி சாயா எம்புட்டு டீ மாஸ்டர் இவனை மேலும் கீழும் பார்த்தபடி அஞ்சு ரூவா என்றான். 

இறுகிய முகத்துடன் முத்துப்பேச்சி ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு வியர்வையில் நனைந்து நனைந்து நைந்து போன எப்பவோ கொலுசு வாங்கின போது நகைக் கடைக்காரன் தந்த உள்ளங்கை அகல ஜிப்புப்போன மணிப்பாசை எடுத்து அதில் ஒளிந்திருந்த அஞ்சு ரூவா நாணயத்தை அவன் கையில் திணித்தாள்.

ரெண்டு பேருக்கு ஒரு டீ போதுமா என்றான் டீ மாஸ்டர் இரக்கத்துடன்.

துட்டு அம்புட்டுதானே இருக்கு.

ஓ என்றபடி சாயாவில் கொஞ்சம் பாலையும் தேயிலைத்தண்ணியையும் அதிக மாகவே கலந்து டீயை பேப்பர் கப்பில் ஊற்றாமல் ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி தந்தார்.

டீயை வாங்கி ஊதி ஊதி ஆட்டி ஆட்டி சூடோடு பாதி குடித்து விட்டு மீதியை அவளிடம் நீட்டினான். அவளும் குடித்து விட்டு டம்ளரை மேஜையில் வைத்தாள். இருந்த ஒரே கையிருப்பு அஞ்சு ரூபாயை மாஸ்டரிடம் நீட்டினான் வீரப்பன்.

வேணாம்ப்பா போ நாலு தெரு சுத்தி தொழில் நல்லா நடந்தா திரும்பிப்போகும் போது கொடு என்றபடி டீ கிளாஸை கழுவி கடையை ஏரக்கட்ட ஆரம்பித்தான் டீ மாஸ்டர்.

கூச்சத்துடன் இருவரும் அவனை மனசார  வாழ்த்தியபடி மீண்டும் சாணை பிடிக்கலையோ சாணை என்று கூவியபடி நடந்தார்கள். அடுத்த தெரு அடுத்த தெரு என்று ஆறேழு தெரு சுத்தியும் ஒன்றும் வேலைக்காகவில்லை. 

ஆனா எல்லாத்தெருவிலும் வேன்காரன்தான்  ஏதாவதொரு வீட்டில் எதையாவது எடை போட்டு  ஒரு வீட்டிலும் பழைய இரும்பு கத்தி அருவா எதுவுமில்லாமல் சுத்தமாக துடைத்து வழித்து வாங்கிக்கொண்டே இவர்களைக் கடந்து கடந்து முன்னால் போய்க் கொண்டே இருந்தான்.

இப்படி ஒரு யாவாரத்தை இன்னொரு யாவாரி ஒரு தொழிலை இன்னொரு தொள்ளாளி  ஒழித்துகட்டினால் ஏழைகளின் பிழைப்பு என்னாகும்?

மணியோ ரெண்டு தாண்டி விட்டது.விடிந்து  இந்த எட்டு மணி நேரத்தில்  அரை டம்ளர்  டீ தான் பல்லில் பட்டிருந்தது.

சரி என்று ஒரு முடிவுக்கு வந்தவன் பழைய பிளாஸ்டிக் சேர்கள், குடங்கள், வாளிகள் பக்கெட்டுகள் … என்றபடி இவனைக்கடந்த  வேனை கையைக்காட்டி நிறுத்தினான். 

வேனை நிறுத்தி எட்டிப்பார்த்து என்னப்பு  என்று கேட்ட டிரைவரிடம் மனசை கல்லாக்கிக் கொண்டு சாணை வீரப்பன் கேட்டான் –

இந்த சாணை பிடிக்கிற மிஷினை எடைக்கு வாங்கிக்கிறியா?

ஏன் என்னாச்சு அண்ணாச்சி ஒண்ணும் போணியாகலையா என்று கரிசனத்துடன் கேட்டபடி இறங்கி வந்து அந்த சாணை மிஷினை தூக்கி எடைத் தராசில் வைத்தான். அந்த வேன் டிரைவரின் முகத்திலும் வேதனை தெரிந்தது.

பின்னால் வந்து நின்ற முத்துப்பேச்சி வியர்வை யோடு சேர்ந்து வழிந்த கண்ணீரையும் முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.

– கும்பிடுதேன் சாமி சிறுகதைத்தொகுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *