அமெரிக்காவில் கிச்சா

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 31, 2026
பார்வையிட்டோர்: 124 
வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்

(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

10

அமெரிக்காவில் நான் பார்த்தவரைக்கும் பார்க்காத அயிட்டங்கள் ரெண்டு. ஒண்ணு, நம்ம ஊர்ல நாம் பெண்டு கழல சுத்தம் செய்து, ‘ஐஸ்வர்யா ராய்’ ரேஞ்சில் பளபளப்பாக்கிய காரை மரக்கிளையில் கும்பலாகக் குந்தியபடி, ஓரக்கண்ணால் சைட் அடித்துக் கொண்டிருந்துவிட்டு, நாம் நகர்ந்ததும் ‘அட்டாக்’ என்று லீடர் காகம் ஆர்டர் கொடுக்க, கள்ள வோட்டுப் போடும் வேகத்தில் பறந்துவந்து காரில் ஊசிமுனை நிலம்கூட மிச்சமின்றி எச்சம் இடும் காக்கைகள். எனக்கென்னமோ காக்காய்களை அதிகம் பார்த்திராத அமெரிக்கர்களுக்கு நமது பழைய காக்காய் – நரி கதையை பெரிய பட்ஜெட்டில் பார்க்கில் வாழும் கருடன் சைஸ் அண்டங்காக்காயாக கிராஃபிக்ஸில் காண்பித்து ஜூராஸிக் பார்க் போல ‘பனகல் பார்க்’ என்ற டைட்டிலில் சினிமா எடுத்து புல்லரிக்க வைத்து ஆஸ்கரை தட்டிவிடலாம் என்று தோன்றுகிறது!

ரெண்டாவதாக, காக்காயைத்தான் பார்க்க முடியவில்லை என்றால் காக்காய்பிடிப்பவர் களையும் அமெரிக்காவில் பார்க்க முடியவில்லை. காரணம் நீதி, சட்டம், காவல் தவிர, மத்த எல்லா துறைகளையும் அமெரிக்க அரசாங்கம் தனியார்களிடம் ‘மகனே, உன் சமர்த்து!’ என்று தாரைவார்த்துக் கொடுத்து விட்டது. விளைவு, அமெரிக்க நுகர்வோர்கள் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ பி.எஸ். வீரப்பா ஸ்டைலில் ‘சபாஷ் சரியான போட்டி’ என்று சொல்லி மகிழும் அளவுக்கு தனியார் கம்பெனிகள் வைஜெயந்தி மாலா, பத்மினி லெவலில் ‘சாதுர்யம் பேசாதடி. என் சாஃப்ட்வேருக்குப் பதில் சொல்லடி’ என்று ஸ்வரத்தோடு, ஸாரி, தரத்தோடு பாடியபடி, கன்ஸ்யூமர் ஜதிக்கு போட்டி போட்டுக்கொண்டு குதிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, வாஷிங்டனுக்கு குடித்தனம் போன என் நண்பர், டெலிபோன் கனெக்ஷனுக்கு அப்ளை செய்வதற்காக சம்பந்தப்பட்ட தனியார் கம்பெனிக்கு டெலிபோன் செய்ய பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கிறார். டெலிபோன் செய்யப் போனவரை, ‘உங்களுக்கு போன் கால் வந்திருக்கிறது’ என்று தன் போன் ரிஸீவரைக் கொடுத்தவாறு வரவேற்றார் பக்கத்து வீட்டு பரமசிவம் (அவர் பெயர் ‘கிரிகாரியோ பெர்னார்டோ க்ரிபெர்டிலூஸி’ என்று உள்நாக்கு இழுத்துக்கொள்ளும் அளவுக்கு இருந்ததால் பரமசிவமாக்கிவிட்டேன்). ஆச்சரியத்தில் ரிசீவரை வாங்கிய நண்பருக்கு எதிர்முனையிலிருந்து “சார், உங்க வீட்டுக்கு டெலிபோன்“ கனெக்ஷன் கொடுத்தாச்சு. இப்ப உங்க வீட்டுலேர்ந்துதான் பேசறேன்” என் என்று பதில் வர, கூடவே நண்பரின் மனைவி ஏங்க, பக்கத்து வீட்டுக்குப் போறதுக்கு இவ்வளவு நேரமா? கனெக்ஷன் கொடுத்தாச்சு. கான்ஃபரன்ஸ் கால் வசதிகூட செட் அப் பண்ணியாச்சு. அப்புறம், நம்ம வீட்டுக்கு போன் பண்றவங்களோட நம்பர் மட்டும் தெரியற டிஜிட்டல் டிஸ்ப்ளே போதுமா? இல்லை, எதிர்முனைல பேசறவங்க முகம் தெரியற மானிட்டரையும் ஃபிக்ஸ் பண்ணலாமான்னு கேக்கறாங்க. சட்டுனு வீட்டுக்கு வாங்க” என்று சொல்லி, போனை வைத்துவிட்டார். அவ்வளவு வேகம் அங்கே!

நம்ம ஊர்ல ரோட்டுக்கு தார் போடுவதில் ஆரம்பித்து மாட்டுக்கு தீவனம் போடுவது வரை எல்லா இலாகாக்களையும் அரசாங்கமே வைத்துக்கொண்டிருப்பதால், பியூனில் ஆரம்பித்து பெரிய இடம் வரையில் இனாம், டிப்ஸ், லஞ்சம், கிம்பளம், கிக் பேக் என்று விதவிதமாக கரன்ஸி வலை வீசி காக்காய் பிடித்து காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவில் ஒரு விநாடி பவர் கட் ஆனால், அடுத்த எலெக்ஷனில் ஆளுங்கட்சியின் பவர் கட்டாகி விடுமாம். அந்த அளவுக்கு அமெரிக்காவில் ‘கன்ஸ்யூமர் தீர்ப்பே கடவுள் தீர்ப்பு.’ இதை நான் கண், காது, வாய்கூடாக நியூ யார்க் உள்நாட்டு விமான நிலையத்தில் பார்த்தேன்.

‘மணச்சநல்லூர், அறந்தாங்கி, மானாமதுரை, அத்திப்பட்டு’ என்று திருச்சி பஸ் டெர்மினலில் தனியார் பஸ் ஏஜெண்ட்டுகள் பயணிகளைக் கூவிக்கூவி அழைப்பது போல, ‘பாஸ்டன், சிகாகோ, அட்லாண்டா வயா க்ளீவ்லேண்ட்’ என்று கெஞ்சாத குறையாக டேபிள் போட்டுக்கொண்டு கான்டினெண்டல் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் என்று பல தனியார் விமான கம்பெனிகள் தங்கள் ஏரோப்ளேன்களை நிரப்ப போட்டிபோட்டு ஆள் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

சென்னையிலிருந்து பெங்களூருக்கு பிளேனிலும் பஸ்ஸிலும் போவது என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்றால், நியூ யார்க்கில் இருந்து பாஸ்டனுக்கு பிளேனிலும் பஸ்ஸிலும் போக டிக்கெட் சார்ஜில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

“கிட்டத்தட்ட க்ரேஹவுண்ட் (Grey Hound அமெரிக்காவின் ஆஸ்தான பஸ்) சார்ஜுக்கு பிளேன் டிக்கெட் தர்றீங்களே, எப்படிக் கட்டுப்படியாகறது?” என்று நான் டெல்டா ஏர்லைன்ஸ் அதிகாரியைக் கேட்டபோது அவர் “அதை ஏன் சார் கேக்கறீங்க, வயித்தெரிச்சல்” என்று மயிலாப்பூர் மாடவீதியில் சந்தித்த வேண்டப்பட்டவர் போல சவுஜன்யமாகப் புலம்ப ஆரம்பித்தார்.

“ரெண்டு றெக்கை, ஒரு வால் மட்டும் இருந்தா போதும். டெல்டாவுக்குப் போட்டியா ஒமேகா சர்வீஸஸ்னு கம்பெனி ஆரம்பிச்சுடறான். ஜனங்களும் சீப்பா டிக்கெட் கிடைச்சா, அவன் கழுகைக் கொண்டு வந்து நிறுத்தி, பிளேன்னு சொன்னாலும் பரவால்லை. அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்னு அது முதுகுல ஏறி உட்கார்ந்து போயிடறாங்க. டிமாண்ட் கம்மி. பட் சப்ளை ஜாஸ்தி. அதான் பெட்ரோல்ல ஓடவேண்டிய எங்க பிளேன் நஷ்டத்துல ஓடறது” என்ற டெல்டா ஏர்லைன்ஸ் அதிகாரி பிரகாசமாகி “இன்னி மாதிரி சில நாள் கும்பல் ஜாஸ்தி வரும். அப்ப ஃபுட் போர்டுலாம்கூட தொத்திக்க அலவ் பண்ணுவோம்” என்று வேடிக்கையாகச் சொன்னது எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது என்றால், ஏ.ஆர்.எஸ்.ஸுக்கோ ‘ப்ளூ லிட்மஸ்’, ‘ரெட் லிட்மஸாக’ மாறும் அளவுக்கு வயிற்றில் பயத்தால் ஆஸிட் சுரந்தது.

அமெரிக்காவின் உள்நாட்டு விமானங்களான டெல்டா, கான்டினெண்டல் போன்வற்றுக்கும் க்ரேஹவுண்ட் பஸ்ஸுக்கும் ரேஸ் வைத்தால் முயல்-ஆமை கதையாகத்தான் இருக்கும். க்ரேஹவுண்ட் நிதானமாக நகர்ந்தாலும் நமக்கு போய்க்கொண்டிருக்கும் ஓர் உணர்வு இருக்கும். இந்த லோக்கல் விமானங்களோ ரொம்ப உற்சாகமாகக் கிளம்பி ரன் வே அருகில் சென்று அறுபத்துமூன்று நாயன்மார்கள் போல அங்கு ‘டாக்ஸியிங்’ என்று சொல்லப்படும் க்யூவில் நிற்கும் போட்டி விமானங்களோடு சேர்ந்துகொண்டு டேக் ஆஃபுக்காகக் காத்திருக்கும்.

சிறையில் க்யூவில் நிற்கும் கைதிகளுக்கு களி சோறு போட்டு விரட்டுவது போல, ஒன்றன்பின் ஒன்றாக சிக்னல் கொடுத்து டேக் ஆஃப் செய்ய துரிதப்படுத்துவார்கள்.

இந்த விமானங்கள் நஷ்டத்தில் ஓடுவதால் நம்ம ஊர் இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா போல நான்கு ஐந்து ஏர் ஹோஸ்டஸ்கள், ஸ்டூவர்டுகள் எல்லாம் கிடையாது. பப்பர்மிண்ட்டை விநியோகித்தவர்தான் பைலட் என்று எங்களுக்கு பாஸ்டனில் இறங்கும்போதுதான் தெரிந்தது. கலைந்த தலையும் கசங்கிய உடையுமாக இருந்த ஒரே ஒரு ஏர் ஹோஸ்டஸ் “தோ பாருங்க, பிளேன் பாஸ்டனுக்கு போறது, நடுவுல ப்ராப்ளம் ஏதாவது இருந்தா, அதுக்கு நான் பொறுப்பில்லை. சாமர்த்தியம் உள்ளவா பாதுகாப்பு விதிமுறைகளைப் படிச்சு தப்பிச்சுக்கப் பாருங்க. என்னமோ போங்க” என்று விட்டேத்தியாக ஆங்கிலத்தில் பேசினாள். எங்களைத் தவிர, அங்கு இருந்த அமெரிக்கப் பயணிகள் அத்தனை பேரும் லாப் டாப்பில் மூழ்கியவாறு கோரஸாக ‘இட்ஸ் ஓகே’ சொன்னார்கள்.

ஐந்து நிமிடத்துக்குள் ஒரு விமானம் டேக் ஆஃப் செய்ததால் எங்கள் விமானத்துக்கு அருகிலேயே ஒரு போட்டி விமானம் பறந்து, ஸ்கூட்டர்காரனை மணல் லாரி ஓரம் கட்டுவது போல ஓரம் கட்டி, ‘என்ன வூட்ல சொல்லிட்டு வந்துட்டியா?” என்ற பாவத்தில் அந்த விமானத்தின் பைலட் எங்களைப் பார்த்தார்.

அமெரிக்காவில் சிரசாசனம் தவிர, மத்த எல்லா சமாசாரங்களும் நமக்கு உல்டாதான். நமக்கு பகல் அவர்களுக்கு ராத்திரி என்று சீதோஷ்ணத்தில் ஆரம்பித்து பல்ப், ஃபேன் சுவிட்ச் வரை (கீழே போட்டால் ஆஃப், மேலே போட்டால் ஆன் அவர்களுக்கு. இதே நமக்கு, பாதி நேரம் பவர் கட். சுவிட்சை மேலே போட்டால் என்ன, கீழே போட்டால் என்ன? இல்லை கழட்டி மொத்தமாகத் தூக்கிப் போட்டால்தான் என்ன? எல்லாமே ஒண்ணுதான்.) சகலமும் உல்டாதான். நமக்கு ‘கீப் லெஃப்ட்’னா அவங்களுக்கு ‘கீப் ரைட்’ நான் ‘கீப்’னு சொன்னது சின்ன வீட்டைப் பற்றி அல்ல. கார் ஓட்டறதைப் பத்தி!

பாஸ்டனில் நாங்கள் இறங்கினவுடனே லக்கேஜ் வந்துசேர கொஞ்சம் தாமதமாகிவிட்டது. அதற்குள் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போமேன்னு டயர்டான கிச்சா, ஏர்போர்ட்ல வசதியான இடத்தைத் தேடியிருக்கான். அங்க ஒரு எடத்துல ‘ரெஸ்ட் ரூம்’னு போட்டிருந்திருக்கு. ரெஸ்ட் ரூம் என்பது வழக்கமான டாய்லெட்டுக்கு அமெரிக்கர்கள் வைத்த உல்டா பெயர் என்பதை அறியாத கிச்சா, தூக்கத்துல கண்ணு சொருக, உள்ளே நுழைஞ்சு தலைக்கு ஹாண்ட் லக்கேஜை வைத்துக்கொண்டு படுத்துத் தூங்கியும் விட்டான். ரொம்ப நேரமாக கிச்சாவைத் தேடி காணாமல் பயந்துபோன நாங்கள், ‘எதுக்கும் இங்க இருக்கானான்னு பார்த்துடுவோம்’ என்று ரெஸ்ட் ரூமில் நுழைய, அங்கு அம்பது அமெரிக்கர்கள் சுற்றி நின்று கும்மியடிக்காத குறையாக வேடிக்கை பார்க்க, கிச்சா நடுவே அனிச்சைச் செயலாக மூக்கைப் பொத்தியபடி தூங்கிக் கொண்டிருந்தான்.

ஏர்போர்ட், இமிக்ரேஷன், கஸ்டம்ஸ், பிளேன் இப்படிப் பல இடங்களில் கிச்சா எங்களிடம் இருந்த மானத்தை ஏற்கெனவே வாங்கிவிட்டதால், வெட்கப்படுவதற்கு ஸ்டாக்கில் மானம்கூட இல்லாமல் நாங்கள் அந்த அமெரிக்கர்கள் எதிரில் அவமானப்பட்டு, கிச்சாவைத் தட்டி எழுப்பிக்கொண்டு கிளம்பினோம்.

“தெரியாம நுழைஞ்சுட்ட சரி. ஏண்டா, பார்த்தா இது டாய்லெட்னு கூடவா ஒருத்தனுக்குத் தெரியாது?” என்ற என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “எப்படிடா தெரியும். சில பேரை நல்லவாள்னு நெனச்சு பழகறோம். கடைசியில நம்மைக் கூட இருந்தே குழிபறிச்சுட்டு ஏமாத்திட்டுப் போயிடறாங்க அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?’ என்று கிச்சா சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு லாஜிக்கைக் கூறி, தன் அறியாமையை ஒப்புக்கொள்ள மறுத்தான். நான் எரிச்சலாகி அவன் கழுத்தை நெறிக்கப் போகும் சமயத்தில், எங்களை வரவேற்க வந்திருந்த பாஸ்டன் தமிழ் சங்கத்தைச் சேர்ந்த ஜேசுராஜ், ராம்ரமணன், மணிவண்ணன் ஆகியோரைப் பார்த்து கோபத்தை அடக்கிக் கொண்டு, கிச்சாவைப் பாராட்டுவதுபோல ‘வெல்டன்’ சொல்லி கட்டிக்கொண்டு சமாளித்தேன்.

இரண்டு மாலைகளோடு வந்தவர்கள் ஒன்றை எனக்கும், நான் கட்டித் தழுவியதால் குழுவில் எனக்கு அடுத்தபடி முக்கியமான நபர் என்று எண்ணி, அந்த இரண்டாவது மாலையை கிச்சாவுக்கும் போட்டார்கள். மாலை கிடைத்த குஷியில் எதையாவது பேசி அவர்களைப் பிரமிக்கவைக்க வேண்டுமே என்ற ஆசையில், என்ன சார் இரவில் மாலையா?’ என்று சிலேடையாகச் சொல்ல நினைத்து, சொல்லும்போது ‘மரவில் ஈலையா..?’ என்று சொதப்பிவிட்டு எதையோ மிதித்தவன் போல் அவர்களை மையமாகப் பார்த்தான்.

இந்த அவஸ்தையில் கிச்சா கழுத்தில் போட்டிருந்த மாலையில் உள்ள பூக்கள் உதிர, நாரோடு நின்றான். பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பார்கள். கிச்சா என்கிற இந்த நாரோடு சேர்ந்து நாங்கள் நாறப் போகிறோமோ என்ற பயம் என்னுள் எழுந்தது. கிச்சாவுக்கு ‘ஜெட் லாக்’ என்று சொல்லி, அவன் போக்கால் சற்று கிலேசமடைந்த அவர்களைச் சமாளித்தேன்.

அதற்குள் லக்கேஜ் வந்துவிட, நாங்கள் பாஸ்டன் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தோம். ஹீட்டர் உபயத்தால் கதகதப்பான ஏர்போர்ட்டைவிட்டு வெளியே வந்தால், ‘அழுதால் கண்ணீர் தரையில் விழுவதற்குள் உறைந்து ஐஸ்கட்டியாகிவிடும்’ அளவுக்குக் குளிர். எங்களுக்குப் பற்கள் தந்தியடித்தது என்றால், ‘மீசையானாலும் மனைவி’ நாடகத்தில் ஸ்திரீபார்ட் வேஷத்துக்காக ஸ்லிம்மாகி இருக்கும் சாமாவுக்குப் பற்கள் ஈமெயில் அடித்தது. எப்போதும் படபடக்கும் திருவல்லிக்கேணி வெயிலில் திரியும் கிச்சா, பாஸ்டன் குளிரில் நடுங்கி நாய்க்குடை போல சுருங்கினான்.

கிச்சா ஜேசுராஜைப் பார்த்து, “ஏன் சார் இப்படி ஒரு குளிர் இது என்ன மாசம்..?” என்று கேட்க, ஜேசுராஜ் “ஆங்கிலத்துல அக்டோபர் தமிழ் மாசம்னா புரட்டாசி” என்றார். நாய்க்குடை போல சுருங்கியிருந்த கிச்சா புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்டதும் யானை கவுனி, திருப்பதி குடை போல விஸ்வரூபமாக விரிந்தான்.

“சேத்தரி புரட்டாசியா நல்லவேளை சொன்னீங்க.. நான் மார்கழின்னு நெனச்சு அனாவசியமா பயந்து குளிரில் நடுங்கிட்டேன்..” என்று கூறி போட்டிருந்த ஸ்வெட்டர், மஃப்ளரைக் கழட்டினான். ‘மார்கழியில்தான் குளிரும்’ என்ற எச்சுமிப் பாட்டியின் வாக்கில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட கிச்சா, புரட்டாசி என்றதும் பாஸ்டன் குளிரைப் புறக்கணித்தான். சைபீரியாவாக இருந்தாலும் புரட்டாசியில் குளிரக்கூடாது என்பது கிச்சாவின் முரட்டுத்தனமான லாஜிக். அப்படியே குளிரெடுத்தாலும் அதை இக்னோர் செய்யவேண்டும் என்ற மூர்க்கத்தனமான தத்துவார்த்தமான அணுகுமுறையில் இருக்கும் கிச்சாவின்மீது ஏற்பட்ட பொறாமையால் எழுந்த வயிற்று எரிச்சலில் நான் குளிர்காய்ந்தேன்.

11

பொதுவாகவே அமெரிக்காவில் பொல்யூஷன் என்பது வெறும் இல்யூஷன்தான்! அதிலும் குறிப்பாக பாஸ்டன் சூழ்நிலை – சொர்க் கலோகத்தில் செவன்த் அவென்யூவில் குடியிருக்கும் அப்சரஸ் அப்போதுதான் ஷவரில் ஷாம்பு பாத் எடுத்துவிட்டு பால்கனிக்கு வந்து நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டே ‘மானஸ சஞ்சரரே” என்று பாடியபடி நம்மை நிர்விகல்ப சமாதிக்குள் ஆழ்த்துவது போல இருந்தது.

திருவல்லிக்கிணற்றுத் (கேணி என்றால் கிணறு) தவளையாக நாளொரு மேனியும் பொழுதொரு வியாதியுமாக சூம்பிக் கிடந்த கிச்சா, எச்சுமிப் பாட்டியைவிட ஆசாரமாக இருக்கும் பாஸ்டன் சுகாதாரத்தால் பூஸ்டனாகி பாக்கெட் சாராயமும் குடித்து பான் பராக்கும் போட்ட குரங்குபோல பரவசத்தில் மூழ்கி, என்ன செய்வதென்று தெரியாமல் ஒண்ணும் செய்யாமலேயே சும்மா இருந்தான்.

பரமஹம்ஸனாக சும்மா இருக்கும் கிச்சா எந்த நேரத்திலும் பரமஹிம்ஸனாக மாறுவான் என்பதை அறியாத பாஸ்டன் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஜேசுராஜ், ராம்ரமணன், மணிவண்ணன் ஆகிய மூவரும் தாங்கள் கொண்டுவந்த இரண்டு கார்களைக் காட்டி அதில் ஏறிக்கொள்ளும்படி சும்மா கிடந்த கிச்சா சங்கை பார்த்து ஊதிக் கெடுக்க, படபடவென்று பாஸ்டனே அதிரும்படி ராமர் வில்லை முறித்தது போல சோம்பல் முறித்து சுறுசுறுப்பானான் கிச்சா.

“தோ – மோகன். இப்பவே சொல்லிட்டேன். டிரைவர் பக்கத்துல எனக்கு ஓர ஸீட் வேணும். ஆமாம்” பாருடா என்று என்னை ஓரங்கட்டிவிட்டு அந்த இரண்டு கார்களை நோக்கி வலசம்மா வேகத்தில் இடம்பிடிக்க ஓடினான்.

இரண்டு கார்களில் தான் எதில் ஏறுவது என்பதை முடிவுசெய்ய, இரண்டு கார்களுக்கு நடுவே நின்றபடி மாற்றி மாற்றி கையால் கார்களைத் தொட்டு “இன்க்கி பின்க்கி பான்க்கி” என்று சொல்லி மணிவண்ணன் காரைத் தேர்ந்தெடுத்தான் கிச்சா!

பாஸ்டன்காரர்கள் ‘இதென்ன கலாட்டா!’ என்று விளம்பர ஸ்டைலில் வியப்போடு எங்களைப் பார்க்க, குழுவின் மானத்தைக் காப்பாற்ற கிச்சாவின் கேணத்தனத்தை எப்படியாவது நியாயப்படுத்தினால்தான் முடியும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது எனக்கு. எனவே, நானும் கிச்சா போல இரண்டு கார்களுக்கு இடையே நின்று ஒன்றையொன்று மாற்றி மாற்றித் தொட்டபடி “பாம்பைத் தூக்கி மேல போட்டா பஞ்சவர்ணக் கிளி. கிளியைத் தூக்கி மேல போட்டா நாகரத்தின பாம்பு. யா. வு. மே. ப்ளக்.” என்று மணிவண்ணன் காரை தேர்ந்தெடுத்துவிட்டு, பாஸ்டன்காரர்களைப் பார்த்து “எங்க ட்ரூப்ல நான் பெரியவன். நீ சின்னவங்கற பாரபட்சமெல்லாம் கிடையாது சார். எல்லாரும் ஒண்ணுதான். இருந்தாலும் இந்த மாதிரி வெளியூர் போறச்சே ஹோட்டல்ல ரூம் போட்டா எந்த ரெண்டு பேர் எந்த ரூம்ல தங்கறது, அதே மாதிரி எந்த ஆறு பேர் ஒரு கார்ல. மீதி ஆறு பேர் இன்னொரு கார்ல அப்டீன்னு முடிவு செய்ய சென்டிமெண்டலா இந்த “இன்க்கி பின்க்கி பான்கி, யா. வு. மே. ப்ளக். சிஸ்டத்தை வெச்சிருக்கோம்” என்று சொல்லிக் கண்ணடித்தேன்.என் தம்பி மாது பாலாஜி “காசி கபடி இந்து பால்” என்றும், சீனு “சாட், பூட், த்ரீ’ என்றும் போட்டு ராம்ரமணன் காரில் ஏறிக்கொண்டார்கள்.

அமெரிக்காவில் கீப் ரைட் லெஃப்ட் ஹாண்ட் டிரைவிங் என்பதெல்லாம் தெரியாத (தெரிந்தாலும் புரியாத) கிச்சா மணிவண்ணன் காரில் முன்பக்கம் ஏறி நம்ம ஊர் வழக்கப்படி இடதுபக்க சீட்டில் உட்கார்ந்து கொண்டான். (அமெரிக்காவில் அதுதான் டிரைவிங் சீட்) தப்பாக உட்கார்ந்ததோடு, மணிவண்ணனைப் பார்த்து, “ஏன் சார், கார் ஓட்டப் போறது நீங்க ஆனா, ஸ்டியரிங் லெஃப்ட் சைட்ல தப்பா எனக்கு முன்னாடி ஃபிக்ஸ் பண்ணியிருக்கே. ரைட் சைட்ல உட்கார்ந்து என்பக்கம் சாஞ்சு ஸ்டியரிங்கைப் புடிச்சு ஓட்டறது உங்களுக்கு இடைஞ்சலா இருக்காதா? தினமும் இப்படி இடுப்பை சாய்ச்சு ஓட்டினா குழந்தை பொறக்கற அளவுக்கு இடுப்புல பிரசவவலி எடுக்குமே” என்று வெச்ச கையை எ எடுக்காமல் ஜிலேபி பிழிவது போல தொடர்ந்து கிச்சா உளறினான்.

“எங்க ஊர்ல லெஃப்ட் ஹாண்ட் டிரைவிங்தான்” என்று அவனுக்குப் பொறுமையாக விளக்கினார் மணிவண்ணன்.உடனே கிச்சா, “லெஃப்ட் ஹாண்டா? என்ன சார். ஏர்போர்ட்ல உங்க டெலிபோன் நம்பரை ரைட் ஹாண்ட்ல எழுதினீங்க. இப்ப லெஃப்ட் ஹாண்ட் டிரைவிங்னு சொல்றீங்களே” என்றவன், பதில் சொல்லவந்த மணிவண்ணன் கன்னத்தில் செல்லமாக – அதே சமயம் பள்ளமாகக் கிள்ளி, “குறும்பு சார் நீங்க. புரிஞ்சுபோச்சு, நீங்க நம்ம இண்டியன் கிரிக்கெட் டீம் கங்குலி, ராபின் சிங் மாதிரி. அவங்க பேட்டிங் லெஃப்ட் ஹாண்ட். போலிங் ரைட் ஹாண்ட். அது மாதிரி நீங்க டிரைவிங் லெஃப்ட் ஹாண்ட். எழுதறது, அதாவது ரைட்டிங் ரைட்ஹாண்ட் கரெக்ட்டா” என்று கூற, மணிவண்ணன் கோபமானார்.

கிச்சா, மரியாதையா ரைட் சைடுல உக்காருங்க. கீப் லெஃப்ட், கீப் ரைட் எல்லாம் அப்புறம் விலாவாரியா சொல்லித் தரேன். மொதல்ல யூ கீப் கொய்ட்” என்று அவர் மிரட்ட, கிச்சா பயந்து கீழே இறங்கி வலப்பக்கம் போய் அமர்ந்தான்.

கிச்சாவின் குழப்பத்தால் அப்ஸெட் ஆன மணிவண்ணன் காரைச் சற்று வேகமாக ஓட்ட, கிச்சா என்னிடம் ரகசியமாக “எத்தனை கிலோ மீட்டர் வேகத்துல போகுது?” என்று கேட்டான். “முட்டாளே, நல்லா தெரிஞ்சுக்க, அமெரிக்காவுல கிலோ மீட்டர் எல்லாம் கிடையாது. ஸ்பீட், தூரம் எல்லாம் மைல் கணக்குலதான்” என்றேன் நான்.

மணிவண்ணனிடம் பேச்சு கொடுத்து நட்பை வளர்த்துக்கொள்ள விரும்பிய கிச்சா, “சார். இப்ப நீங்க ஓட்டற ஸ்பீட் எத்தனை பீக்காக் இருக்கும்?” என்று கேட்டான். புரியாமல் முழித்த அவரிடம் “பீக்காக்னா, மீன் எத்தனை மயில்னு கேட்டேன்” என்று சொல்ல, மணிவண்ணன் இதைக் கேட்டு பொறுமையிழந்து, ‘முருகா…!” என்று கூவ, கிச்சா உடனே அதைப் பிடித்துக்கொண்டு “கரெக்ட், முருகர்தான். முருகர் மயில் மேல ஏறி பறந்து உலகத்தைச் சுத்தினாரே, அந்த வேகத்துல நீங்க காரை ஓட்டறீங்க. பை தி பை, முருகரோட வாகனம் மயிலுக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்லுவா?” என்று கேட்டான். மணிவண்ணன் இந்த முறை இன்னும் பெரிய தெய்வமான முருகரின் மாமனிடம் ‘பெருமாளே. கிச்சாவிடமிருந்து என்னைக் காப்பாத்து’ என்று நினைத்து, “பெருமாளே” என்று சொல்ல, கிச்சா “பெருமாளுக்கு வாகனம் கருடன். தெரியும் சார்” என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டான். கையோடு பின்னாடி திரும்பி, “ஏ.ஆர்.எஸ். கருடனுக்கு இங்கிலீஷ்ல என்ன?” என்று கேட்க, ஏ.ஆர்.எஸ். ‘ஈகிள்’ என்றான். உடனே கிச்சா, ‘முட்டாள், அது ஃபிளாஸ்க்குடா” என்று சொல்லிவிட்டு மணிவண்ணனைப் பார்த்துச் சிரித்து, “ஏன் சார், ஃபிளாஸ்குக்கு தமிழ்ல என்ன?” என்று கேட்க, பழனி ஆண்டவருக்கு பால் காவடி எடுப்பதாக மணிவண்ணன் வேண்டிக்கொள்ள, ஜேசுராஜ் வீடு வந்தது.

தமிழ் இனி மெல்லச் சாகும் என்று இங்கு நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் நான் சந்தித்த அத்தனைத் தமிழர்களும் மெல்லச் சாகும் தமிழுக்கு வேகவேகமாக ஆக்ஸிஜன் கொடுத்து புத்துயிர் அளித்தது புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் வீடுகள் எல்லாம் மரத்தால் கட்டப்பட்ட வீடுகள். அதனால்தானோ என்னவோ, மர வீடுகளுக்கு எதுகையாக அதில் வசிக்கும் தமிழர்களும் மறத்தமிழர்களாக இருப்பதைப் பார்த்தேன்.

புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், லா.ச.ரா., சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன் போன்ற சிறுகதை, நாவல் வியாசர்களின் எழுத்துகளை நித்ய பாராயணம் செய்கிறார்கள்.

அமெரிக்கத் தமிழர்கள் ஆங்கிலம் பேசி சம்பாதித்தாலும் அதை தமிழில் பேசி செலவழிக்கிறார்கள். காலையில் எழுத்தாளனாக எழுந்திரிக்க வேண்டுமென்றால் இரவில் ஏதாவது ஒரு புத்தகம் படிப்பாளனாக இருந்துவிட்டு உறங்கவேண்டும் என்பது என் பாலிஸி. பல வருடங்களாக தமிழ்நாட்டில் இருந்துகொண்டு படிக்கத் தவறிய பல அரிய தமிழ்ப் பொக்கிஷங்களை அமெரிக்காவில் இருந்த இரண்டே மாதத்தில் ஜேசுராஜ் போன்றவர்கள் வீட்டு லைப்ரரியில் படித்தேன் என்றால் பாருங்கள்.

அமெரிக்காவில் வீடுகளுக்குக் கீழே பாதாள பைரவி போல படியிறங்கிப் போனால் ‘பேஸ்மெண்ட்’ என்று சொல்லப்படும் ஒரு சின்ன வீடு இருக்கும். சில வீடுகளில் வீட்டைவிட பேஸ்மெண்ட் விஸ்தாரமாக வசதியாக இருக்கும்.

நாங்கள் பன்னிரண்டு பேரும் பேஸ்மெண்ட்டில் தங்க வசதி செய்து இருப்பதாகக் கூறினார் ஜேசுராஜ். கிச்சா என்னைத் தனியே அழைத்து, “என்னடா நீ, அவர்தான் சொல்றாருன்னா, நீயும் சம்மதிக்கறியே. என்ன வசதி செஞ்சு தந்தாலும் பிளாட்பாரத்துல எல்லாம் படுக்கறது தப்புடா மோகன், புரிஞ்சுக்க” என்று சொல்ல, நான் புரியாமல் முழித்தேன்.

“என்ன முழிக்கற, நான் கொச்சையா பிளாட்பாரம்னு சொன்னேன். அவர் டீஸண்ū பேஸ்மெண்டுன்னு சொன்னார் அவ்வளவுதான்” என்றான்.

முட்டாள், பேஸ்மெண்ட் வேறடா. நீ சொல்ற பிளாட்பாரம் பேவ்மெண்ட்” என்று நான் சொல்ல, பதிலுக்கு கிச்சா, “எதுக்கும் ஒரு தடவை டைரக்டரில அர்த்தம் பாத்துடு” என்று சொல்லிவிட்டு ஜேசுராஜிடம் சென்று “என்னோட ஒண்ணுவிட்ட ஒருத்தர் டெட்ராய்ட்ல இருக்கார். அவருக்கு போன் பண்ணணும். கொஞ்சம் டெலிபோன் டிக்ஷனரியைத் தரமுடியுமா?” என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக என்னையும் ஜேசுராஜையும் குழப்பினான்.

பாஸ்டனில் கேஃபி ஸ்கூல் ஆடிட்டோரியத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இரண்டு நாடகங்கள் போட்டு அமெரிக்க விஜயத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டோம். அந்த ஆடிட்டோரியத்தைப் பார்த்ததும் ஆடிப் போய்விட்டோம். மேடையில் ஒருவர் மூச்சுவிட்டால், அது கடைசி ரோவில் புயல் அடிப்பதுபோல் சத்தம் கேட்கும்! அங்கு சவுண்ட் சிஸ்டம் அவ்வளவு துல்லியம்.

மேடையைப் பார்த்த சந்தோஷத்தில் கிச்சா துள்ளிக் குதித்தான். கிச்சாவைப் பார்த்து பயத்தில் நான் கவலைப்பட ஆரம்பித்தேன்.

12

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் ‘ஃப்ரெண்ட்ஸ் ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற குழு பிரைவேட்டாக போட்ட ‘பிடி சாபம்’ என்ற புராண நாடகத்தைப் பார்க்க வரும்படி அதில் நடிப்பவர்கள் ரிகர்சலிலிருந்து நேராக பார்வதி, பரமசிவன், நாலு தலை பிரம்மா, நந்தி பகவான் என்று காஸ்ட்யூம் கெட்அப், மேக்கப் சகிதமாக நாலு ரிக்ஷாவில் என் வீட்டுக்கு வந்து அழைக்க, அவர்களை வேடிக்கை பார்க்க வீட்டைச் சுற்றிக் கும்பல்கூடி ரசாபாசமாகிவிட்டதால், வேறுவழியில்லாமல் வர ஒப்புக் கொண்டேன்.

நாடகத்தன்று அதில் ரிஷியாக நடிக்கவிருந்த வங்கி ஊழியர் டிரான்ஸ்ஃபராகி ரிஷிகேஷத்துக்குப் போய்விட்டதால், ரிகர்சலை வேடிக்கை பார்க்க தவறாமல் வரும் கிச்சா, அவர்கள் தட்டில் வைத்துக் கொடுத்த பொங்கல் கொத்சுவால் கவரப்பட்டு, ரிஷியாக நடிக்கக் குஷியாக இசைந்தான்.

‘பிடி சாபம்’ நாடகத்தில் தாடையிலிருந்து தரைக்கு தார் ரோடு போட்டது போல, நீண்ட தாடியோடு தேஜஸான ரிஷி கெட்டப்பில் இருந்த கிச்சா, தாடி ஒட்டப் பயன்படுத்திய போஸ்டர் வஜ்ரகோந்தின் நமைச்சலால் வாய் குழற, ஆரம்பத்திலிருந்து கடைசிவரை விடாமல் ‘பிதி சாதம்’ என்றே ஏக மழலையில் சபித்துக்கொண்டிருந்தான்! ஒரு கட்டத்தில் இம்சை தாங்காமல் தாடியைப் பிய்த்தெடுத்து. நாலு தலை ஒட்டப்பட்ட நரக வேதனையில் இருந்த பிரம்மாவிடம், ‘பிடி தாடி’ என்று ஸ்பஷ்டமாகக் கூறி, தாடியைத் தந்துவிட்டு மேடையிலிருந்து குதித்து ஓடிவிட்டான்.

இப்பேர்ப்பட்ட ‘நாடக ஜம்ப்பவான்’ ஆன கிச்சா, பாஸ்டனில் நாங்கள் போடப்போகிற ‘மீசை ஆனாலும் மனைவி மற்றும் மாது ப்ளஸ் டூ நாடகத்தில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் (பாத்திரம்கூட இல்லை. சின்ன சைஸ் ஸ்பூன். அவ்வளவுதான்) நல்லபடியாக நடிக்க வேண்டுமே என்ற பயத்தில் காசி விசாலாட்சி, காஞ்சி காமாட்சி என்று ஆரம்பித்து கோலிவுட் குஷ்பு வரை (கோயில் இருக்கிறதே!) வேண்டிக் கொண்டேன்.

ஐந்து மணிக்குப் போடப்போகும் முதல் ஷோவான ‘மாது ப்ளஸ் டூ நாடகத்தில் தெலுங்கு பேசும் கல்யாண சாஸ்திரிகளாகவும், தொடர்ந்து ஏழு மணிக்கு இரண்டாவது ஷோவான ‘மீசை ஆனாலும் மனைவி’ நாடகத்தில் அரைகுறை இந்தி பேசும் சோபாலால் சேட்டாகவும் நடிக்கச் சொல்லி கிச்சாவிடம் கூறினேன். கிச்சாவும், “டோண்ட் ஒர்ரி முஸ்தபா” என்று காஷுவலாகக் கூறிவிட்டு இரண்டு நாடக வசனங்களையும் ஒரு ‘வரி’ விடாமல் பட்ஜெட் போல சமர்ப்பித்து என் வயிற்றில் பால் வார்த்தான்.

அப்போது கிச்சா வார்த்த பால் திரிந்துபோகும்படி ஒன்று நடந்தது. நாடகம் தொடங்க இன்னும் ஐந்து நிமிடமே இருந்த சமயத்தில் அமைப்பாளர்களான ராம்ரமணனும் மணிவண்ணனும் ஓடிவந்து “மோகன், ஒரு சின்ன சேஞ்ச். மொதல் ஷோ ‘மாது ப்ளஸ் டூ வுக்குப் பதிலா உங்களோட லேட்டஸ்ட் டிராமா ‘மீசை ஆனாலும் மனைவி’ போட்டுடுங்க. மாது ப்ளஸ் டூவை செகண்ட் ஷோவா போடுங்க” என்று சொல்லிவிட்டு, என் பதிலுக்குக் காத்திராமல் நாடகம் தொடங்கப்போவதாக மைக்கில் அறிவித்துவிட்டு அந்தர்யாமியாகி விட்டார்கள்.

‘மருந்து சாப்பிடும்போது குரங்கை நெனச்சுக்காதே’ என்று சொன்ன கதையாக, அதுவரை நாடக மருந்தை நினைத்தாலே எனக்கு குரங்கு கிச்சா ஞாபகம் வந்து கர்ப்பம் கலங்கும். இப்போது மீசை ஆனாலும் மனைவி நாடகத்துக்குப் பிறகு மாது ப்ளஸ் டூ என்று மாற்று மருந்தைக் கூறி அதை அவசரமாகக் குடிக்கும்படி. ஸாரி, நடிக்கும்படி துரிதப்படுத்தியதில் துரதிர்ஷ்ட வசமாக குரங்கு கிச்சாவை சுத்தமாக மறந்துவிட்டேன்.

மீசை ஆனாலும் மனைவி நாடகத்தின் முதல் மூன்று காட்சிகளை பாஸ்டன் தமிழர்கள் வாய்விட்டுச் சிரித்து வரவேற்றதில், ‘நல்ல பேர் வாங்க வேண்டுமே’ என்ற கவலை நோய் என்னை விட்டுப் போனது. நான்காவது காட்சியில் நான், மாது பாலாஜி, ஸ்த்ரீ-பார்ட் குஷ்மாதேவியாக நடிக்கும் சாமா மூவரும் சோபாலால் சேட்டாக நடிக்கும் கிச்சாவுக்காகக் காத்திருக்க, குடுமி, பஞ்சகச்சம், நாமம் சகிதமாக மாது ப்ளஸ் டூகாஸ்ட்யூமில் அத்துமீறி பிரவேசித்தான் கிச்சா. எ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பிஸ்கட் என்று ஒரு ஆர்டரில் ப்ளஸ் டூ மற்றும் மீசை ஆனாலும் மனைவி நாடக வசனங்களை தகர டப்பா அடித்து வைத்திருந்த கிச்சா, நடப்பது மாது ப்ளஸ் டூ நாடகம் என்று நினைத்து தெலுங்கு வசனங்களை மாட்லாட ஆரம்பித்தான்.

எங்களைப் பார்க்கவேண்டிய ஒரு கட்டாயமான கட்டத்தில் மீசை ஆனாலும் மனைவி காஸ்ட்யூமில் இருந்த எங்களை நோக்கிய கிச்சா அதிர்ந்து போய், ஆடு என நினைத்து மாடு திருடிய கள்ளன் போல முழித்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை, சட்டென்று சுதாரித்துக்கொண்டு மாது ப்ளஸ் டூ தெலுங்கு சாஸ்திரிகள் டயலாக்கை தனக்குத் தெரிந்த, சுக்கு நூறாக உடைந்த இந்தியில் மொழிபெயர்த்துப் பேச ஆரம்பித்தான்.

திடீரென்று நடந்துகொண்டிருப்பது மீசை ஆனாலும் மனைவி நாடகம் என்பதையும், அதில் தான் சோபாலால் சேட் என்பதையும் உணர்ந்த கிச்சா, அதே சமயத்தில் பஞ்சகச்சம், குடுமியில் தெலுங்கு சாஸ்திரிகளாக இருக்கும் லாஜிக்கையும் உடைக்க விரும்பாமல், சோபாலால் சேட்டாகப் பேச வேண்டிய இந்தி வசனங்களைத் தனக்குத் தெரிந்த விண்டு விண்டுபோன ஜிலேபி தெலுங்கில் பிழிய ஆரம்பித்தான்.

உச்சகட்டமாக, பயத்தில் கிச்சாவுக்கு நெற்றியில் நயாகரா கொட்டுவது போல வியர்க்க, அந்த வேர்வையில் நாமம் அழிந்து சந்தன கோபியானது. எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்’ ரேட்டில் சோபாலால் சேட், தெலுங்கு சாஸ்திரிகள் என்று மாறி மாறி மேடையில் அங்குமிங்கும் ஆவேசமாக அலைந்ததில் கிச்சாவுக்குப் பஞ்சகச்சம் அவிழ்ந்து பைஜா பைஜாமா ஆனது. குடுமி கலைந்து ஜில்பா ஆனது. மொத்தத்தில் தெலுங்கு சாஸ்திரிகளாக நுழைந்த கிச்சா, காட்சி முடிவில் சோபாலால் சேட்டாக அவனை அறியாமல் மாறிவிட்டான்.

எங்கள் நடிப்புக்கு வாய்விட்டுச் சிரித்த ஆடியன்ஸ், கிச்சாவின் நிஜமான தவிப்பை நேச்சுரல் நடிப்பாக நினைத்துப் பாராட்டி அரங்கமே அதிரும் வண்ணம் அப்ளாஸ் செய்தார்கள். சாதாரணமாக வாயில் சிங்கப்பல் முளைத்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். எப்போதும் அசாதாரணமாக நடந்துகொள்ளும் அல்லது நம்மைக் கொல்லும் ‘நூடுல்ஸ் தலையன்’ கிச்சாவுக்கு இருக்கும் அதிர்ஷ்டத்துக்கு அவன் வாயில் சிங்கப்பல் என்ன, சிங்கமே முளைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்பது போல பிறரைக் குழப்புவதையே பிறவிப்பயனாகக் கொண்டிருந்த கிச்சா, அன்று ஆடியண்ஸ் செய்த கரகோஷம் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று குழம்பிப் போய், மேடையில் பார்வைக்கு தேக்குமர நாற்காலி போலத் தோற்றமளித்த தெர்மாகோல் நாற்காலியில் உட்கார, அது நொறுங்கி தரையில் உட்கார்ந்தான்.

கரகோஷம் செய்த ஆடியன்ஸ் முத்தாய்ப்பாக ‘மிஸ்டர் பீன்’ ரேஞ்சில் நாற்காலி நொறுங்கித் தரையில் அமர்ந்த கிச்சாவின் ஸ்லாப்ஸ்டிக் காமெடிக்கு எழுந்து நின்று கைதட்டினார்கள். வெறும் தரையில் உட்கார்ந்த கிச்சாவுக்கு ஸ்டாண்டிங் ஓவேஷன் கிடைத்தது!

மீசை ஆனாலும் மனைவிக்குப் பிறகு நடந்த மாது ப்ளஸ் டூ நாடகத்தில் கிச்சாவை சோபாலால் கெட் அப்பில் வரச்சொல்லி இந்தி பேசும் தெலுங்கு சேட் என்றும், ஜீவனோபாயத்துக்காக சாஸ்திரிகளாக இருப்பதாகவும் சொல்லச் சொல்லி சமாளித்தேன். சின்ன ரோலாக இருந்ததால் கிச்சா ரோலில் நான் செய்த மாற்றங்கள் கதையைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால், தனக்குக் கொடுத்த சின்ன ரோலை வைத்து கிச்சா ராக் அண்ட் ரோல் ஆடியதில், “மெட்ராஸ்ல இந்த ரெண்டு டிராமாவும் பார்த்திருக்கோம். ஆனா, இப்பப் பார்த்தது மெட்ராஸ்ல பார்த்ததைவிட இன்னும் பிரமாதமா இருந்தது. அமெரிக்காவுக்காக ஸ்பெஷலா அவரை (ஆட்டோகிராஃப் போட்டுக்கொண்டிருந்த கிச்சாவைக் காட்டி) வெச்சு நிறைய ஜோக்ஸ் எழுதியிருக்கீங்க” என்று நாடகம் முடிந்ததும் க்ரீன் ரூமுக்கு வந்த பலரில் சிலர் சொன்னார்கள். அதேபோல வந்த சிலரில் பலர் “அவருக்கு (போட்டோகிராஃபுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த கிச்சாவைக் காட்டி) ஏன், சின்ன ரோலா தந்துட்டீங்க? ரொம்ப நல்லா நடிக்கறார்” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார்கள்.

அப்போது அங்கு வந்த கிச்சாவிடம் அவர்கள் “எப்படி சார் அவ்வளவு ரியலிஸ்டிக்கா அசடாட்டம் நடிச்சீங்க?” என்று கேட்க, அதற்கு கிச்சா, “ஒண்ணும் தெரியாத அப்பாவியா. அசடாட்டம் நடிக்கறது ரொம்பக் கஷ்டம். அதுக்குத் தன் புத்திசாலித்தனம் வேணும். இதுலே புத்திசாலியா நடிக்கறது சுலபம். ஏன்னா, நடிக்கறதுக்கே ஒரு புத்திசாலித்தனம் வேணுமே. இதுவே வாழ்க்கைல புத்திசாலியா இருக்கறது கஷ்டம். அசடா இருக்கறது சுலபம். வசதியும்கூட. சில பேர் புத்திசாலித்தனமா இருக்கறதா நெனச்சுண்டு கடைசியில அசடு வழிவாங்க. அதனால நான் சொல்ல வந்தது என்னன்னா, புத்திசாலித்தனமான அசடா இருக்கறதைவிட, அசட்டுத்தனமான புத்திசாலியா இருக்கறது எவ்வளவோ பெட்டர்” என்று மேலோட்டமாகக் கேட்பவர்களுக்கு தத்துவம் போலத் தோற்றமளிக்கும் தனது தத்துபித்து பிரசங்கத்தை அனுமார் வால் போல நீட்டிக்கொண்டே போனான். க்ரீன் ரூமுக்கு வந்தவர்கள் இன்னொரு தடவை ஸ்டாண்டிங் ஒவேஷன் செய்து கிச்சாவின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவன் மேற்கொண்டு ஆரம்பிப்பதற்குள் ரன்னிங் ஓவேஷன் செய்தபடி சிண்டு தெறிக்க ஓடினார்கள்!

‘நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்ற பழைய பழமொழி போய், ‘கிச்சாவின் வம்பு உச்சாணிக் கொம்பில் முடியும்’ என்று ஒரு புதுப் பழமொழியைச் சொல்லி, என் குழுவில் என்னைத் தவிர, மற்ற அனைவரும் பரவசப்படும் அளவுக்கு பாஸ்டன் நாடகத்தில் கிச்சா செய்த அபத்தம் சுபத்தமாக முடிந்தது.

பாஸ்டனில் நாடகம் முடித்த அன்று இரவே மறுநாள் நியூ யார்க்கில் இருக்கும் நியூ ஜெர்ஸி என்ற ஊரில் நாடகம் போட ‘க்ரேஹவுண்ட்’ (Grey Hound) என்ற அமெரிக்காவின் ஆஸ்தான பஸ்ஸில் ஏறிச் சென்றோம்.

அது என்னமோ தெரியவில்லை, பழைய தமிழ் சினிமாவில் ஸ்டாண்ட் போட்ட மோட்டார் பைக்கில் கதாநாயகன் ஓட்டுவது போல எக்ஸ்பிரஷன் கொடுக்க, பின்னால் வீதிகள், வீடுகள் பேக்-புரொஜக்ஷனில் ஓடுமே, அதுபோல க்ரேஹவுண்ட் பஸ் ஓட்டுநர்கள் வெறும் ஸ்டியரிங்கைப் பிடித்து எக்ஸ்பிரஷன் ்டும்தான் கொடுக்கிறார்கள். பஸ்ஸாகப் பார்த்து எங்கள் மேல் பரிதாபப்பட்டு ஓடினால் உண்டு.

இதுபோதாதென்று பத்து மைலுக்கு ஒன்று என்ற விகிதத்தில் வரும் அமெரிக்காவின் பிரபலமான கொத்து பரோட்டா கடையான ‘மெக்டொனால்ட்ஸை’ பார்த்தால் போதும். பஸ்ஸை நிறுத்தி கிட்டத்தட்ட ஸ்டாண்டே போட்டுவிட்டு, என்னமோ நாற்பது நாள் உண்ணாவிரதத்தைக் கலைப்பவன் போல பர்கர், சாலட், கோக் என்று கபளீகரம் செய்யப் போய்விடுகிறார்கள்.

நாங்கள் பயணித்த க்ரேஹவுண்ட் பஸ்ஸின் ஓட்டுநரின் பெயர் ஜெர்ரி. பஸ்ஸைத் தயாரிக்கும்போது கூடவே ஃபேக்டரியில் ஜெர்ரியையும் தயாரித்தார்களோ என்று பிரமிக்கும் அளவுக்கு பஸ் ஜாடையில் பிரும்மாண்டமாக இருந்தார் ஜெர்ரி.

மதயானை பிளிறுவது போல சோம்பல் முறித்துவிட்டு, அஸ்திவாரம் சரியில்லாத நாற்பது மாடிக் கட்டடம் திடீரென்று சடசட -வென்று சரிவது போல விரல்களுக்குச் சொடுக்கு எடுத்துவிட்டு பஸ்ஸுக்குள் வெங்கலக் கடையில் நுழைந்த யானை போல ஏறிய ஜெர்ரி, தன் டிரைவர் சீட்டில் கிச்சா அமர்ந்திருப்பதைப் பார்த்து, ‘ஹூ ஆர் யூ மேன், கெட் அப்’ என்று அவ்வளவு பெரிய உருவத்துக்குப் பொருத்தமில்லாத கீச்சுக்குரலில் கேட்க, ஜெர்ரியும் தன்னைப் போல சக பயணி என்று நினைத்த கிச்சா, தெனாவட்டாக ‘ஃபர்ஸ்ட் யு டெல் மீ. ஹூ ஆர் யூ மேன்’ என்று கூற, கிச்சாவுக்கும் ஜெர்ரிக்கும் ஏற்பட்ட மோதல் நியூ ஜெர்ஸியை அடைவதற்குள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

– தொடரும்…

– அமெரிக்காவில் கிச்சா, முதற் பதிப்பு: மார்ச் 2006, கிழக்கு பதிப்பகம், சென்னை.

கிரேசி மோகன் கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019) தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார். அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *