அமெரிக்காவில் கிச்சா
கதையாசிரியர்: கிரேஸி மோகன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: June 3, 2026
பார்வையிட்டோர்: 323
(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
13

கிச்சாவுக்கு ஓட்டத்தெரிந்த விஷயங்கள் இரண்டு. ஒன்று – சைக்கிள். அதையும் குரங்கு பெடல் அடித்தபடி என்னமோ துரத்துபவர்களிடமிருந்து தப்பிக்க முயலும் சைக்கிள் திருடன் அவசரமாக ஓட்டுவது போல கோணல்மாணலாக ஓட்டுவான். மற்றொன்று – வீட்டுத் திண்ணையில் வீரமரணம் ரேஞ்சில் வெட்டி மல்லாக்காகப் படுத்தபடி ஈ ஓட்டுவது.
வாகனங்களை ஓட்டத்தான் வக்கில்லை. அட்லீஸ்ட், பல்வேறு வாகனங்களை ஓட்டுவது போல பாசாங்கு செய்து போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற கிச்சாவின் அல்ப ஆசையைப் பூர்த்தி செய்வதற்கென்றே ட்ரிக் போட்டோகிராபியில் நிபுணனான தணிகாசலம், தெற்குமாட வீதிக்குக் குடிவந்தான்.
அவனது ஒண்டுக்குடித்தன இண்டு இடுக்கு ஸ்டூடியோவுக்கு இருட்டில் தட்டுத் தடுமாறிப் போய் நாம் போஸ் மட்டும் கொடுத்துவிட்டு வந்தால் போதும். பத்தே நாளில் அவரவர் அல்ப ஆசைக்கு ஏற்ப நம்முடைய ஓர் உள்ளங்கையில் தாஜ்மஹாலையும், இன்னொரு உள்ளங்கையில் குதுப்மினாரையும் அசால்டாக தாங்கிக்கொண்டு ஜனசந்தடியான சிங்கராச்சாரி தெருவில் நடப்பது போலவும், சிவபெருமான் கணக்கில் நமது உச்சந்தலையில் ஒட்டவைத்த பிறை சந்திரனில் ஆர்ம்ஸ்ட்ராங் ராக்கெட்டிலிருந்து இறங்கி வருவது போலவும் போட்டோவில் ட்ரிக் செய்து டெலிவரி செய்துவிடுவான்.
தணிகாசலத்தைவிட்டு பார்த்தசாரதி பெருமாள் கோயில் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் மாருதி, ஓபல் ஆஸ்ட்ரா, டெம்போ, டூரிஸ்ட் பஸ்கள் போன்ற வாகனங்கள் போதாதென்று கோயில் யானை, ஜட்கா வண்டி இவற்றைத் தனித்தனியாக போட்டோ எடுக்கச் சொல்லி, மேலே கூறிய வாகனங்களை, தான் ஓட்டுவது போல போஸ் கொடுத்து அட்டாச் பண்ணச் சொல்லி, கிச்சா ஓர்ஆல்பமே தயாரித்து வைத்திருக்கிறான்.
கிராஃபிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் புலிகளே ஆச்சரியப்படும் அளவுக்கு தணிகாசலத்தின் தொழில்நுட்ப நகாசு வேலையால் “என்னை விட்டுவிடு” என்று அலறிக்கொண்டு ஓடும் பேயை கிச்சா ஓட்டுவது, பெருமாளுக்குப் போட்டியாக கருட வாகனத்தில் கிச்சா வருவது போன்ற போட்டோக்களை அவனுடைய ஆல்பத்தில் நானே பார்த்திருக்கிறேன்.
போட்டோகிராபி பிரியனான கிச்சா, ஆர்னால்டு ஸ்வார்ஷ்நெகர் அளவுக்குப் பிரும்மாண்டமாகவும், ஐஸ்வர்யா ராய் அளவுக்குச் சொகுசாகவும் இருந்த க்ரேஹவுண்ட் பஸ்ஸைப் பார்த்ததும் பரவசமாகி, பஸ்ஸுக்கு முன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டான். பின்னர் டிரைவர் சீட்டில் அமர்ந்துகொண்டு பஸ் ஸ்டியரிங்கைப் பிடித்து ஓட்டுவதுபோல பாவ்லா காட்டிக் கொண்டிருந்த வேளையில், பஸ்ஸின் ஓட்டுநர் ஜெர்ரி யானைகவுனி எக்ஸ்பிரஸ் போல நுழைந்து, கிச்சாவை “ஹூ ஆர் யூ?” என்று கேட்க, பதிலுக்கு கிச்சா “ஹூ ஆர் யூ மேன்?” என்று கேட்க, தன்னை இந்த தடிராஸ்கல் கிண்டல் செய்கிறான் என்று தவறாகப் புரிந்துகொண்ட ஜெர்ரி வெறியானார்.
காக்கி-காக்கியில் இருப்பவர்தான் ஓட்டுநர் என்ற கலாசாரத்தில் குலாப்ஜாமூன் போல ஊறிப் போயிருந்த அசட்டு கிச்சா, ஷார்ட்ஸ், டி-ஷர்ட்டில் இருந்த ஜெர்ரியை பயணி சக நினைத்துவிட்டான். தன்னை ‘கெட் அப்’ என்று ஜெர்ரி சொன்னதும் உட்கார்ந்திருந்தவன் பளிச்சென்று டிரைவர் சீட்டின்மேல் எழுந்து நின்றுகொண்டு, “இப்போ திருப்திதானே?” என்று அழிச்சாட்டியம் செய்தான். பிரும்மாண்டமான உருவம் இருந்தாலும் பிஸ்கோத்து மூளை கொண்ட அமெரிக்காவின் கிச்சாவான ஜெர்ரி, தான்தான் டிரைவர் என்ற முக்கியமான விஷயத்தை மட்டும் சொல்லாமல் வேறு ஏதேதோ பேச, ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளாமல் பேசும் டி.வி. கலந்துரையாடல் போல இருவர் வாக்குவாதமும் பின்வருமாறு தொடர்ந்தது.
“எழுந்திருப்பா..” – இது ஜெர்ரி.
‘நான் ஏன் எழுந்துக்கணும்?” – இது கிச்சா.
“முட்டாள், நீ எழுந்திருச்சாதானே நான் அங்க (டிரைவர் சீட்டைக் காட்டி, ஆனால் டிரைவர் என்று சொல்லாமல்) உட்கார முடியும்”
“முட்டாள், (ஜெர்ரியை ஓட்டுநர் என்று அறியாமல்) வண்டி கிளம்ப இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. நான் ஊருக்குப் புதுசு. எனக்கு விட்டுக்குடுக்கக் கூடாதா? இங்க உக்காந்து நீ என்ன சாதிக்கப் போற. அல்பி. பின்னாடி இருக்கற த்ரீ ஸீட்டர் உன் சைஸுக்கு கரெக்டா இருக்கும். போய் அதுல உட்கார்ந்துக்க”
“நான் பின்னாடி போய் உக்கார்றதா? ஏ மூதேவி. பின்னாடி நான் உக்காந்தா முன்னாடி பஸ் எப்படிப் போகும்?” என்று இப்பவும் தான் டிரைவர் என்பதை நேரடியாகச் சொல்லாமல் பூடகமாகக் கூறி, கமர்ஷியல் பிரேக் கூட தராமல் கலந்துரையாடலைத் தொடர்ந்தார் ஜெர்ரி.
“கரெக்ட், உன் பருமனுக்கு பின்னாடி உக்காந்தா பின்பாரம் தாங்காதுதான். அப்ப சென்டரா பாத்து உக்காரு” என்று கிச்சா சொல்ல, பொறுமையிழந்த ஜெர்ரி, “ஓகே மேன்.ஓகே. அந்த சீட்டுல நீயே உக்காரு. வண்டியையும் நீயே ஓட்டு” என்று கீச்சுக் குரலில் கூறிவிட்டு பஸ்ஸுக்குள் ஏறும் வாசலை அடைத்தபடி, விஸ்வாமித்திரர் போஸில் விட்டேத்தியாக நின்றார்.
“டேய் முட்டாள், நான் ஏன் வண்டியை ஓட்டணும். டிரைவர் வந்தா ஓட்டிட்டுப் போறான்” என்று ஜெர்ரியை மேலும் குழப்பினான் கிச்சா.
“டிரைவர் வந்து ஓட்டுவானா. முட்டாள். எப்படிடா முடியும். நான் இங்க இல்லே இருக்கேன்” என்று இப்பவும் தான்தான் டிரைவர் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல், தும்மல் வரும் அளவுக்கு பொடி வைத்து ஜெர்ரி சொல்ல, “கரெக்ட். வழியை நீ இப்படி அடைச்சுண்டு நின்னா டிரைவர் உள்ள நுழையறது கஷ்டம்தான்” என்று கிச்சா கூறியதும்தான் ஜெர்ரியின் ட்யூப் லைட் மூளை எரிய ஆரம்பித்தது.
“ஐ வாஸ் டிரைவர். ஐ அம் டிரைவர். ஐ வில் பி தி டிரைவர்” என்று பாஸ்ட், ப்ரஸெண்ட், ஃப்யூச்சர் டென்ஸில் டென்ஷனாக, உச்சகட்ட கீச்சுக்குரலில் ஜெர்ரி ஊர்ஜிதம் செய்த பிறகுதான் ஜெர்ரியை சக பயணி என நினைத்து தான் செய்த தவறு கிச்சாவின் இல்லாத மூளைக்கு உறைத்தது.
டிரைவர் சீட்டிலிருந்து டைவ் அடித்து ஜெர்ரியின் பூதார, ஸாரி, பாதாரவிந்தங்களைப் பற்றியபடி “ஸாரி சார்” என்று கிச்சா பணிவாகச் சொல்லவும் ஜெர்ரி அவன் மீது சமாதானப் பார்வையை வீசினார்.
ஜெர்ரியின் பாதத்தைப் பற்றியபடி மேலே பார்த்த கிச்சா, அவருடைய கழுத்தில் விதவிதமான சிலுவைகள், டலிஸ்மான் (Talisman) என்று சொல்லப்படும் நம்ம ஊர் ரட்சை தாயத்துக்கள் தொங்குவதைக் கண்டதும், ஆக்ரோஷமாக வளர்ந்து இருந்தாலும் சுபாவத்தில் ஜெர்ரி ஆத்திகமான சாத்வீகன் என்பதைப் புரிந்து கொண்டான். சட்டென்று எழுந்த கிச்சா சிரித்தபடி நீட்டி, “சார், மை நேம் ஈஸ் கிச்சா, அலையஸ் கிருஷ்ணா. பை தி பை, யூ நோ லார்ட் கிருஷ்ணா. ஹி ஈஸ் எ காட் லைக் யுவர் ஜீஸஸ்” என்றதும், ஜெர்ரி அப்படியே உருகிப் போனார்.
இதுதான் சமயம் என்று கிச்சா, “சார், லார்ட் கிருஷ்ணாவும் உங்களை மாதிரி டிரைவர்தான் சார்” என்றான்.
“என்னது? டிரைவரா?” என்று வாய்பிளந்தார் ஜெர்ரி.
“யெஸ். ஆனால், அவர் க்ரேஹவுண்ட் பஸ் டிரைவர் இல்லை. அவர் சேரியட் டிரைவர் ஃபார் அர்ஜுனா. அவரை நாங்க பார்த்தசாரதின்னு அழைப்போம். பார்த்தன் என்பது அர்ஜுனனுக்கு நிக் நேம், சாரதி மீன்ஸ் டிரைவர்” என்று கிருஷ்ணரை ஜெர்ரியோடு ஒப்பிட்டு பகவான் பக்தாள் ரிலேஷன்ஷிப் பற்றி பாகவத உபன்யாசம் செய்து ஜெர்ரி தலையில் செர்ரிப் பழம் வைத்து ஐஸ் வைத்தான் கிச்சா.
இதன் பலனாக, அடுத்த சில நிமிடங்களில், ஜெர்ரியின் சோபா மடியில் உட்கார்ந்தபடி நியு ஜெர்ஸி நோக்கிச் செல்லும் ஹைவேயில் க்ரேஹவுண்ட் பஸ்ஸை ஓட்டிக்கொண்டிருந்தான் கிச்சா.
பஸ்ஸை ஓட்டுவது போல பாவ்லா காட்டி போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொள்ள நினைத்த கிச்சாவுக்கு அந்த பஸ்ஸையே ஓட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நியூ ஜெர்ஸி வரும் வரையில் கிச்சா ‘கீதாஸ் அட்வைஸ்’ என்று கிருஷ்ணரின் கீதோபதேசத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன் சாராம்சத்தைக் கூற, பீமன் போல இருந்த ஜெர்ரி, அர்ஜுனன் போல பவ்யமாக அதைக் கேட்டபடி பஸ்ஸை ஓட்டிக்கொண்டு வந்தார்.
கிச்சா என்ன சொன்னான் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், நியூ ஜெர்ஸி பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும் கிச்சா, ஜெர்ரியைப் பார்த்து, “ஜெர்ரி, இஃப் யூ கமிட் மிஸ்டேக் இன் லைஃப். வாட் வில் ஹேப்பன்?” என்று கேட்க, பதிலுக்கு ஜெர்ரி நல்ல சுத்தத் தமிழில் “உம்மாச்சி கண்ணைக் குத்தும்” என்று சொல்ல, என்னைத் தவிர என் குழுவில் உள்ள அனைவரும் “கிச்சாவுக்கு உடம்பு பூரா மூளை. ஐ.நா. சபைல இருக்க வேண்டியவன்” என்றெல்லாம் புகழ்ந்து பேசினார்கள்.
நியூ ஜெர்ஸியில் பார்கவி சுந்தர்ராஜன் கட்டும் கோயில் நிதிக்காக ‘மீசை ஆனாலும் மனைவி’, ‘மாது ப்ளஸ் டூ நாடகம் போட்டபோது என் குழுவில் உள்ள அனைவரும் கிச்சா பாஸ்டனில் செய்த தவறை தொடரவேண்டும் என்று சென்டிமெண்டலாக என்னைப் பலவந்தப்படுத்தினார்கள். நானும் வேறுவழியில்லாமல் சம்மதித்தேன்.
தவறு செய்வதில் முன் அனுபவம் இருந்ததால் இம்முறை அதே தவறை கிச்சா இன்னும் பிரமாதமாகச் செய்ய அரங்கமே அதிர்ந்தது. பாஸ்டனில் போட்டோகிராபுக்கு போஸ் கொடுத்து ஆட்டோகிராஃப் போட்டு பிரபலமான கிச்சா, நியூ ஜெர்ஸியில் ஆட்டோபயாகிராபி எழுதும் அளவுக்குப் பிரபலம் அடைந்தான்.
14
நியூ ஜெர்ஸியில் நாடகத்தை வெற்றிகரமாக முடித்த கையோடு அன்றிரவு பார்கவி சுந்தர்ராஜன் வீட்டில் பால்பாயசம், பருப்பு உசிலி, புளியோதரை, அக்காரவடிசல் என்று எங்களுக்கு அமர்க்களமாக டின்னர் பரிமாறப்பட்டது.
தேவையில்லாமல் திணிக்கப்பட்ட இமேஜால் தெரியாத்தனமாக சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் ஆகிவிட்ட கிச்சாவை சாப்பிடவிடாமல் அங்கு வந்தவர்கள் சூழ்ந்துகொண்டு “உங்க குவாலிஃபிகேஷன் என்ன? உங்க ஹாபீஸ் என்ன? எங்கே வொர்க் பண்றீங்க?” என்று கேட்டு அவனை ‘கேள்வியின் நாயகனாக்கி’ கிட்டத்தட்ட கேரோ செய்தார்கள்.
‘என்னுடைய குவாலிஃபிகேஷன் – ஏழாம் கிளாஸ் எட்டு தடவை எழுதி பத்து தடவை ஃபெயில். ஹாபீஸ் – பம்பரம், பாணா காத்தாடி விடுவது, மொத்தத்தில் குண்டுச்சட்டியில் குதிரை, குதிரைகூட இல்லை, கழுதை ஓட்டும். தண்டச்சோத்து தடிராமன்’ என்ற தனது கேவலமான பயோ-டேட்டாவைக் கூறமுடியாமல் சிறிது நேரத்துக்கு பேய் முழி முழித்தான் கிச்சா.
திடீரென்று அவன் கண்ணில் அங்கிருந்த கம்ப்யூட்டர் பட்டது. தான் ஒரு கம்ப்யூட்டர் கன்ஸல்டெண்ட் என்ற பொய்யை வழக்கம்போல வாய் தவறாமல் ஸ்பஷ்டமாக “ஐ அம் எ கம்ப்யூட்டர் இன்சல்டெண்ட்” என்று பதவிசாகப் பேத்த, கேள்வி கேட்டவர்கள் கிச்சாவின் பேத்தலை ஜீரணிக்க முடியாமல் அட்லீஸ்ட் அதுவரை சாப்பிட்டதையாவது ஜீரணித்துக் கொண்டிருப்போம் என்ற ரீதியில் மயான அமைதி காத்தார்கள்.
‘நேற்றைய கம்ப்யூட்டர் இன்றைய கல்லாப்பெட்டி’ என்ற ரேஞ்சில் கம்ப்யூட்டர் துறை அசுர வளர்ச்சியடையும் இந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர் சம்பந்தமாக என்ன ரீல் ஓட்டினாலும் ‘நமக்கேன் வம்பு. இவனது இன்றைய அஞ்ஞானம் நாளைய விஞ்ஞானமாக மாறி ஒருவேளை சாத்தியப்படலாம்’ என்ற ரீதியில் சிலர் தலையை ஆட்டி கிச்சா சொன்னதைத் தாற்காலிகமாக ஒப்புக்கொண்டார்கள்.
யார் கண்டார்கள்? ‘காதலர் தினம்’ ஈமெயில் காதல் போல நாளை ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் தங்கள் பிளட் குரூப், குரோமோசோம், டி.என்.ஏ. விஷயங்களை கம்ப்யூட்டரில் டைப் அடித்து இன்டெர்நெட் மூலமாக சரசமாடி, கூடிக் குலாவி, டபுள்யூ டபுள்யூ டபுள்யூ டாட் பேபி டாட் காமில் டெஸ்ட் ட்யூப் பேபி போல கம்ப்யூட்டர் வழியாக குழந்தையை டவுன் லோட் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
‘கம்ப்யூட்டர் இன்சல்டெண்ட்’ என்று அறிவுஜீவியான கிச்சா சொன்னதன் நோக்கம் என்ன என்பதை யோசித்த ஒருவர் (இவர் பில்கேட்ஸ் கம்பெனியில் வாச கேட்டிலிருந்து கொல்லை பக்க கேட் வரை செல்லும் அதிகாரம் உடையவர்), “மிஸ்டர் கிச்சா, இப்ப கம்ப்யூட்டர்ல சில விஷமிகள் வைரஸைப் புகுத்தி கம்ப்யூட்டரை இன்சல்ட் பண்றாங்க. அதைத் தடுக்க நீங்க சாஃப்ட்வேர் தயாரிக்கறீங்க. அதனால நீங்க உங்களை ‘கம்ப்யூட்டர் இன்சல்டெண்ட்’னு சொல்லிக்கறீங்க. சரிதானே?” என்று தயங்கியபடி கேட்க, கிச்சா ‘ஆமாம் இல்லை’ இரண்டுக்கும் பொதுவாக, மையமாக தலையை ஆட்டினான்.
‘என்ன சாஃப்ட்வேர்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று தேள்கடி போல அவர் தொடர்ந்து குடைய ஆரம்பிக்க, கரணம் தப்பினால் மரணம் நிலையில் இருந்த கிச்சா, இந்த இம்சையை எப்படிச் சமாளிப்பது என்று பேய் முழி முழித்தான். இம்முறை பார்கவி சுந்தர்ராஜன் வீட்டு சுவாமி அலமாரி அவன் கண்ணில் பட்டது. அதில் இருந்த பெருமாள் படங்களைப் பார்த்தவன் பக்தி பரவசம் அடைந்து திடீரென்று கோயில் கதவுகளை அறைந்து சாத்துவது போல இரு கன்னத்திலும் படபடவென்று அறைந்து (கேள்வி கேட்டவர் கன்னத்தில்தான்) டிஸ்கோ வெறியில் சாமியாடினான்.
பிறகு சாந்தசொரூபியாகி “சகஸ்ரநாம சோ சேஷாத்ரி கோமல் சாமிநாத மேஜரஸ்ய சுந்தர்ராஜ சண்முக பகவதே ஒய்.ஜி.பார்த்தசாரதி ஸேவிதே பாகிமாம்” என்று சம்ஸ்கிருத ஜாடையில் கண்களில் தாரை தாரையாக நீர் பெருக கூறினான். பின்னர் கேள்வி கேட்டவர்களைப் பார்த்து, “ஒண்ணுமில்லை குழந்தைகளா, பெருமாளோட சித்த நேரம் சம்ஸ்கிருதத்துல சம்பாஷிச்சேன்” என்று கூற, அவர்கள் ‘பார்வையிலே நடிகனாய், பழக்கத்திலே கம்ப்யூட்டர் நிபுணனாய், பக்தியில் பரம்பொருள் சேவகனாய்’ என்ற ரேஞ்சில் கிச்சாவைப் பார்த்துவிட்டு ‘கிச்சாஜி’ என்று கோரஸாக மரியாதையில் விளிக்க ஆரம்பித்தார்கள்.
கிரேஸி கிரியேஷன்ஸ் குழு ஆரம்பித்த நாள்களில் அதன் காரியதரிசியாக இருந்து அதை வளர்த்து, அது நன்றாக வளர்ந்த சமயத்தில் அதன் வளர்ச்சியை அனுபவிக்க முடியாமல் வேலை நிமித்தமாக நியூ ஜெர்ஸி சென்றுவிட்ட எங்கள் குழுவைச் சேர்ந்த வெங்கட் என்கிற ரமணி வீட்டில் அடுத்த நான்கு நாள்கள் தங்கினோம்.
கிச்சாவை தா56ற்காலிகமாக கழட்டிவிட எண்ணி, வெங்கட்டுக்கு அவனை அறிமுகம் செய்துவைத்து கிச்சாவை அவன் தலையில் கட்டினேன்.
நாங்கள் இல்லாத ஒரு சமயத்தில் கிச்சா, வெங்கட்டை தனியாக அழைத்துப் போய் “சார், நாமல்லாம் ஒரே ஏஜ் குரூப். அதுவும் தவிர, நீங்க மோகன் ட்ரூப்ல ஆதிநாள்லேந்து ஃபவுண்டர் மெம்பர் வேற. உங்ககிட்ட கூச்சமில்லாம கேக்கலாம்” என்று பெரிய லெவலில் பீடிகை போட, வெங்கட் “கிச்சா, நீங்க மோகன் ட்ரூப். எனக்கு பிரதர் மாதிரி. வெக்கப்படாம கேளுங்க. என்ன வேணும்?” என்று வாத்ஸல்யமாகக் கூறினான்.
சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு நயாகராவை தப்பா “வயாகரா” என்று ஆரம்பித்தான் கிச்சா.
“வயாகராவா” என்று அலற ஆரம்பித்த வெங்கட் வாயை பொத்தி, “ப்ளீஸ், முடியாதுன்னா விட்டுடுங்க. பட், தயவு செஞ்சு மோகன்கிட்ட சொல்லிடாதீங்க. என்னை அப்புறம் திட்டுவான்” என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக வெங்கட் வாயை ரிலீஸ் செய்தான்.
“கிச்சா, தோ பாருங்க, வயாகராவெல்லாம் ஃபால்ஸ்” என்று அந்த மாத்திரை பொய். இன்னும் நிரூபணமாகவில்லை என்பதை வெங்கட் கூற முயற்சி செய்ய, கிச்சா “வயாகரா ஃபால்ஸ்னு (அருவி என்ற அர்த்தத்தில்) எனக்கும் தெரியும் சார்” என்று சொல்ல, “தெரிஞ்சுண்டே ஏன் ரிஸ்க் எடுக்கறீங்க..” என்ற வெங்கட்டைப் பேசவிடாமல் “ரிஸ்க் எல்லாம் பாத்தா முடியுமா. ஆசைப்பட்டா தைரியமா அனுபவிச்சு பாத்துரணும். திருவல்லிக்கேணில பாஷ்யமய்யங்கார்னு ஒருத்தர். அறுபது வயசுல பொண்டாட்டி செத்துட்டா, ரிஸ்க்தான். இருந்தாலும் தைரியமா ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கலையோ?” என்று ஏதோ வாய்க்கு வந்த உதாரணத்தைக் கூறினான் கிச்சா.
“பாஷ்யம் அய்யங்காருக்கு அறுபது வயசாச்சு.. ரெண்டாம் கல்யாணம். அவருக்கு வயாகரா ஓகே பட் உங்களுக்கு நாற்பது வயசுதானே ஆச்சு” என்று வெங்கட் புரியாமல் கேட்க, “என்ன வெங்கட் உளர்றீங்க. பாஷ்யம் அய்யங்காருக்கு பாத்ரூம் ஷவர்ல குளிச்சாலே மூச்சு முட்டும். அவருக்கு வயாகரா ஓகேங்கறீங்க. நான் குத்தாலத்துல குளிச்சுட்டு அந்த ஈரம் காயறதுக்கு முன்னாடி கோனே ஃபால்ஸ் வந்து குளிச்சவன். நான் வயாகரா பாக்கக் கூடாதா?” என்று பச்சைக் குழந்தை போல கண்ணீர் அருவியாகக் கொட்டியபடி கிச்சா கேட்க, அப்போதுதான் வெங்கட்டுக்கு புரிந்தது. நயாகராவை வயாகரா என்று கிச்சா உச்சரித்தது.
இந்த சம்பாஷணையை என்னிடம் கூறிவிட்டு விழுந்து விழுந்து சிரித்த வெங்கட், “எங்கடா புடிச்ச இந்த அராத்தை (கிச்சாவை)” என்று கேட்க, “தோ பார், என்னைப் புடிச்ச அராத்து இப்ப உன்னைப் பிடிச்சுருக்கு. எனக்குப் பழகிப் போச்சு நாலு நாள் இங்கதான் தங்கப் போறோம். ம். வசமா மாட்டிக்கினே” என்று நான் சொல்ல, “சீச்சீ, சும்மா பெரிசு படுத்தாத, கிச்சா பாவம் சாது” என்று கிச்சாவுக்காக வெங்கட் வாதாட, அப்போது ஃபேக்டரி சங்கு போல ஃபயர் அலாரம் முழங்கியது.
அலறியடித்துக்கொண்டு போய்ப் பார்த்தால், கிச்சா படுப்பதற்கு முன் பார்த்தசாரதி பெருமாள் படத்துக்கு ஊதுவத்தி காட்டிவிட்டு (தீப்பந்தம் போல திகுதிகுவென்று எரியும் நாலு பாக்கெட் வத்திகள்) அதை ஃபயர் அலாரம் குமிழியில் உள்ள துளையில் சொருகிக்கொண்டிருந்தான்!
கிச்சா ரொம்ப காஷுவலாக வெங்கட்டைப் பார்த்து, “என்ன சைரன் சத்தம் கேக்கறது. வெளில ஐம்புலன்ஸ் அடங்கிய யாராவது ஆம்புலன்ஸ்ல போறாளா, இல்லை கவர்னரா?” என்று வெகுளியாகக் கேட்க, அராத்து கிச்சா தங்கப்போகும் அந்த நான்கு நாள்களை எண்ணி வீட்டில் ஹீட்டர் போட்டிருந்தும் நடுங்கினான் வெங்கட்.
மறுநாள் குளிக்கக் கிளம்பிய கிச்சாவிடம், “தோ பாருங்க, திருவல்லிக்கேணி மாதிரி பக்கெட்டுல தண்ணி ரொம்ப மொண்டு மொண்டு குளிச்சு பாத்ரூமை ஈரமாக்கக் கூடாது. பாத்ரூம்ல டப் இருக்கும். அதுல உக்காண்டுதான் குளிக்கணும்” என்று வெங்கட்டின் மனைவி ராதா சொல்ல, தலையாட்டிவிட்டு பாத்ரூமுக்குள் சென்ற கிச்சா அடுத்த பத்தாவது நிமிஷம் “காப்பாத்துங்க, காப்பாத்துங்க, ப்ளீஸ் ஸேவ் மீ” என்று குரல் கொடுக்க, நாங்கள் பாத்ரூம் நோக்கி ஓடினோம்.
வெளியே தண்ணீர் தெறிக்காமல் இருக்க ஸ்க்ரீன் போட்டு மூடியிருந்ததால் கிச்சாவுக்கு பாத் டப் இருப்பது தெரியவில்லை. “உள்ளே உட்கார்ந்து குளிக்கணும்” என்று ராதா சொன்னதை வைத்து பாத்ரூமில் இருந்த கொஞ்சம் பெரிய சைஸ் வாஷ்பேஸினை டப் என்று நினைத்து அதற்குள் ஏறி (அதற்குள் எப்படி ஏறி உட்கார்ந்தான் என்பது இன்றுவரை எங்களுக்குப் புரியாத புதிர்) டைட்டாக உட்கார்ந்துகொண்டவன் கைஅலம்பும் குழாயில் ஒரு மாதிரி குளித்துவிட்டு இறங்க முடியாமல் ஈனக் குரல் கொடுத்திருக்கிறான். பிறகு வெங்கட், ப்ளம்பரை வரவழைத்து வாஷ்பேஸினைக் கழற்றிக் கீழே வைத்து, அதிலிருந்து கிச்சாவை இழுத்து வெளியே போட்டான்.
நாங்கள் வெங்கட் வீட்டில் இருந்த சமயம் அப்போது அங்கு நவராத்திரி. கிச்சா பெட்டிகளை அடுக்கி பெட்ஷீட்டால் மூடி கொலுப்படி அமைத்துக் கொடுத்ததில் வெங்கட் மனைவி ராதாவுக்கு பரம சந்தோஷம். பட்டு பீதாம்பரம், துளசிமாலை, தலையில் அட்டைக்கிரீடம், அதில் மயிற்பீலி என்று வெட்கமில்லாமல் கிருஷ்ணர் வேஷம் போட்டுக்கொண்டு புல்லாங்குழலுக்குப் பதிலாக வெங்கட்டின் பையனுடைய கிடாரை கையில் வைத்துக்கொண்டு ராதாவோடு சென்று அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களை கொலுவுக்கு அழைத்தான் கிச்சா.
கொலுவுக்கு வந்தவர்கள் எல்லோரும் வெட்கப்பட்டுப் பாடாததால் கிச்சா ஆபத்துக்குப் பாதகமில்லை என்று “சோளம் விதைக்கையிலே சொல்லிவிட்டுப் போற புள்ளே, சோளம் விதைச்சு” என்று சினிமா பாட்டு பாடினான். பக்கத்து வீட்டு ‘பென்” “இது என்ன பாப் ஸாங்கா?” என்று கிச்சாவைப் பார்த்துக் கேட்க, கிச்சா, “நோ, நோ திஸ் ஈஸ் பாப்கார்ன் ஸாங் (சோளத்தைப் பற்றி பாடியதால்)” என்று கூறினான்.
நாங்கள் அங்கிருந்த நான்கு நாள்களும் “சேலம் உதைக்கையிலே. சுள்ளிபுட்டு பூரா புள்ளே..” என்று பக்கத்து வீட்டில் ‘பென்’ சாதகம் செய்துகொண்டிருப்பது எங்கள் காதில் விழுந்தது.
15
பாரத கலாசாரத்தில் பற்று மிகுந்த எனது நியூ ஜெர்ஸி நண்பனின் மனைவி ராதா, நவராத்திரி கொலுவை தன் வீட்டில் விமரிசையாக நடத்திவிட்டு, கடைசி நாளன்று அக்கம்பக்கத்து அமெரிக்கச் சுமங்கலிகளுக்கு ஒரு தட்டில் கவுனும் அதற்கு மேட்சிங்காக கர்ச்சீப்பும் வைத்துக் கொடுத்தாள். நண்பிகள் வட்டாரத்தில் தனக்கு நல்ல பேர் வாங்கித் தந்த கிச்சாவை, ‘பேண்ட் ஷர்ட் போட்ட பழுத்த சுமங்கலி’யைப் பார்ப்பதுபோல நன்றியோடு பார்த்து நெகிழ்ந்து போனாள்.
இது போதாதென்று கொலுவுக்கு வந்த அமெரிக்கர்களுக்குப் பட்டாணி சுண்டல், பால் பாயசத்தை அங்கு கிடைக்கும் இலைகளை ஈர்க்குச்சியால் தைத்துச் செய்த தொன்னையில் கொடுத்தான் கிச்சா.
“சாப்பிட்ட பிறகு அந்தத் தொன்னையை மரத்தடியில் போட்டால் அப்படியே மரத்துக்கு உரமாகிவிடும்” என்பதையும் கூறி, தொன்னையின் மல்டி பர்பஸ் உபயோகத்தை அவன் விளக்க, இந்தத் தொன்னை விவகாரம் காட்டுத் தீ போல நியூ ஜெர்ஸி முழுவதும் பரவியது.
அபாயகரமான பிளாஸ்டிக் பொல்யூஷனைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் கொலுவுக்கு வந்த நியூ ஜெர்ஸி விஞ்ஞானி ஒருவர், பிளாஸ்டிக் கப்புக்கு மாற்றாக கிச்சா விநியோகித்த ஈர்க்குச்சி தொன்னையால் எக்கச்சக்கமாக ஈர்க்கப்பட்டுவிட்டார்!
மறுநாளே ‘டேபுலாய்ட்’ எனப்படும் லோக்கல் பத்திரிகையில், ‘தொன்னை மேன் ஃப்ரம் சென்னை என்ற தலைப்பில் வெங்கட் வீட்டுக் கொலுப்படியில் உட்கார்ந்திருக்கும் கிச்சாவின் படம் போட்டு, தொன்னையைப் ‘புத்தம் புதிய த்ரோ அவே கப்’ என்று விவரித்து, விலாவாரியாகக் கட்டுரை எழுதி, கிச்சாவை ஐன்ஸ்டீன் லெவலில் புகழ்ந்து கூறியிருந்தார்.
தன் வீட்டுக் கொலு பற்றிய செய்தி பத்திரிகையில் வரும் அளவுக்குப் பிரபலமான சந்தோஷத்தில் ராதாவுக்கு, கிச்சாவை ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. விளைவு, என் நண்பன் வீட்டில் என் கொடி ஏற்றுவதற்கு முன்பே இறக்கப்பட்டு, கிச்சாவின் கொடி பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்து!
ராதா கேட்டுக்கொண்டதன்பேரில், பக்கத்துக் கிராமத்துக்கு வெங்கட்டோடு கிச்சா சென்று, அங்கு இருக்கும் மாடுகள் போடும் சாணத்தை எடுத்துவந்து, தண்ணீரில் கரைத்து தினமும் வாசல் தெளித்து கோலம் போட்டான்.
வைத்த கையை எ எடுக்காமல், புள்ளிகளை இணைத்து கிச்சா கோலம் போடுவதை வாயைப் பிளந்தபடி பக்கத்து வீட்டு ‘பென்’, அடுத்தாத்து ஆர்லிங்டன், எதிர்வீட்டு எமர்ஸன் தத்தம் மனைவிமார்களோடு பார்த்துவிட்டு, சி.என்.என்.னுக்குத் தகவல் கூற, கேமரா சகிதமாக சி.என்.என். நிருபி எலிஸா வந்துவிட்டாள்.
“இவ்வளவு ஒல்லியா இருக்கியே, எலிஸாவுக்குப் பதிலா மெலிசான்னு பேரை மாத்திக்கோடி” என்று கோலம் போட்டபடி கிண்டல் செய்துகொண்டே கிச்சா போஸ் கொடுக்க, அது லைவ்வாக அமெரிக்க டி.வி.க்களில் ஒளிபரப்பானது.
கிச்சாவிடம் கோலத்தின் தாத்பர்யத்தைப் பற்றி எலிஸா கேட்க, “கோலம் மீன்ஸ் ப்யூட்டி லைக் யூ” என்று ஐஸ் வைக்க, எலிஸா குஷியாகி கிச்சாவை டைட் க்ளோஸப்பில் கவர் செய்தாள். பிறகு, “ஃபர்ஸ்ட் யு ஹேவ் டு புட் புள்ளிகள்” என்ற கிச்சா, அப்போது கேமராவை எடுத்துக்கொண்டு, வெவ்வேறு கோணத்துக்காக கோணல் மாணலாக அங்குமிங்கும் ஓடிய எலிஸாவைப் பார்த்து, “ஏய் எலிஸா, டோண்ட் ரன் லைக் சுண்டெலிஸா” என்று கூறினான்.
திடீரென்று ஞாபகம் வர, “புள்ளி மீன்ஸ் இம்பார்டெண்ட் பர்ஸன்ஸ். பெரும்புள்ளி மீன்ஸ் பிக்ஷ ஷாட்ஸ்” என்று கூறினான் கிச்சா. திருதிருவென்று விழித்தாள் எலிஸா. தொடர்ந்து, “இந்தச் சமூகமும் கோலம் மாதிரி வண்ணமயமாக இருக்கவேண்டும் என்றால், பெரும்புள்ளிகள் அத்தனை பேரையும் ஒன்றாக இணைக்கவேண்டும். ஐ மீன், இம்பார்டெண்ட் பர்சன்ஸ் டுகெதர்!” என்று மேலும் உளறினான் கிச்சா. கோலம் மூலமாக சமூக ஒற்றுமையை சிம்பாலிக்காக வெளிப்படுத்திய கிச்சாவை ‘செயின்ட் கிச்சா ஃபரம் இண்டியா’ என்ற தலைப்பில் சி.என்.என்.னில் ஒளிபரப்பினார்கள். அதைப் பார்த்த நியூ ஜெர்ஸி தாய்க்குலம் அனைவரும் ஓடோடிவந்து கிச்சாவிடம் கோல க்ளாஸ் எடுக்கும்படி கெஞ்சிக் கூத்தாடினார்கள்.
கிச்சா கோலப் புத்தகம் போட்டு, ஜெராக்ஸ் எடுத்து, ஒரு புத்தகம் ஒரு டாலர் முப்பது பைசா என்று போட, அவர்கள் “இங்கு பைசா கிடையாது. சென்ட்தான்!” என்று கூற கிச்சா, “எனக்கு இந்த சென்ட்டு, பவுடர்லாம் அலர்ஜி. ஃப்ரீயாவே வெச்சுக்கங்க” என்று சொன்னான். அவர்கள் கிச்சாவை “ஃபிலான்த்ரஃபிஸ்ட்” என்று பாராட்ட, வயிற்றெரிச்சலில், இருந்த என்னைப் பார்த்து கிச்சா, “வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்” என்று புரட்சித் தலைவர் ஸ்டைலில் பாடினான்.
மறுநாள் நியூ ஜெர்ஸியிலிருந்து கையில் ‘டார்ச்’ என்று சொல்லப்படும் தீப்பந்தத்தோடு மாலுமிகளுக்குக் கலங்கரை விளக்கமாக நிற்கும் லிபர்டி சிலையைப் பார்க்க நியூ யார்க்குக்கு காரில் போனோம்.
நம்ம ஊர்ல அட்ரஸ் கேட்டா, “லெஃப்டுல போய், ரைட்டுல போய், கிழிஞ்சு போய், காணாமப் போய், செத்துப் போய்” என்று சொல்லும்படியான சந்துபொந்துகள் அமெரிக்காவில் இல்லை. திரௌபதி மானம் காக்க கிருஷ்ணர், பேல் பேலாக அளித்த புடைவை மாதிரியாக அமெரிக்க ரோடுகள் நீண்டுகொண்டே இருந்தன! பி.டி. உஷா, வலசம்மா லெவலில் மைல்கணக்கில் ஓடத் தெரிந்தால்தான் இவ்விடத்தில் தில்லாக பிக்பாக்கெட் அடிக்கலாம்.
‘மரத்தை மறைத்தது மாமத யானை. மரத்தில் மறைந்தது மாமத யானை’ என்ற திருமூலர் வாக்கைப் போல, காருக்குள் உட்கார்ந்திருக்கும் நமக்கு, ‘ரோடுக்குமேல கார் ஓடுகிறதா? இல்லை, காருக்குக் கீழே ரோடு ஓடுகிறதா? என்று குழப்பம் ஏற்படும் அளவுக்கு, தாருக்குப் பதிலாக ஜவ்வரிசி பாயசத்தில் போட்டது போல, ஹைவேஸ் வழவழப்பாக இருந்தது.
வீதி நெரிசல் நிலவரங்களை அமெரிக்காவில் ஹெலிகாப்டரிலிருந்து கேமரா வழியாகப் பார்த்து, அவ்வப்போது கார் ரேடியோவில் கூறுகிறார்கள்.
“துரைசாமி சப்வேயில் துரைசாமியே தனியாக நடந்துபோக முடியாத அளவுக்கு கார், ஆட்டோ, பஸ், லாரி என்று டிராஃபிக் மிக்ஸட் ஃப்ரூட் ஜாம். ஆற்காடு ரோட்டில் ஓரளவுதான் டிராஃபிக் ஜாம்.எனவே, கோடம்பாக்கத்துக்கு சினிமா சான்ஸ் கேட்கப்போகிறவர்கள், ஆற்காடு ரோடு வழியாகப் போனால் தாமதமானாலும் அப்பா ரோலாவது கிடைக்க வாய்ப்புண்டு” என்று சென்னையில் சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.
மீட்டருக்குமேல் பேசிவிட்டு, ரோட்டுக்கு மேல் பறக்கும் ஆட்டோக்கள், ஸ்பீட் பிரேக்கர்கள், சிக்னல்கள் எல்லாவற்றையும் உதாசீனப்படுத்திவிட்டு, ஓடும் சிசுபாலனைக் கொல்ல நிற்காமல் சுழன்றபடி
துரத்தியடிக்கும் விஷ்ணுவின் சக்கரம் போல ஓடும் மீன்பாடி வண்டிகள், அடிக்கடி ஒன் பாத்ரூம் போகும் குழந்தை போலத்தண்ணீரை சிந்திக்கொண்டே போகும் தண்ணீர் லாரிகள், நமது காரின் ஒரு பக்கத்துக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து, எதிர்ப்பக்கக் கதவைத் திறந்து வெளியேறி ரோட்டை க்ராஸ் செய்யும் பாதசாரிகள் போன்ற நமக்குப் பழக்கமான சமாசாரங்களை அமெரிக்காவில் பார்க்கவே முடியாமல் எனக்கு ஹோம் சிக் வந்துவிட்டது!
போலீஸ்காரரை அங்கு காப் (இOக) என்கிறார்கள். சரியான பெயர்தான். ஓட்டுவதில் தவறு செய்தால், முதல் வேலையாகக் கையில் ‘காப்’புதான்! பிறகு, நமது லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் எல்லாவற்றிலும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, நம்மை ஜானவாச கார் ஓட்டக்கூட லாயக்கில்லாதவர்களாக்கி விடுகிறார்கள்!
ஐஸன்ஹோவரோ யாரோ நினைவு இல்லை. “நமது வீதிகளைக் கட்டியது நமது பணபலம் என்று நாம் நினைக்கிறோம். தவறு… மாறாக, நமது பணபணத்தைக் கட்டிக் காப்பதே நமது வீதிகள்தான்!” என்று சொன்னாராம். அந்த அளவுக்கு அமெரிக்காவின் தலைவிதியை நிர்ணயிப்பது, அதன் பிரதான தலை வீதிகள்.
லிபர்டி சிலை நிற்கும் தீவுக்கு மின்சாரப் படகில் சென்றோம். பிரான்ஸிலிருந்து பாகம் பாகமாக வந்த அந்தச் சிலையை முழுமையாகப் பிரதிஷ்டை செய்து, அதன் திறப்பு விழாவின்போது நடந்த வேடிக்கையை வெங்கட் சீரியஸாகச் சொன்னான். அப்போது ஜனாதிபதியாக இருந்த க்ளீவ்லாண்ட் பேசி முடித்ததும், அந்த ஊர் வட்டம், மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சிக்னல் காட்ட, பட்டாசு வெடிச் சத்தத்தோடு துணியால் மூடப்பட்ட சிலை திறக்கப்பட வேண்டும் என்று ஏற்பாடு முடிவு செய்யப்பட்டு இருந்ததாம்!
கிச்சா டைப் கேனையான அந்த வட்ட மாவட்ட ஆசாமி, ஜனாதிபதி க்ளீவ்லாண்ட் பேசிக்கொண்டிருக்கும் போது – தலையில் பொடுகோ என்னவோ தெரியவில்லை – தலையைச் சொறிந்துகொள்ள கையைத் தூக்கியிருக்கிறார். அதையே சிக்னலாக எடுத்துக்கொண்டு, பட்டாசுக்குச் சமமாக க்ளீவ்லாண்ட் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, சிலை திறக்கப்பட்டதாம். அப்புறம் அந்தத் தப்பு சிக்னல் செய்த அதிகாரிக்கு செம அர்ச்சனை ஆங்கிலத்தில் விழுந்ததாம்!
பிறகு, மீண்டும் ஒரு தடவை சிலையை மூடி, க்ளீவ்லாண்ட் பேசி முடித்ததும் திறக்கப்பட்டு, செய்த தவறு மழுப்பப்பட்டதாம்! ஆக, “அமெரிக்காவானாலும் இந்தியாவானாலும் சொதப்பல் ஒண்ணுதான், மழுப்பல் ஒண்ணுதான் சோதரா” என்று அல்ப சந்தோஷத்தில் எனக்கு பாடத் தோன்றியது.
அந்தப் பிரும்மாண்டமான லிபர்டி சிலையைப் பார்த்ததும் கிச்சா பக்திப் பரவசமாகிப் போனான்.
“என்னடா மோகன், இவ்வளவு பெரிய லட்சணமான சிலை. நங்கநல்லூர் ஆஞ்சநேயரைவிட நாலு மடங்கு பெரிசா இருக்கு. எந்தச் சிலைக்கும் ஒரு சாந்நித்தியம் உண்டு. இதை இப்படியே அநாதையா நிக்க வெச்சுட்டாங்களே. லிபர்டி சிலைக்கு அழகா ‘விடுதலை முத்துமாரியம்மன்’னு பேர்வெச்சு, அவங்க வழக்கப்படி பர்கர் மாலை போட்டு, சூப் படையல் வெச்சு, கோக் அல்லது பெப்ஸி அபிஷேகம் செஞ்சு ஆறுகால பூஜை நடத்தலாம் இல்லையா? பூஜை பண்ணப் பண்ணத்தான் சிலைக்கே பவர் கூ டும். வேண்டிக்கிட்டு மொட்டை போடறவங்களுக்கு வசதியாக தோ, இந்தப் பக்கம் ஒரு ஆயிரங்கால் மண்டபம் கட்டலாம். அங்கப்பிரதட்சணம் செய்ய வசதியா சிலையைச் சுத்தி மொஸைக் தரை போடலாம்” என்று கிச்சா சொல்லச் சொல்ல, நாங்களே ஒரு கணம் எங்களை மறந்து லிபர்டி சிலையைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டோம்.
அப்போது “எச்சுப் பாட்டியோ கிச்சாமி” என்ற குரல் சற்றுத் தொலைவிலிருந்து கேட்டது. கிச்சா திரும்பிப் பார்த்தான்.
கொரியன் ஏர்வேஸில் சகபயணியாக வந்து, கிச்சா விட்ட ரீலுக்கு மயங்கி வாட்ச், டிரான்ஸிஸ்டர் உபயம் செய்த ஜப்பானிய டூரிஸ்ட் குள்ளர், காமிரா, பைனாகுலர் சகிதமாக கிச்சாவை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார்!
– தொடரும்…
– அமெரிக்காவில் கிச்சா, முதற் பதிப்பு: மார்ச் 2006, கிழக்கு பதிப்பகம், சென்னை.
![]() |
கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019) தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார். அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஏவிவிடப்பட்ட கொலையாளி
திசேரா
June 3, 2026
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
June 3, 2026
ஏவிவிடப்பட்ட கொலையாளி
திசேரா
May 31, 2026
