சங்கர்லால் வந்துவிட்டார்!
கதையாசிரியர்: தமிழ்வாணன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: July 14, 2026
பார்வையிட்டோர்: 48
(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 41-45 | அத்தியாயம் 46-50
46

நள்ளிரவில் ஒரு கார் மலைப்பாதையில் விரைவாகப் போய்க் கொண்டிருந்தது. காரை ஓட்டிச் சென்றவர் தங்கத்துரை. அவர் காரை முல்லைவனம் மலைத் தோட்டத்தை நோக்கிச் செலுத்தினார். அவர் சீரிய சிந்தனையுள் ஆழ்ந்திருந்தார்.
சங்கர்லாலின் பங்களாவின் முன் காரை நிறுத்தினார். வழக்கம் போல் பொன்னன் தான் அங்குத் துப்பாக்கியைத் தோளில் போட்டுக் கொண்டு உலவிக் கொண்டிருந்தான்,
தங்கத்துரை பல தடவைகள் சங்கர்லாலைப் பார்க்க வந்ததால், சங்கர்லாலுக்கு மிகவும் வேண்டியவர்களில் இவரும் ஒருவர் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான் அவன். சங்கர்லாலுக்கு வேண்டியவர்கள் எவராயிருந்தாலும் சரி, ஒரு சல்யூட் அடித்துவிடுவது நல்லது என்று எண்ணிய அவன் சல்யூட் ஒன்று அடித்தான்.
தங்கத்துரை காரை வீட்டு இறங்கிப் பங்களாவுக்குள் சென்றார். கூடத்தில் நின்றிருந்தார் சங்கர்லால்.
“வாருங்கள் தங்கத்துரை” என்றார் சங்கர்லால். சங்கர்லாலும் தங்கத்துரையும் இரண்டு சோபாக்களில் உட்கார்ந்தார்கள்.
“நீங்கள் விழித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நான் எண்ணவே இல்லை!” என்றார் தங்கத்துரை.
“தூங்கிக் கொண்டு தான் இருந்தேன். என்னுடைய கைக்கடிகாரத்திலேயே அலாரம் இருக்கிறது. நீங்கள் எத்தனை மணிக்கு வரக்கூடும் என்று முன் கூட்டியே கணக்குப் போட்டு வைத்திருந்தேன். குறிப்பிட்ட நேரத்திற்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று அலாரம் வைத்தேன். மணியடித்ததும் எழுந்து கொண்டேன். அப்போது தான் உங்கள் கார் வரும் ஓசையும் கேட்டது!” என்றார் சங்கர்லால்
அப்போது, மாது இரண்டு கோப்பைகளில் தேநீர் கொண்டு வந்து சங்கர்லாலிடமும் தங்கத்துரையிடமும் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.
தேநீரை உறிஞ்சிக் குடித்துக் கொண்டே சங்கர்லால் தங்கத்துரையைப் பார்த்தார்.
எல்லாம் நம் திட்டப்படியே நடந்திருக்கின்றன!” என்றார் தங்கத்துரை.
“நடந்ததைச் சொல்லுங்கள்!” என்றார் சங்கர்லால்.
“நாம் இழுத்த இழுப்புக்குச் சவரிமுத்து வந்து விட்டான். நம்முடைய வலையில் எஸ்டேட் மானேஜர் விழுந்துவிட்டார்!”
“என்ன நடந்தது?” என்று அமைதியுடன் கேட்டார் சங்கர்லால்.
“சவரிமுத்து வழக்கறிஞரின் வீட்டில் புகுந்து ஒளிந்து கொண்டிருந்தான், சிறிது நேரத்தில் சுடர்மணி வழக்கறிஞரின் வீட்டிற்குள் சென்றான். இன்னும் சிறிது நேரம் கழித்து எஸ்டேட் மானேஜரும் அவருடைய ஆட்களும் பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்கள். வீட்டிற்குள் எட்டிப் பார்க்க முடியவில்லை. ஆனால் சவரிமுத்தின் சிரிப்பொலி மட்டும் இரண்டு முறைகள் கேட்டன! என்ன நடந்திருக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. ஆனால், அதை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை!”
“ஏன்?” என்றார் சங்கர்லால்.
“என்னைவிட நீங்கள் அனுபவம் மிக்கவர். ஆகையால் நான் சொல்ல விரும்பவில்லை!”
“அப்புறம் என்ன நடந்தது?”
*சவரிமுத்து வெளியே போய் விட்டான். சிறிது நேரம் கழித்து எஸ்டேட் மானேஜரும் அவருடைய ஆட்களும் சுடர்மணியை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்!”
“இனிமேல் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தங்கத்துரை! நீங்கள் தேனீ ஓட்டலிலேயே இருங்கள். அடுத்த படியாக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுகிறேன். கவனமாகக் கேளுங்கள்!” என்றார் சங்கர்லால்.
தங்கத்துரை அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
சங்கர்லால் மெல்லிய குரலில், தங்கத்துரைக்கு மட்டும் கேட்கும்படி பேசினார். அவர் வெகு நேரம் பேசிக் கொண்டேயிருந்தார்.
47
மறுநாள்.
மாணிக்கம் தனது காரை அம்பிகா லாட்ஜின் முன் நிறுத்தினான். காரிலிருந்து இறங்கி ஓட்டலின் உள்ளே சென்றதும் ஓட்டல்காரர் அவனைத் தமது அறைக்கு அழைத்துச் சென்றார்.
“என்ன தம்பி? என்னை ஏமாற்றி விட்டாயே?” என்றார் ஓட்டல்காரர்.
மாணிக்கம் ஒன்றும் புரியாதவனைப் போல், ‘உன்னை ஏமாற்றி விட்டேனா?’ என்றான்.
“ஆமாம்! அந்தப் பாதிக் கடிதம் மட்டும் இருந்து பயனில்லையே!” என்றார் ஓட்டல்காரர்.
”வேறு என்ன வேண்டும்?” என்றான் மாணிக்கம்.
“படம்” என்றார் ஓட்டல்காரர்.
அம்பிகா லாட்ஜ் உரிமையாளர் சொன்னார்: “தம்பி என்ன படம் என்று தெரியாததைப் போல் கேட்கிறாயே? நீ கொடுத்த பாதிக் கடிதம் மட்டும் பயனில்லை என்பது உனக்கே தெரியும். அந்தப் படத்தையும் கொண்டு வந்து கொடுத்து விட்டால் எல்லா வேலைகளும் எளிதில் முடிந்து விடும். உனக்கும் நான் சொன்னபடியே பணம் முழுவதையும் கொடுத்துவிடுகிறேன்.”
மாணிக்கம் மனத்திற்குள் சிரித்துக் கொண்டான். ஆனால் அவன் முகம் மட்டும் மாறவில்லை. “சரி, நான் எப்படியும் படத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டான்.
வெளியே தெருவரைக்கும் வந்து அவனை வழியனுப்பினார் ஓட்டல்காரர். மாணிக்கம் சிறிது தூரம் நடந்து சென்றான். ஓட்டல்காரர் உள்ளே சென்றுவிட்டதும், அவன் திரும்பி வந்து காரில் ஏறினான். கடைசி நிமிடத்தில் அவர் தனது காரின் எண்ணை குறித்துவைத்துக் கொள்ளக் கூடாதே என்ற அச்சத்துடன் தான் அவன் அப்படிச் செய்தான், கார் விரைந்தது.
அவன் நேராகத் தேனீ ஓட்டலுக்குச் சென்று சிறிது நேரம் தங்கத்துரையிடம் பேசியிருந்து விட்டுப் பிறகு முல்லைவனம் தோட்டத்தை நோக்கிக் காரை விட்டான்.
அவன் போகும் போது எவராவது தன்னைத் தொடர்ந்து வருகிறார்களா என்று அடிக்கடி கவனித்துக் கொண்டே சென்றான்.
48
இருட்டிவிட்டது. ஆனால் ஊரடங்கும் நேரமில்லை.
சங்கர்லால் வழக்கம் போல் தேநீர் குடித்துக் கொண்டு, இந்திராவுடன் கூடத்தில் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாணிக்கம் வந்தான்.
“நான் போய் வருகிறேன் அண்ணா” என்றான் அவன். சங்கர்லால் அவன் அணிந்திருந்த உடைகளைக் கவனித்தார், வெள்ளைச்சட்டை, வெள்ளைக் கால்சட்டை, வெண் மலர் போன்ற தூய்மையான ஆடைகளுக்கு ஏற்ப, காலில் வெள்ளை நிற நடையன்கள், பளபளக்கும் படிந்த கிராப்பு.
சங்கர்லால் மெல்லச் சிரித்தார். “மாணிக்கம், துப்பறியும் தொழிலில் ஈடுபடுபவர்கள், இருட்டில் வெளியே போகும் போது வெள்ளை உடைகள் அணிவது தவறு. மற்றவர்களுக்குத் தெரியாமல் நகரும் போது, வெள்ளை உடைகள் இருட்டிலும் நாம் இனிமேல் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். எச்சரிக்கையாக இரு! இப்போது பரவாயில்லை. படத்தைக் கொடுத்துவிட்டு வர வேண்டியது தானே உன் வேலை?” என்றார்.
மாணிக்கத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது. சங்கர்லால் சொல்லுவது உண்மைதான் என்பதை எளிதில் உணர்ந்து கொண்டான் அவன். துப்பறியும் தொழிலுக்கே ஒரு தனித்திறமை வேண்டும். அந்தத் திறமையைப் பெற்ற ஒரே மனிதர் சங்கர்லால்தான். உட்கார்ந்த இடத்திலிருந்தே எதையும் நிருணயிக்கும் சக்தி அவருக்கு உண்டு என்று எண்ணினான் மாணிக்கம். உடனே அவன் திரும்பித் தனது அறைக்குச் சென்றான். மாணிக்கத்தின் மனைவி கயல்விழி தனது விழிகளை உருட்டி அவனைப் பார்த்தாள்.
”கயல்விழி, காக்கிக் கால்சட்டையையும் நீலநிறச் சட்டையையும் எடு. கறுப்பு நடையன்கள் எங்கே இருக்கின்றன?” என்றான் மாணிக்கம். தனது உடைகளைக் கழற்றிக் கொண்டே
கயல்விழி விழுந்து விழுந்து சிரித்தாள், “பார்த்தீர்களா? நீங்கள் முதலில் உடைகள் கேட்டதும் காக்கிக் கால் சட்டையும் நீலச் சட்டையும் தான் எடுத்தேன். நீங்கள் என்ன சொன்னீர்கள்? பட்டிக்காட்டுப் பெண்தான் இப்படிப்பட்ட உடைகளை எடுத்துக் கண்மூடித்தனமாகக் கொடுப்பாள் என்றீர்கள்! எங்கேயோ தேநீர் விருந்துக்குப் போவதைப் போல் அல்லவா உடைகளை அணிந்து கொண்டீர்கள்? இப்போது என்ன ஆயிற்று?”
மாணிக்கம் உதட்டைக் கடித்துக் கொண்டு அவள் காதைப் பிடித்துத் திருகினான்.
கயல்விழி சொன்னாள் : “என்னுடைய காதைப் பிடித்துத் திருகி என்ன பயன்? அண்ணாவின் காதைப் பிடித்துத் திருகுங்கள்!” மாணிக்கம் அவசரம் அவசரமாக உடைகளை மாற்றிக் கொண்டு உடனே பறந்தான்.
அவன் வெளியே போகும் போது வழக்கம் போல் திரும்பிப் பார்த்தான். இந்திரா விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். “என்ன மாணிக்கம், கயல்விழியின் பேச்சைக் கேட்டு வெள்ளை உடை அணிந்ததால் முடிவு என்ன ஆயிற்றுப் பார்த்தாயா?” என்று அவள் சொன்ன போது மாணிக்கத்திற்கு –
அவன் காரை நோக்கி ஓடினான்.
தனது கோபம் முழுவதையும் அவன் காரின் மீது காட்டினான். விரட்டப்பட்ட மாடு மருண்டு ஓடுவதைப் போல், மாணிக்கத்தின் கார் பறந்து சென்றது அம்பிகை லாட்ஜை நோக்கி! அம்பிகா லாட்ஜின் பக்கத்தில் ஓர் ஓரமாகக் காரை நிறுத்தினான். அவன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தான் மணி-
ஒன்பது.
சென்னை நகரத்தில் ஒன்பது மணி என்பது சர்வ சாதாரணம். ஒன்பது மணியாகி விட்டதே என்று மக்கள் பரபரப்புடன் செல்லுவதில்லை. வண்டிகளின் போக்குவரத்தும் மக்களின் நடமாட்டமும் இரவு பன்னிரண்டு மணிவரையில் இருக்கும். மாணிக்கம் தனது முகத்திலும் மனத்திலும் அமைதியை வரவழைத்துக் கொண்டு, காரின் விளக்குகளை அணைத்து விட்டுச் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்தான். ஐயமுறும் வகையில் எவராவது அம்பிகா லாட்ஜுக்குப் போய்விட்டு வருகிறார்களா என்று கவனித்தன அவன் கண்கள். அப்படி எவரும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. சங்கர்லாலின் கண்களுக்கு மட்டும் எப்படி அவர்கள் பளிச்சென்று தெரிந்து விடுகிறார்கள் என்று எண்ணிய போது, சங்கர்லாலிடமிருந்து அவன் கற்றுக் கொள்ள வேண்டியவை எவ்வளவோ உள்ளன என்பதை அவன் உணர்ந்தான். இந்திரா அவனை அடிக்கடி கேலி செய்ததால், அதுவும் கயல்விழியின் முன் கேலி செய்வதால், சங்கர்லாலிடம் எதையும் கேட்க முடியாமல் திணறினான். சங்கர்லாலைத் தனியாகப் பார்த்துப் பேசச் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று எண்ணித் தங்கினான். அவன் அவ்வளவு பெரிய பங்களாவில், அவ்வளவு பெரிய குடும்பத்தின் மத்தியில், சங்கர்லாலிடம் தனியாகப் பேச முடியவில்லை மாணிக்கத்தினால்! வீண் பெருமை என்பது எவ்வளவு பெரிய முட்டுக் கட்டையாக வந்தமைகிறது வாழ்க்கையில் என்பதை அவன் உணர்ந்த போதிலும், அந்த முட்டுக்கட்டையை அவனால் உடைத்தெறிய முடியவில்லை!
அவன் நேரம் சுழித்து காரை விட்டுக் கீழே இறங்கினான். ஓட்டலை நோக்கி நடந்தான்.
ஓட்டல்காரர் வழக்கம் போல் அவனை வரவேற்றார். தனி அறைக்கு அழைத்துச் சென்றார்.
மாணிக்கம் உட்கார்ந்தான். அவன் எதிரே ஒட்டல்காரர் உட்கார்ந்தார்.
“எங்கே பணம்?” என்றான் மாணிக்கம்.
“எங்கே படம்?” என்று கேட்டார் ஓட்டல்காரர். மாணிக்கம் கால் சட்டைப் பையிலிருந்த அந்தப் படத்தை எடுத்து நீட்டினான். ஓட்டல்காரர் அந்தப் படத்தை வாங்கினார். பார்த்தார். சிறிது நேரம் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
“இந்தப் படத்துக்கும், நீ கொடுத்த சுடிதத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” என்றார்,
“உங்களுக்கு ஒன்றும் புரியாது! நான் சொல்லுவதைக் கேளுங்கள்! படத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடுங்கள்!! பணத்தை என்னிடம் சேர்த்து விடுங்கள்.”
“பணம் கொடுக்கிறேன். இப்போதே வேண்டுமா?”
“ஆமாம்”
“இப்போது பணம் இல்லை. படத்தைக் கொடுத்துத் தானே பணத்தை வாங்க வேண்டும்?”
“இரும்புப் பெட்டியில் எவ்வளவு இருக்கிறது?”
“நீ கேட்கும் அளவுக்கு இல்லை”
“சாவியைக் கொடுங்கள்!” என்று சொல்லி மாணிக்கம் அவர் கையிலிருந்த சாவியை எதிர்பாராத விதமாகப் பிடுங்கினான். சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டு, இரும்புப் பெட்டியைத் திறந்தான்.
உள்ளே –
பத்தாயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது!
“பணம் எப்போது கிடைக்கும்?” என்று கேட்டான் மாணிக்கம்.
”நாளைக்கு நாளை இரவு இதே நேரத்துக்கு இங்கே வா!” என்றார் ஓட்டல்காரர்.
மாணிக்கம் சிறிது நேரம் சிந்தித்தான், பிறகு, “நாளைக்கு நான் எப்படியும் வருவேன். என்னை ஏமாற்றி விட வேண்டும் என்ற எண்ணமிருந்தால், இப்போதே அதை மறந்துவிடுங்கள். உங்களை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்க என்னால் முடியும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான் மாணிக்கம்.
அவன் வெளியே வந்ததும், சாலையின் இரு பக்கங்களிலும் வெகு கவனமாகப் பார்த்துவிட்டு, காரை நோக்கி நடந்தான். காரில் உட்கார்ந்தபடியே வெகு நேரம் காலத்தைப் போக்கி கொண்டிருந்தான்.
நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது.
தெருக்களில் சந்தடி அடங்காவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது.
மணி –
பதினொன்று!
ஓட்டலின் எதிரே ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரிலிருந்து இறங்கி ஓட்டலுக்குள் சென்றவர் தில்லை நாயகத்தின் எஸ்டேட் மானேஜர்!
அவர் ஓட்டலுக்குள் நுழைந்ததும் மாணிக்கம் காரைக் கிளப்பினான். கார் இருட்டில் எங்கேயோ பறந்து சென்றது!
49
எங்கிருந்தோ கேட்டது அந்த மணி ஓசை, எங்கேயோ ஆலயத்திலோ, போலீஸ் இலாகாவிலோ, புகைவண்டி நிலையத்திலோ இரவு மணி பன்னிரண்டு என்பதை அறிவிக்க அடிக்கப்பட்ட மணி அது!
சவரிமுத்து இருட்டில், எங்கேயோ நின்றிருந்து விட்டு மணியடித்ததும் நேரத்தை இனியும் வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்துடன், எஸ்டேட் மானேஜரின் வீட்டை நோக்கி நடந்தான். எஸ்டேட் மானேஜரின் கார் வீட்டு வாயிலிலேயே நின்றிருந்தது. உள்ளே, மாடிமேல் மட்டும் இரண்டு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இரண்டு விளக்குகளும் ஒரே அறையில் எரிந்து கொண்டிருந்தன. சன்னலுக்குத் திரை கட்டியிருந்தது. திரைக்கு மேலே இருந்த இடைவெளியில் இரு விளக்குகள் மட்டுமே தெரிந்தன. திரையின் மேல் ஒரு மனித நிழல் இப்படியும் அப்படியும் போவது தெரிந்தது.
சவரிமுத்து வாயிலை அடைந்தான்.
அப்போது –
நானூறு பவுன் எடையை எளிதில் தூக்கிவிட முடியும் எங்களால் என்று சொல்லுவதைப் போல் இரண்டு முரட்டு மனிதர்கள் வாயிற்படிக்கு அப்பால் தோன்றினார்கள். அவர்கள் சவரிமுத்தைப் பார்த்ததும், “யாரது? சவரிமுத்தா? உன்னைத் தான் எசமானன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று சொல்லிக் கொண்டே வழிவிட்டனர்.
ஒருவன் சவரிமுத்துக்கு வழிகாட்டினான். மற்றொருவன் வாயிற்படியிலேயே காவலாக உட்கார்ந்து விட்டான்!
மாடி அறையில், கையில் படத்துடன் உலாவிக் கொண்டிருந்தார் எஸ்டேட் மானேஜர். அவர் சவரிமுத்தைக் கண்டதும், முகமும் அகமும் மலர்ந்தவரைப் போல், “வா, சவரிமுத்து, உனக்காகத்தான் ஒவ்வொரு வினாடியும் காத்துக் கொண்டிருந்தேன். நீ சொன்னபடியே இந்தப் படத்தையும் வாங்கிவந்துவிட்டேன்!” என்றார்.
சவரிமுத்து அறைக்குள் நுழைந்ததும், முரட்டு மனிதன் கதவைச் சாத்திவிட்டு, அறையின் வெளியே நின்று கொண்டான்.
சவரிமுத்து அந்த அறையை ஒருமுறை பார்த்தான். அதிகமாகப் பணம் வாங்கும் சினிமா நடிகையின் அறைகூட இவ்வளவு அழகாகவும் ஆடம்பரமாகவும் இருக்காது என்று எண்ணினான். அவன் எஸ்டேட் மானேஜரைப் பற்றிச் சவரி முத்துக்கு மட்டமான ஒரு நினைப்பு இருந்தது. அந்த நினைப்பில் இப்போது ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டது. எஸ்டேட் மானேஜர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், விஷயம் தெரிந்தவர் என்பதை உணர்ந்து கொண்டான் சவரிமுத்து. அவருடைய அறையில் விலை உயர்ந்த இரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. மேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சோபாக்கள் போடப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கில் மதிப்பிடக்கூடிய வண்ண ஓவியங்கள் சுவரில் மாட்டப்பட்டிருந்தன. சன்னல் திரைக்கு மட்டும் அவர் இரண்டாயிரம் ரூபாயாவது செலவு செய்திருப்பார் என்று எண்ணினான். பளபளக்கும் துணியால் தைக்கப்பட்ட துணி, வானொலிப் பெட்டியின் மேல் தந்தத்தினால் செதுக்கப்பட்ட பாயும் புலியின் பொம்மை!
எஸ்டேட் மானேஜர் சிரித்துக் கொண்டே சவரிமுத்தைப் பார்த்தார். சவரிமுத்து நிமிர்ந்து அவரைப் பார்த்தான். அவனுடைய கைகள், எஸ்டேட் மானேஜரின் கையிலிருந்த படத்தை வாங்கின. அவன் சில வினாடிகள் வரையில் அந்தப் படத்தையே உற்றுப் பார்த்தான்.
எஸ்டேட் மானேஜர் திடீரென்று கேட்டார். “என்ன சவரிமுத்து? இதே படம் தானே?”
சவரிமுத்து பதில் சொல்லவில்லை. அவன் வைத்த கண் வாங்காமல் படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான், சிறிது நேரம் கழித்து அவன் முகத்தில் மென் சிரிப்புப் படர்ந்தது. ‘இதோ பார், இந்தப் படத்தைச் சர்வ சாதாரணமாகப் பார்ப்பவர்கள் எதையும் அறிய மாட்டார்கள், இந்த நீர் வீழ்ச்சியிலே, மெல்லிய கோடுகளால் ஒரு மரம் வரையப் பட்டிருக்கிறது. அந்த மரத்தின் கீழே நாகப்பாம்பின் சிலை ஒன்றும் தெரிகிறது. படத்துடன் படமாக வரையப்பட்டிருக்கும் அந்த மரமும். நாகப்பாம்பின் சிலையும் கூரிய கண்களுக்குத்தாம் காட்சியளிக்கும். கடிதத்தில், வீட்டின் எந்தப் பகுதியில் புதையல் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடிதத்தை மட்டும் வைத்துப் படித்து முடிவுக்கு வருபவர்கள் வழக்கறிஞரின் வீட்டைத்தான் சுற்றி வருவார்கள். இப்போதும் இந்த வீட்டைக் கண்டு பிடிப்பது எளிது. நாகப்பாம்பு சிலையும், அதன் பக்கத்தில் அரசமரமும், அரசமரத்துடன் இணைந்து வளைந்திருக்கும் வேப்பமரமும், வழக்கறிஞர் இருந்த தெருவிலேயே மறுகோடியில் இருக்கிறது. அந்த மரத்திற்கு எதிர் வீட்டில் புதையல் இருக்கிறது. அந்த வீட்டில் எவராவது குடியிருக்கிறார்களா?” என்று கேட்டான் சவரிமுத்து.
எஸ்டேட் மானேஜர் உடனே சொன்னார் அந்த வீட்டில் ஒருவரும் இல்லையே! மிகவும் சௌகரியமாகப் போய்விட்டது. இப்போதே புறப்படலாம் வா!”
சவரிமுத்தை அழைத்துக் கொண்டு எஸ்டேட் மானேஜர் காரில் புறப்பட்டார். அவருடன் அவருடைய ஆட்கள் இருவரும் புறப்பட்டார்கள். ஐந்து நிமிடங்களுக்குப்பின் எல்லாரும் அந்தக் குறிப்பிட்ட வீட்டை அடைந்தனர்.
சவரிமுத்து, குறிப்பிட்ட இடத்தில் தானே சுவரை இடித்துத் தள்ளினான். தூங்கும் அறையின் சன்னலுக்கு மேல் சுவரைப் பெயர்த்தான். பெரிய தகரப் பெட்டி ஒன்று தெரிந்தது. அதை எடுத்துத் திறந்தான்.
உள்ளே –
அவ்வளவும் வைர நகைகள்! அவை எல்லாம் உண்மையான வைரங்கள்! போலியல்ல!
சவரிமுத்து எஸ்டேட் மானேஜரை நிமிர்ந்து பார்த்தான். எஸ்டேட் மானேஜர் சொன்னார் : “சவரிமுத்து, நம் வீட்டுக்குத் திரும்பிப் போவோம். உன்னுடைய பங்குக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து விடுகிறேன். அப்புறம் நீ எங்கு வேண்டுமானாலும் போகலாம்!”
“சரி” என்றான் சவரிமுத்து.
வீட்டைப் பூட்டிக் கொண்டு காரில் எல்லாரும் திரும்பினார்கள்,
எஸ்டேட் மானேஜரின் வீட்டுச் சன்னல்கள் அவ்வளவும் சாத்தப்பட்டிருந்தன. சவரிமுத்தும் எஸ்டேட் மானேஜரும் உள்ளே நுழைந்ததும், வெளிக் கதவும் சாத்தப்பட்டது. கூடத்தில் –
சுடர்மணி நின்றிருந்தான்.
எஸ்டேட் மானேஜர் சொன்னார் : “சவரிமுத்து, சுடர்மணியைக் கைதியாகவே அடைத்து வைத்திருந்தேன். புதையலைக் கிளப்ப முயன்றவர்களில் அவனுக்கு முக்கிய பங்கு உண்டு அவனுக்கும் சேரவேண்டியதைத் தர வேண்டும். உங்கள் இருவரைத் தவிர, என்னைத் தவிர, வேறு ஒருவனும் இங்கே இருக்கிறான்!”
சவரிமுத்து வியப்புடன், “யாரது?” என்றான்.
“கொஞ்சம் பொறுத்திருந்து பார்!” என்று எஸ்டேட் மானேஜர் சொல்லிவிட்டு, தனது ஆட்களில் ஒருவனை அழைத்தார் அவனிடம், நம்முடைய வீட்டின் இடது பக்கம் ஓரமாக, மரத்தின் மறைவில் ஒருவன் நிற்கிறான். அவனைப் பிடித்துக் கொண்டு வா!” என்றார்.
சவரிமுத்துவும் சுடர்மணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை சிறிது நேரத்தில் –
தங்கத்துரையை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தினான் அந்த மனிதன்!
எஸ்டேட் மானேஜர் உரக்கச் சிரித்தார். அவர் வாய் விட்டுச் சிரித்தது கேட்பதற்கு அச்சமாக இருந்தது. அவர் சொன்னார்: “என்னுடைய வாழ்க்கையில் மூன்று முட்டாள்களைச் சந்தித்தேன்! அவர்களில் முதல் முட்டாள் தங்கத்துரை! தான் செய்யாத குற்றத்திற்காக, தில்லை நாயகத்தின் கொலை சம்பந்தமாக வகையாக அகப்பட்டுக் கொண்டு போலீசுக்கு ஓடி ஒளிந்த துப்பறியும் நிபுணன்! என்னுடைய ஆட்களில் ஒரு மனிதன் தான் தங்கத்துரையைக் காரில் ஏறும்போது அடித்து மயக்கமாக விழச் செய்தவன். அதே நேரத்தில் தில்லை நாயகத்தை நான் தொலைத்து விட்டேன்! எஸ்டேட் கணக்குகளை இத்தனை ஆண்டுகள் இல்லாமல், இப்போது, ஏன் அவர் பார்க்க வேண்டும்? என்னை நம்பி விட்டுவிட்டதால், எனக்கு வேண்டிய பணத்தை வேண்டும் போதெல்லாம் எடுத்துக் கொண்டேன். அதை அவர் கண்டுபிடிக்கும் நிலை வந்ததும், தில்லைநாயகத்தைத் தொலைத்து விட்டு, பழியைத் தங்கத்துரையில் மீது சுமத்திவிட்டேன். தங்கத்துரை தப்ப முடியாமல், ஒளிந்திருந்து ஏதாவது உண்மை கிடைக்குமா என்று இந்த இருட்டில் வந்து பார்க்கிறார்!”
தங்கத்துரை சிரித்தார், “ஐயா, நான் முதல் முட்டாள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இரண்டாவது முட்டாள் யார்?” என்று கேட்டார் அவர்.
‘எஸ்டேட் மானேஜர் சொன்னார்: “இரண்டாவது முட்டாள் சுடர்மணி. இறந்து போன அவனுடைய தந்தை சொன்னதைப் புரிந்து கொள்ளாதவன் முட்டாள் தானே? அவன் தந்தை, உண்மையான புதையல் இருக்குமிடத்தையும், போலிப் புதையல் இருக்குமிடத்தையும் சொல்லிவிட்டு செத்துப் போயிருக்க வேண்டும். மற்றவர்கள் தொந்தரவு செய்தால். போலிப் புதையலைக் காட்டும்படியும், உண்மையான புதையலை அவன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருப்பார். இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. போலிப் புதையலைக் கிளப்ப முயற்சித்து, என் வலையில் வந்து விழுந்து உண்மையைக் சுக்கிவிட்டான் ஒரு கட்டுப் பணத்திற்காக!”
சுடர்மணியின் முகம் வேர்த்துக் கொட்டியது. அவன் உடல் முழுவதும் அச்சத்தால் இலேசாக நடுங்கியது!
“மூன்றாவது முட்டாள் சவரிமுத்துதான் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா! சவரிமுத்து புதையல் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, அதைக் கிளப்பச் சின்னத்துரையின் உதவியை நாடினான், சின்னத்துரை அடிக்கடி தங்கத்துரையைச் சிறையில் போய்ச் சந்திப்பதை நான் அறிந்தேன் சின்னத்துரையைக் கவனிக்கப் புலிக் குட்டியை அனுப்பினேன். சின்னத்துரை
புதையலைப் பற்றிய கடிதத்தைக் கொல்லத்துக்காரனிடமிருந்து வாங்கி, பாதியாகக் கிழித்து, ஒரு பாதியைப் பார்சலாகக் கட்டி இரு பையன்களிடம் கொடுத்ததும், புலிக்குட்டி அந்தப் பார்சலைத் தட்டிக் கொண்டு வந்து விட்டான். ஆனால், கடிதத்தின் மறுபாதி கிடைக்கவேயில்லை. புலிக்குட்டி, மீதி பாதிக் கடிதத்தைக் கண்டுபிடிக்க, சின்னத்துரையைத் தேடி என்னூர் தீவுக்குச் சென்றபோது, அந்தப் பையன்கள் சிறைப் பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறான். மாடியில் மட்டும் எவரும் இல்லாததால், அங்கு மட்டும் கடிதத்தை தேடிவிட்டு வந்து விட்டான். இரண்டாவது துண்டு கிடைக்கவேயில்லை. சவரிமுத்து தப்பிவிட்டான் என்றதும், அவன் எப்படியும் புதையலைக் கிளப்பிவிடுவான் என்று எண்ணி, சவரிமுத்தும் சின்னத்துரையும் சந்திப்பதற்கு முன், புலிக்குட்டியைத் தீர்த்து விட்டேன். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. புலிக்குட்டி உறுதியான மனம் கொண்டவன் அல்ல. பணம் அதிகமாகக் கிடைத்தால், அந்தப் பக்கம் சாய்ந்து விடுவான்! கடிதத்தைப் பற்றிப் புலிக்குட்டியைச் சவரிமுத்து சந்திக்க விரும்புகிறான் என்றதும், என்னுடன் தொடர்பு கொண்டிருப்பதைச் சொல்ல வேண்டாம் என்றும், அவர்களைச் சந்திக்கும் படியும் சொல்லிவிட்டுப் புலிக்குட்டியை நானே குறிப்பிட்ட நேரத்திற்கு முன் போய்த் தீர்த்துவிட்டேன், அதன் பிறகு சின்னத்துரையைக் கவனிக்க ஆரம்பித்தேன். அவன் என்னூர்த் தீவுக்கு வந்ததும், எப்படியும் அவனிடம் உண்மையைக் கேட்டு, புதையல் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று எண்ணினேன். நல்ல சந்தர்ப்பத்தில் சின்னத்துரை கிடைத்தான். அவன் கையில் அப்போது ஒரு பை இருந்தது. அந்தப் பையில் தான் தில்லை நாயகத்தின் நகைகள் போடப்பட்டுத் தங்கத்துரையிடம் கொடுத்தது எனக்கு நினைவு வந்தது. சின்னத்துரையைத் தீர்த்துக் கட்டிவிட்டு நான் தீவிலிருந்து தப்பிப் போரும்போது, தங்கத்துரை தீலை அடைவதைப் பார்த்தேன். அவன் பின்னால் சிறிது நேரம் கழித்துச் சவரிமுத்து போவதைப் பார்த்தேன். அப்போது தான், சவரிமுத்தும் சின்னத்துரையும் தங்கத்துரையுடன் தொடர்பு கொண்டிருப்பது புரிந்தது. ஆனால் எப்படி என்று புரியவில்லை. போலீசார் தேட ஆரம்பித்தவுடன் அவர்கள் கூட்டத்தில் போய்த் தங்கத்துரை சேர்ந்து கொண்டிருக்க வேண்டும். எது எப்படியிருந்தாலும், என்னிடம் இரண்டு துண்டுக் கடிதங்களும், படமும் வந்துவிட்டன! படத்தைப் பற்றிச் சவரிமுத்து சொல்லாவிட்டால் எனக்குத் தெரியவே தெரியாது! ஆகையால் சவரிமுத்து மூன்றாவது முட்டாள்! படத்தையும், பாதிக்கடிதத்தையும் அம்பிகா லாட்ஜ் உரிமையாளரின் தொடர்பு கொண்டு விற்றவன் யார் என்பது தான் தெரியவில்லை!” என்றார் எஸ்டேட் மானேஜர்,
தங்கத்துரை சிரித்தார். அவர் சொன்னார் : “பாதிக் கடிதத்தையும், படத்தையும் விற்றவன் சங்கர்லாலுடன் தொடர்பு கொண்டவன். அவற்றை விற்க ஏற்பாடு செய்தது சங்கர்லால் தான் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும்!”
எஸ்டேட் மானேஜர் அதிர்ச்சி அடையவில்லை! “அம்பிகா லாட்ஜ் முதலாளி தன் உயிர் போனாலும் என் பெயரைச் சொல்ல மாட்டான். ஆகையால், எனக்குக் கவலை இல்லை. உங்கள் மூவரையும் காரில் அனுப்பப் போகிறேன் பாதுகாப்புடன். ஒரு காட்டில், பெயர் தெரியாத ஆற்றில் உங்கள் மூவரையும் கல்லுடன் கட்டி விட்டு விடப் போகிறேன்! அத்துடன் என் தொல்லைகள் தீர்ந்து விட்டன!” என்றார்.
“அதுதான் இல்லை! நான் சங்கர்லாலுடன் தொடர்பு கொண்டிருப்பது இன்னும் உனக்கு விளங்கவில்லை. புதையலைக் கிளப்பும் வரையில் சவரிமுத்துடன் சேர்ந்து வேலையில் இறங்க வேண்டும் என்று சொன்னார் சங்கர்லால். சங்கர்லால் தான் சின்னத்துரையின் என்னூர் வீட்டிலிருந்த படத்தையும் கொண்டு வந்து கொடுத்தார் மாணிக்கத்தினிடம். சவரிமுத்துக்கு நான் தொடர்பு கொண்டிருப்பது தெரியாது. ஆனால், சவரிமுத்து புதையலைக் கிளப்ப உதவி செய்ததால் சங்கர்லால் அவனுக்கு மன்னிப்பு வாங்கித் தரலாம். புதையலும் கிடைத்து விட்டது!” என்றார் தங்கத்துரை.
“உங்களை இப்போது யார் விடப்போவது?” என்றார் எஸ்டேட் மானேஜர்.
“யார் முட்டாள் என்பதை நீயே தெரிந்து கொள்!” என்று சொல்லிக் கொண்டே சட்டைப் பையிலிருந்த சிறிய வானொலிக் கருவியை எடுத்துக் காண்பித்தார் தங்கத்துரை. “இதைச் சங்கர்லால் என்னிடம் கொடுத்தனுப்பினார். இது சுவிட்சர்லாந்திலிருந்து வந்தது. நாம் பேசிக் கொண்டவை. அனைத்தும் இதன் மூலமாகச் சங்கர்லாலின் பங்களாவில் இருக்கும் மற்றொரு கருவிக்குப் போய் அப்படியே பதிவாகிவிட்டிருக்கும். சங்கர்லால் அதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, தக்க சந்தர்ப்பத்தில் உதவி போலீஸ் கமிஷனர் வகாபை இங்கே அனுப்புவார்!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே. கதவைத் திறந்து கொண்டு நீட்டிய துப்பாக்கிகளுடன், பின்னாலும் பக்கத்திலும் இருபது போலீஸ்காரர்கள் புடைசூழ வகாப் வாயிற் படியில்!
50
ஒரு வாரத்திற்குப் பின் –
சங்கர்லால் ஒரு பெரிய விருந்து கொடுத்தார். அந்த விருந்தில் உதவி போலீஸ் கமிஷனர் வகாபின் மகன் அமீதும், அவனுடைய நண்பன் மணியரசும் முக்கியமாக அழைக்கப்பட்டிருந்தார்கள். கல்கத்தாவிலிருந்து சவரிமுத்தின் மகள் பேரழகியையும் வரவழைத்து அந்த விருந்தில் கலந்து கொள்ளும்படி செய்தார் சங்கர்லால், சங்கர்லாலின் குடும்பம் முழுவதும் ஒரு பக்கம், உதவி போலீஸ் கமிஷனரும், தங்கத்துரையும் மற்றொரு பக்கம். கயல்விழியும் மாணிக்கமும் நெருங்கி உட்கார்ந்திருப்பதைச் சங்கர்லாலும் இந்திராவும் பார்த்து சிரித்தார்கள். கத்தரிக்காயும் மைனாவும் ஏதோ இரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
மாது ஓடியாடி வந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். விருந்திற்குப் பின் சங்கர்லால் எழுந்து சொன்னார். “மணியரசும் அமீதும் செய்த ஒரு பிழையினால் சவரிமுத்தின் புதையல் கிடைத்தது. சவரிமுத்து நல்வழி திரும்பினான். அவனுக்கு விடுதலையும் கிடைத்தது. சவரிமுத்தின் மகள் பேரழகியைப் படிக்கவைக்க எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்துவிட்டேன். இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான முடிவை நாம் கொண்டாடவே இந்த விருந்தை ஏற்பாடு செய்தேன்!”
எல்லோரும் கைத் தட்டினார்கள்.
அப்போது அமீது எழுந்து போய் ஒரு பெரிய கூடையை இந்திராவிடம் கொடுத்தான். அவன் அதைத் திறந்ததும். இரண்டு அழகிய முயல் குட்டிகள் மேசை மேல் தாவிக் குதித்து ஓடின!
சிரிப்போசை!
(முற்றும்)
– சங்கர்லால் வந்துவிட்டார்! (மர்ம நாவல்), சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
July 14, 2026
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
July 14, 2026
அகல் விளக்கு
மு.வரதராசன்
July 14, 2026