அட… மெல்ல நட!
கதையாசிரியர்: கல்பனா ராஜகோபால்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2026
பார்வையிட்டோர்: 75

வித்யா காலை உணவு மற்றும் மதிய உணவைத் தயாரித்து வைத்து விட்டு ஆபீஸ் செல்ல ரெடியாகிக் கொண்டு இருந்தாள். வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டுவிட்டு வந்து மற்ற வேலைகளைச் செய்து முடித்தால்தான் காயப் போட சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு பரபரவென்று வேலையில் இறங்கினாள்.
சமையல் வேலை முடித்து போய்ப் பார்த்தால் மின்வெட்டு சதி செய்து விட்டது. சரி, ரமேஷ்க்கு லீவுதானே என்று மனதைத் தேற்றிக் கொண்டாள். குளித்து முடித்து ஆபீஸ் செல்ல பேக்கையும் வண்டி சாவியையும் எடுத்துக் கொண்டு அறைக் கதவைத் திறந்து பார்த்தாள். அங்கே ரமேஷ் ஏ.சியைப் போட்டுக் கொண்டு போர்வைக்குள் படுத்து இருந்தான்.
“ரமேஷ்… ரமேஷ்…” என்று வித்யா அழைக்க, போர்வைக்குள் இருந்தே “சொல்லு வித்தி…” என்று குரல் கொடுத்தான் ரமேஷ்.
“மணி எட்டு ஆச்சுப்பா.”
“எனக்கு இன்னைக்கு லீவு.”
“தெரியும். அதான் டிபன், லன்ச் எல்லாம் டேபிள்ல இருக்கு.”
“எப்பவோ எந்திருச்சு குளிச்சுட்டு சாப்பிடுங்க.”
“ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க…” என்று சொன்னவுடன் மடக்கென போர்வையை எடுத்து பார்த்தான்.
“ஒண்ணுமில்ல… வாஷிங் மெஷின் ஓடிட்டு இருக்கு. துணிகளை மட்டும் காயப் போட்டு விடுங்க. ப்ளீஸ்…” என்றாள் வித்தி.
“என்ன வித்தி… உனக்கு அவசரம். நாளைக்கு சண்டே தானே…” என்று சலித்தபடி திரும்பிப் படுத்தான்.
“எனக்கே பேக் பெயின் அடிக்கடி வருது. தூங்கலாம்னு நினைச்சேன்.”
“சரி, பாருங்க… நான் ஏதாவது பண்றேன்…” என்று கூறியபடி,
“சரி, நான் ஆபீஸ் கிளம்பறேன்.”
“இன்னிக்கு ஆடிட். மூணு மணிக்குள்ள முடிஞ்சா நான் பர்மிஷன்ல வர்றேன்.”
“உங்க டாக்டர் ஃபிரெண்டைப் போய் பார்த்துட்டு வரலாம்.”
“நான் மெசேஜ் அனுப்பறேன்…” என்று சொல்லிவிட்டு வித்யா கிளம்பிவிட்டாள்.
வித்யாவும் ரமேஷும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
ரமேஷின் பெற்றோர் விவசாயக் குடும்பம். ஒற்றைப் பிள்ளை வேறு.
வித்யா வீட்டிற்கு மூத்த பெண். அவளது தங்கை காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் பெண்.
இருவருமே ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வித்யா அருகிலுள்ள அலுவலகத்தில் சேல்ஸ் டிபார்ட்மெண்டில் மேனேஜராக உள்ளாள்.
ரமேஷின் ஆபீஸ் நகரின் மையத்தில் உள்ளதால் அவன் தன் காரில் சென்று விடுவார்.
வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள வசதி இருந்தாலும் டைமிங்ஸ் சரி வராது என்பது வித்யாவின் கருத்து.
மேலும், எல்லா வேலைகளையும் திட்டமிட்டு செய்பவள். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் பெண்.
ரமேஷின் குணம் கொஞ்சம் சோம்பேறித்தனம் கொண்டது. ஒரு ஆபீஸ் நிர்வாகத்தை முழுமையாகப் பொறுப்பேற்று வழிநடத்துவதால் அவரது வேலையில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் நிலையும் மன அழுத்தமும் இருந்தது.
வித்யாவின் அதிக வேகத்தைப் பார்த்து, “அட… மெல்ல நட… மெல்ல நட…” என்று ரமேஷ் வித்யாவிடம் அடிக்கடி கிண்டல் செய்வான்.
அன்று மாலை அவரது நண்பன் டாக்டர் அருளைப் பார்க்கச் சென்றனர்.
வழக்கம் போல எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார் அருள்.
“டேய் ரமேஷ்… ஒண்ணுமில்ல. ஜஸ்ட் மஸில்ஸ் தான் இறுக்கமா இருக்கு. எலும்புல ஒரு பிரச்சனையும் இல்லை.”
என்றவர்,
“என்னம்மா… இவனை நீ கொஞ்சம் வேலை வாங்கி இருக்கணும் தெரியுமா?
வீடு, ஆபீஸ்னு அப்படியே இருந்ததால்தான் இந்த மஸில் பெயின்.”
“பிஸியோ கொஞ்சம் எக்ஸர்சைஸ் சொல்லித் தரச் சொல்றேன். அதைப் பாலோ பண்ணிட்டு நெக்ஸ்ட் டைம் வரும்போது ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துக்கலாம்…” என்று சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.
ஆயிற்று… அப்படி இப்படி என்று எட்டாயிரம் ரூபாய் செலவு.
மறுநாள் காலையில் எழுந்து மொட்டை மாடியில் வித்யா இந்த மூலையில் நின்று துணி காயப் போட்டுக் கொண்டு இருந்தாள்.
அதே மொட்டை மாடியில் ரமேஷ், பிஸியோ சொல்லிக் கொடுத்த எக்ஸர்சைஸை செய்து கொண்டு இருந்தான்.
கீழே குனிந்து காலைத் தொட்டு எழுந்து, கைகளை மேலே உயர்த்தி, துணி காயப் போடுவது போல…
அப்பொழுது ரமேஷின் போனில் இருந்த ரிங்டோன்,
“அட… மெல்ல நட… மெல்ல நட…” என்று பாடியது.
ரிங்டோன் ஒலிக்க, வித்யா திரும்பிப் பார்த்தாள்.
கீழே குனிந்து, கைகளை மேலே தூக்கி, பிஸியோ சொல்லிக் கொடுத்த பயிற்சியை ரமேஷ் செய்து கொண்டிருந்தான்.
ஒரு கணம் அவனைப் பார்த்துவிட்டு சிரித்தாள்.
“என்ன சிரிக்கிற?” என்றான் ரமேஷ்.
“ஒண்ணுமில்லை… நான் தினமும் துணி காயப்போடுற வேலைக்குத்தான் டாக்டர் உங்களுக்கு எக்ஸர்சைஸ்னு சொல்லிக் கொடுத்திருக்காரு!”
என்று சொல்லிவிட்டு அடுத்த துணியை கம்பியில் மாட்டினாள்.
ரமேஷும் ஒரு நிமிடம் நின்று யோசித்தான்.
வீட்டு வேலை என்பது வேலை மட்டுமல்ல… உடலுக்கான பயிற்சியும் கூட என்பதை அந்தக் காலையில்தான் அவன் முழுமையாக உணர்ந்தான்.
அடுத்த துணியை வித்யாவின் கையிலிருந்து வாங்கி, “நீ மெல்ல நட… இதை நான் காயப் போடுறேன்…” என்றான்.
மொட்டை மாடி முழுவதும் இருவரின் சிரிப்புச் சத்தம் பரவியது.
![]() |
பெயர்: கல்பனா ராஜகோபால்வயது: 56எழுதிய சிறுகதைகள்: 25பிரசுரமானவை: 12 கல்கி/மங்கையர் மலர் ஆன் லைன்: 11 சிறுகதைகள் தளம்: இங்கே படிக்கலாம் ஆரம்ப எழுத்தாளரான நான் கடந்து ஒரு வருட காலமாக கட்டுரைகள் மற்றும் கதைகளை கல்கிக்கு எழுதி வருகிறேன்.மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சுமதி என் சுந்தரி
முனைவர் வெங்கடேஷ் கணபதி
July 17, 2026
கிரகணம்
அ.வேளாங்கண்ணி
July 17, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
July 17, 2026
