அஸ்தமனத்தில் ஜனனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 12, 2026
பார்வையிட்டோர்: 113 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரு தொடர்மாடி வீடுகள் எதிருதிராய். 

நடுவில் மலைப்பாம்பாய் ஒரு சாலை. 

இரு மாடி வீடுகளில் ஒன்று பழையது. 

பழைய மாடிவீட்டின் ஒரு அறையில் அவள் படுத்திருக்கின்றாள் படுத்த படுக்கையாய். 

புதிய மாடிவீட்டிற்கு ஒரு குடும்பம் குடியேறுகின்றது. அது வசதியான குடும்பம் அதில் ஐந்து உறுப்பினர்கள். தகப்பன்,தாய், இரண்டு பெண்களும் ஒரு ஆணுமாய் பிள்ளைகள். 

ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியிய லாளராய் பணியாற்று கின்றான் மகன். 

அவனது அறைக்கு எதிராய் அவளது அறை. 

தன் அறை யன்னல் பக்கமாய் அவள் நிற்கின்றாள். தனது அறை யன்னல் பக்கமாய் அவன் நிற்கின்றான். 

அவர்கள் இருவரது விழிகளும் அகஸ்மத்தாகச் சந்திக்கின்றன. இருவரது விழிகளும் முட்டி மோதுகின்றன. 

இச்சந்திப்பு தொடர்கிறது. அவளுடைய விழிகளில் சோகம் தாபம். அவனுடைய விழிகளில் வேட்கை. 

அவளுடைய வீட்டில் மூன்று அறைகள். ஒரு அறையில் அவளும் தாயாரும். மற்றைய இரு அறைகளும் வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன. இந்த வாடகைப் பணத்தில் தான் அவர்களது குடும்பம் வாழ்ந்துகொண்டிருக் கின்றது. 

அவளது தந்தை சித்த வைத்தியர். சுமாரான வருமானம். அவருக்கு பத்துப் பரப்பு தோட்டநிலம். பயிர்ச் செய்கையில் கணிசமான வருவாய் கிடைக்கின்றது. தளப்பமில்லாமல் அவர்களது குடும்பம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

இராணுவம் அவரது தோட்டநிலத்தை பாதுகாப்புக் காரணம் காட்டி அபகரிக்கின்றது. 

அவள் பல்கலைக் கழகத்தில் இறுதி ஆண்டில் விஞ்ஞான பட்டதாரிப் படிப்பு. தந்தை விடுதலைப் போராட்ட ஆதரவாளன். அவர்களது வீடு செல்வீச்சில் தகர்க்கப்படுகிறது. இராணுவம் அப்பிரதேசத்திலுள்ள மக்களை பலாத்காரமாக வெளியேற்றுகிறது. 

சித்தவைத்தியரின் குடும்பம் இடம்பெயருகின்றது. நல்லுாரிலுள்ள துாரத்து உறவினர் வீட்டில் தஞ்சமடைகின்றது. 

தொண்ணூற்று நாலாம் ஆண்டில் குடாநாட்டு மக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்படுகின்றனர். 

கொழும்பில், வெள்ளவத்தையில் ஒரு பழைய தொடர்மாடியில் மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வீட்டை குறைந்த வாடகைக்கு எடுத்து வாழ்கின்றனர். சேமிப்புப் பணத்தில் குடும்ப வாழ்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. அவளது பட்டதாரிப் படிப்பு நிறுத்தப்படுகிறது. அவள் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து சிறிது! வருவாய் கிடைக்கின்றது. அவளது தந்தை திடீரெனக் காணாமல் போகின்றார். அவளும் தாயாரும் அவரைத்தேடி அலைகின்றனர். பலன் கிடைக்கவில்லை.காணாமல் போனவர் போனவர்தான். 

அவளுக்கு சோர்வு, களைப்பு இயங்கமுடியாத நிலை. அரசாங்க வைத்தியசாலைக்கு செல்கின்றாள். வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றாள். இதயத்தில் துவாரமிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை நடைபெறுகின்றது. சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஒரு தமிழ் இளைஞர். ஒரு தனியார் வைத்தியசாலையில் ஒரு நவீன வைத்தியக் கருவி வைத்திருக்கிறார்கள். அதனமூலம் இதய அறுவைச் சிகிச்சை செய்து நோயைக் குணப்படுத்தமுடியும் என டாக்டர் சொல்லுகின்றார். போதிய பணவசதி இன்மையால் அவளால் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. 

அவள் அரச வைத்தியசாலை வாட்டிலிருந்து வெளியேறி, வீட்டிலிருந்து இடைக்கிடை சிகிச்சைக்காக அரச வைத்தியசாலைக்கே செல்கிறாள். அவளால் முன்னரைப்போல செயற்பட முடியவில்லை. இக்காலகட்டத்தில் தான் அவனுடைய குடும்பம், அவளுடைய மாடி வீட்டிற்கு எதிரேயுள்ள புதிய மாடி வீட்டில் குடியேறுகிறது. 

அவளுடைய அறை அவனது அறைக்கு எதிரும் புதிருமாய் அமைந்துள்ளது. அவன் அங்கு குடியேறி அடுத்தநாள் மாலை தனது அறையின் யன்னலோரம் நிற்கின்றான். 

சாலைக்கு எதிரேயுள்ள அறையில் அவள் நிற்கின்றாள். அவர்கள் இருவரது விழிகளும் எதிர்பாராமலே சந்திக்கின்றன. அவர்களது விழிகளில் வியப்பு புத்தொளி. 

காலையும் மாலையும் அவர்கள் இருவரது விழிகளும் சந்திப்பு. நாட்கணக்காய் மாதக்கணக்காய் அவர்களது விழிகளின் சங்கமிப்பு. எதிரும்புதிருமாய் அவர்கள் இருவரும் யன்னலண்டை தொடர்ந்து நின்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நிற்பதை அவனுடைய தாய் அவதானித்து வருகின்றாள். 

“நீ அந்தப் பிள்ளையை விரும்புகின்றாயா?’ எதிர்பாராத விதமாய் அவனுடைய தாய் அவனைக் கேட்கின்றாள். 

திகைப்புற்ற அவன் இல்லை என்று சமாளிக்கின்றான். அவனுடைய கண்களைப் பார்த்ததும் தாயார் அவனது மனதிலுள்ளதைப் புரிந்து கொண்டுவிட்டாள். 

“மகனே சொல்லு நான் உன்னை வற்புறுத்தவில்லை. நீ விரும்பினால் சொல்லு.” 

வார்த்தைகள் வெளிவரவில்லை ஆம் என்ற தலையசைக்கின்றான். 

இரு யன்னல்கள் ஊடாக விழிகளின் சந்திப்பு தொடர்கிறது. மகனுடைய மனதிலுள்ள விருப்பை அறிந்த தாய் தன் கணவரினதும், இரு பெண்பிள்ளைகளினதும் சம்மதத்தை கடும் பிரயத்தனத்தின்மூலம் பெற்றுக்கொள்கின்றாள். 

பெண்ணுடைய விருப்பத்தையும், தாயினுடைய விருப்பத்தையும் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்குகின்றாள். முதலில் தாயைச் சந்திக்கின்றாள். சீதனபாதனத்திற்கு எங்களுக்கு வசதியில்லை என்று இந்த முயற்சியை தட்டிக்கழிக்க முயல்கின்றாள் பெண்ணின் தாயார். 

“நாங்கள் சீதனபாதனத்தை எள்ளளவும் எதிர்பார்க்கவில்லை உங்கள் மகளைத் தந்தால் போதும்”. ஏன்று அடித்துக் கூறுகின்றார் அவனுடைய தாயார். 

பெண்ணுடைய தாயார் தயக்கத்துடன் தனது இணக்கத்தை தெரிவிக்கின் றார். பெண்ணைச் சந்திக்கின்றார் பையனுடைய தாயார். 

அவருடைய வாழ்கையை நான் பாழாக்கக்கூடாது. நெடுங்காலம் நான் வாழப்போவதில்லை. அவர் நல்லவர் என்று அவரது விழிகளே சொல்லுகின்றன. அவர் திருமணம் செய்து பிள்ளைகுட்டிகளுடன் நன்றாக வாழவேண்டும். நான் நோயாளி நிரந்தர நோயாளி. அவருக்கப் பொருத்தமற்றவள்? 

“சொல்லுங்கள் அம்மா எதற்காக வந்தீர்கள்?” அவனுடைய தாயாரைக் கனிவாய்க் கேட்கின்றாள். 

“திருமணம் சம்பந்தமாகப் பேச வந்திருக்கிறேன்”. 

“யாருடைய திருமணம்?”. ஒன்றும் தெரியாதவள் போல அவள் கேட்கின்றாள். 

“என் மகன் உன்னை விரும்புகின்றான்”. 

“அதற்கு நான் என்ன செய்யவேணும்?” 

“நீ அவனைக் கலியாணம் செய்வாயா?”. 

தயங்கித் தயங்கி அவனது தாயார் கேட்கின்றார். 

“அதெப்படி அம்மா முடியும்? நான் அவரை விரும்பவில்லையே?”. 

மனதைக் கல்லாக்கிக் கொண்டு கூறுகின்றாள். 

“அவன் உன்னை மனமார விரும்புகிறான்” 

“அதற்கு நான் என்ன செய்ய?’ 

“அவன் உன்னை மனப்பூர்வமாக நேசிக்கிறான். உன்னைத்தான் கல்யாணம் கட்டுவேன் என்று உறுதியாய்ச் சொல்லுறான். நீ கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லு பிள்ளை”. 

”அம்மா நான் கல்யாணமே செய்யிறேல்லை எண்டு எப்பவோ முடிவெடுத்திட்டன். தயவு செய்து என்னைக் கட்டாயப்படுத்தாதையுங்கோ”. திட்டவட்டமாகக் கூறுகின்றாள். 

வேறுவழியின்றி அவனுடைய அம்மா விரக்தியுடன் அவ்விடத்தைவிட்டு அகல்கின்றாள். 

திரும்பிவந்த அவனது தாயாரின் முகத்தைப் பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்பதை அவனால் ஊகிக்கமுடிந்தது. இவ்விடயத்தைப்பற்றிப் பேசி மேலும் தனது தயாரை துன்பப்படுத்த அவன் விரும்பவில்லை. அவனால் ஆறாத்துயரில் வேதனைப்படத்தான் முடிந்தது. 

‘அவள் ஏன் என்னைக் கல்யாணம் கட்ட மறுக்கின்றாள்? ஒருவேளை அவள் என்னைக் காதலிக் கலையோ?. அப்படியானால் அவள் ஏன் தினமும் தாபத்துடன் என்னைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறாள்?’. எதுவுமே புரியாதவனாய் அவன் தவித்துக்கொண்டீருக்கின்றான். 

எது எப்படி இருப்பினும் அவர்களது விழிகள் தொடர்ந்தும் துயர் கலந்த மோகிப்புடன் சங்கமித்துக் கொண்டேயிருக்கின்றன. அவர்களின் விழிகளின் சங்கமம் நித்தியமாகிவிட்டது. 

மூன்று ஆண்டுகளின் பின் அவனது பெற்றோரின் நிர்ப்பந்தத்தினால் அவன் வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்கின்றான். அவன் 

கல்யாணம் நிச்சயமாகிவிட்டதென்று அவளது இதயம் சாந்திகொள்கிறது. ஆனால் அவர்களின் விழிகளின் சந்திப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. 

அவளது உடல்நிலை மோசமடைந்துகொண்டேயிருக்கிறது. 

அவனது திருமணம் முடிந்து கல்யாண ஊர்வலம் அவனுடைய வீட்டைநோக்கி வந்து கொண்டிருக்கிறது. கலியாண ஊர்வலத்திலிருந்து எழுந்து வந்த நாதஸ்வர கானம் அவளது செவிகளில் பாய்ந்து கொண்டேயிருக்கின்றது. 

ஊர்வலம் அவளது வீட்டை நெருங்குகிறது. கல்யாண ஊர்வலத்தைப் பார்க்க அவளது விழிகள் துடிக்கின்றன. படுக்கையிலிருந்து எழும்ப அவள் முயற்சிக்கிறாள். ஆனால் அவளது உடலில் தெம்பில்லை. 

ஊர்வலத்தில் மாப்பிள்ளைக் கோலத்தில் வந்துகொண்டிருக்கின்ற அவனது தலை அவனையறியாமலே நிமிர்கின்றது அவளது விழிகளைத் தரிசிக்க. அவள் எழுந்து நிற்க முயல்கின்றாள். இயலவில்லை கட்டிலில் சாய்கின்றாள். 

கல்யாண ஊர்வல நாதஸ்வர இசை அவளது செவிகளை நிறைக்கின்றது. அவனது விழிகளைச் சந்திக்க அவனது விழிகள் அங்கலாய்க்கின்றன. அவ்விழிகள் நிரந்தரமாகவே நிலைகுத்தி நிற்கின்றன. 

– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *