கவிதாவை கொல்லு…
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதைத்தொகுப்பு:
காதல் தினபூமி
கதைப்பதிவு: September 9, 2026
பார்வையிட்டோர்: 107
(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் சிட்டாகப் பறந்து வேலை செய்து கொண்டிருந்தனர். முதல்வர் கலைஞர் வருவதாக இருந்ததால் விடியலிலேயே போலீஸ் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டிருந்தது.
‘இன்று கவிதாவை எப்படியாவது கொன்று விட வேண்டும். எப்படி எப்படி என்று மூளையைப் பிசைந்து கொண்டிருந்தான் ராஜசேகரன். அவனுடைய அறைக்குள் வந்த பிரபு, “என்னடா நீ, சீனியர் ஸ்டூடன்ட் ரூமுக்குள்ளே இருந்து நேற்று நீ தானே எப்படி எப்படி அரேன்ச் பண்ண வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாய், நீயே ஏற்பாடுகளைக் கவனிக்கவிட்டால் எப்படி கமான்” என்றான்.
“சாரி பிரபு கொஞ்சம் உடலுக்கு சரியில்லை. அங்கே வந்தாலும் என்னால் முழு உணரவோடு கலந்து கொள்ள முடியுமா என்று தான் எனக்குப் புரியவில்லை.”
“என்னடா ஒரு மாதிரி இருக்கிறாய் என்னாச்சு, ஆமாம் நேற்று கவிதாவிடம் உன் மனதைக் கொட்டி விடப் போகிறேன் என்று சொன்னாயே… என்னாயிற்று சொன்னாயா?”
“ஆமாம்”
“பச்சைக் கொடி காட்டி விட்டாளா?”.
“என்ன சொல்கிறாய் பிரபு?”
“உன் காதலுக்குச் சரி சொன்னாளா”
பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தான் ராஜசேகரன்.
“ஏண்டா சிரிக்கிறாய் மறுத்து விட்டாளா”
“ம்கூம்”
“அப்புறம்?”
“சொல்கிறேன்.”
மறுநாள் ஆண்டு விழா ஏற்பாடுகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்று விழாக் குழுவினருக்கு விளக்கி அறையை விட்டு வெளியே வந்தான் ராஜசேகரன்.
விழாக் குழுவிலிருந்த கவிதாவும் வெளியே வந்து தனியாக தன் லேடீஸ் ஹாஸ்டலுக்கு நடந்தாள்.
‘மூன்று வருடங்களாக மனதிற்குள் போட்டு வைத்துக் கொண்டிருப்பதை இன்று உடைத்து விட் டால் என்ன? இது ஒரு அரிய சந்தர்ப்பம். கவிதாவின் ஒவ்வொரு செயல்களிலும் அவள் என்னை மனப்பூர்வமாக காதலிப்பது புரிகிறது, பெண்மை கண்டிப்பாக முதலில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது. நான் தான் அவளிடம் முதலில் தெரியப்படுத்த வேண்டும்.
அவள் தயங்கி தயங்கிப் போவதைப் பார்த்தால் கண்டிப்பாக நான் பேசுவேன் என்ற நம்பிக்கையில் தான் என்று மனதிற்கு முடி வெடுத்துக் கொண்ட ராஜசேகரன், அவளருகில் வந்து “கவிதா ஒரு நிமிஷம்” என்றான்.
“என்ன ராஜசேகர் என்ன விஷயம்”
“உங்கிட்ட ரொம்ப நாளா கேட்க வேண்டிய விஷயம். எப்படி ஆரம்பிக்க போகிறேன் என்று தான் புரியவில்லை”
“சரி நன்றாக யோசித்து விட்டு அப்புறமாகச் சொல்லுங்கள்”
“ஒரு நிமிடம்.. ம்…. என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”
“எதற்காக இந்தக் கேள்வி என்று புரியவில்லை?”
“கவிதா…வந்து… உனக்குக் காதலில் நம்பிக்கை இருக்கிறதா?”
“என்ன ராஜசேகரன் நேரடியாகச் சொல்லுங்கள் என்ன விஷ யம்?” எரிச்சல் பட்டாள் கவிதா.
“மூன்று வருடமாக உன்னை… உன் நடவடிக்கைகளை….கவிதா எப்படி சொல்வதென்று புரியவில்லை, ம். கவிதா நான் உன்னை விரும்புகிறேன்”
“யூ மீன் யூ லவ்மி”
“ம்… ஆங்கிலத்தில் எளிதில் சொல்ல முடிந்து வருகிறது. ஐ லவ் யூ..கவிதா”.
“என்னிடம் என்ன பதில் எதிர் பார்க்கிறீர்கள் ராஜசேகர்”
“நான் பேசும் போதெல்லாம் சிரித்துப்பேசி, நான் கேட்டதெல்லாம் எனக்கு வாங்கிக் கொடுத்து – கவிதா உண்மையயை சொல் நீ என்னைக் காதலிக்கவில்லையா?”
“நம் நண்பர்கள் அனைவரிடமுமே நான் சிரித்துப் பேசுகிறேன். ஒரு சீனியர் ஸ்டூடன்ட் ஏதாவது கேட்டு வாங்கித்தந்தால் அதற்கு பேர் காதலா? என்னாச்சு ராஜசேகர் உங்களுக்கு?”
“இல்லை கவிதா கொஞ்சம் யோசித்துப் பார் மூன்று வருடமாக”
“ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், காதல் என்பது யாசகம் செய்து வருவதில்லை. மேலும் காதல் என்பது காமம் என்பது என் அபிப்பிராயம்.”
“சே! காமத்திற்கும் காதலுக்கும் அர்த்தம் தெரியாதா உனக்கு?”
“என் அபிப்பிராயத்தைத் தானே சொன்னேன். ஏன் கோபப்படுகிறீர்கள். ஸ்கூல் நாட்களிலே நான் கூட காதல் வயப்பட்டிருக்கிறேன். அந்தப் பையன் என்னை முத்தமிடத் துணிந்த போதே எனக்குக் காதல் மேல் மரியாதை எல்லாம் போய்விட்டது.
ராஜசேகர் காதல் புனிதமானது அப்படித்தானே… சரி காதலுக்கு அப்புறம் இந்த உடலைத் தொடுதல் தானே நோக்கம். எனக்கு டாக்டருக்கு படிக்க வந்ததிலிருந்த இந்த உடலின் மேலிருந்த கவர்ச்சி கூட போய் விட்டது. ஸாரி, நல்ல பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து கொள்ளுங்கள்?”
“ஏன் கவிதா வேறு யாரை யாவது காதலிக்கிறாயா?”
“இல்லை ராஜசேகர் எனக்குக் காதல் என்றாலே ஒரு பெண்ணை விழத்தட்டும் வலை என்று தான் தோன்றுகிறது”
“நீ திருமணமே செய்து கொள்ளப் போவதில்லையா? நான் உனக்கு எல்லா வகையிலும் நல்ல துணைவனாக இருக்க முடியும் என நம்புகிறேன் கவிதா”
“ஸாரிப்பா, எனக்கு கல்யாணம் இந்தக் காதல் எல்லாம் போலியாகத் தோன்றுகிறது. வருகிறேன்” என்று லேடீஸ் ஹாஸ்டல் நோக்கி நடந்த கவிதாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜசேகரன்.
ராஜசேகர் சொன்னதைக் கேட்ட பிரபு “வுடுடா இந்த கவிதா இல்லேண்ணை இன்னொரு ரசிகா. இதற்குப் போயே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? உன் அருமை தெரியாமல் பேசி விட்டுப் போயிருக்காள்! டேக் ரெஸ்ட் மத்தியானம் சாப்பாட்டுக்காவது வந்து சேர்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
“சரி கண்டிப்பாக வருகிறேன்” என்று பிரபுவை வாசல் வரை வழி அனுப்பி வைத்தவன், திரும்பிப் பார்த்த போது கவிதா வந்து கொண்டிருந்தாள்.
உள்ளே ஓடி வந்து தேடிப்பிடித்து கத்தியை எடுத்து வைத்துக் கொண்டு “என்ன கவிதா ஏற்பாடுகள் எல்லாம் எப்படி நடக்கிறது. வாயேன்” என்றான் ராஜசேகரன் அறையின் வாசலில் நின்று.
“நன்றாக நடக்கிறது. ஆடிட்டோரியத்தில் பிரெணட்ஸெல்லாம் நின்று கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கிளம்பிவில்லையா?”
“கொஞ்சம் உடம்புக்குச் சரியில்லை”
“உடம்புக்கா… மனதிற்குச் சரியில்லையா?” என்று அவள் கேட்டதும், கத்தியை எடுத்துக் கொண்டு, அவள் தலை மயிரைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டு “என் மனதிற்குத் தாண்டிச் சரியில்லை. என்னைச் சிரித்து சிரித்து விழ வைத்து விட்டு எல்லோரிடமும் பேசியது போல பேசினேன் என்கிறாய். இனி நீ உலகத்தில் இருப்பதில் நியாயமில்லை” என்று கத்தியை ஓங்கனான்.
“ராஜசேகர் என்னைக் கொல்லுங்கள் நான் சாகப் பயப்பட வில்லை. எனக்கும் காதலுக்கும் காத தூரம் என்று தான் சொன்னேன். என் பார்வையில் காதல் எப்படிப் பட்டது என்றுதான் சொன்னேன். என் சின்ன வயது அனுபவம் எனக்குக் காதலை காமமாகக் காட்டி விட்டது. அதனால் காதலைப் பற்றி சொன்னதற்காக நீங்கள் என்னைக் கொல்வதானால் எந்தத்தவறுமில்லை.
சரி, நான் ஒன்று கேட்கிறேன். காதல் காமம் தான் என்ற போது புனிதம் என்கிறீர்களே. நான் உங்களைக் காதலிக்கிறேன். அப்புறம் கல்யாணம். அப்புறம் இந்த உடல் மேல் தானே உங்களுக்கு அபிரிதமான ஆசை. வாருங்கள் ராஜசேகர். என்னை எடுத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு பிறகு கொல்லுங்கள்” உடுத்தியிருந்த சேலையை வீசி எறிந்து விட்டு கத்தினாள் கவிதா.
ராஜசேகர், சிலையாகி நின்றான்.
– 2003, தினபூமி – ஞாயிறுபூமி.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பேசினால் தப்பா..?
இரஜகை நிலவன்
September 3, 2026
மலரின் காதல் வாடுமா?
இளையவேணி கிருஷ்ணா
August 28, 2026
ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
நாகரத்தினம் கிருஷ்ணா
August 25, 2026
