செஞ்சோற்றுக்கடன்
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2026
பார்வையிட்டோர்: 64
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கலை மன்றத்தைத் தவிர, மற்ற மொழிகள் மன்றங்கள் இருந்தன. அதனால், அங்குப் படித்த தமிழ் மாணவ மாணவியர்கள் ஒன்று சேர்ந்து, தமிழ் மன்றத்தைத் தொடங்கத் திட்டமிட்டனர். அவர்களுக்கு அங்குப் பணியாற்றிய தமிழ் அறிந்த பேராசிரியர்களும் உதவி செய்வதாகப் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள்.
அடுத்த சில நாட்களில் அங்குப் படித்த அனைத்து ஆண்டு மாணவ மாணவிகளும் ஒன்று கூடி தமிழ் மன்றத்தை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதற்கு மின்னியல் தொழில் நுட்பப் பிரிவில் படித்த இறுதியாண்டு மாணவன் கதிர்வேல் ஒருங்கிணைப்பாளராக இருந்தனர்.
கதிர்வேலும் வேறு சில மாணவர்களும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, ஒரு நாள் பேராசிரியர்களும் மாணவர்களும் விரிவுரை மண்டபம் ஒன்றில் ஒன்று கூடினர். அப்போது, “பேராசிரியர் ஒருவர், உங்களுக்குள்ள தமிழார்வத்தைக் கண்டு, நானும் இங்கு வந்திருக்கும் மற்ற பேராசிரியர்களும், உண்மையிலேயே பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களுக்கு எந்தவிதமான உதவிகள் தேவைபட்டாலும் எந்த நேரத்திலும் எங்களிடம் வந்து கேட்டுப் பெறலாம். உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்” என்று கூறி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மாணவன், கதிர்வேல் தமிழ்மன்றம், அமைப்பதற்குரிய காரணத்தைக் கூறி, அதற்குரிய செயலவையைத் தேர்ந்தெடுக்குமாறு சொன்னான். மேலும் நாம் முதன்முதலாக இங்குத் தமிழ்மன்றத்தைத் தொடங்கப் போகிறதால் என்னைப் போன்று, விரைவில் பல்கலைக் கழகத்தை விட்டுவிட்டுப் போகிறவர்கள் பொறுப்பு ஏற்காமல், முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டுகளில் பயில்பவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் நல்லது என்று சொன்னான்.
கதிர்வேல் சொன்ன கருத்தினை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு செயற்குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தக் குழுவில் ஆனந்தும் அமுதாவும் இடம் பெற்றனர்.
அவர்கள் இருவரும் வர்த்தகத் துறையில் பயின்ற முதலாம் ஆண்டு மாணவர்கள்.
ஆனந் தலைவராகவும் அமுதா செயலாளராகவும் இருந்து ”சித்திரைத் தென்றல்” போன்ற பல நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ்மன்றத்திற்குச் சிறப்பு சேர்த்தனர்.
தமிழ்மன்ற நடவடிக்கையின் காரணமாகவும், தங்களின் பாடங்களின் காரணமாகவும் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். அதன் காரணமாக அவர்களிடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு அவர்களின் நலனிலும் மிளிரத் தொடங்கியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டத் தொடங்கினர். அவர்களின் அன்பு வளர்ந்தது; படிப்பு முடிந்தது.
பல்கலைக் கழக வாழ்க்கை முடிந்து, பரந்த உலக வாழ்க்கை தொடங்கியபோது, இருவரும் இணைந்து ஒன்றாக ஓரிடத்தில் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
பணியில் இணைய முடியாவிட்டாலும் வாழ்க்கையில் ஒன்று இணைய விரும்பினார்கள்.
ஆனந் அமுதாவுடன் தொடர்பு கொண்டான்.
ஆனந்தின் அழைப்பை ஏற்றுக் கொண்ட அமுதா அவனைச் சந்திக்க சம்மதித்தாள்.
“என் அம்மா என்னை மிகவும் அவசரப்படுத்துறாங்க; உனக்குப் புரியும்” என்று நினைக்கிறேன். அதாவது, என்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ள சொல்றாங்க” நம்முடைய திருமணத்தைப் பற்றி உன்னிடம் பேசுவதற்காகத்தான் உன்னை வரச்சொன்னேன்’ என்ற ஆனந் அமுதாவிடம் கூறினான்.
அமுதா மௌனமாக இருந்தாள்.
“மௌனத்தைச் சம்மதம் என்று எடுத்துக் கொள்ளலாமா அமுதா?’ என்று கேட்டான் ஆனந்.
“என்னுடைய மௌனம் சம்மதத்திற்குரிய மௌனம் அல்ல” என்றாள் அமுதா.
“ஏன் உனக்கு இதில் விருப்பம் இல்லையா?”
“விருப்பம் இல்லை என்று சொல்ல எனக்கு என்ன பைத்தியமா?”
“பிறகு என்ன பிரச்னை?”
“எனக்கு ஒரு அக்கா இருக்கிறாள் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவள் வீட்டில் இருக்கும்போது இளையவளான நான் எப்படி முதலில் திருமணம் செய்து கொள்ள முடியும்?”
“அக்காவுக்கு முன் தங்கையும் அண்ணனுக்கு முன்பு தம்பியும் திருமணம் செய்து கொள்வது இந்தக் காலத்தில் தப்பு இல்லை அமுதா” என்றான் ஆனந்.
நீங்க சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி எல்லா வீடுகளிலும் நடைபெறுவது இல்லையே.
“உன் முடிவுதான் என்ன?’ என்று கேட்டான் ஆனந்.
அருணாச்சலம், தன் மகள் மாலதிக்கு உடடினாயக வரன் தேடியாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
தனக்கு மாப்பிள்ளை தேடுவதைக் கேள்விபட்ட மாலதி, தன் தந்தையிடம் தனக்குத் திருமணம் வேண்டாம் என்றாள்.
”உனக்குத் திருமணம் நடந்தால்தானே உன் தங்கைக்குத் திருமணம் செய்ய முடியும்.”
”எனக்கு வேண்டாம் அப்பா. நீங்க அகிலாவுக்கு முதலில் மணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யுங்க. அவளுக்கு நீங்க மாப்பிள்ளைகூட தேட வேண்டியது இல்லே. அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளையை அவளே தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறா” என்று சொன்னாள் மாலதி.
“நீ சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் இன்னொரு முக்கியமான செய்தி உனக்குத் தெரியாது” என்றார் அருணாச்சலம்.
“அது என்னப்பா எனக்குத் தெரியாத செய்தி?”
”உனக்குக் கல்யாணம் ஆனபிறகுதான், அவள் மணம் செய்து கொள்ளுவாலாம்.”
“நான் வேனும்னா அவளிடம் பேசிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் மாலதி.
“ஏன் அவளைப் போட்டு குழப்பப் போகிறே? நான் மாப்பிள்ளைப் பார்க்கப் போகிறேன். இனிமேல் நீ எதுவும் பேச வேண்டாம்” என்று அருணாச்சலம் கூறிவிட்டார்.
மாலதியால் அதற்குமேல் எதுவுமே பேச முடியவில்லை. பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல் இருந்தாள். தான் செய்து விட்ட தப்பான காரியம் வெளியில் தெரிந்தால் அப்பாவின் நிலை என்னவாகும் என்று யோசித்தாள்.
நடக்க வேண்டிய நேரம் வந்தால் எல்லாம் நடக்கும். போக வேண்டிய நேரம் வந்தால் என்னதான் அணை போட்டாலும் போய்விடும்” என்று பெரியவங்க சொல்லுவாங்க! நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் மாலதி.
வசதியும் வனப்பும் நிறைந்த மாலதியை மணந்து கொள்ள யாருக்குத்தான் கசக்கும்? மாப்பிள்ளை தேடும் படலம் விரைவிலேயே முடிந்தது.
மோகன் என்ற பெயர் கொண்ட கட்டிளங்காளை. மாலதிக்கு மாப்பிள்ளையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டான். மோகன் ஒரு பட்டதாரி. மின்னியல் நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தான்.
மாலதிக்கு இதில் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாததால் எதுவுமே கருத்துக் கூறாமல், அருணாச்சலம் எதைச் சொன்னாலும் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்று கூறிவிட்டாள்.
திருமணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் அருணாச்சலம் பம்பரம் போல் சுற்றி சுற்றிச் செய்தார். அவருக்கு உதவியாக அகிலா இருந்தாள்.
திருமண நாளன்று, மணமேடையில் மணப்பெண் கோலத்தில் மாலதி உட்கார்ந்து இருந்தாள். மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளம். அகிலாவின் வருங்கால கணவன் ஆனந், அவனுடைய தாயோடு மணவிழாவுக்கு வந்திருந்தான்.
தாலி கட்ட வேண்டிய நேரம் நெருங்கி கொண்டிருந்தது. திடீரென்று, கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. என்னதான் நடக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.
மணமேடையில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி தூக்கி எறிந்துவிட்டு, கீழே இறங்கி வேகமாக வெளியே சென்றான். அவன் பின்னால் ஒரு கூட்டமே கிளம்பி சென்றது.
அருணாச்சலம் எதுவுமே புரியாமல் திகைத்துப் போய் நின்றார்.
அகிலா மாப்பிள்ளையின் பின்னால் ஓடி போய் விவரம் கேட்டாள்.
“ஏய்! நீ யாரடி? அப்பா அம்மா தெரியாத அனாதை நாய். அவளோ, கண்டவனுடன் சுற்றி கற்பிழந்தவள். அவள் அப்பனோ பெற்ற மகளை ஒழுங்காக வளர்க்கத் தெரியாதவன். அவன் என்னை எதுவும் தெரியாத ஏமாளி என்று நினைத்து, கெட்டுப் போனவளை என் தலையில் கட்டிவிட பார்த்திருக்கிறான். இதற்காகவே அவன் மீது வழக்குப் போட்டு, உள்ளே தள்ளிவிட முடியும். வயதானவன், பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டுப் போகிறேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்டே நடக்கிறது வேறாகத்தான் இருக்கும் என்று மிகவும் ஆத்திரத்துடன் சொன்னான்.
அகிலாவுக்கு அவன் சொன்னதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
நான் அப்பா அம்மா இல்லாத அனாதையா? அப்படி என்றால், நான் அப்பா என்று அழைத்துக் கொண்டு இருக்கும் அருணாச்சலம் என் அப்பா இல்லையா? புரியாத புதிர்: குழப்பம்.
அந்த நேரத்தில் ஆனந், அகிலா நின்றிருந்த இடத்திற்கு ஓடி வந்தான்.
“உன் அப்பா மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டார்” என்றான்.
அகிலா எதுவும் பேசாமல் கல்லாய் நின்றாள்.
ஆனந் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மணமேடைக்கு ஓடினான்.
அருணாச்சலம் அசைவற்றுக் கிடந்தார். ஆனால் மூச்சு இருந்தது.
மலாதி மாலையும் கழுத்துமாக அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.
உடனே, அகிலா ஆனந்தை மணமேடைக்கு அழைத்துச் சென்று, அங்குக்கிடந்த மாலையை எடுத்துக் கொடுத்து, கழுத்தில் போட்டுக் கொள்ளச் சொன்னாள்.
“ஏன் என்னை மாலை போட்டுக் கொள்ளச் சொல்கிறாய்?” என்று கேட்டான்.
“தயவு செய்து, என்னிடம் இப்போது எதுவும் கேட்காதீங்க. என் மீது உங்களுக்கு இருப்பது உண்மையான அன்பு என்றால், நான் சொல்வதைச் செய்யுங்கள்” என்றாள் அகிலா.
அதன் பிறகு, ஆனந் சாவி கொடுத்த பொம்மை போல, அகிலா சொன்னதை எல்லாம் செய்தான்.
மாலையைப் போட்டுக் கொண்ட ஆனந்தை மாலதியின் பக்கத்தில் உட்கார வைத்தாள். அவள் சொன்னபடி, அவன் மாலதியின் கழுத்தில் தாலியைக் கட்டினாள்.
அகிலாவின் கண்களில் கண்ணீர் முத்துகள் சிதறின. அதற்குரிய பொருள் அவளுக்குத்தான் வெளிச்சம்.
மயக்கம் தெளிந்த அருணாச்சலம், மகள் மாலதிக்குத் திருமணம் முடிந்துவிட்டதை எண்ணி மனம் மகிழ்ந்தார். ஆனால், தான் பார்த்த மாப்பிள்ளை ஏன் அப்படி செய்தான் என்பதை அவர் அறிந்து கொள்ள விரும்பாமலா இருப்பார்?
மணமேடையில் இருந்த மாலதியைப் பார்த்தவுடன் திகைத்துப் போன. மாப்பிள்ளையின் உறவுக்கார டாக்டர் வசந்தி, மாலதி தன்னுடைய மருந்தகத்தில் இரண்டு மாதக் கருவைக் களைத்துக் கொண்டவள் என்ற உண்மையைச் சொன்னதால் ஏற்பட்ட குழப்பம்தான் இவ்வளவுக்கும் காரணம் என்பதை அருணாச்சலம் புரிந்து கொண்டார்.
தன் மகள் இப்படிப்பட்ட ஒரு காரியம் செய்திருப்பாள் என்பதை நம்ப முடியாவிட்டாலும், நாலு பேர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட இழிவை நினைத்த வேதனைபட்டார்.
தான் பெற்று எடுக்காத ஒரு பெண், தன்னுடைய காதலனை, தன் மகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த அகிலாவுக்கு எப்படித்தான் நன்றி கூறுவது என்று புரியாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.
மாலதியின் தாய் மகப்பேருக்குப் போய் இருந்தபோது, அகிலாவின் அம்மாவும் போய் இருந்தாள். குழந்தை பிறப்பில் ஏற்பட்ட சிக்கலில் தாயைக் காப்பாற்ற முடியவில்லை. தன் மனைவி போன பிறகு. தன்னால் அக்குழந்தையை வளர்க்க முடியாது என்று எண்ணிய அகிலாவின் அப்பா குழந்தையை மாலதியின் தாயிடம் கொடுத்துவிட்டு எங்கோ போய்விட்டார்.
அருணாச்சலம், தன்னைத் தன் மகள் போல வளர்த்து வந்த செஞ்சோற்றுக்கடனை, தன் காதலன் ஆனந்தையே கொடுத்து அடைத்துவிட்டாள் அகிலா.
– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உண்மைச் சுதந்திரம்
அல்போன்ஸ் மோசஸ்
August 25, 2026
கிழக்கின் வெளிச்சம்
தாட்சாயணி
August 25, 2026
அந்த நிமிடம்
சந்திரகௌரி சிவபாலன்
August 25, 2026
