எல்லைக்கோடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2026
பார்வையிட்டோர்: 62 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று தீபாவளி. அந்த முதியோர் இல்லத்தில் இருந்தவர்களைக் காண அவர்களின் பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என்று பலர் வந்து கொண்டும் போய் கொண்டும் இருந்தார்கள். ஆனால் அதோ அந்த மூலையில் உள்ள கட்டிலில் படுத்து கிடக்கிறார் அருணாசலம். அவரைக் காண எவருமே வரவில்லை. அப்படி என்ன அவர் எவருமே இல்லாத அனாதையா? அதவும்தான் இல்லையே. அவருக்கு, ‘ஆசைக்கு ஒரு பெண் வேண்டும். ஆஸ்திக்கு ஓர் ஆண் வேண்டும். என்பார்களே அதற்கு ஒப்ப ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இருவர் உள்ளார்களே! ஆனால் அவருடைய மனைவி மரகதம் மட்டும் இல்லை. அவர் அருணாசலத்தை விட்டு போய் ஆண்டுகள் பல கடந்துவிட்டன.

அருணாசலத்தின் ஆசை மகள் அயல்நாட்டானைத் திருமணம் செய்து கொண்டு அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். அன்புக்குரிய மகன் மட்டும் அருகில் இருந்தும் அவரைக் காண வரவில்லை. அது யாருடைய குற்றம் ? மகனின் குற்றமா அல்லது அருணாசலத்தின் குற்றமா?

அருணாசலம் ஒன்றும் ஊர் அறியக்கூடிய பெரிய மனிதர் அல்ல. அறிந்தவருக்கு அவர் அன்பானவர். அயராத உழைப்பாளி என்பது தெரியும்.

காலம் பொன் போன்றது. அக்காலத்தை வீணாக விட்டுவிடக் கூடாது. காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்பது அவரின் கொள்கை. எனவே தான் திடகாத்திரமாக இருக்கும்போது ஓய்வின்றி உழைத்து, உயர்வடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அயராது உழைத்தார். உழைத்து உழைத்து இன்று ஓய்வுக்குள்ளாகி விட்டார்.

யாருடைய உயர்வுக்காக தன்னுடைய செந்நீர் தண்ணீராக மாறி வடிய வடிய உழைத்தாரோ. அவன் இன்று அவரைக் காண்பதே பாவம் என்று இருக்கின்றான். அவன்தான் அருணாசலத்தின் மகன் அருளரசன்.

கட்டிலில் கிடக்கும் அருணாசலத்தின் மூடிய கண்களி லிருந்து கண்ணீர் வழிகின்றது. அவரின் மனத்திரையில் அவர் வாழ்க்கைப் பயணம் படமாகத் தெரிகின்றது.

அருணாசலத்தின் மாமா அய்யாச்சாமி, தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டுவிடாமல் திரைக்கடல் ஓடி திரவியம் தேடுவதற்காக, தன் மனைவி, மகள், அக்காள், அத்தான், அக்காளின் மகன் அருணாசலம் ஆகியோரை விட்டுப் பிரிந்து சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். தன்னுடைய திறமையாலும் உழைப்பாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.

தன் குடும்பத்தைப் போலவே தன்னுடைய அக்காளின் குடும்பத்தையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று எண்ணினார். அதில் அவரின் சுயநலம் இருந்தது. அதாவது, தன் அக்காள் மகன் ஒரு நல்ல நிலையில் இருந்தால், தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கலாம். அப்போது தன் மகளின் வாழ்க்கை நல்ல நிலையில் அமையும் என்று எண்ணி, தன் அத்தானை அழைக்காமல் தன் வருங்கால மருமகனைச் சிங்கப்பூருக்கு அழைத்தார்.

அருணாசலமும் தன் மாமாவின் உதவியை மதித்து நடந்தான். மாமாவின் அன்புக்குப் பாத்திரமாக நடந்து வந்தான். ஆண்டுகள் உருண்டோடின.

ஒரு நாள் அருணாசலத்தின் மாமா, தன் எண்ணத்தை அவனிடம் கூறி, தன்னுடன் தாயகம் புறப்படுமாறு கூறினார்.

அருணாசலம், மாமாவின் எண்ணத்தை நிறைவேற்ற முடியாது என்று கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட அவனின் மாமா அப்படியே அயர்ந்து போய்விட்டார்.

அருணாசலம், “மாமா, நான் “ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைக்க விரும்பவில்லை” என்றான்.

“நீ என்ன சொல்கிறாய்?” என்றார் மாமா. “நான் இனிமேல் இந்தியாவுக்கு வரப் போவதில்லை” என்றான்.

அப்படி என்றால்?

“நான் இங்கேயே திருமணம் செய்து கொண்டு இருந்துவிடப் போகிறேன். நீங்களே ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும்” என்றான் அருணாசலம்.

அதற்கு எந்த மறுப்பும் மாமா கூறவில்லை. அருணாசலத்தின் விருப்பத்தை நிறைவேற்ற அவருக்குத் தெரிந்த சில நண்பர்களிடம் கூறி பெண் பார்க்குமாறு கூறினார். பல பெண்கள் பார்க்கப்பட்டனர். அருணாசலத்திற்குப் பொருத்தமான பெண் மரகதம் என்று முடிவு செய்தார். அப்பெண்ணையே அருணாசலத்திற்குத் திருமணம் செய்து வைத்தார். அத்துடன் அருணாசலத்தை விட்டுவிட்டுச் சென்றவர்தான். பிறகு இந்நாட்டுக்கு அவர் திரும்பவே இல்லை. இது மாமா வைத்துக் கொண்ட எல்லைக்கோடு.

மாமா தேர்ந்தெடுத்த பெண்ணையே தன்னுடைய வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்ட அருணாசலத்தின் வாழ்க்கைப் படகு ஆட்டம் எதுவும் இல்லாமல் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. அவசரப்பட்டு, அடுத்தாண்டே ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளாமல், ஆர அமற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மரகதம் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு அமுதா எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்தார்கள். அடுத்த இரண்டாண்டுகளில் ஆண் குழந்தை ஒன்று. அருளசரன் என்பது அவனுக்குப் பெயர்.

அருணாசலம் அதிகம் படித்தவர் இல்லை. ஓரளவு தமிழ்ப் படிக்கவும் எழுதவும் தெரியும். தன்னைப் போலவே தன் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று எந்தப் பெற்றோர்களுமே விரும்புவதில்லை, அதற்கு அருணாசலம் மட்டும் விதிவிலக்கா? அவரும் தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி, அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து படிக்க வைத்தார். தன் பெற்றோர்களின் விருப்பத்தைப் புரிந்து கொண்டு அமுதா நன்றாகவே படித்தாள். அருளரசனும் அப்படியே.

தொடக்க நிலை, உயர்நிலை, மேல்நிலை என்று அமுதா மாறிக் கொண்டே போனாள். அதேபோல் அவளின் அவளின் உடலும் மாற்றமடைந்தது. மகளின் அறிவுத் திறமையையும், அழகான உடலமைப்பையும் கண்ட அருணாசலமும் மரகதமும் பூரித்துப் போனார்கள்.

பட்டம் படிக்கப் பல்கலைக் கழகம் போனாள். பாவாடை தாவணியுடன் இருந்தவள், பேண்டும் பனியனும் போடத் தொடங்கினாள். நகங்களிலும், விழிகளின் புருவத்திலும் ஏன் கொவ்வை இதழ்களிலும் சாயம் ஏறியது. விளைவு வெளிநாட்டிலிருந்து வந்திருந்த விரிவுரையாளரிடம் தன் மனதைப் பறிகொடுத்தாள். பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறினார்கள். தனக்கென அவள் ஓர் எல்லைக் கோட்டைப் போட்டுக் கொண்டாள். பெற்றோரை மறந்தாள். பிறந்த நாட்டையும் துறந்தாள். பறந்துவிட்டாள் பாரிஸ் நகரம்.

”நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதற்கு ஒப்ப” தன் மகளின் வாழ்க்கை அமைந்துவிட்டதே என்று அருணாசலம் கண் கலங்கினார்.

‘தன் அன்பை எல்லாம் கொட்டி வளர்த்த மகள் தன்னை ஏமாற்றிவிட்டு போய்விட்டாளே’ என்று எண்ணியெண்ணி மனம் வருந்தினாள் மரகதம்.

மகள் தன்னை விட்டுப் போன பிறகு, படுத்த மரகதம், நால்வர் தூக்கும் வரையில் எழுந்திருக்கவில்லை. படுத்த படுக்கையிலேயே கிடந்து அருணாசலத்தைப் படாத பாடுபடுத்திவிட்டாள்.

வேலைக்குச் செல்வதும் வீட்டுக்கு வருவதும் மரகதத்துக்கு வேண்டியவற்றைச் செய்வதும் மகன் அருளரசனைக் கவனிப்பதும் என்ற முறையிலேயே கொஞ்ச காலத்தைக் கழித்தார் அருணாசலம்.

பெட்டைக் கழுதைதான் ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டது. பையன் அப்படி செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில் இருந்தார். தன் மகளைப் படிக்க வைத்ததைவிட மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினார். தான் செய்து வந்த கூலி வேலையில் பெற்ற பணம் மனைவி மரகதத்தின் மருத்துவ செலவுக்கே போதவில்லை என்பதை உணர்ந்தார். இந்நிலையில் மகனை எப்படி நல்ல முறையில் படிக்க வைக்க முடியும்? எனவே அவர் கிடைக்கின்ற நேரத்தில் வேறு வேலைகளும் செய்யத் தொடங்கினார்.

தன் கணவனுக்கும் மகனுக்கும் நான் ஏன் இன்னும் பாரமாக இருக்க வேண்டும்? இவ்வுலகில் நான் சாதிக்கப் போவது என்ன? என்னை உன்னுடன் அழைத்துக் கொள் இறைவா என்று எப்பொழுதும் மன்றாடி வேண்டிக் கொண்டே இருந்தாள் மரகதம். அவளின் வேண்டுகோளுக்கு இறைவன் செவிசாய்த்துவிட்டான்.

மகள் ஊரைவிட்டுப் போய்விட்டாள். மனைவி உலகை விட்டு போய்விட்டாள். மகனாவது தன்னுடனே இருக்கிறானே என்று எண்ணிக் கொண்டார் அருணாசலம்.

இனி நான் வாழ்வது என் மகனுக்காகத்தான். அவனை இச்சமூகத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதே தன்னுடைய முக்கி கடமையாகும் என்று எண்ணிக் கொண்டார். இரவு பகலாக அருணாசலம் உழைத்தார். அவர் என்ன உழைப்புக்குப் பயந்தவரா?

தன் நல்வாழ்வுக்காக தன் தந்தை உழைக்கும் உழைப்பைப் பார்த்த அருளரசன், அவரின் கனவை நனவாக்கவாவது தான் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவனமாகவும் கடினமாகவும் படித்து வந்தான். ஆண்டுதோறும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தான். அதைக்கண்டு அருணாசலம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

அருளரசனின் அதிகத் திறமைக்கு, அதிபரின் உபகாரச் சம்பளம் கிடைத்தது. ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கம் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்ற குறளுக்கு ஒப்ப அருணாசலம், தன் மகனுக்குக்கிடைத்த பணத்தையும் பாராட்டுகளையும் அறிந்து மகிழ்ந்தார். தன் மகனுக்குக் கிடைத்துள்ள புகழுரைகளைக் கேட்க தன் மனைவி இல்லையே என்று மனம் நொந்தார்.

தனக்குக் கிடைத்துள்ள பணமும் பாராட்டுக்களும் தன் தந்தைக்கே உரியவை என்று எண்ணிய அருளரசன், தன் அப்பாவிடம் இன்னும் அதிகமாகவே அன்பு காட்டினான். தாய் இல்லாத குறையே தெரியாமல் தாய்க்குத் தாயாகவும் தந்தையாகவும் தன்னை வளர்க்கும் ‘என் தந்தைக்கு நான் எவ்வாறு கைமாறு செய்யப் போகிறேன்’ என்றும் நினைத்தான்.

உபகாரச் சம்பளம் பெற்ற அருளரசன், தன் தந்தையை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்தது. அப்பாவை விட்டு பிரிவதா? நினைத்தாலே கண்ணில் நீர் வரத் தொடங்கியது. அப்பாவைத் தனியே விட்டுவிட்டுச் செல்ல அவன் மனம் இடம் தரவில்லை. இந்த உபகாரச் சம்பளமே வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று ஒரு கணம் எண்ணினான். அந்த எண்ணத்தை தந்தையிடம் கூறினான்.

“நீ என்ன பைத்தியக்காரத்தனமாகப் பேசுகிறாய்?’ எவருக்குமே கிடைக்காத ஒன்று உனக்குக் கிடைத்துள்ளது. அதை வேண்டாம் என்று சொல்லப் போகிறாயா? என்னை விட்டுவிட்டு எங்கே சென்றுவிடப் போகிறாய்? எவ்வளவு காலம்? எண்ணி ஐந்தாண்டுகள், கண்மூடி கண் திறப்பதற்குள் இந்தக் காலங்கள் கரைந்துபோய்விடும். உன் அப்பா உன்னைப்போல சின்னப் பிள்ளை இல்லை. இது வைரம் பாய்ந்த கட்டை. நான் எதையும் தாங்கும் இதயம் படைத்தவன். எனக்காக நீ கவலைப்பட வேண்டாம். நீ சந்தோஷமாகச் சென்று முதல் தரமாகப் படித்து வர வேண்டும்” என்று உற்சாகம் ஊட்டினார் அருணாசலம். இருப்பினும் இதுநாள் வரையில் தன் மார்பிலும் தோலிலும் போட்டு வளர்த்த, இதுவரை தன்னை விட்டு ஒரு கணம்கூட பிரிந்திருக்காத மகனைப் பிரிவது என்பது அவருக்குப் பெருந்துன்பமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ள முடியுமா?

அப்பாவும் நண்பர்களும் வழி அனுப்ப, அருளரசன் டாக்டர் பட்டம் படிக்க இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றான்.

மகனை வழியனுப்பிவிட்டு வந்த அருணாசலத்துக்குத் தான் தன்னந்தனியாக காட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. மனைவி, மகள், மகன் என்ற உறவில் வாழ்ந்தவரின் வாழ்க்கையில் ஒவ்வொருவராகப் பிரிந்து சென்றது, உண்மையிலேயே அவருக்குப் பெரும் வேதனையைத் தந்தது.

இன்னும் ஐந்தாண்டுகளில் தன் மகன் ஒரு டாக்டராக திரும்பி வந்துவிடுவான். அதன் பிறகு அவனுக்குத் திருமணத்தைச் செய்துவிட்டு. எஞ்சிய காலத்தை இம்மண்ணிலேயே ஓட்டிவிட வேண்டும் என்று எண்ணினார் அருணாசலம்.

தந்தையை விட்டுச் சென்ற அருளரசன், இரண்டு வாரங்களுக்கு ஒரு கடிதம் என தன் தந்தைக்குத் தவறாது எழுதி வந்தான். அதில் எல்லாம் தன் தந்தையின் உயர்ந்த உள்ளத்தைப் புகழ்ந்து எழுதுவான். தன்னைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம் என்றும் உடல் நலத்தைப் பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் இனிமேலும் தனக்காக அதிகம் உழைக்க வேண்டாம் என்றும் எழுதி வந்தான்.

இதுநாள் வரையில் உழைத்துத் தேடிய பணத்தை எல்லாம் மகனின் படிப்புக்குச் செலவு செய்துவிட்டேன். அவன் படிப்பு முடிந்து வந்தவுடன், திருமணம் செய்து வைக்க வேண்டும். இருப்பதற்கு ஒரு நல்ல வீடு வேண்டும். இவற்றிற்கு எல்லாம் பணம் வேண்டுமே. இது தெரியாமல் இந்தப் பையன் இருக்கிறானே என்று அருணாசலம் எண்ணிக் கொள்வார்.

அவன் அறிவுரைப்படியே தான் நடப்பதாக மகனுக்குப் பதில் எழுதுவார். ஆனால் அவர் எண்ணியவற்றை நிறைவேற்ற முன்பு விட அதிகமாக உழைத்தார். பணத்தையும் சேர்த்தார். தான் சேர்த்த பணத்தில் ஓரளவு வங்கியில் மகனின் பெயரில் போட்டுவிட்டு மீதி பணத்தையும் தனக்குக் கிடைத்த சேமநிதி சந்தா பணத்தையும் கொண்டு மகனின் பெயரில் ஒரு தனியார் வீட்டையும் வாங்கினார். இதைப்பற்றி முன்கூட்டி மகனுக்கு எழுதக் கூடாது. படித்து முடித்துவிட்டு வரும் மகனுக்குப் பரிசாக அவற்றை எல்லாம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்து வந்தார். அதேவேளையில் தன் மகனுக்கு ஏற்ற ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து வந்தார்.

காலச்சக்கரம் வெகு வேகமாக சுழன்றுதான் ஓடிவிட்டது. வெறும் அருளரசனாகச் சென்றவன் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, டாக்டர் அருளரசன் என்ற பட்டத்துடன் திரும்பி வந்தான்.

சூரியனைப் பார்த்த தாமரைப் போன்று மகனைப் பார்த்ததும் அருணாசலத்தின் முகம் மலர்ந்தது.

பால் நிற தலையுடன் நிற்கும் தன் தந்தையைப் பார்த்தவுடன் அருளரசன் ஓடோடி வந்து அப்படியே கட்டித் தழுவிக் கொண்டு கண்ணீர் விட்டான்.

அருணாசலமும் அவனின் உச்சந்தலையில் முத்தம் கொடுத்தார். அவரின் கண்களும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தன.

அருளரசன் அரசாங்க மருத்துவமனையில் வேலையில் அமர்ந்தான். பலரும் பாராட்டும் வண்ணம் தன் பணியைச் சிறப்பாகச் செய்தான். தன் தந்தையிடம் பாசம் உள்ள பிள்ளையாகவும் இருந்து வந்தான். தன் பணியில் பெற்ற முதல் ஊதியத்தைத் தன் தந்தையிடம் கொண்டு வந்து கொடுத்து மகிழ்ந்தான்.

மகனிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட அருணாசலம் பேச முடியாமல் திணறினார். ஆனந்த கண்ணீர் அவரின் தொண்டையை அடைத்துக் கொண்டது.

தன் மகனின் பெயரில் தான் வைத்துள்ள பணத்துடன் அப்பணத்தையும் வங்கியில் போட்டு வைக்குமாறு, அஞ்சலக சேமிப்பு வங்கியின் கணக்குப் புத்தகத்தைப் பிள்ளையிடம் எடுத்துக் கொடுத்தார். அதுமட்டுமா? தன் மகனுக்காக வாங்கி வைத்துள்ள வீட்டின் பத்திரத்தையும் அவனிடம் கொடுத்தார். அவற்றை எல்லாம் பார்த்த அருளரசனுக்கு, தன் எதிரே நிற்பது மனிதரா அல்லது தெய்வமா என்ற ஐயம் ஏற்பட்டது.

நான் எடுக்கின்ற பிறவியில் எல்லாம் இந்த மனித தெய்வமே எனக்கு அப்பாவாக இருக்க வேண்டும் என்று தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டான்.

அவன் அருணாசலத்தின் கால்களில் விழுந்தான். தன் கண்ணீரால் அவரின் பாதங்களைக் கழுவினான். அவரின் பாதங்களைத் தொட்டும் வணங்கினான்.

இது எல்லாம் என்னப்பா! எழுந்திரு. ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத்தான் நான் செய்துள்ளேன். இதற்குபோய் இப்படி செய்கிறாயே!” என்று கூறியவாறே அருணாசலம் கீழே குனிந்து, மகனைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டார்.

மாதங்கள் பல கழிந்தன. தன்னுடைய முக்கியமான கடமையைச் செய்துவிட வேண்டும் என்று அருணாசலம் எண்ணினார். அதைப்பற்றி பேச வேண்டும் என்றும் முடிவு செய்தார்.

ஒருநாள் அருளரசன் ஓய்வில் இருந்தான். அன்று நல்ல நாளாகவும் இருந்தது. அதனால் தன்னுடைய விருப்பத்தை மகனிடம் சொல்லிவிட எண்ணி, தன் மகனின் அறைக்குச் சென்றார்.

அப்பா வருவதைக் கண்ட அருளரசன் எழுந்து நின்றான். “என்னைக் கூப்பிட்டிருந்தால் நான் கீழே வந்திருப்பேனே” என்றான்.

ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி உன்னிடம் பேச வேண்டும். அதுதான் இங்கே வந்தேன்” என்றார்.

அப்படியா? என்று கேட்ட அருளரசன், “நானும் தான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்றிருந்தேன்” என்றான்.

“என்ன அது?” என்று ஆவலுடன் கேட்டார் அருணாசலம்.

முதலில் நீங்கள் கூற வந்ததைக் கூறுங்கள் அப்பா.

வேறு எதைப் பற்றி நான் பேசப் போகிறேன். எனக்கு வயதாகிக் கொண்டு வருகின்றது. இந்த உயிர் உடலை விட்டுப் போவதற்குள் அந்தக் காரியத்தைச் செய்து என் கண் குளிர பார்க்க. வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.

“புதிர் போடாமல் தெளிவாகக் கூறுங்களேன்.”

“இதில் என்ன புதிர் இருக்கிறது? எல்லாம் உன் திருமணத்தைப் பற்றிதான் கூறுகிறேன்.”

“அப்படியா! அதைப் பற்றிதான் நானும் உங்களிடம் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தேன்” என்றான்.

“என்ன பொருத்தம் பார்த்தாயா?” என்றார் அருணாசலம். நான் உனக்கு எல்லா வகையிலும் தகுதியான ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருக்கிறேன்.” அப்பெண்ணை ஒருமுறை நீ பார்த்துவிட்டு சரி என்று சொன்னால் மற்ற காரியங்களை நான் உடனடியாக செய்ய தொடங்கிவிடுவேன்” என்று தொடர்ந்து கூறினார்.

அருளரசன் அமைதியாக இருந்தான்.

“என்ன நான் கூறியது உன் காதில் விழுந்ததா? எதுவுமே சொல்லாமல் இருக்கிறாயே.”

“ஆ! அதைப்பற்றிதான் நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் அப்பா.”

“இதில் யோசிக்க என்ன இருக்கிறது? வந்து பெண்ணைப் பார். என் அப்பா எனக்குப் பொருத்தமான பெண்ணைத் தான் தேர்ந்து எடுத்துள்ளார் என்று கூறுவாய்.”

“அப்பா… வந்து….”

“என்ன வந்து போயீ.”

“நான் இதுநாள் வரையில் உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேசியதில்லை.”

”ஆமாம்! அதற்கு என்ன இப்போ?”

“வந்து….”

“ஏன் இந்த தடுமாற்றம். உன் மனதில் உள்ளதைத் தெளிவாக கூறிவிட வேண்டியதுதானே” என்றார் அருணாசலம்.

“நான் ஒரு பெண்ணை….”

“ஓ! அப்படியா? படிக்கப்போன இடத்தில் எனக்கு மேல்நாட்டு மருமகளைத் தேடிக் கொண்டு வந்துவிட்டாயா? வேண்டியதுதான், மகள் மேல் நாட்டு மருமகனைக் கொண்டு வந்தாள். நீ மேல் நாட்டு மருமகளைக் கொண்டு வர விரும்புகிறாய். சந்தோஷம். மிகமிக சந்தோஷம் என்று வருத்தத்துடன் கூறினார் அருணாசலம்.

“நீங்கள் நினைப்பதுபோல் அப்படி ஒன்றும் இல்லை அப்பா! நான் காதலித்தது மேல்நாட்டுப் பெண் அல்ல. நம் நாட்டுப் பெண்தான். அதுவும் தமிழ்ப் பெண்தான். என்னுடன் சேர்ந்து படித்த பெண். அந்தப் பெண்ணும் டாக்டராக இங்கே தான் வேலை செய்கிறாள்” என்றான் அருளரசன்.

ஒரு பெருமூச்சுவிட்டார் அருணாசலம். அப்படியா! பரவாயில்லை. ஒழுங்காகப் படிக்காத பிள்ளைகளே இன்றைக்குக் காதல் கத்தரிக்காய் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். நாடு விட்டு நாடு போய் படித்த நீ எப்படி இதற்கு விதிவிலக்காக இருக்க முடியும்? ஒரு தமிழ்ப் பெண்ணை அதுவும் நம்நாட்டுப் பெண்ணைக் காதலித்ததைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை படுகிறேன்” என்றார்.

ஒரு நல்ல நாளாக பார்த்து, நீங்கள் அந்தப் பெண்ணைப் போய் பார்க்க வேண்டும் என்றான் அருளரசன்.

“நீதான் பெண்ணைப் பார்த்துவிட்டாயே! இனி நான் பார்க்க என்ன இருக்கிறது?”

“அதாவது, முறையாக சென்று பெண் கேட்டு முடிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.”

“அதற்கு என்ன? அப்படியே செய்துவிடுகிறேன். நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.

பிறகு, அருணாசலம் முறையாக நடக்க வேண்டிய எல்லா காரியங்களையும் முடித்து, மகனுக்குச் சிறப்பான முறையில் திருமணத்தை நடத்தினார், காலையில் கோவிந்தசாமி பிள்ளை கல்யாண மண்டபத்தில் திருமணம். உடன் விருந்து. இரவில் மற்ற இன நண்பர்களுக்காக ஒரு பிரபலமான உண்டுறை விடுதியில் விருந்து என அமர்க்களப்படுத்திவிட்டார்.

மருமகள் தன்னிடம் மிகவும் அன்புடன் இருப்பதைக் கண்டு அருணாசலம், ஒரு படித்த பெண் இவ்வளவு அன்பாக இருக்கிறாளே என்று பூரிப்படைந்தார். மருமகளை மகளாகவே எண்ணி நடத்தி வந்தார்.

மருமகளும் தனக்குக் கிடைத்துள்ள அன்பான மாமனாரைப் பற்றி பெருமையாகத் தன் தோழிகளிடம் கூறி மகிழ்ந்தாள்.

காலம் விரைந்தோடியது.

அருணாசலம் கொஞ்சி விளையாட தனக்கு ஒரு பேரன் வேண்டும் என்று எண்ணிய எண்ணம் ஈடேரும் வகையில் மருமகள் ஒரு பையனைப் பெற்று எடுத்தாள்.

அப்பையன் அப்படியே தன் தாத்தாவை அச்சில் வார்த்து எடுத்தவன் போலவே இருந்தான். அதைக்கண்டு அருணாசலம் பேரானந்தம் அடைந்தார்.

அருளரசனும் அப்படித்தான்.

அருளரசனும் அவன் மனைவியும் டாக்டர்களாக பணியாற்றியதால், பிள்ளையைப் பார்த்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணை வைத்துக் கொண்டார்கள். அந்தப் பெண்ணுடன் அருணாசலமும் சேர்ந்து பேரனைப் பார்த்துக் கொண்டார்.

தன் பேரன் மீது அளவற்ற பாசத்தைச் செலுத்தினார். அவனைத் தன் தோலிலும் மார்பிலும் போட்டு வளர்த்தார். அவனும் தாத்தா. தாத்தா என்று அவரிடம் ஒட்டிக் கொள்வான். இவற்றைப் பார்த்து அருளரசன் மகிழ்ச்சி அடைந்தான். அவன் மனைவியும்தான்.

ஒருநாள் தன் பேரனுக்கு அதிக காய்ச்சல் இருப்பதை அறிந்தார். அந்த வேளையில் அவரின் மகனும் மருமகளும் வீட்டில் இல்லை. வேலைக்காரப் பெண்ணும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள். நேரம் ஆக ஆக பிள்ளைக்கு உடல் குளிர்ந்து கொண்டே வந்தது. பிள்ளை சுய உணர்வின்றி கிடந்தான். அருணாசலம் பதறிபோய் தன் மகனுக்குக் தெரிவித்தார். அதைக்கேட்டு அருளரசனும் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தான். அவன் மனைவியும் வந்து சேர்ந்தாள். ஆனால் அதற்குள் பிள்ளையின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.

உடனே மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றார்கள்.

அருணாசலம் “என் பேரனைத் தன்னிடமிருந்து பிரித்து விடாதே இறைவா! என் உயிரை எடுத்துக் கொண்டு அவனுயிரை விட்டுவிடு” என்று எல்லாம் வல்ல இறைவனிடம் மண்டியிட்டு வேண்டினார்.

நீ என்னடா! என்னால் படைக்கப்பட்ட ஒரு மனிதன். உனக்கு எல்லாம் நான் செவிசாய்த்துக் கொண்டு இருந்தால், என்னுடைய வல்லமையை எப்படிக் காட்டுவது என்று எண்ணிவிட்டான் இறைவன்.

நேற்று கொஞ்சி விளையாடிய குழந்தை இன்று மண்ணுக்குள் மறைந்துவிட்டது.

அருணாசலம் பைத்தியம் பிடித்தவர்போல் ஆகிவிட்டார்.

அருளரசனும் அயர்ந்துவிட்டான். ஆனால் அவனின் மனைவிக்கு ஆவேசம் வந்துவிட்டது. காரணம், பிள்ளை இறந்ததற்கு பெரியவர்தான் பொறுப்பு என்று கூறிவிட்டாள்.

அருணாசலம் என்ன தன் பேரனின் கழுத்தை நெறித்தா கொன்றார்? இல்லையே. தன் பேரனின் மீது வைத்திருந்த பாசத்தின் காரணமாக அடிக்கடி அருகிலுள்ள பூங்காவுக்கு அழைத்துச் செல்வார். அவன் கேட்பவற்றை வாங்கிக் கொடுப்பார்.

அவர் தூய்மையற்ற கண்ட கண்ட பொருள்களை வாங்கிக் கொடுத்ததால்தான், தன் பிள்ளை இறந்துவிட்டான் என்ற முடிவுக்கு அருளரசனின் மனைவி வந்துவிட்டாள். தன் பிள்ளையைக் கொன்ற எமனை இனி வீட்டில் வைத்திருக்கக் கூடாது. அந்த எமனை வீட்டினின்று விரட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் அவளின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. எனவே அவளின் போக்கு மாறத் தொடங்கியது.

அருணாசலத்தின் முகத்தில் இனி விழிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தாள். அவரை வீட்டை விட்டு வெளியில் அனுப்ப வேண்டும் என்று தன் கணவனிடம் கூறினாள்.

அதைக்கேட்ட அருளரசன், “இது என்ன பைத்தியக்காரத்தனமாகப் பேசுகிறாய்?” உலக அனுபவம் பெற்ற ஒரு டாக்டர் பேசும் பேச்சா இது?

நாம் மருத்துவமனையில் தினந்தோறும் எத்தனை வகையான நோயாளிகளைப் பார்க்கிறோம். எத்தனை உயிர்கள் போவதைக் காண்கிறோம். அவர்கள் எல்லோரும் அவர்களின் உறவினர்கள் கொடுத்த உணவில் அல்லது அவர்கள் பார்த்துக் கொண்ட முறையில் ஏற்பட்ட தவற்றால் இறக்கிறார்கள்? அப்படியே தவறு ஏற்பட்டாலும் டாக்டர்களாகிய நம்மால் காப்பாற்ற முடியாத உயிர்கள் எத்தனை, சிறிது நேரம் சிந்தித்துப் பார். நம்முடைய பிள்ளையின் மரணத்துக்கும் என் தந்தைக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்க முடியாது” என்று கூறினான்.

நீங்கள் என்ன சமாதானம் கூறினாலும் சரி, இனிமேல் உங்கள் அப்பா இந்த வீட்டில் இருக்கக் கூடாது. என்றாள்.

இது என் அப்பா வாங்கிய வீடு. இங்கே அவரைத் தங்க வேண்டாம் என்றால் எப்படி?

”அப்படி என்றால் அவர் இங்கே இருக்கட்டும். நான் வெளியில் சென்று விடுகிறேன்” என்று ஆத்திரத்துடன் கூறினாள்.

“ஒரு படித்த பண்புள்ள பெண்ணாக நீ பேசவில்லை. உனக்கு இங்கு இருக்க பிரியம் இல்லை என்றால், நீ தாராளமாகப் போகலாம் என்றான்” அருளரசன்.

தன் மகனும் மருமகளும் பேசிக் கொண்டவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அருணாசலம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

தன் மகனும் மருமகளும் இன்னும் ஆயிரங் காலத்துக்கு வாழ வேண்டும். அவர்கள் என் குடும்பப் பெயரைச் சொல்ல பிள்ளைகளைப் பெற வேண்டும்.அவர்கள் இருவரும் தனித்தனியாகப் போய்விட்டால் எப்படி?

இனி நாம் ஏன் அவர்களுக்கிடையில் நந்தியாக குறுக்கே நிற்க வேண்டும். உடலில் உயிர் இருக்கின்ற வரையில் அவர்களுக்குப் பாரமாக இல்லாமல் எங்காவது இருந்துவிட்டுப் போவோம் என்று எண்ணி ஓர் எல்லைக்கோட்டைப் போட்டுக் கொண்டார்.

அப்போது புறப்பட்டு வந்தவர், இந்த முதியோர் இல்லத்தில் தஞ்சம் புகுந்துவிட்டார்.

அருணாசலம் இங்கிருப்பது அருளரசனுக்குத் தெரியும். தான் நல்ல நிலையில் இருந்தும் தன்னுடைய தந்தையைத் தன்னுடன் வைத்து கொள்ள முடியாத நிலையில் தான் இருப்பதை எண்ணி வெட்கப்பட்டுக் கொண்டு அவரைப்போய் பார்ப்பதில்லை என்று தனக்குள் ஓர் எல்லைக்கோட்டை வரைந்து கொண்டான். அத்துடன் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் எக்காரணத்தைக் கொண்டும் அருணாசலத்தைப் போய் பார்க்கக் கூடாது என்ற அவனின் மனைவி வரைந்துள்ள எல்லைக்கோட்டையும் மீற முடியாமல் இருந்தான்.

எல்லாம் பெண்ணுக்குள் அடக்கம் என்பார்களே! அது அருளரசனைப் பொறுத்த வரையில் சரியாகத்தானே உள்ளது?

சாப்பாட்டு நேரம் வந்தது. அருணாசலத்தின் பயணப் படமும் நின்றது.

– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

இரா.துரைமாணிக்கம் இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *