உதிரிப் பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2026
பார்வையிட்டோர்: 65 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மாணவர்களே! இன்று யார் பள்ளிக்கு வரவில்லை?” என்று ஆசிரியர் கேட்டார்.

வகுப்பின் சட்டம் பிள்ளை சேகர், “அமுதா மட்டும் தான் வரவில்லை ஐயா” என்றான்.

“அமுதா இன்றும் வரவில்லையா? அமுதா இன்றுடன் நான்கு நாட்களாகத் தொடர்ந்து வரவில்லையே! யாருக்காவது காரணம் தெரியுமா?” என்றார் ஆசிரியர்.

ஒருவரும் தனக்குக் காரணம் தெரியும் என்று சொல்லவில்லை.

“அமுதாவின் அண்ணன், கண்ணன் ஆறாம் வகுப்பில் இருக்கிறான். மணி நீ போய் அவனை அழைத்துவா.”

மணி கண்ணனை அழைக்க வகுப்பை விட்டு வெளியே போனான்.

ஆசிரியர் பிள்ளைகளின் வருகை குறிப்பேட்டை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அமுதா வாரத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாவது பள்ளிக்கு வராமல் இருந்தது இல்லை. ஏன் இந்தப் பெண் இப்படி அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடுகின்றது? உடற்கோளாறா இருக்குமோ? அமுதாவைப் பார்த்தால் உடல்கோளாறு உள்ள பிள்ளையாக தெரியவில்லையே” என்று சிந்தித்துக் கொண்டு இருந்தார்.

மணி கண்ணனுடன் வந்து கதவைத் தட்டினான். ஆசிரியர் அவர்களை உள்ளே வருமாறு அழைத்தார். கண்ணனைப் பார்த்து ஆசிரியர், “உன் தங்கை அமுதா ஏன் நான்கு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை?” என்று கேட்டார்.

அதற்கு, கண்ணன் தனக்குத் தெரியாது என்றான். அதைக் கேட்ட ஆசிரியர் அயர்ந்து போய்விட்டார்.

“நீ என்ன சொல்லுகிறாய்! உனக்குத் தெரியாதா?” என்று மீண்டும் வினவினார்.

“ஆமாம். ஐயா! எனக்கு உண்மையிலேயே தெரியாது” என்றான் கண்ணன்.

அப்படி என்றால்….?

நானும் என் தங்கையும் ஒன்றாக…

கண்ணன் அதற்கு மேல் சொல்ல தயங்கி நின்றான். அவன் வகுப்பறையையும் ஆசிரியரையும் மாறிமாறி பார்த்தான்.

அவன் அதற்கு மேல் அந்த இடத்தில் எதையும் சொல்ல விரும்பவில்லை என்பதை ஆசிரியர் புரிந்து கொண்டார்.

“கண்ணன், நீ வெளியில் போய் நில். நான் இதோ வருகிறேன்” என்றார் ஆசிரியர்.

கண்ணன் வெளியில் போனான்.

ஆசிரியர் பிள்ளைகளைக் கணக்குப் புத்தகத்தை எடுக்குமாறு கூறினார். பிறகு சில பக்கங்களைக் குறிப்பிட்டு, அவற்றை அமைதியாக இருந்து செய்யுமாறு சொன்னார். பிறகு அவர் வகுப்பறையை விட்டு வெளியே சென்றார். அங்கே கண்ணன் நின்று கொண்டிருந்தான். அவனை அழைத்துக் கொண்டு, ஆசிரியர்களின் ஓய்வறைக்குச் சென்றார்.

கண்ணனிடம் அமுதா வராததற்கானக் காரணத்தைக் கேட்டார்.

ஐயா…

பயப்படாதே கண்ணன், தைரியமாகச் சொல். நானும் என் தங்கையும் ஒரே வீட்டில் இல்லை. அப்படியா?

ஆமாம்.

ஏன்?

நான் என் அம்மாவுடன் இருக்கிறேன்.

உன் தங்கை?

அவள் அப்பாவோடு இருக்கிறாள்.

கண்ணனும் அவன் தங்கையும் ஒன்றாக இல்லை என்பதை புரிந்து கொண்ட ஆசிரியர், அதன் பிறகு கண்ணனிடம் எதுவும் கேட்காமல், அவனை அவனுடைய வகுப்பிற்கு அனுப்பிவிட்டார். பள்ளி முடிந்து, கண்ணன் வீட்டிற்குச் செல்லும்போது, அவனின் தாயாரைப் பள்ளிக்கு வருமாறு அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்.

ஆசிரியர் சமூகச் சேவை செய்பவர். தன்னால் அந்தப் பெண்ணுக்கு உதவ முடியுமா? என்றுதான் பார்ப்போமே என்று எண்ணிய அவர், “அப்படி என்றால் மத்தியானமாக வாங்க” என்றார்.

கண்ணனின் தாயார், “எனக்கு இன்று வேலை இல்லை. இங்கேயே இருக்கிறேன்” என்றார். சொன்னபடியே பள்ளியிலேயே இருந்த அவர் பள்ளி முடிந்து பிள்ளைகள் வீட்டுக்குச் சென்ற பிறகு, ஆசிரியரைப் பார்க்கச் சென்றார். கண்ணனின் தாயார்.

“உட்காருங்க” என்றார் ஆசிரியர்.

ஆசிரியர் சொன்னபடி கண்ணனின் அம்மா உட்கார்ந்து கொண்டார்.

இப்போது நீங்க சொல்ல வேண்டியதைச் சொல்லலாம் என்றார். சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தார்.

“தாயை இழந்த நான் தனியாக இருந்தேன். தந்தை இருந்தார். ஆனால் அவரால் எப்போதும் என் கூடவே இருக்க முடியுமா?

நான் தனியாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பாலு என்னுடன் பேச்சுக் கொடுத்தார்.

கண்களாலேயே காதல் மொழிகள் பேச முடியும் என்றால் வாயால் பேசவா முடியாது? ஆனால் என்ன பேசினோம். எவ்வாறு பேசினோம் என்றே எனக்குத் தெரியவில்லை.

இளமையின் துடிப்பு. எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்ற அறியாமை. இவற்றால் என் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை இரண்டு மூன்று மாதங்களில் நன்றாக அறிந்து கொண்டேன்.

காலையில் சென்று மாலையில் திரும்பும் தன் தந்தையால் என்னிடமுள்ள மாற்றத்தை அறிய முடியவில்லை.

மண்ணில் போட்ட விதை முளைக்கத்தானே செய்யும்! என் வயிற்றின் வளர்ச்சியை மறைக்க முடியும்?

உண்மையை அறிந்த அப்பா உயிரை விடப்போவதாகக் கூறினார். ‘உயிரைவிட வேண்டியவளே விடாமல் இருக்கும்போது, நீ ஏன் சாகப்போகிறேன் என்கிறாய்? என்று அவரின் நண்பர்கள் சொல்ல, அவர் எடுத்த காரியத்தை முடிக்கவில்லை.

கைவிட்டுவிடவில்லை.

பாலு என்னைக் அவரின் பெற்றோர்களின் அனுமதியோடு என்னைத் திருமணப் பதிவகத்தில் மனைவியாக்கிக் கொண்டார்.

இவளை எப்படியாவது தொலைத்துத் தலை மூழ்கிவிட்டால் போதும் என்று இருந்த என் அப்பாவும் எந்த மறுப்பும் கூறாமல் அனுப்பி வைத்துவிட்டார்.

அதன் பிறகு அப்பா மகள் உறவு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.

மணமாகி பத்து மாதங்களுக்குப் பிறகுதான் பிள்ளை பெறுவது மரபு. ஆனால் நான் ஏழு திங்களிலேயே மகன் கண்ணனைப் பெற்று எடுத்தேன்.

பிள்ளையைப் பார்த்து பேரானந்தமடைந்தோம். ஆனால் பேரனைப் பார்க்க என் தந்தை மட்டும் வரவே இல்லை.

எங்களின் வாழ்க்கை நல்லமுறையில் சென்று கொண்டிருந்தது.

என் மீதும் என் பிள்ளை மீதும் என் கணவர் அதிகமாக அன்பு காட்டினார். அதேபோல் என் மாமனாரும் மாமியாரும் அதிக அன்பு காட்டினார்கள்.

ஒரு நாள் என் கணவரிடம், “உங்கள் அம்மாதான் வீட்டிலேயே இருக்கிறாங்க. அவங்களைப் பிள்ளையைப் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு, நான் வேலைக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்” என்றேன்.

“நீ ஒன்றும் வேலைக்குப் போக வேண்டாம். வீட்டிலேயே இருந்து பிள்ளையை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டாள் போதும்” என்று கூறிவிட்டார். அந்த அளவுக்கு அவர் எங்கள் மீது பிரியமாக இருந்தார்.

என் தோழி ஒருத்தி ஒரு நாள், எனக்குப் போன் செய்தாள். அவள், “என் கணவரை வேறு ஒரு பெண்ணுடன் பார்த்ததாகச் சொன்னாள்.

அதைக்கேட்ட நான், அவளின் பேச்சை நம்புவதா இல்லை நாம்பாமல் இருப்பதா? என்று குழம்பினேன். அந்தச் செய்தி என் மனதைப் போட்டு அலைக்கழித்தது. தோழியின் பேச்சை நம்பி அவரின் மீது சந்தேகப்படுவதா அல்லது அப்படி இருக்காது என்று இருந்துவிடுவதா?” எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்தேன்.

அப்படியே அது உண்மைகாக இருந்தால், அந்த உண்மையை எப்படி அறிவது? குழப்பம்.

அந்தச் செய்தியைக் கேட்ட பிறகு, அதைக்காட்டிக் கொள்ளாமலேயே என் கணவரைக் கவனிக்கத் தொடங்கினேன். அவரின் நடை உடை பாவனைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகின்றதா என்று அறிய முற்பட்டேன். முதலில் எதுவும் தெரியவில்லை.

ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக நேரம் சென்று வீட்டிற்கு வந்தார்.

நான் எதுவும் கேட்காமல், எப்போதும் போல் நடந்து கொண்டேன்.

இன்னைக்கு அலுவலகத்தில் அதிகமான வேலை இருந்ததுச்சு. அதனால்தான் நேரமாகிவிட்டது என்று அவரே சொன்னார்.

“அப்படியா! அதனால் என்ன?” நான் உங்களிடம் எதுவும் கேட்கவில்லையே” என்றேன். தொடர்ந்து வாரத்தில் ஒரு முறை நேரங்கழித்து வரத் தொடங்கினார். அதிக வேலை, நண்பர் வீட்டுக்குப் போனேன். நூல் நிலையத்திற்குச் சென்றேன் என்று ஏதாவது காரணம் கூறுவார்.

நானும் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் இருந்து வந்தேன்.

வாரத்தில் ஒரு முறை தாமதமாக வந்தது போய். இரண்டு மூன்று நாட்கள் தாமதமாக வரத் தொடங்கினார். ஆனால், அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள எனக்கு மனத்தைரியமில்லை.

என் தோழி மட்டும் அடிக்கடி, “உன் கணவர் உன் திசையை விட்டுவிட்டு. வேறு திசையை நோக்கி போகிறார். நீ கவனமாக இருக்க வேண்டும்” என்று நினைவுபடுத்திக் கொண்டே இருந்தாள்.

அன்று வெள்ளிக்கிழமை. நோன்புப் பெருநாள். எல்லோருக்கும் பொது விடுமுறை. அவரும் வீட்டில் இருந்தார்.

“நான் உன்னுடன் கோயிலுக்கு வந்து ரொம்ப நாளாகிவிட்டன. இன்னைக்கு நாம் முருகன் கோயிலுக்குப் போவோம்” என்றார். உண்மைதான். அவரோடு சேர்ந்து கோயிலுக்குப்போய் எவ்வளவு நாளாய்விட்டன. நான் கூப்பிடும்போது எனக்கு நேரமில்லை. நீயே போயிட்டு வா என்று சொல்பவர். இன்று தானே என்னைக் கூப்பிடுகிறாறே என்று மகிழ்ச்சி அடைந்தேன். மாலை மணி ஆறுக்கு முருகன் கோயிலுக்குச் சென்றோம்.

வள்ளி தெய்வானையுடன், ‘யாம் இருக்க பயமேன்’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்த அந்த அருள் கடவுள் முருகனை வணங்குவதில் ஏற்படுகின்ற ஆனந்தமே தனிதான்.

இறை வழிபாட்டுக்குப் பிறகு வீடு வந்தடைந்தோம்.

யாரையோ பார்க்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்த மாமன் – மாமியார் வெளியில் போய்விட்டார்கள். எங்களைத் தவிர வீட்டில் யாரும் இல்லை.

”குழந்தையைத் தொட்டிலில் போட்டுட்டு வா.”

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிள்ளையைத் தொட்டிலில் போட்டுவிட்டு, அவரிடம் வந்தேன்.

“இப்படி வந்து என் பக்கத்தில் உட்காரு.”

”உன்னிடம் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேணும்.”

“என்னிடம் சொல்ல என்ன தயக்கம்? என்ன விஷயம்? தாராளமாகச் சொல்லுங்க. உங்க பேச்சைக் கேட்டு நடப்பதுதானே என்னுடைய கடமை.”

“வந்து, அதை எப்படி ஆரம்பிப்பது என்றுதான் புரியவில்லை!”

நான் மௌனமாக இருந்தேன்.

ஆமாம்! நாம் கோயிலுக்குப் போனோம் இல்லையா? போனோம். “அங்கே வீற்றிருந்த அருள் கடவுள் முருகவேலை வணங்கினோமே” என்றேன்.

“நீ முருகனை மட்டுமா வணங்கினாய்?” என்றார். “இல்லையே அவன் அண்ணன் விநாயகரையும் வணங்கினோமே” என்றேன்.

”நவக்கிரகங்களையும்தான் வணங்கினோம். நான் அதை கேட்கலே.”

“பிறகு எதைக் கேட்கறீங்க” என்றேன்.

“முருகனுடன் சேர்ந்து யார் யாரை வணங்கினாய்” என்று கேட்டார்.

அப்போதுதான் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குப் புரியத் தொடங்கியது.

“நான் கேட்டது உனக்குப் புரிந்ததா?” புரியிது என்றேன்.

என்ன புரியிது?

முருகனுடன் அவரின் இரண்டு பக்கங்களிலும் வீற்றிருக்கும் வள்ளி, தெய்வானையையும் கும்பிட்டோம்” என்றேன்.

“உண்மைதான்! உனக்குப் புரிந்துவிட்டது” என்றார். நீ, திருமுருகாற்றுப்படை நூலைப் படித்திருக்கமாட்டாய். ஆனால் திருமுருகனைப் பற்றிய திரைப்படங்கள் பார்த்திருக்கிறாய் அல்லவா?” என்றார்.

“ஆமாம்! படம் பார்த்திருக்கிறேன்.”

“அந்தப் படங்களில் வள்ளி, தெய்வானைக்கிடையே எப்போதாவது சண்டை வம்பு வந்திருப்பதாகக் காட்டி இருக்கிறார்களா?” என்று கேட்டார்.

“இல்லை.”

“நாம் வணங்கும் தெய்வங்களே இரண்டு மனைவிமார்களைக் கொண்டுள்ளன. மதுரை வீரன் போன்ற மன்னர்கள் கூட இரண்டு பெண்களை மணந்துள்ளார்கள்” என்றார்.

நான் எதுவும் கூறவில்லை.

“பேசாமல் இருந்தால் எப்படி?”

“என்ன பேசச் சொல்றீங்க? நீங்க கதை சொல்லுறீங்க; நான் கேட்டுக்கிட்டு இருக்கிறேன்” என்றேன்.

“ஆமாம்! நான் கதைதான் சொல்றேன். அந்தக் கதையும் சில சமயங்களில் உண்மையாக நடந்துவிடுவதும் உண்டுதானே?”

“மனித வாழ்க்கையில் நடந்ததை நடப்பதைத்தானே கதையாக எழுதுகிறார்கள்” என்றேன்.

“நீ சொல்வதும் சரிதான். உண்மை வாழ்க்கை தான் கதையாக. திரைப்படமாக வருகின்றன” என்றார்.

“குழந்தை எழுந்துவிடப் போறான். சொல்ல வந்ததைச் சொல்லுங்க” என்றேன்.

“உனக்கு ஒரு தங்கை வரப் போறாள்” என்றார்.

நான் எதிர்பார்த்ததுதானே. எனக்கு அதிர்ச்சி உண்டாகவில்லை. ஆனால் அவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாத அவர், எழுந்து நின்று கொண்டு, “நான் எப்படி உன்னை நேசித்தேனோ. அப்படியேதான் அவளையும் விரும்பிவிட்டேன்” என்றார்.

என் கண்களில் நீர் ஊற்று கிளம்பியது. நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? என்னிடம் இல்லாத எதை அவளிடம் கண்டீர்கள்?” என்றேன்.

”உன்னுடைய கேள்விக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.

அவளை இங்குக் கூட்டிக் கொண்டு வர்றேன். உனக்கு இஷ்டம் என்றால் சேர்ந்து வாழு. அப்படி அவளுடன் சேர்ந்து வாழ உனக்குப் பிரியமில்லை என்றால், நான் மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்பட கதாநாயகன் மாதிரி வாழ வேண்டியதுதான்” என்றார்.

”திருமணத்துக்கு முன்பு நீ எப்படி இருந்தாயோ, அதே நிலையில் தான் அவளும் இருக்கிறாள். உன் முடிவை விரைவில் சொல்லிடு” என்று கூறிவிட்டு, விருட்டு என்று வெளியில் சென்றுவிட்டார்.

ஓடிப்போய் படுக்கையில் விழுந்து அழுதேன்.

தொட்டியில் கிடந்த கண்ணன் விழித்துக் கொண்டு அழுதான். அவனைப்போய் தூக்காமல் படுக்கையிலேயே கிடந்தேன்.

வெளியில் போய் இருந்த மாமனாரும் மாமியாரும் திரும்பி விட்டார்கள்.

“என்ன பிள்ளை அழுது கொண்டு கிடக்கிறான். நீ பேசாமல் படுத்திருக்கிறே?” என்று கேட்டார் மாமியார்.

அவர்களைப் பார்த்ததும் எனக்கு அழுகை அதிகமாக வந்தது.

“என்னம்மா?” உனக்கு என்ன? ஏன் அழுறே?” என்று கேட்டார்கள்.

என்னால் ஒன்றுமே கூற முடியவில்லை. தேம்பி தேம்பி அழுதேன்.

“இது என்னம்மா சின்ன பிள்ளை மாதிரி அழுறே?” என்ன நடந்தது? எங்கே உன் புருஷன்?” என்று கேட்டார் மாமனார்.

“நல்லாத்தானே கோயிலுக்குப் போனீங்க, உடம்புக்கு முடியலியா?” என்று கேட்டுக் கொண்டே என் மாமியார் என் தலையில் கையை வைத்துப் பார்த்தார்.

”உடம்பு நெருப்பாக காய்கிறதே. இப்படித் தனியே விட்டுட்டு அவன் எங்கே போனான். வெளியில் ‘டாக்சி’ பிடிக்கப் போயிருக்கிறனா?” என்று போய் பாருங்க” என்றார்.

அப்போதுதான் என் நெற்றி ‘விண்விண்’ என்று தெறிப்பதையும், உடம்பு நெருப்பாகச் சுடுவதையும் உணர முடிந்தது.

“அவனைக் காணும், இப்போ என்ன? மருத்துவமனைக்கு அழைச்சுகிட்டுப் போக வேணும் என்றா சொல்றே?” என்று மாமனார் கேட்டார்.

”உடம்பு ரொம்ப சூடாத்தான் இருக்குது. முதல்லே ரெண்டு ‘பென்னாடல்’ மாத்திரைகளைக் கொடுப்போம். ஐஸ் தண்ணீ போட்டு துடைப்போம். அப்படியும் காய்ச்சல் நிக்காட்டி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவோம்” என்று மாமியார் சொல்லிவிட்டு, ரெண்டு மாத்திரைகளைக் கையில் கொடுத்தார்கள். அவற்றை வாயில் போட்டு, தண்ணீர் ஊற்றி முழுங்கினேன்.

‘பிரிஜ்சை’ திறந்து, ரெண்டு பாட்டில் குளிர்ந்த தண்ணீரை எடுத்து ஒரு பேசினில் ஊற்றினார்கள். அதில் ஒரு சின்ன டவுலைப் போட்டு, லேசாக பிழிந்து எடுத்து, நெற்றியைத் துடைத்தார்கள். கொஞ்ச நேரத்தில் நான் தூங்கிவிட்டேன். காலையில் கண் விழித்துப் பார்த்தபோது அவர் என் அருகில் படுத்திருந்தார்.

எழுந்து, எப்போதும் போல செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். அவர் எழுந்தார். அவருக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. நானும் இயந்திரம் போல வேலை செய்து கொண்டிருந்தேன்.

மாமனார் எழுந்து வேலைக்குப் புறப்பட்டார். மாமியாரும் எழுந்துவிட்டார்கள்.

“உனக்குத் தான் உடம்புக்கு முடியலேயே! பிறகு ஏன் காலையிலேயே எழுந்து நிக்கிறே?” எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். நீ போய் பேசாமல் உட்காரு.”

மாமியாரின் அன்பான பேச்சைக் கேட்டதும் என் உள்ளம் உருகியது. இப்படிப்பட்ட மாமியாருக்காவது, நான் சக்காளத்தியுடன் வாழத்தான் வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

உண்மையை மாமனாரும் மாமியாரும் தெரிந்து கொண்டார்கள். அவரிடம் என்னென்னமோ சொன்னார்கள். அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆயிற்று.

இப்படிப்பட்ட பிள்ளையுடன் வாழ்வதைவிட எங்கேயாவது போய் பிச்சை எடுத்தாவது பிழைக்கலாம் என்றார் மாமனார்.

“சட்டப்படி நீ நடந்து கொண்டால், அவரைக் கம்பி எண்ண வைத்துவிடலாம்” என்றாள் தோழி. சட்டம் இருக்குதான். “சட்டம் ஓர் இருட்டறை” என்றார் பேரறிஞர் அண்ணா. அது உண்மைதான். திருமணத்துக்கு முன்பு கற்பமுற்றிருந்த என்னை அவர் விட்டுவிட்டுப் போயிருந்தால், இந்த சட்டத்தால் என்ன செய்திருக்க முடியும்?” என்று எண்ணினேன். அன்று நான் இருந்த நிலையில் இருக்கும் ஒருத்திக்கு நான் வாழ்வளிக்கக் கூடாதா? என்றும் நினைத்தேன். சட்டத்தையும் சமூகத்தையும் ஒதுக்கித் தள்ளினேன். அந்தப் பெண்ணை நானே போய் அழைத்து வந்தேன்.

அதைக்கண்டு மாமன் மாமி இருவரும் என் மீது ஆத்திரமடைந்தார்கள்.

“நீயும் அவனுக்குத் துணையா இருக்கிறாயே, அவன் செய்றதக்கு ஒத்துப்போனா. உன் கதி என்ன ஆகுதுன்னு பிறகு தான் தெரியும்” என்றார் மாமனார்.

வாயும் வயிறுமாக வந்தவளுக்கு வேண்டிய பணிவிடைகளை எல்லாம் செய்து வந்தேன். அவள் என்னைப் பற்றி எப்படி எண்ணியிருந்தாளோ எனக்குத் தெரியாது. உரிய காலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அமுதாவைப் பெற்றுக் கொண்டு வந்தாள்.

அமுதாவுக்கு அப்பன் என் கணவர்தான் என்று பிள்ளை பிறப்பு சான்றிதழும் வாங்கி வந்தார்கள். அதை எப்படிப் செய்தார்கள் என்று எனக்கு இது நாள் வரையில் தெரியாது. அதைப் பற்றி நான் அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.

என்னிடம் காட்டிய அன்பை என் மாமன் மாமியால் என் சக்காளத்தியிடம் காட்ட முடியவில்லை. அவளாலும் அவர்களுடன் ஒத்துப்போக முடியவில்லை. அதனால் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மாமனாரும் மாமியும் தனியே போய்விட்டார்கள். என் வீட்டுக்காரரும் அவர்களைப் போக வேண்டாம் என்று தடுக்கவில்லை. அப்படி அவர் தடுத்திருந்தாலும் அது என் சக்காளத்திக்குப் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும்.

ஒரு நாள், “அவர் என்னைப் பார்த்து, வீட்டில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாகிட்டு. நான் ஒருவன் மட்டும் சம்பாதிப்பது குடும்பம் நடத்தப் போதவில்லை. கண்ணனும் பெரியவனாகிவிட்டான். அமுதா கைக்குழந்தை. அதனால் அமுதாவையும் கண்ணனையும் சின்னவள் பார்த்துக் கொள்ளட்டும். நீ தான் முன்பே வேலைக்குப் போவதாகச் சொன்னாயே. நான் தான் வேண்டாம் என்றேன். நீ இப்போது தாராளமாக வேலைக்குப் போகலாம்” என்றார்.

அவர் சொல்வதும் உண்மைதான். அவரின் வருவாய் குடும்பத்திற்குப் பற்றாக்குறை தான். நானே கேட்கலாம் என்று எண்ணிக் கொண்டிந்தபோது, அவரே என்னை வேலைக்குப் போ என்றவுடன், எந்த மறுப்பும் கூறாமல் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குப் போனேன். என்னுடைய வருமானம் ஓரளவுக்கு குடும்பச் செலவுக்கு உதவியது.

காலச் சக்கரம். உருண்டோடியது. ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அக்கா தங்கையாகவே வாழ்ந்து வந்தோம். பிறகு, ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப்பிடாரியை விரட்டியதாம் என்று சொல்வார்களே அந்தக் கதையாக மாறத் தொடங்கியது. அக்கா – தங்கை உறவு மாறி, சக்காளத்தி உறவு ஏற்பட ஆரம்பித்தது.

உழைப்பின் சோர்வால் ஓரிரு முறை என்னிடம் வந்தவரை வரவேற்காமல் விட்டதால், அவர் விரைவிலேயே இன்னொரு குழந்தையையும் பெற்றுவிட்டாள்.

மூத்தவள் என்ற மரியாதைகூட இல்லாமல் அவள் பேசவும் நடக்கவும் தொடங்கினாள். என்னைப் பற்றி அவரிடம் இல்லாததும் பொல்லாததும் கூறினாள். அவரும் அவளின் பேச்சை மட்டும் கேட்டுக் கொண்டு, என்னை பேசவும் அடிக்கவும் தொடங்கினார். தான் நினைத்த போது எல்லாம். நினைத்தது கிடைத்ததாலோ என்னமோ, அவருக்கு அவளின் மேல் அன்பு அதிகமாகிவிட்டது என்பது எனக்குப் புரிந்தது. அப்போது தான் நான், எனக்கு இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்” என்று எண்ணினேன்.

நாள் முழுதும் உழைத்துவிட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டில் நிம்மதி இல்லை. இப்படியே இருந்துவந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். அதனால் நீ தனியாக இருந்து கொள்ளலாம் என்று கூறினார்.

அதைக்கேட்ட என்னால் எதுவுமே பேச முடியவில்லை.

ஒரு கணம், “நமக்கு என்ன வயதாகிவிட்டது? இவருக்கு ஒருத்தி கிடைத்தது போல, எனக்கு ஒருவன் கிடைக்காமலா போய்விடுவான்?” என்று எண்ணினேன். மறுகணம், என் மனதில் இந்த எண்ணம் ஏன் ஏற்பட்டது? ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த கண்ணகி பரம்பரை அல்லவா என்னுடைய பரம்பரை? ஆணுக்கொரு நீதி. பெண்ணுக்கொரு நீதி கொண்டதுதானே இச்சமூகம். அந்தச் சமூக நீதியை நான் எப்படி மீறி நடக்க முடியும் என்று எண்ணினேன்.

அவரால் இனிமேல் எனக்கு எந்தப் பாக்கியமும் கிடைக்கப் போவது இல்லை என்பது புரிந்தது. ஆனால் ஒரேயொரு பாக்கியம் மட்டும் அவர் உயிரோடு இருக்கும் வரையில் நிலைத்து நிற்கும். அதுதான் ‘சுமங்கலி’ என்ற பாக்கியம். அந்தப் பாக்கியத்தைத் தந்த அவர் எங்கிருந்தாலும் நல்லபடியாக இருக்கட்டும் என்று வாழ்த்திவிட்டு வந்து கண்ணனுடன் தனியாக வாழ்ந்து வருகிறேன்.

அவர் ஒரு தெரு நாயாக மாறுவார் என்று நான் எண்ணவே இல்லை. அவரால் ராமானாகத்தான் வாழ முடியவில்லை. முருகனைப் போலாவது வாழக் கூடாதா?

இன்று விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துவிட்டது அல்லவா? அதனால் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்கிறோம். “வண்டே மலரைத் தேடும்போது, மலர் வண்டைத் தேடினால் என்ன?” என்று வாதம் செய்யும் காலம் அல்லவா? அவள் அவரை விட்டு வேறு ஒருவனுடன் போய்விட்டாள். ஆடு தேவைபடுபவனுக்குக் குட்டிகள் எதற்கு? எனவே குட்டிகளை விட்டுவிட்டு ஆட்டை மட்டும் கொண்டு போய்விட்டான்.

என் கணவர் குட்டிப்போட்ட ஆட்டை விட்டுவிட்டு, இப்போது குட்டிப்போடா ஒரு புதிய ஆட்டைக் கொண்டு வந்துள்ளார். வந்துள்ள ஆட்டுக்கு இருக்கின்ற குட்டிகளுக்குப் பால் கொடுக்க முடியவில்லை. விளைவு, அக்குட்டிகள் தவிக்கின்றன.

”புரிகிறதா சார் உங்களுக்கு?”

“ஆசிரியராகிய என்னையே கொஞ்ச நேரத்தில் ஆடு, குட்டி என்று போட்டு குழப்பி விட்டிருக்கிறாயே” என்றார் ஆசிரியர்.

“இதிலே என்ன குழப்பம் இருக்கு சார்?” என் கணவர், என் சக்காளத்தியை விட்டுவிட்டு, வெவ்வேறு பெண்களைச் சுற்றிக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்த அவள், இவன் முதலிலேயே ஒருத்தியை விரட்டிவிட்டவன். என்னையும் விரட்டமாட்டான் என்று எப்படி நம்புவது என்று எண்ணிக் கொண்டு, அவள் விரட்டுவதற்குமுன் அவள் வேறு ஒருவனுடன் போய்விட்டாள்.

பூமாலையின் கயிறு தளர்ந்தால் மலர்கள் உதிர்வது போல, குடும்பம் என்ற மாலை தளர்ந்ததால், பிள்ளைகள் இன்று உதிரிப் பூக்களாகிவிட்டார்கள்.

“இப்போது அந்தப் பிள்ளைகள் எங்கே இருக்கிறாங்க” என்று ஆசிரியர் கேட்டார்.

அவர்கள் என் மாமன் – மாமியுடன் இருக்கிறாங்க.

தன் பிள்ளையின் சம்பாத்தியத்தில் வாழலாம் என்று எண்ணியவர்கள், இன்று தன் பேரப்பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் வாழ்கிறார்கள்.

புரியவில்லையே.

என் மாமியார் பலகாரங்கள் செய்து கொடுக்க, பிள்ளைகள் அவற்றை விற்றுக் கொண்டு இருக்கிறாங்க. அதனால் அமுதா இனிமேல் பள்ளிக்கூடம் வரமாட்டாள் என்று நினைக்கிறேன்” என்றார் கண்ணனின் தாயார்.

“நீங்க போய் வாங்க. நான் சமூக விவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு, அப்பிள்ளைகளைப் படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறேன்.”

– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

இரா.துரைமாணிக்கம் இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *