கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2026
பார்வையிட்டோர்: 167 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புது வீட்டு எஜமானி சிவகாமு அம்மாள், தன் வெள் ளெழுத்துக் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு, வாசல் ரேழியில் வந்து நின்றுகொண்டாள். வாய்க்கால் மேட்டுக்குமேல் ‘ஸெடான்’ கார் இரண்டு வந்து நின்றன. அதிலிருந்து புருஷர்களும் பெண்களும் குழந்தைகளும் சிரித்துப் பேசிக்கொண்டே, புது வீட்டை நோக்கி நடந்தார்கள்.

மடுவன்கரை கிராமத்தில் வாய்க்கால் ஓரமாக அமைந்த இந்தப் புது வீடு பழமையானது. அதற்கு வயசு நூறு வருஷங்கள் ஆகிவிட்டன என்று சிவகாமுப் பாட்டி நூறுதரம், தன் பேரன் பேத்திகளிடம் சொல்லி யிருப் பாள். அந்தக் கிராமத்தில் முதல் முதலில் அதிசயப்படும் படி எழும்பிய வீடு, அது ஒன்றுதான். அதற்குக் கிரா மத்து ஜனங்கள் ஆசையுடன் வைத்த பெயர் இன்றும் நிலைத்திருக்கிறது. ‘புது வீடு’ என்று ஏழை முதல் பணக் காரன்வரை அதை அழைத்தார்கள். அந்த வீட்டில் இன்றைக்கு இருபது இருபத்தைந்து கல்யாணங்கள் நடந் திருக்கின்றன. பிறந்த குழந்தைகள் நாற்பது ஐம்பதுக்கு மேல் இருக்கும். இதில் அதிசயம் என்னவென்றால், மிருத்யு பயம் அந்த வீட்டுக்கு ஏற்பட்டதில்லை. அந்த வீட்டில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் எல்லோரும் தீர்க்க ஆயுசுடன் நன்றாக இருக்கிறார்கள். சிவகாமுப் பாட்டி, புது மாட்டுப் பெண்ணாக அந்த வீட்டில் நுழைந்த காட்சியை, அவளைப்போல் தொண்டு கிழமாக இருக்கும் யாரையாவது அந்தக் கிராமத்தில் கேட்டால் பசி தாகத்தை மறந்து சொல்லிக்கொண்டே இருப்பார்கள். புது வீட்டுக்கு எஜமானியாக ஏற்பட்டதால் ‘புது அம்மா’ என்று அவளையும் செல்லமாக அழைத்தார்கள் அவர்கள். வயசு கிட்டத்தட்ட எண்பது ஆகியிருந்தாலும் ‘புது அம்மா’வின் மனோ திடமும் ஆரோக்கியமும் அவளிடம் எல்லாரும் மதிப்புக் கொள்ளும்படி செய்திருந்தன. அவளுடைய உத்தரவையும் கட்டுப்பாட்டையும் யாரும் மீறி நடந்ததில்லை.

வீடு, மிகவும் அழகாகக் கிளி கொஞ்சிற்று என்று சொல்லலாம். விசாலமான வாசல் நடை ஐம்பது பேருக்குமேல் படுத்துக்கொள்ள இடவசதி இருந்தது.

அதற்கு அடுத்தாற்போல் ரேழி. உள்ளே கல்யாணக் கூடம்; அகல முற்றம். கல்யாணக் கூடத்துச் சுவரில் அழ கிய சித்திரங்கள் இன்றும் காணப்படுகின்றன.ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரரின் கல்யாணம், சீதாகல்யாணம், ராதாகல் யாணம். இந்தப் படங்களில் ஒவ்வொன்றும் கூடத்தின் பெயரை ஸ்திரப்படுத்தின. காமிரா அறையில் பெரிய புரைகள் சுவரில் பதித்திருந்தார்கள்; இன்றை இரும்பு பீரோக்களைவிட உறுதியானவை. இவைகளுக்கு அடுத் ‘தாற்போல் உக்கிராண அறை. அதற்கு அடுத்துப் பின் கட்டுக் கூடம். அங்கும் விசாலமான முற்றம்; சமையல் அறை. சாப்பிடும் கூடம், வாய்க்கால் வரைக்கும் பரந்து கிடக்கும் கொல்லைப்புறம்; இரண்டு கிணறுகள்; மாட்டுத் தொழுவம்; இன்னும் எவ்வளவோ?

இவ்வளவு பெரிய வீட்டைப் பார்த்த கிராமத்து ஜனங்கள், பிரமித்துப் போய்த்தான் புதுவீடு என்று இதற்குப் பெயர் வைத்திருந்தார்கள்.

தூரத்தில் வருபவர்களைப் பார்த்துவிட்டு, சிவகாமுப் பாட்டியின் சுருங்கிய கன்னங்கள் சந்தோஷத்தால் மலர்ந்தன.

“அடியே சீதாலக்ஷ்மி! அவர்கள் எல்லாரும் வந்து விட்டார்கள். கல்யாண கூடத்திலே எல்லாம் சரியா இருக்கா, பார்” என்று சொல்லிக்கொண்டே, வாசல் நடையில் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்துகொண்டாள்.

சீதாலக்ஷ்மு-சிவகாமுவின் மாட்டுப் பெண் – பரபரப் புடன் வெளியே வந்து, எட்டிப் பார்த்துவிட்டு, உள்ளே போனாள். “அடி சுலோ! பாட்டியை உள்ளே வந்து உட் கார்ந்துகொள்ளச் சொல்லேன். அவர்கள் வரும்போது வாசலில் காலை நீட்டிக்கொண்டு…” என்று ஏதோ முணு முணுத்துக்கொண்டே சமையற் கட்டுக்குப் போனாள்.

“அம்மா என்ன சொல்லிவிட்டுப் போகிறாள்?” என்று சுலோசனாவின் தாய் அம்புஜம், தன் பெண்ணிடம் கேட்டாள்.

“புது அம்மாவை உள்ளே வரச்சொல்லணுமாம்.”

“யார் போய்ச் சொல்கிறது, அவளிடம்?” என்று சொல்லிவிட்டு அம்புஜம் தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள்.

சிவகாமுவின் கொள்பேத்திதான் சுலோசனா. அவளு டைய கல்யாணத்துக்கு நிச்சயதார்த்தம், அன்று புது வீட்டில் நடக்க ஏற்பாடாகி இருந்தது. இதில் சீதாலக்ஷ்மிக் குத் துளிகூட இஷ்டம் இல்லை. கடல் மாதிரி, நகரத்தில் ஒரு மாசத்துக்கு முன்புதான் கட்டிமுடித்த பங்களா வில் ஆடம்பரமாக எல்லாம் நடத்த வேண்டும் என்று அவள் திட்டம் போட்டிருந்தாள். “அம்மா அம்மா ஒப்புக் கொள்ள மாட்டாளே” என்று, அவள் கணவர் நடேச சர்மா இருந்தாற்போல் கூறினார்.

“ஒப்புக்கொள்ளாவிட்டால் போகட்டும். கூரை தலையில் இடிக்கிற மாதிரி ஒரு கூடம். சுவரிலே திட்டுத் திட்டாக வர்ணச் சாயம். கூடத்திலே ஒரே இருட்டு. எனக்கும் வயசாகவில்லையா? உங்க அம்மாவுக்குக் தெரி கிற கண்கூட எனக்குத் தெரியவில்லை. சமையல் உள்ளில் பாம்பு பிடுங்கினால்கூடத் தெரியாது.”

“அதெல்லாம் இனிமேல் மாறப்போகிறதா? ஆகிவந்த இடத்தை விட்டுவிட்டுப் பங்களாவில் நடத்த அவள் ஒப்பமாட்டாளடி.”

“அதுதான் சொன்னேனே: ஒப்பாவிட்டால் அவர் வீட்டோடு இருக்கட்டுமென்று. டில்லியிலிருந்து அம்புஜ மும் அவள் அகமுடையானும் வந்தால் இந்த வீட்டைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போவார்கள்.”

“சிரிக்கிறது என்னடி? அம்புஜம் பிறந்து வளர்ந்த வீடுதானேடி இது?”

“மாப்பிள்ளைகூட இங்கேதான் பிறந்தாராக்கும்!’ – சீதாலக்ஷ்மி கேலியாகச் சிரித்தாள்.

“மாப்பிள்ளைக்குப் பழைய சம்பிரதாயத்தில் மிகவும் நம்பிக்கை உண்டு. உன் பெண்ணைப்பற்றி வேண்டுமானால் சொல். ஒப்புக்கொள்ளுகிறேன்.”

“அந்தப் பெண் சுலோ, ஒரு சுலோ, ஒரு நாழிகைகூட இங்கே இருக்காது. அதுக்குப் ‘பாட்மிண்டன்’ ஆடி வழக்கமாம். இங்கே ஆட வேண்டியதுதான், கிணற்றைச் சுற்றி!”

“போடி பைத்தியம்! நம் கொல்லையை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்தால் போதுமேடி.”

“என்ன அப்பா! அம்மாவுக்குத் தகுந்தாற்போல் ஏதாவது சொல்லிக்கொண் டிருக்கிறீர்கள்? சுவரெல்லாம் காரை உதிர்ந்து கிடக்கிறதே. அசங்கியமாக இல்லை?” என்றான், இதுவரையில் இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ராமபத்திரன்.

அவன், சீமைக்குப் போய்ப் பெரிய படிப்புகள் எல் லாம் தேறி வந்திருப்பவன். ஆனால். அவன் கப்பலேறு வதற்காகப் பம்பாய் புறப்படு முன் புது வீட்டுக்கு வந்து, பாட்டியை நமஸ்கரித்துவிட்டு, அந்த வீட்டிலிருந்து நல்ல வேளையில் புறப்பட்டு, ஆறு மைல் கட்டை வண்டியில் பிரயாணம் செய்து, ரெயில் நிலையத்தை அடைந்து, பம் பாய் சென்றான்.

“ஆமாண்டா அப்பா! எல்லோரும் தூஷிப்பீர்கள், என்னையும், புது வீட்டையும். சுவரைப் பழுது பார்த்தால் தானே நன்றாக இருக்கும்? உன் அப்பா ஆயிரம் ஆயிர மாகக் கொட்டி, பங்களா கட்டி இருக்கான். இருந்தாலும் இதன் கால் தூசுக்கு அது ஈடாகுமா? இந்த வீட்டிலே நடந்த கல்யாணம் எத்தனை? பிறந்த குழந்தைகள் எத் தனை? சுவரெல்லாம் சுண்ணாம்புச் சன்னம் வைத்துக் கட் டியது. சுண்ணாம்பு அரைக்க முப்பது பேர் வேலை செய் தார்களாம். மாட்டுக் கொட்டில் பக்கம் தூர்ந்து போய் இருக்கு பார், ‘காடி அடுப்பு’; அதில்தான் வேலைக்காரர் களுக்குச் சாப்பாடு தயாராகுமாம். உன் அப்பா கட்டி னானே வீடு, ஒரு வேலைக்காரனுக்குப் பசிவேளைக்குச் சாப் பாடு போட்டிருப்பானா? கேள். ஆயிரம் ஆயிரமாக அன்ன தானம் நடந்த வீடப்பா இது” என்று என்று இதுவரையில் தூங்குகிறமாதிரி, பின்கட்டுக் கூடத்தில் படுத்திருந்த சிவகாமுப் பாட்டி எழுந்து உட்கார்ந்து, பேரனுடன் சண்டைக்கு ஆரம்பித்தாள்.

“பாட்டி, பாட்டி, நான் சொன்னதெல்லாம் தவறு. உன்னாலும், இந்த வீட்டாலுந்தான் பாட்டி நான் இவ்வ ளவு உயாந்த நிலைக்கு வந்திருக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே ராமபத்திரன் பாட்டியின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டான்.

“உன்னை ஒன்றும் சொல்லவில்லையடா, கண்ணே! என் கண் எதிரில், என் காது கேட்கப் புது வீட்டை மட்டும் யாரும் ஒன்றும் செய்யா தீர்கள், சொல்லாதீர்கள்” என்று கூறிவிட்டுக் கிழவி வாசலிலிருந்து கொல்லை வரை ஊடுருவிப் பார்த்தாள்.

அதற்குமேல் சீதாலக்ஷ்மியால் வாயைத் திறக்க முடிய வில்லை. டில்லியிலிருந்து வந்த மாப்பிள்ளை, பாட்டியின் வாக்கு வேதவாக்கு என்று சொல்லிவிட்டார் சுலோவின் நிச்சயதார்த்தமும் புது வீட்டில் நடக்க ஏற்பாடாகியது.

2

‘ஸெடான்’ காரிலிருந்து இறங்கி வந்தவர்கள் புது வீட்டுக்கு வந்தார்கள். வாசலில் உட்கார்ந்திருந்த பாட்டி, சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்றாள். மாப்பிள் ளைப் பையன், வீட்டை ஒரு மாறிரியாக அலட்சியத்துடன் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். வீட்டில் இருக்கும் பெண்களின் நவநாகரிகத் தோற்றமும், அதற்கு நேர் விரோதமாக அவர்கள் இருக்கும் வீட்டையும் பார்த் ததும் சம்பந்தி வீட்டாருக்கு ஆச்சரியமாக இருந்தது. இவர்களுடன் பிள்ளையின் பாட்டியும் வந்திருந்தாள். தன்னைவிடப் பத்துவயது மூத்தவளாகிய சிவகாமுப் பாட் டியைப் பார்த்ததும் அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது.

“வாருங்கள். அம்மா” என்று பிள்ளையின் பாட்டியை உபசரித்தாள் சிவகாமுப் பாட்டி.

“நன்றாக இருக்கிறதே அம்மா நீங்கள் என்னைப்பகு’ வசனத்தில் அழைப்பது! என் பெயர் காமாக்ஷி. காமாக்ஷி என்றே கூப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டுக் காமாக்ஷி, சிவகாமு எதிரில் உட்கார்ந்துகொண்டாள்.

“புது அம்மா, உங்களை அம்மாவுடன் ஐயா உள்ளே வரச்சொன்னாரு” என்று வேலைக்காரன் வந்து அவர்களைக் கூப்பிட்டான்.

“என்ன யோசனை செய்கிறீர்கள்? நான் பல்லுப் போன கிழமானாலும் என்னைப் ‘புது அம்மா’ என்றுதான் இந்த ஊரில், குஞ்சு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் கூப்பிடுவார்கள். இந்த வீட்டுக்கும் புது வீடு என்றுதான் பெயர், காமாக்ஷி” என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டே சிவகாமு, வந்த பாட்டியுடன் உள்ளே சென்றாள்.

கூட த்தில் விரித்திருந்த ரத்தினக் கம்பளத்தில் உட் கார்ந்து சுலோசனா வீணை வாசித்துக்கொண் டிருந்தாள். புருஷர்கள் பல விஷயங்களைப்பேசிக்கொண் டிருந்தார்கள். பின்கட்டுக் கூடத்தில் இளம் பெண்கள் உட்கார்ந்து, வேடிக்கை வேடிக்கையாக ஏதோ பேசிக்கொண் டிருந் தார்கள். பாட்டிகள் இருவரும் காமரா உள்ளில் உட் கார்ந்திருந்தார்கள். பிள்ளையின் பாட்டியாகிய காமாக்ஷி. தன் வெள்ளெழுத்துக் கண்ணாடியைத் துடைத்து, மாட் டிக் கொண்டு, பேரனுக்கு வாய்க்கப்போகும் மனைவியை ஊடுருவிப் பார்த்தாள். பெண் மூக்கும் முழியுமாய்க் களைசொட்டும் முகத்துடன் இருப்பதைப் பார்த்துக் காமாக்ஷிப் பாட்டி மிகவும் திருப்தி அடைந்தாள்.

“குழந்தையைப் பிடித்திருக்கிறதா உங்களுக்கு?” என்று பாட்டி, காமாக்ஷியைக் கேட்டாள்.

“பிடிக்காமல் என்ன? லக்ஷணமாகத்தான் இருக் காள். பேரனுக்குப் பிடிக்கிறதுதானே முக்கியம், அம்மா, இந்தக் காலத்தில்? நம்முடைய காலமா இது?”

“நம் காலத்துக்கு என்ன குறைவு வந்துவிட்டதாம்? வீடும் வாசலும், பொன்னும் மணியும், நிலமுமாக இருந்த காலமில்லையா அது? இந்தக் காலத்தைப்போலவா வயிற் றுக்கு அளந்து சாப்பிட்டுக்கொண் டிருந்தோம்?” என்று சிவகாமுப் பாட்டி, லோக விவகாரத்தில் இறங்க ஆரம் பித்தாள்.

இதற்குள் கூடத்தில் இருந்த புருஷர்களின் குரல் வலுத்தது.

“எல்லாம் திருப்தியாகத்தான் இருக்கிறது…” என்று மாப்பிள்ளைப் பையன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு, அவனைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

“மனசில் இருப்பதைச் சொல்லிவிடுங்கள்” என்று நடேச சர்மா கூறினார்.

“கல்யாணம் எங்கே வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? எனக்கு ஏகப்பட்ட சிநேகிதர்கள் உண்டு. எல்லாரும் படித்தவர்கள். அயல் நாடுகளுக்கெல்லாம் போய் வந்தவர்கள்.”

“அதனால் என்ன அப்பா? தகுந்தபடி மரியாதை செய்துவிட்டால் போச்சு” என்றார் நடேச சர்மா.

மாப்பிள்ளைப் பையனுக்குக் கோபம் வந்தது. ‘இந்த வீடு, படு கர்நாடகம்! எனக்குப் பிடிக்கவில்லை! என்று இந்தக் கிழவருக்குச் சொல்ல வேண்டும்போல் இருக்கிறதே’ என்று நினைத்துக்கொண்டான் அவன்.

“இன்னும் என்ன யோசனை செய்கிறீர்கள்?” என்று மேலும் தூண்டிக் கேட்டார் சர்மா,

“யோசனை ஒன்றும் இல்லை. கல்யாணத்தை இந்தப் பழைய வீட்டிலா வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?” என்று வெளிப்படையாகக் கேட்டான் பையன்.

சிறிது நேரம் எல்லாரும் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர். பின்கட்டில் பெண்களுடன் பேசிக்கொண்டிருந்த சீதாலக்ஷ்மி எழுந்து வந்து, கதவுக்குப் பின் நின்று கொண்டாள்.

“அதெல்லாம் இல்லை. டவுனில் புதுசா வீடு கட்டி முடிந்திருக்கிறது. அதிலே கல்யாணத்தை வைத்துக் கொண்டால் போச்சு. அதற்காக யோசனை பண்ண வேண்டாம்” என்று கூறி, அங்கு நிலவி யிருந்த நிச்சப்தத்தைக் கலைத்தாள் அவள். இவ்வளவு தைரியத்துடன் ஒரு பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதைப் பற்றிச் சீதாலக்ஷ்மி மிகவும் பெருமை அடைந்தாள்.

“இந்த விஷயம் அவ்வளவு லேசில் முடிந்துவிடாது” அப்பா. என் தாய் சம்மதப்படவேண்டும் இதற்கு என்று சர்மா, சீதாலக்ஷ்மியின் பதிலைச் சட்டை செய்யா மல் கூறினார். அவர், மாப்பிள்ளைப்பையன் கேட்ட கேள் விக்குப் பதிலைத் தன் தாயிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இடையில் மனைவி குறுக்கிட்டது அவ ருக்குப் பிடிக்கவில்லை.

“நான் என்ன அப்பா சொல்லக்கிடக்கிறது? பிறந்த குழந்தையிலிருந்து தொண்டு கிழம் வரையில் இந்த வீட்டைப் புது வீடு என்றுதான் இன்று வரையில் சொல்லி வருகிறார்கள். பையன் ஒரு நிமிஷத்தில் இதைப் பழைய – வீடாக்கிவிட்டானே? எங்கேயாவது கல்யாணத்தை நடத்திக்கொள்ளுங்கள். நான் மட்டும் புது வீட்டை விட்டு வரமாட்டேன். கல்யாணம் ஆன பிறகு, குழந்தைகளை ஒரு நாளைக்கு அழைத்து வா, அப்பா. ஆகிவந்த இடத்தில் ஒரு நாள் தங்கட்டும்” என்று வருத்தத்துடன் சிவகாமுப் பாட்டி கூறினாள்.

“நன்றாக இருக்கிறதே, நீங்கள் சொல்கிறது, அம்மா! நீங்கள் இல்லாமல் ஒரு கல்யாணமா? கல்யாணம் புது வீட்டிலேயே நடக்கட்டும். அப்பொழுதுதான் நானும் உன் கல்யாணத்துக்கு வருவேண்டா, பையா” என்றாள், இதுவரையில் பேசாமல் இருந்த காமாட்சிப் பாட்டி.

பெரியவர் இருவரையும் மீறிப் பேசக்கூடியவர்கள் அங்கு யாரும் இல்லை.

ஒரு மாதத்துக்கு அப்புறம் புது வீடு ஜகஜ்ஜோதி யாகப் பிரகாசித்தது. உதிர்ந்திருந்த சுவரெல்லாம் சன்னக்காரை மெழுகிவிட்டார்கள். பகவானின் பகவானின் கல்யாண வைபவங்கள் புதுச் சித்திரங்களாகத் திகழ்ந்தன. மடுவன் கரைக் கிராமத்தில் நடந்த புது வீட்டுக் கல்யாணத்தைப் பற்றியே ஜனங்கள் மாதக்கணக்கில் பேசித் தீர்த்தார்கள். சிவகாமுப் பாட்டி, பெற்ற குழந்தையைவிட அன்புடன் புது வீட்டின் சுவரைத் தடவிப் பார்த்துப் பெருமையும் பூரிப்பும் அடைந்தாள்.

– இரட்டைக் கதைகள் (வெள்ளிவிழா வெளியீடு), முதற்பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

சரோஜா ராமமூர்த்தி சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *