விட்டில் பூச்சிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 22, 2026
பார்வையிட்டோர்: 76 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

மாலை மங்கும் நேரம் பெண்டுலக்கடிகாரத்தில் மணி ஆறு எனக் காண்பிக்க, அதற்காகவே காத்திருந்ததுபோல் வேகவேகமாக எழுந்து முற்றத்தில் விளக்கை ஏற்றினாள் சாந்தா. விளக்கொளி வீடெங்கும் பரவி, பிரகாசிக்க அதைப்பார்த்து பெருமூச்சு விட்டவாறு வீட்டு வாசலில் திண்ணையின் ஓரம் இருந்த விளக்கு மாடத்திலும் விளக்கை ஏற்றிவிட்டு திண்ணையில் அமர்ந்து வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள் சாந்தா. வயது எண்பதைக் கடந்திருக்க வயது மூப்பின் காரணமாக நடை தளர்ந்து, உடல் மெலிந்து காணப்பட்டாள்.

ஒரு காலத்தில் இந்த வெளிச்சம் போல வீடெங்கும் அன்பு பரவிக்கிடந்தது. இப்பொழுது வெறுமை மட்டுமே மிச்சமாய் இருந்தது. இருப்பினும் மறுபடியும் பழைய நிலை திரும்புமென நம்பிக்கையுடன் காத்திருந்தாள் சாந்தா. சாந்தாவிற்கு மூன்று பையன்கள் இரண்டு பெண் குழந்தைகள் என மொத்தம் ஐந்து பிள்ளைகள். மூத்தவன் மணிமாறன், இரண்டாவது குணசீலன், மூன்றாவது பையன் சுகுமாறன், அதற்கடுத்தவள் சுசீலா, கடைக்குட்டி தேவி என அடுத்தடுத்து இரண்டு வயது வித்தியாசத்தில் ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். சாந்தாவின் கணவனான வெங்கடேசன் முதல் நான்கு பேருக்கும் திருமணமான நிலையில் நோயில் படுத்தவன், கடைக்குட்டி தேவியின் திருமணத்தைப் பார்க்காமலேயே சென்றுவிட, சாந்தா தனியாளாய் அவளைக் கரையேற்றினாள். அதுவரை கட்டுக்கோப்பாக குடும்பத்தை ஒற்றுமையுடன் இருக்க வேண்டுமென மெனக்கெட்டாள் சாந்தா. அது வெகு நாட்கள் நீடிக்கவில்லை. மகள்கள் இருவரையும் அருகே உள்ள ஊரில் கட்டிக்கொடுத்தாள், மகன்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் என நிறைந்து இருக்க வீடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. மணிமாறனுக்கு இரண்டு பையன்கள், ஒரு பெண் குழந்தை, குணசீலனுக்கு ஒரு பையன், சுகுமாறனுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும், மகள் சுசீலாவிற்கும், தேவிக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என்ற வீதத்தில் நான்கு குழந்தைகள் என மொத்தம் பத்து பேரக்குழந்தைகள்.

மகன்கள்,மருமகள்கள், மகள்கள், மருமகன்கள் என அதுவும் பத்துப் பேர் என இவளுடன் சேர்த்து இருபத்து ஒன்று. எங்காவது வெளியில் சென்றால் ஊரில் உள்ள அனைவரது கண்ணும் இவள் குடும்பத்தின் மீதே இருக்கும். இதனால் சாந்தா வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக அனைவரையும் நிற்கவைத்து முச்சந்தி மண்ணை எடுத்து வந்து உப்பு, மிளகாய் சேர்த்து, திருஷ்டி சுத்திப் போட்டு அது நெருப்பில் பட்டு வெடிக்கும் போது அதைப் பார்த்து சந்தோசம் கொள்வாள். பின் மொத்தமாக நெட்டி முறித்து எத்தன?கண்ணு என்று பெருமூச்சு விடுவாள். எப்பொழுதும் சிரிப்புச் சத்தமும்,அடுப்பங்கரையில் சமைக்கும் பொழுது மருமகள்களின் கேலியும், கிண்டலும், பேரப்பிள்ளைகளின் குறும்பும், விளையாட்டும் என நிறைந்து காணப்பட்டது. அவை வெகுநாட்கள் நீடிக்கவில்லை.

சாந்தா அதனைத் தக்க வைத்துக்கொள்ள எவ்வளவோ போராடியும் முடியாமல் போனது. வேலை, சம்பாத்யம், பிள்ளைகளின் படிப்பு என ஆளுக்கொரு காரணத்தைக்கூறி பிரிந்த நிலையில் நிர்க்கதியாய் இவள் மட்டும். இவற்றை எண்ணி பெருமூச்சு விட்டபடி திண்ணையில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அந்தப்பக்கமாக சென்ற கோமளத்தைக் கண்டதும்,

“அடியே! கோமளம் நாளைக்கு விடிய காத்தால வந்து வாசப்பெருக்கி கோலம் போட்ரு. புள்ளைகளெல்லாம் ஊர்ல இருந்து வாராக! என்ன ? தாமசமா வந்து நிக்காத” என்றதும், கோமளம்,

“ அப்படியாம்மா ! இங்க வந்து தங்க போறாகளா? இதுக்குத்தான? இத்தன நாள் காத்துக்கிட்டு இருந்திய அப்புறம் ஏம்மா! இன்னும் கவலையாவே இருக்கீங்க?“

“ம்……அதெல்லாம் ஒன்னுமில்லடி”

என்று பெருமூச்சு விட்டவள்,

“நீ நாளைக்கு வெரசா வா! என்ன” என்று உள்ளே சென்று விட்டாள். கோமளமோ! மண்டையைச் சொறிந்தவாறு இந்த அம்மாவுக்கு என்னாச்சு? இத்தன நாள் புள்ளைங்க வரலைன்னு கவலைப்பட்டாங்க, இப்பதான் அவுக எல்லாரும் வரப்போறாகளே! இன்னும் ஏன்? இந்த அம்மா முகம் இப்படி வாடிக்கெடக்கு? ம்…..என்னமோ! போ ! ஒன்னும் வெளங்கமாட்டேங்கிது? என்று அலுத்துக்கொண்டாள். சாந்தாவின் பிள்ளைகள்

விட்டுச்சென்ற நேரத்தில் அவளுக்கு ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்தவள் கோமளம்.

அதற்கு கைமாறாக அவ்வப்போது அரிசி, பருப்பு என எதையாவது கொடுத்து உதவுவாள் சாந்தா, வசதியில்லாத காரணத்தால் கோமளமும் மறுப்புச்சொல்லாமல் அவற்றை ஏற்றுக்கொள்வாள். வருத்தமிருந்தாலும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் சாந்தா இன்று என்னவோ போல் இருந்தது கோமளத்திற்கு நெருடலாக இருக்க ,குழப்பத்துடன் வீட்டை நோக்கி நடந்தாள்.

சாந்தாவோ அடுப்பங்கறைக்கு வந்தவள், சாப்பிட மனமில்லாமல் இருந்த சோற்றில் தண்ணீரை ஊற்றி மூடி வைத்துவிட்டு, முற்றத்தின் ஓரம் போடப்பட்டிருந்த தம்முடைய கயிற்றுக்கட்டிலில் வந்து படுத்துக்கொண்டாள். கண்ணை மூடி படுத்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்க எண்ணம் முழுவதும் மணிமாறன் பேசிய வார்த்தைகளின் வீரியம் குறையாமல் வலியைத் தந்து கொண்டிருந்தது. காலையில் பக்கத்து வீட்டு வள்ளி வந்து அவளது லேன்லைன் போனுக்கு மணிமாறன் போன் பண்ணியிருப்பதாகக் கூறி அழைத்ததும் சந்தோசம் தாங்காமல் சின்னப் பெண்ணாட்டம் துள்ளிக்குதித்து ஓடியவள், மகன் தன்னை மறக்காமல் இருப்பதாக வள்ளியிடம் பெருமை கூறிக்கொண்டு ரிசீவரைக் காதில் வைத்தவளின் முகம் சிறிது நேரத்தில் மாறியது.

போனில் மணிமாறன் நாளை அனைவரும் அங்கு வரவிருப்பதாகவும் சாந்தா இருக்கும் வீட்டை விற்கபோவதாக கூற ,

“அது நா இருக்க வரைக்கும் நடக்காது. இது உங்கப்பா, நாமெல்லாம் சந்தோசமா வாழ்ந்த வீடுடா! இத நா அனுமதிக்க மாட்டேன்” என்று வாக்குவாதம் செய்தவளிடம் ,

“அதுக்காக நீ எப்ப போக? நாங்க எப்ப விக்க? எங்களுக்குன்னு தேவைகள் இருக்காதா ?”

என்று எரிந்து விழ உடைந்து போனாள் சாந்தா. ஒன்றாக இருந்தவரை அம்மாவின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத பிள்ளைகள்,அம்மாவே உலகம் என இருந்த பிள்ளைகள், இன்று விளக்கொளியை தேடிச்சாகும் விட்டில் பூச்சிகளாக பட்டணத்துப் பகட்டுக்கு மயங்கி, உண்மையான அன்பை மறந்து இப்படியொரு வார்த்தையை உதிர்த்ததை அவளால் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தாள். தூக்கம் வராமல் எழுந்தவள் மரப்பீரோவில் இருந்த வீட்டுப்பத்திரத்தைக் கையிலெடுத்தாள்.

முற்றத்தின் ஓரம் இருந்த தூணில் சாய்ந்தபடி கண்கொட்டாமல் பத்திரத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ? தெரியவில்லை அப்படியே உறங்கிப்போனாள். பொழுது புலர்ந்ததும் வாசற்பெருக்க வந்த கோமளம் வேலையை முடித்துவிட்டு சாந்தா கொடுக்கும் காப்பிக்காக,

“அம்மா…….அம்மா…..” என்று கதவை தட்டினாள். உள்ளிருந்து பதிலேதும் வராததால் என்னாச்சு? இந்தம்மாவுக்கு காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கிறவுக, இன்னைக்கு இம்புட்டு நேரமா தூங்குராவ! என்று சந்தேகத்துடன் கதவைத் தட்டச்சென்றவள்,கதவு திறந்திருப்பது கண்டு மெதுவாக உள்ளே சென்றாள். அங்கு முற்றத்துத் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த சாந்தாவைப் பார்த்ததும், ஏம்மா எவ்வளவு? நேரமா அம்மா..அம்மான்னு கூப்பிட்டிக்கிட்டு இருக்கேன், நீங்க என்னான்னே கேக்கலையே! இம்புட்டு காப்பித்தண்ணி தருவியளேன்னு கூப்பிட்டா அப்படி என்ன? யோசிச்சுக்கிட்டிருக்கீங்க என்று தோளில் கை வைத்தவள், சாந்தா தலை தொங்கியது கண்டு, அதிர்ச்சியில் உறைந்து போனாள். ஒரு கையில் பத்திரத்தைப் பற்றியபடி, கண்கள் விளக்கை நோக்கிப் பார்த்திருக்க அவள் உயிர் பிரிந்திருந்தது. ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தவள், வாசலில் கார் ஹாரன் ஒலிக்க, நிகழ்வுக்கு வந்தவளாய், ஓ…!வெனக்கதறினாள்.

– காற்றுவெளியில் வெளிவந்த  சிறுகதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *