ஆலநீழல் அறமருளிச் செய்த அரனார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 20 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரம்ம தேவருக்கு சனகர், சனந்தனர், சநாதனர், சனற்குமாரர் என்று நான்கு புத்திரர்கள். சனகாதி முனிவர்கள் என்று இவர்களைச் சிறப்பித்துச் சொல்வதுண்டு. பிரமபுத்திரர் நால்வரும் வேதங்களைக் கற்றுக் கரைகண்டவர்கள். எனினும் இவர்கள் விரும்பிய சாந்தியைக் கல்வியினால் அடைய முடியவில்லை. பல இடங்களுக்குச் சென்றார்கள். எங்கும் மன அமைதி கிடைக்கவில்லை கடைசியாகக் கயிலைமலையை அடைந்தார்கள். முதல் வாயிலை அடைந்ததும், நந்தி எம்பெருமானை வணங்கி, அவர் அநுமதியுடன் சிவசந்நிதியுட் சென்றனர். பிரம்மன் முதலியோர் காணாத ஞானநாயகரை சனகாதியர் நால்வருங் கண்டனர். 

மிகவும் பெரிய ஒருவரிடம் எதையாவது சொல்வதற்கென்று போவோம். ஆனால் அந்தப் பெரியவரைக் கண்டதும், எதைச் சொல்லப் போனோமோ, அதைச் சொல்லமுடியாமல் மொழிதடு மாறும். முதன்முதல் ஒருவர் தனது ஞானகுருவைச் சந்திக்கும்போதும் இத்தகையதொரு நிலை ஏற்படுகிறது. இதை கொண்டேதான், இவர்தான் எனது குருவாக உள்ளவர் என்பதைச் சிஷ்யன் உறுதிப்படுத்திக் கொள்ளுகின்றான். 

பரமேசுவரரைக் கண்டதும் சனகாதிமுனிவர்களுக்கு மொழிகுழறியதாம். மயிர்க்கூச்சம் ஏற்பட்டதாம். தாரைதாரையாகக் கண்ணீர் விட்டார்களாம். அனலிடைப்பட்ட மெழுகுபோல் அவர்கள் உள்ளம் குழைந்து விட்டதாம். சரீரம் துள்ளுகிறதாம். ஹரஹர என்று எம்பெருமானைத் “தொழுவானோர்க்கரிய மருந்தே போற்றி. ஏனோர்க்கெளிய இறைவா போற்றி” என்று துதித்தனர். 

சுவாமிக்குக் கருணை பிறந்தது. “குழந்தைகளே வாருங்கள்! உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றுமோகனக் குரலில் கேட்டார். “பெருமானே கார்த்திகை மாதம், பிரயாணிகள் கப்பலில் செல்கிறார்கள். அமாவாசையும் நிகழ்கிறது. நடுநிசி, புயல் வீசத் தொடங்குகிறது. அப்போது கப்பலில் உள்ளவர்கள் எப்படித் தவிப்பரோ, அப்படி அமைதியின்றித் தவிக்கிறது எங்கள் மனம். “அருட்பெருங்கடலே! வேதங்கள், ஆகமங்கள், இதிகாசங்கள் எல்லாவற்றையும் நாங்கள் படிக்கப் படிக்க எங்களுக்கு அதிகமாகச் சந்தேகம் எழுகின்றதேயன்றிச் சாந்தி கிடைக்கவில்லை. எங்கள் மயக்கத்தைப் போக்கி மனம் அமைதியடையும் வழிகாட்ட வேண்டும்” என்று பிரம்மபுத்திரர் நால்வரும் தொழுது வேண்டினர். 

பரமேஸ்வரர் புன்சிரிப்புச் சிரித்தார். நந்தியெம் பெருமானை அழைத்து, “யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம்” என்று கட்டளையிட்டார். 

சனகாதி முனிவர்கட்குச் சிவாகமங்களின் நுட்பங்களாகிய சரியை, கிரியை, யோகம் என்ற முப்பதங்களையும் கூறினார் சுவாமி. ‘ஐயனே! எங்கள் மனம் ஒடுங்க ஞானபாதம் போதிக்க வேண்டும்” என்று சனகாதி முனிவர்கள் வேண்டினர். “குழந்தைகளே! அதை வாக்கினால் போதிக்க முடியாது. இப்படிச் சும்மா இருப்பதே அதுவாகும்” என்று தம் திருமார்பில் திருவிரலால் அமைத்த சின்முத்திரையைத் தாங்கி யோகத்தில் அமர்ந்து மௌனநிலையைக் காட்டியருளினார் தட்சிணாமூர்த்தி. 

நான்கு விரல்கள் ஒரு பக்கமும் கட்டைவிரல் மட்டும் தனித்து ஒரு புறமும் நிற்கின்றது. சில்லறைகளுடன் சேராமல் ஒதுங்கிக் கொள்ளும் அந்த விரல்தான் பதி. ஒள்முகி உடனாகி, வேறாகி நிற்பவர் இறைவர். ஆள்காட்டி விரல் ஆன்மா. நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் மூன்றும் முறையே ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களைக் குறிக்கும். இம்மலங்களினின்று உயிர் நீங்கி, பசுவாகிய ஆன்மா பதியுடன் ஒன்றுபட வேண்டும். இதைச் சுட்டிக்காட்டுவது சின்முத்திரை. அது சிவனும் சீவனும் ஒன்றுபட்ட இடம். 

சின்முத்திரை தாங்கி நீலகண்டன், ஆலமரத்தடியில் அமர்ந்தார். 

அங்கு ஆச்சரியங்கள் நிகழ்ந்தன. எப்போதும் குருநாதர் வயதானவராக இருப்பார். இங்கோ குருநாதர் இளமை உள்ளவர். சீடர்களான சனகாதி முனிவர்கள் வயதானவர்கள். குருவின் வியாக்கியானமெல்லாம் மொழி ஒழிந்த மோனத்திலேயே நடந்தது இன்னோர் ஆச்சரியம். 

“சிவஞானமானது நூல் அறிவினால் கிடைப்பதன்று. அனுபவ அறிவால் மட்டுமே கிடைப்பது” என்று சின்முத்திரை உணர்த்தியது. அதனை உள்ளத்தில் பதித்துக் கொண்ட சனகாதி முனிவர்கள் ஒடுங்கிச் சித்திரப் பதுமைபோல் செயலற்றுச் சிவஞானத்தில் இருந்தனர். ஞானநிலையைக் காட்ட சிவபெருமான் மோனநிலையில் இருந்த ஒரு கணப்பொழுதில் பிரமன் முதலான தேவர்களுக் கெல்லாம் அநேக யுகங்கள் ஓடின. 

சிவமூர்த்தியின் தவநிலையால் விண்ணில் அமரர்களும் மண்ணில் மனிதர்களும் காமஇச்சை அறவே நீங்கி முற்றுந் துறந்த முனிவர்போல் இருந்தனர். சிருஷ்டி நடைபெறவில்லை. இதனை அப்பர் சுவாமிகள் 

துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலுந் 
தூமதியும் பாம்பு முடையார் போலும் 
மறங்காட்டி மும்மதிலும் எய்தார் போலும் 
மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும் 
அறங்காட்டி அந்தணர் ஆல நீழல் 
அறமருளிச் செய்த அரனா ரிந்நாள்
புறங்காட் டெரியாடிப் பூதஞ் சூழப் 
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 

என்று கூறுகின்றார்.

– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *