திருமால் வாமன வடிவம் எடுத்த கதை
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 20
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரகலாதனின் மகன் விரோசனன். விரோசனனின் மகன் பலிச்சக்கரவர்த்தியாவான். பலிமுற்பிறவியில் சிவன்கோயில் எலியாக வாழ்ந்தான். அப்பொழுது கோயில் விளக்கு அணையாமல் திரியைத் தூண்டிக் கொண்டிருந்தான். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் “மறுபிறப்பில் மூவுலகையும் ஆள்வாய்” என்று எலிக்கு வரம் அருளினார்.
அத்தகைய பலிச்சக்கரவர்த்தி மூவுலகையும் ஆளவிரும்பினான். எனவே எதிர்க்க முடியாத காரணத்தால் வானவரும் பிறரும் ஓடி ஒளிந்தனர். அதனால் மூவுலகையும் எளிதாகக் கைப்பற்றிப் பலிச்சக்கரவர்த்தி அரசாண்டான்.
வானவர்களின் தாயான அதிதி என்பவள் தன்மக்கள் பயந்து ஓடிய நிலைகண்டு வருந்தினாள். தன் கணவர் கச்சியப்ப முனிவரிடம் சென்று முறையிட்டாள்.
கச்சியப்ப முனிவர், தம்மால் ஒன்றும் செய்ய முடியாது. “திருமாலை வழிபட்டால் அவர் உனக்கு அருள்புரிவார். நோன்பிருந்து வழிபாடு செய்” என்று வழி கூறினார்.
அதிதி திருமாலை நோக்கி நோன்பு இருந்தாள். நோன்பின் முடிவில் திருமால் காட்சி கொடுத்தார். “உன்துன்பத்தை நான் அறிவேன். பலிச்சக்கரவர்த்தி சிவபெருமான் வரம்பெற்ற காரணத்தால் மூவுலகையும் ஆளுகின்றான். அவனுக்கு ஆணவம் தோன்றும்பொழுது, நான் அவன் ஆணவத்தை அடக்குவேன். அப்பொழுது உன் மைந்தர்களுக்கு அருள் செய்கின்றேன்” என்றும் “அதற்காக உன் வயிற்றில் பிறப்பேன்” என்றும் திருமால் கூறினார். பிறகு திருமால் அதிதியின் வயிற்றில் மகனாக வந்து பிறந்தான். அவர் மூன்று அடி உயரத்திற்கு மேல் வளரவில்லை. குட்டை வடிவமாக இருந்ததனால்தான் வாமன வடிவம் என்றனர். வாமன வடிவம் எடுத்த திருமால் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினார்.
மூவுலக ஆட்சி நிலைக்கும் பொருட்டுப் பலிச்சக்கரவர்த்தி அசுவமேத யாகம் செய்தான். அப்பொழுது அவனுக்கு ஆணவம் தோன்றியது. “யார் எதைக் கேட்டாலும் கொடுப்பேன்” என்று கூறிக் கொடுத்தும் வந்தான்.
வாமன வடிவம் எடுத்த திருமால், பலிச்சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க இதுவே தக்க சமயம் என்று கருதினார். உடனே பலிச்சக்கரவர்த்தியின் யாகசாலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
வாமனர் வரவைக் கண்ட பலிச்சக்கரவர்த்தியும் மற்றவரும் வணங்கி வரவேற்று உபசரித்தனர். ஆசனம் அளித்து அமரச் செய்தனர். அப்பொழுது பலிச்சக்கரவர்த்தி வாமனரைப் பார்த்துப் பணிவுடன் “தங்களுக்கு என்ன வேண்டும்? கூறுங்கள் தருகிறேன்” என்று கூறினான்.
உடனே வாமனர் “யான் பிரமச்சாரி. எனவே யான் வாழ்வதற்கு மூன்றடி இடம் தந்தால் போதும்” என்று கூறினார். பலிச்சக்கரவர்த்தி அங்ஙனமே தருவதாக ஒப்புக்கொண்டான்.
அப்பொழுது குலகுருவாகிய சுக்கிரர், பலிச்சக்கரவர்த்தியைத் தனியாக அழைத்தார். “வாமனவடிவில் வந்திருப்பது திருமால். உன்னை அழித்துத் தேவர்களுக்கு நன்மை செய்ய வந்துள்ளார். எனவே நீ மூன்றடி இடம்தானம் கொடுக்காதே” என்று கூறினார். “யான் சொன்ன சொல் தவறமாட்டேன். திருமாலுக்குத் தானம் கொடுத்தால் அஃது எனக்குப் பெருமையாகும். மேலும் என்குலம் மேன்மை அடையும்” என்றான் பலிச்சக்கரவர்த்தி.
பலிச்சக்கரவர்த்தி தன் மனைவியைக் கெண்டியில் நீர் கொண்டுவரச் சொன்னான். நீரை வார்த்துத் தானம் கொடுக்கத் தொடங்கினான். அப்பொழுது சுக்கிரர் வண்டுருவில் கெண்டியின் மூக்கை அடைத்துக் கொண்டார். அதனை உணர்ந்த வாமனர் தர்ப்பைப் புல்லை எடுத்து கெண்டியின் மூக்கில் குத்தினார். அது வண்டு உருவில் இருந்த சுக்கிரர் கண்ணைக் குத்தியது. உடனே அலறிக் கொண்டு அவர் வெளியே வந்தார். பிறகு பலிச்சக்கரவர்த்தி நீர்வார்த்துத் தானம் கொடுத்தான்.
வாமனர் தானம் பெற்ற பிறகு தம் குட்டை வடிவம் மாறி நெட்டை வடிவம் ஆனார். ஓரடியால் பூமியை அளந்தார். மறு அடியால் ஆகாயத்தை அளந்தார். “இன்னும் ஓர் அடிக்கு இடம் எங்கே?” என்று பலிச்சக்கரவர்த்தியைக் கேட்டார்.
அதனைக் கண்ட பலிச்சக்கரவர்த்தி ஆணவம் அடங்கினான். கைகூப்பி வணங்கினான். “தலைவரே! நான் வாக்குத் தவறமாட்டேன். இதோ என்னுடைய தலை இருக்கிறது. மூன்றாவது அடியை என் தலையிலே வைத்து அளக்க வேண்டுகிறேன். அதனால் யான் பெருமை அடைவேன்” என்று கூறித் தலைவணங்கி உட்கார்ந்தான்.
பலிச்சக்கரவர்த்தியே வாக்கைக் காப்பாற்றும் நீ வானவருக்கும் கிட்டாத பதவியை அடைவாய். அடுத்த யுகத்தில் இந்திர பதவியையும் அடைவாய். அதுவரை பாதாளத்தை ஆண்டு வருக. நீ எப்பொழுதும் என்னைப் பார்த்த வண்ணமாக இருப்பாய். அதனால் உனக்கு ஒரு தீங்கும் வராது” என்று கூறி மூன்றாவது அடியை அவன் தலைமீது வைத்தார். உடனே பலிச்சக்கரவர்த்தி பாதாளத்தை அடைந்தான். இதனை அப்பர் சுவாமிகள்:
விண்ணினை விரும்ப வைத்தார்
வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார்
பக்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட
மாலினுக்கருளும் வைத்தா
கண்ணினை நெற்றி வைத்தார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே
என்று அருளுகின்றார்.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
சிவராத்திரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026