ஓர் இரவு
கதையாசிரியர்: ஆலமர் செல்வன்
கதைத்தொகுப்பு:
குடும்பம் 
கதைப்பதிவு: August 1, 2026
பார்வையிட்டோர்: 190
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னிரவு
விளக்கையெல்லாம் அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாயிற்று. இரவுவிளக்கு மட்டும் எரிந்தபடி இருந்தது. மின்விசிறி மெல்லிய சப்தத்துடன் காற்றை விசிறிக்கொண்டு இருந்தது. அறையில் இருக்கும் பொருட்கள் தங்களின் இருப்பை இரவுவிளக்கு வெளிப்படுத்துவதை விரும்பாததுபோல அரை இருட்டில் ஒளிந்துகொண்டு எங்களையே பார்ப்பதுபோலத் தோன்றியது.
எனக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மெத்தையில் பக்கத்தில் படுத்திருக்கும் என் மனைவியை நோக்கினேன். அவிழ்ந்து கிடந்த கூந்தல் காற்றில் அலைஅலையாய் புரள சிறுகுழந்தைப் போல் இதழ்களில் புன்னகை தவழ உறங்கிக்கொண்டு இருந்தாள். அவளின் கூந்தலில் மின்னல் கீற்றுகள்போல நரைமயிர்கள் பளிர் எனத் தெரிந்தன. அவளை வயது வந்த பிள்ளைகளுக்குத் தாய் எனக் கூறவியலாது. அவளின் சுகநித்திரையைக் கலைத்து அவளை எழுப்புவதற்கு மனம்வரவில்லை. ஆனால், இப்போது அல்லாமல் வேறு சரியான சமயம் வாய்க்காது.
அபி.. அபி… அவள் தோள்தொட்டு எழுப்பினேன். அபி. அபிராமி… தொடர்ந்த என் உசுப்பல்களால் அவள் விழித்துக்கொண்டாலும் விழிகளைத் திறவாமல் அரை உறக்க மயக்கத்துடன் தன் சயனநிலையை மாற்றித் திரும்பி படுத்துக்கொண்டாள்.
அ.பி… அபி…நான் மீண்டும் அவள் மெய்த் தீண்டி சற்று வலுவாகவே அவளை விழித்தெழச்செய்ய, அவள் தன் சயனநிலைமாறி மல்லாந்து படுத்துப் புறங்கையால் கண்களைக் கசக்கிப் பின் இமைகளைத் திறந்தும் மூடியும் சோம்பலுடன் ஒரு வினா பார்வையை என்மேல் எறிந்தாள்.
பேச முனைந்த நான் வார்த்தைகளின்றி மௌனிக்க, என் மௌனம் கண்டு அவள் கண்களை மூடியபடி “இன்னிக்கு வேண்டாங்க. உடம்பு சரியயில்லை” என்று சொல்லிவிட்டுப் புரண்டுப் படுத்துக்கொண்டாள்.
பல மாதங்களாக அவனின் நாசுக்கான மறுதலிப்பை எதிர்கொண்ட நான் அதற்கான காரணத்தை அறிவேன். எனினும், இன்று என் விழைவு அதற்காக அல்ல என்றும், இன்று எப்படியும் அவளிடம் அதைப்பற்றிப் பேசி விடுவது என்றும் மனத்தில் கொண்டு “அதுக்கில்லை.. அபி. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றேன்.
அபி மௌனத்தையே பதிலாக அளித்தாள். “அபி உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”. “சரி சொல்லுங்க” அபியின் சயனநிலை மாறாமல் குரல் வந்தது.
வசனம் மறந்த நாடக நடிகன் போலத் தொண்டையில் இருந்து செருமல் வெளிப்பட்டது.
என் தயக்கம் கண்டு அவள் குரல் மீண்டும் வியப்புடன் வினவியது “என்னன்னு சொல்லுங்க”
“சரி நேராகவே விஷயத்துக்கு வரேன். நான் நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் அபி”. ‘என்னது’ என்ற பொருளில் மீண்டும் ஒரு விழிவினாஅம்பு. “தப்பு பண்ணல ஆனா. தப்புதான்”. அபியின் செவ்விதழ்கள் கோணி முகத்தின் ஒரு புறமாய் ஒருக்களித்து ‘ச்’என்ற ஓசை எழுப்பி மீண்டும் தன்னிலைக்கு மீண்டது. அவள் உறக்கம் கலைந்த எரிச்சலில் “ராத்திரியில் தூங்கவிடாம எதையாவது உளறிக்கிட்டுப் பேசாம படுத்துத் தூங்குங்க, நாளைக்குப் பேசிக்கிலாம்” மீண்டும் துயில்புக முனைந்த அவளைத் தடுத்து நான் சொல்ல ஆரம்பித்தேன்.
“அதை எப்படி உங்கிட்ட சொல்றதுனு தெரியில, என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு, அப்பதான் சொல்லுவேன்”.
“சரி, மன்னிச்சிட்டேன். சொல்லுங்க”.
“சரி…சொல்றேன். அபி ப்ளிஸ் லிசன் டுமி… அன்னிக்கு ஒரு ரெண்டு முணு மாசம் முன்னாடி உனக்குத் தெரியும் நான் அப்ப ஆபிசுக்குப் போகாமா லிவுல இருந்தேன்”.
அபி என் பேச்சில் இடையூடாமல் என் முகத்தையே வியப்புடன் நோக்கியவாறு இருந்தாள். “அப்ப ஒரு நாள் மத்தியான நேரம். வெயில் சுளிர்னு…”
“உங்க வர்ணணையெல்லாம் வேண்டா… நேரா விஷயத்துக்கு வாங்க”. நான் சற்று மௌனிக்க, அபி “சரி நாளைக்குப் பேசிக்கலாம்” என்றாள். “ப்ளிஸ்… அபி சொல்றேன் இரு. அன்னிக்கு லீவுல நான் வீட்டுல தனியா இருந்தேனா, நீயும் எங்கேயோ வெளியில போய் இருந்த… சுந்தரும்… சசியும் காலேஜ் போயி இருந்தாங்க.. அப்ப.ஒரு.சேல்ஸ் கேர்ல், நம்ப வீட்டுக்கு வந்தா” அபிராமி குழப்பத்துடன் என் முகம் பார்த்தாள். நான் தலையைக் குனிந்துகொண்டு அபியின் முகம் பாராமல் பாடம் ஒப்பிக்கும் மாணவன் போல் பேச்சைத் தொடர்ந்தேன்.
“முதல்ல மத்தியான தூக்கத்த கலைச்சிட்டாலேணு எரிச்சலா இருந்தது… எதுவும் வேண்டா… போம்மானு சொன்னேன். ஆனா, அவ ரொம்பக் கெஞ்சுனா.. பாக்க பாவமா இருந்தது- சரி ஏதாவது வாங்கிட்டு அவளுக்கு ஹெல்ப் பண்ணலாமேனு தோணிச்சு. சரி உள்ளே வாமானு கூப்பிட்டேன். அவ ஹால் உள்ள வர செப்பலக் கழட்டற வரைக்கும்கூட எனக்குப் பொறுமையில்லை. பராவாயில்ல, உள்ள வாமானு கூப்பிட்டேன். பணத்த எடுத்து வர உள்ரூமுக்குப் போனேன்.
பணத்த எடுத்துகிட்டுத் திரும்பி வந்தேன். அவ ஃபேனுக்குக் கீழே நின்னுட்டு வியர்வையைக் காய வைச்சுகிட்டு இருந்தா.. வெளிர் பச்சை கலர் புடவை டார்க் பச்சையில அந்த புடவைக்கு மேட்ச்சா ஜாக்கெட், அது அவ வியர்வையில நனைஞ்சி இன்னும் டார்க்கா டிசைன் போட்ட மாதிரி இருந்துச்சு. அப்பதான் அவளை நல்லா கவனிச்சேன். அழகா இருந்தா… உண்மையாவே நல்ல அழகுதான். பச்சக் கிளி மாதிரி…”. நான் அபியை நிமிர்ந்து பார்த்தேன்.
அபி தன் கைவிரல் நகங்களைத் தீவிரமாகக் கடித்துக்கொண்டு என்னையே இமைக்காமல் பார்த்ததபடி இருந்தாள்.
நான் மீண்டும் சொல்லத் தொடங்கினேன். “அவ விக்கறதுக்கு வந்தது சோப்பா, ஊறுகாயானுகட எனக்குத் தெரியாது. எதையோ ஒரு நாலு பாக்கெட் எடுத்துகிட்டேன். என் கையில இருந்தப் பணத்தை அப்படியே அவகிட்ட கொடுத்தேன். ரொம்ப தாங்க்ஸ் ஸார்’ ன்னு சொல்லிட்டுப் பணத்த வாங்கிட்டு எங்கிட்ட சேஞ்சு இல்லையே நீங்கதான் முதல் போணி’ அப்படினா.
சரி பரவாயில்ல மிச்சதுக்கும் ஏதாவது கொடுத்திடுனு நான் சொன்னவுடனே அவளுக்கு ரொம்போ சந்தோஷம். அவ தன் கிட்ட இருந்த பொருள்கள் சிலத எடுத்து டீபாய் மேல வைச்சிட்டு ரொம்ப ஆச்சரியத்தோடும் சந்தோஷத்தோடும் மீதிப் பணம் எல்லாத்துகுமா ஸார் அப்படினு திரும்பவும் கேட்டா. ஆமானு சொல்லிக்கிட்டே ப்ரிஜ்ல இருந்து கூல் டிரிங்ஸ்ஸ எடுத்து ரெண்டு டம்பளர்ல ஊத்தி ஒன்ன அவகிட்ட கொடுத்துவிட்டு சோபாவில் உட்காந்தேன். அவளையும் உட்காந்து கூல்டிரிங்ஸ்ஸ குடிக்கச் சொன்னேன். அவ தயங்குனா, பரவாயில்ல உட்காருங்கனு வற்புறுத்த தயக்கதோட சோபா விளிம்புல உட்காந்துட்டு ரொம்ப தாங்கஸ் ஸார். எல்லோரும் உங்கள மாதிரி இருக்க மாட்டாங்க சிலர் ஏதோ பேயைப் பாத்தாப்போல எங்கள துரத்துவாங்க… அப்படினு அள தொழில் பத்திப் பேச ஆரம்பிச்சா. நானும் அவளோட ஊர், பேர் அவ செய்யிற சேல்ஸ் கேர்ல் வேலையைப் பத்தி எல்லாம் விசாரிச்சேன். அவ சொன்னது ஏதுவும் மனசுல பதியில. மொழி தெரியாத இனிமையான பாட்டை ரசிக்கிறா மாதிரி, அவ சொன்னதை எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தேன். நானும் அவகிட்ட ஏதேதோ பேச்சுக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். எவ்வளவு நேரத்த இப்படி கடத்த முடியும்.
ரொம்ப தாங்க்ஸ் ஸார். நான் கெளம்புரேன் ஸார்… அப்டினு சொல்லிகிட்டே, டீபாய் மேல இருந்த, என்கிட்ட காட்டின மத்த சேல்ஸ் ஐய்ட்டத்தையெல்லாம் எடுத்து அவளோட பையில வைக்க ஆரம்பிச்சா.
எனக்கு எப்படி அவ்ளோ தைரியம் வந்ததுனு தெரியில். மெதுவா எழுந்து போய் தொறந்துக் கிடந்த வாசல் கதவச் சாத்தி தாள் போட்டேன். அவ என்னைக் கவனிக்காம தன்னோட பொருட்களை எல்லாம் பையில எடுத்து வச்சுகிட்டு இருந்தா, நான் மெதுவா அவ பின்னால் போய் நிக்கவும் அவ நிமிந்து நின்னு திரும்பவும் சரியா இருந்துச்சு. ஏதோ ஒரு வேகத்துல அவளக் அப்படியே கட்டிப் பிடிச்சுகிட்டேன். சில வினடிகள் அவளுக்கு எதுவும் புரியல. அப்படியே திகைச்சுப் போய் நின்னுட்டா. நான் இன்னும் இறுக்கமா அவளக் கட்டிப்புடிச்சுகுறேன். ஒரு திமிறித் திமிறி என்னை விட்டு விலகி நின்னு குனிஞ்சு அவ கால்ல இருந்த செருப்பைக் கழட்டிக் கையில எடுத்தா. அடுத்த நொடி எம்முஞ்சில இடி மாதிரி செருப்பால அடி விழுந்தது. அடிபட்ட எடத்துல நெருப்புப் பட்ட மாதிரி காந்தல் காதுல நொய்ய்ய்னு ஒரு சப்தம். எங்கண்ணு முன்னால மின்மினிப் பூச்சிங்க நெறைய பறக்குது. பச்ச, நீலம், செவப்பு, மஞ்சள்னு கலர் கலரா வளையம் வளையமா சுத்துது. நட்சத்திரங்களைகூடப் பாத்த ஞாபகம்”
அபி அப்படியே மலைச்சுப் போய் சிலை மாதிரி இருந்தா. “அபி என்னை மன்னிச்சுடு” பதிலில்லை. நான் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தேன்.
நான் அவ கையப் பிடிச்சேன், மன்னிப்புக் கேட்கதான். அவ எங்கைய ஒதறிட்டு தூரப்போய் நின்னுகிட்டா. அவ கையிலப் போட்டுகிட்டு இருந்த கண்ணாடி வளையல் சிலது ஓடஞ்சி அவகையில கீறி இரத்த காயம். உங் கைய காலா நடுநிசி நெனச்சு கும்பிட்டுக் கேட்குறேன். ப்ளிஸ் இத வெளியில் சொல்லிடாதே… ப்ளிஸ் சத்தம் போடாதே… என்னை மன்னிச்சுடு ப்ளிஸ் ப்ளிஸ். இதையே நான் ஜூரத்துல பினாத்துர மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லிகிட்டு இருந்தேன்.
தீடீர்னு அவ சோபாவுல சரிஞ்சு விழுந்து அழ ஆரம்பிச்சுட்டா குலங்கிக் குலுங்கி ஒரே அழுகை. நான் திரும்பத் திரும்ப என்னை மன்னிச்சுடு என்னை மன்னிச்சுடுனு சொல்லிக்கிட்டே இருந்தேன்.
அவ என்னை நிமிந்து பாத்து, ‘சார். எங்கள மாதிரி பொண்ணுங்க பொழப்புகாக இப்படி வெயில், மழையினு கூடப் பாக்காம நாயா அலஞ்சி கௌரவமா ஏதோ சம்பாதிச்சு எங்க வயித்த, குடும்பத்தக் காப்பாத்துறோம். ஆனா நீங்க.. நான் இப்போ சத்தம்போட்டு ஊரைக் கூட்டுனா உங்க நெலம என்ன ஆகும் தெரியுமா’ அப்படினா.
நான் உன் கால்ல வேணா விழறேன், ப்ளிஸ் என்னை மன்னிச்சுடுனேன். அவ என்னை ஒரு புழுவைப் பாக்குறா மாதிரி பாத்தா. ‘எங்கிட்ட இப்படி நடந்துகிட்ட மொத ஆள் நீங்கதான். இத நான் வெளியில யார்கிட்டயாவது சொன்னா எனக்கும்தான் அவமானம். இனிமே யார்கிட்டயும் இப்படி நடந்துக்காதிங்க’ அப்படினு சொல்லிட்டு அவ மணிபர்ஸ்ஸ தெறந்து நான் கொடுத்த பணத்தை எடுத்து எம்மூஞ்சில விசியெறிஞ்சுட்டு விடுவிடுனு கதவ தொறந்துகிட்டு வெளியே போயிட்டா.
இதுதான் அபி அன்னிக்கு நடந்தது. நான் தப்புப் பண்ணிட்டேன். உனக்குத் துரோகம் பண்ணிட்டேன். இத உங்கிட்ட சொல்லணும், சொல்லணும் அப்படினு தவியா தவிச்சுட்டு இருந்தேன். இப்பச் சொல்லிட்டேன். இதுவரையிலும் என் வாழ்க்கையில நடந்த எதையும் உங்கிட்ட மறச்சதில்லை. அன்னிக்கு என்னமோ எனக்குப் பைத்தியம்தான் பிடிச்சுடுச்சுனு நெனக்கிறேன் நல்லவேளை தப்பிச்சுட்டேன். ஒருவேளை அவ என் ஆசைக்கு சம்மதிச்சு இருந்தா – ஒருவேளை அப்படி ஒரு தப்பு நடந்து இருந்தாலும் நா அத உங்கிட்ட சொல்லி இருப்பேன். நீ என்னை மன்னிச்சுடுவேனு தெரியும். அது போல நீ தவறினாலும் நானும் உன்னை மன்னிச்சு ஏத்துபேன், அபி.. அது வந்து என்னை மாதிரி நீயும்…”
அபி சட்டென “என்ன சொன்னிங்க… என்ன சொன்னிங்க” என பதட்டமாய்க் கேட்க “இல்ல அபி நான் ஏதேதோ உளறுறேன்.. நாம்ப ரெண்டு பேருக்கு இடையிலேயும் எந்த ரகஸ்சியமும் இல்லையே. அபி நான் சொல்வது எதையும் கேட்கும் நிலையில் இல்லை. ஹிஸ்டீரியா வந்ததுபோல் ஆவேசத்துடன், கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் என்மீது எறிந்துபடி, “என் கண்முன்னாடி நிக்காதிங்க. வெளியில போங்க, வெளியில போங்க எனத் தொண்டையே கிழிந்துவிடும் என அச்சம் கொள்ளத்தக்க வகையில் கீறிச்சிட்ட உரத்தக்குரலில் என்னை அறைக்கு வெளியேத் துரத்த, நான் வெளியேற அறையின் கதவு நாராசமான ஓசையுடன் மூடிக்கொண்டது.
நடுநிசி
அன்புள்ள கணவனுக்கு, உங்கள் அன்பு மனைவி அபிராமி எழுதும் இல்லை இல்லை அன்புள்ள இல்லை. கணவனுக்கு, உங்களும் தேவையில்லை. சரி இது ஏதும் தேவையில்லை. உங்களுக்கு நான் எழுதும் கடிதம். எழுதி உங்களுக்குத் தராமல் கிழித்து இல்லை எரிக்கப்போகும் கடிதம். பின் ஏன் இதை இப்படி நடுநிசியில் வேலைமெனக் கெட எழுதிகொண்டு இருக்கிறேன். உங்களை முன்னிறுத்தி என்னுடன் நானே பேசிகொள்ளும் ஒரு வழிமுறை, அவ்வளவுதான். சரி விஷயத்திற்கு வருகிறேன். என்னால் நம்ப முடியவில்லையே. நீங்களா இப்படி. என்ன ஆயிற்று உங்களுக்கு. யாரோ ஒருத்தியிடம் தவறாக நடந்துகொண்டு, செருப்படி வாங்கியதையும் என்னிடம் சொல்லி விட்டு இப்போது குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டும் இருப்பீர்கள்.. என்னிடம் பாவ மன்னிப்புப் பெற்ற மனத்துடன். என்ன சொன்னீர்கள் கடைசியாக… நானும் அப்படி.. தவறி இருந்தால் என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வீர்கள் அப்படித்தானே. ஒருவேளை… சரி..நான் தவறி இருந்தாலும். இருந்தாலும் இல்லை இருக்கிறேன் நான் உங்களுக்கு உண்மையாக இல்லை. இதை உங்களிடம் நேரில் சொன்னால் எப்படித் திடுக்கிடுவீர்கள். உங்கள் முகம் எப்படி மாறும்! நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
உங்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கு நான் என்ன செய்ய முடியும். உங்களின் சறுக்கலைச் சொல்லிவிட்டு சுமை இறக்கிய நிம்மதியில் உறக்கத்தில் ஆழ்ந்து மூழ்கி இருப்பீர்கள் ஆனால் நான்…
நானே தேனில் வீழ்ந்த ஈயென. காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அது உண்மைதான் என்று இப்போது புரிந்து கொண்டேன். என் வயது என்ன. அவன் வயது என்ன… திருமண வயதில் இருபிள்ளைகளுக்குத் தாயான ஒரு பெண்ணா இப்படி என் விஷயம் வெளியே தெரிந்தால் நீங்கள் மட்டுமல்ல ஊர் பேசும், உலகமே பேசும். பெண் அதுதானே இங்கு இடிக்கிறது. ஓர் ஆண் திருமணத்திற்குப் பிறகு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டால், அவன் ஆம்பிள அப்படிதான் இருப்பான். சின்ன வீடு என்பது சமுக அந்தஸ்த்து அவனுக்கு. இதுவே பெண் என்றால் கள்ளக் காதல், சோரம் போனாவள். பெண் இனத்திற்காகவே இந்த வார்த்தையை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். பெண் செய்யும் அதே தவற்றை செய்யும் ஆணை யாராவது சோரம் போனவன் என்று விளித்திருக்கிறார்களா? ‘அபி நீயா இப்படிப் பேசுகிறாய்? உனக்கு நான் என்ன குறை வைத்தேன்’ இது தானே இப்போது நீங்கள் கேட்க நினைப்பது. ஆம் நானேதான். என்ன இப்போது? நீங்கள் எனக்குக் குறை ஒன்றும் வைக்கவில்லை, ஒப்புக்கொள்கிறேன். சொல்லப்போனால் இதுவரையில் எனக்காகவே நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள் ஆயினும் நான் ஏன் இப்படி?
இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிப்பது கடினம், விடை தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் புரிந்தாலும் புரியாவிட்டாலும். என்ன ஒன்றும் புரியவில்லையா எனக்கும்தான்.
எப்படித் தொடங்கியது எனக்கும் அவனுக்கு இந்த உறவு தெரியவில்லை, விடமுடியவில்லை. விலக இயலவில்லை அவனைவிட்டு என்னை மன்னித்து விடுங்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டேன். இப்போது திருப்திதானே. உங்கள் பெயரையே உச்சரித்து கொண்டிருந்த என் நாவில் அவன் பெயர், நாவில் மட்டுமா என் ஊனிலும் ஊன் உள்நின்ற உயிரிலும் அமிர்தமாய் அவன். காலனாலும் பிரிக்கமுடியாது என்னை அவனிடமிருந்து. அவன்தான் என்னை ஏற்கனவே கொன்றுவிட்டானே. புரியவில்லையா… உங்களுக்குப் புரியாது. காமம் கண்ணை மறைக்க ஏதேதோ ஊளறுகிறேன் என்று நினைப்பீர்கள். இத்தனை வருட தாம்பத்தியத்தில் உங்களிடம் அனுபவித்தறியா ஏதோ ஒன்று… எனக்கு இரை அவனா? அவனுக்கு இரை நானா? இருவருக்கும் இருவரே இரையானோம், தின்னத் தின்னத் திகட்டாத சுவை இறைச்சியாய் அவனுக்கு நானும் எனக்கு அவனும். கொழுந்து விட்டெறியும் போகத்தீயில் ஆகுதியாய், பனிபடர்ந்த மலை உச்சியிலிருந்து உருகியோடும் அக்னி ஆற்றில் நீந்தி விளையாடும் அந்தச் சுகம்.. உங்களுக்குப் புரியாது…
பச்சை படர்ந்த மரகதப் புல்வெளியில் துள்ளி விளையாடும் ஜோடி புரவிகளின் ஒத்திசைவில் எழும் நுண்ணதிர்வுகள் ஆயிரம்ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகளாய் உருமாறி விண்ணில் நிந்தும் அந்த அற்புத கணம். நீங்கள் அறியாதது…
சர்ப ஆலிங்கனம். ஊசி நுனியாய் வாலை தரையில் ஊன்றி வானில் எழுந்து உடல் பின்னிப் பினைந்து நாட்டியம் புரிந்து நஞ்சை அமுதாக்கும் அந்த வித்தை தெரியுமா உங்களுக்கு. கொஞ்சம் பொறுங்கள். அவனின் லீலைகள் பற்றிப் பேசும் போதே இளகி ஈரமாகி விட்டது என் இதயம். இனிமேலும் தொடர இயலாது என்னால். என் உணர்வுகளுக்கு எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை. சரி சுருங்கச் சொல்கிறேன்.
அந்த நிமிடங்களில் மனம் இறந்தநிலை அடைந்தேன். மரணத்தின் சுவை அறிந்தேன். பிரபஞ்சத்தால் என்னையும், என்னுள் பிரபஞ்சத்தையும் உணர்ந்தேன். பின் நானும் அழிந்தேன். புரியவில்லையா..புரியாது உங்களுக்கு எதுவுமே புரியாது… இதோ என் கைப்பேசி அழைக்கிறது. இந்நேரத்தில் என் உயிரின் அழைப்பைத் தவிர அது வேறு யாராய் இருக்கும்.
உங்களின் ச்சி. இல்லை.. இல்லை என் உயிரின் உயிராகிய – அபிராமி.
பின்னிரவு
இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் உங்கள் கண்கள் சிவந்தும் வீங்கியும் இருக்கிறதே, அழுதீர்களா என்ன? என்ன உருவம் இல்லாமல் குரல் மட்டும் வருகிறதே என்று பார்க்கிறீர்களா? நீங்கள்தான் நான். உங்களின் மனக்குரல்தான் நீங்கள் கேட்பது. என்னைப் பொதுவாக மனசாட்சி என்பார்கள். நீங்கள் குழப்பம் அடைகிறீர்கள். பொதுவாகத் தீயவர்களுடன்தானே மனசாட்சி பேசும் என்று இதையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நல்லவர்தான். உங்களின் நிழல் போல இணைபிரியாதவன் நான் சரி இப்போது கொஞ்சம் நேர்முக வர்ணனை.
உறக்கமற்றுச் சோர்ந்துபோய் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருக்கும் நீங்கள் இப்போது மெல்ல எழுந்து சென்று படுக்கை அறையின் கதவைக் கைகளால் தள்ளப் பார்க்கிறீர்கள். அது உட்புறமாகச் சாத்தபட்டு இருக்கிறது. கதவைத் தட்டி ஓசையெழுப்ப உங்களின் கரம் மேலேழும்புகிறது. தயங்கிப் பின் கீழ் தாழ்கிறது. உங்களின் சிரசு இல்லை அல்லது வேண்டாம் என்ற பொருளை வெளிப்படுத்துவதைப் போல் இடவலமாகப் பக்கவாட்டில் அசைகிறது.
இதேபோன்று இன்றைய இரவில் எத்தனை முறை அபிராமியை…
எழுப்பி அவளிடம் பேசுவதற்கு முயற்சி செய்து இருப்பீர்கள். அவளின் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து இருக்கிறீர்கள்.
உங்களின் கண்கள் சுவரில் இருக்கும் கடிகாரத்தில் நேரம் பார்க்கிறது. விடிவதற்குச் சில மணி துளிகளே இருக்கிறது. பிறகு அங்கும் இங்கும் உலவத் தொடங்குகிறீர்கள். அபிராமி இருக்கும் படுக்கை அறையில் ஏதோ சப்தம் கேட்பதைப் போல் உணர்ந்து, அவள் விழித்துக்கொண்டு விட்டாள். இப்போதே அவளிடம் பேசி ஒரு முடிவுக்கு வந்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள். என்ன முடிவு?
முன்னிரவிலேதான் பேசி விட்டீர்களே. உங்கள் மனத்தில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்து விட்டீர்களே. என்ன? என்ன சொல்ல வருகிறீர்கள். என்ன? அது எல்லாம் உமது கற்பனையா! உண்மையாகதான் சொல்கிறீர்களா! நல்ல கதைதான் போங்கள்! பரவாயில்லை. கதை கொஞ்சம் சொதப்பலாக இருந்தாலும் நன்றாகதான் இருந்தது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நீங்களும் ஒரு சிறந்த கதாசிரியர் ஆக முடியும். அது சரி. ஏன் இப்படி ஒரு பொய்யை உண்மையைப்போல் சொன்னீர்கள்? இருங்கள், இருங்கள் ஏன் இப்படிப் பைத்தியம் பிடித்ததுபோல் தலையில் உங்கள் கைகளால் மடார் மடார் என அடித்துக் கொள்கிறீர்கள். அப்படி நான் என்ன கேட்டுவிட்டேன்.
மனிதர்கள் தவறு செய்வது சகஜம்தான். நான் உங்களைச் சொல்லவில்லை. அந்த சேல்ஸ்கேர்ல் விஷயம்தான் உமது கற்பனை என்று தெரியுமே.
அபிராமியின் விஷயம்தான். அது உங்களுக்குத் தெரியும் என்று அவளுக்குத் தெரியாது இல்லையா. நீங்கள் அபிராமியை மிகவும் மிகவும் நேசிக்கிறீர்கள். அதனால்தான் அவள் மனம் நோகாமல் அவள் கொண்டிருக்கும் மையலிலிருந்து அவளை மீட்டுவர முயல்கிறீர்கள். இல்லையா?
உங்களின் சிவந்த தூக்கம் தொலைத்த விழிகளால் மீண்டும் சுவர்க் கடிகாரத்தில் நேரம் பார்கின்றீர்கள். பிறகு நீர்க்குடுவையிலிருந்து சிறிது நீரைப் பருகுகிறீர்கள். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்று எண்ணுகிறீர்கள். திருமணவயதில் உள்ள அவர்களின் திருமணம் எவ்வாறு நிகழும்? அவர்களுக்கும் அபிராமியின் இந்தச் சறுக்கல் தெரிந்தால் எத்தகைய அதிர்ச்சிக்குள்ளாவார்கள். அதை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்றும் உங்கள் எண்ணம் தொடர்கிறது. சிந்தித்துச் சிந்தித்து கடும் வேதனையும் உடல் அயர்ச்சியும், கபாலமே பிளந்து விடுவது போன்ற தலைவலியிலும் இரு கைகளாலும் தலையை இறுகப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள்.
நீங்கள் தவறு செய்தது போல் ஒரு சம்பவத்தை அபிராமயிடம் கூற அதைக் கேட்ட அவள் அவளின் தவற்றை உங்களிடம் கூறி உங்கள் மடியில் விழுந்து கதறி அழுவாள் என்றும் நீங்கள் பெருந்தன்மையுடன் அவள் தலையைத் தடவி, நடந்ததையெல்லாம் தீயக் கனவென நினைத்து மறந்து விடும்படி கூறி அவளை மன்னித்து ஏற்றுக் கொள்வதாகவும் நீங்கள் கண்ட கனவு, நீங்கள் போட்ட நாடகம் பலிக்கவில்லை என்று வருந்துகிறீர்கள். ஆயினும் நீங்கள் நினைத்தது காலம் தாழ்ந்தும் நிறைவேறும் என நம்பிக்கை கொள்கிறீர்கள்.
இப்போது நீங்கள் அறைக் கதவைத் திறந்து கொண்டு பால்கணிக்குச் சென்று அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்தபடி முன்பு நீங்கள் முடிவெடுத்துப் பிறகு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி கைவிட்ட தற்கொலை முயற்சியை அல்லது அபிராமியைக் கொலைசெய்யும் முயற்சியை இப்போது செயல்படுத்தலாமா என்று யோசித்து மீண்டும் அதைக் கைவிடுகிறீர்கள். இனிமேல் இந்த மாதிரி தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையெல்லாம் வேண்டாம் என்றும் நேரடியாக அபிராமியிடம் அந்த விஷயத்தைப்பற்றிப் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும் எனவும் அதன் விளைவுகள் என்ன மாதிரி இருந்தாலும் அதை எதிர்கொள்வது என்றும் முடிவெடுக்கின்றீர்கள். உங்களின் விழி இமைகள் தாமாகவே மூடிகொள்கின்றன.
நீங்கள் இப்போது கண்விழிக்கும்போது உங்கள் எதிரே அபிராமி நிற்பதைப் பார்கிறீர்கள். இது அவள்தானா அல்லது கனவில் தோன்றும் தோற்றமோ, பிரமையோ, இவை ஏதுமல்ல என அபிராமியின் ஸ்பரிஸம், உங்களுக்கு உணர்த்துகிறது. ஒரு கையால் உங்களைத் தொட்டு எழுப்பிக்கொண்டு மறுகையில் தேநீர் கோப்பையை ஏந்தியபடி.
எழுந்தமர்ந்து வெளியை நோக்க, இன்னும் விடியவில்லை. அபிராமி உங்களுகாகவே இந்நேரத்தில் தேநீர் தயாரித்து இருக்கிறாள். நீங்கள் அபிராமியிடமிருந்து தேநீர் கோப்பையை வாங்கிக்கொள்கிறீர்கள். இதுவரை நிகழ்ந்த தீய நிகழ்வெல்லாம் கனவா? இதோ இந்த நொடிதான் உண்மை. அபிராமி புன்னகையுடன் உங்களைத் தேநீரை அருந்தும்படி சைகை செய்கிறாள்.
தேநீரை ஒரு மிடறு விழுங்கிய உங்கள் மனத்திலும் உடலிலும் உற்சாகம் பிறக்கிறது. இதோ அபிராமி இப்போது உங்கள் காலடியில் விழுந்து அழுது அரற்றித் தன் இரகசிய உறவை, தன்னனுடைய துரோகத்தை உங்களிடம் சொல்லித் தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி கேட்கப் போகிறாள்.
அந்நிகழ்வை எதிர்கொள்ள நீங்களும் உங்களைத் தயார்படுத்திக் கொள்கிறீர்கள். ‘அபி. இதைதான் நான் எதிர் பார்த்தேன்’ என் அபியைப் பற்றி என் உயிரைப் பற்றி எனக்குத் தெரியாதா. எல்லா விஷயமும் எனக்குத் தெரியும். அதையெல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்து விடு. இது (என்) உங்கள் மணஉதடுகள் உச்சரிக்கும் ஒத்திகை வார்த்தைகள். மீண்டும் ஒரு மிடறு தேநீர்.
அபிராமியின் முகம் கலவரமடைகிறது. சிவந்த முகம் வெளுக்க, வியர்வை பொங்க உதடுகள் துடிக்க அழத் துவங்குகிறாள்.
“அழாதே அபி, அழாதே. நாம் புதுவாழ்வு துவங்குவோம். பேச துவங்கிய உங்கள் குரல் உங்களுக்கே கேட்கவில்லையே. சப்தமாகப் பேச முற்படுகிறீர்கள். தொண்டையில் இருந்து குரலே எழும்பவில்லை. ஏதோ அதலபாதாளத்தில் வீழ்ந்துகொண்டு இருப்பதுபோல் உங்கள் உணர்வு உங்களை விட்டு விலகிக்கொண்டு இருப்பதுபோல் ஓர் உணர்வு இதோ அபிராமி ஏதோ பேசத் துவங்குகிறாளே.
அழுகையின் ஊடே அபிராமி பேசத் துவங்குகிறாள். எல்லா விஷயமும் தெரிஞ்சு போச்சுணு எங்களுக்கும் எனக்கு வேற வழி தெரியில எனன மன்னிச்சிடுங்க. உங்களுக்கு தெரிஞ்சு போச்சு. நீங்க எங்கிட்ட சொன்… அதான் சேல்ஸ் கேர்ல் மேட்டர் அதுவும் உங்கப் பொய், கற்பனைக் கதை. அது நீங்க என்னை ஆழம் பாக்க போட்ட நாடகமுனு எனக்குத் தெரியும். என்னால அவன் இல்லாம இருக்கமுடியாது. அதே நேரம் உங்ககூடயும் பொய்யான வாழ்க்கையை எத்தனை நாள்தான் வாழ்ந்துகிட்டு இருக்க முடியும். அதனால இந்த விஷயம் தெரிஞ்ச ஒரே ஆளான உங்கள… அதிர்ச்சியா இருக்கா… நம் பசங்களப் பத்திக் கவலைப் படாதீங்க. இன்னொரு நல்ல விஷயம். நம்ப பெண்ணுக்குக் கல்யாணம் ஆகப் போகுது கூடிய சீக்கிரம். ஆனா நீங்கதான் இருக்க மாட்டிங்க. மாப்பிள்ளை யார் தெரியுமா? ஆமா அவன்தான் வீட்டோட மாப்பிள்ளை.
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். நான்தான் உங்கள் மனசாட்சி பேசுகிறேன். இப்போது நீங்கள் உங்கள் மனஉதடுகளில் இருந்து (என்மூலமாக) எச்சிலை அபிராமியின் முகத்தில் தூயென உமிழ்கிறீர்கள். காரணம் உங்கள் உடல்தான் இயங்கவில்லையே. இனி தொடர்ந்து அபிராமியின் பேச்சைக் கேட்போம்.
இது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப நாளா போட்ட பிளான். இன்னிக்குதான் சரியான சமயம் வாய்ச்சது. நீங்க குடிச்ச டீயில விஷத்த கலந்துட்டேன். உலகத்த பொருத்தவரை உங்க மரணத்துக்குக் காரணம் மாரடைப்பு. அபிராமி இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறாள். அவள் குரலை நீங்கள் கிணற்றுக்குள் இருந்து கேட்பதைப்போல் உணர்கிறீர்கள். அபிராமியின் உருவமும் மங்கலாக, கலங்கலாகத் தெரிகிறது. கடைசி முயற்சியாக உங்கள் உடலில் உயிரைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக உங்கள் உடலுக்கு உணர்வூட்டுகிறீர்கள். அணையும்விளக்கு கடைசி நொடியில் பிரகாசமாய் எரிவதைப் போன்று உங்கள் புலன்கள் விழிப்படைகிறது. வெளியை நோக்கும் உங்கள் கண்கள் கண்ட கடைசி காட்சி ஓர் இரவு முடிந்த பின்னர் வரும் விடியலை.
– பிப்ரவரி 2009, உயிர் எழுத்து.
தொடர்புள்ள சிறுகதைகள்
முள்
ஜே.எம்.சாலி
August 1, 2026
கடவுள் போட்ட முடிச்சு!
கல்பனா ராஜகோபால்
August 1, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
August 1, 2026