கிழக்கின் வெளிச்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2026
பார்வையிட்டோர்: 125 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீண்ட நேரமாகக் காத்திருக்க வேண்டியிருந்தது. 

எப்படிப் பார்த்தாலும் ‘கியூ’ அசைவதாகத் தெரியவில்லை, 

செக்யூரிட்டி கார்ட் இங்கு தான்தான், எல்லாம் என்பது போல் வெகு மிடுக்காக நின்றான். அவனை மீறி உள்ளே போக முடியாது தான். ஆனால் அவன் தனக்கு வேண்டியவர்களை யெல்லாம் இடையிடையே உள்ளே விட்டுக் கொண்டிருந்தான். 

இவளுக்கு நிமிடங்கள் நகர, நகரத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. யாழ்ப் பாணத்தில் அம்மா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். கல்யாணமாகிக் கணவனோடு கொழும்புக்கு வந்தது தான். A9 பூட்டியவுடன் யாழ்ப்பாணப் பக்கமே போக முடியவில்லை. மகன் பிறந்து அவனுக்கு இப்போது இரண்டு வயது ஆகிறது. அம்மாவால் ஆசையோடு பேரக்குழந்தையைப் பார்க்கக்கூட முடிய வில்லை. அதற்குள் நோயோடு போராடிக் கொண்டிருக்கிறாள்.  

அவளையும் சின்னவனையும் பார்க்கும் ஆவலோடு தாய் உயிரைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள் எனும் தந்தி நேற்றுத்தான் இவளுக்குக் கிடைத்தது. துடித்துப் பதைத்து யாழ்ப்பாணம் செல்வதற்கு விமானப் பயணத்திற்கு அனுமதி பெற வந்தவளுக்கு இப்படி ஒரு நிலை. 

பச்சைக் கலரில் பஞ்சாபி போட்டுக் கொண்டிருந்த ஒருத்தி மெல்ல உள்ளே நுழைந்தாள். குதிக்கால் உயர்ந்த செருப்பு போட்டிருந்த அவளிடம் செக்யூரிட்டி கார்ட் வழிந்து வழிந்து, கதைத்தான். அடுத்து சில நிமிடங்களுக்குள் அவள் உள்ளே சென்று விட்டாள். ‘சீ..! என்ன கேவலம்….’ என நினைத்துக் கொண்டாள் இவள். இதுவரை இவ்வாறான விமானப் பயணக் கம்பெனிகளுக்குள் வரவேண்டி நேர்ந்ததில்லை அவளுக்கு. ஆனால் சுமதி சொல்லி யிருக்கிறாள் இவளுக்கு; பல்கலைக்கழக மாணவியான சுமதி இரண்டு, மூன்று விடுமுறைகளுக்கு யாழ்ப்பாணம் போய் வந்திருக்கிறாள். இவ்வாறு யாழ்ப்பாணம் போவதற்கு விமானச்சீட்டுப் பெற்றபின் திடீரென்று விமானப் பயணிகள் திருப்பி அனுப்பப்படுவது பற்றியும், 2ஆவது விமானப் பயணிகள், 3ஆவது விமானத்திற்கு மாற்றப்படுவது பற்றியும் விலாவாரியாகச் சொல்லியிருக்கிறாள். அதிலும் ஒவ்வொரு தடவையும் விமானச்சீட்டுப் பெறச் செல்லும் போதும் இங்கு செலவழிக்க நேரும் நேரம் பற்றி நிறையக் குறைப்படுவாள்.

“எவ்வளவு நேரமக்கா காவலிருப்பது? ஒருத்தி போனை வைத்துச் சுழற்றிக் கொண்டிருப்பாள். இன்னொருத்தி போட்டிருக்கிற ஜீன்சைக் காட்டுறதுக்காக அடிக்கடி எழும்பி, எழும்பித் திரிவாள். பெடியள் நுனிநாக்கில் இங்கிலிஸ் கலந்து கதைப்பாங்கள். யாழ்ப்பாணம் ஓடுற பிளேனிலை யாழ்ப்பாணச் சனம் வந்துதுகளோ தெரியாது….?” பொருமித்தீர்த்த சுமதியின் ஆதங்கங்களைப் பார்ப்பதற்கு இவளுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஆனால் கியூ இலேசில் நகராது போல் அல்லவா இருக்கிறது! 

“ரிக்கெற்கொன்போம் பண்ணவந்த ‘பசஞ்சஸ்’ உள்ளே வாங்கோ….” செக்யூரிட்டி கார்ட் உரத்துச் சொன்னதும் நான்கைந்து பேர் உற்சாகமாக எழுந்து உள்ளே போனார்கள். நான்கைந்து இருக்கைகள் காலியாகின. மற்றவர்கள் எழுந்து, இடம்மாறி முன்னணிக்கு வந்தனர். இப்போது இவள் முன்னால் பத்துப் பேரளவில் இருந்தனர். நேரம் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இவள் சமைத்து வைத்து விட்டுப் பத்து மணிக்கு வந்திருந்தாள். இனிச் சின்னவன் இவளைக் காணாது அழக் கூடும். 

“எப்பவுக்கு இருக்காம் ரிக்கற் …?” பக்கத்தில் இருந்த முதிய பெண் மற்றவளிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். யாழ்ப்பாணத்தில் இருந்தபோது பக்கத்து ஊருக்குக் கூடத் தனியே போகாத பெண்கள் இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு, கொழும்பிலிருந்து வெளிநாட்டுக்குத் தனியே விமானத்தில் கிளம்பத் துணிந்துவிட்டனர். என்ன முன்னேற்றம்…? இந்த முன்னேற்றத்தை நினைத்து அதற்கான காரணங்களை ஆராய் ந்து பெருமைப்படுவதா? வருத்தப்படுவதா….? 

“எப்ப போகப் போறீங்கள் நீங்கள்…?” அவள் திரும்பி இவளைக் கேட்டாள். 

“நாளைக்கே போனாலும் நல்லம். ரிக்கெற் தராட்டி என்ன செய்யிற? அவங்கள் தாற நாளுக்குத்தானே போகேலும்…” 

“ஓமோம்! எங்கட தேவைப்படி நாங்கள் போகேலா. அவர்கள் சொல்லுற திகதிக்குத் தான் எங்கட தேவையை நிறைவேற்றோணும். என்ன செய்யிறது…? இவ்வளவு காசைக் குடுத்தாலும் திருப்தியில்லாமல் தான் போகோணும்…” 

இவளால் வேறு என்ன தான் செய்யமுடியும். கண்கள் கனத்துப் போகக் காத்திருந்தாள். நேரம் ஒரு மணியான போது அலுவலக அறைக்குள் போக முடிந்தது. உள்ளேயும் ஏற்கனவே சென்ற சிலர் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஓவ்வொரு வரும் நிறுவன ஊழியர்களிடம் இருபது நிமிடங்களுக்கு மேல் செலவழிக்க வேண்டியிருந்தது. ‘ஒரு ரிக்கெற் போட்டுக் கொடுப்பதற்கு இவ்வளவு நேரமா செல்லும்…? ஏதோ தாங்கள் தான் ராஜாங்கத்தை ஆள்வது போல் அல்லவா இருக்கிறது அவர்கள் செய்கை’ இவளுக்கு அழுகையையும் மீறிக் கோபம் வந்தது. கோபம் காரியத்தைக் கெடுத்துவிடும் என்பதால் பேசாமல் நின்றாள். 

ஒவ்வொருவராய் தமது அலுவல்களை முடித்து எழும்ப இவள் ஒரு ஊழியரின் முன் சென்று அமர்ந்தாள். அந்தப் பெண் கைகளை நீட்டிச் சோம்பல் முறித்தப்படி “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அக்கா. லஞ்ச் எடுத்திட்டு வாறன்…” என்றபடி எழுந்து போனாள். இவளுக்கு ‘சர்’ ரென்று ஆத்திரம் வந்தது. அடுத்த கதிரையில் அவளுக்குப் பின்னால் வந்தவர் தன் காரியம் முடித்து எழுந்து கொண்டிருந்தார். இவள் அந்த இருக்கைக்கு மாறிய போது மற்றவர்கள் முணுமுணுத்தார்கள். முன்னால் ரிக்கெற் போட வேண்டியவன் செல்போனில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ‘காதலியோடு கதைத்துக் கொண்டிருந்தானே…?’ 

வினாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்களை விழுங்கிய போது இவன் செல்போனை மூடிவிட்டு நிமிர்ந்தான். “சொல்லுங்க அக்கா…” ‘என்னத்தைச் சொல்வது…? இவ்வளவு அசட்டையாக இருக்கும் அவனுக்கு அவளது அவசரம் புரியுமா…?’ அவள் கைப்பைக்குள்ளிருந்து அந்தத் தந்தியை எடுத்தாள். அவனிடம் அதை நீட்டினாள். அக்கறையின்றிப் பார்த்த அவன் “இது எங்களுக்குத் தேவையில்லையக்கா, இருபத்தைந்தாம் திகதிக்குப் பிறகு தான் இடம் இருக்கு. எப்ப போகப் போறீங்கள் எண்டு சொல்லுங்கோ…?” 

“இருபத்தைந்துக்குப் பிறகோ தம்பி? அம்மாவுக்கு வருத்தம் எண்டுதான போறன். இண்டைக்குப் பதினைஞ்சாம் திகதி, பத்து நாள்..? அங்கை அம்மாவைப் பாக்கவும் ஆக்களில்லை….” 

“எல்லோரும் இப்படித்தானக்கா சொல்லினம். செத்தவீடு, செத்தவீடு, வருத்தம். கலியாண வீடு. வேலை…. எண்டு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அவசரம். நாங்களும் உள்ள பிளைட்டிலை தான் ஆக்களை ஏத்தலாம்….”. 

இவள் மறுபடி, மறுபடி தன்பக்கத் தேவையை வலிந்துரைத்தாள். அவன் சற்று யோசித்து விட்டு “அப்பிடி யெண்டா நீங்கள் மனேஜரிட்டைக் கதையுங்கோ…” என்று உள்ளே கைகாட்டினான். இவள் உள்ளே மனேஜரிடம் சென்றாள். மறுபடி, மறுபடி தன் பிரச்சினையை எடுத்துரைத்தாள். மனேஜர் தீவிரமாய் யோசிப்பது போல் இருந்துவிட்டு “சரி. உங்களுக்கு வாற் சனி தேர்ட் பிளைட்டிலை போட்டுவிடுறம்” என்றார். ‘பரவாயில்லை.. இன்றைக்குப் புதன், அப்படியாவது போக முடிந்தால் சரிதான்’ என எண்ணியவாறு இவள் திரும்பவும் கவுண்டருக்கு வந்து சுளையாகக் காசைக் கட்டி. ரிக்கெற்றைப் பெற்றுக் கொண்டாள். 


வியாழக்கிழமை காலை மழை தொடங்கிவிட்டது. கொழும்பில் மழை என்றால் கேட்கவா வேண்டும். எப்போதும் போல பொலபொலத்துக் கொட்டிவிட்டு மதியத்துக்குள் வெயில் மின்னத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்த்தால் வெயிலைக் காணவே முடியவில்லை. ஈரத்துணிகள் எல்லாம் சொத சொதத்துப் போய்க் கிடந்தன. அடிக்கடி ஈரமாகும் குழந்தையின் ஆடைகளை உலர்த்துவதில் போதும் போதுமென்றாகி விட்டது இவளுக்கு. போதாக் குறைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களில் அம்மா பேரனைக் கூட்டி வரும்படி அரற்றுவாள். ஒரு தடவையாவது ஆசை தீரப் பேரனைப் பார்க்க வேண்டும் எனும் ஆதங்கம் அம்மாவுக்கு. 

“எப்பிடியும் வந்திடுவன் அம்மா யோசிக்காமல் இருங்கோ. பேரனைப் பாத்தவுடனை படுக்கை யாலை எழும்பிடுவீங்கள் நீங்கள்.” 

அன்போடு தாயை ஆறுதல் படுத்துவாள். கூட இருக்கின்ற தங்கை அம்மாவைப் பார்த்துக் கொள்வாள் தான். ஆனால் அருகில் இல்லாத பிள்ளைகளைப் பற்றித்தானே அம்மாக்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். 

அம்மாவின் பிரசன்னம் அவளுக்கு எப்போதும் தன்னம்பிக்கையைக் கொடுத்த ஒன்று. சின்ன வயதிலிருந்தே எந்தப்பிரச்சினை என்றாலும் அம்மாவிடம் பகிர்ந்து, அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. தங்கையோ அதற்கு நேர்மாறாக அப்பாவுடன் தான் ஒட்டுவாள். இப்போது அந்த அம்மா படுக்கையில் இருக்கிற போது அவளைப் பார்க்க முடியாமல் இருக்கிறது. எப்படியும் சனிக்கிழமை வரை பல்லைக் கடித்துக் கொண்டு இருந்து விட்டால் அப்புறம் அம்மா விடம் சென்றுவிடலாம் எனும் நம்பிக்கையில் பொழுதைக் கடத்திக் கொண்டிருந்தாள். 

வெள்ளிக்கிழமை மாலை இவளுக்கு ரெலிபோன் கோல் ஒன்று வந்தது. தொலைபேசியைக் காதில் வைத்தவளுக்குப் ‘பகீர்’ என்றது. மழை காரணமாக விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்ட காரணத்தினால் இவளது பயணத்திகதியை பின்னர் அறிவிப்பதாகக் கூறினார்கள். இவள் பதட்டத்தோடு தனக்குத் தெரிந்தவர்களிடம் விமானசேவை பற்றி விசாரித்தாள். சில விமான சேவைகள் ரத்தாகின என்றும், ஆனால் அடுத்த நாளில் விமானசேவை இருக்கின்ற தென்றும் அவர்கள் சொன்னார்கள். கூடவே, அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டிராமல் அலுவலகத்தில் போய்க் கதைக்குமாறும் அறிவுரை கூறினார்கள். இவள் குழந்தையைப் பக்கத்து வீட்டில் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, இன்னும் தூறல் போட்டுக் கொண்டிருந்த மழைக்குள், குடையுடன் வெளிக்கிட்டாள். 

அந்த விமான சேவை அலுவலகத்து கேற் சாத்தப்பட்டிருந்தது. ஏற்கனவே ஓரிருவர் அவ்விடத்தில் நின்று செக்யூரிட்டி கார்ட்டிடம் தர்க்கித்துக் கொண்டிருந்தனர். இவள், அவசரமாகக் கதைக்க வேண்டி இருப்பதாகச் சொல்லி உள்ளே போக மன்றாடினாள். 

“ஒவ்விஸ் ரைம் முடிஞ்சுது…. உள்ளே ஆக்கள் இல்லை…” அவன் வீம்பாக நின்றான். மூன்று மணிக்குள் அலுவலகம் மூடிவிடவில்லை, அவன் பொய் சொல்கிறான் என்பது அவளுக்கு விளங்கியது. 

“நான் மனேஜரோடை கதைச்சுப் பாக்கிறன்..”அவன் அந்த இடத்துக்கு தானே முதலாளி என்பது போல் நின்றான். அங்கு நின்றிருந்தவர்கள் மேல் கை வைத்துத் தள்ளினான். அங்கே நின்றிருந்தவர்களில் ஒருவர் இவளைக் காட்டி. “பொம்புளைப்புள்ளை எண்ட இரக்கம் கூட இல்லையே? அதையாவது உள்ள விடன்….” என்றார். 

நீண்ட நேர மறுதலிப்பின் பின் அவன் அவளை ஒருவாறு உள்ளே உள்ளே விட்டான். அடுத்து மனேஜரைச் சந்திப்பது பெரும்பாடாக இருந்தது. வெளியே வந்த மனேஜர் தான் ஒரு சேவை வள்ளல் போல கருத்துக்களை வாரியிறைத்தார். 

ஒரு பக்கம் யுத்தம். இன்னொருபக்கம் இயற்கையின்ர சீற்றம். நாங்கள் என்னம்மா செய்யிறது..? நீங்கள் வருணபகவானை வேண்டுங்கோ. நாங்கள் எங்கட சேவையை உங்களுக்குத் தருவம்…”என்றார். 

“உங்களைத்தான் நாங்கள் அட்ஜஸ்ட் பண்ணலாம். நாளைக்கே உங்கட பிளைட் கான்சலானா நீங்கள் பேசாமல் இருப்பீங்களேன்…?” 

“அது சரி ஐயா. ஆனா நான் என்ரை வருத்தத்திலை கிடக்கிற அம்மாவைப் பாக்கோணும்…” 

“அப்படியெண்டா உங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை போட்டு த்தாறம்…” இவள் மேலும் மேலும் மன்றாடியும் முடியாமல் போகவே வீட்டுக்குத் திரும்பினாள். 

“தங்களுக்குத் தெரிஞ் சாக்கள். காசு குடுக்குறாக்களுக்கு மட்டும் விரும்பின ‘டேற்’ றிலை விடுவினை.” ஏற்கனவே ஒருவர் முணுமுணுத்தது அவள் ஞாபகத்திற்கு வந்தது. 

ஒவ்வொரு நாளும் கிழக்கு வெளுப்பதை இவள் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். இடையில் கிழக்கு இருட்டத் தொடங்கினால், அவள் பயணம் மேலும் சில தினங்களுக்குத் தள்ளிப் போகக் கூடும். 

ஞாயிற்றுக்கிழமை கிழக்கில் வெளிச்சம் வந்திருந்தது. 

இவள் நம்பிக்கையோடு. விமானத்தில் குழந்தையோடு ஏறியிருந்தாள். 

பயணச் சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறி பலாலியில் இறங்கும் வரை இவள் யாழ்ப்பாணம் வந்து சேருவது உறுதியா என்பதில் சந்தேகம் இருந்தது. 

பஸ்ஸிற்குள் வைத்து கைத் தொலைபேசிகள் வழங்கப்பட்டவுடன், அவள் தங்கைக்குத் தொலைபேசி எடுத்தாள். 

“வந்து இறங்கிற்றம் துஷி. அம்மாட்டை சொல்லு….” 

“உடனே வா அக்கா….” தங்கை உடனே ‘கட்’ பண்ணிவிட்டாள். 

இவள் ஓட்டோ பிடித்து வீட்டிற்குப் போன போது அங்கே என்றுமில்லாத அமைதி கொலு விருந்தது. 

கார் ஒன்று ஓட்டோவை விலத்தி வந்து நின்றது. 

அதிலிருந்து அம்மாவின் உயிரற்ற உடம்பை உள்ளே தூக்கி வந்தார்கள். 

“அம்மா..!” இவள் உரக்கக் கத்தினாள். 

அம்மாவுக்கு மட்டும் கிழக்கு வெளுக்கவேயில்லை. 

– 2009, அம்பலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *