ஏகேஆர் 87 42 23 17

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2026
பார்வையிட்டோர்: 39 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

“ஏங்க, லாட்டரி சீட்டு வாங்காதீங்கன்னா நீங்க கேக்குறீங்களா? காசுதான் நஷ்டமாகுது. லாட்டரி சீட்டு இனிமே வாங்காதீங்க. போதும் வாங்குனது!” என்றாள் ரவி மனைவி ராதா.

“இல்லம்மா, இனிமே நான் வாங்க மாட்டேன். இதுதான் கடைசி. இந்த ஒரே ஒரு வாட்டி மட்டும் நான் வாங்கிறேன். இனிமே நான் வாங்கவே மாட்டேன்,” என்றான் ரவி.

ரவி நேராக கடைக்குச் சென்று, லாட்டரி கடையில் விசாரித்தான். “சார், எந்த லாட்டரி சீட்டுக்கு அதிக பரிசு வருது? அதை நான் வாங்கலாம்னு இருக்கேன். கொஞ்சம் சொல்லுங்க.”

“அண்ணே, பூட்டான்ல வந்து ஒரு கோடி ரூபாய் தராங்க. அதை வாங்கிக்கோங்க. கண்டிப்பா உங்களுக்கு பரிசு விழும். நான் சொல்றேன், நம்பிக்கையோடு வாங்குங்க,” என்றார் கடைக்காரர்.

“சரி, அதைத்தான் கொடுங்க. எவ்ளோப்பா?”

“இருவத்தி அஞ்சு ரூபாய் சார்.”

“இருவத்தி அஞ்சு ரூபாயா? ஆமா சார், இருவத்தி அஞ்சு ரூபாய். ஒரு லாட்டரி சீட்டு இருவத்தி அஞ்சு ரூபாய்.”

“இதுக்காப்பா ஒரு கோடி தராங்க?”

“இல்ல சார், இது வந்து ஐம்பதாயிரமாவது பரிசு வரதான். ஒரு கோடி உங்களுக்கு வேணும்னா இருநூற்று ஐம்பது ரூபாய் ஆகுது சார்.”

“அப்படியா? சரி, அப்போ இருநூற்று ஐம்பது ரூபாய் லாட்டரி சீட்டு ஒன்னு குடுத்துருப்பா.”

“இந்தாப்பா இருநூற்று ஐம்பது சரி,” என்று பணத்தைக் கொடுத்துவிட்டு, லாட்டரி சீட்டை வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.

நாட்கள் நகர்ந்தன. குலுக்கல் தேதி ஆகஸ்ட் 15 என்று வந்திருந்தது. ‘ஞாபகம் வச்சுக்கணும்பா’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான். அலுவலக வேலை, தினந்தின அலுவலக வேலை, தினந்தினம் அன்றாட வீட்டுப் பணிகள்… இப்படியே காலங்கள் போய்விட்டன.

திடீரென்று ஒரு நாள், ரவி டீக்கடையில் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தபோது, லாட்டரி அண்ணாச்சி வந்தார். “அண்ணே, நீங்க லாட்டரி சீட்டு வாங்குனீங்க ஞாபகம் இருக்கா?”

“ஆமா வாங்கினேன். ஆமா ஆமாப்பா, நீ சொல்றது கரெக்ட். ஆகஸ்ட் பதினைந்து குலுக்கல் இல்லையா?”

“ஆமா, இன்னைக்குதான்… இன்னைக்கு பதினாறு ஆச்சே! அப்போ நேத்தே குலுக்கிட்டாங்களா?”

“சார், குலுக்கல் ரிசல்ட் எல்லாம் வந்துடுச்சு. அநேகமா நீங்க வாங்குன சீட்டுக்குதான் பரிசு விழுந்திருக்குன்னு நினைக்கிறேன். நம்பர் சொல்றீங்களா?”

“நம்பர் எனக்கு ஞாபகம் இல்லையேப்பா. நான் எதுக்கும் சீட்டை எடுத்துட்டு வரவா?”

“சீட்டை உடனே எடுத்துட்டு வந்துருங்க சார். நம்ம பார்த்திருவோம், பரிசு விழுந்திருக்கான்னு நம்ம பார்த்திருவோம்!”

ரவி பதற்றத்துடன் வீட்டுக்கு வந்து சீட்டைத் தேடினான். ராதா அங்கிருந்து, “என்னங்க தேடிட்டு இருக்கீங்க? ரொம்ப நேரமா ஏதோ டென்ஷனா இருக்கீங்க, என்ன ஆச்சு?” என்றாள்.

“இல்லம்மா, நான் ஒரு லாட்டரி சீட்டு வாங்கினேன். அதுக்கு பரிசு விழுந்திருக்குமோன்னு சொல்றாரு. ஆனா, அந்த சீட்டை எங்க வச்சேன்னு தெரியலையே!”

“என்னங்க இப்படி பண்றீங்க? நீங்க எங்க, எப்படி வாங்கிட்டு வந்து எங்க வச்சீங்க?”

“நானு அந்த சிவப்பு கோடு போட்ட பச்சை கலர் சட்டையிலதான் வச்சேன். அதை வந்து பீரோக்கு பின்னாடி இருக்கிற கோட் ஸ்டாண்ட்ல மாட்டுனேன். அதுதான் ஞாபகம் இருக்கு. இப்ப பார்த்தா அந்த சட்டையைக் காணோம்!”

“ஏங்க, அதெல்லாம் துவைச்சு, அயர்ன் பண்ணி அப்படியே வச்சிட்டேங்க. பீரோல மடிச்சு வச்சிருக்கேன் பாருங்க.”

அவசர அவசரமாக பீரோவைத் திறந்து அந்தச் சட்டையைத் தேடினான். அந்தச் சட்டை இருந்தது. பாக்கெட்டில் கை விட்டுப் பார்த்தால்… சீட்டைக் காணோம்!

“ராதா! அந்த சீட்டை எங்க வச்ச? காணோமே! அந்தப் பையில ஒண்ணுமே இல்லையேம்மா!”

“ஏங்க, அந்தப் பையில இருந்த எல்லாத்தையும் எடுத்து குப்பைத் தொட்டியில போட்டுட்டேனே!”

“என்னம்மா இப்படி பண்ற? அதுல லாட்டரி சீட்டு இருந்ததேம்மா!”

“அய்யோ, நான் அதை கவனிக்கலையேங்க…”

“எப்போ போட்ட?”

“நேத்து காலையில போட்டேன்.”

“எங்க போட்ட?”

“நம்ம வீட்டு வெளியில இருக்கிற குப்பைத் தொட்டியிலதான் போட்டேன்.”

சரி என்று குப்பைத் தொட்டியைத் தேடி ஓடினான். குப்பைத் தொட்டி காலியாக இருந்தது.

“அம்மா, குப்பைத் தொட்டி காலியா இருக்கே! ஒண்ணுமே இல்லையேம்மா இதுல!”

“சாயங்காலம் அந்த அண்ணன் வந்து குப்பை எல்லாம் அள்ளிட்டு போயிருச்சே… இந்த பஞ்சாயத்துல இருந்து ஒரு அண்ணன் வருவாங்க இல்லையா குப்பை எடுக்க? அந்த அண்ணன் வந்து எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டாரே.”

“அப்படியா? சரி, அவர் வீடு எங்கன்னு தெரியுமா?”

“நம்ம பஞ்சாயத்து ஆபீஸ்ல இருந்து ஒரு மூணு தெரு தள்ளிதான் இருக்கு அவர் வீடு.”

“சரி, நான் போயிட்டு வரேன்.”

“எங்க, இந்த நேரத்துக்கு எங்க போறீங்க?”

“அம்மா! நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?” என்று சொல்லிவிட்டு ரவி வேகமாக ஓடினான்.

“அண்ணே! அண்ணே!”

“யாருப்பா இந்த நேரத்துல?”

“நான்தானே ரவி வந்திருக்கேன். என் வீட்டு குப்பைத் தொட்டியில சில முக்கியமான பேப்பர்கள் எல்லாம் வச்சிருந்தேன். என் வீட்டுக்காரங்க தெரியாம அதை குப்பையில போட்டுட்டாங்க. அது ரொம்ப முக்கியமானதுண்ணே. அதைத் தேடி எடுக்கணும்ண்ணே!”

“எந்த தெருப்பா?”

“நேரு தெரு.”

“சரி, நேரு தெரு குப்பை எல்லாம் நான் இன்னும் கொட்டித் தீர்க்கல, வண்டியிலேயே இருக்கு. வண்டி நம்ம பஞ்சாயத்து ஆபீஸ்லேயே இருக்குப்பா. வண்டி நம்பர் மூணுன்னு போட்டிருக்கோம். நானும் வரேன், ரெண்டு பேரும் போய் பார்க்கலாம் வாங்க.”

வண்டி நம்பர் மூணு… நேரு தெரு குப்பை கிடந்த வண்டி. நானும் அவரும் தேடினோம். திடீரென்று எங்க வீட்டு கவர் எனக்கு ஞாபகம் வந்தது. “இது எங்க வீட்டு கவர்தாங்க! என் வீட்டு மகராசி கவர்ல குப்பையைப் போட்டுருக்கா போல இருக்கு. இந்த கவர் தான் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. இந்த கவரை எடுத்து பிரிச்சு பார்த்தா கிடைச்சிரும், எனக்கு நம்பிக்கை இருக்கு! இந்தாங்கண்ணே…”

“குடுங்க, குடுங்க, குடுங்க…”

கடகடவென்று பிரித்துப் பார்த்தான். நாலஞ்சு குப்பைகளுடன் சேர்ந்து மடித்தபடி அந்த லாட்டரி சீட்டு இருந்தது! கண்டுபிடித்துவிட்டான்!

அப்பாடா… நிம்மதியாயிடுச்சு! ‘நாளைக்கு காலையில முதல் வேலையா கொண்டு போய் லாட்டரி சீட்டு அண்ணன்கிட்ட கொடுத்துரணும். அப்புறம் அவர் என்ன சொல்றாரோ அதை கேட்டுக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டான்.

“அண்ணே கிடைச்சிடுச்சு!”

“சரிப்பா…”

“அண்ணே வரேண்ணே… ரொம்ப ரொம்ப நன்றி, நன்றி!”

“சரி, போயிட்டு வாங்க.”

வீட்டுக்கு வந்து நிம்மதியாகப் படுத்துவிட்டான்.

அடுத்த நாள் காலை, அந்த லாட்டரி சீட்டை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்றான். கடைக்குச் சென்று, லாட்டரி சீட்டின் நம்பரை பரிசுகளின் எண்களோடு மீண்டும் ஒரு முறை ஒப்பிட்டுப் பார்த்தான்.

எனது சீட்டு எண்: AKR 87 42 23 17

பரிசு வென்ற சீட்டினுடைய எண்: AKR 87 42 23 17

“அடிச்சேன் பாரு லக்கு! சூப்பர்… எனக்குதாங்க பரிசு! எவ்வளவுங்க பரிசு? ஒரு கோடி ரூபாய்!”

“அண்ணே, நீங்க ரொம்ப அதிர்ஷ்டக்காரண்ணே! உங்களுக்குதான் பரிசு விழுந்துருக்கு. அண்ணே… அண்ணே… அண்ணே, ஒரு நிமிஷம் இருங்கண்ணே.”

“உங்க லாட்டரி சீட்டுல என்ன போட்டிருக்கு பாருங்க?”

“என்னப்பா, என்ன சந்தேகம்? நம்பர் எல்லாம் கரெக்ட்டா இருக்கே!”

“ஆமாண்ணே, நம்பர் எல்லாம் கரெக்ட். ஆனா, இதுல ‘சிக்கிம்’னு போட்டிருக்கு. நீங்க வாங்குனது பூட்டான்…”

“ஆமா, நீதானே சொல்லிக் கொடுத்த? பூட்டான்லதான் நிறைய பரிசு கொடுப்பாங்க, பூட்டான் வாங்குங்கன்னு நீதானப்பா சொல்லிக் கொடுத்த?”

“அண்ணே, இது சிக்கிம் நம்பர்ண்ணே! சிக்கிம் லாட்டரிக்குதான் பரிசு விழுந்திருக்கு!”

“என்ன வச்சு காமெடி பண்ணலையேப்பா?”

“நான் ஏன் பண்ணனும்? உண்மையா பாருங்க… உங்க சீட்டுல ‘பூட்டான்’னு எழுதி இருக்கு, பேப்பர்ல (ரிசல்ட்ல) ‘சிக்கிம்’னு எழுதி இருக்கு. நீங்க கஷ்டப்படாதீங்க, இன்னும் பத்து நாள்ல மறுபடியும் ஒரு குலுக்கல் வருது, அதெல்லாம் ட்ரை பண்ணலாம்…”

“போடா நீயும், உன் ஒரு கோடியும்!” என்று சலித்துக்கொண்டே கிளம்பினான் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *