நிலை நிறுத்தல்
கதையாசிரியர்: கி.ராஜநாராயணன், விமலாதித்த மாமல்லன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2026
பார்வையிட்டோர்: 30
கி.ராஜநாராயணனின் நிலை நிறுத்தல்
திரைக்கதை வடிவம்: விமலாதித்த மாமல்லன்
காட்சி – 1
இடம் : மரத்தடி
காலம் : பகல்
OUTDOOR

நல்ல வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் மத்தியான வேளை. ஊர் நடுவே ஒரு மரம். சற்றுத் தொலைவில் ஒரு கோயில் பிரகாரத்தில் சிலர் படுத்திருக்கின்றனர். ஐந்து பேர் கூட்டமாய் தொலைவிலிருந்து கோயிலின் பின்புலத்தில் தெரிகின்றனர். மூடிய கோயிலின் வாயிலில் நின்று இரண்டு பெண்களும் (ஒருத்தி கைக்குழந்தையுடன்) மூன்று ஆண்களும் தலைச்சுமைகளை இறக்கி வைத்துக் கொண்டபடி கும்பிட்டுப் பின் திரும்பி மரத்தை நோக்கி வருகின்றனர்.
ஐவரும் மரத்தடியை வந்து அடைந்ததும் தலைச்சுமைகளை இறக்கி ஆசுவாஸப்படுத்திக் கொள்கின்றனர். மூன்று ஆண்களில் ஒரு இளைஞன் கட்டுமஸ்தான உடலுடன் இருக் கிறான். அவனிடமிருக்கும் ஏகமான சுமைகளை மற்ற இருவரும் சேர்ந்து இறக்கு கின்றனர்.
கைக் குழந்தைக்காரி, குழந்தையை மடியில் கிடத்தி, மாராப்பால் மூடி பால் கொடுக்கி றாள். கட்டு மஸ்தான இளைஞன் மரத்தில் சாய்ந்து கண் மூடிக் கொள்கிறான். மற்ற இருவரும் பேசத் தொடங்குகின்றனர்.
ஆள் 1 : என்னய்யா இது இப்படி ஒரு வெய்யில்.
என்றபடி முண்டாசை அவிழ்த்து மார்பைத் துடைத்துவிட்டு விசிறிக்கொள்கிறான். மற்றவன் மடியில் இருக்கிற பீடியை எடுத்துக் கொளுத்திப் புகைத்தபடி
ஆள் 2 : பின்ன என்னய்யா, கத்தி வெய்யில்ல பருத்தி கருகுற அக்குறும்ப எங்க நிண்டு சொல்ல
ஆள் 1 : மானம் மனமெறங்கி ரெண்டு சொட்டு விட்டா, மனுசன் இப்படிக் கெடந்து ஊரூரா
பஞ்சம் பெளைக்கத் தட்டுக்கெட்டளியத் தேவையிருக்காதுல்ல
ஆள் 2: பிரும்ம தேவன் போட்டுவுட்ட சக்கரம் பிளசர் கணக்கா வெக்கைல கொண்டாந்து வேக விட்டுருக்கு லேய்
கைக்குழந்தைக்காரி சற்று நகர்ந்து உட்கார்ந்து கொண்டபடி
கைக் குழந் பொலம்பலுக் கொண்ணும் கொறையக் காணோம். வெய்ய வெக்கெனு சொல்லி தைக்காரி: கிட்டே, ரயிலு வண்டி கணக்காப் பொகையூதியாவுது.ம்…
ஆள்1, தொலைவில் எதையோ பார்த்த பதற்றத்துடன் அவசர அவசரமாய்த் தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டபடி எழுந்து மரத்தில் சாய்ந்து கண்மூடிய கட்டுமஸ்தானவனையும் எதிரிலுமாய் பார்த்து
ஆள் 1 : எந்திரி லேய் யாரோ ஊர் பெரிய மனுசரு அந்தால வறாக பாரு.
அங்கு வரும் பண்ணையார், அனைவரும் எழுந்து நிற்பது கண்டு கைக்குழந்தைக் காரியை உட்காரும்படி கையமர்த்த அவள் குழந்தையுடன் தலை கவிழ்ந்தபடி உப் கார்ந்து கொள்கிறாள்.
பண்ணை : எந்தூருலே.
(பவ்வியமாய்)
ஆள் 1 : கோவில் பட்டிக்கி வடக்காம கம்மாப் பட்டிங்க எசமான். தரும தொறைங்க வாள்ற இந்தூருக்குப் பஞ்சம் பௌக்க வந்துருக்கோமுங்க. ஐயாமாருதான் பெரிய மனசு வெச்சிக் காப்பாத்தோணுமுங்க.
பண்ணை : அந்தா இருக்கற டவுன வுட்டு இம்புட்டுத் தூரம் வந்துருக்கேரு. அப்படி என்னலே கொட்டிக் கெடக்கு இங்க.
ஆள் 2: எளுத்துப் படியா தற்குறிங்க எசமான் சமூகந்தான் தயவு பண்ணோணும்.
வாய் மூடி பின்னால் நிற்கும் இளைஞனைப் பார்த்தபடி மற்றவனிடம்
பண்ணை : யாருலே அது. இடிச்சபுளி கணக்கா வாயத் தொறக்காம நின்னுகிட்டு.
ஆள் 1: அவன் பேரு மாசாணமுங்க. பரம்பரைச் சாமி கொண்டாடிங்க. பஞ்சத்து தோசம் படையே பறக்கும் போது சாமி கொண்டாடி மட்டும் அரசாரமா நிக்க ஏலுங்களா. நல்ல கொணமுங்க. அதான் சேக்காளி ஆக்கிட்டோமுங்க.
சிரித்துக் கொண்டபடி, மாசரணத்தைத் தலை முதல் கால் வரை நோட்டம் விட்டு
பண்ணை : ஓகோ பஞ்ச பாண்டவர் கூட்டாக்கும். சரி சரி அந்தா இருக்குல்ல அதான் பஞ்சாயத்து சாவடி. அதுல இருங்க ஆளனப்புறேன்.
நன்றிப் பெருக்குடன் கும்பிட்டபடி அனைவரும் தத்தம் சுமைகளைத் தூக்கிக் கொண்டு கிளம்ப, மாசாணமும் அவர்களுடன் செல்லத் தயாராவது கண்டு
பண்ணை : லேய் இடிச்சபுளி. ஆ…ஒம்பேரென்ன… மாசாணம். எங்கலே போறே. நீ எம் பெறத்தால வா.
எனச் சொல்லிப் பண்ணை முன் நடக்க தன் சுமையுடன் மாசாணம் மற்றவர்களைத் திரும்பித் திரும்பி பார்த்தபடிப் பின் தொடர்கிறான்.
– CUT –
காட்சி – 2
இடம் : பண்ணை வீட்டுக் கொல்லை/ வீட்டுக் கூடம்.
காலம்: பகல்
OUTDOOR / IN DOOR
தெருவிலிருந்து பண்ணையார் திறந்திருக்கும் கொல்லைக் கதவின் வழியே உள் நுழைய மாசாணம் உள்ளே வந்து தயங்கி நிற்கிறான். பண்ணையார் கிணற்றடியை நோக்கிச் சென்றபடி திரும்பாமல் மாசாணத்திடம்
பண்ணை : அங்கிட்டு இரு லே.
வாளி நீரில் கால் கழுவியபடி உள்ளே பார்த்து
பண்ணை : செல்லாத்தா ஏ தாயீ செல்லாத்தா.
எனக் குரல் கொடுக்கிறார். செல்லாத்தா வாயிற்படியில் வந்து நிற்கிறாள்.
பண்ணை : இந்தப் பயலுக்கு சோறு போடு தாயி
பிறகு மாசாணத்தை பார்த்து லேய் வகுத்துக்கு வஞ்சகம் இல்லாமத் திங்கணும்லே தெரியுதா. ஆமா.
மாசாணம் தயங்கித் தலையாட்டுகிறான். பண்ணையார் உள்ளே சென்று கூடத்தில் இருக்கும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறார். வெற்றிலைச் செல் லத்தை எடுத்து வெற்றிலை போடத் தொடங்குகிறார்.
செல்லாத்தா மாசாணத்திற்கு மரத்தடியில் ஒரு இலை வைத்து சோறு போடுகிறாள். அவன் பெரிய பெரிய கவளங்களாய் உருட்டி உண்பதைப் பார்த்து லேசான முறு வலுடன்
செல் : குடிக்கத் தண்ணி வேணுமுன்னா கெணத்துல எறச்சிக்கலே. எனக்கூறி கூடத்தில் பண்ணையாரிடம் வருகிறாள்.
செல் : எங்கண புடிச்சீக இந்தப் பயல. ஆணை கணக்காட்டுல்லத் தீனி தின்னுதான்.
பண்ணை : பஞ்சம் பொளைக்க ஆளுக வந்துருக்கு நம்பூருக்கு. அதிலொருத்தன் இந்தப்பய. பரம்பரைச் சாமி கொண்டாடியாம். அது கெடக்கு. பாத்தீல்ல பயல. நல்ல மாடு கணக்காருக்கான்.
தாடையில் கை வைத்து அதிசயித்தபடி
செல் : திங்கறதும் அப்படில்ல இருக்கு. கொசவன் மண் அள்ற கணக்கால்லா இவன் சோறள்ளதுன்.
(பெருமையாய்)
பண்ணை : கூளத்தை மாடு எப்படி அள்ளிதுங்கறதுலேந்தேத் தெரிஞ்சிடுமில்லா அதன் வேலப் பூளாக்கு. இதைக் கண்டுகிடக் கையாலாகாட்டி அவன் என்ன சமுசாரி, நம்ம கணக்கு என்னிக்கும் தப்பாதுல்லா.
என்றபடி எழுந்து கொல்லைக்கு வந்து வெற்றிலைச் சாறைத் துப்புகிறார் பண்ணை யார். வாளியில் நீரருந்தி நிமிர்கிறான் மாசாணம்.
பண்ணை : லேய் வயிறு நிமுறத் திண்ணியாலே.
கூச்சத்துடன் தலையசைக்கிறான் மாசாணம்
பண்ணை : சரி அந்தா கெடக்குல்லா அந்தக் கட்டைங்களை வெட்டிப் போடுலே இன்னக்கி இது போதும்.
அவர் கைகாட்டிய திசையில் பார்க்க, அம்பாரமாய்ப் பெரியபெரிய மரக்கட்டைகள் குவிந்து கிடக்கின்றன. அருகில் கிடக்கும் கோடாரியுடன் சென்று கட்டைகளை வெட்டத் தொடங்குகிறான். இரண்டு கட்டைகளை வெட்டும் வரை அவனைப் பார்த்தபடி இருந்த பண்ணையார் தமக்குத் தாமே பேசியபடி உள்ளே செல்கிறார்.
பண்ணை : தீனிக்கு வேல மோசமில்லே, வீச்சு நல்லாத்தான் விளுது.
– DISSOLVE –
காட்சி – 3
இடம் : கொல்லை/காடு/ கொட்டில்
காலம்: பகல்/இரவு
OUTDOOR / IN DOOR
(MONTAGES)
கிணற்றடி பெரிய அண்டாவில் நீர் இறைத்துக் கொட்டுகிறான்.
விறகுகளை பெரிய கட்டாய்க் கட்டி சுமந்து வருகிறான்.
பகலில் மாட்டைக் குளிப்பாட்டுகிறான். இரவில் கூளக் கட்டைப் பிரித்துப் போடுகிறான். கொட்டிலிலேயே ஒரு ஓரமாய்த் துண்டை விரித்துப் படுக்கிறான்.
-FADES OUT-
காட்சி – 4
இடம் : பண்ணை வீட்டுக் கொல்லை/தெரு
காலம் : பகல்
OUTDOOR / IN DOOR
கொல்லையில் பல் விளக்கி முகம் கழுவியபடி இருக்கிறார் பண்ணையார். செல்லாத்தா வாளியில் நீர் இறைத்து ஊற்றுகிறாள்.
பண்ணை : இந்த மாசாணம் பயலக் கண்டியா தாயி.
செல் : நெதம் கண் முளிச்சதும் இது ஒரு கேள்வி. காணலை காணலைனு நானுந்தான் ஒரு வாரமாச் சொல்லுறேன். பய வாயத் தொறக்காமக் கல்லுளிமங்கன் கணக்கா இருக்கும் போதே எனக்கு சமுசயந்தான். கூளம் பல்லு மாடுன்னு ஏதேதோ சொன் னீக. பொருளேதும் போகாம அந்த மட்டுக்கும் ஆளோட போச்சே.ம்…
பின்னணியில் லேசான கல்லாட்டும் சத்தம்.
பண்ணை: நிறுத்து தாயி ஒன் தொண தொணப்பை. கம்மரத் தவள கணக்கா சும்மா கொற கொறன்னுகிட்டு.
கல்லாட்டும் சத்தம் நன்கு கேட்கிறது.
பண்ணை : அங்கிட்டு பாரு தொளுவு பக்கம் ஏதோ சத்தம் கேக்குது.
செல் : அட ஆமா ஏதோக் கொட கொடன்னுக் கல்லாட்டற சத்தமால்லா இருக்கு. (கோபமாய்)
பண்ணை : அவனாத்தான் இருக்கும்.
என்றபடி தொலுவை நோக்கி செல்கிறார். மூடிய கதவின் உட்புறம் கூளத்தின் மேல் நலுங்கிய துண்டு ஒரு புறம் கிடக்க, ஆட்டுக்கல்லில் உட்கார்ந்து பருத்தி ஆட்டிக் கொண்டிருக்கிறான் மாசாணம்.
கோபமாய்க் கதவை உதைத்துத் திறந்து உள்ளே நுழைந்த பண்ணையாரைக் கண்டு ஒன்றும் புரியாது மலங்க மலங்க விழிக்கிறான் மாசாணம். அவன் தலை முடியைப் பற்றி வெளியில் இழுக்கிறார்.
பண்ணை : எலேய் துப்பு கெட்ட பயலே எங்கலே போனே நாள் கணக்கா.
என்றபடி இழுத்துக் கொண்டு கொல்லைக் கதவைத் தாண்டி தெருவுக்கு இழுத்துச் செல்கிறார்.
பண்ணை : ஊர் சுத்தற நாய்க்கு ஒலவெக்கல டேய் இந்த ஊர்ல. இரு சரியான குடாப்பு குடுத்தாதான் சொணப்பு வரும் ஒனக்கு…
எனத் திட்டியபடி அவனைத் தள்ளிக் கொண்டு போக தெருவில் எதிர்ப்படும் ஒருவ னைப் பார்த்து
பண்ணை : லே சாத்தா ஒரு கவுறெக் கொண்டுவாலே.
சாத்தான் வேகமாய்ப் போகிறான்.
-CUT-
காட்சி – 5
இடம் : மரத்தடி
காலம் : பகல்
OUTDOOR
மாசாணத்தைத் தள்ளியபடி பண்ணையார், மாசாணம் பஞ்சம் பிழைக்க முதலில் வந்து தங்கிய மரத்தடிக்கு வருகிறார்.
பண்ணை : ஏலே ஒண்ணை சும்மா விட்டா ஊர் சுத்திக் கோயில் மாடாயிடுவே. இரு.
சாத்தன் ஒரு பெரிய கயிறுடன் வர அதை வாங்கி கோபமாய் மாசாணத்தின கை களைக் கட்டுகிறார். கூட்டம் கூடி விடுகிறது.
பண்ணை : ஏதோ பாவப்பட்ட ஜனம் பஞ்சம் பொளைக்க ஊர் விட்டு ஊர் வந்து நிக்கிதேன்னு வேலையுங் குடுத்து கஞ்சியுமூத்தினா சுத்தவா சொல்லுது நாயே.
என்றபடி கயிற்றால் அவனை மரத்தில் கட்டத் தொடங்கினார். பின் அருகில் நிற்கும் சாத்தனையும் கூட்டத்தையும் பார்த்து
பண்ணை : மாடு கணக்கா நின்னுகிட்டு என்னலே வேடிக்கை. புடிச்சிக் கட்டுங்கலேய்.
என சத்தம் போட சாத்தனும் இன்னும் இருவரும் சேர்ந்து மாசாணத்தை மரத்தில் கட்டுகின்றனர்.
பண்ணை : நாள இன்னேரம் வர ஒனக்குப் பச்ச தண்ணி கூடக் கெடையாது. ஏலேம் இந்தப் பண்ணைய யாருன்னு நெனச்ச.
எனச் சொல்லி கூடி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து
பண்ணை : இந்தத் துப்பு கெட்டப் பயலுக்கு எவனாச்சும் ஒரு வாத் தண்ணி குடுத்ததாத் தெரிஞ்சிது கொல விளும். ஆமா. சொல்லிட்டேன்.
எனச் சொல்லி பண்ணை செல்ல கூட்டம் மெல்லக் கலைகிறது. தொங்கிய தலை யுடன் மாசாணம்
-FADES OUT-
காட்சி – 6
இடம் : திண்ணை
காலம்: இரவு
OUTDOOR
இரவில் தம் வீட்டுத் திண்ணையில் கீதாரியும் அவர் மனைவியும் உட்கார்ந்து இருக் கின்றனர். கிழவி பாக்கு இடித்தபடி
கிழவி : ஆமா, நம்ம பண்ணைக்கி அம்புட்டுக் கோவம் வராப்புல அப்பிடி என்னதான் பண்ணிப் போட்டான் இந்த மாசாணம் பய. அப்பிடி எங்கதான் போனான் ஒரு வாரமா. ஒரே மாயமால்ல இருக்கு.
கீதாரி: மாயமுமில்லே, மந்திரமுமில்லே. போன வாரம் மந்த நாடகம் ஆடிச்சில்லா களத் துல. பகலெல்லாம் குறுக்கொடிய வேல பாத்துட்டு ராவெல்லாம் ஒறங்காம நாடகம் பாத்துருக்கான். ஒரு வாரம் போலப் பொட்டுத் தூக்கமில்லே. கடைசி நாள் நாடகம் முடிஞ்சி அசதில வந்து கெடந்திருக்கான் தொளுவுல ஒரு வாரம் போலக் கண் முளிக்காமத் தூங்கியே கெடந்திருக்கான்.
கிழவி பாக்கு இடிப்பதை நிறுத்தி தாடையைப் பிடித்தபடி வியந்து
கிழவி : நல்ல கூத்து. குண்டில போற குசு தெரியாம ஒரு ஆம்பிளை ஏழு நா ராவா பகலாத் தூங்கியிருக்கானே பாவி மட்டை,
கீதாரி : ம்… நீ ஒண்னு. ஒரு வாரம் முழிச்சிருக்கான். ஒரு வாரம் தூங்கிருக்கான். கணக்கு சரியாப் போச்சி
எனச் சொல்லி சிரிக்கக் கிழவியும் சேர்ந்து கொள்கிறாள்.
-DISSOLVE-
காட்சி – 7
இடம் : மரத்தடி
காலம் : இரவு
OUTDOOR
மரத்தில் கட்டப்பட்ட மாசாணம். அமைதியும் சாந்தமுமான பாவத்துடன் சுற்று முற்றும் பார்த்தபடி யாருமற்ற மரத்தடிக்கு தட்டும் செம்புமாக வருகிறாள் செல்லாத்தா. அவ ளைக் கண்டதும் மாசாணம் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்கிறான். செல்லாத்தா தணிந்த குரலில் சற்று எரிச்சலுடன்,
செல்: அப்பிடி என்னலே ஒனக்கொரு ஒறக்கம் அடிச்சிப் போட்ட பொணம் மாரி. எங்கயோ நீ ஓடிப்போயிட்டேன்னு நான் கூட நெனச்சிட்டேன்.
சற்றுக் கனிவாய்
செல் : சரி அது கெடக்கு இதத் தின்னுக்கலே.
என்றபடி தட்டையும் செம்பையும் கீழே வைத்துவிட்டு அவன் கட்டை அவிழ்க்கப் போகிறாள். மாசாணம் தலையாட்டிமறுக்கிறான்.
செல் : ஒன் ஆத்தா உசிரோட இருந்தா அவுளுக்கும் என் வயசுதான்லே இருக்கும். அவளமாரி நெனச்சிக்கலே என்னயும்.
மாசாணம் அசையாது அமைதியாய் இருக்கிறான்.
செல் : ஆம்பளையாப் பொறப்பெடுத்தா ரேரசம் இருக்கணும் தான்லே. அதுதான் அளகு. எதுக்கும் ஒரு அளவிருக்கில்லே. போகட்டும் ஒரு வாய் பாலாச்சும் குடிலே.
என்றபடி பால் சொம்பை அவன் முகத்தருகே கொண்டு செல்ல முகம் திருப்பிக் கொள்கிறான் மாசாணம் கோபமாய்
செல் : ஆனாலும் ஒனக்கு இம்புட்டுத் திமிர் ஆகாதுலே. வெசயம் தெரிஞ்சா என்னயக் கொண்ணேப் பொதச்சிடும் பண்ணை. ஆனாலும் மனசு கேக்காம வாரது வரட்டும்னு ஓடி வந்தேன்ல எம்புத்திய செரும்பாலதான்லே அடிக்கணும். எனக்கென்ன எக் கேடும் கெட்டுப் போ.
எனச் சொல்லித் தட்டும் செம்பு மெடுத்துத் திரும்பிச் செல்கிறாள் செல்லாத்தா. அது வரை தலை கவிழ்ந்திருந்த மாசாணம் தலை தூக்கிக் கண்களில் நீர் தளும்ப அவள் செல்வதையே பார்த்தபடி இருக்கிறான்.
-DISSOLVE-
காட்சி – 8
இடம் : தெரு
காலம்: பகல்
OUTDOOR
ஒரு பெரிய விறகுக் கட்டைத் தலையில் சுமந்தபடி வந்து கொண்டிருக்கிறான் மாசாணம். வழியில் எதிர்ப்படும் கீதாரியின் மகனும் சாத்தனும் மாசாணத்தை வழி மறித்து
கீ. மகன் : அடடா நம்ப மாசாணம் மகராசா வாராரு வளிவிடுய்யா
என்றபடி குறுக்கு மறுக்காய் நகர்கிறான்.
சாத்தன் : ஆமா, வெறகு கட்டை மகாராசா.
கீதாரியின் மகன் மாசாணத்தின் சுமையை இழுத்து அசைத்தபடி
கீ. மகன் : ஐயா பரம்பரைச் சாமி கொண்டாடியில்ல. இந்தா ஆட்றாரு பாரு ஆட்டம். மாசாணம் அமைதியாய் இருக்கிறான்.
கீ. மகன் : ஏன் லே. பரம்பரை பரம்பரையா நீங்க கொண்டாடின சாமி வந்து அவுத்து வுட்டு தாலே ஒன்னய. மரத்தோட மரமா ஒன்னயக் கெட்டிப் போட்டது சரிதான்லே. சாமி பூதம்னு சொல்லி, சனங்க அறிவயெல்லாம் பாளடிக்கிறீங்கல்ல, ஒங்களுக் கெல்லாம் இப்படி சோறு தண்ணி காட்டாட்டி தான்லே சொணப்பு வரும்.
என்றபடி தள்ளி விடுகிறான். தள்ளாட்டத்துடன் முன்னோக்கி நடக்கிறான் மாசா ணம். சாத்தன் ரோட்டோரமாய் விளையாடிக் கொண்டிருக்கும் நாலைந்து சிறுவர் களை நோக்கி
சாத்தன் : டேய் பொடிசுகளா, இந்தா வெறகுக் கட்டு மகராசா போறாக, மரியாத செஞ்சி அனுப்பி வைங்கடோய்.
சிறுவர்கள் விளையாட்டை விட்டு
‘வெறகுக் கட்டை மகராசா’
‘வெறகுக் கட்டை மகராசா’ எனக் கூவியபடி பின் தொடர்கின்றனர். எதிரில் தண்ணீர் குடத்துடன் வரும் இரண்டு பெண்கள் இதைப் பார்த்துச் சிரித்தபடி
பெண் : 1 கோயில் மாடு கணக்கா வளந்துருகே தவுத்து ஆம்பிளைக்கான ஒரு ‘இது’ இருக்கா பாரு இதுங்கிட்ட.
பெண் : 2 ஆமா அது கெடக்கு உம்மணா மூஞ்சி, ஊமக் கோட்டான். ஏண்டீ நம்ம கணேசுல ஏதோப் புதுப்படம் ஓடுதாம்ல பேரென்னடீ…
-CUT-
காட்சி – 9
இடம் : கோயில் மண்டபம்
காலம்: இரவு
OUTDOOR
கோயில் மண்டபத்தில் ஊர் கூடியுள்ளது. மாசாணம் ஒரு ஓரமாய் நிற்கிறான் பண்ணையார் செல்லாத்தாவுடன் வருகிறார். ஆர்மோனியம் அருகிலிருக்க பாகவத தர் நடு நாயகமாய் உட்கார்ந்து இருக்கிறார். பண்ணையும் பாகவதரும் பரஸ்பரம் வணங் கிக் கொள்கின்றனர். கீதாரி அருகில் உட்கார்ந்தபடி
பண்ணை : நேரமாச்சுல்ல பஜனை தொடங்கலாம்ல.
கீதாரி : ஆர்மோனியக்காரருக்குக் காச்சலாம். பொட்டி போட ஆளில்லே. (கிண்டலாக)
பண்ணை : பொட்டி போடதென்ன பொல்லாத காரியமா. பாகவதரே போடட்டும். இல்லாங் காட்டி மாசாணந்தான் இருக்கானே மடப்பய. போடச் சொன்ன போடுதான். கூட்டம் ‘கொல்’ லெனச் சிரிக்கிறது.
கீதாரி : அட ஆமாம். சொன்னாப்ல அவனும் சாமி சொண்டாடியில்ல, பொட்டி போட்டு பளக்கமிருக்குமுல்லே. மாசாணம் பொட்டி போடுவியாலே
மாசாணம் வெட்கத்துடன் தெரியுமெனத் தலையாட்டுகிறான்.
பண்ணை : பெறவென்ன வந்து போடுலே. வெத்தல பாக்கு மரியாதைக்காக ‘வெயிட்டு’ பண்றீ களோ தொரை.
மெல்லத் தயங்கியபடி மேடையேறி வருகிறான் மாசாணம்.
பண்ணை : வாலே சட்னு.
மாசாணம் மேடையில் வந்து உட்கார்ந்து சுருதி கூட்டி ஆர்மோனியம் போடத் தொடங்குகிறான். பாகவதர் கண் மூடி பாடத் தொடங்குகிறார்.
பாகவதர் : ம்…கிருஷ்ணா…
கீதோபதேசம் செய்த கிருஷ்ணா எங்கள் கேடுகளைத் தீர்க்க வேண்டும் கிருஷ்ணா. பாகவதர் வரிகளைப் பாட கூட்டம் தொடர்ந்து பாடுகிறது.
பாடுங்கள் – கிருஷ்ணன் நாமம் – பாடுங்கள். பாடிப் பாடிக் கிருஷ்ணன் பாதம் தேடுங்கள்.
வாழ்த்துங்கள் – கிருஷ்ணன் நாமம்- வாழ்த்துங்கள்
வாழ்த்தி வாழ்த்தி பணிவாய்த் தலையைத் தாழ்த்துங்கள்
கேளுங்கள் – கிருஷ்ணன் கீர்த்தி – கேளுங்கள்
கேட்டுக் கேட்டுக் கேட்டிலிருந்து மீளுங்கள்
சொல்லுங்கள்—கிருஷ்ணன் பேரைச்-சொல்லுங்கள்
சொல்லிக் சொல்லி மோட்சத்திற்குச் செல்லுங்கள்.
மேற்படி வரிகளை பாகவதர் பாடக் கூட்டமும் தொடர்ந்து பாடுகிறது. முதல் வரியில் கண்மூடி மெல்ல தாளகதிக்கேற்ப அசைந்தபடி இருந்த மாசாணம் இரண் டாம் வரியில் சற்றே வேகம் கூடி ஆடத்தொடங்குகிறான். பாடல் இறுதியில் உச்ச கதியை அடைய கீழ்க்கண்ட வரிகளை வரிவரியாய் பாகவதர் பாட கூட்டமும் பாடுகிறது. மாசாணத்தின் அசைவுகளில் பின்னும் வேகம் கூடுகிறது.
பாகவதர் : ஜெய ஜெய கிருஷ்ணா- கோபி கிருஷ்ணா
கோபி கிருஷ்ணா- கோபால கிருஷ்ணா கிருஷ்ணா…
பாடல் முடிய மெல்லத் தன்னிலைக்குத் திரும்புகிறான் மாசாணம். கூட்டம் கலையத் தொடங்குகிறது.
கீதாரியும் கிழவியும் பேசியபடி வீட்டை நோக்கி நடக்கின்றனர்.
கிழவி : சும்மா சொல்லக் கூடாது. இந்த மாசாணம் பயலுக்குதான் என்ன ஒரு பக்தி. அப்பிடியே பரவசமாயிட்டானே.
கீதாரி : பரம்பரைச் சாமியாடிகள்ல வந்த வித்து. பஞ்சம் வந்து பாதை மாத்தினாலும் அதென்ன பாளாப் போவுமா; இல்லப் பட்டுத்தான் போவுமா. எல்லாம் பூர்வ சென்மத்துப் புண்ணியம். மாசாணத்துக்கு அது பரிபூரணமா இருக்கு. ஒரு கொறையும் வராம நல்லா இருப்பான் பாரு அந்தப் பய
-DISSOLVE-
காட்சி – 10
இடம் : பண்ணையார் வீடு
காலம்: இரவு
IN DOOR.
வீட்டின் வெளித்தோற்றம். பண்ணையாரின் ஆரவாரச் சிரிப்பொலி கேட்கிறது. உள்ளே கூடத்தில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து ஆரவாரமாய் சிரித்தபடி இருக்கிறார் பண் ணையார். எதிரில் தலை கவிழ்ந்தபடி நிற்கிறான் மாசாணம்.
பண்ணை : சரிதான் சரிதான் கல்யாணம் முடிக்க வேண்டிதுதான்லே. பின்ன அந்தந்த வயசுல அதத செய்யோணும்ல, நல்ல காலம் இதயாச்சும் வாயத் தொறந்து சொன்னியே. அந்த மட்டுக்கும் சந்தோசம். செல்லாத்தா கேட்டியா இந்தப் பய கதய. கல்யாணம் முடிக்கப் போறானாம்.
தட்டில் ஒரு அதிரசத்தை வைத்து எடுத்து வருகிறாள் செல்லாத்தா.
செல் : தெரியாமயாச் சொன்னாக பெரியவுக. நேரங்காலம் ஒன்னாச் சேர்ந்தா நெலம் கூடத் திரும்புமின்னு. பாப்பமின்னு கொஞ்சம் போல இனிப்பு பண்ணினேன். நானென்ன கண்டனா இவன் வந்து நல்ல சேதி சொல்லுவான்னு. இந்தாலே வெக்க மென்ன பொம்பள கணக்கா. இந்தா புடிலே.
செல்லாத்தா வற்புறுத்த இனிப்பை வாங்கிக் கொள்கிறான்.
பண்ணை : அடடேய் ஒபசரனையப் பாருலே. எட்டு ஊருக்கு வெட்டி வீசுது. எனக்கே கெடக்காதுலே இந்த மருவாதி.
செல் : ஆமா குண்டக்க மண்டக்க ஏதும் சொல்லாட்டி தண்ணீ எறங்காதே தொண்டைக் குள்ள. அவனே வயசுக்கு வந்த புள்ள மாரில்ல கோணிகிட்டு நிக்கான். அவனெ துக்கப் போயி என்னத்தையோப் பேசிக்கிட்டு.
பண்ணை : இந்தக் கதயக் கேட்டியா. இவன் கட்டிக்கப் போறவ பேரும் மாசாணம்தானாம்
(பூரிப்புடன்)
செல் : கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்துதுலே. இனி சுளுக்கு கிளுக்குக்கெல்லாம் மந்திரிக்க ஆள் தேடி ஊரூராய் அலய வேணாம். நீயே பாத்துக்கிறலாம். பொண் டாட்டி யோகத்துல மேல மேலப் போவலே நீயி.
பண்ணை : செரி அந்தத் தொளுவத்த அடுத்து இருக்கில்ல ‘ரூம்பு’ அதத் தூத்துப் போட்டு அங்கணயே ஒன் பொண்டாட்டியோடக் குடும்பம் நடத்துலே.
சாவியை எடுத்து நீட்டியபடி
பண்ணை : இது ஒனக்கு என்னோட கல்யாணப் பரிசு.
செல்லாத்தாவைப் பார்த்து
பண்ணை : தாயீ அந்த பொட்டிய எடுத்தா தாயி. செல்லாத்தா அங்கிருந்து அகல்கிறாள்.
பண்ணை : இன்னிக்கிக் கோளி அடிச்சிருக்கு, இருந்து சாப்புட்டு போட்டு ராத்தங்கிக் கருக் கல்ல கெளம்புலே. கல்யாணம் முடிச்சி பொண்டாட்டியோட வர்ரப்ப நல்ல நாளாப் பாத்து கூட்டியாலே. ஒனக்கும் அவளுக்கும் ஊருக்கும் நல்லதா ஆவட்டும்.
செல்லாத்தா பெட்டியைக் கொண்டு வந்து பண்ணையிடம் தர அதிலிருந்து கொஞ் சம் பணத்தை எடுத்து
பண்ணை : இந்தா இதக் கல்யாணச் செலவுக்கு வெச்சிக்கலேய்.
நன்றியுடன் பவ்வியமாய் அதைப் பெற்றுக் கொள்கிறான் மாசாணம்.
-DISSOLVE-
இடம்: தெரு மாசாணம் வீடு.
காலம் : பகல்
OUTDOOR/IN DOOR
மாசாணம் புது மனைவியுடன் தெருவில் நடந்து வருகிறான். ஊர் வேடிக்கை பார்க்கிறது.
கீதாரிக் கிழவரும் கிழவியும் எதிரில் வருகின்றனர். அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுகின்றனர். மாசாணமும் மாசாணத்தியும்.
கீதாரி : நல்ல சகுனந்தான். கோயிலுக்கு போயிகிட்டு இருக்கோம். எதுத்தாப்புல புதுப் பொண்ணும் மாப்பிள்ளையும். நல்லாருக்கோணும்.
கிழவி : மகராசியா மஞ்சளும் குங்குமமுமா நெறயப் புள்ள குட்டியோட நெடுங்காலம் வாழணும்.
இருவரும் வாழ்த்திவிட்டுச் செல்கின்றனர்.
தம் வீட்டு வாசலிலிருந்தபடியே இதைப் பார்த்துவிட்டுக் குரல் கொடுக்கிறார் பண் ணையார். மாசாணம் அவர்களை நோக்கிவர அவர்களை எதிர் கொண்டழைத்துப் புது ‘வீடு’ நோக்கி அழைத்துச் செல்கிறார்.
சாத்தன் ஒரு காலைக் கெந்தியபடி கையில் ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெயுடன் வருகிறான்.
சாத்தன் : கீதாரிதான் ஒன்கிட்ட அனுப்பினாரு. சுளுக்கு வலி ஒரு வாரமா உசர எடுக்கு. கொஞ்சம் எடுத்து விடுலே. ஒன் பொண்டாட்டி பேரும் மாசாணமாம்ல.
பண்ணை : அது செரிதான்லே. பெண்டாட்டி பேரும் தம்பேராக் கொண்டவன் எடுத்து விட்டா சுளுக்கு போவும்னு சொல்லுவாங்க. அதுக்கொரு நேரங்காலம் இல்லையாலே. கல்யாணம் முடிச்சி மனுசன் புது வீடு போறான். இன்னும் வீட்டுக்குள்ளக் காலெ டுத்து வெக்கலை. அதுக்குள்ள உனக்கென்னலே அம்புட்டு அவசரம். வெளக் கெண்ணெயும் கையுமா வந்து நிக்கே.
பண்ணையார் பேசிக் கொண்டு இருக்கையிலேயே தன் பாட்டிற்குக் குத்துக்காலிட்டு உட்கார்ந்து சாத்தனின் காலுக்கு விளக்கெண்ணெய் தேய்த்து நீவி விடுகிறான் மாசாணம். முதலில் ஆஊ வென வலியில் குரல் கொடுத்துப் பிறகு மெல்ல எழுந்து நின்று காலை உதறிவிட்டுக் கொண்டு மாசாணத்தைக் கும்பிட்டு விட்டு நடந்து போகிறான் சாத்தன்.
பண்ணை : லே மாசாணம், நான் அப்பவே சொன்னேன்லா. எல்லாம் உன் பொண்டாட்டி மகிமை.
செல்லாத்தா ஆரத்தி எடுக்க உள்ளே நுழைகின்றனர்.
பண்ணை : பாத்தியாம்மா மாசாணத்தி, ஒன் புருசன் பவிச. வீட்டை எப்படி வெச்சிருக்கான் பாரு. இப்பவுமே நீ அடுப்படிக்கி நேராப் போயி அகப்பைய புடிக்கலாம். இரு வரும் பண்ணையார் செல்லாத்தா காலில் விழுந்து கும்பிடுகின்றனர்.
பண்ணை : இந்தாலத் திரும்பிப் பாக்கறதுக்குள்ள மூணாவுது ஆளுக்கு ‘ரெடி’ பண்ணணும் வெளங்கிச்சா.
பண்ணையார் சிரித்தபடி செல்லாத்தாவை நோக்கி
பண்ணை: சரி சரி கெளம்பு, நமக்கென்ன சோலி இங்க இனிமேல. ஒம் பேத்தி வராதாத் தக வல் வந்ததுல்ல நேத்து. அந்த மகாராணியை ஸ்பெசலாக் கவனிக்கணுமே. செல்லாத்தா மாசாணத்திடம்
செல் : ஆமாம் புள்ள. அது வந்துட்டுதுன்னா வீட்டை ரெண்டாக்கிடும். அதுங்கூடக் கெடந்து மல்லு கட்டவே நேரஞ் சரியாயிடும். வறோம் தாயி.
-FADES OUT-
காட்சி – 12
இடம் : பண்ணை வீடு
காலம் : பகல்
IN DOOR
வீட்டில் ஒரு புறம் ஜுரத்துடன் குழந்தை படுத்திருக்கிறது. வெங்கடாஜலபதி, அம்மன் என சுவரில் வரிசையாய் சாமி படங்கள். பண்ணையார் சாமி கும்பிட்டபடி இருக்கிறார். குழந்தையருகில் உட்கார்ந்திருக்கும் செல்லாத்தா விசனமாய்த் தனக்குத்தானே பேசிக் கொள்கிறாள்.
செல் : முந்தாநாள் வரிக்கும் ஓடியாடி உருட்டிக்கிட்டிருந்த கொளந்தை இப்புடிக் கண் தெறக்காமக் கெடக்கே.
பண்ணையாரைப் பார்த்து
செல் : ஏங்க இன்னிக்கி விடிஞ்சா கண் முளிக்கும்னு இல்ல சொன்னாரு வைத்தியரு. சூரியன் உச்சிக்கி வந்தாச்சு இன்னமுங் கொளந்த கண் தெறக்கக் காணமே. ஒடம்பு சூடும் தணியலியே.
பண்ணை : வைத்தியரைப் பாக்கத்தான் நானும் கெளம்பிகிட்டிருக்கேன். இரு கூட்டியாறேன்,
பண்ணையிடம் செல்லாத்தா சற்றுத் தயங்கியபடி
செல் : ஏங்க நம்ப மாசாணத்தை விட்டு ஒரு தடவை மந்திரிக்கச் சொன்னா என்னங்க. சற்றே முக மலர்ச்சியுடன்
பண்ணை : அட ஆமா இதெனக்குத் தோணலியே. நீ போயி மாசாணத்திகிட்ட சொல்லி போட்டு வா. காட்டுலேந்து அவன் திரும்பினதும் நேரா நம்ப வீட்டுக்கு வரச் சொல்லி.நீ போய் வா அது வரிக்கும் நான் இங்கயே இருக்கேன்.
காட்சி – 13
இடம் : மாசாணம் வீட்டு வாசல்
காலம் : பகல்
OUTDOOR
வெயிலில் உலர்த்திய கருவாடுகளை ஒரு முறத்தில் வாரிக் கொண்டிருக்கிறாள் மாசணத்தி. எதிரில் வரும் செல்லாத்தாவைப் பார்த்துச் சிரித்தபடி எழுந்து நின்று
மாசணத்தி : வாங்கம்மா உள்ள வாங்க.
செல்: நேரமில்ல தாயி. ஊருலேந்து வந்துதுல்ல எம் பொண் வயித்துப் பேத்தி அதுக்கு ரெண்டு நாளாக் காச்சல்.
மாசணத்தி : அடப்பாவமே சின்ன புள்ளயாச்சே என்னாச்சி.
செல் : ம்…… என்ன ஏதுன்னு ஒன்னும் புரியலை. வைத்தியர் குடுத்த மருந்துக்கும் கேக்கலை. மாசாணத்தை வந்து கொஞ்சம் மந்திரிக்கச் சொல்லு தாயீ.
மாசணத்தி : இந்தா நான் கஞ்சி குடுக்கப் போவனில்லா அப்போ கையோடக் கூட்டியாறேன்.
செல் : இருக்கட்டும். சாயங்காலமே வரட்டும். அப்பத்தான் நேரமும் நல்லா இருக்கு.
மாசணத்தி : சரிம்மா அப்பிடியே சொல்லிப் போட்டு வாறேன்.
-CUT-
காட்சி – 14
இடம் : பண்ணை வீடு
காலம் : இரவு
IN DOOR
பண்ணையார் வீட்டில், சுவரில் வரிசையாய் மாட்டப்பட்டிருக்கும் சாமி படங்களுக்குக் கீழே பூ பழம் தேங்காய் ஒரு தட்டு நிறைய விபூதி அருகில் வேப்பிலைக் கொத்து ஊது வத்தி என சகலமும் தயார் நிலையில் உள்ளன. பண்ணையார், செல்லாத்தா, வைத்தியர் மற்றும் நாலைந்து பேர் அமைதியாய்க் காத்திருக்கின்றனர்.
பட்டை பட்டையாய் வீபூதி பூசி வெண்ணிற வேட்டியுடுத்தி வெற்று மார்புடன் மாசாணம் எவரையும் பாராது உள்ளே நுழைகிறான். சாமி படங்களின் முன் நின்று அமைதியாய்க் கை கூப்பிக் கும்பிடுகிறான். ஊதுவத்திக் கட்டை அப்படியே கொளுத்தி அணைத்துப் பழங்களில் சொருகுகிறான். செல்லாத்தா கண் திறக்காத குழந்தையை அவனெதிரில் கிடத்தி விட்டு பய பக்தியுடன் ஒரு புறம் ஒதுங்கி நிற்கிறாள்.
மாசாணம் கண் மூடி முணுமுணுத்தபடி, வேப்பிலைக் கொத்தால் குழந்தையின் உச்சந் தலையிலிருந்து உள்ளங் கால் வரை மூன்று முறை நீவி விடுகிறான். பிறகு விபூதியைப் பிடி அள்ளி பழையபடி செய்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திசையில் விசிறி விடு கிறான். பிறகு சற்று அமைதியாய் மந்திரம் ஜபித்தபடி குழந்தையின் நெற்றியில் விபூதி பூசுகிறான். குழந்தை சிணுங்கிப் புரண்டு படுக்கிறது. மாசாணம் எழுந்து நின்று சாமி கும்பிடுகிறான். பண்ணையாரும் செல்லாத்தாவும் உணர்ச்சி வசப்படுகின்றனர். செல்லாத்தா கண் கலங்கியபடி
செல் : மகமாயி கொளந்தையக் கண் முளிக்க வெச்சிடு ஒனக்கு நூத்தியெட்டு கொடம் பாலாபிஷேகம் பண்ணுறேன்.
பண்ணையார் அவளைச் சைகையால் அமைதிப் படுத்திவிட்டு பூ பழம் தேங்காய் உள்ள தட்டில் ஒரு பத்து ரூபாய்த் தாளை வைத்து கண்மூடி நிற்கும் மாசாணத்தின் எதிரில் நீட்டியபடி நிற்கிறார். கண் திறந்த மாசாணம் தட்டை வாங்கிக் கீழே வைத்து விட்டு வெளியேறுகிறான். அவன் செல்வதையே உணர்ச்சி வயப்பட்டுப் பார்க்கிறார் பண்ணை.
-FADES OUT-
காட்சி – 15
இடம் : கீதாரி வீட்டுத் திண்ணை
காலம் : இரவு
OUTDOOR
திண்ணைச் சுவரில் சாய்ந்தபடி கீதாரியும் அவர் மனைவியும் பேசிக்கொண்டு இருக்கின் றனர். இருவருக்குமிடையில் லாந்தர் விளக்கு எரிகிறது. கிழவி பாக்கு இடித்தபடி
கீதாரி : பின்ன, சாமி அருள் கெடைக்கறதென்ன சாதாரண காரியமா.
கிழவி : வைத்தியரு குடுத்த அம்புட்டு மருந்துக்கும் கேக்காமக் காச்சல்ல மூணு நாளாக் கண் முளிக்காமக் கெடந்த கொளந்தை மாசாணம் தொட்டதும் பெறண்டு படுத்து துன்னா, அந்தக் கையென்ன, வெறுமன சோறு திங்கக் கெடக்கே நம்மளுக்கும் அதுமாரி லேசுப்பட்ட கையா அது.
கீதாரி : கோயில் மண்டபத்து பஜனைல வெச்சேக் கண்டுகிட்டேன், இந்த மாசாணம் மனுசனோட சேத்தி இல்லே இது வேற பெறவின்னு…
கீதாரியின் மகன் உள்ளே இருந்து ஜமுக்காளம் போர்வை தலையணையுடன் திண்ணைக்கு வந்தபடி
கீ . மகன் : இதென்ன வெளக்கு வெச்சதுலேந்து நேத்துக் கதயவேப் பேசிப் பேசி மாயறீக ரெண்டு பேரும். தூங்கற கொளந்தை மேலத் துணி பட்டாக் கூடத்தான் சிணுங் கிப் பெறளும் இதொரு அதிசயமா.
கீதாரி : வாயக் களுவுலேய் மொத. உருப்படாத கோயில்ல உண்டக் கட்டி திண்ண பயலே.
கீ. மகன் : உருப்படாத கோயில்னு அப்படியேதும் தனியா ஒரு கோயில் இருக்கா என்ன?
கிழவி : இந்த வாக்கொளுப்புக்குத்தான்லே வேல வெட்டி இல்லாம ஊரச் சுத்தி வார. இன்னமும் உனக்குத் திமிரடங்கலை. பளிச்ச பளிப்புக்குப் பட்ட பலன் போதுண்டா சாமி.
கீ. மகன் : படிப்புக்கு வேல கெடக்காதது ஏதோ படிச்சவன் தப்பு போலல்லா பேசுத நீயி.
கீதாரி: போதுமடா நீ படிச்சி கிளிச்ச பவுசு. நாலெளுத்துப் படிச்சிப் போட்டா பெரிய நாட் டாமைனு நெனப்போ. படிப்புக்குத் தக்க பண்பாடு இருக்கா. நடப்புக்குத் தகுந்த நாகரீகம் இருக்காலே ஒங்கிட்ட. கொளாயி மாட்டிகிட்டுத் திரியறதுதான் கண்ட நாகரீகம்.
கீ. மகன் : படிச்ச படிப்புக்கு மனுசனுக்குத் தேவப்பட்ட பகுத்தறிவியிருக்குல்ல அது போதும்.
கீதாரீ : ஏ போதும் நிறுத்துடே. ஒன் பகுத்தறிவுல நாய் மோள. லேய் இம்புட்டு ‘லா பாயிண்டு பேசுதியே, படிக்காத பய மவன் என் கேள்விக்கு பதிலச் சொல்லு. சரி மாசாணத்தோட சக்தி ஒன் பகுத்தறிவுக்கு ஒவ்வாது.போட்டும். மூணு நாளா வைத்தியர் குடுத்த மருந்துல கொளந்த ஏன் கண்ணைத் தொறக்கல. இதுக்கொரு பதிலச் சொல்லிப் போட்டுப் பேசுலே.
கீ. மகன் இவரு உள்ளூர் நாட்டு வைத்தியருதான, இவுருக்குத் தெரிஞ்ச அளவுக்குதான் இவுரு வைத்தியம் பாக்க முடியும். இதுவே இங்கிலீசு வைத்தியரா இருந்தா ஊசி போட்டு காச்சலக் கொணமாக்கியிருப்பாரு.
கிழவி : போடாப் பரதேசிப் பயலே. பெரீசாக் கண்டுட்டான் இங்கிலீசு வைத்தியரை. உள் ளூரு வைத்தியருன்னா அம்புட்டு சல்லீசாப் போச்சாலே. உன்னய என் வகுத்து லேந்து வெளிய இளுத்துப் போட்டதே இவுரு பெண்டாட்டிதான்லே. பெரீசா வைத்தியத்தையே கரைச்சிக் குடிச்சிக் கரை கண்டவன் போல என்னலே பேச்சு.
கீ. மகன் : அப்புறம், மாசாணம் மந்திரிச்சிப் புள்ள எளுந்ததை நீங்க கண் கொண்டு பாத்தீங்களா?
கீதாரி : ஆமா இது இன்னோரு ‘லா பாயிண்டு.’ போடாப் போக்கத்தப் பயலே. ஆகா எதையும் கண் கொண்டு கண்டு பகுத்து ஆராஞ்சிதான் ஏத்துப்பீங்களா. ஏண்டா ஒங்கம்மை சொல்லித் தான்லே என்னய அப்பன்னு அடையாளம் கண்டுகிட்டு சிரிச்சே. இனியொரு வார்த்தையாடினே எனக்குப் புள்ளையில்லேனு ஆயிரும் ஆமா…
என்றபடி இருமத் தொடங்குகிறார் கீதாரிக் கிழவர். கீதாரி மகன் போர்வையை இழுத்துத் தலை வரை போர்த்திக் கொள்கிறான். கிழவி அவரை ஆதரவாய் தட விக் கொடுத்தபடி
கிழவி : அவன் கெடக்கான் தலக்கனம் புடிச்ச பய. அதுக்கெதுக்கு இம்புட்டு கத்தி நீங்க இருமனும்.
போர்த்தியபடி கிடக்கும் மகன் பக்கம் திரும்பி
கிழவி : லேய் வாய மூடிகிட்டிப் படுலேய். ஒன்னய மாதிரிப் பயலுக இருக்கறதுனால் தான் மள பெய்ய மாட்டேங்கி.
கீதாரி மகன் போர்வையை விலக்கித் தலையை மட்டும் நீட்டி
கீ. மகன் : மாசாணமுந்தான் இந்தூர்ல இருக்கான்.
கிழவி : லே பொத்திகிட்டுப் படுலே. ஆங்காரம் புடிச்ச பயலே.
-CUT-
காட்சி – 16
இடம் : கிணற்றடி / அடுக்களை
காலம்: பகல்
OUTDOOR/IN DOOR
(MONTAGE)
பண்ணையார் வீட்டுக் கிணற்றடியில் செல்லாத்தா நீர் சேந்த கிணற்றில் வாளியை விடு கிறாள். முழுக்கயிறும் சகடையில் உருண்டு கிணற்றுக்குள் விழுந்து விடுகிறது.
-DISSOLVE-
அடுக்களையில் வண்டல் நீரில் துணியை ஈரப்படுத்தி சட்டியின் உட்புறத்தைக் ‘கழுவி’ அந்தத் துணியிலேயே வண்டல் நீரை வடிகட்டி ஊற்றி சட்டியை உலையில் ஏற்றுகிறாள்.
-DISSOLVE–
காட்சி – 17
இடம்: காய்ந்த வயற்காடு
காலம் : பகல்
OUTDOOR
மழையின்றி வயற்காடு காய்ந்து கிடக்கிறது. அதன் வழியே பண்ணையார், கீதாரி, மாசாணம் மூவரும் நடந்து வருகின்றனர்.
பண்ணை : போச்சே, இந்த வருட வெள்ளாமப் பூரா போச்சே, இங்கன ஒரு குச்சியப் பத்த வெச்சா அம்புட்டும் கருகிச் சாம்பலாயிடும். அப்பிடியில்லா மட்ட கணக்காக் காஞ்சி கெடக்கு அம்புட்டும்.
கீதாரி : என்ன அநியாயமா இருக்கு. ஒட்டகத்தை அறுத்து அதன் ரத்தங் குடிச்சி தாகந் தீத்துக்கற கதயப் பட்டாளத்தான் சொல்லிக் கேட்டிருக்கோம். அது நடப்புக்கே வந்துரும் போலல்ல இருக்கு.
பண்ணை : ஊத்தங் காட்டுக் கெணறும் தூந்துகிட்டே வருது. ஊர் அம்புட்டும் ஒட்டுக்கா அங்கண போயி மொச்சா அதும் எத்தன நாளைக்கி வரும்.
கீதாரி : ரெண்டு மயில் நடந்து போயி இருவதடி கீள எறங்கிக் கோரிக் கோரியில்ல அள்ள வேண்டீருக்கு தண்ணிய.
பண்ணை : என்ன பாவமோ, எந்த சாமிக் கோவமோ ஒன்னும் புரியலை. பஞ்சம் பொளைக்க மாசாணம் இந்தூருக்கு வந்தாமாரி, இப்ப ஊர் பூரா சேந்து டேரா தூக்க வேண்டீதுதான் சர்கஸ் கம்பெனி மாரி.
பதைபதைக்கிற வெயிலில் கீதாரியின் மனைவி தண்ணீர் சுமந்து வருகிறாள். மூவரும் அவளை வழியில் எதிர்கொள்கின்றனர்.
கீதாரி: நீ என்னத்துக்கு இந்த வேகாத வெயில்ல இப்படிக் கெடந்து அலையுதே. பயலக் கொண்டாரச் சொல்ல வேண்டீதுதானே.
கிழவி : அவுனுக்குத் தலைக்கிமேல சோலியில்லா. ஒக்காந்து மீட்டிங்கு பேச எம்புட்டுத் திண்ணை கூப்புடுதோ.
கீதாரி : சரி, அவன விடு உதவாக்கரை பய. அந்தப் பானையக் குடு தாயீ நாந் தூக்கியாறேன்.
என்றபடி கிழவர் சற்றே முன் நகர கிழவி சற்றே வெட்கத்துடன் பின் நகர்ந்தபடி
கிழவி : அட நீங்க ஒன்னு. ம்புட்டுத் தொலவு வந்தாச்சு. இந்தா தான இருக்கு போயிக்குருவேன்.
எனச் சொல்லி இரண்டெட்டு எடுத்து வைத்த கிழவி தடுமாறுகிறாள். கீதாரி அவ ளைப் பாய்ந்து பிடித்துக் கொள்கிறார். ஆனால் தலையிலிருந்த பானை நழுவிக் கீழே விழுந்து உடைந்து நீர் மணலில் பாய, கிழவி அழுகிறாள்.
கீதாரி: நான் சொன்னேன்லா தூக்கியாறேன்னு,
கிழவியின் கால்களைப் பிடித்தபடி
கீதாரி: என்ன ரொம்ப வலிக்கா. கால்ல ஏதும் சுளுக்கா.
கிழவி : சுளுக்கென்ன சுளுக்கு, காலே முறிஞ்சாலும் நம்ப மாசாணந்தான் இருக்கானே மந்திரிச்சி போட
என்றபடி கிழவி ராகமிட்டு ஒப்பாரி போல அழுதபடி
கிழவி : போனது தண்ணியில்லா
பொன்னே போனாலும்
போகட்டுனு விட்டுறலாம்
அம்புட்டு நட நடந்து
அரும்பாடாப் புடிச்சி வந்தேன்
புடிச்ச தண்ணீ முச்சூடும்
பொதமணல்லப் போயிருச்சே – ஐயோப்
போனதுவோத் தண்ணியில்லா.
ஒப்பாரி வைத்து அழும் கிழவியைப் பண்ணையாரும் கீதாரியும் (மியூட்டில்) தேற் றிச் சமாதானப் படுத்துகின்றனர். ஒரு முடிவுக்கு வந்தவனாய் மாசாணம் வேக மாய் அங்கிருந்து கிளம்புகிறான் பண்ணையாரும் கீதாரியும் அழைப்பதைக் கூட (மியூட்டில்) பொருட்படுத்தாமல் போகிறான் மாசாணம்.
-CUT-
காட்சி – 18
இடம் : கோயில் மண்டபம் / மரத்தடி
காலம் : பகல்
OUTDOOR
கோயில் மண்டபத்தில் கீதாரியின் மகனும் இன்னும் இருவரும் அமர்ந்து இருக்கின் றனர். சாத்தன் அலுத்துக் கொண்டபடி வருகிறான்.
சாத்தன் : ஏ அப்பா என்ன வெயில் அடிக்கி. ரத்தஞ் சுண்டிப் போயிரும் போலல்ல இருக்கு.
கீ. மகன் : மள பெய்யாம பூமி காஞ்சி வெடிச்சில்ல கெடக்கு. சாதாரணமா அடிக்கிற வெய்ய கூட தகிக்கதான் செய்யும்.
தொலைவில் மாசாணம் வந்து கொண்டு இருக்கிறான். அதைப் பார்த்த கீதாரியின் மகன் சாத்தனிடம் கேலியாக
கீ. மகன் : லேய் ஒனக்கு சுளுக்கெடுத்துவிட்ட பாரீன் டாக்டரு வாராரு லேய்.
சாத்தன் : சும்மாக் கெடந்து கேலி பண்ணாதீங்க. மந்திரமோ மாயமோ என் புத்திக்கு எட் டலை. ஆனா அவன் வெளக்கெண்ணெயத் தடவி உருவினதும் உசுர எடுத்துக் கிட்டிருந்த சுளுக்கு போன எடம் தெரியாமப் போனதென்னவோ உண்மைதான்.
மாசாணம் இன்னும் சற்று அருகில் நடந்து வந்தபடி இருக்க அவனைப் பார்த்து சாத்தன்
சாத்தன் : மாசாணம் வந்து நெளல்ல ஒதுங்கி இரு.
பக்கத்தில் ஜாடையாகப் பார்த்தபடி நக்கலாய்
சாத்தன் : கொலை பதைக்கிற வெயிலுக்குக் கோயில் நௌல் குத்தமில்லேனு நம்மவரே ஒதுங்கி இருக்காரு பாரு.
கீ. மகன் : லே படுக்காளிப் பயலே, கட்சி தாவிட்டியாலே ஒரு சுளுக்குலயே
எனக் கூறிச் சிரித்தபடி கையோங்க சாத்தன் பயந்த பாவனையில் ஒதுங்குகிறான். வந்து நின்ற மாசாணம் எதையும் சட்டை செய்யாது கண்மூடி கை கூப்பிக் கும்பிட்ட படி நிற்கிறான். பிறகு வாய் திறந்து சபதம் போல
மாசாணம்: பாவி மளை பெய்யாத வரிக்கும் உசுரே போனாலும் பச்ச தண்ணீய கூட வாய்ல ஊத்த மாட்டேன். இது உன் மேல ஆணை.
மளையக் குடு இல்லே என் உசுர எடு. ஒனக்கு எது சரீன்னு படுதோ அப்பிடியே செய்
எனச் சொல்லி விட்டு வேகமாய் நடந்து தான் பஞ்சம் பிழைக்க வந்து தங்கிய மரத் தடியில் போய் கிழக்கு பார்த்து உட்கார்ந்து கண் மூடிக் கொள்கிறான் மாசாணம். இதைக் கண்டு மண்டபத்து ஆட்கள் வாயடைத்து திகைக்கின்றனர். மெய் சிலிர்த்த படி சாத்தன்
சாத்தன் : அப்பிடிச் சொல்லுடா ஆம்பிளைன்னானாம். இவனில்ல ஆம்பிளை. நாமளுந் தான் வேட்டியும் கொளாவும் மாட்டிகிட்டு இருக்கோம், என்னத்துக்குப் பிரயோ சனம். பூமிக்கு பாரம்.
சுதாரித்துக் கொண்டவனாய் கீதாரியின் மகன்
கீ. மகன் : லேய் சும்மாக் கெடந்து பொலம்பாதலே. பாரீன்ல மளமேகத்தைப் பிளேன்ல வெரட்டி வேண்டிய எடத்துல நிக்க வெச்சீ மள பெய்ய வெக்கான் பாரு அவன் ஆம்பிளை. புத்தியால ரோசிச்சி சிக்கலைத் தீக்கிறவன்தான் ஆம்பிளை. அப்பிடி யான விஞ்ஞானிகளை அளச்சி மளபெய்ய வெக்க நம்ம அரசாங்கமே முயற்சிகள் நடத்திக்கிட்டு இருக்கு. ஒனக்கெங்க, பத்திரிகை படிச்சால்ல இதெல்லாம் வௌங்க. நீ கையுருட்டுற கேஸில்லா.
ஊர் சாத்தன் : அடப் போலே நீயொன்னு, வெட்டி வேதாந்த வௌக்கவுரை பேசிகிட்டு. ஊர் பொது விசயத்துக்காக வேண்டி ஒரு மனுசன் முன் வாரானேன்ட்டு பாக்காம என்னம்மோ பேசிகிட்டு
என எரிச்சலுடன் துண்டை உதறி சாத்தன் எழ கீ. மகன் தவிர மற்றவர் அனை வரும் சாத்தனை பின் தொடர்ந்து மரத்தடிக்குச் செல்கின்றனர். கூட்டத்திடம்
சாத்தன் : லேய் வெலகி நின்னு காத்தாச்சும் விடுங்கலே.
-DISSOLVE-
காட்சி – 19
இடம் : மரத்தடி
காலம்: இரவு
OUTDOOR
(MONTAGE)
மரத்தடியில் அமர்ந்திருக்கிறான் மாசாணம்.
-CUT-
காட்சி – 20
இடம் : பண்ணை வீடு
காலம்: இரவு
IN DOOR
தமது வீட்டுக் கூடத்தில், சாய்வு நாற்காலியில் சாயாமல் உட்கார்ந்திருக்கும் பண்ணை யார் தம் மனைவியிடம்
பண்ணை : ஏன் தாயி, இப்புடி வயித்தக் காயப் போட்டுக் கெடக்கானே மாசாணம். அவனுக்கு ஒரு வா ஏதாச்சும் கொடுத்தா என்ன தாயீ.
செல் : அவனொரு முடிவெடுத்தா, அவங் கும்புட்ர அந்த ஆத்தாளே நேர்ல வந்தாலும் அத மாத்த முடியாதுல்ல. அவுனுக்கு ஒரு வாத் தண்ணி கூடக் கொடுக்கக் கூடா துன்னு ஊர் மரத்துல கெட்டிப் போட்டீகளே நெனவிருக்கா. ஒங்களுக்குத் தெரி யாம். அன்னிக்கி ராத்திரி, மனசு கேக்காம மரத்தடிக்கிப் போயி ஒரு வாப் பாலாச்சும் குடிரான்னு கெஞ்சினேன். மொகத்த அந்தாலல்ல திருப்பிக்கிட்டான். இது அவனா எடுத்துருக்கர வெரதமில்ல. இதுல அவனக் கலைக்க ஆரால முடி யும். மளயக் குடுத்து அவன் உசுரக் காப்பாத்துன்னு அந்த ஆத்தாள வேண்டற தத் தவுத்து எனக்கு வேற வளி வௌங்கலே.
-CUT-
காட்சி – 21
இடம் : மரத்தடி
காலம்: இரவு
OUTDOOR
மாசாணம் மரத்தடியில் கண் மூடி அசையாது உட்கார்ந்திருக்கிறான். அவன் மேல் மண் புழுதி படிந்திருக்கிறது. அருகில் மாசணத்தி கண்ணீர் மல்கியபடி சாப்பாட்டுத் தட்டுடன் அமர்ந்திருக்கிறாள். கீதாரி அவனெதிரில் மண்டியிட்டபடி கெஞ்சலாய்
கீதாரி : கொஞ்சமா இந்தப் பாலாச்சும் குடிச்சிக்கலே…லே… மாசாணம் வெரதத்துக்கு பால் விரோதமில்லே… மகனே நீ இப்புடிக் கொலப் பட்டிணி கெடக்கறப்போ தொண்டைக்குள்ள ஏதும் எறங்க மாட்டேங்குது சாமீ.
அவன் அசையாது இருப்பதைப் பார்த்து பெருமூச்சு விடுகிறார் கீதாரி. கண் கலங்கி இருக்கும் மாசாணத்தியிடம்
கீதாரி : ம்… இவன் பிடிவாதத்துக்கு அந்த ஆத்தாளாப் பாத்து மன மெறங்கினாத்தான் உண்டு.
இங்க கெடந்து நீ ஏன் தாயி அளுதுகிட்டு, கெளம்பு. எல்லாம் நல்லபடியா ஆகும். என்றபடி அவளை அழைத்துக் கொண்டு செல்கிறார். மாசணத்தி கண்களைத் துடைத்தபடி அங்கிருந்து அகல மனமின்றி அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்த படி செல்கிறாள்.
-FADES OUT-
காட்சி – 22
இடம் : கிடை
காலம்: காலை
OUTDOOR
குச்சியால் பல் விளக்கியபடி கிடையை நோட்டம் விடுகிறார் கீதாரி. ஆடுகள் ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி அடைவதைக் காண்கிறார். வானத்தை அண்ணாந்து பார்க்கிறார். மெல்ல மூட்டம் போடத் தொடங்குகிறது. மெல்ல குளிர்ந்த காற்று வீசுகிறது. மேல் துண்டு அசைகிறது. ‘உடல் சிலிர்த்துக் கொள்கிறது. குச்சியைத் தூர எறிந்து தமக்குத் தாமே கூவியபடி
கீதாரி : மாசாணம் நீ மகா சக்தி படைச்சவன்தான் லேய். மானம் மனமெறங்கத் தொடங் கிருச்சிலேய்
ஓடத் தொடங்குகிறார்.
-CUT-
காட்சி – 23
இடம் : மரத்தடி
காலம் : காலை
OUTDOOR
கூவியபடி ஓடி வரும் கீதாரி கூடி நிற்கும் கூட்டத்தைக் கண்டு ஆவேசமாய்
கீதாரி : மகா சக்தி படைச்சவன் மாசாணம். இது சத்தியம். மள வரப் போவுது. கெடையில் ஆடுங்கக் கூடிக் கூடி அடையிது.
அண்ணாந்து பார்த்து விட்டு உற்சாகமாய்
சாத்தன் : அட ஆமா மூட்டமில்லப் போடுது,
காத்து கூடக் குளுந்து அடிக்கிதே……
எனச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தூரத் தொடங்குகிறது. மரத்தடிக் கூட்டம்-கீதாரி சாத்தன் தவிர-மொத்தமும் மழைக்கு பயந்து கோயில் மண்டபத்துக்கு ஓடுகிறது.
கீதாரி : சாமீ…
என்றபடி நெடுஞ்சாண் கிடையாய் மாசாணத்தின் எதிரில் தரையில் விழுந்து கும்பிடுகிறார். சாத்தனும் விழுகிறான். பண்ணையாரும் செல்லாத்தாவும் மாசணத்தியும் மழையில் நனைந்தபடி ஓடி வந்து அவன் எதிரில் விழுகின்றனர்.
பண்ணை : ஒரு வாத் தண்ணீ கூட ஊத்தக்கூடாதுன்னு சொல்லி ஒன்னய மரத்துல கட்டி வெச்ச”இந்தப் பாவிக்கும் சேத்துல மளயக் கொண்டாந்துருக்கே. நீ பஞ்சம் பௌக்க வந்தவனில்ல அய்யா. இந்த ஊரு பஞ்சத்தப் போக்கத்தான் அந்த ஆத் தாளாப் பாத்து ஒன்னய அனுப்பி வெச்சிருக்கு.
எனத் தழுதழுத்தபடி பண்ணையாரும் அவனெதிரில் மண்டியிட்டு விழுந்து கும்பிடு கிறார். மண்டபத்து ஆட்களில் சிலரும் வந்து விழுந்து கும்பிடுகின்றனர். மாசாணம் கையை நீட்டி மழை நீரைக் கையில் பிடித்து,
மாசாணம் : ஏ…தாயீ…
என்றபடி ஒரு வாய் குடிக்கிறான்.
பிறகு கண் திறக்கிறான். எழுந்து எதிரிலிருப்போரைக் கவனியாது எதிர்ப்புறம் நடக்கத் தொடங்குகிறான். மாசாணத்தி அவனைப் பின் தொடர்ந்து இரண்டடி பின்னால் செல்கிறாள். மழை கொட்டிக் கொண்டு இருக்கிறது.
-END TITLES-
– ‘நிலை நிறுத்தல்’ கதை கி.ராஜநாராயணனின் ‘கொத்தைப் பருத்தி’ தொகுப்பில் உள்ளது.
– நவம்பர் 1991, காலம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
காடு
மருதம் கேதீஸ்
July 14, 2026
ஏகேஆர் 87 42 23 17
கே.ராஜலக்ஷ்மி
July 14, 2026
அகல் விளக்கு
மு.வரதராசன்
July 14, 2026