சங்கர்லால் வந்துவிட்டார்!
கதையாசிரியர்: தமிழ்வாணன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: June 29, 2026
பார்வையிட்டோர்: 122
(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30
21

சின்னத்துரையின் கார் மெல்லச் சென்று கொண்டிருந்தது
காரைச் சின்னத்துரையே ஓட்டிச் சென்றார்.
காரில் –
வேறு எவரும் இல்லை.
சின்னத்துரையின் கண்கள், சாலையின் இரு பக்கங்களிலும் துழாவிப் பார்த்தன. வண்டிகளின் போக்குவரத்து மிகுந்திருந்ததால், காரை விரைந்து ஓட்ட முடியவில்லை சாலை ஓரங்களில் மக்களின் கூட்டம் சொல்லி முடியாது. சென்னை மாநகரில், கடந்த பத்து ஆண்டுகளுக்குள் எப்படி இவ்வளவு கூட்டம் மிகுந்து விட்டது என்று எண்ணி வியந்த சின்னத்துரை, அந்தக் கூட்டத்திலும் கூட ஓர் ஓரத்தில் சென்று கொண்டிருந்த சவரிமுத்தைப் பார்த்து விட்டார்.
சவரிமுத்து சின்னத்துரையைக் கவனித்து விட்டு, பக்கத்தில் தெரிந்த பெரிய ஓட்டலுக்குள் நுழைந்தான்.
சின்னத்துரையும் காரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு. ஓட்டலுக்குள் சென்றார். உள்ளே –
ஒரு தனி அறையில் உட்கார்ந்து சின்னத்துரையின் வருகைக்காகக் காத்திருந்தான் சவரிமுத்து.
சின்னத்துரை சவரிமுத்தின் எதிரே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். சவரிமுத்து –
மெல்லச் சிரித்தான்.
அவன் சிரிப்பில் உணர்ச்சி இல்லை. அவன் எதையோ இழந்து விட்டதைப் போல் சோகத்துடன் காணப்பட்டான்!
சின்னத்துரை பதிலுக்கு இலேசாகச் சிரித்துவிட்டு, மெல்லத் திரும்பிப் பார்த்தார். அவருடைய கண்கள், அந்த ஓட்டலில் எவராவது அவர்களைக் கவனமுடன் பார்க்கிறார்களா என்று கூர்ந்து கவனித்தன. ஓட்டலில் குழுமியிருந்தவர்களில் எவரும் அவர்களுடைய சந்திப்பில் அக்கறை கொண்டவர்களாகத் தெரியவில்லை. சின்னத்துரை அமைதியுடன் திரும்பி, ‘சவரிமுத்து, உன்னை எங்கேயெல்லாம் தேடுவது?” என்றார்.
சவரிமுத்து மீண்டும் சிரித்தான். அவன் சிரிப்பிலே உயிர் இல்லை!
“என்ன சிரிக்கிறாய் சவரிமுத்து?” என்று கேட்டார் சின்னத்துரை.
“போலீசார் என்னைத் தேடுவது உனக்குத் தெரியாதா? வெளியே தலை காட்டுவதே தவறு! இந்த நிலையில், எங்கே எப்படியும் உன்னைப் பார்த்து விடுவது என்று துணிந்து இந்தப் பக்கம் வந்தேன். நான் எண்ணியிருக்க வேண்டும், இல்லையா?” என்றான் சவரிமுத்து,
சின்னத்துரை சிறிது நேரம் சவரிமுத்தை உற்றுப் பார்த்தார். சவரிமுத்து, இப்போது சிறையிலிருந்து தப்பிவந்தவனைப் போல் காணப்படவில்லை. புதிய சட்டையும் கால் சட்டையும் நடையன்களும் அவன் அணிந்திருந்தான்,
‘சின்னத்துரை, எதற்காக நீ அப்படி என்னை உற்றுப் பார்க்கிறாய்?” என்று கேட்டான் சவரிமுத்து.
“உன்னைப் பார்த்தால் சிறையிலிருந்து தப்பி வந்தவனைப் போல் இல்லையே! நான் போய் ஒரு போலீஸ்காரனை அழைத்து, ‘இதோ சவரிமுத்து!; பிடி என்றால் கூட அவன் உன்னைக் கைது செய்யத் தயங்குவான் என்பதில் ஐயமில்லை. சிறையிலிருந்து தப்பி வந்த ஒருவன் இவ்வளவு ஒழுங்காக இருக்க முடியுமா என்ற ஐயம் வந்துவிடும் போலீஸ்காரனுக்கு!” என்றார் சின்னத்துரை.
“தீயில் விழுந்துவிட்ட தேளைப் போல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். தீயில் விழுந்த தேளை எவராவது காப்பாற்றுவார்களா? வாழ்க்கையில் எப்படியாவது பணம் திரட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, முறை தவறிய தொழிலில் ஈடுபட்டிருக்கும் எனக்காக இரக்கம் கொள்ள எவர் இருக்கிறார்கள்? சிறையிலிருந்து தப்பி வந்திருக்கும் என்னை எப்படியும் போலீசார் விடமாட்டார்கள்! இன்று இல்லாவிட்டால் நாளை! என் ஒரே மகளைக் கண்டு பிடித்து அவளுக்கு ஓர் இரகசியத்தைச் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று தானே சிறையிலிருந்து தப்பி வந்தேன். இப்போது வெளியே வந்து பயன் என்ன?” என்றான் சவரிமுத்து அவன் –
இன்னும் எவ்வளவோ பேச வேண்டியிருந்தது. அவன் க்கவில்லை பேச எண்ணியது அனைத்தையும் சொல்லி முடிச் என்பதைச் சின்னத்துரை புரிந்து கொண்டார். அவர் சவரிமுத்தை அமைதியுடன் பார்த்தார்.
“இப்போது என்ன நடந்து விட்டது சவரிமுத்து?” என்றார் சின்னத்துரை சிறிது நேரம் கழித்து.
சவரிமுத்து இலேசாகச் சிரித்து விட்டுச் சொன்னான். “என்ன நடந்து விட்டதா? இன்னும் என்ன நடக்க வேண்டும்! எந்த நிமிடத்திலும் என் மார்பில் ஒரு குண்டு பாயலாம்! முதுகிலே ஒரு கத்தி வந்து பாயலாம்! என்னை எவராவது கொன்று போட்டாலும், கொன்றவருக்குப் போலீஸ் இலாகாவில் ஒரு தங்கப் பதக்கமும் பாராட்டுப் பத்திரமும் அளிப்பார்கள்! அந்த நிலையில் இருக்கிறேன் இன்று நான்!”
சின்னத்துரை தலையை மேலும் கீழுமாக அசைத்தபடி சவரிமுத்து சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தார். சவரிமுத்திடம் அவர் பல கேள்விகள் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தார். முதலில், சவரிமுத்து சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தார்.
சவரிமுத்து சிறிது நேரம் சிந்தனை செய்து விட்டுச் சொன்னான்: ‘சின்னத்துரை, அன்று உன்னுடைய மயிலாப்பூர் முகவரிக்கு நான் வந்த போது நீ இல்லையே! மயிலாப்பூர் இல்லத்தில் எனக்காக நீ காத்திருப்பதாகச் சொல்லியிருந்தாயே! நான் வருவதற்குள் நீ பறந்து விடுவாய் என்று நான் எண்ணவே இல்லை. புலிக்குட்டி மட்டும் தான் அங்கே இருந்தான். அதுவும், தான் வந்த போது அவன் மூச்சு நின்று விட்டிருந்தது! அவ்வளவு எளிதில், அவ்வளவு விரைவில் நீ அவனைத் தீர்த்து விடுவாய் என்று நான் எண்ணவே இல்லை! நீ எப்போதுமே கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுவாய். உன்னிடமே அவன் இவ்வளவு முறைகேடாக நடந்து கொண்டு உன் கையாலேயே செத்துப் போனானே என்பதை எண்ணும் போது என் மனம் துடிக்கிறது! என் மகளை அவன் தான் கடத்திச் சென்று எங்கேயோ மறைவிடத்தில் வைத்திருக்கிறான் என்பதில் எனக்குக் கொஞ்சமும் ஐயமில்லை. புலிக்குட்டியை எப்படியும் நானே என் சுரத்தால் கொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்குள் அவன் பொறுமை இழந்து உனக்குக் கொதிப்பை மூட்டிவிட்டிருக்கிறான்!” சின்னத்துரையின் முகம் –
அடியோடு மாறிவிட்டது!
அவருடைய முகம் அப்படி மாறுவதைச் சவரிமுத்து கவனித்தான். பேச்சை நிறுத்திவிட்டு, “என்ன? எதற்காக அப்படி என்னைப் பார்க்கிறாய்?” என்றான்.
சின்னத்துரையின் முகத்தில் தோன்றியிருந்த சிரிப்பு மறைந்து விட்டது! அவர் –
வியப்புடன் சவரிமுத்தைப் பார்த்தார். “சவரிமுத்து என்னைக் கேலி செய்கிறாயா! இல்லை உண்மையாகவே சொல்லுகிறாயா? என்னைப் பற்றி உனக்கு நன்றாகத் தெரியும் அல்லவா? நான் வாழ்க்கையில் இதுவரையில் ஒரு கொலை கூடச் செய்ததில்லையே! கொலை செய்வது தேவையற்ற செயல் என்று கருதுபவன் நான். இது உனக்குத் தெரியும். மற்றவர்களுக்கும் தெரியும். போலீஸ் இலாகாவுக்கே தெரியும். ஆகையால், நான் தான் புலிக்குட்டியைக் கொன்றேன் என்று நீ முடிவு கட்டி, என்னைப் பாராட்டுவது பெரும் வியப்பை அளிக்கிறது! உண்மையில், உனக்காக நான் குறிப்பிட்ட நேரத்திற்கு என். இல்லத்திற்கு வந்தேன். அங்கே, புலிக்குட்டி செத்துக் கிடந்தான்! குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே புலிக்குட்டி வந்து விட்டான். நான் வருவதற்கு முன்பே நீயும் வந்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். நான் வருவதற்குள், உனக்கும் புலிக்குட்டிக்கும் காரசாரமான பேச்சு நடந்து இறுதியில், கொதிப்புக்கு அடிமையாகிப் புலிக்குட்டியைக் கொலை செய்துவிட்டாய் என்றல்லவா எண்ணினேன்? உன்னை அங்கே காணாமல் போனதும், உடனே நான் புறக்கடைப் பக்கமாக ஓடிவிட்டேன்! நீ என்னவென்றால், நான் தான் கொலை செய்தேன் என்கிறாய்! எப்படி இருக்கிறது கதை!” என்றார். இந்த நேரத்தில் –
சவரிமுத்தின், முகம் அடியோடு மாறிவிட்டது! அவன் முகம் வேர்த்துக் கொட்டியது. கால் சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்து விட்டுக் கொண்டான்.
“ஏன் இப்படி உனக்கு வேர்த்துக் கொட்டுகிறது?” என்று கேட்டார் சின்னத்துரை.
சவரிமுத்தின் உடல் இலேசாக நடுங்கியது. “சின்னத்துரை, உண்மையில் நீதான் புலிக்குட்டியைக் கொன்று விட்டாய் என்று எண்ணி அல்லவா நான் மகிழ்ச்சியுடன் இருந்தேன்? அவனைக் கொல்லுவதற்கு முன் அவன் கொண்டு சென்ற கடிதத்தையும், என் அருமை மகள் பேரழகி இருக்குமிடத்தையும் கண்டு பிடித்த பின்புதான் கொலை செய்துவிட்டாய் என்று எண்ணினேன். இப்போது, புலிக்குட்டி இறந்து போனான், அவன் பேரழகியை எங்கே அடைத்து வைத்திருக்கிறானோ! எப்படிக் கண்டுபிடிப்பது?””
சின்னத்துரை சிந்தனை செய்தபடி, “அதற்காகத் தானே நான் புளிக்குட்டியை வரச் சொன்னேன், உன்னையும் வரச் சொன்னேன், புலிக்குட்டி, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவற மாட்டான். அவனை நான் கண்டுபிடித்ததும், கடிதத்தைக் கொடுக்கும்படியும். பேரழகி இருக்கும் இடத்தைத் தெரிவிக்கும்படியும் கேட்டேன். புலிக்குட்டி எதையும் எளிதில் சொல்லமாட்டான். அவன் மெல்லச் சிரித்துவிட்டு, “என்னிடம் ஏது கடிதம்? சின்னப் பையன்கள் பேச்சைக் கேட்டு என்னைத் துளைக்கிறாயே! பேரழகி என்று சவரிமுத்துவுக்குப் பெண் இருக்கிறாளா? நான் பார்த்ததே இல்லையே!” என்றான். அவன் சொல்லுவது பொய் என்பது எனக்குத் தெரியாதா? அவனிடம் மிகவும் பக்குவமாகவே பேசினேன். பாதிக் கடிதம் அவனுக்குப் பயன்படாது என்றேன். பேழகியை ஒளித்து வைத்திருப்பதால் பயனில்லை என்றும், சவரிமுத்து கொதிப்பின் காரணமாக, அவனைக் கொன்று விடுவான் என்றும் சொன்னேன். கடிதத்தைக் கொடுத்துவிட்டு, பேரழகி இருக்குமிடத்தையும் சொன்னால், ஐயாயிரம் ரூபாய் சவரிமுத்திடம் வாங்கித் தருவதாகச் சொன்னேன். நான் எப்போதும் சொன்ன சொல்லைத் தட்டமாட்டேன் என்பது தெரியும். என்னை அவன் நம்பி, என்னுடைய முகவரிக்கு வந்திருக்கிறான். நான் வெளியே சென்றுவிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் தான் வந்தேன். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே புலிக்குட்டி வந்திருக்கிறான். அவன் வந்ததும், அவனுக்கு முன் வந்திருந்த வேறு எவரோ அவனை மண்டையில் அடித்துப் போட்டுவிட்டுப் போய் விட்டிருக்கிறார்கள்! நான் வந்து போன பிறகு நீ வந்திருக்கிறாய்! இல்லையா?” என்றார்.
“ஆமாம் சின்னத்துரை! நான் பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்திருக்கிறேன். நீ மட்டும் தான் குறிப்பிட்ட நேரத்தில் வந்திருக்கிறாய். புலிக்குட்டியும் குறிப்பிட்ட நேரத்தில் வந்திருந்தால், இப்போது அவன் உயிரோடு இருப்பான். நான் தாமதமாக வராமல் குறிப்பிட்ட நேரத்தில் வத்திருந்தால், இப்படி அஞ்சி ஓடி ஒளிய வேண்டியதில்லையே! நான் புறக்கடைப் பக்கம் ஓடியபோது, வெளியே ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்த மனிதர் யாரென்று சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் ஓர் ஐயம். அவர் சங்கர்லாலாகத்தான் இருக்க வேண்டும். வந்தது சங்கர்லாலாக இருந்தால், அவர் செத்துக்கிடக்கும் புலிக்குட்டியைப் பார்த்துவிட்டு என்ன முடிவு செய்வார்? சவரிமுத்துதான் கொலை செய்துவிட்டு ஓடுகிறான் என்றல்லவா எண்ணிவிடுவார். ஏற்கனவே வகாபுக்கு என்னைத் தூக்கிலிடவில்லையே என்றும் துன்பம்! சங்கர்லாலும் வகாபும் சேர்ந்து கொண்டு இந்தத் தடவை என்னைத் தீர்த்துக் சுட்டிவிடுவார்கள்!” என்றான் சவரிமுத்து.
“நீ சொல்லுவது உண்மையாக இருக்கலாம்” என்றார் சின்னத்துரை!
“எது உண்மையாக இருக்கலாம் என்கிறாய்?” என்று கேட்டான் சவரிமுத்து.
“சங்கர்லால் வந்ததைப் பற்றித்தான் சொல்லுகிறேன். நம்முடைய திட்டத்தைப் பற்றி வேறு எவனோ அறிந்திருக்கிறான். அந்த மனிதன் நம்முடைய சந்திப்பைப் பயன்படுத்திக் கொண்டு என்னுடைய வீட்டில் வந்து ஒளிந்து கொண்டிருக்க வேண்டும். புலிக்குட்டி பணம் என்றால் வாயைப் பிளப்பவன். ஐயாயிரம் ரூபாய் என்றதும், குறிப்பிட்ட நேரத்திற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பே வந்துவிட்டிருப்பான். ஒளிந்திருந்த மனிதன் புலிக்குட்டியைக் கொன்றுவிட்டுப் போய்விட்டான். இப்போது புலிக்குட்டியைக் கொலை செய்தது எவர் என்பது தெரியவில்லையே! நமக்குத் தெரியாமல் வேறு எவர் நம்முடைய செயலில் குறுக்கிட முடியும்? என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. புலிக்குட்டியைக் கொன்றவன், தொலைபேசியின் மூலம் சங்கர்லாலை அழைத்து, தான் யார் என்பதைச் சொல்லாமல், உடனே மயிலாப்பூருக்குப் போகும்படி முகவரி கொடுத்திருப்பான். சங்கர்லால் வரும் போது நாம் இருவரும் அந்த வீட்டில் இருப்போம் அல்லவா? அதுதான் அவனது எண்ணம்!” என்றார் சின்னத்துரை.
சவரிமுத்து சிறிது நேரம் பேசாமல் இருந்தான். பிறகு –
“அந்த இரண்டு பையன்களும் உன்னிடமிருந்து தப்பி ஓடினார்களே. அவர்களில் ஒருவன் உதவிப் போலீஸ் கமிஷனர் வகாபின் மகன் அல்லவா? அவன்தானே பார்சலைக் கொண்டு வந்து மயிலாப்பூர் முகவரியில் உன்னிடம் கொடுப்பதற்குப் பதிலாகப் புலிக்குட்டியிடம் கொடுத்துவிட்டான்! வகாபின் மகன், சங்கர்லாலிடம் உன்னுடைய முகவரியைக் கொடுத்திருந்தால்? சங்கர்லால் வருவதற்கு அப்படியும் ஒரு காரணம் இருக்கிறது அல்லவா?” என்றார்.
“நீ சொல்லுவதும் உண்மைதான் சவரிமுத்து! நான் அதைப் பற்றிச் சிந்தனை செய்து பார்த்தேன். சங்கர்லால் எப்போது வந்திருக்கிறார்? புலிக்குட்டி கொலையுண்ட பிறகு, சொல்லி வைத்தாற் போல் வந்திருக்கிறார்! ஆகையால் எனக்கு ஐயமாக இருக்கிறது. அமீதும் மணியரசும் என் முகவரியைச் சொல்லியிருப்பார்கள் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. ஆனால், அவர்கள் தப்பிப் போய் நான்கு மணி நேரத்திற்குப் பின் சங்கர்லால் ஏன் வரவேண்டும்? அவர் உடனே அல்லவா வந்திருக்க வேண்டும்!”. என்றார் சின்னத்துரை.
“நாம் நினைப்பதற்கும் சங்கர்லால் செய்வதற்கும் மிகுந்த வேறுபாடு இருக்கும். அவருடைய போக்கே புதுமையாக இருக்கும். ஆகையால் எதையும் நம்புவதற்கில்லை. இனிமேல் இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதில் பயனில்லை. நாம் ஒளிந்து கொள்ள இடம் பார்க்க வேண்டும். சங்கர்லால் நம் வழக்கில் தலையிட்டு லிட்டார் என்றால், வெகு எளிதில் உண்மைகளைக் கண்டுபிடித்து விடுவார்! புலிக்குட்டியைக் கொலை செய்தது உண்மையில் யார் என்பதைச் சங்கர்லால் கண்டுபிடிக்காமல் விடமாட்டார். நம்மையும் அவர் எங்கிருந்தாலும் விட மாட்டார். சங்கர்லால் நம்மைக் கண்டுபிடிப்பதற்குள், நாம் பேரழகியைக் கண்டுபிடித்தாக வேண்டும். அதற்கு ஒருவழி தான் உண்டு. புவிக்குட்டியைக் கொலை செய்தவன், புலிக் குட்டியிடமிருந்த பாதிக் கடிதத்தை எடுத்துக் கொண்டிருப்பான் என்று எண்ணுகிறேன். அவன் பேரழகி இருக்குமிடத்தையும் அறிந்து வைத்திருப்பான். ஆகையால், அவன் யார் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்!” என்றான் சவரிமுத்து.
“புலிக்குட்டியின் பக்கத்தில் ஒரு தோல்பை விழுந்துகிடந்ததே. பார்த்தாயா?” என்று கேட்டார் சின்னத்துரை.
“பார்த்தேன். அதில் ஏதோ செய்திப் பத்திரிகைகள் தாம் இருந்தன. வேறு ஒன்றையும் காணோமே!” என்றான் சவரிமுத்து.
”தான் அதைத் தொடவே இல்லை. அதைத் தொட்டுப் பார்த்தால், நம்முடைய கை இரேகைகள் அதில் படிந்து விடுமே! பிறகு கொலைக் குற்றம் என் மீது அல்லவா வந்து விடும்!” என்றார் சின்னத்துரை.
“நான் வெகு கவனமாகவே அந்தப் பையை எடுத்துப் பார்த்தேன். கையால் தொடாமல், துணியால் பிடித்து எடுத்துப் பார்த்தேன். கதவுகளில் கூடத் தொட்ட இடங்களில் துணியால் நன்றாகத் துடைத்து விட்டேன். என்னுடைய கை இரேகைகளை எங்கேயும் விடவில்லை!” என்றான் சவரிமுத்து பிறகு –
“வீட்டில் எவரும் இல்லாத போது புலிக்குட்டி எப்படி உள்ளே போனான்?” என்று கேட்டான்,
“நான் இல்லாவிட்டால், வீட்டிற்குள் போய் உட்கார்ந்திருக்கும்படி சொல்லி, வீட்டின் சாவிகளில் ஒன்றை அவனிடம் கொடுத்திருந்தேன். புலிக்குட்டி வந்தபோது நாம் இல்லை. வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே போய் உட்கார்ந்திருக்கிறான். அவனைக் கொலை செய்தவன், சன்னல் வழியாக உள்ளே போயிருக்க வேண்டும்” என்று சொன்னார் சின்னத்துரை.
“இப்போது நாம் சாப்பிட்டுவிட்டுப் புறப்படலாம். எனக்குப் பசி. இந்தப் பெரிய ஓட்டலில் பெரும்பாலும் வருகிறவர்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசவே வருகிறார்கள். ஆகையால் தான் பரிமாறுபவன் என்ன வேண்டும் என்று வந்து கேட்சு அரை மணி நேரம் ஆகிறது! இன்னும் பரிமாறுபவனைக் காணோமே!” என்றான் சவரிமுத்து.
“இதோ வருகிறான். உனக்கு வேண்டியதைச் சொல்லி விடு” என்றார் சின்னத்துரை.
22
அடையாறுக்குப் பக்கத்தில் இருந்த ஓர் அடர்த்தியான காட்டுப் பாதையில் வேகமாகச் சென்றது சின்னத்துரையின் கார். சின்னத்துரை காரை ஓட்டிச் சென்றார். அவருக்குப் பக்கத்தில் சவரிமுத்து உட்கார்ந்திருந்தான்.
பேரழகியைக் கண்டு பிடிக்கும் வரையில் போலீசாரிடம் அகப்பட்டுக் கொள்ள விரும்பவில்லை.
இப்போது சின்னத்துரையைத் தவிர வேறு எவராலும் அவனைக் காப்பாற்ற முடியாது என்பது அவனுக்குத் தெரியும். புலிக்குட்டி கொலையுண்டபின் நகரிலேயே சுற்றிக் கொண்டிருப்பது தவறு என்று உணர்ந்தான். ஆகையால், சின்னத்துரையுடன் புறப்பட்டான்.
விரைந்து சென்ற கார் வர வர வேகம் குறைந்து மெல்லச் சென்றது. பாதையும் சரியாக இல்லை. மேடும் பள்ளமுமாக இருந்தது. சில இடங்களில் கார் இப்படியும் அப்படியும் சாய்ந்தது. அவர்கள் காட்டை அடைந்த போது இரவு மணி –
பதினொன்று!
நிலவைக் கூட காணோம்! அந்தக் காட்டில் நிலவு பொழிந்தாலும் கூடக் கொஞ்சமும் வெளிச்சம் விழாது போல் இருந்தது. அது –
அடர்த்தியான காடு!
ஓர் இடத்தில் –
கார் நின்றது.
“என்ன இது, கார் நின்று விட்டதா, நிறுத்திவிட்டாயா?” என்று கேட்டான் சவரிமுத்து.
“என்னுடைய கார் எந்த இடத்திலேயும் நிற்காது. நிறுத்தினால் தான் உண்டு. நின்றுவிடும் காரை வைத்துக் கொண்டு இந்த மாதிரிக் காடுகளில் அடிக்கடி வந்து போக முடியுமா?” என்றார் சின்னத்துரை.
“அப்படியானால் எதற்காக நிறுத்தினாய்!” என்று கேட்டான் சவரிமுத்து.
“இதற்கு மேல் கார் போவதற்கு வழி சரியாக இல்லை. ஒரு கல் தொலைவு நடந்துதான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை. இறங்கு” என்று சொல்லிக் கொண்டே மின்பொறி விளக்குடன் இறங்கினார் சின்னத்துரை.
சவரிமுத்தும் கீழே இறங்கிச் சின்னத்துரையுடன் நடந்தான், வழியில் –
மலைகளும் பாறைகளும் மிகுந்திருந்தன. சின்னத்துரை அந்த வழியில் அடிக்கடி வந்து பழக்கப்பட்டவரைப் போல் விரைந்து நடந்தார். சவரிமுத்தும் சலிக்காமல் நடந்தான்,
சிறிது தொலைவு சென்றதும் –
ஏதோ ஓசை கேட்டது!
“என்ன அது? ஏதோ ஓசை கேட்கிறது!” என்றான் சவரிமுத்து,
சின்னத்துரை அவனை ஒரு மரத்தின் பக்கத்தில் இழுத்து நிறுத்தினார். “இப்படியே மறைந்து நில். எவரோ ஓடிவரும் ஓசை கேட்கிறது!” என்றார்.
இருவரும் ஒளிந்து நின்று கவனித்தார்கள். சிறிது நேரத்தில்- எவரோ ஒரு மனிதர் ஓடி வருவது தெரிந்தது. அந்த மனிதர்- தலைதெறிக்க மலைச் சரிவில் இறங்கிச் சின்னத்துரையும் சவரிமுத்தும் இருந்த இடத்தை நோக்கி ஓடி வந்தார்!
“யாரது, எதற்கு அவன் அப்படி விரைந்து ஓடிவருகிறான்?” என்றான் சவரிமுத்து.
“தெரியவில்லையே! எவராவது துரத்தி வருகிறார்களா? ஆமாம். அதோ நாய்கள் குரைக்கும் ஓசை கேட்கிறது! இரண்டு நாய்கள் ஓடி வருகின்றன! அதோ பார், மூன்று மனிதர்கள் கையில் துப்பாக்கியுடன் வருகிறார்கள்!” என்றார் சின்னத்துரை. தொலைவில் –
நாய்களைத் தொடர்ந்து மூன்று மனிதர்கள் ஓடி வருவது நன்றாகத் தெரிந்தது.
முதலில் ஓடிவந்த மனிதர் –
தங்கத்துரை! அவருடைய கையில் தோல் பை ஒன்று இருந்தது!
தங்கத்துரை, சின்னத்துரையும் சவரிமுத்தும் இருந்த இடத்திற்கு வந்ததும் நின்றார்.
சவரிமுத்து ஓடிவந்து நின்ற தங்கத்துரையைப் பார்த்து, “மரத்தின் மீது விரைந்து ஏறிக் கொள்ளுங்கள்! உம் விரைந்து” என்றான்.
“ஆமாம்! தயங்காதீர்கள்! நாங்களும் உங்கள் பின்னாலேயே ஏறி வருகிறோம்!” என்றார் சின்னத்துரை. தங்கத்துரை ஒரு கணம் கையிலிருந்த தோல் பையை இடுக்கிக் கொண்டு மரத்தில் ஏறினார். அவர் பின்னால் சவரிமுத்தும் சின்னத்துரையும் அந்த மரத்தின் மீது ஏறினார்கள்.
அடர்த்தியான அந்தப் பெரிய மரத்தில், உயரத்தில் ஏறி மறைந்து கொண்டார்கள் மூவரும்.
நாய்கள் ஓடிவந்து மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. நாயுடன் வந்த மூன்று மனிதர்களும் மரத்தின் மீது பார்த்தார்கள். அவர்களுக்கு –
ஒன்றும் தெரியவில்லை!
மூவரில் ஒருவன் சொன்னான்: “இந்த மரத்தின் மீது அவன் ஏறியிருக்க மாட்டான். எந்தப் பக்கம் ஓடினான் என்று நாய்களுக்கு இப்போது தெரியவில்லையே?”
மற்ற இருவரும் ஒன்றும் சொல்லாமல் மரத்தின் மீது மின் பொறி விளக்கை அடித்துப் பார்த்தார்கள்.
தங்கத்துரையும் சவரிமுத்தும் சின்னத்துரையும் பதுங்கியிருந்த இடங்களை இலைகள் நன்றாக அடர்ந்து மிக மறைத்துக் கொண்டிருந்தன.
துரத்தி வந்த மூவரும் சலிப்புடன் நாய்களை இழுத்துக் கொண்டு வேறு வழியே சென்றார்கள்.
தொலைவில் நாய்கள் குரைக்கும் ஓசை கேட்டது. பின்னர் அந்த ஓசையும் மங்கிவிட்டது. அவர்கள் சென்று மறைந்து போனார்கள். அவர்கள் பின்னாலேயே நாய்களும் சென்று மறைந்தன.
பிழைத்தார்கள்!
23
அரைமணி நேரத்திற்குப் பின் முதலில் சின்னத்துரை இறங்கினார்.
இரண்டாவதாகச் சவரிமுத்து இறங்கினான்.
கடைசியில் –
தங்கத்துரை இப்படியும் அப்படியும் கவனமுடன் பார்த்து விட்டுக் கீழே இறங்கினான்.
“யார் அந்த மூவரும்? எதற்காக உங்களைத் துரத்தி வந்தார்கள்?” என்று கேட்டார் சின்னத்துரை.
“அவர்கள் யாரென்பது தெரியவில்லை! அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது எனக்குத் தெரியும்!” என்றார் தங்கத்துரை.
“என்ன வேண்டுமாம்?” என்று மிகவும் ஆவலுடன் கேட்டான் சவரிமுத்து.
“இத் தோல் பை வேண்டும்!” என்றார் தங்கத்துரை. “தோல் பையில் என்ன இருக்கிறது?” என்று மெல்லக் கேட்டார் சின்னத்துரை.
‘விளக்கை அடித்துப் பாருங்கள்” என்று சொல்லித் தங்கத்துரை தோல் பையைத் திறந்தார். சின்னத்துரை மின் பொறி விளக்கை அடித்தார். விளக்கின் ஒளியில் –
வைரங்கள் கண்களைப் பறித்தன!
சின்னத்துரை வியப்படைந்த போதிலும், மிகுதியாகத் தன் வியப்பை வெளிக்காட்டவில்லை!
சவரிமுத்து அப்படியே வாயைத் திறந்தபடி சிலையாய் நின்றான். சிறிது நேரம் கழித்து அவன், “என்ன வைர நகைகளா? இவ்வளவு நகைகளை நான் என் வாழ்க்கையில் கண்ணால் கூடக் கண்டதில்லை! ஏது?” என்றான்,
தங்கத்துரை இலேசாகச் சிரித்தார். “உன்னுடைய கேள்விக்கு இரண்டே வரிகளில் பதில் சொல்லிவிட முடியாது! இப்போது இந்த நகைளை மிகவும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இப்போது நான் சில நாட்களுக்கு எவர் கண்ணிலும் படாமல் இதே காட்டில் ஒளிந்திருக்க வேண்டும். இரண்டிற்கும் உங்கள் உதவி தேவை. நீங்கள் உதவி செய்தால், உங்களுக்கும் இதில் பங்கு உண்டு!” என்றார்.
சவரிமுத்து வியப்புடன் சின்னத்துரையைப் பார்த்தான். சின்னத்துரை சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, “எவ்வளவு பங்கு கிடைக்கும்!” என்றார்.
“நாம் மூவரும் சமமாகப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றார் தங்கத்துரை.
“சரி” என்றார் சின்னத்துரை. உடனே –
தங்கத்துரை அந்தத் தோல் பையைச் சின்னத்துரையிடம் கொடுத்துவிட்டார்!
“வாருங்கள் போசுலாம்” என்று சொல்லிச் சின்னத்துரை முதலில் நடந்தார். அவருக்குப் பின்னால் சவரிமுத்து போகட்டும் என்று நின்றார் தங்கத்துரை. ஆனால் –
தங்கத்துரை போகட்டும் என்று நின்றான் சவரிமுத்து!
தங்கத்துரை விரைந்து நடந்தார். சின்னத்துரையைத் தொடர்ந்து, சவரிமுத்து பின்னால் நின்று, எவராவது தொடர்ந்து வருகிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தான். அவனுக்குக் கொஞ்சம் ஐயமாகத்தான் இருந்தது. தங்கத்துரை எப்படியோ விலையுயர்ந்த வைர நகைகளைத் தட்டிக் கொண்டு வந்துவிட்டார். திருடத் தெரிந்தவருக்கு அதைக் காப்பாற்றவும் தெரிய வேண்டுமல்லவா? அப்படியானால் அந்தத் தோல் பையை ஏன் சின்னத்துரையிடம் கொடுக்க வேண்டும்?
சவரிமுத்தின் ஐயம் மிகுந்தது. சிந்தனையுடன் தங்கத்துரையின் பின்னால் நடந்தான். முதலில் அவன் ஆழ்ந்த தங்கத்துரை காட்டிய நகைகளைக் கண்டதும் வியப்பும் ஆவலும் கொண்டவன் இப்போது திகில் கொண்டான்! தங்கத்துரை தனக்கு, முன்பின் தெரியாத மனிதர். அவரால் தனக்கு ஏதாவது ‘விபத்து வருமோ என்று அவன் எண்ணினான். இருட்டில் –
மூன்று பேர்களும் நடந்தார்கள்.
‘சுமார் அரை மணி நேரம் நடந்தபின், சிறிய வீடு ஒன்று எதிர்ப்பட்டது.
அந்த வீடு –
இருளில் மூழ்கிக் கிடந்தது.
மூவரும் வீட்டை மிக நெருங்கி விட்டார்கள்.
அந்த வீடு முழுக்க முழுக்க மரப்பலகைகளால் சுட்டப்பட்டிருந்தது. சின்னத்துரை கதவருகில் சென்று சுதவை மெல்லத் தட்டினார். சிறிது நேரம் கழிந்து “யாரது?” என்று தூக்கக் கலக்கத்துடன் கலந்த ஒரு குரல் வந்தது.
“சுதவைத் திற” என்றார் சின்னத்துரை கொஞ்சம் உரத்த குரலில்,
சில வினாடிகளில், தீக்குச்சி கிழிக்கப்படும் ஓசை கேட்டது. கதவுக் கீற்றுக்களின் வழியாகக் கம்பிகளைப் போன்ற வெளிச்சம் தெரிந்தது. எவரோ நடந்து வரும் ஓசை. அதைத் தொடர்ந்து கதவின் தாழ்ப்பாளைத் திறக்கும் ஓசை, கதவு திறந்தது.
வாயிற்படியில் –
கையில் ஏந்திய கை விளக்குடன் முனியப்பன் நின்றிருந்தான்!
சின்னத்துரையைப் பார்த்ததும் இலேசாகச் சிரித்து விட்டு விலகி நின்றான். சின்னத்துரை உள்ளே சென்றார். அவருடன் தங்கத்துரையும் சவரிமுத்தும் சென்றார்கள்.
“ஏதாவது சாப்பிட வேண்டுமா?” என்று கேட்டார். சின்னத்துரை.
“நாம் தாம் ஓட்டலில் சாப்பிட்டோமே! பசியே இல்லை” என்றார் சவரிமுத்து.
“உன்னைக் கேட்கவில்லை சவரிமுத்து! நான் தங்கத்துரையைக் கேட்டேன்!” என்றார் சின்னத்துரை,
தங்கத்துரை மெல்லச் சிரித்தார். “என்னுடைய முகத்தைப் பார்த்தாலே தெரியவில்லையா? முதலில் காபி போடட்டும். மூவரும் காபி சாப்பிடலாம். பிறகு ஏதாவது சமைக்கச் சொல்லுங்கள். சாப்பிடாமல் தான் இப்போது படுத்தாலும் எனக்குத் தூக்கம் வராது!” என்றார்.
சின்னத்துரை முனியப்பனைப் பார்த்தார். முனியப்பன் அவருடைய பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டு அடுப்பைப் பற்ற வைக்கப் போனான். வீட்டிற்குள்ளே காற்றே இல்லை. வேர்த்துக் கொட்டியது. ஆகையால், அவன் அடுப்பை எடுத்துக் கொண்டு போய் வெளியே ஒரு மரத்தடியில் வைத்தான். சின்னத்துரை அவனை அழைத்தார். “வெளியே அடுப்பைப் பற்ற வைக்காதே! விட்டிற்குள்ளேயே உன் சமையல் வேலையை வைத்துக் கொள். தொலைவில் மலைமீதிருந்து எவராவது பார்த்தால், இந்த இடத்தில் நெருப்பு இருப்பது தெரியும்!” என்றார்.
“சரி ஐயா” என்றான் முனியப்பன்.
“வெளியே, மரத்தடியில் மேசையையும் நாற்காலிகளையும் போடு” என்றார் சின்னத்துரை.
முனியப்பன் மடிப்பு நாற்காலிகளையும் மேசையையும் தூக்கிச் சென்று மரத்தடியில் போட்டான். மூவரும் வெளியே போய் உட்கார்ந்தார்கள்.
பத்தே நிமிடங்களில் ஆவி பறக்கும் காபிக்கோப்பைகளுடன் தோன்றினான் முனியப்பன். மேசையின் மீது கோப்பைகளை வைத்துவிட்டு, சமையல் வேலையைக் சுவனிக்கப் போய்விட்டான்.
தங்கத்துரை காபியை உறிஞ்சிக் குடித்தபடியே எதிரேயிருந்த சின்னத்துரையையும் பக்கத்திலிருந்த சவரிமுத்துவையும் பார்த்தார். அவர்கள் இருவரும் காபியைக் குடித்தபடியே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
தங்கத்துரை காபியைக் குடித்துவிட்டுச் சொன்னார்: “இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!”
சின்னத்துரை மெல்லச் சிரித்தார், “எனக்கும் தான் இந்த இடம் பிடித்திருக்கிறது. ஆனால், இந்த இடத்தில் அதிசு நாட்கள் நாம் இருக்க முடியாது. அடிக்கடி இடம் மாறிக் கொண்டேயிருக் வேண்டும். இந்தக் காட்டில் உங்களைத் தேடிச் சில ஆட்கள் திரிகிறர்கள். சவரிமுத்தைத் தேடி விரைவில் போலீஸ் படை வரக் காரணங்கள் இருக்கின்றன. என்னை எப்போதும் இரகசியப் போலீஸ் படை கவனித்துக் கொண்டே இருக்கிறது. உங்கள் நடுவில் நான் அகப்பட்டுக் கொண்டு விழிக்க எனக்கு விருப்பமில்லை. நாம் இங்கே மிகவும் குறுகிய காலம்தான் இருக்க முடியும். இந்தக் குறுகிய காலத்தில், நாம் திட்டம் போட்டு வேலை செய்ய வேண்டும். ஒத்துழைப்பு இல்லாவிட்டால் நம் திட்டம் நிறைவேறாது” என்றார்.
அவர் சொன்னதை அமைதியுடன் கேட்டார் தங்கத்துரை.
“இந்த இடத்தில் எப்படி இந்த வீட்டைக் கட்டினாய்! இந்த மரப்பலகைகளையும், மேசை நாற்காலிகளையும் எப்படிக் கொண்டு வந்தாய்?” என்று கேட்டான் சவரிமுத்து. அவனுக்கு வியப்பாகத்தான் இருந்தது. தன்னைக் காப்பாற்றவே சின்னத்துரை இந்த இடத்தில் இப்படி ஒரு வீட்டைக் கட்டியிருக்க வேண்டும் என்று எண்ணினான்.
“இவை எப்போதுமே என்னிடம் இருக்கும். வேறு ஓர் இடத்தில் தங்க வேண்டுமென்றால் இவற்றை அப்படியே பிரித்து எடுத்து ஒரு இலாரியில் போட்டுக் கொண்டு போக வேண்டியது தான். தேவையான இலாரியும், குறிப்பிட்ட நேரத்தில் வந்து உதவி செய்ய ஆட்களும் இருக்கிறார்கள். சில வேளைகளில் நானும் முனியப்பனுமே இந்த வீட்டைப் பெயர்த்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு போய்விடுவோம். எவராவது எங்களைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணி வந்தால், வீட்டைச் சும்மா விட்டுப் போக மாட்டோம்!” என்றார் சின்னத்துரை.
“என்ன செய்வீர்கள்? கொளுத்தி விட்டுப் போய்விடுவீர்களா?” என்றார் தங்கத்துரை.
“ஆமாம்! ஆனால், இதுவரையில் அந்த மாதிரியான வாய்ப்பு வரவில்லை!” என்றார் சின்னத்துரை.
சங்காலால் துப்பறியும் மர்ம நாவல்கள்
“எதையும் நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருக்கிறீர்கள்! இல்லையா?” என்று கேட்டர் தங்கத்துரை.
“ஆமாம், ஆனால் சில வேலைகளின் நமது திட்டங்கள் கவிழ்ந்துவிடும். அப்போது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். உங்கள் இருவருக்காக இந்த வீட்டை நான் கட்டவில்லை. இரண்டு பையன்களை இந்த இடத்திற்கு மாற்றுவதற்காக இதைக் கட்டினேன். ஆனால், அந்தப் பையன்கள் தப்பிவிட்டார்கள். இனிமேல் அவர்களைப் பிடிப்பதிலும் பயனில்லை. அவர்களை மறைத்து வைப்பதற்காகக் கட்டிய வீடு, இப்போது உங்களுக்காக உதவுகிறது!” என்றாார் சின்னத்துரை,
தங்கத்துரை எதுவும் புரியாமல் ஏதோ கேட்க வாயைத் திறந்தார். அதற்குள் சவரிமுத்து சொன்னான் : “அதைப் பற்றி இப்போது பேசிப் பொழுதைப் போக்க வேண்டாம். இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். சங்கர்லால் என்னை நீண்ட நாட்கள் விட்டு வைக்கமாட்டார் என்று தோன்றுகிறது. எப்படியும் முதலில் பேரழகியைக் கண்டு பிடிக்கும் வேலையில் நாம் இறங்க வேண்டும்” என்றான்.
“பேரழகி யார்?” என்று கேட்டார் தங்கத்துரை.
“சவரிமுத்தின் மகள். அவள் காணவில்லை என்றதும், சவரிமுத்து சிறையிலிருந்து தப்பிலிட்டான். பேரழகியைக் கடத்திச் சென்றவன் கொலை செய்யப்பட்டான். அவன் பெயர் புலிக்குட்டி. புலிக்குட்டியை எவர் கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை. புலிக்குட்டி கொலையுண்டு கிடந்தது என் வீட்டில்! அந்த வீட்டிலிருந்து சவரிமுத்து வெளியேறுவதைச் சங்கர்லால் பார்த்திருக்கிறார். இந்த நிலையில், சங்கர்லால் சவரிமுத்தைப் பிடிக்காமல் விட்டு வைக்க மாட்டார் அல்லவா! ஆகையால், பேரழகியை உடனே கண்டு பிடித்தாக வேண்டும்” என்று சொன்னார் சின்னத்துரை.
தங்கத்துரை சிறிது நேரம் சிந்தனை செய்தார். “பேரழகியைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். எப்படியும் இரண்டு நாட்களில் பேரழகியை நான் கொண்டு வருகிறேன்” என்றார்.
சின்னத்துரையின் முகம் மலர்ந்தது. “பேரழகியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை உங்களிடம் அளிக்க வேண்டும் என்று தான் நானும் எண்ணினேன்” என்று சொல்லி விட்டுச் சவரிமுத்தைப் பார்த்தார். “சவரிமுத்து, உன்னுடைய நகைகளை உடனே நீ கண்டுபிடித்துக் கொண்டு வந்து விட வேண்டும். இப்போது அது இருக்குமிடம் உன்னைத் தவிர வேறு எவருக்கும் தெரிய நியாயமில்லை!” என்றார்.
“என்ன நகைகள்!” என்று கேட்டார் தங்கத்துரை.
“தங்க நகைகள்! வைர நகைகள்! பல இலட்ச ரூபாய் பெறும்! அவற்றை நான் ஒரு கோயிலிலிருந்து கொள்ளை அடித்தேன். எப்போது தெரியுமா? பட்டப் பசுலில்! கொள்ளையடித்துக் கொண்டு ஓடும்போது இரண்டு போலீஸ்காரர்கள் எப்படியோ எங்கிருந்தோ பார்த்துவிட்டு என்னைத் துரத்தின் வந்தார்கள்: அவர்களிடமிருந்து தப்ப வேண்டும் என்று எண்ணி ஓடினேன். இரவு நேரமாக இருந்திருந்தால், எத்தனை போலீஸ்காரர்கள் வந்திருந்தாலும் என்னைப் பிடித்திருக்க முடியாது! எப்படியெல்லாமோ ஓடினேன். அப்போது அரைகுறையாகக் கட்டிவிடப்பட்ட வீடுகள் பல தெரிந்தன. அங்கே வேலை நடந்து கொண்டிருந்தது. அந்த வீடுகளின் மறைவில் ஒளிந்து ஒளிந்து ஓடினேன். போலீஸ்காரர்கள் விடவில்லை. இனி மேலும் போலீஸ்காரர்களை ஏமாற்ற முடியாது. என்ற நிலைமை வந்ததும், ஒரு வீட்டிற்குள் புகுந்தேன். கொல்லத்துக்காரன் ஒருவன் சுவர் எழுப்பிக் கொண்டிருந்தான். அவனைப் பல தடவைகள் நான் பார்த்திருக்கிறேன். அவன் வீடு எனக்குத் தெரியும், அவனிடம் நகைப் பையைக் கொடுத்து, இதைக் சுவனத்துடன் வைத்துக் கொள். தான் எப்படியும் சிறைக்குப் போய்த் திரும்பி வருவேன். நான் திரும்பி வந்ததும், நாம் இருவரும் இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றேன். அவன் அதை வாங்கி, அவன் கட்டிக் கொண்டிருந்த சுவரில் எங்கேயோ புதைத்து விட்டான்! எந்த இடம் என்று தெரியவில்லை. இப்போது அந்த இடத்தைக் சுண்டுபிடிப்பது மிகவும் துன்பம். முதலில் அந்தக் கொல்லத்துக்காரனை நான் கண்டுபிடித்து நகைகளை நான் கொண்டுவந்து விடுகிறேன். பேரழகியைக் கண்டுபிடித்துவிட்டால், அவளிடம் சில செய்திகளைச் சொல்லிவிட்டு, எனக்கு சேர வேண்டிய பங்கையும் அவளிடம் கொடுத்துவிட்டு மீண்டும் தானே சிறைக்குப் போய் விடலாம் என்று எண்ணுகிறேன்!” என்றான் சவரிமுத்து,
தங்கத்துரை அவன் சொன்னவற்றைக் கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்த இடம் எது?” என்றார்.
“இப்போது அதுதான் ஷெனாய் நகர்!” என்றான் சவரிமுத்து
“கொல்லத்துக்காரனின் பெயர் என்ன தெரியுமா?” என்று தொடர்ந்து கேட்டார் தங்கத்துரை.
“நஞ்சப்பன் அவன் பெயர். சிறைக்குப் போகும் முன்பே அவனை ஒரு தடவை கண்டேன். அவன் புதைத்து வைத்திருந்த இடத்தைப் பற்றிச் சில குறிப்புகள் சொன்னான். அதை அப்படியே ஒரு கடிதமாக எழுதி, இரண்டாகக் கிழித்து, தனித் தனியாக வைத்திருந்தேன். அந்தத் துண்டுகளில் ஒன்றைச் சின்னத்துரை விட்டுவிட்டார். புலிக்குட்டி அதைப் பறித்துக் கொண்டான். மற்றொரு துண்டு இருக்கிறது. பாதிக் கடிதம் இருந்து பயனில்லையே!” என்றான் சவரிமுத்து.
“இப்போது நஞ்சப்பனைக் கண்டு, மீண்டும் அவனிடம் தகைகள் புதைக்கப்பட்ட இடத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லவா?” என்று அமைதியுடன் கேட்டார். தங்கத்துரை.
“ஆமாம்” என்றான் சவரிமுத்து. ‘அதுதானே முடியாது!”
“ஏன்?”
“நஞ்சப்பன் வீடு கட்டிக் கொண்டிருந்த போது, மேல் மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டான்! அவன் கீழே விழுந்து ஒரு மணி நேரத்திற்கெல்லாம் செத்துப் போனான்!” என்றார் தங்கத்துரை.
சவரிமுத்து மருண்டு போனான், அவன் ஒன்றும் சொல்லாமல் தங்கத்துரையைப் பார்த்தான். “இந்தச் செய்தியை எப்போதோ தற்செயலாக நான் பத்திரிகையில் படித்தேன்! நஞ்சப்பனுடைய மகன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஏதாவது சொல்லியிருப்பான் சாகும்போது! ஆகையால், நஞ்சப்பனின் மகனைத் தேடிப் போ. அவனைக் குடைந்தால் உண்மை கண்டிப்பாகத் தெரியும்” என்றார் தங்கத்துரை.
“வேடிக்கையாக இருக்கிறது! நகையைக் கொடுத்தவனுக்கு நகைகள் எங்கே புதைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியாது! நகைகளைப் புதைத்தவன் இந்த உலகத்திலேயே இல்லை! கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை என்ற கதைதான்!” என்றார் சின்னத்துரை.
வெகு நேரம் மூவரும் சிந்தனை செய்தார்கள். முனியப்பன், “சாப்பிடலாம்” என்றான்,
சாப்பிட உட்கார்ந்தார்கள்.
24
காலை, நேரம் ஓடிக்கொண்டிருந்தது. எட்டுமணியாகி விட்டது.
சங்கர்லால் தேநீர் அருந்தியபடி பங்களா கூடத்திலேயே உட்கார்ந்திருந்தார். இந்திரா அவருக்கு எதிரில் உட்கார்ந்து, ”வழக்கறிஞர் நேற்றிரவு தொலைபேசியில் அழைக்கவில்லையே என்று சிந்திக்கிறீர்களா?” என்று கேலியாகக் கேட்டாள்.
“வழக்கறிஞரிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார் சங்கர்லால்,
“எப்படி?” என்றால் இந்திரா வியப்புடன்.
“வழக்கறிஞரின் வீட்டில் நடக்கும் குழப்பத்திற்குக் காரணம் பேய்தான் என்றால், அந்தப் பேய், சங்கர்லால், வழக்கறிஞர் வீட்டுக்கு வந்து போனது தெரிந்ததும் கொஞ்சம் விழிப்புடன் நடந்து கொள்ளும்! நாம் எதிர்பார்க்கும் வேளைகளில் அது வராது!”
“அப்படியா? எப்போது மீண்டும் வரும்?”
“இனிமேல் பேய் வராது என்று முடிவு செய்யும் தறுவாயில் தலையைக் காட்டும்! அப்போது மீண்டும் வழக்கறிஞர் தொலைபேசியில் என்னை அழைப்பார்!” என்றார் சங்கர்லால், அப்போது –
தலையை அழகாக வாரி விட்டுக் கொண்டு அங்குவந்தான் மாணிக்கம்.
“மாணிக்கம், பேரழகியைக் கண்டு பிடிக்க ஒரு வழி சொல்லுகிறேன். முயன்று பார். சவரிமுத்து அவளைக் கண்டு பிடிப்பதற்கு முன் நீ அவளைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார் சங்கர்லால்,
“சொல்லுங்கள் அண்ணா. இப்போதே புறப்படுகிறேன்!” என்றான் மாணிக்கம்.
“எந்த இடத்தில் பேரழகி இருக்கிறாள் என்று சொல்லுங்கள். மாணிக்கம் உடனே அவளைக் கண்டுபிடித்து விடுவான்!” என்றாள் கேலியாக இந்திரா! அப்போது தான் கயல்விழி அங்கே வந்து கொண்டிருந்தாள்.
“கயல்விழியின் எதிரில், தன்னைப் பற்றி இவ்வளவு கேலியாக இந்திரா பேசிவிட்டது மாணிக்கத்துக்குக் கொஞ்சம் வேதனையாக இருந்தது! அவன், “அண்ணா, பேரழகியைக் கண்டு பிடித்து உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன். எந்த வழியையும் நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டாம்” என்றான்.
அவன் முகத்தில் கொதிப்பு!
சங்கர்லாலுக்கு இது வேடிக்கையாக இருந்தது. அவர் சிரித்தார்.
கயல்விழி மென்சிரிப்புடன் இந்திராவின் பக்சுத்தில் உட்கார்ந்தாள்,
இந்திரா சொன்னாள்: “உன் அண்ணாவிடம் கேட்காமல் பேரழகியைக் கண்டுபிடித்து விட்டால், இனி மேல் வரும் எல்லா வழக்குகளையும் உன்னிடமே ஒப்படைக்கும்படி வகாபிடம் சொல்லுகிறேன்!”
மாணிக்கம் விரைந்து வெளியேறினான். அடுத்த இரண்டு நிமிடங்களில் அவனுடைய கார் புறப்படும் ஓசை கேட்டது.
மாணிக்கம் மறைந்ததும், சங்கர்லாலும் இந்திராவும் கயல்விழியைப் பார்த்தார்கள். கயல்விழி “பேரழகியைக் கண்டுபிடிக்காமல் அவர் பங்களாவுக்கு வரமாட்டார்!” என்றாள்.
சங்கர்லால் சிரித்தார். “கயல்விழி, மணமாகி இத்தனை நாட்கள் ஆகியும் மாணிக்கத்தை நீ புரிந்து கொள்ளவில்லையே? அவனைப் போன்ற நுட்ப மதியாளனைக் கணவனாக அடைந்ததற்கு நீ எவ்வளவு பெருமைப்பட வேண்டும் தெரியுமா? வீணாக அவன் நேரத்தைப் போக்க மாட்டான். பேரழகியைக் கண்டுபிடிக்க என்ன வழி என்று இந்திராவின் எதிரில் கேட்காமல் போய்விட்டான். இன்னும் சிறிது நேரத்தில், தொலைபேசியில் என்னை அழைத்து ‘பேரழகி எங்கே இருப்பான் அண்ணா?” என்று இரகசியமாகக் கேட்பான். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்!” என்றார்.
அரைமணி நேரம் கழித்து, தொலைபேசி அலறியது. சங்கர்லால் தொலைபேசியை எடுத்தார் “ஹலோ, மாணிக்கம்!” என்றார் பிறகு –
உடனே தொலைபேசியை இந்திராவிடம் கொடுத்தார். இந்திரா உற்றுக் கேட்டாள்.
மாணிக்கம் கேட்டான் : “அண்ணா, பக்கத்தில் அண்ணி இந்திரா தேவி இருக்கிறார்களா?”
“இல்லையடா தம்பி! பேரழகியை எங்கே தேடுவதென்று தெரிய வேண்டுமா?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் இந்திரா! மாணிக்கம் தொலைபேசியைச் சட்டென்று வைத்து விட்டான்!
“இந்திரா, சங்கர்லாலைத் திரும்பிப் பார்த்தாள்.
“என்ன?” என்றார் சங்கர்வால்.
“தொலைபேசியை வைத்துவிட்டான் மாணிக்கம்! அவனுக்குச் சினம் வந்துவிட்டது!” என்றாள் இந்திரா.
“குற்றமில்லை. சினத்தில் அவன் மூளை தன்னால் இயங்கத் தொடங்கிவிடும். நேரம் வீணானாலும் கூட இனிப் பேரழகியைக் கண்டுபிடிக்காமல் தொலைபேசியில் அழைக்க மாட்டான்!” என்றார் சங்கர்லால்,
அன்று மாலை ஏழு மணிக்குத் தொலைபேசி அலறியது. சங்கர்லால் தொலைபேசியை எடுத்து, “ஹலோ” என்றார்.
மாணிக்கம் பேசுகிறேன் அண்ணா, பேரழகி இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துவிட்டேன்!” என்றான் மாணிக்கம்.
“அவளுடன் வேறு எவராவது இருக்கிறார்களா?” என்று கேட்டார் சங்கர்லால்.
“இல்லை, அவள் தனியாகத்தான் இருக்கிறாள். ஆனால், அவளை ஒரு தனி அறையில், மறைவான இடத்தில் பூட்டி வைத்திருக்கிறார்கள். பூட்டி வைத்திருக்கும் மனிதரைப் பார்த்துப் பேசினேன். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் பேரழகியை விடுவானாம்! புலிக்குட்டி அந்த மனிதருக்கு ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தானாம்!” என்றான் மாணிக்கம்.
சங்கர்லால் உடனே சொன்னார் : “மாணிக்கம்! புலிக்குட்டி செத்துப் போனான் என்ற தகவல் பேரழகியைப் பாதுகாக்கும் மனிதருக்குத் தெரியுமா? புலிக்குட்டி செத்துப் போனதை அந்த மனிதர் அறிந்தால், ஆயிரம் ரூபாய் கேட்கமாட்டார் என்று எண்ணுகிறேன்!”
“சரியான யோசனை அண்ணா! புலிக்குட்டி இறந்து போனதை வைத்து, அந்த மனிதரைப் பயமுறுத்தி விடுகிறேன்! அவர் எளிதில் எதற்கும் அஞ்சமாட்டார் என்றே தோன்றுகிறது. ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கிறேன், அவர் அசைந்து கொடுக்காவிட்டால் என்ன செய்வது?” என்று கேட்டான் மாணிக்கம்.
“ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக் கொள். இன்னும் இரண்டு நாட்களுக்குள் எப்படியும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டுப் பேரழகியை அழைத்துப் போக ஏற்பாடு செய்வதாகச் சொல்லிவிடு. பேரழகியை நீ பார்க்காமல் இருப்பது மிகவும் நல்லது. பேரழகியை அடைத்து வைத்திருக்கும் மனிதர் யார்?” என்று கேட்டார் சங்கர்லால்.
மாணிக்கம் சொன்னான், “அந்த மனிதர் ஒரு சிறிய ஓட்டல் நடத்தி வருகிறார். சிறிய ஓட்டல் என்றால், வெறும் காப்பி ஓட்டல் மட்டுமல்ல. தங்குவதற்கும் வசதியாக இடமிருக்கிறது. அவர் ஓட்டலுக்குச் சொந்தமான தனி வீடு ஒன்றில் பேரழகியை அடைத்து வைத்திருக்கிறார். ஓட்டலுக்கும் அந்த வீட்டுக்கும் ஒரு பர்லாங்கு தூரம் இருக்கிறது!”
“அந்த ஓட்டலின் பெயர் என்ன?” என்று கேட்டார் சங்கர்லால்.
“அம்பிகா லாட்ஜ். எளிய ஓட்டல் தான், ஓட்டலில் வருமானம் அவ்வளவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. எங்கேயோ ஒரு மூலையில் இருக்கிறது இந்த ஓட்டல். போலீசாரின் கண்களில் படாமல் இருக்க விரும்பும் பலர் இப்படிப்பட்ட ஓட்டல்களில் தாம் வந்து தங்குவார்கள். பேரழகியைத் தூக்கிச் சென்றவன், சென்னையில் தான் எங்கேயாவது அவளை ஒளித்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் தெரிந்த செய்தியாயிற்றே! முதலில் சிறிய ஓட்டல்களில் போய் மெல்லச் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணி அம்பிகா லாட்ஜுக்குள் நுழைந்தேன். ஓட்டல்காரர் அப்போது பரிமாறுபவன், ஒருவனை அழைத்து, ‘பேரழகியின் அறைக்கு உணவு அனுப்பினாயா?’ என்று கேட்டார். பரிமாறுபவன் தலையைச் சாய்த்து, அப்போதே அனுப்பி விட்டேன். அவள் கொஞ்சம் முரட்டுப் பெண்ணாக இருப்பாள் போலிருக்கிறது! என்றான். தற்செயலாக நிகழ்ந்த இந்தப் பேச்சைக் கேட்டதும் என்னால் எதையும் நம்ப முடியவே இல்லை! மெல்ல அந்தப் பரிமாறுபவனை அழைத்துப் பத்து ரூபாய் நோட்டுக்களாக இரண்டை நீட்டினேன். மேசை விளிம்பின் மறைவில் அந்த நோட்டுக்களை வாங்கி மடித்துச் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு அவன், “என்ன வேண்டும்?” என்றான். பேரழகி எங்கேயிருக்கிறாள் என்று கேட்டேன். அந்த ஓட்டலுக்குள் எங்கேயும் அவள் இருக்க மாட்டாள் என்று என் உள்ளுணர்வு சொல்லிற்று. பரிமாறுபவன் சில வினாடிகள் விழித்தான். பேரழகியைப் பற்றிச் சொல்ல இருபது ரூபாய் போதாது!”
சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் என்றான். அவனுக்கு இருபது ரூபாய் கொடுத்தது தவறு என்பதை அப்போது தான் உணர்ந்தேன். எனக்குச் சினம் வந்து விட்டது. இதோ பார், பிழைத்துப் போ என்று நான் இருபது ரூபாய் கொடுத்தேன். பேரழகியைக் கண்டு பிடிக்க வெகு நேரம் ஆகாது. உட்கார்ந்த இடத்திலிருந்தே ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளலாமே என்று எண்ணினேன். அவ்வளவுதான்! என்றேன். பரிமாறுபவன் அயர்ந்து நின்றான்.
பிறகு உண்மையைச் சொல்லிவிட்டான். ஓட்டலுக்கு ஒரு பர்லாங்குத் தொலைவில் பேரழகியைத் தனி வீடு ஒன்றில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஓட்டலில் அறைகள் எதுவும் காலியில்லாத நேரங்களில், ஓட்டல்காரருக்குத் தெரிந்த பணக்காரர்கள் எவராவது வந்து விட்டால் மட்டுமே அந்த வீட்டை விடுவது வழக்கமாம். பேரழகிக்கு வேளை தவறாமல் உணவும் சிற்றுண்டியும் போகிறதாம்!” என்றான் மாணிக்கம்.
“ஓட்டல்காரரிடம் நீ என்ன கேட்டாய்?” என்றார் சங்கர்லால்.
“பேரழகியை அழைத்துப் போக நான் வந்திருப்பதாகச் சொன்னேன், ஓட்டல்காரர் என்னைத் தலை முதல் கால்வரையில் ஒரு தடவை பார்த்தார். நான் யார் என்று கேட்டார். பேரழகியின் அப்பா சவரிமுத்து அனுப்பியதாகவும், அவளை எப்படியும் அழைத்துப் போக வேண்டும் என்றும் சொன்னேன். ஓட்டல்காரர் முகத்தில் ஒருவித அச்சம் தோன்றியது. சவரிமுத்து எங்கேயிருக்கிறான் என்றார். சவரிமுத்து தற்சமயம் சிறைக்கு வெளியே இருப்பதாகவும், எந்த நிமிடமும் அவன் பேரழகியைத் தேடி அங்கே வரக்கூடும் என்றும் சொன்னேன். ஓட்டல்காரர் சிறிது நேரம் சிந்தனை செய்துவிட்டு, பேரழகியைக் கொண்டு வந்த புலிக்குட்டி அவரிடம் ஒப்படைத்துப் பாதுகாக்கும்படி சொன்னதாகவும் பேரழகியை அழைத்துப் போக வரும் போது ஆயிரம் ரூபாய் தருவதாகவும் சொன்னனாம். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் பேரழகியை விட முடியும் என்றார். பேரழகியை அவரிடம் கொண்டு வந்து விட்ட மனிதன் புலிக்குட்டி இறந்து விட்ட சேதியைச் சொல்லியிருந்தால் ஓட்டல்காரர் எப்படி நடந்து கொண்டிருப்பாரோ?”
சங்கர்லால் தொலைபேசியில் சிரித்துக்கொண்டே, “நீ அந்த ஓட்டலை விட்டு நகராதே. அதே ஓட்டலில் முடியுமானால் ஓர் அறை எடுத்துக் கொண்டு, பேரழகி இருக்குமிடத்தைக் கவனித்துக் கொண்டிரு. மூன்று மணி நேரத்திற்கு ஒரு தடவை தொலைபேசியில் என்னுடன் தொடர்புகொள், அடுத்தபடியாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறேன்!” என்றார்.
“ஆகட்டும் அண்ணா” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்தான் மாணிக்கம்.
25
இரவு நேரம் எப்படியோ ஓடிக் கொண்டிருந்தது.
ஓசையற்ற அமைதியான அந்த இரவு நேரத்தில், தங்கத்துரை மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார். அவருடைய முகத்தையும் ஓரளவுக்கு மறைத்தது. அவர் களைப்பு மிகுதியுடன் ஓர் இடத்தில் நின்றார். கைக் கடிகாரத்தைப் பார்த்தார். இருளில்கூட வெளிச்சத்தைக் சுக்கி மணியைக் காட்டும் அந்தக் கடிகாரம் மணி இரண்டு என்பதைக் காட்டியது.
சங்கர்லாலின் முல்லைவனத் தோட்டம் இன்னும் இரண்டு பர்லாங்கு தொலைவுதான் இருந்தது. இரண்டு பர்லாங்கு, தொலைவு நடந்து பிறகு மலைப்பாதையில் ஏறிச் செல்ல வேண்டும். சங்கர்லாலின் பங்களாவுக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தங்கத்துரை நடந்தார்.
முல்லைவனத் தோட்டத்தை அடைய அரை மணி நேரம் ஆகிவிட்டது. பங்களாவின் முன் பொன்னன் துப்பாக்கியைத் தோளில் போட்டபடி காவல் காத்து நின்றான். தங்கத்துரையைப் பார்த்ததும் –
“யாரது? நில்!” என்றான்.
தங்கத்துரை அப்படியே நின்றார்.
பொன்னன் அவர் அருகில் சென்று முகத்தில் மின்பொறி விளக்கை அடித்துப் பார்த்தன்.
பொன்னன் சிறிது நேரம் சிந்தனை செய்தான். தங்கத்துரையை இதற்கு முன் பல தடவைகள் பார்த்திருக்கிறான். தங்கத்துரையை அவன் பல தடவைகள் பார்த்திருக்கிறானே ஒழிய, அவர்தான் தங்கத்துரை என்பது அவனுக்குத் தெரியாது!
பொன்னன் மிக்க மரியாதையுடன், “உங்கள் பெயர் என்ன?” என்றான்.
தங்கத்துரைச் சொன்னார் : “என் பெயரை, சங்கர்லாலைத் தவிர வேறு எவரிடமும் சொல்லுவதற்கில்லை. சங்கர்லாலை நான் உடனே பார்க்க வேண்டும்!”
“சங்கர்லால் தூங்குகிறார்!”
“சங்கர்லாலை எவர் வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பார்க்க அனுமதி உண்டு!”
அந்த மனிதரை எளிதில் ஏமாற்ற முடியாது என்று பொன்னன் எண்ணினான். “கொஞ்சம் இருங்கள். மாதுவை எழுப்பி சங்கர்லாலிடம் சொல்லச் சொல்கிறேன். மிக்க அவசரமா?” என்று கேட்டான்.
“அவசரம் இல்லாவிட்டால் இந்த நேரத்தில் நான் ஏன் வரப் போகிறேன்!” என்றார் தங்கத்துரை.
பொன்னன் பங்களாவின் தாழ்வாரத்திற்குச் சென்று வாயிற்படியில் இருந்த பொத்தானை அமுக்கினான். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. வாயிற்படியில் மாது நின்றான்.
“சங்கர்லாலைப் பார்க்க எவரோ ஒருவர் வந்திருக்கிறார்” என்றான் பொன்னன்.
“உள்ளே வரச்சொல் பொன்னா” என்றான் மாது. தங்கத்துரை கூடத்தில் சென்று சோபாலில் உட்கார்ந்தார். மாது சங்கர்லாலின் அறையை நோக்கிச் சென்றான்.
சில நிமிடங்கள் கழித்துச் சங்கர்லால் வந்தார். சங்கர்லாலைப் பார்த்ததும் எழுத்து நின்று “வணக்கம், சங்கர்லால்!” என்றார்.
“வணக்கம், தங்கத்துரை” என்றார் சங்கர்லால்,
அவர் தங்கத்துரையைப் பார்த்தவுடனே கண்டு கொண்டார். அவர் தங்கத்துரையை இதற்கு முன் எப்போதோ ஒரு தடவை தான் பார்த்திருக்கிறார். தங்கத்துரை வியப்படையவில்லை.
தங்கத்துரை சொன்னார் : “இப்போது நான் பெரும் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறேன். ஒரு பக்கம் போலீசார் என்னைத் தேடி வருகிறார்கள். நான் செய்யாத கொலைக் குற்றத்திற்காக! மற்றொரு பக்கம், என்னுடைய எதிரிகள் என்னை வேட்டையாடுவதைப் போல் இரவும் பகலும் தேடி வருகிறார்கள். இந்நிலையில் கையிலிருந்த நகைகளுடன் சவரிமுத்தையும் சின்னத்துரையையும் ஓர் இடத்தில் கண்டேன். ஒளிந்து வாழ வகை செய்திருக்கிறார் சின்னத்துரை எனக்கு! இப்போது நானும் சின்னத்துரையும் சவரிமுத்துவும் சேர்ந்தே வாழ்ந்து வருகிறோம். என்னிடமிருந்த நகைகளை சின்னத்துரையிடம் கொடுத்திருக்கிறேன். என்மீது அவர்களுக்கு நம்பிக்கை வரும்படி செய்ய வேறுவழி எதுவும் இல்லை. சவரிமுத்துக்கு இன்னும் என் மீது ஐயம் தீரவில்லை. அவனுடைய மகள் பேரழகியை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், அவன் கோயிலில் கொள்ளையடித்த நகைகளைக் கண்டுபிடித்து இடம் மாற்ற வேண்டும் சொல்லுகிறான்!”
தங்கத்துரை சொன்னதை சங்கர்லால் அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தார். தங்கத்துரை தனக்குத் தெரிந்த உண்மைகளையும், சவரிமுத்து சொன்ன கதையையும் அப்படியே சொல்லிவிட்டார். சங்கர்லால் சொன்னார் : “சவரி முத்தும் சின்னத் துரையும் கொடிய நச்சுப் பாம்புகள் என்பதை கவனம் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் நிலையில் அவர்களுடன் சேர்ந்து ஒளிந்து வாழ்வது தான் மிகவும் சிறந்தது. அவர்கள் என்ன செய்கிறார்கள். என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிய வேண்டும். என்னுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். தேவைப்பட்டால் நானே உங்களுடன் தொடர்பு கொள்ளுகிறேன். கோயிலிலிருந்து சவரிமுத்து கிளப்பிய நகைகள் விலை மதிக்க முடியாதவை! அவை விலை மதிக்க முடியாத உயர்ந்த வைரங்கள் என்பது சவரிமுத்துக்குத் தெரியாது! அவன் அவற்றைச் சரியாகக் கூடப் பார்க்கலில்லை. எப்படியிருந்தாலும் அவன் அந்த நகைகள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டான். பேரழகியைக் கொண்டு போய் போய்ச் சவரிமுத்திடம் சேர்த்து விட்டு அவனுடைய முழு நம்பிக்கையையும் நீங்கள் பெற வேண்டும்!”
தங்கத்துரை வியப்புடன் பார்த்தார். “சங்கர்லால்! பேரழகியை எங்கே கண்டுபிடிப்பது என்பது தான் தெரியவில்லை!” என்றார்.
“பேரழகியை நான் உங்களிடம் ஒப்படைக்க வழி செய்கிறேன். பேரழகியை நீங்களே கண்டுபிடித்ததாக சவரி முத்திடம் சொல்ல வேண்டும். என்னுடைய பெயரையோ மாணிக்கத்தின் பெயரையோ தப்பித் தவறிக் கூடச் சொல்ல வேண்டாம். அப்புறம் உங்களுக்குத் தான் ஆபத்து!” என்றார் சங்கர்லால்,
“பேரழகி எங்கேயிருக்கிறாள்? நீங்கள் சுண்டுபிடித்து விட்டீர்களா?” என்று ஆவலுடன் கேட்டார் தங்கத்துரை,
“நான் கண்டுபிடிக்கவில்லை. மாணிக்கமே அவளைக் கண்டுபிடித்து விட்டான். பேரழகியை வேறு எங்கேயாவது கொண்டு போய்விடப் போகிறார்கள் என்று எண்ணி மாணிக்கத்தை இரவும் பகலும் அவள் இருக்குமிடத்தைக் கவனிக்கும்படி சொல்லியிருக்கிறேன்!” என்றார் சங்கர்லால்,
“இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?” என்றார் தங்கத்துரை.
“ஒன்றும் செய்ய வேண்டாம். விடிவதற்குள் எவர் சுண்ணிலும் படாமல் திரும்பிப் போய்விடுங்கள். நாளை மாலை இருட்டியதும், சுமார் ஏழு மணிக்கு நான் சொல்லும் இடத்திற்கு அங்கே மாணிக்கம் உங்களைச் சந்திப்பான். வாருங்கள். பேரழகியை அழைத்துப் போக எல்லா ஏற்பாடுகளையும் அவனே செய்துவிடுவான். பேரழகியை அழைத்துக் கொண்டு உங்கள் மறைவிடத்திற்கே போய்விடுங்கள். பேரழகியைக் கண்டதும் சவரிமுத்தின் பாதிக் கவலை தீர்ந்துவிடும். அவனுடைய முழுக் கவனமும் கோயில் நகைகளின் மீது பதியும். அப்போது தான் நீங்கள் வெகு கவனமாக நடந்து கொள்ள வேண்டும்” என்றார் சங்கர்லால்,
“மிக்க நன்றி சங்கர்லால்! நீங்கள் ஒருவர்தான் இந்தச் சிக்கலிலிருந்து என்னை விடுவிக்க உதவி செய்வீர்கள் என்று எண்ணி வந்தேன். என் எண்ணம் வீண் போகவில்லை. நான் நாளை மாலை வருகிறேன்” என்றார் தங்கத்துரை.
சங்கர்லால் எழுந்தார். “நான் சொல்லும் இடத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அம்பிகா லாட்ஜ். மிகவும் சிறிய ஓட்டல் தான் அது. அந்த ஓட்டலின் வெளியே சுமார் பத்து வீடுகள் தள்ளிக் காலித் திண்ணையில் எங்கேயாவது உட்கார்ந்திருங்கள். மாணிக்கம் உங்களிடம் வருவான்!”
தங்கத்துரை விடைபெற்றுக் கொண்டு வெளியே சென்றார். அவர் இருட்டில் மறையும் வரையில் சங்கர்லால் சன்னல் வழியே அவரையே பார்த்துக் கொண்டு நின்றார்.
– தொடரும்…
– சங்கர்லால் வந்துவிட்டார்! (மர்ம நாவல்), சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
June 29, 2026
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
June 29, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
June 26, 2026