நினைவுகள்
கதையாசிரியர்: மணியம் பொன்னுசாமி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2026
பார்வையிட்டோர்: 158
(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவர் என்னிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. வேண்டா வெறுப்பாகவே இருக்கிறார். ஆனால் அவர்தான் எனக்கு வாழ்வளித்தவர். என்னை வாழவைத்தவர். பெண் பேறு துலங்க, என்னை மணம் முடித்தவர். தாய்மை எனும் ஈடில்லாப் பெருமையை எனக்குத் தந்தவர். நான் என் வாழ்வில் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறேன். கடவுள் நான் செய்த இந்த நல்ல காரியத்திற்கு, என்னை காப்பார். அதுதான் நான் அவரை மணந்து கொண்டது. அவரை கணவனாக அடைந்தது.
சன்னல் வழியே பார்க்கிறேன். வீட்டின் முன் அந்த செடியிலுள்ள ஒற்றை ரோஜா காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. ஏனோ அதைப் பார்ப்பதற்கு என் மனம் கலங் கியது. நெடுந் தொலைவாகப் பார்க்கிறேன். சாலையில் எறும்பு ஊர்வதுபோல வாகனங்கள் செல்கின்றன. மேலே அடிவானம் இள நீலநிறத்தோடு காட்சி தருகிறது. அதையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. வீட்டிற்கு வெளியே வருகிறேன்.
பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் வீட்டின் முன் விளையாடுகிறர்கள். நேற்று பெய்த மழையால் மண் ஈரமாயிருந்தது. அவர்கள் மணலைக் கொண்டு வீடுகள் கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறர்கள்.
“மதுரா! அங்கே பாரும்மா! நீயும் விளையாடுகிறாயா? வேண்டாம்மா! நீ அம்மா கூடவே விளையாடு. மதுரா நல்ல பிள்ளையாம். அம்மாவுக்கு மதுராவை ரொம்ப பிடிக்குமாம். மதுராவுக்கும் அப்படித்தானே! மற்றவங்களோடு மதுரா விளையாடாவிட்டாலும் பரவாயில்லை. அப்பா மதுராவை அடிக்கடி பார்க்க வரா விட்டாலும் பரவாயில்லை. அம்மாதான் இருக்கேனே. மற்றவங்க யாரும் கேட்டா, அப்பா வீட்டுக்கு வந்து மதுராவை பார்ப்பதில்லை. ஏன்னா அவருக்கு நேரமே கிடைப்பதில்லை. ரொம்ப வேலைண்ணு சொல்லி விடுவேன்”.
மதுராவை தூக்கி அணைத்துக் கொள்கிறேன். என் கண்களில் கண்ணீர் சுரந்து வழிகிறது. மதுராவுக்கு அது தெரியாது!
அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் நேரம். முன்பெல்லாம் வீட்டின் முன் வந்தவுடனே காரில் இருந்து கொண்டு புன்னகை செய்வார். இதை இப்பொழுது பார்க்க முடிவதில்லை.
நேரம் ஆக ஆக மனம் வெறிச்சோடிப் போகிறது. நீல வானத்தைப் பார்க்கிறேன். அதில் ஏதோ ஒரு ரகசியம் அடங்கியிருக்கிறது. என் வாழ்வில் முன்பிருந்த சந்தோஷம் எங்கே ஒளிந்து கொண்டது என வானத்தில் துருவி துருவிப் பார்க்கிறேன்.
”மதுரா! இங்கே இருக்கலாம்மா. வா! அப்பா வருவார். மதுராவுக்கு அப்பாவை பிடிக்கும். மதுரா கூட அப்பாவை விரும்பனும், என்ன அப்பா இன்னைக்கு வருவார். உன்னோடு கொஞ்சி விளையாடுவார்.”
மதுரா மிகவும் அமைதியாக இருக்கிறாள். எப்போதும் குதித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பாளே! ஒரு சமயம் காலையில் என்னோடு விளையாடிய களைப்பாக இருக்கலாம். யார் இனிமேல் மதுராவோடு விளையாடப் போகிறார்கள்? அவளுக்கு யார் கூட்டாளியாக இருப்பார்கள்?
மறுபடியும் மேகக் கூட்டங்களைப் பார்க்கிறேன். எனக்கு. இரண்டு வருடத்திற்கு முன் வாழ்ந்த சந்தோஷமான வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. மனதிற்குள் சிரித்துக் கொள்கிறேன்.
அன்று அவர் வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தார். அவர் மிகவும் நல்லவர். அவர்தான் என் தெய்வம். அவர்தான் என்னை ஆட்கொள்பவர்.
ஆனால் மதுரா பிறந்ததிலிருந்து எங்கள் அன்பு மாறிவிட்டது. இன்று என்னை தனியே ஒதுக்கிலிட்டது. என்றைக்கு அவர் அன்பு எனக்கு இல்லை என்று அறிந்தேனோ அன்றிலிருந்து என் நிலை, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலாகிவிட்டது.
ஒரு சமயம் என் பக்கத்து வீட்டார் என்னிடம் என் கணவரைப் பற்றி சொன்னார்கள். அவருக்கு கள்ள மனைவி இருப்பதாகச் சொன்னார்கள். அவருக்கு ஒருத்தி இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் நான் இந்த உண்மையை அறிந்த பின்னும் அதிகம் பேசாமல் மௌனியாக இருந்தேன். நான் பலவீனமானவளா?ஏமாளியா? பக்கத்து வீட்டார் என்னை “இவன் குடும்பத்தை நடத்தத் தெரியாத மக்கு” என்று என்னை பலவாறு பழித்து வந்தது எனக்குத் தெரியாமலில்லை.
மதுரா பிறந்தபோது அவளிடம் ஒரு குறை! ஆனால் அதற்கு நான்தான் காரணம் என்று மற்றவர்கள் சொன்னாலும் என் கணவருக்குமா இது தெரியாமல் போய்விட்டது! நான் இவரை இவ்வளவு நாள் விரும்பியதை, அவர் சந்தோஷமே என் சந்தோஷம் என்று இருந்த சமயத்தில், அவர் ஆசையை முழுதாக பூர்த்தி செய்ய முடியவில்லையே என அழுதேன். நான் பெற்றெடுத்த ஒன்று அவருக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை!
மதுரா பிறந்த பின்பு நாளாக நாளாக அவர் எங்களை விட்டு விலகிச் சென்றார். மகளே மதுரா என்று அவர் கூப்பிட்டதில்லை.
“நான் இன்று இரவு வரமாட்டேன், பிள்ளைக்கு நெஸ்டம், பால் எல்லாம் இருக்கா?” அவர்தான் கேட்டார்.
நான் பதில் சொல்லவில்லை. அவர் ஏன் பிள்ளை என்று சொல்கிறார்? மதுரா என்று அழைக்கக் கூடாதா, அவர் இப்பொழுதெல்லாம் அடிக்கடி வெளியே போகிறார். ஆனால் என்னையும் மதுராவையும் சற்றும் பொருட்படுத்துவதில்லை. என் பக்கத்து வீட்டார் இவரைப் பற்றி பேசும்போதெல்லாம். அந்த நளினிதான் என் வாழ்வைப் பறித்து என் கணவனைத் திருடிக் கொண்டாள் என்று புழுங்குவேன்.
ஒரு நாள் மதுராவை இடுப்பில் வைத்துக் கொண்டு நான் வீட்டின் பக்கத்தில் உள்ள ஆற்றிற்குச் சென்றேன். என் முகம் சிவப்பேறி யிருந்தது. நான் ஒரு படத்தை, நளினியுடையதை. எடுத்துக் கொண்டு போனேன். என் கணவர் வைத்திருந்த படம் அது. அதைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆத்திரமாக வந்தது. அதை ஐந்து ஆறுமுறை கிழித்து ஆற்றில் வீசி எறிந்தேன். “சீசீ தூ'” என காறி உமிழ்ந்து விட்டு வீட்டிற்குத் திரும்பினேன்.
மதுராவுக்கு நான் படும் அவதி தெரியாது தான். என் வாழ்வும் என் மகளின் இருண்ட வாழ்க்கை போலாகிவிடும் என அப்பொழுதெல்லாம் அடிக்கடி நினைக்கிறேன்.
”அனிதா, எங்கே நான் வைத்திருந்த போட்டோ? என்ன செய்தாய்?” நான் பேசவில்லை.
“உனக்கு என்ன யோக்கியதை இருக்கு அதை எடுக்க நீயார். உன்னுடைய நிலையை முதல்ல நினைச்சுப் பார்த்துக்கோ…”
“ஆனால் நீங்க முன்பிருந்த நிலையிலா இருக்கீங்க. கைவிடமாட்டேன் என்று நீங்க சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைகள் தானே. நீங்கள் செய்யும் பாவம் உங்கள் கண்களை மறைத்து விட்டதா. நான் செய்த தப்பென்ன? மதுரா என்ன தவறு இழைத்தாள்?”
“எனக்கு தெரியாது! உங்களை கண்டால் எனக்குப் பிடிக்கல.”
“நான் பிழை செய்திருக்கலாங்க…. என்னை தான் உங்களுக்குப் பிடிக்கல, ஆனால் மதுரா… அவள் ஒரு குற்றமும் செய்யலயே. இது நம்ம அதிர்ஸ்டங்க”
“வாய மூடு – “
நான் பேசவில்லை.
அவரும் அடங்கிவிட்டார். பேசாமலேயே உட்கார்ந்திருந்தார். நான் சொன்னது அவருக்குப் பட்டிருக்குமோ? நான் தேம்பித் தேம்பி அழுதேன்.
அன்திரவு முழுதும் தூக்கமேயில்லை. அவரை எதிர்த்துப் பேசிவிட்டேனே. மதுரா என் பக்கத்தில் படுத்திருந்தாள். மதுரா உலகிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆனால் ஒரு நாள்கூட அவள் என்னைப் பார்க்கவில்லை! நான் பிரசவ வேதனையால் துடித்து பெற்றெடுத்தேன் இவளை. என் கணவரின் ஆசியால்தான் நானும் மதுராவும் உயிர் பிழைத்தோம், என்று சொல்வேன்.
நானும் குழந்தையும் நன்றாக இருக்கிறோம் என்றதும் அவர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி சற்றே நிலைத்திருந்தது. நாங்கள் இருவரும் அழுதோம். நான் கண்ணீர் விட்டேன். அவர் பசப்புக்காக அழுதார். ஏன்? என் அருமை மதுராவுக்கு கண் பார்வை இல்லையாம்! அவள் குருடியாம்! எனக்கும் இனி மகப்பேறு இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார்!
அடிமேல் அடி! மின்னலில் அதிர்ச்சிக்குப் பின் இடியின் முழக்கம்.
அன்று இரவு என்னோடு பேசி போனவர் தான். இரண்டு நாட்கள் வீட்டிற்கு வரவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் வெளியே வந்து வானத்தைப் பார்த்தேன். ரோஜா செடியைப் பார்த்தேன். அதில் உள்ள ஒற்றை ரோஜா மலர் காணவில்லை. கீழே விழுந்துவிட்டது.
மதுராவிற்கு உணவு கொடுத்து வெறுப்போடு வீட்டு வேலை செய்திருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே கார் சப்தம் கேட்க வெளியே வந்தேன். போலீஸ் வண்டி ஒன்று வீட்டின் முன் நின்றது. அதே சமயம் பரபரப்போடு பக்கத்து வீட்டுப் பெண் ஒருவள் பத்திரிக்கையை கொண்டு வந்து கொடுத்தாள். நான் முன் பக்கத்தைப் படித்தேன்.
“மிந்தோ நிறுவன தொடர்புத் துறை அதிகாரி குமார், லாரி விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரின் காரில் வந்த நளினி என்ற பெண்ணும் தலையில் அடிபட்டு நினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்வதாக இருந்தனர். குமாரி நளினி இரவு விடுதியில் தான் செய்த வேலையை 2 நாட்களுக்கு முன் நிறுத்திக் கொண்டாள்…”
இரண்டு மூன்று குடும்பங்கள் எனக்கும் மதுராவுக்கும் அனுதாபம் தெரிவிக்க வந்தனர். நான் பதறவில்லை அவறவில்லை. அதையெல்லாம் இரண்டு வருஷமாக செய்து விட்டேனே போதாதா? நளினிக்கு நினைவு இழந்தால் என்ன? இழக்காமல் போனால் என்ன? அவளுடைய நினைவை என் கணவர் நிச்சயம் இழந்திருக்க மாட்டாரா?
நான் மதுராவைத் தூக்கிக் கொண்டு போலிஸ் வண்டியில் ஏறினேன்…
– உதயம் (1979-01)
தொடர்புள்ள சிறுகதைகள்
அகந்தை வெறி!
மா.சித்திவினாயகம்
June 26, 2026
அன்புள்ள அப்பாவுக்கு…
நாகரத்தினம் கிருஷ்ணா
June 26, 2026
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
June 26, 2026