ஆண்பார்க்க வந்தவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2026
பார்வையிட்டோர்: 144 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

அன்று பொது விடுமுறை. நண்பர்கள் இருவரும் வழக்கம்போல், ஒரு சினிமா தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுக்குப் பிடித்த நடிகர், கவர்ச்சியைக் காட்ட அஞ்சாத நடிகை. வேறென்ன வேண்டும்!

“எப்போ இந்தப் பொண்ணுங்க பிரதம மந்திரி, ஜனாதிபதின்னு ஆக ஆரம்பிச்சாங்களோ, அப்பவே நமக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சுடுச்சு!”

கலகலப்பாகவே பார்த்துப் பழகிய நண்பன் இப்படி அலுத்துக்கொள்வதைப் பார்த்த வாசுவுக்கு அதிசயமாக இருந்தது. எதுவும் பேசாது, கோபியையே பார்த்தான்.

“எங்கம்மா காலத்திலே `கல்யாணம்’னா, பொண்ணுபாக்கறதில ஆரம்பிக்கும். இல்லியா?”

“இப்போ மட்டும் என்னவாம்? என் தங்கைக்கும் அப்படித்தான் நடந்திச்சு. அவ குட்டைப்பின்னலை மறைக்க நீளமா ஒரு சவுரி வெச்சு.. ஏதேதோ பித்தலாட்டம்! `சாதாரணமா நட. ரொம்ப மெதுவா வேணாம். கால் நொண்டியான்னு பாப்பாங்க’, அப்படி, இப்படின்னு!”

அவன் அங்கலாய்ப்பைக் காதில் வாங்கிக்கொள்ளாது, “எனக்குப் பாத்திருக்கிற பொண்ணு வெளிநாட்டில படிச்சு, அங்கேயே கொஞ்ச காலம் வேலையும் பாத்ததில நம்ப கலாசாரத்துக்கு ஒத்து வரமாட்டேங்குது!” என்று அங்கலாய்த்தான் கோபி.

“மினிஸ்கர்ட்தான் போடுவாங்களா?”

“அதில்லே. `இது என்ன கெட்ட வழக்கம், பொண்ணு பாக்கறதுன்னு? நான் என்ன, சந்தையில் விக்கற மாடா? நான் ஒத்துக்க மாட்டேன். நான் ஆண்பாக்கப்போறேன்’, அப்படின்னு வாய்க்கு வந்தபடி..,” என்று பொரிந்தான். “இவ ஆண்பாக்க நான்தான் மாட்டிக்கிட்டேன். அம்மாவோ, `நம்ப தகுதிக்கு இது பெரிய எடம்டா. நாம்பதான் கொஞ்சம் விட்டுக்குடுத்துப்போகணும்,’ அப்படின்னு எனக்கு வேப்பிலை அடிக்கறாங்க”.

வாசு சிரிப்பை அடக்கிக்கொண்டான். “எப்படியோ, கல்யாணம் ஆனா சரி. நல்லா சம்பாதிக்கிற பொண்ணு. வாழ்க்கை ஈசியா இருக்கும். விட்டுடாதே!”

“இப்போ நான் என்ன செய்யணும்? ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமான்னு கேட்டா?”

“ஏதாவது மந்திரத்தைச் சொல்லு. `நான் என்ன, மைக்கல் ஜாக்சனா?’ அப்படின்னு நைசா நழுவிடு. பெண்டாட்டியைப் பறிகுடுத்தவன்மாதிரி, இப்படி சவரம் பண்ணாம போய் நிக்காதே. பளிச்சுனு டிரெஸ் பண்ணிக்கிட்டு, குனிஞ்ச தலை நிமிராம..”.

“ஒன்கிட்டப்போய் பேசறேனே!”

அதற்குள் படம் ஆரம்பிக்கவே, இருவரும் தியேட்டருக்குள் நுழைந்தனர். இருட்டில் எவரெவர் காலையோ மிதிக்க, `குடிகாரனுங்க!’ என்ற வசவு கிடைத்தது.

கோபியின் தாய் ஜானகி அவனை ஏற இறங்கப் பார்த்தாள். பட்டு குர்த்தாவில் ஜொலித்த இவனை எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காமல் போகும் என்று அவளது எண்ணம் போயிற்று.

வாசலில் கார் நின்ற ஒலி. “வாங்க, வாங்க,” என்று கூவியபடி அவள் ஓட, கோபி எட்டிப்பார்த்தான்.

ஜீன்ஸ் அணிந்த பெண். வயிறு தெரிய ஒரு குட்டைச்சட்டை.

“அம்மா வரலியா?”

“பொண்ணு பாக்கத்தான் அப்படி அக்கா, பெரியம்மா, மாமா, அத்தைன்னு பத்துப்பேர் பையன்கூட வருவாங்க. பாவம், அந்தப் பொண்ணு பயந்தேபோயிடும். ஒங்க மகனும் அப்படி பயந்துடக் கூடாது, பாருங்க! அதான் நான் மட்டும் வந்தேன்”.

தான் ஒதுங்கிக்கொள்வதுதான் மரியாதை என்று முடிவெடுத்த ஜானகி, “கோபி! வடை, கேசரி எல்லாம் எடுத்துட்டு வாப்பா,” என்று அருமையாகக் குரல்கொடுத்தாள்.

உள்ளேயிருந்து வந்தவன், “மேசைமேலதானே இருக்கு. அவங்களே எடுத்துச் சாப்பிடட்டுமே! கையிலே கொண்டு குடுக்க நான் என்ன, ஹோட்டல் சர்வரா?” என்று இரைந்தான்.

அவன் சொற்களைவிட தோற்றம் தாயை இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பளபளப்பான குர்த்தா இருந்த இடத்தில் இப்போது கசங்கிய டி-ஷர்ட்!

“கலிகாலம்! மாடர்ன்ங்கிற பேர்ல எப்படி எப்படியோ நடக்கிறாங்க! நாம்ப ஏதாவது சொல்லப்போனா, `பழங்காலம்’னு கேலி!” என்று முணுமுணுத்தபடி உள்ளே விரைந்தாள்.

“என் பேர் விஜ்லா (VIZLA),” என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள் அப்பெண். “நீங்க எப்போ பட்டம் வாங்கினீங்க?” என்று நேரிடையாக விஷயத்துக்கு வந்தாள்.

“அதுவா? அது வந்து.., நான் நாலாவது படிக்கிறப்போ வாங்கினேன். நீலக்கலர். ஜோரா பறக்கும்”.

அவள் சிரித்தாள். “நகைச்சுவையா பேசறீங்க. எனக்குப் பிடிச்சிருக்கு”.

“எதைப் பிடிச்சிருக்கு? என்னையா, என் பேச்சையா?”

அவள் முகம் சிவந்தது.

ஹை! இவளுக்கு வெட்கப்படக்கூடத் தெரியுமா? தேவலியே!

“நான் எதுக்கு ஒங்களை ஆண்பாக்க வந்தேன், தெரியுமா?”

“சொன்னாத்தானே தெரியும்?”

“பொண்பாக்க வரப்போ, ஒரு பொண்ணை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தறீங்க! `இப்படி நடக்கணும், இப்படி உடுத்தணும்’னு எல்லா சொந்தக்காரப் பொண்ணுங்களும்

அவளைப் பாடுபடுத்திடுவாங்க. `ரொம்பப் பேசிடாதே. வாயாடின்னு நினைச்சுக்கப்போறாங்க’ன்னு அவ வாய்க்குவேற பூட்டு. ஆம்பளைங்களுக்கும் எங்க கஷ்டம் புரிய வேணாமா? அதான் இந்த ஐடியா எடுத்தேன்”.

அவளே தொடர்ந்தாள். “நீங்க பரவாயில்ல. ரொம்ப அலட்டிக்காம, நீங்க நீங்களாவே இருந்துட்டீங்க. இந்த டி_ஷர்ட்!” விழிகள் விரிய, அவள் சிரித்தாள்.

அவளிடம் அவனுக்கு ஒன்றுதான் புரியவில்லை. “இது என்ன பேரு, விஜ்லான்னு?”

“கல்யாணப் பத்திரிகையிலே போடுவாங்க. அப்போ பாத்துக்குங்க,” என்றாள் விசாலாட்சி.

நிர்மலா_ராகவன் நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 17 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர். மின் அஞ்சல் முகவரி: nirurag@gmail.com எழுத்துத் துறை ஈடுபாடு 1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *