வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 6, 2026
பார்வையிட்டோர்: 127 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

அந்த அதிகாலை நேரத்தில் குத்துச் செடியருகே குத்த வச்சு உக்கார்ந்திருந்தான் குப்புலிங்கம். குத்துச் செடி அவன் வீட்டுக் கொல்லை பக்கம் இருந்தது. அது ஒண்ணும் மருந்துச் செடியோ மணக்கும் செடியோ அல்ல! கொத்தவரங்காச் செடிதான்.

ஏன் இவ்வளவு நேரமா அங்கயே உக்காந்திருக்கான் குப்புலிங்கம்? விஜயாவுக்குச் சந்தேகம்!. இவனென்ன திடீர் வள்ளலாரா மாறீட்டானா? எதுக்காக செடிக்குப் பக்கதுலயே உக்கார்ந்திருக்கான்? என்ன யோசனை பண்றான்னு நினைச்சுக்கிட்டே அருகில் போனாள் விஜயா!

கொத்தவரங்காவிடம் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தவன் பின்னாடி சப்தம் கேட்கத் திரும்பி ‘என்ன?’ என்பதுபோல அவளைப் பார்த்தான்.

‘என்னங்க யோசனை? இப்படி இவ்வளவு நேரமா இங்கயே உக்கார்ந்துட்டு இருக்கீங்க..?! நேரமாகுதுல்ல, சாப்பிட வாங்க!’ன்னு அன்பா அழைத்தாள் அவள்.

‘சாப்பிடவா? நேத்து ஓட்டல்ல சாப்பிட்டதுல இருந்து சாப்பிடவே பிடிக்கலை!’ என்றான்.

‘ஆமாம். மத்தியானம் ஹோட்டல்ல சாப்பிட்டு வந்ததும் படுத்துட்டீங்க, ராத்திரிகூட ஒண்ணும் வேண்டாம்!னுட்டீங்க! ஏன் ஹோட்டால் சாப்பாடு ஒத்துக்கலையோ?! நான் கூட, அதுனாலதான் ராத்திரி சாப்பாடு வேண்டாம்னுட்டீங்களோன்னு நெனைச்சேன். வேணா ஒரு வாய் சுக்கு கஷாயம் போட்டுத்தரவா?! குடிச்சீங்க பசி எடுக்கும் சாப்பிடலாம்னாள்!’ விஜயா.

‘வேண்டாம்! வேண்டாம்!’ என மறுக்க,

‘இல்ல, கொத்தவரங்கா செடி பக்கத்துலயே குத்துவச்சு உக்கார்ந்திருக்கீங்களே?! கொத்தவரங்கா பொரியல் பண்ணி மிளகு ரசம் வச்சுத் தரட்டுமா? வயிற்று உபாதை சரியாகும்’னாள்.

‘கொத்தவரங்கா பொரியலால வந்த பிர்ச்சனைதானே எனக்கு சாப்பிடவே பிடிக்காம போனதுக்குக் காரணம்?!’ என்று முடிச்சவிழ்த்தான் குப்புலிங்கம்.

‘என்ன சொல்றீங்க?! புரியலையே?’

‘இல்ல!, ஹோட்டல்ல எங்கூட, நீயும்தானே லஞ்ச் சாப்பிட்டே அதை நீ கவனிக்கலையா?’ என்று கேட்க

‘எதை?’ என்றாள் அவள்.

‘ஹோட்டல்ல.. கொத்தவரங்கா, பீன்ஸ், இல்ல அவரைக்காய் பொரியல் இப்படி பண்ணினாலும் அதெல்லாம் பச்சையா காய்கலர் மாறாம இருக்கே…? நீ வீட்டுல பண்ணுனா மட்டும் இதெல்லாம் ஏன் வெள்ளை வெளேர்னு தன்னோட இயற்கைப் பச்சைபோய், வெள்ளாவி வச்சு வெளுத்தா மாதிரி வெளிரிப் போயிருக்கேன்னு ஏன்னுதான் செடிகிட்டயே உக்கார்ந்து கேட்டிட்டிருக்கேன்’னான் குப்புசாமி..!

‘உங்க கொழுப்புக்கு… ?’ என்று சொல்லி, செல்லமாய்க் கையை அடிப்பதுபோல ஓங்க, பதறி எழுந்து சாப்பிட சமையலறைக்குப் பாய்ந்தான் குப்புலிங்கம்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *