அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2026
பார்வையிட்டோர்: 3,211

1970 ஆம் ஆண்டு . ஞாயிற்றுக் கிழமை . முற்பகல் நேரம். சென்னை மடிப்பாக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள சதாசிவம் நகரின் முதல் தெருவில் நடுநாயகமாய் உள்ள ஒரு பெரிய வீடு .
வீட்டின் வாசலில் கிருபா என்ற சிறிய பெயர்ப் பலகை உள்ளது. இரும்பு கேட்டைக் கடந்து உள்ளே போகிறோம். வீட்டு வாசலுக்கும் கேட்டிற்கும் இடைப்பட்ட மேற்கூரை உடன் கூடிய பகுதியில் பெரிய மேசையின் முன்னால் பரமேஸ்வரன் என்னும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த நடுத்தர வயது ஒற்றை நாடி நபர் அமர்ந்து ஏதோ கணக்கு வழக்குகளைப் பார்ப்பதில் மும்முரமாக இருக்கிறார். பார்வையாளர் நாற்காலிகளில் ஒரு தம்பதி தங்களுக்குள் பேசிக் கொண்டு அமர்ந்து இருக்கிறார்கள் . பரமேஸ்வரன், தன்னுடைய வேலையை முடித்து விட்டு அவர்களிடம் பேசுகிறார் –
“கேரளத்துல பசங்க கிடைக்காமாலா இங்க மெட்ராசுக்கு வந்திருக்கீங்க…?”
வீட்டின் உள்ளேயிருந்து வந்த பரமேஸ்வரனின் தாய் உயரமான பேரிளம் பெண்மணி சுமித்ரா, அவர் அருகில் வந்து நிற்கிறார்.
பரமேஸ்வரன் பேச்சைத் தொடர்கிறார் –
“எங்க அநாதைகள் ஆசிரமத்துல கனகதாசா ன்னு ஒரு பிள்ளை இருக்கான். கர்நாடகத்திலிருந்து ஒரு பெரியவர் வந்து சேர்த்துட்டுப் போனாரு.. படிப்புல கெட்டி.. அதே சமயத்துல என்ன வேலை கொடுத்தாலும் உடனே செஞ்சு முடிப்பான். பூதத்திற்கு வேலை கொடுத்தா மாதிரி… ஆனா வாய் பேச வராது…” என்று முடித்தார்.
வீட்டு வாசல் அருகே தோன்றிய ஒரு குண்டு சிறுவனைக் காட்டி “இவன் தான் அது” வந்திருந்த தம்பதியின் முகம் மலர்ந்தது .
அதில் ஆடவன் பேசினான் – “நாங்க அழைச்சுகிட்டு போறோம்… நீங்க பார்மலிட்டிஸ் முடிங்க… “
சுமித்ரா, தமது புதல்வரிடம் உள்ளே வா என்று கையால் சைகை செய்து அழைத்தார். சுமித்ரா, வீட்டு உள்ளே சென்று சமையலறையில் போய் நின்றார். பரமுவும் கனகதாசாவும் அவர் அருகில் வந்து நின்றனர்.
பரமேஸ்வரன், கடுகடுத்த குரலில் பேசினார் –
“என்ன அம்மே.. பார்ட்டி கூட பேசும் போது எதுக்கு விளிக்கிறே.. இத்தனை பசங்களை வெச்சுகிட்டு கஷ்டப்படறோம்.. நமக்கு வர்ற பண்ட் வெச்சு சமாளிக்கறோம்.. ஒவ்வொரு பையனா குறைஞ்சா நமக்கு நல்லது அந்த பசங்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை … இந்த ஜோடி கோழிக்கோட்டிலிருந்து நம்மள பத்தி கேள்விப்பட்டு வந்திருக்காங்க…”
சுமித்ரா நிதானமாகப் பேசினார் –
“எங்கேயிருந்து வந்தா என்ன ? பரமு …. நீ எப்பவும் அவசரக் குடுக்கை… அந்த ஜோடி , பையன் எந்த கிளாஸ் படிக்கிறான்… டிசி வாங்கணுமா.. அவன் வாய் பேசாதவங்களுக்கான ஸ்பெஷல் ஸ்கூல்ல படிக்கிறானா.. இதெல்லாம் கேட்கல பார்த்தியா ? “
“இதுல என்ன அம்மே … எல்லாம் நான் சொல்லப் போறேன்…”
“நீ வாயை வெச்சுகிட்டு சும்மா இல்லாம பூதம் மாதிரி சொன்ன வேலையை செஞ்சு முடிப்பான்னு சொல்லிட்டே… அவங்க கடை நடத்தறாங்க போலிருக்கு.. நீ நல்லா வேலை செய்வான்னு சொன்னதும் ரெண்டு பேர் முகமும் பிரகாசம் ஆயிடுச்சு..”
“நமக்கு வர்ற வெச்ச பண்ட்ஸ் வெச்சு பசங்களுக்கு என்ன உணவு கொடுக்க முடியுமோ கொடுப்போம்.. இது போல அரிச்சந்திரன் மனைவி சந்திரமதியோட முதலாளி காலகண்டன் மாதிரி ஆளுங்க கிட்ட கனகதாசாவை தள்ளி விடாதே … எந்த பிள்ளையையும் தள்ளி விடாதே தெரியுதா ? “
“நீ இப்படி சொன்னா அவங்க கிட்ட என்ன சொல்லி நான் சமாளிப்பேன் அம்மே …”
“அவனை கொண்டு விட்ட பெரியவர் , திரும்பி வந்து இவனை அழைச்சுகிட்டு போறதா லெட்டர் போட்டு இருக்காரு.. அதைத்தான் அம்மா சொன்னாங்க ன்னு சொல்லு “
பரமேஸ்வரன் வீட்டு வாசலை நோக்கி நடந்தார்.
சிறுவன் கனகதாசா , சுமித்ரா அருகில் வந்து கை கூப்பி நின்றான். அவர் அந்த சிறுவனின் தலையை வருடினார்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உதிர்ந்த மலர்
என்.ஸ்ரீதரன்
July 20, 2026
ஒட்டு
ஜே.எம்.சாலி
July 20, 2026
கல்விக் கண்
இரா.கலைச்செல்வி
July 20, 2026
