இல்லானும் இல்லாளும்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2026
பார்வையிட்டோர்: 443

இரவு நேரம் . நடுத்தர வயது வாட்டசாட்டமான உருவம் கொண்ட சதீஷ், படுக்கையறையில் கட்டிலில் படுக்கையில் அமர்ந்து லேப்டாப்பில் மூழ்கி இருந்தான். சற்று நேரத்தில் அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு அவனுடைய ஒடிசலான, அழகான மனைவி சாந்தி அங்கே வந்தாள். புடவையைக் களைந்து விட்டு, நைட்டியை அணிந்து கொள்ளத் தொடங்கினாள்.
திரும்பிப் பார்த்த சதீஷ் “ட்ரெஸ் மாத்த வீட்ல உனக்கு வேற இடமே இல்லையா?” என்றான்.
“ஏன் உங்களுக்கு என்ன? உங்க வேலைல தான் மூழ்கி இருக்கீங்க? என்னையா பார்க்கறீங்க?”
உடை மாற்றிக் கொண்டு வந்த சாந்தி, கணவனின் கழுத்தில் தன் கரங்களை மாலையாக்கிக் கொண்டாள்.
“எப்பவும் வேலை வேலைன்னு இருக்காதீங்க…”
சதீஷ் அவளை அணைத்துக் கொண்டான்.
“என்னங்க ஒங்க கிட்ட சொல்லலை… அக்கா ஷீலாவோட பையன் ராஜா வந்திருக்கான் இல்ல நம்ம வீட்டுக்கு… கொஞ்ச நாள் நம்ம வீட்ல…”
“இருக்கட்டும்… அப்பாவும் தான் கோபிச்சுகிட்டு சித்தப்பா வீட்ல போய் இருக்காரு… நாம ரெண்டு பேரும் வேலைக்கு போயிடுவோமே அவன் வீட்ல இருப்பானா?”
“அக்கா ஷீலா, டெல்லில மூத்த பிள்ளை வீட்ல போய் இருக்கா… அக்கா வீட்ல போய் இவனால இருக்க முடியாது… அந்த வீட்டை சுத்தப்படுத்தினாலும் இவனுக்கு சமைச்சு சாப்பிட்டுக்க தெரியாது… அதனால…”
சதீஷ் புன்னகை பூத்தான். சாந்தி அவனுடைய கன்னத்தை கைகளால் வருடினாள்-
“இந்த புன்னகைக்கு என்ன அர்த்தமோ?”
“இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றும் இல்லை ன்னு சொன்ன ஔவைப் பாட்டி இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்ன்னு சொன்னா… ஒன்னோட அக்கா பிள்ளை ராஜா விஷயத்துல உண்மை ஆயிடுச்சே…”
“என்ன பெரிசா உண்மையை கண்டுட்டிங்க… சாரு நீங்க”
“ராஜாவுக்கு சரியான உத்யோகமும் ஓகோன்னு வருமானம் இல்லாததால தானே அவனுடைய மனைவி அவனைப் பிரிஞ்சு போச்சு… அவன் வருமானம் இல்லாதவன் ங்கறதால தான் ஒங்க அக்காவும் ஒண்டியா இருக்கிற அவனோட இல்லாம மூத்த மகன் வீட்ல போய் இருக்காங்க…”
“அப்ப பிராய்ட் சொன்னதை நம்ம ஔவையார் எப்பவோ சொல்லிட்டான்னு சொல்ல வர்றீங்களா…”
“அதை அப்படி நெகட்டிவ்ஆ தான் பார்க்கணும்னு என்ன இருக்கு… திரை கடலோடியும் திரவியம் தேடுன்னும் ஔவையார் சொல்லி இருக்காளே… ஓடியாடி மும்மரமா வேலை செய்யற புருசனை தான் பெண்கள் விரும்புவாங்க இந்த வயசுல சம்பாதிக்காம எந்த வயசுல சம்பாதிக்கறது… அதை அவனுக்கு உணர்த்த தான் ராஜாவோட மனைவி ரோஜா போராடுது…அவனைப் பிரிஞ்சு போய் லேடிஸ் ஹாஸ்ட்டல்ல போய் இருக்கு…”
“மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை செய்யற மாதிரி வீட்ல லேப்டாப்பை வெச்சுகிட்டு சீன் போட்டு எல்லார் கதையும் தெரிஞ்சு வைச்சு இருக்க நீ பிராடு…”
சாந்தி சதீஷின் முதுகில் அடித்தாள். சதீஷ் அவளைக் கட்டி அணைத்தான்.
“இவ்ளோ பேசறீங்களே… ஔவையார் சொன்ன மோடிவேசனை ஒங்க சகலை புள்ளை கிட்ட விடிஞ்சதும் சொல்லுங்களேன்… பார்ப்போம்…”
“நீ அனுமதி கொடுத்தா அந்த பையன் கிட்ட சொல்றேன்… விடியறதுக்குள்ளே பார்க்க வேண்டிய வேலை நிறைய இருக்கு…நான் ஆபீஸ் வேலைய சொன்னேன்…”
உடனே அவனிடமிருந்து விலகிச் சென்ற சாந்தியை இழுத்து தழுவிக் கொண்டான் சதீஷ்
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நூலகத்தில் அம்மம்மா
அபிநந்தினி மோகன்
June 3, 2026
கவசமில்லாத சலனங்கள்
இரஜகை நிலவன்
June 3, 2026
ஒப்பீடு
ஜெயந்தி சங்கர்
June 3, 2026
