வீணா! நீயும் வீணைதானா?
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதைத்தொகுப்பு:
காதல் தினபூமி
கதைப்பதிவு: May 31, 2026
பார்வையிட்டோர்: 142
(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தச் சிறப்பு விளக்குப் பகுதியில் பேட்டி எடுக்கப்போனபோது, வீணாவை கொஞ்சமும் எதிர் பார்த்தவில்லை கருண்.
வீணா நீயா! ம்கூம் இருக்காது. ஒரு நிமிடம்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து போனாள். அது வீணா தானா? என்று மனதிற்குள் சிறிய சந்தேகம் வந்தது. இருப்பினும் இவ்வளவு அரை குறை ஆடைகளோடு அவள் வந்ததால் தான் முதலில் சந்தேகம் வந்தது. வீணாவே தான் என்று தீர்மானித்த போது மனதிற்குள் எரிமலை பொங்கி வெடித்தது. கருண் கண்களில் எதிர்பாராமல் சிதறிய கண்ணீர் துளிகளை கர்ச்சிப்பால் துடைத்துக் கொண்டு ‘எழுந்து போய்விடலாமா’ என்று எண்ணியபோது “ஹ- ஹா- ஹா- தம்பி வந்து ரொம்ப நேரமாச்சா. கஷ்டமருங்க வர்ற நேரம். சொல்லுங்க, என்ன பேட்டி எடுக்கணும். என்னைப் போட்டோ புடிப்பீங்களா” என்றாள் அந்தப் பெண்மணி.
அந்த வெற்றிலை காவியேறிய பற்களும், கழுத்து நிறைய சுமக்க முடியாத நகைகளும், சேலை நிற்கமுடியாத அளவிற்கு பெரிய உருவமும், வெறுப்பேற்றிய சிரிப்பும் அவனுக்குக் கொஞ்சம் அறுவருப்பைத் தந்தது. இருந்தாலும் சிரித்துக்கொண்டே, “உங்க போட்டோவையும், கண்டிப்பாக பேப்பரிலே போடுவோம். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டான்.
“கண்டிப்பாகத் தம்பி. என்ன வேணும். ஓ! கேட்க மறந்துவிட்டேன். காபி டீ தண்ணி சாப்பிடுகிறீர்களா” என்று கேட்டாள்.
“ஒண்ணும் வேண்டாங்க”
“எங்களையும் மதிச்சு போட்டோ புடிச்சி பேட்டி எடுக்க வந்திருக்கிங்க. இருங்க டீத்தண்ணி கொண்டு வரச் சொல்கிறேன்” என்ற அந்தப் பெரிய பெண்மணி, “உமா, டீ கொண்டா என்றவாறு “தம்பி டீ குடிங்க, உள்ளே ஏதோ சலசலப்பு கேட்கிறது என்ன எனறு பார்த்துவிட்டு வருகிறேன்” என்று எழுந்து சென்றாள்.
டீ எடுத்து வந்தவள், கருணைப் பார்த்ததும் எதிர்பாராமல் கையிலிருந்த கப்பைத் தவறவிட, கண்ணாடி கப் உடைந்து, தேநீர் வீடு முழுவதும் சிதறியது. அதையும். மீறி “நீ… நீங்க… கருண்.. கருண் தானே” என தத்தித் தத்திக் கேட்டவள் அழுது கொண்டே உள்ளே ஓடினாள்.
“ஓ! வீணா, இங்கே வந்து உன் பெயரையும் மாற்றிக்கொண்டாயா?” என்று எண்ணிக் கொண்டவன், அந்தப் பெண்மணித் திரும்ப வந்து இரண்டு பெண்களை விட்டு இடத்தை சுத்தம் செய்யச் சொல்லிவிட்டு வேறு தேனீர் வரவழைத்தாள்.
“இந்த உமா எப்பவும் இப்படித்தான். டீ குடிங்க தம்பி” என்றாள்.
“நான் நிறைய பேரிடம் பேட்டி எடுக்கணும் என்று நினைத்தேன். உங்களிடம் முதலில் ஒரு கேள்வி. வேறு ஏதாவது வேலை செய்து பிழைக்க முடியாதா?” கொஞ்சம் வருத்தமாக கேட்டான்.
“ஒரு தடவை இந்தச் சகதிக்குள்ளே விழுந்தாச்சு தம்பி. வெளியே வரமுடியலை. வேறு ஏதாவது செய்யணும்னு நினைச்சுக்கூட பார்க்கவில்லை”
“சரி. இப்போ, டீ கொண்டு வந்தாங்களே உமா, அவங்ககிட்ட கொஞ்சம் பேட்டி எடுக்கலாமா?” என்று கேட்டான்.
“ஓ! ஒரு நிமிடம்” என்று உள்ளே போனவள், ஏறக்குறைய வீணாவை கடகடவென்று இழுத்து வந்தாள்.
“உங்க கிட்டே பேசுவதற்கு வருத்தப்படுது தம்பி. இப்ப கேளுங்க” என்றாள் நாற்காலியில் அவளை அமர்த்தியபடி.
“நான் இந்தப் பொண்ணுகிட்டே கொஞ்சம் தனியாக பேசமுடியுமா?” என்றான் கருண்.
அந்தப் பெண்மணி எழுந்து உள்ளே போக, மௌனத்தைக் கலைத்த கருண் “சொல்லு வீணா. நீ விரும்பித்தான் இங்கே வந்தாயா?” என்று கேட்டான்.
அவள் குனிந்து அழுதுகொண்டே, “ஆமாம்” என்று தலையசைத்தாள்.
“எங்கே என் முகம் பார்த்துச் சொல்” வேகமாக நிமிர்ந்தவள், “என்ன சொல்லவேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கத்தினாள்.
“வீணா-” என்று கருண் ஆரம்பிப்பதற்குள் “சிங்கப்பூர் போய் கடிதம் போடுகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனாயே, என்னை எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்பாயா? மூன்று வருடங்கள் உனக்காக காத்திருந்து வந்து பார்த்த வரன்களையெல்லாம் தட்டிக்கழித்தேனே! அதைப் பற்றிப் பேசச் சொல்கிறாயா” சீறினாள்.
“நான் போட்ட கடிதங்கள் எல்லாம் தபால் ஆபீஸிலிருந்தே என் வீட்டிலிருந்து எடுத்துப் போயிருக்கிறார்கள். நான் வந்த பிறகுதான் உன்னை எப்படியாவது ஒதுக்கவேண்டும் என்று இவ்வளவு செய்திருக்கிறார்கள் என்று புரிந்தது” என்றான் கருண்.
“சரி. நம்புகிறேன். என்னிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. எனக்கு ஒரு போன் பண்ணமுடியாதா? வெளிநாட்டிற்கு யாருக்காக… எதற்காக சம்பாதிக்கப் போனாய்?” திரும்பவும் சீறினாள் வீணா.
“நான் உன் கடிதங்களை எதிர்பார்த்து காத்திருந்தேனேயொழிய, உனக்கு போன் பண்ணத் தோன்றவில்லை. என் நண்பன் ராஜூ, ஊருக்கு வந்த போது, நீ அவன் கூட பேசவில்லை என்று சொன்ன பிறகு தான் ஊருக்கு வந்தேன். உன்னைத்தேட ஆரம்பித்தேன்”
“கருண். சும்மா வீணாகக் கதை விடாதே. மூன்று வருடங்களுக்கு மேலும் என்னால் வீட்டில் எதுவும் சொல்ல முடியவில்லை. இனி திருமணத்தை தள்ளிப் போட வீட்டில் சம்மதிக்கமாட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக சொந்தக் காலில் நின்று நீ வந்த பிறகு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகிற மாதிரி நான்கு கேள்வி கேட்கலாம் என்று வீட்டை விட்டு வெளியேறி வேலை தேட ஆரம்பித்தேன்.
உறவில் ஒருவன், “என் குரல் நன்றாக இருப்பதாகவும், பாடுவதற்கு வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் கூட்டி வந்து இங்கே விற்றுவிட்டுப் போய்விட்டான். என்னால் இந்த நரக வாழ்க்கையை ஜீரணிக்க முடியவில்லை.
பல முறை தப்ப முயன்று வாங்கிய அடிகள், தீப்புண்கள், சிகரெட் சூடுகள் தாங்க முடியாதவை” திரும்பவும் அழ ஆரம்பித்தாள்.
“ஸாரி ஸாரி வீணா. நீயும் வீணையை போல எடுப்பவர் கையிலெல்லாம் நாதம் எழுப்பும் கருவியாக ஆகிவிட்டாயே முதலில் கொஞ்சம் கொதித்துப்போனேன். உண்மையிலேயே என்னை மன்னித்து விடு! வா! நீ கடந்த கால வாழ்க்கையை முழுக்க மறந்து விட்டு வா. நான் நான்… இன்னும் முழுமையாக அதே பழைய வீணாவாக உன் மேல் அன்பு வைத்திருக்கிறேன். நாம் சேர்ந்து வாழலாம்” என்றான் கருண்.
“நீ.. நீ.. என்ன சொல்கிறாய். நீயும் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லையா?” ஆச்சரியமாகக் கேட்டாள் வீணா.
“இந்த ஜென்மத்தில் மணந்தால் வீணா என்ற எண்ணத்தோடு உன்னைத் தேட ஆரம்பித்தேன். வயிற்றுப் பிழைப்பிற்காய் பத்திரிகையில் நிருபராய்ச் சேர்ந்தேன். இந்த வேலைகூட நம்மை ஒன்றாகச் சேர்க்கத் தான் உதவியிருக்கிறது. வா, அந்தப் பெண்மணியிடம் சொல்லி உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன்” என்று எழுந்தான் கருண்.
“இங்கேயிருந்து என்னை நீ வெளியே அழைத்துப் போவது அத்தனை எளிதல்ல. நம் வாழ்க்கை, திருமணம் என்ற எல்லாக் கனவையும் கழுவி துடைத்து விட்டு என்னை இந்த நரகத்திலிருந்து எப்படியாவது வெளியேற்றிவிடு. அது போதும். என்னாலே மனதும் இடமும் இங்கிருக்க முடியாதபடி, நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” திரும்பவும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
“அழாதே. கண்டிப்பாக நாம் இணைந்து வாழத் தான் போகிறோம். உன்னை இங்கிருந்து இன்றே அழைத்துப் போகிறேன்” என்று எழுந்து நடந்தான் கருண் உள்ளே அந்த பெண்மணி அமர்ந்திருந்த அறையை நோக்கி.
– 14.9.2003, தினபூமி – ஞாயிறுபூமி.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
May 31, 2026
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
May 28, 2026
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
May 25, 2026
