வேண்டுதல்
கதையாசிரியர்: ஜெயந்தி சங்கர்
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2026
பார்வையிட்டோர்: 167

அழகான காலை நேரம். ரங்கன் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருந்தான். ஒரு வாரமாய் அலைந்த அலைச்சலில் உடல் அணுவணுவாய் வலித்தது. உடல் வேதனையையும் ஒரு பொருட்டின்றி மறுபடியும் பலத்த திட்டங்களுடன் குடும்பத்துடன் கிளம்பிவிட்டான்.
புதுப்பணக்காரனின் கோமாளித்தனமான ஊதாரித்தனம் போல கிடைத்த இரு வார இடைவெளியை முடிந்த வரை குடும்பத்துடன் உல்லாசமாக கழித்துக் களித்திருந்தான் ரங்கன். இன்றும் கூட லட்சுமியின் வற்புறுத்தலால் தான் கோவில். இல்லையென்றால், நேராக, செந்தோசாவுக்குச் செல்ல அல்லவா அவனும் சதீஷும் திட்டமிட்டிருந்தனர்.
மகன் சதீஷுக்கும் வேண்டுதலை நிறைவேற்றிய பின்னர் தான் செந்தோசா என்று முடிவாய் கூறிவிட்டாள். ரங்கனுக்கு சற்றும் எதிர்பாராமல் வேலை போனதும் குடும்பமே குழப்பத்தில இருந்தது. மகன் சதீஷுக்கு மட்டும் பரம மகிழ்ச்சி. அப்பா வீட்டிலேயே இருந்தார். தன்னுடன் விளையாடி, படித்து, சிரித்துப் பேச முடிந்தது. சனி, ஞாயிறுகளிலும் பெரும்பாலும் வேலை வேலையென்று அலையும் ரங்கனுக்கு இப்போது மகனுடன் விளையாடிக் கழிக்கவும், மனைவியுடன் பேசவும் கூட தாராளமாய் நேரமிருந்தது.
வேலை போனதில் குழம்பித் தெளிந்து வேலைக்கு மனுக்கள் போடுவதோடு இடையிடையே வியாபாரம் செய்யலாமா என்று யோசனையலைகளை கட்டுப்பாடில்லாமல் அலைய விட்டுக் கொண்டிருந்த அளவுக்கு மோசமான நெருக்கடி நிலையிலும் எதிர்பாராதா விதமாய் ரங்கனுக்கு வேலை வேலை ஒன்று கிடைத்தது. அவனுக்கு வேலை அமைந்ததே டாங்க் ரோடு முருகனிடம் தான் போட்டு வைத்த மனுவின் பலனென்று லட்சுமி, தீவிரமாய் நம்பினாள்.
ரங்கனும் அவளுடைய நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுத்து கோவிலுக்கு அர்ச்சனை செய்து பிரார்த்திக்க வந்திருந்தான். “சாமி கும்பிடு சதீஷ். எங்க வேடிக்கை பாத்திட்டிருக்க,” என்று அதட்ட ஏழு வயது மகனோ செந்தோசா ஆசையில் கீழ்படிகிறான்.
சம்பிரதாயங்கள் முடிந்து ஆலயத்தை விட்டுக் கிளம்பியபடி ரங்கன் மிக்ச் சாதாரணமாய் மகனிடம், “சாமிக்கிட்ட என்னப்பா வேண்டிக்கிட்ட?” என்று கேட்க, “அப்பாவுக்கு மறுபடியும் வேலை போயிடணும். அப்ப தான் எங்களோட பேச அவருக்கு நேரமிருக்கு. மறுபடியும் வேலைக்குப் போய்விட்டால் சிடுசிடுவென்று சீரியசா ஆயிடுவாரு. அம்மாவும் இப்ப மாதிரி சந்தோஷமா இருக்க மாட்டாங்க. அதனால் முருகா, எங்கப்பாவுக்கு வேலையே வேண்டாம் அப்படின்னு மனசுக்குள்ளேயே வேண்டிக்கிட்டேன்,” என்றும் சற்றும் எதிர்பாராத பதில் கொடுக்க ரங்கனும் லட்சுமியும் திகைப்புடன் பார்வைகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
தன் வேலையும் அதன் பளுவும் அதன் பயனாய் விளையும் நேரமின்மையும் பிஞ்சு மகனை எவ்வளவு பாதித்துள்ளன என்று அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. சமூக விலங்காகிப் போன மனிதனின் வாழ்க்கையை எண்ணியவாறு ரங்கன் வண்டியை செந்தோசாவை நோக்கிச் செலுத்துகிறான்.
– 1997, தமிழ்முரசு.
![]() |
சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
எத்தித் திருடுமந்தக் காக்கை!
மா.சித்திவினாயகம்
May 31, 2026
இவருக்குப் பதிலாக இவர்
எஸ்.மதுரகவி
May 31, 2026
நினைவு அலைகள்
ஸ்ரீவத்ஸன்
May 31, 2026
