மன்னித்து ஏற்பதா!
கதையாசிரியர்: நிர்மலா ராகவன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 25

மதிய இடைவேளை. அலவலக காண்டீனில் சாப்பிட்டுத் தொலைக்க வேண்டும் என்று நினைக்கும்போதே சுயபரிதாபம் பொங்கி எழுந்தது வேலுவுக்கு.
பின் என்ன, அவனவன் மனைவி அருமையாகச் சமைத்துக்கொடுத்ததை அவளே அருகில் இருப்பதுபோல் அனுபவித்துச் சாப்பிட, இவன் மட்டும் உப்பு அதிகமாக, அரைகுறையாக வெந்ததை அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டும். சமையலறைப்பக்கமே தலைவைத்துப் படுக்காதவனெல்லாம் அயல்நாட்டுக்கு வந்து சமையல் செய்கிறான், பாவி!
வேலுவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளவே வந்தவன்போல் அருகில் வந்தான் சாமி.
“இன்னும் மாமியார் வீட்டிலதான் இருக்காங்களா?” என்று அக்கறையாக விசாரித்தான்.
அவனை ஒருமுறை சோகமாகப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டான் நம் கதாநாயகன். `தெரிந்துகொண்டே கிளறுகிறான் தடியன்!’ என்று மனதிற்குள் வைதான்.
சாமியோ எளிதாக அந்த இடத்தைவிட்டுப் போவதாக இல்லை. “அப்படி என்னதான் சண்டை ஒங்களுக்குள்ளே?” என்று துருவினான்.
ஒரு பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தான் வேலு. “நம்ப ஆபிசில எல்லாரும் சேர்ந்து மூணு நாள் கெண்டிங் ஹைலாந்துக்கு பிக்னிக் போனோம், இல்லியா? அப்போ..”என்றவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, “எனக்கு குளிர் தாங்கல,” என்று ஏதோ சொல்ல, நண்பன் புரிந்துகொண்டு தலையாட்டினான். “குளிருக்கு அடக்கமா மிஸ் வாங்குடன் ஒண்ணா, ஒரே ரூமில இருந்தியாக்கும்! அதுக்கு எப்பவுமே ஒன்மேல ஒரு கண்ணு!”
“சேச்சே! போரடிக்குதுன்னு அவதான் என் ரூமுக்குள்ள வந்தா. சும்மா பேசிட்டு இருந்தோம். அவ்வளவுதான்!”
கேலிச்சிரிப்புடன், “நம்பறேன்,” என்ற நண்பன் சற்று யோசித்து, “எவன் வத்திவெச்சானோ! இதுக்குத்தான் உள்ளூரில மாமியார் வீடு இல்லாத பொண்ணாப்பாத்து கட்டியிருக்கணும்,” என்று காலங்கடந்து முணுமுணுத்தான்.
“ஆகிற வழியைச் சொல்லுவியா!”
“நீ போய் கூப்பிடேன்!”
“ஒடனே வந்துடுவாளா?”
“லேடீஸ் அவ்வளவு சீக்கிரம் மசியமாட்டாங்க.` நீ இல்லாம வீடு வெறிச்சுனு இருக்கு. சாப்பாடே இறங்க மாட்டேங்குது’ன்னு ஏதாவது வசனம் எடுத்துவிடு”.
“இதெல்லாம் போன தடவையே சொல்லியாச்சு”.
“இப்படிச் சொல்லிப்பாரேன். ‘ஒன்னோட சேர்ந்து வாழ ஆரம்பிச்சப்போதான் நான் முழுமையா ஆனமாதிரி இருக்கு’, இப்படி ஒரு இளிச்சவாயன் சொன்னா எந்த மனைவிக்கும் கண் கலங்கிடும்”.
“நம்பறமாதிரி ஏதாவது ஐடியா குடுப்பா”.
“அட, சொல்றேன், நம்பமாட்டேங்கிறியே! ஒரு படத்தில இப்படித்தான் மனைவியை வழிக்குக் கொண்டுவர்றான் கதாநாயகன்”. அடித்துச்சொன்னான் சாமி.
அறிவுரை பலத்தது. “அதோட, ‘ஸாரி, ஸாரி’ன்னு திரும்பத் திரும்பச் சொல்லணும். தலையைக் கலைச்சு விட்டுக்கிட்டு, மூஞ்சியைச் சோகமா வெச்சுக்க. ரெண்டு மூணு நாள் சவரம் வேண்டாம்”.
நண்பன் சொன்னதையெல்லாம் ஒத்திகை பார்த்துக்கொண்டு, மாமியார் வீட்டுக்குப் போனான் வேலு.
“எங்கே வந்தீங்க?”
மனைவியின் கட்டைக்குரலும் மிரட்டலும் புதிதல்ல என்றாலும் சற்று பயம் ஏற்பட்டது. பெரிதாக ஒரு மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டான். “நீ இல்லாம..,” என்று ஏதோ ஆரம்பித்தான். மற்றதெல்லாம் மறந்துபோயிற்று.
பேச்சு சப்தம் கேட்டு வெளியே வந்த மாமியார், “உள்ளே வா!” என்று மகளை ரகசியக் குரலில் அழைத்துப்போனாள்.
“எத்தனை நாள் இங்கேயே தங்கப்போறே? போய், அவர் காலிலே விழுந்து, `என்னை மன்னிச்சு ஏத்துக்குங்க’ன்னு கெஞ்சலாச் சொல்லு”. இணையத்தில் பலரும் பார்த்ததை மாமியாரும் பார்த்திருந்தாள்.
“யார், யாரை மன்னிக்கிறது? நானா தப்பு பண்ணினேன்?” குரல் கத்தலாக வெளிப்பட்டது. “நானா வீட்டில பெண்டாட்டியை விட்டுட்டு, கண்டவளோட வெளியூரில ரும் போட்டுத் தங்கினேன்?”
“என்ன இருந்தாலும், நீ ஒரு பொண்ணு. விட்டுக்குடுக்கறதுதான் வாழ்க்கை”. மாமியார் தத்துவத்தில் இறங்கினாள். “இந்தமாதிரி சமாசாரத்துக்கெல்லாம் அப்பாவை நான் பிரிஞ்சிருந்தா, நீ பிறந்திருக்கவே முடியாது. ஒங்கப்பா ஆடாத ஆட்டமா!”
சற்றுநேரம் அங்கே மௌனம் நிலவியது. ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த வேலு மனைவியின் பதில் என்னவாக இருக்கும் என்று காதைத் தீட்டிக்கொண்டான்.
“சரிம்மா. நீ இவ்வளவு சொல்றதால போறேன். ஆனா, செய்யாத தப்புக்காக மன்னிப்பெல்லாம் கேக்கமாட்டேன்”.
தான் ஸாரி சொல்லவேண்டிய அவசியமே இல்லாமல் செய்துவிட்ட மாமியார்மேல் அன்பு சுரந்தது வேலுவுக்கு.
“நீங்களும் எங்ககூட வாங்களேன், அத்தை!” என்றான் உபசாரமாக. மகளைவிட அனுபவம் அதிகம் இருந்ததால் அவளுடைய சமையல் இன்னும் ருசியாக இருக்கும் என்று சப்புக்கொட்டியது அவன் நாக்கு.
![]() |
நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 17 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர். மின் அஞ்சல் முகவரி: nirurag@gmail.com எழுத்துத் துறை ஈடுபாடு 1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மாதம் பிறந்தது
ஜி.எஸ்.மணி
May 25, 2026
மாதம் பிறந்தது
விந்தியா
May 22, 2026
