உணவு முறை குறித்த அறிக்கையும், பற்களின் பிரச்சினையும்
கதையாசிரியர்: திசேரா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 25, 2026
பார்வையிட்டோர்: 324
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் ஒழுங்கு முறைப்படி உணவை உண்பதில்லை. அதற்கான கால அவகாசத்தை எனது வேலை எப்போதும் விட்டு வைப்பதில்லை. உணவுக்காக வரையறுக்கப்பட்டிருந்த நேரம் வெளியில் கழிந்து போனதுதான் உண்மை. அதற்கென நேரகாலத்தை ஒதுக்கி வைத்திராமையினாலும், பசி பழகிய ஒன்றாகிப் போய்விட்டிருந்ததனாலும் மெலிந்து போயிருந்தேன். அது ஒரு குறையாக எனக்கோ, யாருக்குமோ வேதனையை அளித்திருக்கவில்லை என்பதனால், தொடர்ந்து இயல்பிலேயே வாழ்க்கை நகர்ந்து போனது.
இவ்வாறு பசியுடன் பாதிகழிந்த நாளொன்றின் பகலில், உத்தியோகபூர்வமற்ற அறிக்கையொன்று எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. அது உத்தியோகபூர்வமற்றது. மட்டுமல்லாமல் யாரால் அனுப்பப்பட்டது என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் இருந்தது. அதிலேயே முதன்முதலில் எனது உணவு முறைபற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. புற்களை நீர் சாப்பிடுவதில்லை எனவும், (எவ்வளவு பசியெடுத்தாலும் ) இரத்த நெடியுடன் கூடிய மாமிசங்கள் எனக்கு விருப்பமானதென்பதும் அவர்களுக்குத் தெரிந்த செய்தியாம். அவற்றைக் கிழித்துண்ணக்கூடிய வகையிலே என் பற்கள் சிறத்தலடைந்து காணப்படுவதனால், அவையே எனது உணவுகளாக இருக்கின்றதெனவும் அவ்வறிக்கை கூறியது. நான் உணவு உட்கொள்ளலில், ஒழுங்கு முறை.எதுவும், தாங்கள் அறிந்த வகையில் இருப்பதாகத் தெரியவில்லை எனவும். அதற்குரிய வலுவான காரணமொன்றை அறிந்து வைத்திருப்பதாகவும் அவ்வறிக்கை மேலும் கூறியது.
என் தாவர உணவுகளுள் புழுக்கள் நெளியத் தொடங்கியது. ஒவ்வொரு பிடிக்கும் ஒரு புழுவேனும் தலையை நீட்டிச் சிரித்தது. தன்னை உண்ணமுடியாதென எக்காளமிட்டது. அரைக்கக் கூடிய பற்கள் எனக்கில்லை என்பது அவற்றின் எண்ணம், கிழித்துப் போடமுடியும் என்பதை மறந்திருந்தது. அவ்வறிக்கை வந்ததிலிருந்து தாவரங்களும், முழுச்சோறும் அரைபடாமல் முழுமையாகவே வயிற்றுள் கிடந்து உருண்டது. வயிறு பாரம்மெடுத்ததுடன், வலி கொண்டது. இதனால் மாமிசத்தை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். இறைச்சித் துண்டுகள் பல் ஈறுகளில் சிக்கிக் கொண்டதனாலோ என்னவோ, பல்வலி ஆக்கிரமித்தது.
இதனாலும், பல் பற்றி அறிக்கையில் வெளியிடப்பட்ட விபரத்தை அறிந்து கொள்ள வேண்டியும் வைத்தியரை அணுகினேன். ஆச்சரியப்பட்டார். உறுதியைக் கண்டு பாராட்டினார். வாய் நாற்றம் இருப்பதாகவும் அவை மாமிசத் துண்டுகள் இடைவெளியினுள் சிக்கிக் கொள்வதனால் ஏற்பட்டிருக்கலாம். உப்பு நீரில் வாய்கொப்பளிப்பதை வழமைக்குக் கொண்டு வரும்படி ஆலோசனை சொன்னார். “மனிதர்களுக்குரிய முறையில் பற்கட்டமைப்பு காணப்படுவதனால் தாவர உணவுகளை நன்றாக அரைத்து உண்ணமுடியும். அவை குறித்து சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை.
கண்ணாடியில் வேண்டுமானால் அதைப்பார்த்துக்கொள்ளலாம்.” என எனக்குத் தோன்ற மறந்த எண்ணத்தை ஞாபகப்படுத்திக் கண்ணாடி ஒன்றை நீட்டினார். வெட்டும்பல், வேட்டைப்பல், முன்-பின் கடைவாய்ப்பற்கள் பற்சூத்திரத்தின்படி ஒழுங்காக இருந்ததை விளக்கிக் காட்டினார். தாவரங்களில்தான் சத்துக்கள் அதிகம் இருக்குமென காதுக்குள் சொல்லி அனுப்பினார்.
வேலைத்தளத்திலிருந்து வீடு திரும்புகின்றேன். நோய்கொண்டு வளைந்து கிடந்த என் கட்டிலில் நோயாளியாக ஓய்வுக்கு வரலாம் என்ற எண்ணம் பரவி இருந்தது. உண்மையில் நோயாளியாக நான் இல்லை. ஆனால் அவர்களுக்குரிய களைப்பும், சலிப்பும், ஓய்வெடுக்க வேண்டிய அவசரத் தேவையும் எனக்குமிருந்தது. நினைத்துக் கொண்டிருந்த வேளையிலேயே பயணம் முறிவு பட்டது. பரிசோதனைக்கு உட்பட வேண்டுமென சிலரால் கட்டளையிடப்பட்டேன். சம்மதம் கேட்டுக் கொள்ளாமலேயே வாயைத்திறக்கப்பண்ணி பற்களைப் பரிசோதித்தார்கள். எல்லாப் பற்களும் வேட்டைப் பல்லாக திரிபடைந்திருப்பதாகக் கத்தினார்கள். எல்லோரும் மாறி மாறி வாய்க்குள் எட்டிப்பார்த்தார்கள். “இல்லை அவை மனித பற்சூத்திரத்தின் படியே கட்டமைக்கப்பட்டுள்ளன. வைத்தியரிடம் காட்டி அதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளேன்.” ‘அதைப்பற்றிக் கவலையில்லை. அக்கறைப்பட வேண்டிய அவசியமும் எங்களுக்கில்லை. மாமிசத்தை உண்பதற்காக திருட்டுத்தனமாக வாங்கியிருக்கின்றாய். இதற்காகவே நீ காலதாமதமாகி வீடு திரும்புகின்றாய்.” – ‘இதை முற்றாக மறுக்க வேண்டிய கட்டாயமுள்ளது. இதற்கான ஆதாரங்கள் என்வசமுள்ளன. என் நாயின் பொருட்டே இறைச்சியைக் கொள்வனவு செய்கின்றேன். எனக்காகவல்ல. எனக்குத் தரப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்வதில் நேரம் கரைகின்றது. இன்னமும் கூட நிறைவு செய்யப்படவில்லை. அதனால் நேரத்துடன் வீடு திரும்பக் கூடிய சூழ்நிலை எப்போதும் ஏற்பட்டதில்லை. வேலைத்தளம் அமைந்துள்ள தூரம், பளுவும் இணைந்து இருட்டிய பின்பே வீடுசெல்ல அனுமதிக்கின்றன. நாங்கள் கையொப்பமிடும் புத்தகத்தை பார்வையிட்டால் அந்த உண்மை தங்களுக்குப் புரியலாம். அதற்கு வாசிக்கும் திறமையும், ஒப்பு நோக்கும் இயல்பும் இருக்க வேண்டியது அவசியம். இதன் காரணமாக என் உடல் மெலிந்து போனாலும், மாமிசம் உண்பதால் – நாய் பருத்து இருக்கின்றது. அதன் குரைத்தல் வலுவானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். அதன் உருவம் பார்ப்போரைப் பயங்கொள்ளச் செய்யும், வேண்டுமானால் அதையும் என்னால் காட்டமுடியும்.” எதையும் ஏற்க மறுத்த அவர்கள், நான் பிறந்தது சமதரையான காட்டுப்பகுதி என்பதனால் பற்களின் அமைப்பு கூரானதாகவே இருக்கவேண்டுமெனத் தீர்மானம் எடுத்து வைத்திருந்தார்கள். பிறந்த இடத்துக்கு காடுகளைக் கடந்து செல்லவேண்டி இருந்தது. ஆனால் காட்டுப் பகுதியல்ல. இப்படியாக பிரச்சினைகள் வெடிக்கும் எனத்தெரியாமல் அங்கே அவள் பிரசவித்துப் போட்டதில் யாரையும் குறைகூற முடியாது. நியாயப்படுத்தவேண்டிய தேவையும் இல்லை. விளங்கிக் கொள்ளக்கூடிய தன்மையோ, மனப்பக்குவமோ அவர்களுக்கு இருக்கவில்லை. என்னை மிருகமாகக் காட்டவேண்டும் என்ற தேவையைத்தவிர குறித்த தினமொன்றில் தங்களுடைய நிலையத்தில் மனிதக் காப்பகப் பிரிவில் பற்களைப் பரிசோதிக்கச் சொன்னார்கள். அவ்விடத்திலிருந்து தற்காலிகமாக அனுப்பப்பட்டாலும், அவர்களுடைய பார்வைகள் எப்போதும் என் பின்னாடியே வந்து கொண்டிருந்தது.
இருவார இடைவெளியில் என் உணவுமுறை குறித்த அறிக்கை பதிவுத்தபால் மூலமாக கிடைக்கப் பெற்றது. மனிதக் காப்பகத்தின் தலைமையகத்தில் இருந்து எனக்கு – என் விலாசமிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. அதன்படிக்கு, நான் தாவர உணவுகளை எப்போதும் உண்டதில்லை என நம்புவதாகவும், இது அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு தரப்பினரின் கடிதங்கள் மூலம் ஊர்ஜீதப்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மனிதனாகக் கருதிக் கொள்ள முடியாத என்னிடமிருந்து ஏனைய ஜீவன்களைக் காக்க வேண்டிய தேவை அதிகமாக இருக்கின்றமையினால், அதிலும் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதனாலும் இதையே மனிதக் காப்பகம் (Shelter for Human) என்ற தங்கள் அமைப்பு வலியுறுத்துவதாகவும் என்னை மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டிருப்பதால், ஏழு தினங்களுக்குள் தங்கள் சிகிச்சை முகாமில் வந்து சேருமாறும், எவ்வித குறைபாடுகளும் என்னிடமில்லை என தாங்கள் கருதும் பட்சத்தில் வீடு சென்று இயல்பு வாழ்க்கையைத் தொடர அனுமதி வழங்கி விடுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. வரத்தவறும் பட்சத்தில் தாங்கள் பலவந்தமாக அழைத்துச் செல்ல நேரிடும். அவ்வாறான இக்கட்டான நிலைக்கு தங்களை உட்படுத்துவதென்பது. என் தலையில் நானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டது போல அமையும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பல பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கையில் அதன் உருவாக்கம் பற்றிய வரிகளும் காணப்பட்டது. இது உமக்கெதிராக எதேச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகள் என நீர் கருதிக் கொள்ளக்கூடாது. பல மாதங்களாக எமது ஒற்றர்களினால் உமது நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டது, அது புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை எனவும், மனிதர்களுடன் ஒப்புநோக்குகையில் மாறுபாடுடையதாக காணப்பட்டதாகவும் குறிப்பிட்டனர். அதோடு நீர் தொடர்பு கொண்டிருந்த அனைவரது அறிக்கைகள், விசாரணையின் பின்னர் பெறப்பட்டது. (குறிப்பாக மேலதிகாரி – நண்பர்கள்) அவர்கள் மூலமாகத் தந்த அறிக்கைகளும் எம்மிடமுள்ளன. இவற்றைக் கொண்டு மாத்திரம் முற்றாக நீர் மிருகம் என கருதப்பட்டுவிடவில்லை. கருதிக்கொள்ளவும் முடியாது என்பதையும் நாம் இவ்விடத்தில் குறிப்பிடவேண்டும். -நீர் பழி சுமத்துவதாக எண்ணிவிடக் கூடாது – உம்மைப் பூரண சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னரேயே எம்மால் இறுதிமுடிவைத் தெரியப்படுத்த முடியும் என்றிருந்தது.
இவ்வறிக்கை எனைக்கேள்விக்குள்ளாக்கியதுடன் முன்னைய நடவடிக்கைகளை மீளுருக்கொள்ளச் செய்தது. நான், என் வழமையான காரியங்களை விடவும் எதையும் செய்யவில்லை. அன்றாட கடமைகளுக்கே எனக்கிருந்த நேரத்தின் போதாமையை அவர்களுக்கு உணர்த்துவது பற்றிச் சிந்தித்தேன். எனை ஆறுதல் படுத்துவதற்காகவென இல்லா விட்டாலும் தங்கள் அமைப்பின் குறையை வெளிக்காட்டா வண்ணம் ‘இறுதி முடிவு தீர்மானிக்கப்படவில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் முடிவு என்பது எப்பொழுதோ தீர்மானிக்கப்பட்டிருக்கவேண்டும். எனைப்பற்றிய முறைப்பாடு கிடைத்த உடனாகக்கூட இருக்கலாம். அதன் பின்னரேயே எனக்கு இவ்வறிக்கை அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
எப்போது மனிதர்களை அழிக்க வேண்டுமென முடிவெடுத்திருந்தேன் என எனக்கே தெரியாது. இவ்வாறானதொரு முடிவை நினைத்திருந்ததுமில்லை.- கனவில்கூட – அது மோசமானதும் கூட, உயிர்களை மட்டுமல்ல, அவர்களது உரிமைகளையும் பேண வேண்டுமென்பதில் எனக்கு பெரும் உடன்பாடு இருந்தது. இதன் நிமித்தமே பல எதிரிகளையும் சம்பாதித்திருந்தேன். அவர்களுக்குக் காட்சியளித்த மிருகக் குணத்தின் எதிர்வினையாக, என்னை மிருகமாகக் காட்ட முயன்றதன் உச்சக்கட்ட வெளிப்பாடாக இவ்வறிக்கை அனுப்பப்பட்டிருக்கலாம்.
கண்ணாடி முன்நின்று பற்களின் வரிசையைப் பார்த்தேன். தாவர உணவுகளை உண்பதற்காகத் தேடி கீரை வகைகளையும், கிழங்குவகைகளையும் வாங்கி சமையலறைத் தட்டில் நிரப்பினேன். உண்டபின்னர் சாப்பிடுவதற்காக பெருமளவு பழங்களையும் கொள்வனவு செய்தேன். – பாதி காய்த்தன்மையுடனும் – அவை என் தேகத்துக்கு ஆரோக்கியமளித்தது. நான் தாவர போசணிதான் என்ற உணர்வை இதனூடாகவேனும் பலருக்கு நிறுவ முயன்று கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.
இம்மரக்கறிகள் தீர்ந்து போவதற்குள்ளாவே, எனக்கு விடுமுறையான தினமொன்றில் என்னைத்தேடி வந்துவிட்டிருந்தார்கள். பலவந்தமாகத் தட்டப்பட்ட கதவை உடைக்கும் முன்னம் படுக்கையிலிருந்து எழுந்து திறந்தேன். இரும்புக் கூண்டுடன் நால்வர் நிற்க ஐந்தாமவனே கதவைத் தட்டினான். மிருகங்கள் பிடிக்கவென பயன்படுத்தும் விசித்திரமான ஆயுதங்கள் அவர்கள் கைகளில் இருந்தது. அவர்களைப்போல பலர் ஆங்காங்கே நின்றார்கள். ‘திரு. தி…..” எனது பெயரை உச்சரித்ததனால் ‘நான்தான்” என்றேன் ‘அறிக்கை கிடைத்ததா?” – ‘நீங்கள்” – ‘மனிதக் காப்பகம்” வேறு எதுவும் சொல்லப்படவில்லை. கழுத்தில் சங்கிலியை பூட்டிய ஒருவன் ‘சிகிச்சைக்கு அழைத்துப்போக வந்தோம்” என்றான். நான் இரவு உடையில் இருந்ததனால் அதை மாற்றிக்கொள்ள விரும்பினேன். ‘மிருகங்கள் உடையணிவதில்லை.” சிரித்தவன் விசித்திர ஆயுதத்தால் கூட்டினுள்ளே தள்ளிப் பூட்டினான். அது மிருகங்கள் அடைக்கப்படும் கூடு. உள்ளிருந்த நான் வெளியேற எவ்வித எத்தனத்தையும் செய்யவில்லை. – அது முடியாத காரியம் எனத் தெரியும். -உறுமவும் இல்லை. ஆனாலும் அவர்கள் கைகளிலிருந்த ஆயுதங்களால் குத்தப்பட்டேன். உதட்டை பல்குத்திய இடத்திலிருந்து இரத்தம் வடிந்தது. இரத்தத் துளியை சிந்த மனம் இடம் கொடுக்கவில்லை. உதட்டை உள்வளைத்து உறிஞ்சிக் குடித்தேன். நால்வர் கூண்டைத்தூக்கி வாகனமொன்றில் ஏற்றினார்கள். ஒருவன் சத்தமிட பலர் எங்கிருந்தோவெல்லாம் ஓடிவந்து ஏறிக்கொண்டபோது வாகனம் புறப்பட்டது.
என் மேசையில் மடித்து வைக்கப்பட்டிருந்த அவர்களின் அறிக்கை காற்றில் பறந்து கல்லில் முட்டுப்பட்டு, பின்னாடியே பறந்து வந்து கொண்டிருந்தது.
– கார்த்திகை 2001.
– வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு), முதற்பதிப்பு: 26 ஆகஸ்ட் -2004, மூன்றாவது மனிதன் பதிப்பகம், இலங்கை.
| எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்னும் ஒரு விதம்!
வளர்கவி
June 29, 2026
காயலாங்கடை
நா.ரங்கராசன்
June 29, 2026
எதுவும் மாறல
மனோகர் மைசூரு
June 29, 2026