சாவு கொண்ட நாள்
கதையாசிரியர்: திசேரா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 25, 2026
பார்வையிட்டோர்: 516
(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குண்டுகள் எங்காகிலும் வெடித்துக் கொண்டே இருக்கின்றது. அமைதியாகக் கருதக்கூடியதாக ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் வெடிக்கின்றது. யார் வைக்கின்றார்கள், எங்கு, எப்படிக் கொண்டு செல்லப்பட்டது, என்ற கேள்விகளுக்கு விடை காண முடியாவண்ணம் வெடிக்கின்றது. அல்லது கண்டெடுக்கப்படும் போது அது குண்டுகளாக இல்லாவிட்டாலும், கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் அவை குண்டுகள் தான். பெற்றியும், ஒரு துண்டு வயரும் இருப்பின் அது குண்டு எனவும், அங்கு ஊடுருவல் நடந்திருக்கின்றதெனவும் இனங்காணும் பொழுதுகள் இவை.
ஆனால், இங்கு வெடித்தது உண்மையான குண்டுதான். சில அதிரடியான உடைகளையும், சாதாரணச் சட்டை ஒன்றையும், சேட்டையும் கொண்றிருக்கின்றது. இதன்போது அதிரடி உடைகள் மரணித்தது பற்றி அதிசயப்பட ஏதுமில்லை. ஏனெனில், இது அவர்களுக்காக, அவர்களின் வரவுக்காக வைக்கப்பட்டதால் குறித்த அவர்களின் பயணப் பாதையில் வெடித்தது. அவர்களைப் பாவம் என்பதற்குமில்லை. அவர்கள் அம்மணமாக இருந்திருப்பின் அல்லது சாதாரணமாகவே மனிதனாக இருந்திருப்பின் “பாவம்” என மனம் வருந்திக் கொண்டோ, ஒரு துளிக் கண்ணீராகிலும் சிந்திக் கொண்டோ போயிருக்கலாம். அவர்களது உடை கரடு முரடானது. வியர்வையை நக்கி எடுக்கக் கூடியது. இரத்தச் சுவையை கறையை அறியத் துடிப்பது. பெண்களின் அங்கங்களைத் தடவத்துடித்துக் கொண்டிருப்பவை இதனால் அவைகள் இறக்கும் போதெல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இதை விடவும் அவைகள் அழிக்கவெனக் கொண்டுவரப்பட்டவையாகவே கருதப்பட்டன.
அந்த உடல்கள் கிடக்கும் நிலை, ரசிக்கக் கூடியதாக இருந்திருக்காது. ஏதோ ஒரு அங்கம் குறைவு பட்டவையாகவே கிடந்திருக்கும். வீதியெல்லாம் இரத்தம், காலில் குருதியை ஒட்டிக் கொள்ளாமல் மறுபக்கம் போகமுடியாதளவு பரவிக்கிடந்திருக்கலாம். ஒருகால் எலும்பு சதையுடன் போக, தோல் மட்டும் கோது போலவும், மற்றுமொரு கால் யாருடையதென்று இனங்காண முடியாமலும் கிடந்திருக்கலாம். இது வழமையும் கூட.
கடை அலுமாரியின் கண்ணாடியில் சதைத்துண்டொன்று சப்பென்று ஒட்டிக்கீழே விழுந்தது. கண்ணாடியில் அதன் தடம் தெரிந்தது. குண்டு பிளவுபடும் கணத்தில் தள்ளிய காற்றில் சுவர்கள் சரிய ஓட்டுத்துண்டுகள் பறந்தது. இந்த சத்தத்தில் தான் குண்டு வெடித்திருக்கின்றதெனத் தெரிந்தது. அதிர்வின் பரவலில் இரண்டு, மூன்று கடை தள்ளி நான் அமர்ந்திருந்த சாப்பாட்டுக் கடையின் அலுமாரி திறவு பட்டு உழுந்து வடையொன்று கீழே விழுந்தது. மேசை மீது தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த குவளை நீரைச் சிந்தியது. “கல்” மழை கொட்டுவது போல, மேலே ஓட்டில் துண்டுகள் கொட்ட தூசுகள் என் தலைமேல் இறங்கியது. நானிருந்ததற்கு முன் மேசையில் தேனீர் குடித்துக்கொண்டிருந்த சிலர் எங்கோ மறைந்தார்கள். அந்தக் கடையின் பின் புறம் பற்றி யாதுமே அறிந்திராத நான் தெரிந்த முன் வழியால் செல்லவும் பயந்து வாயைத்திறந்து விழி பிதுங்க நின்ற நிலை பின்னர் நினைக்கும் போதும் எனக்குச் சிரிப்பு வந்தது.
அங்கு வேலை செய்த பையன், என்னைக் கூப்பிட்டுக் கொண்டே வீதியைக் கடக்க முயல் வெடிச்சத்தத்தில் கீழே விழுந்தான். அதன் பிறகும் வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. கடையில் முதலாளியாக இருந்த அம்மா கத்திக் கொண்டு இரு காதுகளையும் பொத்திக் கீழே குந்தினாள். கடையின் அலுமாரியினூடு குண்டு பயணித்த போது கண்ணாடியும் வடையும் துண்டு துண்டாய்ச் சிதற சுவரில் பட்டு குழியாக்கியது. இப்படியே சன்னங்கள் மாறிமாறிப் பாய கீழே குப்புறப் படுத்துக் கொண்டேன். வெளியில் ‘ஐயோ அம்மா” என்ற சத்தம் வெடிச் சத்தத்துக்கு போட்டியாக கேட்டுக்கொண்டே இருந்தது. வெளியேற முன் கதவால் போனால் நானும் செத்துத்தான் விழ வேண்டும். அப்பா இல்லாத என் அம்மாவை, யார் பார்த்துக் கொள்வது. குழந்தை குட்டியோ, மனைவியோ எனைப் பார்த்திருக்க இல்லாததால் பரவாயில்லை. இருந்திருந்தால் அவர்கள் கதி. அம்மாவை யாராவது அவளின் தங்கையோ, தம்பியோ பார்த்துக் கொள்ளக் கூடும். என்னை எப்படியும் புதைத்து விடுவார்கள்.
தவழ்ந்து கொண்டு உட்பக்கம் செல்ல, அது சமையலறை, கடந்து சென்றால் கிணறும், மலசல கூடமும் இருந்தது. சுற்றி மதில் இருந்ததால், அதில் பாய்ந்து போக வீட்டுக்காரர்கள் கத்திக் கூச்சல் போட, என்னை மட்டுமல்லாமல், சத்தம் போட்ட வீட்டுக்காரரையும், என்னவென கேள்விகூட கேட்காமல் சுட்டு விடுவார்கள். தெரியாத பகுதிக்குள் குதிக்கவொண்ணாமல் தடுமாறிய வேளை சமையலறைக்கு வரும் கதவால் வந்த சன்னம் இரு தகரங்களைத் துளைத்து கிணற்றுப் பக்கம் போனது. எதிலோபட்ட சன்னமொன்று வேகமிழந்து எனதருகில் விழ, உடல் எகிறித் தலை கதவு நிலையில் பட்டு வலியெடுத்தது. நான் செத்துப் போகத்தான் வேண்டும் சாவதைவிட சாவுக்கு முன்னான, கண் இமையில் ஊசி குத்தலும், குதிகாலில் ஏறும் ஆணியும், சிரைக்கப்பட்ட மொட்டையும்தான் கண்முன்னே நின்றது. இந்த நிலையில் சுட்டுக் கொன்று போடப்படுவேன். ஆனாலும் தப்பிக்கத் தூண்டியது வாழ்க்கை.
குசினிக்குள் என்னை விட உயரமாக, “சீலிங்குக்கு” ஒரு அடி. ஒன்றரை அடி குறைவாக விறகு அடுக்கப்பட்டிருந்த இடம்தான் சரி. நீர்த்தாங்கியோ, சாமான்கள் மூடப்பட்டு சாக்குகள் நிறைந்த இடமோ சரிவராது. விறகுக்கு மேலால் ஏறி சுவர் ஓரமாகக் குப்புறப்படுத்துக் கொண்டு, எப்போதும் போர்த்திக்கொள்ள அம்மா தரும் சேலையை பக்கத்தில் கிடத்துவதற்குப் பதில் பெரிய வீரக்கட்டை இரண்டை என்னை மறைப்பது மாதிரி வைத்துக் கொண்டேன். வெடிச்சத்தம் முடிவதாக இல்லை. வெடிச்சத்தம் நின்ற போது ஏதோ வாகனம் வந்து நின்றது. யார் யாரோ குதிப்பதாய்க் கேட்டது. வாகனமும் சத்தத்தை நிறுத்திக் கொண்டது. மீண்டும் வெடிச் சத்தம் பொங்கி எழுந்தது. இப்போது வெடிச்சத்தத்துக்கு எதிராகவோ, நிகராகவோ சத்தம் எதுவும் கேட்கவில்லை. சத்தம் போடக் கூடியவர்கள் என்னைப் போல மறைவிடமாக ஒழிந்திருக்கலாம். அல்லாமல் போனால் மௌனமாய் செத்துப் போயிருக்கலாம். வெடிகள் ஓய்ந்து போக காலடிச் சத்தமே கூடுதலானது. ஆரவாரப் பட்டுக் கொண்டு காலடிகள் பரவியது. என்னையும் நெருங்குவது போல கடைக்குள் நுழைந்தது. ஏதோ குறியீட்டுப் பாணியில் சம்பாசித்துக் கொண்டு நெருங்கியது. திடீரென ‘நானில்லய்யா” என்ற பெண்குரல், கடையின் முதலாளியம்மாவாக இருக்க வேண்டும். அவள்தான் வெடிச்சத்தத்துக்கு பயந்து கீழே ஒழிந்திருந்தவள்.
“எனக்குத் தெரியாதய்யா”
“என்ன விட்டிருங்கைய்யா”
“கையெடுத்துக் கும்பிடுகிறேன்”
“புள்ள குட்டிக்காரி சாமி”.
அவளது வேண்டுதலை விளங்கக் கூடியதாக இருந்தது. அதற்கு அவன்கள் ஏதோ பாசையில் உறுக்கிக் கதைத்தார்கள். “பாவம்” என்று அவன் கதைத்திருந்தாலும் தெரியாது. ஆனால் அப்படி இருக்க முடியாது. அப்படி அவனுடைய தொனியும் காட்டவில்லை. ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டியது போல இருந்தது. கோபத்தில் ஒருவன் கண்ணாடியில் அடித்திருக்க வேண்டும். கண்ணாடிக்கே உரித்தான சத்தத்துடன் அது உடைந்து ஒலி எழுப்பியது. காலடிகள் இப்போது என்னை நெருங்கி வந்தன. தகரத்தால் மறைக்கப்பட்ருந்த பின் பகுதியில் எட்டிப் பார்த்து திரும்பி ஏதோ சொன்னான். இப்போது தண்ணிநிரப்பப்பட்டிருந்த நீர்த்தாங்கியில் தட்டும் சத்தம் கேட்டது. காலடிச் சத்தங்கள் திரும்பி ஒலிந்தன. எனதுயிர் எங்கிருந்தோ வந்து விட்டதாகத் தோன்றியது. மீண்டும் அவளை அதட்டும் சத்தம் கேட்டது. அவளால் இப்போது எதையும் கதைக்க முடியாமலும், அடக்க முடியாமலும் இருந்திருக்க வேண்டும். வாய்விட்டு அழுத சத்தம் மட்டுமே இழுப்பட்டுக் கொண்டு போனது. இந்த இழுவை அவர்கள் அழைத்துக் கொண்டு செல்லவில்லை. இழுத்துக் கொண்டு செல்கிறார்கள் எனக் காட்டியது. அவளது அழுகை மேலோங்கி இருந்தபோது வெடிச் சத்தமொன்று அதைத் தணித்து விட்டது. மீண்டும் காலடிச் சத்தங்களோடு வெடிச்சத்தமும் தொடர்ந்து கேட்டது.
என்னைப் பிடித்திருந்தாலும் இப்படித்தான் இழுத்துக்கொண்டு சுட்டிருப்பானுகள் காலையில், நாய்களோ, காகமோ தீனிக்காக சுவைத்திருக்கும். காகங்கள் முன்னமே தலைகளை அடிக்கடி கிழித்து விட்டுப் பறக்கும். அம்மா சொல்வாள் சனியன் கழிந்துபோனதாய். இந்த நேரம் அம்மா ஊர் முழுக்கத் தேடிக் கதறி இருப்பாள். இனிப்போக முடியாவிட்டாலும் காலையில் ஓடிப்போய் முதல் வேலையாக வெற்றிலை வைத்துக் கேட்டிருப்பாள். அவனும் கண்ணை மூடி உயிரோடுதான் இருக்கின்றேனென்று சொல்லியிருப்பான். அவனைப் பொறுத்த வரையில் அம்மாவைத் திருப்திப் படுத்த வேண்டியது முக்கியமாகும். அவள் கண்கள் சிவந்து இருந்ததும், கழுத்திலுள்ள கழலையையும் கண்டு செத்துப் போயிருக்கலாம்” என்று சொல்லியிருந்தாள். அவளும் செத்துப் போய் விடுவாள் என்று அவன் பயந்து போய், பொய் சொல்லியிருக்கலாம். அம்மாவினது கழுத்தில் இருக்கும் கழலைக்கட்டி அவளைப் பாவமாகக் காட்டும். முன்னரே சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலும் அது இப்போதும் வளர்ந்து போய் இருந்தது. அதே போல முதலாளிப் பெண்ணுக்கும் கழலை இருந்தது. அவளது உடலை நாய்கள் நக்கி இருக்காது. இப்போதெல்லாம் நாய்களே, முதலில் தலைமறைவாகி விடுகின்றன. முதல் இந்த உடுப்பைக் கண்டால் குரைத்துக் கொண்டே இருக்கும். கடிக்கவும் பார்க்கும். குரைப்பது கூடப் பிரயோசனமில்லாமல் போனபோது பயம் கவ்விக் கொண்டதால் அவைகள் மணத்தை நுகர்ந்தே தொலை தூரத்தில் நின்று கொள்கின்றன.
ஒன்றிரண்டு வாகன இரைச்சல் கேட்டது. நுளம்புகள் காதுக்குள் பறந்து கத்தியது. கையைத் தூக்கி அடிக்கப் பயமாக இருந்தது. கடிக்கும்போது மெதுவாக அந்தப் பாகத்தை ஆட்டிக் கொள்ளவே முடிந்தது. ஆனாலும் மீண்டும் வந்து குத்திக் கொண்டு தும்பிக்கையை நீட்டிக் குத்தியது. கடை திறந்து கிடக்கு. யாரும் வந்தாலும் தெரியாது. யார்தான் வரப் போகின்றார். சில நேரம் யாராவது என்னைப் போல ஒழிந்து இருக்கலாம். கையைத் தூக்க விறகுக்கட்டை விழலாம். அதுவே காட்டிக் கொடுத்து விடும். பின்ன.அவ்வளவுதான் இதையெல்லாம் யோசித்துக் கொண்டே நுளம்புகளைக் குத்த விட்டு பேசாமல் இருந்தேன்.
கண்களை மூடும் போதெல்லாம் சுடப்பட்டு யாரோ செத்துக் கிடந்தார்கள். சில வேளைகளில் கடைக்கார அம்மா போலும், முன் மேசையில் இருந்து தேனீர் குடித்துக் கொண்டிருந்த இரண்டுபேர் போலவும் மாறி மாறி வந்தது.
அப்பா செத்து பிணத்தைக் கிடத்தி இருந்த போது அம்மா தலையில் அடித்துக் கத்தியது போலவே, ஆஸ்பத்திரிக்கு முன் ரோட்டில் சுடப்பட்ட பலர் கிடத்திக் கிடக்க எனக்கருகில் கிடந்த பிணத்தின் பின் மண்டையில் மஞ்சள் கூழ் வடிந்தது. இன்னொன்றுக்கு கண்ணுக்குள்ளால் வெடி பாய்ந்து இருந்தது. சில முண்டங்கள் கூடக் கிடந்தன. இப்படித்தான் தலையை வெட்டி வேலிக் கட்டையில் குத்தி விட்டுச் செல்வார்களாம். தோட்டத்து வெருளி போல இது பயமுறுத்துமாம். பெண்களோ, சிறு பிள்ளைகளோ, சில ஆண்களும் கூட நினைவழியும் வரை அப்பக்கம் போகமாட்டார்கள். திடீரென என் தலை கூட வேலிக்கட்டையில் குத்தி இருந்தது. கண் திறந்தே கிடக்க கன்னம் ஊதி அழகாக இருந்தேன். இந்த முகத்துடன் பெண் பார்க்கப் போயிருந்தால் திருமணமாகியிருக்கலாம். சில வேளை காதலித்துக் கொண்டாவது இருந்திருக்கலாம். அவளும், நானும் கண்களால் பேசிக் கொண்டு மௌனத்தை மொழியாக்கி எத்தனை கவிதைகள் எழுதியிருப்பேன். ஆனால், இந்நிலையில் அவளது க….. கவலைக்குள் பயம்பிடித்துக் கொள்ள, நுளம்பு குத்தியது.
காகங்களும், குருவிகளும் கத்திக்கொண்டு எங்கெல்லாமோ பறந்து, பலரைக் கூட்டிக் கத்தியது. எனக்கு மட்டும் பயம் தெளிந்தபாடில்லை. எலி மூத்திரமடித்த நாற்றம் தடவும் போதுதான் தெரிந்தது. நான் செத்துக்கிடந்த போதோ, எனது தலை வேலிக் கட்டையில் குத்தப்பட்ட போதோ, பயத்தில் ஆடை நனைந்திருக்க வேண்டும். வயிற்றுள் பசி கத்தியது. வாங்கி மேசையில் வைத்திருந்த தேனீரைக் குடிக்க முன்னமேயே அது நிகழ்ந்து விட்டது. வெடிப்பட்ட வடையை நினைக்கும் போது பசி தொலைந்து போக, பயந்தான் கவ்வியது. பசியைத் தாங்க முடியாமல் அழுது, சுடச்சுட மரவள்ளிக் கிழங்கையும், சம்பலையும் தின்று விட்டுப் படுத்த அந்த நாட்களிலெல்லாம் பசி அடக்க முடியாததாகவே இருந்தது. அடியில்லாத தகரடின்னைத்தேடி எடுத்து மார்கழி வெள்ளத்துக்குள் இறங்கி மின்னிக் கண்ணனைப் பார்த்து டின்னை வைத்து கைக்குள்ளால் அள்ளி எடுத்து மீன் வளர்க்கும் ஆசையில் விளையாடும்போது கூட, பசிக்கு ஓடிவந்து மரவள்ளிக் கிழங்கைத் தின்று, அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணியைக் குடித்து விட்டு குப்புறப்படுத்து பசியை அடக்கிய பொழுதுகளிலும், சோறுதான் தெய்வமாய்ப் போயிருந்தது. இப்போதெல்லாம் உயிரே தெய்வமாகிப் போனது.
“வாழ்க்கை குரூரமானதென
மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டாலும்
வாழ்வின் மீதான காதலை
யாராலும் உதறிவிடமுடிவதில்லை”
இந்தக் கவிதை தான் ஞாபகத்துள் இருந்தது. அம்மா மடிக்குள் படுத்து “பசி பசி” எனக் கத்திக் கொண்டு மண்ணைக் காலால் உதைக்க வேண்டும் போல இருந்தது. விறகுக் கட்டை ஒன்று கூட கீழே விழுந்தது.
கண்ணாடி அலுமாரி திறந்துதான் கிடந்தது. அது திறக்கப் படாவிட்டாலும் உடைந்த கண்ணாடிக்குள்ளால் கையை விட்டு எடுக்கலாம். பத்து வடையாவது சாப்பிடலாம். அதற்காகப் பத்து வடைப் பசி என்பதற்கில்லை. அதற்கு மேலான பசி. இது நேற்றுப் போட்ட வடையாக இருக்க வேண்டும். நூல் இழுபடுவதாக இருந்தால் சாப்பிட முடியாது. ஆனால் ஏதோ ஒன்றைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வடையைப் பிளக்க நூல் இழுபடவில்லை. ஐந்து வடையை இடைவிடாது சாப்பிட்டு ஆறாவது வடையைக் கடிக்க முயலும் போது விக்கல் எடுத்துக் கொண்டது. பசியின் கோரப் பிடியில் கடிக்க முனைகையில் கடிக்க முடியாமல் இருந்தது.
பசியின் வக்கிரத்தை பற்களில் காட்டிக் கடிக்க, வடையில் இருந்து ஏதோவொன்று முரசில் குத்தியது. கொச்சிக்காய் காம்பு தைத்து நின்றது. நாக்கால் தடவ சிறுகுச்சி போல இருந்தது. வயிறு இன்னமும் பசியால் அழுதது. வாய்க்குள்ளிருந்து வீணி வடிந்தது. வாய்க்குள் குத்தியதை எடுக்க கையை எடுக்கும் போது, கையிலும் குத்துப்பட்டது. கண் விழிக்க தெரிந்தது, நான் கடித்தது வடையில்லை விறகுக் கட்டை என்று, உமிழ்நீர் விறகுக் கட்டையில் விழுந்து, அதுக்குள் வழிந்து கொண்டிருந்தது. விறகு அடுக்கிலிருந்து மெல்ல இறங்கி நிற்கும் போது தலை சுற்றிக் கொண்டு வந்தது. இருண்ட மேகம் கண்ணுக்குள்ளால் பறந்து போய்க் கொண்டிருந்தது. சுயமாக நிற்கவொண்ணாமல் விறகடுக்கில் சாய்ந்து நின்றேன். வயிறுக்கு ஏதாவது தேவைப்பட்டது. எனக்கெதிரில் நீர்த்தாங்கி நிரம்ப தண்ணீர் இருந்தது. தண்ணீருக்குள் வாயை வைத்து உறிஞ்சினேன். அப்படியே தலையையும் அதற்குள் முக்கி எடுக்க நன்றாக இருந்தது. தலைநீர் உடம்பில் படும்போது உடல் ஒரு தரம் சிலிர்த்துக் கொண்டது,
இன்னமும் முன்னால் போக பயமாக இருந்தது. பிற்பகுதியில் ஒருபக்கச் சுவரால் ஏறிக் குதிக்க எண்ணி கால் அந்தப்பக்கம் நோக்கி இழுத்தது. மதிலில் காலை வைத்துக் கொண்டு இருக்கும்போது, அந்த வீட்டுக் கிழவன், எதேச்சையாக வெளியே வந்தவன் என்னென்னமோ சொல்லித்திட்டினான்.
பசி காதை அடைத்திருந்ததனால் எதுவும் கேட்காமல் போனது எதையும் சொல்லிக் கொள்ளவும் முடியாமல் நா குடலுக்குள் புதைந்து போனது. ஆனால், என்னை இறங்கி போகச் சொல்லி ஏசுகின்றான் என்று பட்டது. நெற்றியில் மூன்று கோட்டில் இட்டிருந்தபட்டை சுருங்கி விரிந்தது. மதிலில் குத்தி இருந்த வலது கையை எடுத்து கடையையும், அவனது வீட்டையையும் காட்டி வீட்டுப்புறமாக வெளியே போக வேண்டும் என்றேன். ஏதோ நினைவு வந்தவன் போல உப்புறமாகப் போனான். போகச் சொல்லித்தான் போகின்றான். எனத் தெரிந்து ஒற்றைக் காலையும் தூக்கி மதிலில் போட்டு கிடையாகக் கிடக்க உள்ளிருந்து தும்புத்தடியுடன் வந்தவன் வலது தோட்பட்டையில் தும்புத்தடிக் கம்பைக் குத்தித் தள்ளினான். கையைப் பிடித்து நிற்க பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்த போது. செத்துப் போய் விட்டேன் எனப்பட்டது. எழும்ப முடியாமல் இருக்க முள்ளந்தண்டு உருவுப்பட்டு மண்ணுக்குள் புதைத்து விட்டது போலிருந்தது. மெல்ல கைகளை ஊன்றி நிமிர்ந்து இருக்க முனைந்து தோற்றுப்போய், இரண்டாம் முறை வென்றேன். சுவரின் உதவியுடன் கிழவனாய் மூதாதை போல குனிந்து கொண்டே நிற்க முடிந்தது.
மற்றைய வீட்டுக்காரனும் என்னைத்தள்ளிவிடத் தயாராக நிற்க, தாயும் ஏசுவதாகவும் புலப்பட, முன்வழி தஞ்சமென நடந்து தகரக் கதவையும் விறகடுக்கு, நீர்த்தாங்கி கடந்து கதவு நிலையில் சாய்ந்து தலையை மட்டும் வெளியே நீட்டும் போது மேசையில் ஈக்கள் மட்டும் கூட்டம் போட்டு இருந்தது. ரோட்டில் யாரையும் காண முடியாமல் இருக்க பயமும், பசியும் வயிற்றைச் சுருட்டியது. இந்தப் பிரதேசம் சுற்றி வளைக்கப்பட்டு இருக்குமோவென எண்ணும் போதே மீண்டும் அந்த இருண்ட மேகம் கண்ணுக்குள்ளால் பறக்க, கதவு நிலையை இறுக்கிப் பற்றித் தஞ்சமெனச் சாய்ந்தேன். பெண்கள் ஓடக்கூடிய சைக்கிளில் ஒரு உருவம் போனது. அது ஆண் என இனங்கண்டு கொள்ள முடிந்தாலும், அவனது வயதையோ, உருவத்தையோ மதித்துக் கொள்ள முடியாமல் கண் மங்கிப் போயிருந்தது. இதற்கு மேல் உயிரைப் பெரிதாக நினைக்க முடியாமல் வெளியே, பசி – பயவெறியுடன், நெஞ்சைக் குண்டு துளைக்காத கவசம் போலாக்கி நடந்தேன். சாதாரணத்தையும் விடக் குறைவாகவே நடமாட்டம் இருந்தது. குண்டு வெடிப்புத்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். வீட்டுக்குத்தான் நடக்க வேண்டும். நடந்து கொண்டே போக முடியாத தூரம், பின்னுக்குத் திரும்ப ஆயுதங்களுடன் சந்தியில் இரண்டு, மூன்று உருவம் நின்று முன்னுக்குத் திரும்பி ஒரு அடி எடுத்து வைக்கவும். ‘டும்” – பெரிய சத்தம்மொன்று பசி அடைத்திருந்து காதைத் துளைத்து, செவிப்பறையையும் கிழித்து என்னைத் தூக்கிப் போட்டது.
கண்ணைத் திறக்க முடியாமல் இருந்தது. இமைகள் நடு நடுங்கி மேலே விரிய அம்மா தெரிந்தாள். இன்னமும் நாக்கு வெளியே வரவில்லை. புதைந்துதான் கிடந்தது. நாக்கை வெளியே இழுத்து விடுமோமென கையைத் தூக்க முயல, அம்மா, என்னமோ சொல்லி கையைப் பிடித்துக் கொண்டாள். கையை ஆட்ட வேண்டாமென்கின்றாள் போல. எனக்கு மேலால் ‘சேலைன்” போத்தலொன்று முடியும் தறுவாயில் தொங்கியது. அம்மாவின் கண் சிவந்து இருந்தது. கால்மாட்டில் இன்னும் பலர் நின்றிருந்தார்கள். அவர்கள் எல்லோரையும் கண்டபோது பயம் போனது, நாக்கு ஒருவாறு இழுபட்டு மேலே வந்தது, மெல்லமாக ‘பசி” என்றேன். அம்மா சிரித்தாள். என்னால் சிரிக்க முடியாமலேயே இருந்தது. தலையைத் தடவிக் கொடுத்தாள். உயிர் தலைக்கூடாக இறங்கி பரவி உடல் சிலிர்த்தது.
– ஐப்பசி 2000
– வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு), முதற்பதிப்பு: 26 ஆகஸ்ட் -2004, மூன்றாவது மனிதன் பதிப்பகம், இலங்கை.
| எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்னும் ஒரு விதம்!
வளர்கவி
June 29, 2026
காயலாங்கடை
நா.ரங்கராசன்
June 29, 2026
எதுவும் மாறல
மனோகர் மைசூரு
June 29, 2026