திருப்புமுனை
கதையாசிரியர்: ஜெயந்தி சங்கர்
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 17, 2026
பார்வையிட்டோர்: 92

மாளவிகா. பெயர் மட்டும் இல்லாமல் அவளும் அழகு. அவளுடைய திருமணத்தில் தான் அவளை முதன் முதலில் சந்தித்தேன். எனது கல்லூரித் தோழன் மதனின் திருமணம்.
மாளவிகா மதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்து பிறகு விதியின் விளையாட்டால் வேறு ஒருவருக்கு மாலையிட நேர்ந்தது.
மாளவிகாவை வருணிப்பதைவிட வாசகர்களின் கற்பனையில் உருவாகவே விரும்புகிறேன். காரணம், அவரவர் ரசனைக்கேற்ப மனதில் அவள் உருவத்தை சித்திரிக்கும் சுதந்திரம் அவர்களுக்குக் கிடைக்குமே. அவள் அழகி மட்டுமல்ல.
புத்திசாலியும் கூட. அழகும் அறிவும் சேர்ந்து இருப்பது அரிது. அதிலும் பெண்களிடம் மிகவும் அரிது என்ற என்னும் சிறும்பான்மையினரின் கருத்தை தவறென நிரூபிப்பதற்கென்றே பிறந்தவள் என்றுதான் எனக்குத் தோன்றும்.
அவளது அறிவு, புத்திசாலித்தனம் ஆகியவற்றிற்குச் சான்றுகளாக அவள் வீட்டின் வரவேற்பறையில் குவிந்திருக்கும் பரிசுப் பொருட்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள் ஆகியவை காண்போரை சர்வ நிச்சயமாக வியப்பில் ஆழ்த்தும்.
திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றனவோ இல்லையோ பூவுலகில் வெகுவாகவே குழப்பங்களை விளைவிக்கின்றன.
மணப்பெண்ணைப் பார்க்கும் ஆர்வத்தாலும் பரிச்சயப்படுத்திக் கொள்ள எழுந்த ஆவல் காரணமாகவும், நான் மணப்பெண் அறையை நோக்கிச் சென்றேன்.
அங்கு சில பெண்கள் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். வழக்கத்திற்கு விரோதமாக சிரிப்பு, கேலி, பேச்சு என்று எதுவுமில்லாமல் இருந்தது எனக்குச் சற்றே வினோதமாக இருந்தது.
சில நிமிடங்களில் மாளவிகாவும் அவளுடைய அம்மாவும் தனித்து விடப்பட்டதும் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். நான் மாளவிகாவையும் அவள் அம்மாவையும் நோக்கி பொதுவாகவே உரையாடிக் கொண்டிருந்தேன்.
தாயார் மட்டுமே என்னை மதித்து உரையாடினார். பெண் என்னைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் உட்கார்ந்திருந்தது எனக்குக் குழப்பமாகவே இருந்தது.
திடீரென்று ஒரு வயதான மாது, அவசரமாக வந்து மணப்பெண்ணின் தாயாரை அழைத்துச் சென்றார்.
நான் மாளவிகாவுடன், தனித்து விடப் பட்டேன். இத்தனை நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்த மணப்பெண்ணின் போக்கு எனக்கு சற்று புதியது. சரி, கூச்சப்படுகிறாள். நாம் பேசிப் பார்ப்போம்.
விருப்பம் இல்லையென்று தோன்றினால் மௌனமாக இருந்து விடுவோம் என்ற எண்ணத்துடன் மெதுவாக நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். மதன் அதிர்ஷ்டசாலி தான் என்று ஆரம்பித்தேன்.
தரையையே பார்த்துக் கொண்டிருந்தவள் நிமிரக் கூட இல்லை. “மாளவிகா, நீங்க சிரித்தால் இன்னும் அழகாக இருப்பீர்களென்று நினைக்கிறேன். உண்மை தானே?” என்று பேச்சைத் தொடர்ந்து பார்த்தேன். அவளிடம் சிறு அசைவு கூட இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் யூகிக்கக்கூட தோன்றவில்லை.
நான் அவள் அருகில் சென்று அவளைத் தொட்டுக் கூப்பிட்டேன். பிறகு என்னைப் பார்த்து ஒரு விதமாகப் புன்னகைப் பூத்தாள் பாருங்கள்.
பல கணங்கள் நான் என் விருப்பங்களைக்கூட மறந்தேன் என்று தான் தோன்றியது.
அவள் முகத்தைப் பார்த்து, “மாளவிகா, உங்களுக்குக் காது கேட்காதா?” என்று கேட்டேன். என் உதட்டசைவைக் கூர்ந்து கவனித்த அந்த பெண் ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
சரி, பெண்ணிற்குப் பேச்சும் வராது போலிருக்கு என்று நினைத்த நான் இந்த விஷயங்கள் மதனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் தெரிந்திருக்குமென்ற எண்ணத்தில் அவர்களுடைய் பெருந்தன்மையைப் பாராட்டிப் பேசினேன்.
அவள் அதிர்ஷ்டத்தைப் பற்றி அவளிடமே கூறினேன்.
திடீரென்று ஒரு பெரிய இடி விழுந்தது போன்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு அறை வாசலை நோக்கினேன்.
அங்கு கனமான பெரிய பாத்திரத்தை நழுவவிட்ட மதனின் தாயார், ஆச்சரியம், கோபம், அவமானம் என்று பல உணர்வுக் கலவையுடன் முகத்தைச் சிவப்பேற்றியபடி நின்றிருந்தார்.
அப்போதுதான் குழப்பங்கள் ஆரம்பிக்கும் சாத்தியக் கூறுகள் தென்பட்டன. அதாவது, மதனின் குடும்பத்தார் யாருக்கும் மணப்பெண்ணைப் பற்றி உண்மை தெரியாது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. மதன் உள்பட எல்லாரிடமும் விஷயம் சொல்லப்பட அவரவர் தங்கள் உணர்ச்சிகளை பற்பல விதங்களில் வெளிப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர்.
மதன், தன் பெற்றோருடன் மாளவிகாவின் பெற்றோரிடம் நியாயம் கேட்க, தவறுகள் முழுவதும் கல்யாணத் தரகருடையது என்பது வெட்ட வெளிச்சமானது.
கல்யாணத் தரகர் தன் கமிஷனை வாங்கிக் கொண்டு போனவர் போனவர்தான். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அவருக்குத்தான் அவருடைய வயிற்றுப் பிழைப்பில் உள்ள கஷ்டங்கள் தெரியும்.
ஆனால், உண்மையைக் கூறாமல் கூறிவிட்டதாய் பெண் வீட்டாரை நம்ப வைத்து ஒரு கல்யாணத்தை நிச்சயம் செய்து விட்டார், அநியாயமாக.
மதன் பெண்ணை புகைப்படத்தில் பார்த்ததோடு சரி, அவன் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு கணிப் பொறியாளர் கல்யாணாத்திற்கு ஐந்து தினங்கள் முன்பு தான், விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.
அவனுக்குச் சகோதரிகள், சகோதரர்கள் என்று யாரும் வேறு இல்லை. மேலும் பெற்றோர்களும் பெண் பேசாதிருப்பதை பயம் கூச்ச சுபாவமென்று எண்ணி விட்டது தான் விதியின் சதி.
இன்னும்கூட எனக்கு ஆச்சரியம் குறையவில்லை. ஒரு கல்யாணம் என்பது முக்கியமான ஒரு விஷயம். அதை அசிரத்தையாக செய்ய ஒருவரால் முடியும் என்பதே கூட ஜீரணிக்கக் கூட முடியாத விஷயமாகவே எனக்குப் பட்டது.
மாளவிகாவின் அழகு அவர்களை அசர வைத்ததாயும், அவளிடம் ஒரு குறையை அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை என்பதும்தான் மதனின் வாதம். அவன் பெற்றோரை நான் நன்கு அறிவேன்.
பல சந்தர்ப்பங்களில் அவர்களின் வெகுளித்தனத்தை கண்டு வியந்ததும் உண்டு. ஆனால், கல்யாண சந்தர்ப்பம் உச்ச கட்டம். சந்தேகக் கண்ணோடு பார்க்க தவறிவிட்டனர். தரகர் இவற்றையெல்லாம் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டு விட்டார்.
இதில் மாளவிகாவின் பெற்றோர் தான் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். காரணம், எத்தனை எடுத்துக் கூறியும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று மதனின் பெற்றோரை நம்ப வைக்குமளவுக்கு விவரித்தும் புரிந்து கொள்ளாமல் ஒட்டு மொத்தமாக பெண்ணைப் பெற்றவர்களை ஏமாற்றுக்காரர்கள் என்று அபாண்டமாக பழித்தனர். தூற்றினர். ஆத்திரமாகப் பேசினர்.
முகூர்த்த நேரம் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. முத்துப் போல் முப்பத்தைந்து நிமிடங்களே மீதியிருந்தன. பெண்ணைப் பெற்றவர்கள் நம்பிக்கையிழக்க, சிறிதும் பெரியதுமாக பல நியாயக் குரல்கள் வேறு கேட்டன.
மதனை அழைத்து கல்யாணம் நின்று விடுவதால் நம் சமூகத்தில் ஒரு பெண்ணிற்கு ஏற்படக்கூடிய பல இடையூறுகளையும் இன்னல்களையும் எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்த முயன்றேன்.
அந்த அப்பாவிப் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க நான் எடுத்த முயற்சிகள் யாவும் பயனற்று போனதுதான் வேதனை.
நடந்து கொண்டிருந்த எல்லா அமர்க்களமான விவாதங்களையும் நிராகரித்த மாதிரி மாளவிகா பதட்டமில்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
ஒரு விதத்தில் அவள் நிலை மிகவும் உத்தமம். காரணம் அவளால் விஷச் சொற்களையும் வீண் பழிகளையும் கேட்கவே வழியில்லையே. அவள் நிலை எனக்குள் என்னையறியாமல் ஒரு பொறாமையுணர்வையே கொடுத்தது.
அவளுக்கு எப்பொழுதும் இரைச்சல் சற்றும் இல்லாத ஒரு தூய்மையான பூரண அமைதியை கொடுப்பினையாகவே தந்திருந்தான் இறைவன்.
அங்கு நடந்த விபரீதங்களை யாருமே எடுத்து சொல்லவில்லை அவளுக்கு.
யாரும் அப்படிச் செய்துவிடப் போகிறார்களே என்று தான் எனக்கு பயமாக இருந்தது. அவரவர் ஆதங்கங்கள் அவரவர்க்கு. ஒருவரும் அவளை லட்சியம் செய்யவில்லை.
எவ்வளவு நேரம் தாமதமாக விஷயம் அவளுக்குத் தெரிகிறதோ அவ்வளவு நேரம் அவள் அமைதியாக இருப்பாள். அவள் மோனநிலையை கலைக்க நான் விரும்பவில்லை.
அது கலைந்து விடக்கூடாது என்று என் நினைவில் வந்த தெய்பங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தேன். அந்தப் பூமுகம் வாடுவதைக் காணச் சகிக்க முடியுமா என்னால் என்று யோசித்தேன். முன்னேற்பாடாய் என் மனதை எதற்கும் திடப்படுத்திக் கொண்டேன்.
அழகு, குணம், படிப்பு, அறிவு, பண்பு ஆகியவையின் கலவையான மாளவிகா ஒரு குறையுடையவள் என்று தெரிந்து அவளை ஏற்று மணக்க மெத்தப் படித்த மதன் முன் வருவதாயில்லை.
அவனுக்குத் தன் மனம் அதன் ஏமாற்றம் தன் துயரமே பெரியதாகி விட்டிருந்தது. அவன் உணர்ச்சிகளையே பிரதானமாக வைத்துக் கொண்டு ஒருவனால் சரிவர நிச்சயமாக யோசிக்க முடியாது என்றுகூட அவன் உணரத் தவறினான்.
அதே உணர்ச்சிகளும் ஏமாற்ற உணர்வும் ஏற்படக்கூடிய சதையும் உயிரும் மெல்லிய உணர்வுகளும் கொண்ட மாளவிகாவைப் பற்றி அவன் நினைக்கவேயில்லை.
ஒரு பெண்ணால் நிராகரிக்கப்பட்டால் கூட ஆண்மகனாகிய மதனுக்கு மாளவிகாவின் உள்ளம் புரியுமா? வெகுவாகவே சந்தேகம்.
சரி, கிடைத்ததைக் கொண்டு திருப்தியடையும் குணம் என்று சொல்வார்களே அதாவது சிறிதும் அவனுக்கு இருந்திருக்கலாம். இல்லையே. போகட்டும், சற்று குழம்பியிருக்கிறான் என்று புரிந்து நான் அவனுக்குப் புரிய வைக்க முயற்சித்த முயற்சிகளும் வீணாயினவே.
மதன் மாள்விகாவை ஏற்காதது அவன் துரதிர்ஷ்டமென்று அப்போது பாவம் அவனுக்கு, ஏன் யாருக்குமே தோன்றவில்லை. அவனுடைய துரதிர்ஷ்டம் மாளவிகாவிற்கு அதிர்ஷ்டமாக அமையுமென்று யாரும் கடுகளவு கூட் எதிர்பார்க்கவில்லை.
மதனின் ஆத்ம நண்பன். என்னைப் போலவே பலவிதங்களில் சொல்லிப் பார்த்தான்.
பார்க்கக் கண்ணியமாகத் தெரிந்தவன், மதன் அளவுக்கு அழகு என்று இல்லாதிருந்தாலும் மாநிறமாக லட்சணமாக இருந்தான்.
அவன் பெயர் நவீன் என்று அவர்கள் பேசியதில் தெரிந்தது. நவீன் எத்தனை சொல்லியும் மதன் தன் முடிவில் உறுதியாக இருந்தான். அதுமட்டுமில்லாமல், நண்பனையே ஆத்திரத்தில், ‘இவ்வளவு சொல்கிறாயே, உனக்கும் கல்யாண வயதுதானே, ஏன் நீயே அவளை மணக்கக் கூடாது. பேசுவதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கும். மற்றபடி நடைமுறையில் என்னைப் பொருத்தவரை இம்மாதிரியான தியாகங்கள் சாத்தியமே இல்லை. நல்ல வேளை, இப்பவே தெரிந்ததும் நல்லது. ஆளை விடுங்கள்!’ என்று விட்டேற்றியாக ஏசினான்.
இதைக் கேட்ட நவீனுக்கு மின்னல் போல ஒரு நல்ல தீர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். உடனே, மாளவிகாவின் பெற்றோரை தனியாக அழைத்துப் பேசினான்.
அவர்கள் முகங்கள் சந்திரனைக் கண்ட தாமரைகளாக மலர்ந்தன. மூவரும் மாளவிகாவிடமும் சென்று நிலைமையைத் தெரிவித்து விவரித்து சமாதானமாகப் பேசினர். நவீன் தன்னைக் காட்டி ஏதோ பேசியதும் துல்லியமாகத் தெரிந்தது. நவீன் தொலைபேசியில் வேறு யாரையோ தொடர்பு கொண்டு பேசினான்.
பிறகு, தன் தீர்மானமான முடிவைச் சொன்னான். மாளவிகாவைத் தானே திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்து விட்டதாயும், தன் பெற்றோரையும் வரச் சொல்லி விட்டதாயும் சொன்னான்.
மாளவிகாவை தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாயும் சொன்னான். இந்தச் செய்தி எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நவீனின் பெற்றோர் நிச்சயமாகவே முற்போக்கானவர்களாக இருந்ததால், தங்களின் மகனது அவசரமான கல்யாணத்தை ஏற்றனர். அது மட்டுமில்லாமல் மாளவிகாவின் குறையைப் பெரிதாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.
இவ்வாறாக, நவீன் மாளவிகா திருமணம் நன்றாகவே நடைபெற்றது.
இந்த விஞ்ஞான உலகத்தில் இளைஞர்கள் தங்கள் உடைகள வித்தியாசமாக உடுத்த எண்ணுகிறார்கள். இதே எண்ணம், படிப்பு, செய்கை, புறப்பாசத் திட்டம் என்று எல்லா துறைகளிலும் இளைஞர்களிடம் நாம் காண முடிந்தாலும் நவீன் தன்னை வித்தியாசமானவனாகக் காட்டிக் கொள்ள நினைத்து செய்தும் நிரூபித்திருக்கிறான்.
வெறும் வாயால் சிலர் அளப்பார்கள். தன் விஷயம் என்று வந்ததும் பின்னடைந்து விடுவார்கள். நவீன் மாளவிகாவின் குறைகளை நிறைகளாகவே ஏற்றுகொண்டுவிட்டான்.
நவீன் பாராட்டப்பட பேண்டியவன். ஏதோ கண நேரமுடிவில் திருமணம் செய்து கொண்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு கைப்பிடித்த பெண்ணை கண்கலங்க விட்டான், அவர்கள் குடித்தனம் செய்ததில் பல பிரச்சனைகள் முளைத்ததாக எண்ண வேண்டாம்.
இருவரும் மிகவும் அன்னியோன்யமாகவும் அன்பாகவும் திருப்திகரமாகவும் கருத்தொருமித்தும் நிறைவாகவே வாழ்க்கையை தொடருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன் அவர்கள் வீட்டுக்குச் சென்று அவர்களைப் பார்த்துவிட்டு வந்தேன். முன்பெப்போதும் அனுபவித்திராத ஒரு மன நிறைவை உணர்ந்தேன். நல்ல இல்லறம் கண்டு.
நல்லபடியாக அமைந்த மனைவியை வைத்துக் கொண்டு குடித்தனம் நடத்தும் யோக்கியமான இளைஞர்களே அரிதாக இருக்கும் இக்காலத்தில் இம்மென்றால் விவாகரத்து, உம்மென்றால் பிரிவு என்று திருமணத்தை இலேசாக எடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் மலிந்துவிட்ட இக்காலத்தில் நவீன் போன்ற இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அது மட்டுமில்லாமல் நல்ல உதாரணமாகவும் கொள்ள வேண்டியவர்களே.
– 1995, தமிழ் முரசு.
![]() |
சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கலையாத வேடம்
எஸ்.மதுரகவி
June 17, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 17, 2026
தந்தையாகிய தமையன்
இரா.கலைச்செல்வி
June 17, 2026
