தந்தையாகிய தமையன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 17, 2026
பார்வையிட்டோர்: 108 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

சென்னையின் அந்தப் பிரபல தகவல் தொழில்நுட்ப  நிறுவனத்தின்,  அந்த ஆண்டு பாராட்டு விழாவின்  போது மேடைக்கு அழைக்கப்பட்டாள் மீரா . அந்த  “ஆண்டின் சிறந்த இளம் சாதனையாளர்” விருதுக்கான சான்றிதழும், கேடயமும்  அவளுக்கு வழங்கப்பட்டது.  ​சுற்றிலும் சக ஊழியர்களின் கைதட்டல்களும், வாழ்த்துகளும் .

ஆனால், மீராவின் கண்கள் மட்டும் கூட்டத்தில்  அந்த ஒருவரைத் தான் தேடியது. அவளது பார்வையை உணர்ந்தாற்போல், கூட்டத்தின் கடைசியில் நின்றுகொண்டிருந்த ஆகாஷ் தன் கைகளை அசைத்து, பெருமிதத்தோடு அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

ஆகாஷ் – மீராவின் அண்ணன். அவனுக்கு முப்பது வயது. ஆனால், மீராவுக்கு அவன் வெறும் அண்ணன் மட்டுமல்ல. அவளது உலகம்,  எல்லாவற்றிற்கும் மேலாக அவளது “அப்பா”. தங்கைக்கு  அவன் நிழலாய் நின்ற நிஜம்.

அவர்களுக்குப் பத்து வருடங்களுக்கு முன்பு எல்லோரையும் போல அப்படியொரு  மகிழ்ச்சியான,   அழகான குடும்பம் இருந்தது. ஆனால், ஒரு விபத்து அவர்களின் பெற்றோரைப் பறித்துக்கொண்டபோது, மீராவுக்கு வயது பதினான்கு, ஆகாஷுக்கு இருபது. ​தனது பெற்றோரின் இறுதிச் சடங்கிற்கு வந்த உறவினர்கள் அனைவரும் ஆறுதல் சொல்லிவிட்டு அமைதியாக நகர்ந்துவிட்டனர்.   யாரும் எந்த உதவியும் செய்வதாய் தெரியவில்லை.  செய்வதறியாது திகைத்து நின்றனர் இருவரும். 

ஒரே நாளில் இப்படி ஒரு நிலை தன் குடும்பத்திற்கு வரும் என இருவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.  அதுவரை வீட்டில் எந்த வேலையும் பார்த்ததில்லை இருவரும்.  எப்படி சமைப்பது , யார் சமைப்பது என்று கூட புரியவில்லை. 

மீரா ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தாள். ஆகாஷ் கல்லூரி இறுதி ஆண்டு.   எப்படி நம்  கல்லூரி படிப்பை முடிக்க போகிறோம்  எனப்  புரியாமல்  விக்கித்து  நின்றவன்,   ஒரு முடிவோடு , அழுது அழுது சோர்ந்து போயிருந்த மீராவின் கைகளைப் பற்றிக்கொண்டான்.

“மீரா. …அம்மா-அப்பா இனி வரமாட்டாங்க.  இனி நான் தான் உனக்கு எல்லாம். கவலைப்படாதே. இது அண்ணனோட சத்தியம் இல்ல, உன் அப்பாவோட சத்தியம்.”

அன்று அவன் சொன்ன வார்த்தை படி, அடுத்த பத்து வருடங்கள் தன் தங்கையின் வாழ்க்கைக்காகவே  வாழ்ந்தான் . தன் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஒரு சிறிய மார்க்கெட்டிங் நிறுவனத்தில் சாதாரண வேலையில் சேர்ந்தான். தன் கனவுகள், ஆசைகள் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி ஓரமாக வைத்துவிட்டு,  வீட்டுப்  பொறுப்புக்கள் அத்தனையும் தன் தலையின் மேல் போட்டுக் கொண்டான்.

ஆகாஷ் ஒரு ‘வழக்கமான’ அண்ணனாக இருக்கவில்லை. மீரா வளர்ந்து வரும் நவீன உலகிற்கு ஏற்ப, அவளுக்கு முழு சுதந்திரத்தையும், அதே சமயம் ஒரு தந்தைக்குரிய பாதுகாப்பையும் கொடுத்தான்.

மீரா கல்லூரிப் படிப்பிற்காக  வெளியூர் செல்ல வேண்டும் என்றபோது, உறவினர்கள் எதிர்த்தனர். ஆனால் ஆகாஷ், “என் தங்கச்சி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று கூறி அவளை அனுப்பி வைத்தான்.

மீராவிற்கு ஆகாஷ் தோழனாகவும் ,தந்தையாகவும், அண்ணாவாகவும் எல்லாமுமாய் இருந்தான்.‌  மீரா சோர்வாக இருக்கும் தருணங்களில்  ஒரு தோழனாய் “வா, ஒரு ரைடு போயிட்டு வரலாம்” என்று பைக் பின்னால் அமரவைத்து, அவளது கவலைகளைக் காற்றோடு பறக்க விடுவான்.

தன் தங்கையின் படிப்பு, அவளது  வாழ்க்கை  மட்டுமே ஆகாஷின் ஒரே குறிக்கோளாக இருந்தது. தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளக் கூட அவன் நினைக்கவில்லை . “மீரா முதல்ல அவ கால்ல நிக்கட்டும், அப்புறம் பாத்துக்கலாம்” என்பதே அவனின் ஒரே பதிலாய் இருந்தது.

திடீரென்று கைதட்டல்  ஓய்ந்த நிலையில்,  மீரா சுய நினைவிற்கு வந்தாள்.  மேடையில் அவளைப் பேச அழைத்தார்கள்.

மைக் முன் நின்ற மீரா, கூட்டத்தில் இருந்த தன் அண்ணனை நேராகப் பார்த்தாள். அவளது கண்கள் லேசாகக் குளமாகின.

“எல்லாரும் இந்த விருதை என்னோட உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரமா பார்க்குறாங்க. ஆனா, அது உண்மை  அல்ல. இந்த வெற்றியோட பின்னால இருக்கிறது என்னோட அண்ணன்… இல்ல, என்னோட அப்பா!” என்றாள்.

​அரங்கமே அமைதியானது.

“எங்களோட பேரண்ட்ஸ்  எங்களை விட்டுப் போன போது,  நான் அனாதையா நிப்பனோன்னு பயந்தேன். ஆனா, என் அண்ணன் , எனக்கு அப்பாவா மாறி  எல்லா வகையிலும் ஆறுதலாய் இருந்தார்.  நான் அனாதை என, உணரவே விடவில்லை.  நான் படிக்கும்போது எனக்காகத் தூங்காம காபி போட்டுத் தந்திருக்கார். நான் சோர்ந்து போகும்போதெல்லாம் ‘உன்னால முடியும் மீரா’ன்னு சொல்லியிருக்கார். எனக்காக அவரோட இருபது வயசுலேயே,  தன் இளமையையும், ஆசைகளையும் தியாகம் பண்ணினவர். இன்னைக்கு நான் ஒரு கார்ப்பரேட் கம்பெனில மேனேஜரா இருக்கலாம். ஆனா, இப்போவும் இவரோட குட்டி தங்கச்சிதான். இந்த விருது எனக்கு இல்ல… என் தந்தையாகிய என் தமையனுக்கு!” என்று ​மேடையில் இருந்து இறங்கி நேராக ஆகாஷை நோக்கி ஓடி வந்தாள் மீரா.

அந்த சான்றிதழையும் கேடயத்தையும் ஆகாஷின் கைகளில் கொடுத்தாள்.

​பத்து வருடங்களாகத் தன் தங்கையின் முன்னால் அழுகையைக் காட்டாத அந்த இரும்பு மனிதனின் கண்களிலிருந்து, அன்று ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவளது தலையைக் கோதி, நெற்றியில் முத்தமிட்டான்.

எதைக் கொண்டும் விலைமதிப்பிட முடியாத அண்ணன்-தங்கையின் தூய்மையான பாசம், அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டது.  ஆம் அவன் தந்தையாகிய தமையன்.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *