மாதம் பிறந்தது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 30 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று, மாதத்தின் கடைசித் தினம் மறுநாள் பொழுது புலர்ந்தால் முதல் தேதி. நாராயணன் மணி பர்ஸைத் திறந்து, அதில் இருந்தவற்றை மீண்டும் ஒரு முறை எண்ணிக் கணக்குப் பார்த்தான். அப்போது மிகுந்திருந்தது பதினைந்து ரூபாய் பன்னிரண்டரை அணாக்களே. எத்தனை முறை எண்ணினாலும், எவ்வளவு கணக்குப் பண்ணினாலும், அந்த மாதத்தின் நிகர மீதி, பதினைந்து ரூபாய், பன்னிரண்டு அணா, ஆறு பைசாவேதான்.

அதுவும் எவ்விதம் மிச்சம் பிடித்தது? அந்த மாதத்தில் அவன் ஒரு சினிமாவுக்குக்கூடப் போகவே இல்லை. தேவைக்கு அதிகமாக அவன் காபி ஹோட்டலில் ஒரு கப் காபிகூட அதிகப்படியாகச் சாப்பிடவே இல்லை; அடிக்கடி வெற்றிலை மெல்லுவதையும் நிறுத்திவிட்டான். இந்த மாதிரி சில்லறை இனங்களின் மூலம் அந்தத் தொகை மிச்சமாயிற்று. 

அவசியமே இல்லாமல் அதுவரையில் ஒவ்வொரு மாதமும் பதினைந்து ரூபாய்களை விரயம் பண்ணி வந்தது அவனுக்கே அப்போதுதான் புலப்பட்டது. சிக்கனமாயிருந்து, தான் மிச்சம் பிடித்துவிட்ட சந்தோஷத்தை மனைவியுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. 

தன் அறையில் அமர்ந்தபடியே, “நாராயணி, நாராயணி!” என்று உரத்த குரலில் கூவினான். அவள் வந்தாள். 

“என்னுடைய சில்லறைச் செலவுகளை நிறுத்திக் கொண்டு, இந்த மாதம் பதினைந்து ரூபாய் மிச்சம் பிடித்து விட்டேன்” என்று நாராயணன் முக மலர்ச்சியோடு சொன்னான். 

“ரொம்ப சரி; என்னுடைய சில்லறைச் செலவு களையும் குறைத்துக்கொண்டு விடட்டுமா?” என்று புன்னகையோடு கேட்டாள் நாராயணி. 

“எதெல்லாம் உன்னுடைய சில்லறைச் செலவு?” 

“தினந்தோறும் ஓரணா இரண்டணாவுக்குப் பூ வாங்குகிறேன்; இன்னும் ஸ்னோ, பவுடர் முதலிய பொருள்கள்; இவை யெல்லாந்தான். இந்த இனத்தில் இன்னொரு பத்து ரூபாய் மிச்சம் கிடைக்குமென்றால் நல்லதுதானே?” என்று சிரித்தாள் நாராயணி. 

“அப்படி ஒன்றும் இப்போது அவசியம் இல்லை; உன் செலவுகளை நீ குறைத்துக் கொள்ள வேண்டாம்” என்றான் நாராயணன். 

“யோசித்து யோசித்துத்தான் மிச்சம் காண முயலுகிறோம். பாங்குக் கணக்கில் அதிகத் தொகை ஏறவே இல்லையே!” என்றாள் அவள்.

“வாஸ்தவந்தான்; பாங்கில் பணம் கட்டி, மூன்று மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது. நாளைக்குச் சம்பளம் வந்ததும் முதல் காரியமாக ஐம்பது ரூபாயாவது பாங்குக் கணக்கில் ஏற்றியே விடுவதென்று தீர்மானித்துவிட்டேன்.”

“இப்போதுள்ள தொகை எவ்வளவு?”

“முந்நூற்று நாற்பத்தைந்து ரூபாய்தான்” என்று அலுத்துக்கொண்டான் நாராயணன். 

அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஐந்நூறு ரூபாய்க்கு எட்டி யிருந்ததே! எப்போது எப்படிச் செலவாயிற்று?” என்று கேட்டாள். 

“இந்த மூன்று மாதங்களாகப் பணம் கட்டுவதற்குப் பதிலாக, எடுத்தே செலவு செய்தால் எப்படிக் கூடுமாம்?” என்றான் அவன். 

“என்ன செலவு அப்படி?” 

“உயிர் வாழ்வதற்கு வேண்டிய அவசியப் பொருள்களின் விலை யெல்லாம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகின்றன; ஆனால் நான் வாங்கும் சம்பளப் பணமோ இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறைதானே ஐந்து ரூபாயாக உயருகிறது? செலவழிக்காமல் சாகவா சொல்லுகிறாய்!” என்று சிரித்தான் நாராயணன். 

“இந்த மாதிரி செலவானால் நீங்கள் எப்படித்தான் கடனை அடைக்கப்போகிறீர்களோ என்று எனக்கும் கவலையாகத்தான் இருக்கிறது” என்றாள் நாராயணி. 

“எங்கேயாவது, எப்படியாவது, புதையல் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்” என்று சொல்லி, அவன் சிரித்தான். 

“புதையல் கிடைக்கும் அதிருஷ்டம் நமக்கு இருந் தால், பாங்கில் போட்ட பணம் குறைவானேன்?” என்று எதிர் வெட்டுப் போட்டாள் அவள். 

”ஆமாம்? கையில் ஒரு தம்பிடிக்குக்கூட வழியில்லாமல் இருக்கும்போது, எதிர்பாராமல் எதிர்ப்படும் தனத்தைத்தானே புதையல் என்றும் அதிருஷ்டம் என்றும் குறிப்பிடுகிறோம்? வேண்டாத போது கிடைக்கும் பணம் புதையலாகுமா?” 

“கையில் இருப்பதெல்லாம் கரைந்துவிட்ட பிறகு, நமக்கும் கட்டாயம் அதிருஷ்டம் அடிக்கும் என்று சொல்லுகிறீர்களாக்கும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் நாராயணி. 

“செலவைப்பற்றி மலைக்காமல் இருக்கவேண்டு மென்றால் அப்படித்தானே நினைத்துக்கொண்டு, ஆறுதல் அடைய வேண்டும்?” 

“அப்படியென்றால், சேர்த்து வைப்பதைப்பற்றி இவ்வளவு தீவிரமாக யோசித்து, மண்டையை உடைத்துக் கொள்வானேன்?” 

“ஏதோ புதையல் கிடைக்கும் வரையில் சும்மா இருக்காமல், சொந்த முயற்சியிலும் முண்டியடித்துப் பார்க்கலாமே என்கிற ஆவல்தான்” என்றான் நாரா யணன். 

பட்டும் படாமலும் அவர்கள் இந்தமாதிரி ஆராய்ச்சியிலே ஈடுபட்டிருந்தபோது, நாராயணனுடைய அத்தியந்த நண்பன், வெகு அவசரமாக அவனிடம் வந்தான். 

“என்ன இப்படித் தலை போகிற அவசரம் உனக்கு? எங்கே, நிலைப்படியில் இடித்துக்கொண்டு நிற்கப் போகிறாயோ என்று நானே பயந்துவிட்டேன்” என்று வந்தவனை நாராயணன் வரவேற்றான். 

“மிகவும் அவசர காரியந்தான் நாணு; என் மாமியார் இறந்து விட்டாளாம்; இப்போது தான் தந்தி வந்தது; இன்று இரவு மெயிலிலேயே என் மனைவியை அனுப்பியாக வேண்டும். மாதக் கடைசி ஆகிவிட்டதல்லவா? என் கையில் ஒரு பைசாக்கூடப் பணம் இல்லை. அதனால்தான் உன்னிடம் வந்தேன்; ஒரு பதினைந்து ரூபாய் கொடு; அடுத்த மாசம் சம்பளம் வாங்கியவுடன் திருப்பித் தந்து விடுகிறேன்” என்றான் அவசரமாக வந்த நண்பன். 

நாராயணன், வாயே திறவாமல் பதினைந்து ரூபாயை- எடுத்துக் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான். 

“சிக்கனமாக இருந்து சேர்த்த உங்கள் பணம் ஒரே நொடியில் கரைந்துவிட்டதே! ஐயோ பாவம்!” என்று சொல்லிப் பரிவுடன் நாராயணி சிரித்தாள். 

“என்ன செய்வது நாராயணி? நீயே சொல்: இந்தச் சமயத்தில் அவனுக்கு உதவாமல் அந்தப் பணம் நம்மிடம் இருப்பதில் என்ன பயன்? தவிர, நான் பாங்குக் கணக்கு வைத்திருக்கிறேன் என்பதும் அவனுக்குத் தெரியும். வந்து கேட்கும்போது இல்லை என்று சொல்வதுதான் அழகா?” என்றான் நாராயணன். 

“அது சரி; நாளைக்குப் பாங்கில் ஐம்பது ரூபாய் கட்டி விடுவீர்களா?” 

“இப்போது அது முடியாது; அதில்தான் பதினைந்து ரூபாய் நழுவிவிட்டதே. ஏதோ. நாளைக்குப் பொழுது புலரட்டும்; அப்புறம் அதைப்பற்றி யோசித்துக் கொள்வோம்” என்றான் நாராயணன். 

ஒவ்வொரு மாதத்துடனும் அவன் பெரிதாகப் போராடினான் என்று சொல்வதிலே மிகை ஒன்றும் இல்லை. அவனுக்கு நினைவு தெரிந்தது முதலே, பிறந்த ஒவ்வொரு மாதத்துடனும் போராட்டந்தான் அவன் கண்டது. மாதமே பிறந்து பிறந்து போராடுகிறதா அல்லது பிறந்த ஒவ்வொரு மாதத்துடனுமே போராட்டமா என்பதே புரியாதபடி அது நிகழ்ந்துகொண்டே இருந்தது. அவனுடைய தகப்பனார் காலத்திலிருந்தே அது துவங்கிவிட்டது. அவன் தகப்பனார், பள்ளிக்கூட வாத்தியாராக வேலை பார்த்தார்; அதற்காக அவர் பெற்ற சம்பளமும் குறைவுதான். ஆனால் வாழ்க்கைக்கு வேண்டிய சாமான்கள் அனைத்துமே அவர் காலத்தில் கொள்ளை மலிவாக விற்றன; வேண்டியவை யெல்லாம் ஏராளமாகக் கிடைக்கவும் கிடைத்தன. அப்படிப்பட்ட காலத்திலேயே குடித்தனம் நடத்த அவர் மிகவும் கஷ்டப்பட்டார். அவனைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டுவர வேண்டு மென்று அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சம் அல்ல. எப்போதும், எதுவுமே போதாத கொடுமைதான். வருவாய் போதவில்லை; ஆகவே குடித்தனச் சாமான்கள் போதவில்லை; அவனுடைய பள்ளிப் படிப்பிற்குத் தேவையான புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கப் பணம் இல்லை; நல்ல சட்டைத் துணி இல்லை; அவனுக்கு அப்புறம் பிறந்த தங் கைக்குப் பாவாடை இல்லை; நகை நட்டுக்கள் இல்லை. நல்ல நாள் இல்லை; கிழமை இல்லை. எப்போதுமே கஷ்டக் குடித்தனந்தான். ‘இது வேண்டும் அது வேண்டும்’ என்ற ஆசை இல்லை. தத்தளிப்புத்தான். விற்கக்கூடியது அனைத்தையும் விற்று விற்றே அவ்வப்போது அவசரத் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய தாயிற்று, பரம்பரைச் சொத்தாக வந்துகொண்டிருந்த மூன்று காணி நிலத்தில், இரண்டு காணிகளை அவன் தகப்பனார் காலத்திலேயே விற்றுத் தின்று தீர்த்தாகி விட்டது. மீதி இருந்தது காணி நிலந்தான். 

நாராயணன் கற்றுத் தேர்ந்து, ஆளாகி நின்றதும் அவன் தகப்பனார் மரணாவஸ்தையில் இருந்தார். அப்போது அவர் அவனை அருகில் அழைத்து, “அப்பா, உலகம் தெரிந்த பிள்ளையாகிவிட்டாய்; இனிமேல் நான் உனக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை ; பொறுப்புடன் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வாய் என்று நம்புகிறேன்; மிஞ்சியிருப்பது ஒரே காணி நிலந்தான். உன் பங்கிற்கு, நீயும் அதை விற்றுவிடாமல் நம்முடைய பூர்விகச் சொத்தாக வைத்துக்கொண்டே வாழ வேண்டுமென்பது என் ஆசை. உன் தங்கைக்குக் கல்யாணம் செய்துவைக்கும் பொறுப்பையும் நீதான் ஏற்றுத் தீரவேண்டி இருக்கிறது; என்னதான் வந்தாலும் மிஞ்சியிருக்கும் ஒரு காணி நிலத்தையும் விற்றுத் தீர்த்துவிடாதே. பரம்பரையாக வந்ததில் அந்த ஒன்றையாவது வைத்துக்கொண்டு காப்பாற்று” என்று, ஆதங்கத்துடன் சொல்லிவிட்டு அவர், பிராணனை விட்டுவிட்டார். 

வாழவேண்டி, அவர், பிரதிமாதமும் நடத்திய போராட்டம் நாராயணன் அறிந்ததே. அதில் வெற்றி அவருக்குக் கிடைத்ததா, இல்லையா என்பதை நிர்ணயிக் கும் சக்தி அவனுக்கு இல்லை. அவருடைய வெற்றி தோல்வியைப் பற்றி அவன் கவலைப்படவும் இல்லை. 

அதேமாதிரியான போராட்டத்திலேதான் அவனும் அப்போது ஈடுபட்டிருந்தான்; ஆனால் தகப்பனைப்போல் இன்றி, முற்றும் வேறுபட்ட வகையில் அவன் போராடிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு மாதமும் போராடினான்; வாழ்க் கையோடு போராடினான். அகவிலைகள் யாவும் ‘எவரெஸ்ட்’ சிகரத்தை அளாவி, உயர்ந்து நிற்கையில் அவன் போராடினான்; கள்ளச் சந்தையில் அகப்பட்டுக்கொண்டு, மீள வழியின்றி அவன் தவித்தான்; ‘இல்லை, இல்லை, என்ற பேச்சினூடே அவன் புகுந்து புகுந்து புறப்பட்டான். 

இவ்வளவிலும் ஒரே ஒரு லட்சியத்தைப்பற்றி நிற்க முன் வந்து, அவன் தடுமாறித் தத்தளித்தான். பரம்பரைச் சொத்தாக வந்து, மிஞ்சி நின்ற ஒரே காணி நிலத்தைக் கடனில் கரைத்துவிடாமல் கைப்பற்றி நிற்க அவன் பெருமுயற்சியுடன் போராடினான். 

அவனே முன் நின்று முயன்று, தன் தங்கையைக் கல்யாணம் செய்து கொடுத்ததில் கடன் படாமல் இருக்க அவனால் முடியவில்லை. குடும்பப் பொறுப்பேற்றதும் தகுந்த இடத்தில் தங்கையைக் கொடுத்ததில் அவன் அளவற்ற பெருமையும் பூரிப்பும் அடைந்தான்; என்றாலும் அந்த ஒரே காணி நிலத்தை அடகு வைக்காமல் அந்தக் கல்யாணத்தைச் சிறப்பாக நிறைவேற்றி வைக்க அவனால் முடியவே இல்லை. வாங்கிய கடனைத் திரும்பக் கொடுத்து, நிலத்தை மீட்டுக்கொள்ளும் பெரு முயற்சியிலேதான், யிரதி மாதமும் நாராயணன், வாழ்க்கையின் மற்றப் பிரச்னைகளோடு எதிர்த்து நிற்கவேண்டியிருந்தது. 

“மாதம் பிறந்தது; போட்ட திட்டங்களெல்லாம் தவிடு பொடியாயின ; சேர்த்த பணம் கரைந்தது; மற்றச் செலவுகள் இன்னும் அதிகரித்தன; வருவாய் போத வில்லை. 

மாதம் பிறந்ததும் அவன், நூற்றைம்பது ரூபாய்கள் சம்பளமென்று வாங்கினான். வீட்டு வாடகை, விறகு, மற்றும் வயிறு வளர்ப்பதற்கு வேண்டிய சாமான்கள், துணிமணிகள், காபிக் கொட்டை, சர்க்கரை, சினிமா, ஹோட்டல் என்று செலவுகள் யாவும் போக மீதமென்று கண்டுபிடிப்பதே பகீரதப் பிரயத்தனமாக இருந்தது. இருந்தும் ஒவ்வொரு மாசமும் இருபத்தைந்து ரூபாய்களுக் குக் குறையாமல், முடிந்தால் ஐம்பது மட்டும், மிச்சம் பிடிக்க அவன் பெரிதும் போராடினான். 

“இன்று முதல்தேதி ஆயிற்றே; பாங்கில் எவ்வளவு கட்டிவிட்டு வந்தீர்கள்?” என்று நாராயணி ஆவலுடன் வினவினாள். 

“முந்நூற்று நாற்பத்தைந்தாகக் கணக்கில் இருந் ததை மறுபடியும் ஐந்நூற்றுக்கு உயர்த்திவிட்டேன் நாராயணி!” என்று பெருமை பிடிபடாமல் பேசினான் நாராயணன். 

நாராயணி, நம்ப முடியாமல் திகைத்தாள்: “நிஜ மாகவா! நேற்றுத்தான் புதையல் கிடைக்குமென்று பய முறுத்தினீர்கள்! இன்றே அந்தப் புதையல் எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டுச் சிரித்தாள். 

“புதையல் கிடைக்கும்போது கிடைக்கட்டும்; அதை யும் வேண்டாமென்று மறுக்க மாட்டேன்; இன்று நூற்றைம்பது ரூபாய் பாங்கில் கட்டியிருப்பதும் உண்மை தான்” என்றான் நாராயணன். 

“வாங்கிய சம்பளத்தை அப்படியே கட்டிவிட்டால் மற்றச் செலவுகளுக்கு என்ன செய்வதாம்?” 

“என் கைக்கடிகாரத்தை நூறு ரூபாய்க்கு விற்று விட்டேன்; அதைக் கொண்டு, இந்த மாதத்தை ஓட்டிவிட முடியுமென்று நம்பிக்கை” என்றான் நாராயணன். 

நாராயணி, சொல்ல முடியாத பரிவுடன் அவனை நோக்கினாள்; அவள் கண்கள் கலங்கிநின்றன; “வேண்டுமென்று, ஆசைப்பட்டு, நீங்கள் உங்களுக்கு வாங்கிக் கொண்ட பொருள்களை யெல்லாம் ஒவ்வொன்றாக இப்படி விற்றுக்கொண்டே வருவது எனக்கு வருத்தமாக இருக் கிறது. அப்போது பௌண்டன் பேனாவை விற்றுவிட் டீர்கள்; இப்போது கைக்கடிகாரமும் போய்விட்டது. என்னிடம் மட்டும் இரண்டு வடச் சங்கிலியையும் கைவளை களையும் விட்டு வைப்பானேன்? உங்கள் கஷ்டத்தைவிட என் நகை எனக்குப் பெரிதென்று நான் நினைப்பேனா!” என்று அவள் விம்மினாள். 

நாராயணன் சிரித்தான்: “தங்கம்போன்ற உன் மனசு எனக்குத் தெரியாதென்று நீ நினைத்தாயா, நாராயணி? நாளைக்கு உனக்குப் பெண் குழந்தை பிறந்தால், அதற்குப் போட்டு, அலங்கரித்து அழகு பார்க்கவாவது உன் நகைகள் உன்னிடமே இருக்கட்டுமே. ஆணுக்குப் பௌண்டன் பேனாவும் கைக்கடிகாரமும் அழகைக் கொடுப்பதில்லை; வெறும் ஆடம்பரந்தான். ஆனால் பெண்ணுக்கு நகைகள் அதிக அழகு செய்கின்றனவே! மேலும் மெருகு கொடுக் கின்றனவே! அதை மறந்துவிட முடியுமா?” என்றான். 

நாராயணி தலை குனிந்தபடி கண்ணீர் விட்டாள்; அப்போது அவள் ஐந்தாறு மாசம் கர்ப்பமாக இருந்தாள். “எனக்கும் பெண் குழந்தையே பிறக்க வேண்டுமென்று நீங்கள் ஆசீர்வாதம் செய்கிறீர்களா? ஏற்கனவே ஒரு தங்கையைப் படைத்துவிட்டு நீங்கள் கடன் வாங்கிக் கஷ்டப்படுவது போதாதா?” என்று கேட்டாள். 

நறுக்கென்று கிள்ளியதுபோல அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. “என் தங்கையால் எனக்குத் தாங்க முடி யாத கஷ்டமென்று, உன்னிடம் நான் எப்போது முறை யிட்டுக்கொண்டேன்? அவளுக்காக நான் பட்ட கடனை, நீ உன் நகைகளை விற்று அடைக்க முன்வர வேண்டாம். முடிந்தால் என் சம்பாத்தியத்திலேயே அடைத்துக்கொள் ளுவேன்; முடியாவிட்டால் அந்த நிலத்தையே விற்றுத் தொலைத்துவிடுகிறேன். அவ்வளவு தூரத்துக்கு உன் பரிவு எனக்கு அவசியமில்லை” என்று அவன் நிமிஷ நேரத் தில் அவளை வெடுக்கென்று தூக்கி யெறிந்து பேசி விட்டான். 

இவ்வளவு ஆத்திரப்படும்படி அப்படி என்ன சொல்லி விட்டேன்?” என்று கேட்டு, நாராயணி விக்கி விக்கி அழுதாள். 

பதிலே பேசாமல் அவன் வெளியில் போய்விட்டான். அவர்களிடையே அந்த அற்ப மனத்தாங்கல் பிறந்த இரண்டு மூன்று நாட்களுக்கெல்லாம் நாராயணிக்குக் கர்ப்பச் சிதைவு ஏற்பட்டுவிட்டது. எந்த விஷயத்தைப் பற்றி அவள் என்ன நினைத்துக்கொண்டு மனத்தைப் பிழிந் தெடுத்து வாட்டிக்கொண்டாளோ தெரியாது. உண்டான கர்ப்பச் சிதைவு அற்ப சொற்பமாகப் போய்விடாமல் பிரமாதமாக வளர்ந்துவிட்டது. 

அவள் உயிரைக் காப்பாற்ற, நாராயணன் சேர்த்து வைத்திருந்த பணத்தை யெல்லாம் தண்ணீராக வாரி இறைத்துவிட்டான். வந்து வந்து போன மாதங்களெல் லாம் அவனுடைய பாங்குக் கணக்கை அடியோடு கரைத்து, வடிக்கும் வரையில் திருப்தி அடையவில்லை. 

“உங்களுக்குச் சத்துருவாக நானே வந்து முளைத்து விட்டேனே!” என்று, உடம்பு தேறியதும், நாராயணி மிகவும் வருந்தினாள். 

“உன்னைவிடப் பணம் பெரிதென்று நினைக்கும் அற்ப னாக என்னை எண்ணிவிட்டாயா நாராயணி? இந்தமட்டும் நீ பிழைத் தெழுந்தாயே; அதுதான் எனக்குத் திருப்தி; உன் மனநிலை தெரியாமல் நான்தான் உன்னிடம் மிருகத் தனமாக நடந்துகொண்டேன். என்னை மன்னிப்பாயா நாராயணி?” என்று அவள் மன்னிப்பை அவன் வேண்டினான். 

“பாங்குக் கணக்கில் பணம் எவ்வளவு பாக்கி?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் நாராயணி. 

“அதென்ன பிரமாதம்? இன்னும் சில மாதங்களில் மீண்டும் சேர்த்துவிட்டால் போகிறது!” என்று நாராயண னும் சிரித்தபடியே பதிலளித்தான். 

“புதையல்-?” என்று கேட்டு நிறுத்தினாள் நாராயணி.

“தன்னாலே கிடைக்கும்; பார்த்துக்கொண்டே இரு.” 

அடுத்த மாதம் பிறந்தது; வளர்ந்தது; போயிற்று அதற்கடுத்த மாதம் வந்தது; மறைந்தது. அதை அடுத்த மாதத்தோடு நாராயணனின் தங்கையிடமிருந்து தந்தி ஒன்று பறந்து வந்தது; அந்தத் தந்தி சொல்லியது: ‘கண வர் திடீரென்று மாரடைப்பால் இறந்துவிட்டார். உடனே புறப்பட்டு வருக.-கௌரி.’ 

நாராயணனுக்கு மூச்சு முட்டியது; விழி பிதுங்கியது; எதைப்பற்றியும் யோசித்துக்கொண்டு நிற்க அவனுக்கு நேரம் இல்லை. எண்ணிப்பார்க்க அவகாசம் இல்லை. மனத் தில் அமைதி இல்லை. உடம்பில் தெம்பு இல்லை. 

பிறந்து பிறந்து மோதிய மாதங்களின் வேகத்திலே அவற்றின் அதீத சக்தியிலே, அவன் தன்னை அறியாமலே அடித்துச் செல்லப்பட்டான்; மாதங்களின் சுழற்சியுடனே அவனும் உருண்டுகொண்டே போனான். 

அவன் தங்கை கௌரியும் வீட்டோடு வந்துவிட் டாள். அவள் வந்து சேர்ந்த சில நாட்களுக்கெல்லாம் அவளைத் தேடிக்கொண்டு மூவாயிரம் ரூபாய்களும் வந்து சேர்ந்தன. அதாவது இறந்துபோய்விட்ட அவள் கணவன் செய்து வைத்திருந்த இன்ஷ்யூரன்ஸ் தொகை அது! 

“இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் அண்ணா? உன்னிடமே இருக்கட்டும்” என்று சொல்லி, நாராயணனின் தங்கை அந்தத் தொகையை அவனிடமே கொடுக்க முனவந்தாள். 

“இதை வைத்துக்கொண்டு இனி நான்தான் என்ன செய்யக்கிடக்கிறது கௌரி? விருப்பம் இருந்தால் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடு; ஈடு வைத்துள்ள நிலத்தைத் திருப்பி, அதையும் உன் பெயருக்கே எழுதி வைத்துவிடுகி றேன்; பாக்கிப் பணத்தை உன் பெயரில் பாங்கியில் கட்டி விடுகிறேன்” என்றான் நாராயணன். 

அவன் தலையின்மீது தீராத கடன் சுமையாக ஏறி நின்ற பணம் அவன் தங்கைக்குக் கல்யாணம் செய் வித்தது; அப்புறம் புருஷனை இழந்து நின்ற அவளுக்கு அந்தப் பணமே துணையாக நின்றதுடன், நாராயணனின் கடன்சுமையையும் இறக்கிவிட வழி கோலிவிட்டது. இப் படித்தானே வியாக்கியானம் செய்ய வேண்டும்? 

மாதம் பிறக்கிறதா அல்லது பணம் பிறக்கிறதா? இரண்டுமே பிறந்து, மனிதனைச் சாகவோ அல்லது வாழவோ வைக்கின்றன. மனிதனோ தானும் பிறக்கிறான்; மற்றவற்றையும் பிறக்கச் செய்கிறான்; கடைசியில் எல்லா வற்றையும் அழித்துவிட்டுத் தானும் அழிகிறான். 

நாராயணனுக்காகப் பிறந்த மாதத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட மாதம் அவனுக்கு அளவிட முடியாத நன்மையையோ சொல்லில் அடங்காத தீமையையோ செய்தது என் பதைப்பற்றித் திட்டமாக அவனாலேயே அபிப்பிராயம் சொல்ல முடியாது. 

முன்சென்ற மாதம் மறைய, அடுத்த மாதம் வழக்கம் போலே, உடனே, பிறந்துகொண்டேதான் வந்தது.

– இரட்டைக் கதைகள் (வெள்ளிவிழா வெளியீடு), முதற்பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *