சாவின் ஒத்திகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2026
பார்வையிட்டோர்: 59 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2025ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆச்சப்பான்னா குமாருக்கு அவ்வளவு பிரியம். அம்மாவ பெத்தவங்க ஆச்சி. அந்த தாத்தாதான் ஆச்சப்பா. என்ன அழகான பெயர்காரணம் பாருங்க. 

அன்னைக்கி குமாரு வாடியான் தெரு முக்குல சைக்கிள் கடையில் டயருக்குக் காத்தடிச்சிட்டு வேகமா கிளம்பினான். அவனுக்கு வீட்டுக்குப் போவதற்கு முந்தி ஆச்சிவீட்டுல இறங்கி ஆச்சி கொடுக்கிற பலகாரத்த தின்னுட்டுப்போறதுல ஒரு குஷி. 

அன்னிக்கி ஆச்சி அவனுக்கு சூடா கொழுகட்ட கொடுத்தாங்க. அத வாங்கித் தின்னுட்டுக் கிளம்பப்போன அவன ஆச்சப்பா கூப்பிட்டு, “குமாரு, இந்தாடா காலணா போயி கேட்டுக்கடை பொன்னுசாமி கிட்ட வெத்தலபாக்கு வாங்கிட்டுவா. அதோட சேத்து கொட்டபாக்கு வச்சி சுண்ணாம்பு தடவிக் கொடுப்பான் பொன்னுசாமி. மறந்துறாத. ரயிலு வந்தா கேட்டு பூட்டிக்கிடக்கும். நின்னு போ.” இப்படி அதட்டிச் சொல்லி அனுப்பி வச்சாரு. 

குமாருக்கு பொன்னுசாமியண்ணே கடைக்குப் போறதுனா ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவரு எதுவாங்கப் போனாலும் ஒருபைசா கமர்கட்டு மிட்டாய் ஒண்ணு கொடுத்திருவாரு. தூக்கி கட்டின வெள்ள வேஷ்டி, முண்டா பனியன். இதுதான் அவரோட அடையாளம். ஒரு நாள்கூட குமாரு அவர அந்தக் கடைய தவிர வேற எங்கேயும் பாத்ததில்ல. திராசுதான் அவரோட ஆயுதம். நாக்குல விரலால எச்ச தொட்டு, சதுரமா கிழிச்சி வச்சிருக்குற பழைய நியூஸ் பேப்பர எடுத்து சக்கரை, பொரிகடல இப்படி எதுவானாலும் பொட்டலம் போட்டுக் கொடுத்து சில்லரைய வாங்கிப் போடுவாரு . வேகவேகமா இப்படி விளையாடுற அவரோட கையசைவ குமாரு பாத்துக்கிட்டே இருப்பான். வீட்ல போயி தானும் அது போல பேப்பர கிழிச்சிச் பொட்டலம் போடுப்பாப்பான். ஆனா பொட்டணம் நிக்காது. கிழிஞ் சிதான் போகும். 

இதனாலயே இவருக்குப் பொட்டலம் பொன்னுசாமினு ஒரு பேரும் உண்டு. 

அன்னிக்கும் அப்படித்தான் குமாரு வெத்தலைய வாங்கிட்டு அவர் கொடுத்த மிட்டாய வாயில்போட்டு வேகமாகத் திரும்ப ஆச்சிவீட்டுக்கு வந்தான். 

“இந்தாங்க ஆச்சப்பா”னு வெத்தலையையும் கொட்டப் பாக்கையும் கொடுத்துட்டுக் கிளம்பப்போனான். 

ஆச்சப்பா விடல “இந்தாடா, வாயில என்ன வச்சிருக்க? முதல அத துப்பு” இப்படி சொல்லிட்டு, ரெண்டு வெத்தலய கையில எடுத்து காம்பக் கிள்ளி எடுத்தாரு. பிறகு அதுல இருந்த ஈரத்த உதறிட்டு, உள்ளங்கை முதுகால துடச்சிட்டு பாக்குக்கு, துணையா சுண்ணம்பையும் அதுல வச்சி மடிச்சாரு. பிறகு பித்தளை இடியுரல்ல இரண்டு இடி இடிச்சாரு. ஆச்சப்பா கையில வெத்தல படுற பாட பாத்தா அது செடியிலேயே இருந்திருக்கலாமுனு தோணும். 

இடிச்சத கொஞ்சம் எடுத்து வாயில போட்டு மென்னு அந்த எச்சி வெத்தலைய அவன் வாயில திணிச்சாரு. இப்படி ஆச்சப்பா கொடுக்கிற எச்சி வெத்தலையில ஒரு ருசியும் வாசமும் இருக்கும். எச்சாயிருந்தாலும் அது அவனுக்கு வேணும்னு தோணும். 

போயிட்டு வர்ரேனு ஆச்சிட்டையும் சொல்லிட்டு குமாரு வேகமாக சர்ருனு தன் வாகனத்தை எடுத்துட்டுக் கிளம்பிட்டான். 

வீட்ல வந்து அம்மாகிட்ட இத சொன்னப்ப அம்மா மரகதம் பூரிச்சிப்போயிட்டா. 

“தம்பி ரொம்ப சமத்து. ஆச்சப்பாவுக்கு வெத்தல வாங்கிக் கொடுத்துட்டு வந்திருக்கான்.” அப்படினு வேலைக்காரி சவுரிமாட்டா சொல்லி சந்தோஷப்பட்டா. 

இப்படித்தான் குமாரு சுத்தி சுத்தி யாராவது எதாவது கேட்டா செஞ்சி கொடுத்துட்டேயிருப்பான். சின்ன வயசுலேயே மத்தவங்களுக்கு ஏதாவது செய்யணுங்கிற மனசு அவனுக்குள்ள உற்சாகத்தைக் கொடுத்திருக்கு. அதுல ஒரு சந்தோஷம் இருக்குனு அவனுக்கே தெரியலே. 

அதேமாதிரி யாராவது பெரியவங்க ஏதாவது சொன்னா காதுல போட்டுக்காத மாறி இருப்பான். ஆனா அத சரியா செய்வான். கால கழுவாம வீட்டுக்குள்ள வரக்கூடாதுனு அய்யா சொன்னதுக்கு மீறி அவன் நடந்தது இல்ல. ஸ்கூல் விட்டு வரும் போதும்சரி, தெருவுல விளையாடிட்டு வரும் போதும் சரி ஒரு நாளும் கால கழுவாம வீட்டுக்குள்ள வரமாட்டான். நல்ல விஷயத்த நல்ல விஷயமுனு தெரியாம கத்துக்கிட்ட வயசு அது. 

நம்ம வீட்டில வெள்ளி தட்டுல சாப்பிட்டாலும் ஆச்சி வீட்ல ஆச்சி எவர்சில்வர் தட்டல பிசைஞ்சி கொடுக்கற பால்சோறு பக்கோடாவ குமாரு குறசொல்லாம ருசிச்சி சாப்பிடப் பழகியிருக்கான். அவனுக்கு எப்பவுமே ஆச்சி ஓட்டு வீட்ல பூக்கல்லும், கொல்லம் கல்லும் பதிச்ச தரைல உக்காந்து சாப்பிடறது ரொம்பவுமே பிடிக்கும். 

ஒரு நாளு அம்மாகிட்ட கேட்டான். 

“அம்மா, நம்ப பங்களா வீட்டு மொசக் தரைய விட ஆச்சி வீட்டு பூக்கல்லு தரை நல்லாயிருக்கு. ஏம்மா அது அப்படியிருக்கு?” 

“அது அப்படித்தாண்டா, பூக்கல்லு மவுச சொன்னா உனக்குப் புரியாது” அப்படினு மரகதம் சொன்னாள். 

“ஆச்சி வீடு நம்ம வீட்ட விட எப்பவுமே ஜில்லுனு இருக்கு. அது ஏன்மா?” 

“அது ஓட்டு வீடுல குளிச்சியாத்தான் இருக்கும்.” இப்படி சொல்லிட்டு மரகதம் “ரொம்ப பெரியாளா ஆயிட்ட போதும் கேள்வி கேட்டது” னு சொல்லி முடிச்சாள். 

அந்த வயசுல குமாருக்கு எதப்பார்த்தாலும் அதுல ஒரு கேள்வி கேட்கத்தோணும். மொததடவ வேற்று உலகத்துக்குள்ள புலம் பேர்ந்து வந்த வெளிநாட்டுப் பறவைகள போல சிறுசுகளுக்கு இந்த உலகமே அதிசயமாத்தானபடும். 

இப்படி அதுல இருக்கிற வித்தியாசத்தையும், சுகத்தையும் தெரிஞ்சிக்க முடியுதுல. ஆனா வளர்ந்த பிறகு பெரியவங்க நாமதான் அத மறந்துபோறோம். இப்ப அத நினைச்சி பாத்தா அதுகுள்ள இருக்குற நிஜம் நமக்கு அதிசயமாத்தான் தெரியும்.

பல நாளு சாயங்காலம் அம்மா ஆச்சி வீட்ல இருந்து வீட்டுக்குத் திரும்புறப்ப, ஆச்சி கூடவே வருவாங்க. ஆச்சி கண்டாங்கி நூல் சேலதான் கட்டியிருந்தாங்க. ஆக்கிப் போட்டு ஆக்கிப் போட்டு காஞ்சி போன கையி. 

மொரமொரனு தொஞ்சி போன சாக்கு மாறி உள்ளங்கை உயிரில்லாம இருக்கும். எட்டுப் பிள்ளைகள பெத்து படுக்கக் கூட நேரமில்லாம உழைச்ச கட்ட அது. 

அப்ப அவங்க குமார மடில தூக்கிவச்சி நடந்து வருவாங்க. 

“போதும்டா, ஆச்சிக்கு குறுக்கு வலிக்கும். கீழ இறங்குடா. நீ வளந்துட்ட” இப்படி ஒவ்வொரு தடவயும் அம்மா சொன்னது இன்னிக்கிமாறி குமாரு காதுல கேட்குது. 

இது நடந்து எத்தனையோ வருசம் ஆயிருச்சி. ஆனா ஆச்சியோட முந்தான வாசம் இன்னும்கூட ஞாபகத்தில இருக்கு. அது ஏன்னு இன்னிக்கு வரைக்கும் வளந்த பிறகு கூட புரியல அவனுக்கு. 

இதவிட ஒரு சூப்பர் சம்பவம் நினவுக்கு வருது. பல நேரம் ஆச்சி இப்படி அவன் மடியிலே வச்சி தூக்கிட்டு வரும் போது, கேட்டு முக்குல செண்பகக்கா பலகாரவண்டிக் கடைல அந்த அக்கா பேப்பர்ல மடிச்சிக் கொடுக்குற பூந்திய ஆச்சி அஞ்சி பைசாவுக்கு வாங்கிக் கொடுப்பாங்க. அத நினைச்சி பாத்தா அதுல இருந்த டேஸ்ட் இப்ப ஸ்டார் ஹோட்டலகூட குமாருக்குக் கிடைக்கல. 

இன்னைக்குக் கூட குமாரு அம்மாட்ட இந்த சம்பவத்த சொல்லி மலரும் நினைவா அசை போடுவான். 

இப்படி பழச நினைச்சி அச போட்டு பாத்தா எல்லாரோட சின்ன வயசுல நடந்த விஷயங்க எல்லாத்திலயும் ஏதோ ஒரு சந்தோஷம் ஒளிஞ்சிருக்கிறது தெரியவரும். 

அன்னிக்கு ஸ்கூல் விட்டு வந்த குமாரு கால கழுவிட்டு வீட்டுக்குள்ள வந்தபோது அம்மா வீட்ல இல்ல. முணு தடவ கூப்பிட்டுப் பாத்த பிறகு கொல்லையில வேலைக்காரி சவுரியம்மாட்ட அம்மாவ எங்கேனு கேட்டான். அவ சொன்னா: “உனக்குப் தெரியாதா, அம்மா ஆச்சி வீட்டுக்குப் போயிட்டாங்க ஆச்சப்பாவுக்கு நெஞ்சுவலினு பக்கத்து வீட்டுப் பையன் வந்து சொன்னதும் அம்மா உடனே கிளம்பிட்டாங்க.” 

இத கேட்டதும் குமாருக்கு நெஞ்சி படபடன்னுச்சி. சொம்ப எடுத்து மண்பான தண்ணிய மடக்கு மடக்குனு குடிச்சிட்டு உடனே சைக்கிளை எடுத்துக் கிளம்பிட்டான். 

போன மாசம் நெஞ்சி வலினு லீவு போட்ட வாட்ச்மேன் தாத்தா செத்துப்போனது அவனுக்கு அப்பத்தான் நினவுக்கு வந்திச்சி. உடனே என்னென்னவோ அவன் பிஞ்சிமனசு பயங்கரமா கற்பன பண்ணிச்சி. 

ஆச்சி வீட்ல ஆசாரத்தில திண்ணய ஒட்டி நிறைய செருப்பா கிடந்திச்சி. வேகவேகமாக அதோடு அவனுதையும் கழட்டிப் போட்டுட்டு உள்ளே போனான். 

ஆச்சப்பா குமாரு வாடானு சொல்ற நிலையில இல்லை. நெஞ்ச பிடிச்சிட்டு வேர்த்துப் போய் மூச்சு திணறிக்கிட்டு கிடப்பா கட்டில்ல கிடந்தாரு. 

அம்மா மரகதம் ஓட்டுக் கூரைக்குள்ள சொருகி இருந்த ஓல விசிறிய எடுத்து வீசிக்கிட்டு இருந்தாள். 

அவரு மூச்சுவிடத் திணறிக்கிட்டு இருந்த காட்சிய பார்த்த குமாருக்கு அடிவயித்துக்குள்ள ஏதோ பண்ணிச்சி. எப்பவுமே நடு வீட்ல கம்பீரமா உக்காந்து அதிகாரம் பண்ண ஆச்சப்பா இப்படிக் கிடக்கிறத பாத்தா யாருக்குமே அய்யோனு தோணும். 

ஆச்சி ஒருபக்கம் அழுதுட்டு இருந்தாங்க. சுத்தியிருந்த அம்மா, அக்கா, சித்தி, மாமா, அத்தை எல்லோருமா அய்யா பயப்படாதீங்க ஒண்ணும் செய்யாதுனு சொல்லிட்டு இருக்கும்போதே ஆச்சி குண்டு சோடாவ உடைச்சி இந்தாங்க இதக்குடிங்க சரியாயிடுனு வாயில ஊத்துனாங்க. சோடா தண்ணி வாயில நிக்கல, அது வடிஞ்சி ஓடிருச்சி. 

பாலன் அண்ணாதான் பேரன்களில் எல்லாருக்கும் மூத்தவரு. அவருநான் போயி டாக்டர கூப்பிட்டு வரவானு கேட்டாரு. அப்படி கேட்டுக்கிட்டே யாரையும் எதிர்பார்க்காம கூட்டிட்டு வர ஓடிட்டாரு. 

ஆனா பாலன் அண்ணா போன பிறகு, கொஞ்ச நேரத்துல ஆச்சப்பா மூச்சு நின்னமாதிரி தெரிஞ்சிச்சி. எல்லாரும் ‘ஓ’னு கத்தி அழுக ஆரம்பிச்சாங்க. அவரு வாயிலிருந்து நுரையா வந்திச்சி. அவரு சுத்தமா பேச்சு மூச்சு இல்லாம ஆயிட்டாரு. 

அப்ப யாரோ அமிர்தாஞ்சன உள்ளங்கால்ல தேச்சி விட்டா சட்டுனு மூச்சு வந்துரும்னாங்க. அதகேட்ட நாகேஸ்வரிக்கா குமாருகிட்ட எட்டணா கொடுத்து போ செல்லம், சீக்கிரமா போயி முக்குகடையில அமிர்தாஞ் சன வாங்கிட்டு வானு சொன்னதுதான் தாமதம், உடனே குமாரு சிட்டா பறந்து போயிட்டான். 

எல்லாரும் அமிர்தாஞ்சன கையில எடுத்து ஆச்சப்பா ரெண்டு கால் பாதத்துல தேய்க்க ஆரம்பிச்சாங்க. ஒரு அக்கா சொன்னா பாரு, ஆச்சப்பா கால லேசா அசைக்கிறாரு. கண்டிப்பா எந்திருச்சிருவாரு. நல்லா தேயினு சொல்லிக்கிட்டே தேய்ச்சிக்கிட்டு இருந்தாங்க. 

மருந்து பெட்டிய தூக்கிக் கிட்டு வந்த பாலன் அண்ணா பின்னாலயே முத்துசாமி டாக்டர் வீட்டுக்குள்ள வந்தாரு. ஆச்சப்பாவுக்கு எது ஒண்ணுன்னாலும் அவர்தான். அவரு காய்ச்சலுக்கு கொடுக்கிற தண்ணி மருந்து அப்போ ஊருக்குள்ள ரொம்ப பேமஸ். குமாருக்கு அவரப் பார்த்தாலே அந்த தண்ணி மருந்துதான் ஞாபகத்துக்கு வரும். 

“எல்லாரும் விலகிக்கோங்க. இப்படி சுத்தி நின்னா அவருக்கு எப்படி காத்து வரும், விலகுங்க” இப்படி சொல்லிக்கிட்டே கோபமா ஆச்சப்பாகிட்ட வந்து அவரு கையபிடிச்சி நாடி பாத்தாரு. கழுத்துல போட்டிருந்த அந்த ஸ்டதஸ்கோப்ப நெஞ்சில வச்சி பாத்தாரு. 

ஒரு நிமிஷம் அவரு எதுவுமே பேசல. 

சுருட்டு குடிக்காதையானு பல தடவ இவருக்கு சொன்னேன். கேட்டாரா பாவி மனுஷனு சொல்லிக்கிட்டே கண் பட்டையத் திறந்து டார்ச் அடிச்சி பாத்தாரு. கொஞ்ச நிமிஷத்துக்கு யாரும் சத்தம் போடாம டாக்டர் என்ன சொல்லப் போறாருனு கம்முனு நின்னுக்கிட்டு இருந்தாங்க. 

‘எல்லாம் முடிஞ்சிருச்சி…. இனிம நான் என்ன செய்ய சொல்லுங்க.” இப்படி ஆச்சிகிட்ட டாக்டரு சொன்னதும் எல்லோருமா கூப்பாடு போட்டு அழுக ஆரம்பிச்சாங்க. 

குமாரோட பெரிய அத்தை டாக்டர்கிட்ட “அய்யா செத்த நல்லா பாருங்க” அப்படினு சொல்லிட்டு “அய்யோ சாயங்காலம் இருட்ட முந்தி நல்லாதான எல்லோரு கிட்டயும் பேசிக்கிட்டிருந்தாரு. இப்படியாகு முன்னு யாரும் நினைக்கலேயே”னு சொல்லி டாக்டர பாத்து பதட்டத்தோட அழுதுக்கிட்டே கையெடுத்து கும்பிட்டாங்க. 

டாக்டர் “அழுது என்னமா செய்ய? இனிம ஆகுற காரியத்தைப் பாருங்க. சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்புங்க”னு சொல்லிட்டுக் கிளம்பிட்டாரு. 

நெஞ்சிலயும் தலையிலயும் அடிச்சிக்கிட்டு வீடே அழுதுச்சு. குமாருக்கு அழுக ஒருபக்கமா வந்தாலும் எல்லோருமா கூப்பாடு போடுறத பாத்து ரொம்ப பயமா போச்சு. 

பலகா கட்டில உட்காந்து ஆச்சப்பாவையே வெறிச்சு பாத்துக்கிட்டு இருந்தான். அப்ப அவன பாத்து ஆச்சப்பா கண்ணத் திறந்து கூப்பிட்றமாறியே தெரிஞ்சுச்சி. யாராவது செத்துட்டா அதுக்குப் பிறகு அவங்க வரமாட்டாங்கன்னும், சுடுகாட்ல கொண்டு போய் எரிச்சிருவாங்கன்னும் கூட படிக்கிற பசங்க சொன்னது குமாரு மனசுல பதிஞ்சிருந்தது. 

வழக்கமா அவரு அவனுக்கு வெத்தல இடிச்சி கொடுக்கிற வெத்தல கும்பா அனாதையா மாடக்குழிக்குள்ள இருந்தத பாத்த குமாரு தேம்பித் தேம்பி அழுக ஆரம்பிச்சிட்டான். 

‘ஆச்சப்பா எந்திரிங்க ஆச்சப்பா எந்திரிங்க’னு சொல்லி அழுதுக்கிட்டே குமாரு ஆச்சி மடில போய் உக்காந்துட்டான். 

“குமாரு குமாருனு ஒரு நாளைக்கு பத்து தடவ கூப்பிடுவாரே இனிமே அப்படி யாருடா உன்ன கூப்பிடுவா!” இப்படி சொல்லி சொல்லி அழுத ஆச்சி, குமாரு கன்னத்தல வழிஞ்ச கண்ணீர முந்தானையால துடைச்சாங்க. 

“அலுங்காம குலுங்காம மனுசே நிமிசத்துல ஓடிட்டாரே.. மணிமணியா இருக்குற இந்த பேரப் பிள்ளகள உட்டுட்டு போக எப்படிதான் மனசு வந்ததோ இந்த ராசாவுக்கு” அடுத்தடுத்து ஆச்சி பக்கதுல வந்து உக்காந்த கிழவிங்க ஒவ்வொருத்தரும் ஆளாளுக்கு அதுக பங்குக்கு இப்படி ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சதுங்க. இதுங்கெல்லாம் நெசத்துக்கு அழுவுதுகளா அல்லது ஏதோ ஒப்புக்கு அழுவுதுகளானே தெரியல. 

கட்டில் காலுக்குப் பக்கத்தல கொஞ்ச நேரத்துக்கு முந்தி ஆச்சப்பா பாதில குடிச்சிட்டுப் போட்ட சுருட்டோட நெடி பட்டதும், குமாருக்கு முத்துசாமி டாக்டரு சுருட்டு குடிச்சதுனாலதான் ஆச்சப்பாவுக்கு இப்படி ஆயிருச்சினு சொன்னது ஞாபகத்துக்கு வந்திச்சி. 

‘அது ஏன்’ அப்படினு குமாரு மனசுக்குள்ள ஒரு கேள்வி ஓடுச்சி. தடிதடியா நாலு பேரு ஆச்சப்பாவ ஒரு நாக்காலில உக்கார வச்சி கொல்ல பக்கமா தூக்கிட்டுப் போனாங்க. நீ இங்கிட்டு வராத ஆச்சப்பாவ குளிப்பாட்டப் போறாங்கனு எட்டிப் பாத்த குமார அங்க நின்ன ஆயா கிழவி ஒருத்தி விரட்டினா. 

எல்லோருமா ஈமச்சடங்குக்கு வேண்டியத செய்ய ஆரம்பிச்சாங்க. தேர் கட்ற குடிமவனும் வந்து சங்கு ஊதிட்டான். 

குமாருக்கு ஆச்சப்பாவின் சாவு அவன் வாழ்க்கையில முதமுதல கண்முன்னால நடந்த ஒரு ஒத்திகை போல இருந்திச்சி. எத்தன வயசானாலும் பிஞ்சி மனசில பதிஞ்ச இந்தக் காட்சி குமாருக்கு நேத்து நடந்தது போல இருக்கு. 

தலைமுறை கடந்து விட்ட பிறகு பூர்வீகமே சிலருக்கு மிக தூரமாகி விடுகிறது. 

தன்னை வளர்தத ஆச்சி வீடும், பல நாட்கள் கிட்டி விளையாண்டு முட்டியில் காயம் பட்டுத் திரிந்த அந்தப் பால்ய பருவ வீதிகளும் குமாரின் மனதிற்குள் ஆழமாய் பதிந்துவிட்டவை. 

ஆனால் இன்று அந்தத் தெருவில் நடந்து சென்ற அவனுக்கு ஆச்சி வீடு இருந்த சுவடைத் தேட வேண்டிய தாயிருந்தது. தான் விளையாடித்திரிந்த அந்த வீட்டைத் தன் பிள்ளைகளுக்கு காண்பிக்கலாம் என்று நினைத்த அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

அந்த ஓட்டு வீட்டின் நிழலின் சுகமும், தரையில் பதித்திருந்த பூக்கல்லின் இதமும் இன்றைய தலைமுறைகளுக்குக் கிட்டாமலேயே போய்விட்டன. 

அன்று, பித்தளை இடியுரலில் இடித்து ஆச்சப்பா கொடுத்த வெற்றிலைக்குள் இருக்கும் நலம் தரும் குறிப்பை இப்போது Googleஇல் சென்று படித்த குமாருக்கு இதையெல்லாம் தெரிந்துதான் முன்னோர்கள் குழந்தைகளுக்கு வெற்றிலையை மென்று கொடுத்திருப்பார்களோ என்றுகூட சிந்திக்கத் தோன்றியது. 

பித்தளை இடியுரல் ரத்த அணுக்கள் அதிகரிக்கவும், வெற்றிலை நரம்ப மண்டலம் வலுவூட்டுவதால் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவியிருக்கிறது. 

குமார் விரும்பி சுவைத்த ‘கமர்கட்’ என்ற மிட்டாய் அன்றைய சந்ததியினருக்கு சத்தான இனிப்பாய் வாழ்வோடு இணைத்திருக்கிறது. அதில் வெல்லமும், துருவிய தேங்காயும் சேர்ந்ததால் வாசமும், சுவையும் அத்தோடு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகையைத் தடுக்கும் மருந்தாக விளங்கியிருக்கிறது. 

இதனால்தான் அன்றைய குழந்தைகள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியோடு வளர்ந்திருக்கிறார்கள். 

அதே நேரத்தில் சுருட்டு குடிக்கும் ஆச்சப்பாவிற்கு புகை பிடிப்பதால் இதயம் பாதிக்கப்படும் என்ற விஞ்ஞான விழிப்புணர்வு அக்காலத்தில் இல்லாமலும் இருந்திருக்கிறது. அது போல் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த ஆச்சப்பாவிற்கு ஆச்சி கொடுத்த சோடாவே அவருக்கு வினையாய் போகும் என்பதையும் சிந்திக்கவில்லை. 

குமார் மண்பானை தண்ணீர் பயன் தெரியாமலேயே அதைக் குடித்து வளர்ந்திருக்கிறான். தினமும் மண் பானை தண்ணீரைக் குடிப்பதால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. ஏனெனில் இதில் எந்த ரசாயனமும் இல்லை. தண்ணீரில் உள்ள தாதுக்கள் செரிமானத்திற்கும் உதவுகிறது. அற்புதமான ‘மண்பானை தண்ணீர் கலாச்சாரம்’ இப்போது பல வீடுகளில் மறைந்தே போய் விட்டன. 

தளத்தில் பதித்திருந்த மண்ணால் ஆன தளக்கற்களின் சுகமும், ஓட்டு வீட்டில் உணரப்பட்ட அந்த இதமான பருவநிலையும் அன்றைய இயற்கை குளிர்சாதனமாக இயங்கியிருக்கின்றன. 

குமார் போன்ற குழந்தைகள் மனங்களில் தோன்றும் உணர்வுபூர்வமான கேள்விகளுக்கு விடை தேடும்போது பல அறிவுபூர்வமான உண்மைகள் அதில் வெளிப்படுகின்றன. 

– காலச்சித்திரங்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 2025, மழைமான் பதிப்பகம், சென்னை.

அம்பாள் ஆர்.முத்துமணி விருதையில் 'அம்பாள்' என்று அழைக்கப்படும், பிரபல வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை அம்பாள் ராமசாமி அவர்களின் வழியில் வாழ்ந்து தொழிலும், தன் வாழ்விலும் உயர்வு பெற்றவர்.  தன் தந்தை வழி இலவச யோகா பயிற்சி மையப் புரவலர், யோகா பயிற்றுனர், ஆரோக்கிய விழிப்புணர்வுப் பேச்சாளர், தந்தை நிறுவிய அறக்கட்டளை மூலம் நல்ல பல இலவச சேவைகள் செய்து, விருதை மக்கள் போற்றும் சமூக ஆர்வலர் என்று இப்படி பன்முக ஆளுமை கொண்டவராய்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *