பழிவாங்கும் விழிகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 16, 2026
பார்வையிட்டோர்: 59 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேலே முக்கோணமாகவும் பக்கவாட்டுகளில் செங்குத்தாகவும் பட்டு ஜால்ராக்கள் தொங்கும்படி இரு புறமும் லேசாக எடுத்துக் கட்டப்பட்டிருந்த முத்துச் சிவிகைச் சீலையை சற்று அதிகமாகவே விலக்கி எட்டிப் பார்த்த ராதிகாதேவி, தன் கண்முன் விரிந்த காட்சியைப் பார்த்து, கலகலவென வாய் விட்டே நகைத்து விட்டாள். கீழே மண்ணில் இடக்கையில் ஓலைச் சுவடியுடனும், வலக்கையில் எழுத்தாணியுடனும் புரண்டு கிடந்த அந்த வாலிபன் சட்டென்று எழுந்து, எதிரேயிருந்த புரவி வீரன் மேல் பாய இருந்தவன், ராதிகாவின் சிரிப் பொலியைக் கண்டதும் ஒரு கணம் தாமதித்தான். அவள் செவ்வாயுடன் சேர்ந்து நகைப்பை உதிர்த்த அவளது வேல்விழிகளும், செங்கழுத்தும், எழுச்சி யுள்ள கவர்ச்சி மொட்டுக்கள் இரண்டைத் தொட்டுக் கொண்டிருந்த முத்தாரத்தின் நிலையும், அவனை ஏதோ செய்திருக்க வேண்டும். உட்கார்ந் திருந்த நிலையில் ஒருமுறை லேசாக அசைந்த அவள் இடைகூட அவன் உணர்வைத் தொட்டிருக்க வேண்டும். ஆனால் தொட்ட நிலையை அவன் விட்டொழிக்க ஒரு கணத்திற்கு மேல் ஆகவில்லை. ராதிகாவின் உடலிலிருந்து விடுபட்ட மோகனாஸ் திரங்கள் அளித்த மயக்கத்திலிருந்து விநாடி நேரத்தில் மீண்ட அந்த வாலிபன், அக்கம் பக்கம் இரண்டிலும் கண்களைத் திருப்பினான் இருமுறை. அவன் வலப்பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அவனை அடித்து மண்ணில் புரள வைத்த பூதலன், இடப்பக்கத்தில் புரவி மீது அமர்ந்து, கையில் உருவிப் பிடித்த வாளின் நுனியால், வாலிபன் எழுந் திருந்ததும் அவன் ஊட்டியைத் தடவிக் கொண் டிருந்தான் கடிகைக் காவலனான மகேந்திரன். 

மண்ணிலிருந்து எழுந்த வாலிபன், ராதிகாவை மீண்டும் நோக்கிவிட்டுத் தனது உடலுக்கு குறுக்கே ஓடிய யோக வேஷ்டியையும் முப்புரி நூலையும் சரிப்படுத்திக் கொண்டதன்றி, உடலில் ஒட்டிக் கிடந்த மண்ணையும் தட்டிக் கொண்டான். விசாலமான வதனத்தைத் தடவிக் கொண்டிருந்த தலையின் காக பட்ச குழல்களையும் தலையை ஓர் அசை அசைத்துத் திருத்திக் கொண்டான். முகத்தில் பளீரெனத் தெரிந்த கோபி சந்தனம் மட்டும் சிறிதும் அழியாததால் அவன் தணல் விழிகளுக்கு சாந்தம் செய்ய முயன்று கொண்டிருந்தது அந்தத் திலகம். 

மண்ணில் புரண்டு எழுந்த பின்னும் அச்சமின்றி நின்ற அந்த வாலிபனைக் கண்ட ராதிகா வியப் படைந்தாள். ஆறு அடி உயரத்துடனும், வீச்சான கால்களுடன் ஒல்லியான சரீரத்துடன் காட்சி யளித்த அந்த வாலிபன் என்ன அழகாயிருக்கிறான் என்று நினைத்த ராதிகாதேவி, சிரிப்பை உதிர்த்த தனது வாயின் செவ்விய இதழ்களைச் சற்றே மூடி, புன்முறுவலைப் பரவ விட்டுக் கொண்டாள். 

இத்தனையும் இரண்டு விநாடிகளுக்குள் அளந்து கொண்ட அந்த வாலிபன் சீற்றத்துடன் கேட்டான். “பல்லவ அரசில் எத்தனை நாளாக அந்தணர்கள் அடித்து வீழ்த்தப்படுகிறார்கள்?” என்று. 

ராதிகாவின் விழிகளில் வியப்பு விழுந்தது. “நீ அந்தணனா?” என்ற அவள் கேள்வியில் வியப்பின் சாயையும் நன்றாக ஒலித்தது.

“இதோ இந்த முப்புரி நூலைப் பார்த்தால் தெரிய வில்லையா?” என்று தனது பூணூலை எடுத்துக் காட்டினான் வாலிபன். 

“முப்புரி நூல் க்ஷத்திரியர்களுக்கும் உண்டு,” என்றாள் ராதிகா. 

அவள் பேச்சில் தொனித்த சாரீர இனிமையை அந்த வாலிபன் ரசிக்க முடியவில்லை, உள்ளூரப் புகைந்து கொண்டிருந்த கோபத்தினால். ஆகவே கேட்டான், “க்ஷத்திரியர்கள் இந்த மாதிரி யோக வேஷ்டியுடன் வெளியே வருவார்களா?” என்று. 

மாட்டார்கள். ஆனால் உன்னைப் போல் காக பட்சம் வைத்திருப்பார்கள்,” என்று அவன் அழகிய குழல்களைச் சுட்டிக் காட்டிய ராதிகா, “உன் பெய ரென்ன? ஏன் என் சிவிகையின் குறுக்கே வந்தாய்?” என்று இன்னொரு கேள்வியையும் வீசினாள். 

“மயூரசர்மன் என் பெயர். கடிகையின் மாணவன். மாண்டவ்ய கோத்ரம்,” என்றான் அந்த வாலிபன். பெருமையுடன் உஷ்ணமும் தொனித்த குரலில் அடுத்தபடி ஒரு கேள்வியையும் கேட்டான், “காஞ்சிமா நகரின் சாலைகள் உன் சிவிகைக்கு மட்டுந்தான் சொந்தமா?” என்று. 

‘அரச மகளிர் சிவிகை வரும்போது பாதசாரி எவரும் குறுக்கே வரக்கூடாதென்பது பல்லவர் ஆணை,” என்ற ராதிகாதேவி, “சரி சரி; சிவிகையை விடு” என்றாள், சிவிகைக் காவலரை நோக்கி. சிவிகை நகருமுன்பு மீண்டும் ஒரு முறை அவனைப் பார்த்து நகைக்கவும் செய்தாள். 

“பல்லவர் ஆணையா? திமிரா?” என்று கேட்ட மயூரசர்மன், “இன்று நீ சிரிக்கிறாய் அரச மகளே இப்படித்தான் திரௌபதியும் அன்று சிரித்தாள். இங்கும் ஒரு மகாபாரதம் வரும். பொறுத்துப் பார். மாம்ஸபலத்தால் உன்னைக் காக்கும் இந்த ராட்சத பிண்டமும் புரவி மீதிருப்பதாலும் வாள் கைப் லிருப்பதாலும் வீரனாகத் தன்னை நினைத்து கொண்டிருக்கும் இந்த மீசை அலங்காரமும் உன்னை எத்தனை நாள் பாதுகாப்பார்கள் பார்க்கிறேன். பல்லவ அரசை முறிக்கிறேன் தேவி, இல்லையேல்…” என்று சீறவும் செய்தான் சொற்களை முடிக்காமல். 

“குடுமியை முடிய மாட்டாய். சாணக்கிய பரம் பரையா நீ? அப்படியானால் உனக்கும் ஒரு சந்திர குப்தன் வேண்டும்?” என்று மயூரசர்மன் வாசகத்தை தானே முடித்த ராதிகா, இகழ்ச்சி முறுவல் கொட்டினாள். 

“இந்த சாணக்கியனுக்கு சந்திரகுப்தன் தேவை யில்லை. இவனே சந்திரகுப்தனாக முடியும்,” என்ற மயூரசர்மன் மேலே ஏதோ பேச முயலுமுன்பு காவலன் குதிரையால் இடரப்படவே மறுபடியும் கீழே விழ இருந்தவன் தன்னைத் திடப்படுத்திக் கொண்டான். சிவிகை ஊர்ந்தது- பல்லவர் அரண்மனையை நோக்கி. போகும் அந்தப் பல்லக் கைப் பார்த்துக் கொண்டே நின்ற மயூரசர்மன் எட்ட இருந்த கடிகைக்குள் சென்று, நேராகக் கடிகைத் தலைமைக் குரு இருந்த இடத்தை நாடி நடந்தான். குருவை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, நடந்த விஷயங்களை எடுத்துக் கூறிப் பரிகாரம் கேட்டான். 

குருநாதர் சிந்தனையில் ஆழ்ந்தார் சில வினாடிகள். “சிவிகையில் இந்த நேரத்தில் அரச மகள் ராதிகாதேவிதான் வருவாள். நீ குறுக்கே சென்றது தவறுதான்,” என்றார் முடிவில். 

“அந்தணனை அடிக்க சாஸ்திரம் இடங் கொடுக்கிறதா?” ஆசார்யரை தீ விழிகளுடன் நோக்கிக் கேட்டான் மயூரசர்மன்.

“இல்லை.” 

“அப்படியானால் பல்லவ மன்னனிடம் சொல்லிமகேந்திரனையும் அந்த ராட்சதனையும் தண்டிக்கச் சொன்னால் என்ன?” 

“மகேந்திரன் பல்லவ மன்னரின் மருமகன். ராட்சதன் அரசகுமாரியின் மெய்க்காவலன்,” என்று சுட்டிக் காட்டினார் ஆசார்யர். 

“அதனால்?” 

“தண்டிக்க முடியாது. ஆமாம், அரச குமாரியுடன் வந்தவன் மகேந்திரன் தானென்பது உனக்கெப்படித் தெரியும்?” 

“பலமுறை பார்த்திருக்கிறேன்; மக்கள் பேசக் கேட்டிருக்கிறேன்,” என்ற மயூரசர்மன் முடிவாகக் கேட்டான் ஆத்திரத்துடன்: “ஆசார்யரே! உம்மால் என் அவமானத்திற்குப் பரிகாரம் தேட முடியுமா முடியாதா?” 

“முடியாது,” என்றார் ஆசார்யர் திட்டமாக. 

‘அப்படியானால் நான் போகிறேன் என் ஊருக்கு,” என்றார் மயூரசர்மன். 

“வேதம் படிக்க வந்திருக்கிறாய்,” என்று சுட்டி காட்டினார் ஆசார்யர். 

“ஆம்.” 

“அத்யயனம் பூர்த்தியாகவில்லை.” 

“வேண்டா.” 

“போக முடிவு செய்து விட்டாயா?”

“ஆம்.” 

“பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?” 

“வேதத்தால், வேத குருவான தங்களால் துடைக்க முடியாத எனது அவமான மாசை வாளினால் துடைக்கிறேன். வேதத்தைவிட வாள் வலிது என்பதை இன்று, புரிந்து கொண்டு விட்டேன் ஆசார்யரே,” என்று சற்று இரைந்தே பேசிய மயூரசர்மன் தன் கையிலிருந்த ஏட்டுச் சுவடியையும் எழுத்தாணியையும் குருநாதன் முன்பே எறிந்து விட்டு வெளியே ஓடினான். 

மாலப்பிரபா நதி, கருங்கற்களிடையே சலசல வென்று ஓடிக் கொண்டிருந்தது. அதில் நீராடி எழுந்த மயூரசர்மன் அருகிலிருந்த ஒரு குடிசையை நாடிச் சென்றான். அக்குடிசை வாயிலில் நின்று எட்ட இருந்த ஸ்ரீபர்வதத்தையும் அதைச் சூழ்ந்து கிடந்த அடர்ந்த அடவியையும் நீண்ட நேரம் தோக்கிக் கொண்டு நின்றான். “மயூரா, என்ன செய்கிறாய் அங்கே!” என்று அவன் தாயின் குரல் ஒலித்தது, குடிசைக்குள்ளிருந்து. மயூரசர்மன் காதுகள் அந்த ஒலியை வாங்கின. கண்கள் மிருது வடைந்தன. உள்ளே சென்று மயூரசர்மன் தாயை வணங்கினான். அன்னை அவனுக்கு அன்னம் பரிமாறிக் கொண்டே சொன்னாள்: “இந்தப் பிடிவாதம் வேண்டாம், பிராம்மணன் வேதம் ஓத ஏற்பட்டவன்,” என்று. 

“வேதத்தின் பயனைக் கண்டுவிட்டேன், வாளின் பயனையும் பார்ப்போம். இன்று ஸ்ரீபர்வதத்துக்குப் போகிறேன்,” என்று சொன்னான் மயூரசர்மன். 

“அங்கு எதற்கு?” என்று கேட்டாள் அன்னை.

“வித்தியாசகரிடம் வித்தை பயில.”

“அவனிடமா?” 

“ஆமம்மா” 

“அவனுக்கு வேதம் தெரியாதே. சுத்த முரடன்.”

“அந்த முரட்டுத்தனத்தைக் கற்றுக் கொள்கிறேன். வான் வித்தை, வில் வித்தை எல்லாம் பயின்று விட்டு வருகிறேன்” என்று கூறி, உணவை முடித்துக் கொண்டு எழுந்த மயூரசர்மன், அடுத்த ஒரு நாழிகைக்கெல்லாம் ஸ்ரீபர்வதத்தை நோக்கி நடந்தான். 

ஸ்ரீபர்வதத்தின் அடியிலிருந்த வித்யாசாகர் ஆசிர மத்தை அண்டிய மயூரசர்மன், ஆசிரம வாயிலில் மூன்று புரவிகள் நிற்பதைக் கண்டான். ஆனால் மூன்று புரவிகள் மீதும் உட்கார ஆசனமேதுமில்லா திருந்ததையும் கடிவாளக் கயிறுகளும் ஒப்புக்கே அவற்றின் வாய்களில் கட்டப்பட்டிருப்பதையும் கண்டான். அதனால் ஏற்பட்ட வியப்புடன் ஆசிர மத்துக்குள் நுழைந்த மயூரசர்மன் வித்யாசாகரர் முன்பு நெடுஞ் சாண்கிடையாக விழுந்து எழுந் தான். கைகட்டி அவர் முன்பு நிற்கவும் செய்தான். 

வித்யாசாகரர் அவனை ஏறெடுத்து நோக்கி, “வேதாப்பியாசம் முடிந்து விட்டதா மயூரசர்மா?” என்று வினவினார். 

“இல்லை” என்றான் மயூரசர்மன். 

“ஏன்? மகேந்திரனும் பூதலனும் அடித்து விட்ட தாலா?” என்று கேட்ட வித்யாசாகரர் மெல்லச் சிரித்தார். 

மயூரசர்மனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “தங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வின வினான் மயூரசர்மன். 

“காஞ்சியில் என் சீடர்கள் இருக்கிறார்கள்,” என்றார் வித்யாசாகரர். 

“சீடர்களா, ஒற்றர்களா?” 

“இரண்டு விதமாகவும் வைத்துக் கொள்ளலாம்.”

“அடுத்த சீடன் வந்திருக்கிறேன், ஒற்றனாக விரும்பவில்லை.” 

“உன்னை ஒற்றனாக்க எனக்கும் விருப்பமில்லை,” என்ற வித்யாசாகரை மயூரசர்மன் மீண்டும் வணங்கினான். “வித்தையை யாசிக்கிறேன்,” என்று சொன்னான். 

வித்யாசாகரர் தலையசைத்தார். பிறகு எழுந்து மயூரசர்மனை வெளியே அழைத்துச் சென்றார். “இந்தப் புரவிகளில் ஒன்றை நண்பனாக்கிக் கொள்,” என்றார், அங்கிருந்த மூன்று புரவிகளையும் காட்டி. “புரவியை நண்பனாக்கிக் கொள்வதா?” வியப்புடன் வினாவினான் மயூரசர்மன். 

“ஆம்!” என்ற வித்யாசாகரர் ஒரு புரவியிடம் சென்று அதன் வாயைத் தடவிக் கொடுத்தார். மூக்குகளையும் வருடினார். கழுத்தைக் கட்டினார். முதுகை ஒருமுறை தட்டினார். புரவி சிலிர்த்தது, நிமிர்ந்தது அவரை மோந்தது. “பார்த்தாயா மயூரசர்மா! இப்புரவியின் புத்தி எத்தனை கூர்மை. மனிதனுடன் இத்தனை அன்பு காட்ட அதனால் முடியும்! உனக்குப் பிடிக்கும் புரவியை நீயும் சகோ தரனாக நினை. அது உன்னை நேசிக்கும்,” என்றார். 

அப்புரவிகளைச் சிறிது நேரம் நோக்கிய மயூர சர்மன் ஒரு சந்தன நிறப் புரவியை அணுகி வித்யா சாகரர் செய்த சைத்தியோபசாரத்தை அவனும் செய்தான். புரவி அவனை முத்தமிட்டது. முகத்தை உயரத்தூக்கி, “இனி அதன் மீது பாய்ந்து ஏறு” என்று வித்யாசாகரர் உத்தரவிட, மரத்தில் கட்டியிருந்த கடிவாளக் கயிற்றை அவிழ்த்து அதன் மீது ஏறினான் மயூரசர்மன். அடுத்த விநாடி புரவி மேலே எழும்பி இருமுறை குதிக்க, மயூரசர்மன் நிலத்தில் புரண்டான். வித்யாசாகரர் பெரிதாக நகைத்துக் கொண்டு சொன்னார், “மயூரசர்மா! புரவி மீது தாவியதும் லேசாகக் கழுத்தைத் தடவிக் கொடு. பிறகு அதன் காதில் சேதி சொல்லு, அன்பாகப் பேசு,” என்று. மயூரசர்மன் ஐம்புலன்களையும் புரவி யேற்றப் பயிற்சியில் செலுத்தினான். மேலே தாவி ஏறி, கடிவாளக் கயிற்றை மெல்லப் பிடித்து, அதன் காதில் குனிந்து செல்லமாகப் பேசினான். புரவி இம்முறை ராஜநடை போட்டு நடந்தது. 

அடுத்த பதினைந்து நாட்களில் குதிரை ஏற்றம் பயின்ற மயூரசர்மன், பழி வாங்கும் வேட்கையால் புரவியை மிக அநாயாசமாகச் செலுத்தினான். 

பதினொன்றாவது நாள் வித்யாசாகரின் சீடர்கள் ஐந்து பேர் காஞ்சியிலிருந்து வந்தார்கள். எல்லோரும் அந்தணர் அல்லர், பலதரப்பட்டவர்கள், ஆனால் அனைவர் கையிலும் வில்லும் வாளும் இருந்தன. “இவர்கள் உன் ஆரம்பப் படை,” என்று அவர்களை அறிமுகப்படுத்தினார் வித்யாசாகரர். 

மாதங்கள் உருண்டு ஓடின. 

பல்லவ மன்னனான குமார விஷ்ணு, வியப்பின் எல்லையை எய்தி இருந்தான். தனது அரண்மனை யின் அந்தரங்க அறையில் உலாவிக் கொண்டு, எதிரே நின்றிருந்த சேனாதிபதியையும் இரண்டு உபதளபதிகளையும் உற்று நோக்கி, “மயூரசர்மனா? அவன் யார்? நமது எல்லைப்புற சிற்றரசர் பிரகத் பாணர்களை அடிமைப் படுத்தி விட்டானா?” என்று கேட்டான். 

“ஆம் மன்னவா! மயூரசர்மன் ஒரு அந்தணன். நமது கடிகையில் படித்தவன். இப்பொழுது படை திரட்டி. நமது எல்லைப்புறங்களைப் பிடிக்கிறான்” என்றான் சேனாதிபதி. 

“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான் பல்லவ மன்னன் குமார விஷ்ணு. 

“இது நேர்முகப் போரல்ல. மயூரசர்மன் புரவிப் படை எப்பொழுது வருகிறது. எப்பொழுது போகிறது என்பது தெரியவில்லை. சூறாவளி போல் வந்து போகிறது” என்றான் உபசேனாதிபதிகளில் ஒருவன். 

“இங்குகூட அவர்களில் இருவர் வந்தார்கள்’ என்றான் மெல்ல மற்றொரு உபசேனாதிபதி.. 

“இங்கா?”” குமாரவிஷ்ணு அதிர்ச்சியுடன் கேட்டான். 

“ஆம்!”

“எப்பொழுது?”

“நேற்றிரவு!” 

“காஞ்சிக்குள்ளா?” 

“ஆம் மன்னவா! வந்து நமது மகேந்திரனையும் பூதலனையும் தூக்கிச் சென்று விட்டார்கள்.” இதை மிகுந்த பயபக்தியுடன் சொன்னான் உபசேனாதிபதி. 

அந்த சமயத்தில் அரசமகள் ராதிகாதேவி அந்த அறைக்குள் அசுர வேசுத்தில் நுழைந்து, “இங்கு பல்லவ அரசு நடக்கிறதா நசித்துவிட்டதா?” என்று வினவினாள், சுடுவிழிகளை தந்தையின் மீது வீசி. 

மகளின் சீற்றத்தைக் கண்ட பல்லவ மன்னன். தனது இதழ்களில் குறுநகை கூட்டினான், “எப் பொழுதும் பெண்கள் சிரிப்பு, அனர்த்தத்தையே விளைவிக்கும்.” என்று கூறினான் முறுவலின் ஊடே. பிறகு சேனாதிபதியை நோக்கி, “எனது காவற்படை தயாராகட்டும். ராதிகாவும் என்னுடன் வருகிறாள்,” என்று உத்தரவுமிட்டான். 

“எங்கு செல்ல முன்னவா?” என்று வினவினான் சேனாதிபதி 

“மயூரசர்மன் கோட்டைக்கு” 

“அது காடல்லவா?” 

“அப்படியானால் காட்டுக்கோட்டைக்கு என்று வைத்துக் கொள்” என்ற மன்ளன அவர்கள் செல்ல லாமென்பதற்கு அறிகுறியாகக் கையை அசைத்தான். 

ஸ்ரீபர்வதத்தின் அடிவாரத்தின் அடவியில் சுற்று மிருந்த மரக்கிளைகள் சிறிது வெட்டப்பட்ட இடை வெளியில், மொட்டையாகிவிட்ட மரக்கிளைகளி லிருந்து பந்தங்கள் வீசிய வெளிச்சத்தில், பூதலனும் மகேந்திரனும் வலுவான கயிறுகளால் பிணைக்கப் பட்டு நின்றிருந்தார்கள். அவர்களைக் காத்திருந்த வீரர்களை விலகும்படி பணித்த வண்ணம் மயூரசர் மன் அந்த இடைவெளிக்கு வந்தான். இருவரையும் ஒரு விநாடி உற்று நோக்கினான். பிறகு பூதலனை அவிழ்த்துவிடச் சொல்ல, “பூதலா! முதலில் உன் மாம்ஸ பலத்தைப் பரிசீலிப்போம்” என்று அங்கியைக் கழற்றிப் பக்கத்திலிருந்த வீரனிடம் கொடுத்தான். 

பூதலன் கண்கள் பயங்கரமாகச் சுழன்றன. கைகளை வீசிக்கொண்டு, “மயூரசர்மா! தர்மயுத்தம் செய்து பார். உன்னைப் பிண்டமாகப் பிடித்து விடுகிறேன்,” என்று சொல்லிக் கொண்டே கைகளைத் தொடைகளில் தட்டினான். 

“இது காஞ்சியன்று. இங்கு தர்மயுத்தத்தைத் தவிர வேறு கிடையாது,” என்று மயூரசர்மன் சர்வ சாதாரணமாகப் பூதலனை அணுகி அவன் பிடிக் குள் நுழைந்தாள். இரண்டு விநாடிகளுக்கெல்லாம் பூதலன் ஓவென்று அலறிக்கொண்டு மண்ணில் புரண்டான். அவனை நோக்கி நின்ற மயூரசர்மன், “பூதலா! மாம்ஸம் மட்டும் நமது உடலில் இல்லை, நரம்புகளும் இருக்கின்றன. அவற்றையும் அறிந்து கொள்ள, காஞ்சியில் காலம் கழித்துப் பயனில்லை. வித்யாசாகரிடம் வந்து பயின்று கொள்,” என்று கூறிவிட்டு, “எங்கே என் வாள்?” என்று பக்கத்தி லிருந்த வீரனைக் கேட்டான். வாளை வாங்கிக் கொண்டதும், “மகேந்திரவர்மன் கட்டுகளை அவிழ்த்து விடுங்கள். அன்று புரவியில் நீட்டிய வாளின் பலத்தைப் பார்ப்போம்,” என்றான். 

மகேந்திரன் சொப்பன ஸ்திதியிலிருந்தான். பூதலன் கதி அவனைக் கலங்க வைத்திருந்தது. அவன் திகிலைக் கண்ட மயூரசர்மன், “சே! நீ இவ்வளவு தானா! நிராயுத பாணிகளை விரட்டத்தான் உனக்குத் தெரியும் போலிருக்கிறது?” என்று கூறிவிட்டுத் தனது வீரர்களை நோக்கி, “இவர்களை விடுதலை செய்து அனுப்பி விடுங்கள். இனி பல்லவ மன்னனை வரவழைப்போம்.” என்றான். 

“தேவையில்லை, நானே வந்துவிட்டேன்” என்று கூறிக்கொண்டு மகளுடன் பந்தங்களின் வெளிச் சத்தில் நுழைந்தான் குமாரவிஷ்ணு. 

மயூரசர்மன் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. “தனியாகவா வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான் சொப்பனத்திலிருப்பவன் போல். 

“இல்லை, மெய்க்காவலர் படைவந்திருக்கிறது,” என்றான் குமாரவிஷ்ணு. 

“அவர்கள்?” 

“எட்ட இருக்கிறார்கள். ஆனால் வந்தது போருக்காக அல்ல!”

“வேறு எதற்கு? 

“சமாதானத்திற்கு.” இதைப் பல்லவ மன்னன் உறுதியுடனும் திடத்துடனும் சொன்னான். “மயூர சர்மா! குமாரவிஷ்ணு அச்சப்படுபவனல்லன். ஆனால் உண்மை நிலையை ஆராய்ந்து போரைத் தடுப்பது மன்னனின் கடமையாகும். உனக்கு இந்த மடையர்கள் செய்த இடையூறு பல்லவ ராஜ்யத்தின் எல்லைகளை இழக்க வைத்து, அதைப் பலவீனப் படுத்தி விட்டது. தவிர வித்யாசாகரரின் இரு சீடர்கள் சண்டையிடுவதும் முறையல்ல.” என்று மிக மெதுவாகவும் தர்மசித்தத்துடனும் பேசினான் குமாரவிஷ்ணு. 

மயூரசர்மன் பேசவில்லை. நா அடைத்து நின் றான். எந்தப் பல்லவ மன்னனை ஒடுக்க நினைத் தானோ அவனே தன் முன் வந்து போரிடா மலேயே தன்னை ஒடுக்கி விட்டதை எண்ணிப் பார்த்தான். இத்தனையிலும் மன்னன் அருகே நின்ற ராதிகாவை எரிச்சலுடன் நோக்கினான். குமார விஷ்ணு ஒரு விநாடி சிந்தனையில் இறங்கினான். பிறகு ராதிகாவைச் சுட்டிக் காட்டி, “உனக்கு இஷ்டப்பட்ட தண்டனையை இவளுக்குக் கொடுக்க லாம்,” என்று சொன்னான். 

இந்தச் சமயத்தில் ஆசிரமத்திற்குள்ளிருந்து வந்த வித்யாசாகரர் குமாரவிஷ்ணுவை நோக்கி, “மன்னனே ! ராதிகாவை இந்த மகாவீரனுக்குக் கொடுத்து விடு. அவளால் கதம்பவம்சம் தழைக்கட்டும்,” என்று ஆணையிட்டார். குமாரவிஷ்ணு தலை வணங்கினான். 

மயூரசர்மன் மட்டும், “நான் அந்தணன், அவள் க்ஷத்திரிய ஜாதி,” என்று சுட்டிக் காட்டினான். 

“ருஸ்யசிருங்கரும் அப்படித்தான்,” என்றார் வித்யாசாகரர். 

பல்லவ ராஜ்யத்துக்கு மயூரசர்மனின் தொல்லை ஒழிந்தது. காட்டுக் குடிசையில் இரண்டு இரவுகள் கழித்துப் படுத்துக் கிடந்த மயூரசர்மன் ராதிகாவை நோக்கிச் சொன்னான், “மன்னன் மகளே! சீக்கிரம் நமக்கு அரண்மனை கட்டி விடுகிறேன். மஞ்சத்தில் நீ படுக்கலாம்,” என்றான்.

ராதிகா பதில் பேசவில்லை. மௌனமாயிருந்தாள். 

“கொஞ்சம் சிரி” என்றான் மயூரசர்மன்.

“சிரித்தால் இன்னும் ஒரு போர் நிகழலாம்,” என்றாள் ராதிகா. 

கடைசியில் ராதிகா சிரிக்கவே செய்தாள். மீண் டும் ஒரு போர் நிகழத்தான் செய்தது. அதில் இருவருக்குமே வெற்றி, இருவருக்குமே களைப்பு! “முந்திய குற்றத்துக்கு நன்றாகப் பழி வாங்கி விட்டீர்கள்,” என்ற ராதிகாவின் குளறிய சொற்கள் நிலையை நிரூபித்தன. அன்று நகைத்த, விழித்த விழிகள் இன்றும் நகைத்தன. ஆனால் அவனை ஆயுள் முழுவதும் பழிவாங்கின அவள் விழிகள். அவை சுழன்ற போதெல்லாம் மயூரசர்மன் இன்பத் தில் ஆழ்ந்தான். என்ன இருந்தாலும், என்ன செய்தாலும், ஆண்மகன் பெண்களுக்கு அடிமை தான் என்பதைப் புரிந்து கொண்டான்.

– மங்கலதேவி (சரித்திரக் கதைகள்), முதற் பதிப்பு: பெப்ரவரி 1979, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *