கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2026
பார்வையிட்டோர்: 133 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

16. சுந்தரி

இந்தப் பரம்பரை வியாதி என்னை இவ்வளவு கொடுமை பண்ணும் என்று நான் நினைக்கவேயில்லை. படுத்த படுக்கையாய் விட்டேன். வெளிப்பார்வைக்கு உடம்பில் வியாதி ஒன்றும் இல்லாததுபோலவே சமாளித் துக்கொண்டு வந்தேன். என் தேக நிலமை மிகவும் மோச மாகி வருவதைக் கண்டு என் கணவரே டாக்டரை அழைத்துவந்தார். அதனால் எவ்வளவோ பணச்செலவு. என் கணவரின் வருமானத்தில் இதற்கெல்லாம் பணம் ஏது? டாக்டர் சொன்ன மருந்தை வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று அவர் வற்புறுத்தியதனால் மருந்துச் செலவுக்காக என் கைக்கொலுசைக் கழட்டிக் கொடுத்தேன். கடன் வாங்கிக்கொள்ளலா மென்றுதான் அவர் சொன்னார். கடனை வாங்கிக்கொண்டு கவலைப்படுவதைவிட கையிலிருக்கும் நகையை விற்றுச் செலவழிப்பது தான் நலமென்று எனக்குத் தோன்றியது. இந்தத்தடவை நகை விற்பதைப் பற்றி அவர் அதிகமாக மறுத்துப் பேசவில்லை. 

டாக்டர் எவ்வளவோ மருந்துகளைக் கொடுத்து வந்தார். ஆனால் உடல் சௌக்கிய மடைவதாகத் தெரியவில்லை. பாவம் முருகனுக்கும், என் கணவருக்கும் ஒரு நிமிஷம் கூட ஓய்வு ஒழிவு கிடையாது. அவர் தோட்டத்திற்குப் போவதற்குள் எனக்கு வேண்டிய சிச்ருஷைகளைச் செய்துவிட்டுப் போவார். அவர் திரும்பி வரும் வரையில் முருகன் என் அருகிலேயே குழந்தை மோகனாவை வைத்துக்கொண்டிருப்பான். கணவர் வந்ததும் முருகன் பூக்களை எடுத்துக்கொண்டு கடைத்தெருவுக்குப் போய் விடுவான். என் கணவர் சமையல் வேலையை ஆரம்பிப்பார். அவர் அடுப்பை ஊதி ஊதிக் கண்ணெல்லாம் சிவந்து போய்விடும். ஏதோ சாதமென்று கிளறி வைப்பார். அதைத்தான் அப்பாவும் பிள்ளையும் சாப்பிடுவார்கள். குழந்தை மோகனாவிற்கு மட்டிலும் ஏதாவது பண்டம் பலகாரம் வாங்கி வந்து கொடுப்பார்கள். குழந்தையும் முன் போலத் தாட்டிகமாக இல்லை. சரியான போஷணை இல்லாமல் மெலிந்து வந்தது. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எவ்வளவோ ஆதரவாக இருந்தார்கள். ஆனாலும் எங்கள் கஷ்டத்தை நாங்கள் தானே அனுபவித்துத் தீர வேண்டும். எனக்காக முருகனும் என் கணவரும் இவ்வளவு சிரமப்படவேண்டாமென்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் சொன்னால் கேட்கிறார்களா! “உன் உடம்பு எப்படி இருக்கிறது? என்ன வேண்டும். உனக்கு?” என்று ஓயாமல் கேட்டுக்கொண்டேயிருந்தால் அதுவே மிகவும் தொந்தரவாக இருக்கிறது. என்னதான் மருந்து சாப்பிட்டாலும், எவ்வளவுதான் இவர்கள் சிரமப்பட்டுப் பார்த்தாலும் இந்த வியாதி என்னை விட்டு நீங்காது என்று எனக்கு நன்றாகப் பட்டுப் போய்விட்டது. ஆகையால் என் உடம்பைப்பற்றி நான் அதிகமாக யோசிப்பதே யில்லை. மோகனாவிற்கும் இப்பொழுது நாலு வயது ஆகிவிட்டது. முருகனும் தன் பொறுப்பை உணரும் நிலைக்கு வந்துவிட்டான், இனி எனக்கு என்ன குறை இருக்கிறது. எனக்கு இந்தச் சீக்கு மட்டும் வராமல் இருந்தால் என் கணவர் தன் சம்பாத்தியத்திலிருந்து ஏதாவது பணம் சேர்த்துவைத்திருப்பார். அதற்கு வழியில்லாமல் எனக்கு இந்தச் சீக்கு வந்து அவரை ஏழையாக்கிவிட்டது. கணவர் தன் அலுவல்களையாவது அக்கரையோடு கவனித்து வந்தால் செலவுக்குப் போதுமான பணம் கிடைக்கும். என் வியாதியைப் போக்கும் முயற்சியிலேயே அவர் காலத்தை வீணாக்குகிறார். ஓயாது உழைத்து உழைத்து அவரும் துரும்பாய் இளைத்துவிட்டார். நான் என்னதான் செய்வது? 

வேலை ஒன்றுமில்லாமல் படுக்கையிலேயே படுத்திருந் தால், மனம் எங்கெங்கேயெல்லாமோ சுற்ற ஆரம்பிக்கிறது. ஊரைப்பற்றியும் என் தாயாரைப்பற்றியும் அடிக்கடி நினைப்பு வந்து விடுகிறது. சிறுவயதில் அவள் எனக்குச் செய்த உதவிகள் கடமைகள் எல்லாம் திரைப்படம் போல முன்வந்து காட்சியளிக்கிறது. மாடி ஜன்னலில் நான் உட்கார்ந்து எண்ணமிட்டுக் கொண்டிருந்தது, தாயைப்பற்றி வருந்தியது, சமூகத்தைப் பழித்தது எல்லாம் அப்படி அப்படியே கனவுபோல நினைவுக்கு வருகிறது. ஜன சமுதாயத்தின் மீது முன்னைப்போல எனக்கு அவ்வளவு வெறுப்பு ஏற்படவில்லை. சமுதாயம்தான் என்னை வடிவேலுவின் மனைவியென்றும் மோகனாவை எங்கள் குழந்தையென்றும் ஒப்புக்கொண்டுவிட்டதே! 

நேற்றுக் காளியம்மன் கோவிலில் திருநாள். எத்தனையோ தம்பதிகள் குழந்தைகளோடு எங்கள் வீட்டுவாசல் வழியாகப் போனார்கள். நானும் என் கணவர் குழந்தைகளுடன் போகவேண்டும் என்று ஆசை. ஆனால், இந்த வியாதிதான் என்னைப் படுக்கையிலேயே வைத்துவிட்டதே. இந்த ஊருக்கு வந்தது முதல் வருஷா வருஷம் நான் என் கணவரோடு காளியம்மன் கோவில் திருநாளுக்குப் போய்க் கொண்டுதானிருந்தேன். இந்த வருஷம் ஒரு கோவில் குளம் என்று அடியெடுத்து வைக்கவே இல்லை. முருகனுக்குக்கூட வேடிக்கை, விளையாட்டு, திருநாள் இதிலெல்லாம் இப்பொழுது ஆசையே இல்லை. தகப்பனாரோ சேர்ந்து பணம் சம்பாதிக்க வேண்டுமென்று கவலை உண்டாகி விட்டது. முருகனும் குழந்தை மோகனாவும் சரியான பராமரிப்பு இல்லாமல் வாடிப்போய் விட்டார்கள். 

குழந்தைகளுக்கு நாட்டியமெல்லாம் கற்பிக்கவேண்டும், முருகனை மேல்படிப்புப் படிக்கவைக்கவேண்டும் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டியிருந்தேனே! என் ஆவல்களை நிறைவேற்றிவைக்க எனக்கு இப்பொழுது சக்தியில்லாமல் போய்விட்டதே. நான் மூன்று பேர்களுக்கும் பாரமாகவல்லவா இருந்து வருகிறேன். நடக்கக்கூட சக்தியில்லை. சாதமென்று சாப்பிட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிறது. ஏதோ மாவுக்கஞ்சிதான் குடிக்கவேண்டுமென்று வைத்தியர் சொல்லியிருக்கிறார். அதுவும்கூட இப்பொழுது செல்லவில்லை. எவ்வளவு காலம் நான் இவர்களையெல்லாம் இப்படிக் கஷ்டப்படுத்தப் போகிறேனோ தெரியவில்லை. 

பக்கத்து வீட்டுக்காரப் பெண்கள் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள். நாம் அன்போடு பழகிக் கொண்டால் அவர்களும் அன்போடுதானே பழக முடியும். நிலைக் கண்ணாடியில் நாம் கோபமாகப் பார்த்தால் எதிரிலுள்ள பிம்பமும் கோபமாகத்தான் நம்மை நோக்கிப் பார்க்கிறது. மலர்ந்த முகத்தோடு பார்த்தால் பிம்பம் நம்மை மலர்ந்த முகத்தோடுதான் வரவேற்கிறது. உலகத்திலுள்ள மனிதர்களெல்லாம் நிலைக் கண்ணாடிகள் என்று நாம் நினைத்துக் கொண்டோமானால் பிறரைக் கோபிக்கவோ வெறுக்கவோ காரணமிருக்காதென்று நினைக்கிறேன். நான் ஒரு பங்கு அன்பு காட்டினால் அவர்கள் பத்து மடங்கு அன்பை என்னிடம் காட்டுகிறார்கள். உலகம் அன்பு மயமானது தான். வெறுப்பும் துவேஷமும் மனிதன் வீணாக சிருஷ்டித்துக் கொண்ட கெட்ட குணங்கள். 

17. முருகன்

தகப்பனார் ஏனோ எப்பொழுதும் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு கவலையில் ஆழ்ந்திருக்கிறார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சிலவேளை அவர் அழுது கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பணக் கஷ்டத்திற்காக இப்படி வருத்தப்பட்டிருப்பாரா? பணத்திற்காக அவர் முன்னைப் போல அவ்வளவாகக் கலங்குவதில்லை. இப்பொழுது வேறு ஏதோ கவலை அவர் மனதை அரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. 

அன்று டாக்டர் இவரிடம் வெகுநேரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் நோயைப் பற்றித்தான் ஏதாவது சொல்லியிருப்பார். ஆமாம். அன்றைய தினத்திலிருந்துதான் இவர் ஓயாக் கவலையில் ஆழ்ந்து விட்டார். தோட்டத்திற்கே போகவில்லை. வேளா வேளையில் குளிப்பதோ சாப்பிடுவதோ கிடையாது. தங்கையைப் பார்த்த வண்ணம் கண்கலங்குகிறார். தன் வருத்தத்தை என் முன்னால் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் மழுப்புகிறார். 

நானும் தாயாரின் அருகிலேயே இருந்து அவளுக்கு உதவி செய்யலாமென்று நினைத்தால் தோட்ட வேலையைப் பார்ப்பதற்கு வேறு ஆளில்லை. வீட்டில் இம்மாதிரிக் கஷ்டங்கள் இருக்கும் போது தான் எனக்கு வெளியில் அதிகமான வேலைகள் வந்து சேர்கிறது. ஊரில் கலியாணங்கள் அதிகம். கடைக்காரர்கள் என்னை இன்னும் பத்துப் பதினைந்து நாட்கள் வரை கூடவே இருந்து வேலை பார்க்க வேண்டுமென்று கெஞ்சுகிறார்கள். அவர்களிடம் மறுத்துச் சொல்லவும் முடியவில்லை. தகப்பனாரும் வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும் போது தினசரிச் செலவுக்குப் பணம் வேண்டுமே! டாக்டர் ரொம்ப நல்ல மனிதர். பணத்திற்கு இப்பொழுது ஒன்றும் நெருக்க வில்லை. அடிக்கடி வந்து தாயாருக்கு மருந்து கொடுத்து வருகிறார். கடவுள் செயலால் தாயாருக்கு உடம்பு சீக்கிரம் குணமாகிவிட்டால் எங்கள் கவலைகளெல்லாம் நீங்கி விடும். 

தங்கை மோகனா எவ்வளவோ மெலிந்துபோய் விட்டது. ஓயாமல் அழுதுகொண்டேயிருக்கிறது. பக்கத்து வீட்டு அத்தை கவனித்துப் பார்க்காவிட்டால் இதை விட மெலிந்து போயிருக்கும். தாயார் மட்டும் உடம்பு சௌகரியத்தோடு இருந்திருந்தால் இதற்குள்ளாக மோகனாவைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருப்பாள். நான் ஒரு பக்கம் அலைய, தாயார் வியாதியினால் படுத்திருக்க, தகப்பனார் கவலையிலேயே மூழ்கியிருக்க, அவளை எப்படிப் பள்ளிக்கூடம் அனுப்புவது! எனக்குக்கூட தினமும் ஏதாவது படிக்கவேண்டுமென்று ஆசையிருக்கிறது. ஆனால் உட்காரவே நேரமில்லையே! 

தாயாரைப் பார்க்கப் பார்க்க என் மனம் ஏனோ பதறுகிறது. உடம்பில் ஒரு நகை இல்லை. தலையெல்லாம் முள் செடிபோல அலங்கோலமாக இருக்கிறது. எலும்புக் கூடாக இருக்கிறாள். அவளால் பேசக்கூட முடியவில்லை. இந்த நிலையிலும் என்னைப் பார்த்து “முருகா, ரொம்பக் கஷ்டப்பட்டு வேலை செய்யாதே! உன் உடம்பு ரொம்ப இளைத்துப்போய் விட்டதடா! வேளாவேளைக்கு நல்லாச் சாப்பிடு!” என்று சொல்கிறாள். தான் எலும்புக்கூடாக இருப்பதை அவள் உணரவேயில்லை. இந்தக் கஷ்டமெல்லாம் எப்போது நீங்குமோ தெரியவில்லை. 

18. வடிவேலு

இருளடைந்திருந்த என் வாழ்க்கையைப் பிரகாசப் படுத்தவந்த தீபம் அணைந்து விட்டது. என் வாழ்க்கையைப் பழையபடி இருள் மூடிக்கொண்டது. சுந்தரி என்னை இந்த உலகில் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டாள். இனி எனக்கு இந்த உலகில் என்ன இருக்கிறது! அவளே எனக்கு எல்லாமாக இருந்தாள். அவள் போய் விட்டதால் உலகில் எனக்கிருந்த எல்லாமே போய்விட்டது. இனி என் கதி எப்படி ஆனால் என்ன! 

நான் எப்படி எப்படி இருந்தேன்? அடாடா! பயங்கரமான ஒரு கனவு போல இருக்கிறதே. அதல பாதளத்தில் இருந்தேன். பின்பு வாழ்க்கை இன்பத்தின் சிகரத்தையே எட்டிப் பிடித்தேன். திரும்பவும் தலைகுப்புறப் பள்ளத்தில் வீழ்ந்து விட்டேன். இனி எழுந்திருக்கவே முடியாது. 

சிறுவனாக, அறியாப் பிராயமாக இருந்தபோது செல்லமாக வளர்க்கப்பட்டேன். வயது வந்தபிறகு ஒரு பெண்ணை மணந்தேன். அவளும் தங்கமான ஒரு மகனை எனக்குக் கொடுத்துவிட்டுப் பரலோகம் சென்றுவிட்டாள். தாயும் தந்தையும் இறந்தபோது பிறருடைய வஞ்சகத்தினால் வறுமைப்பட்டேன். 

குழந்தை முருகனை வைத்துக்கொண்டு நான் திண்டாடித் திகைத்து நிற்கையில் என் சகோதரியின் உதவி கிடைத்தது. எத்தனையோ கஷ்டங்களுக்கிடையே என் அக்காளும் என் குழந்தையை அருமையாகச் சீராட்டித் தான் வளர்த்தாள். எனக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைத்துவிடவேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தாள். அப்பொழுது என் எதிர்காலம் மிகவும் கஷ்டமான தொன்றாகவே தோன்றியது. கையில் பணம் கிடையாது. வேலையும் ஒன்றும் அகப்படவில்லை. அந்த லட்சணத்தில் கல்யாணத்தையும் பண்ணிக் கொண்டு குடும்பத்தை நடத்துவதென்றால் எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும். அத்தனை கஷ்டங்களையும் எண்ணி எண்ணிப் பார்த்தபோது, பேசாமல் சந்நியாசியாகப் போய் விடலாமா என்றுகூட அப்பொழுது தோன்றியது. 

அன்று சுந்தரி மட்டும் என்னைக் கூப்பிட்டிருக்கவில்லை யானால் நான் ஒரு வேளை சந்நியாசியாகக்கூட ஆகியிருப்பேன். அல்லது வேறு எப்படியெல்லாமோ போய்ச் சீரழிந்திருப்பேன். என்னை அந்த விதமான கஷ்டங்களுக் கெல்லாம் ஆளாக்காமல் இன்பத்திலேயே திளைக்க வைப்பதற்கென்று சுந்தரி எனக்குக் கிடைத்தாள். அவள் எனக்குக் கிடைத்தாள் என்றுகூடச் சொல்லக் கூடாது. அவளது ஆதரவும் அன்பும் எனக்குப் போன ஜென்மத்தில் செய்த புண்ணியத்தினால் கிட்டியது. தானாகவே என்னை அழைத்து வாழ்க்கைப் பாதையை அன்பு மலரால் அமைத்தாள். பிச்சைக்காரன் தூங்கிவிழித்தவுடன் ஒரு மகாராஜாவாக ஆகிவிட்டான் என்றால் அவனுக்கு எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது நான் சுந்தரியுடன் வாழ்க்கை நடத்த ஆரம்பித்த அன்று. 

அன்று முதல் நான் இந்திரலோகத்திலிருந்ததாகவே எண்ணி மகிழ்ந்தேன். அந்த இந்திரலோக வாழ்வு இப்படி ஒரு கனவாக முடிந்துவிடுமென்று நான் எண்ணவே இல்லை. பணக்கஷ்டம் ஏதோ இருந்தது. அதெல்லாம் இப்பொழுது ஒன்றும் பிரமாதமாகத் தோன்றவில்லை. 

எங்கள் அன்பின் உருவாகப் பிறந்தாள் மோகனா. அடாடா! அந்தப் பெண்ணின் எதிர்காலத்தை நினைத்தால் நெஞ்சம் குமுறுகிறது. சுந்தரி இறந்த அன்று அது “அம்மா” என்று அலறியது அவள் காதில் விழவேயில்லை. இந்தத் தள்ளாத வயதில் எத்தனை பொறுப்பு என் தலையில் விழுந்துவிட்டது. முருகனைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. சாப்பிடவே மாட்டேனென்கிறான். இந்தச் சிறு வயதில் அவனுக்கு இத்தனை கஷ்டமும் கவலைகளும் ஏற்பட்டால் அவன் என்ன செய்வான். சுந்தரியின் அன்பினால் அல்லவா அவன் உடலும் குணமும் வளர்ந்தது. 

ஒரு கெட்டிக்கார சுந்தரியினால் நாங்கள் எல்லோருமே கெட்டிக்காரர்களாக இருந்தோம். ஆனால் அவளுடைய உயர்ந்த குணங்களும் அன்பும் மறையவில்லை. என் நெஞ்சுள்ள வரையும் என்னிடம் அது நிலைத்திருக்கும். கவலை மனிதனை அரித்துவிடும் என்று சுந்தரி அடிக்கடி சொல்வாள். எவ்வளவோ கவலைகளையெல்லாம் நான் சமாளித்துக் கொண்டு தான் வந்திருக்கிறேன். ஆனால் இது தாங்க முடியாத பேரிடியாக வந்துவிட்டதே. எப்படி மனதைத் தேற்றிக்கொள்வது! மழையைத் தாங்கலாம்; இடியைத் தாங்க முடியுமா? 

என் வீட்டிற்குள் போகவே பயமாக இருக்கிறது. சுந்தரி சமையலறையில் நிற்பது போலவே பிரம்மைத் தோற்றம் உண்டாகிறது! என்னைப் பார்த்து “எதற்குமே கவலைப்படாதீர்கள்” என்று சொல்வது போல இருக்கிறது. அவளுடைய ஆடைகளையெல்லாம் பார்க்கப் பார்க்க என் மனம் வெடித்து விடும் போலிருக்கிறது. கடவுள் எனக்கு ஏன் இப்படி ஒரு அபூர்வமான பாக்கியத்தைக் கொடுத்து விட்டுப் பழையபடி பிடுங்கிக் கொள்ள வேண்டும். எல்லாம் அவன் செயல் என்று சும்மாயிருக்க முடியாதா! 

சுந்தரியினால் நான் சகல சம்பத்தையும் பெற்றேன். என்னால் அவள் கண்ட சுகம் என்ன? என்னால் கஷ்டங்களைத் தான் அவள் அனுபவித்தாள். என்னோடு வந்திருக்கா விட்டால் அவள் எத்தனை சுக போகங்களோடு வாழ்ந் திருப்பாள். இந்த வயதில் இறந்திருக்கவே மாட்டாள். டாக்டரே சொன்னாரே மனோவேதனை காரணமாகவே சுந்தரியின் நோய் அதிகரித்து வந்தது என்று. அவள் பணத்தையெல்லாம் காலியாக்கினேன். அவள் நகைகளை யெல்லாம் விற்று விற்றுச் செலவழித்தேன். அவள் இதைப் பற்றி ஒரு தடவை கூட வருந்தியது கிடையாது. எனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தாள். நான் கணவன் என்று சொல்லிக் கொள்வதிலேயே அவளுக்கு இன்பமாம். எனக்கல்லவா அவள் இன்பத்தின் உருவாக இருந்தாள். சுந்தரி என் மனைவியாக இருந்ததனாலேயே நான் எவ்வளவோ பெருமையும் பூரிப்புமடைந்தேன். கோவில் குளங்களுக்கு அவளை அழைத்துக்கொண்டு போகும்போது கனவில் நடப்பது போலவே இருக்கும். அவளுடைய வேலைக்காரனாக இருக்கவே யோக்யதை உள்ள நான் அவளுடைய கணவனாக வாழ்ந்ததை நினைத்தால், அத்தகைய வாழ்வு இனி எனக்கு எந்த ஜென்மத்திலும் கிடைக்காதென்றே தோன்றுகிறது. அக்கம் பக்கத்திலுள்ளவர் களெல்லாம் சுந்தரியைப் பற்றிப் புகழாத நாளே கிடையாது. அவர்களெல்லாம் அவள் இறந்த அன்று அழுது புலம்பியதை நினைத்தால்! நானே அவர்களுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றவேண்டியதாகி விட்டது. உறவினர்கள் கூட அவ்வளவு மன வருத்தமடைந்திருக்க மாட்டார்கள். 

சுந்தரி இறந்தவுடன் எங்கள் உறவினர்கள் யாருக்காவது தந்தியடிக்க வேண்டுமா என்று பக்கத்து வீட்டுக்கா ரர் என்னிடம் கேட்டார். என்னால் பேசவே முடியவில்லை. துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டு விட்டது. ஒன்றுமே வேண்டியதில்லை என்று தலையை அசைத்து விட்டேன். என் தலை சுழன்றது. சுந்தரியின் தாயாருக்கு இந்த விஷயம் தெரிந்தால் எப்படித் துடிப்பாளோ! சுந்தரி இறப்பதற்கு முன்னமே அவளுடைய தாயாருக்குக் கடிதம் எழுதி வரவழைக்கலா மென்று நினைத்தேன். வயதானவள் தன் மகளை இப்பொழுதாவது பார்க்கட்டும், என்று யோசித்தேன். அவளுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை. இப்பொழுது சுந்தரி இறந்து போன தகவலை அவளுக்குத் தெரிவிப்பதால் என்ன பயன். தன் மகள் எங்கேயோ உயிரோடு இருந்து வருகிறாள் என்றாவது அவள் எண்ணிக் கொண்டிருக்கட்டுமே! 

சாரதாம்பாளுக்கு நான் துரோகம்தான் செய்திருக்கிறேன். தன் மகளோடு சுகமாக வாழ்ந்திருக்க எண்ணியிருந்தாள் அவள். அவளுடைய எண்ணத்தில் நான்தான் மண்ணைப் போட்டேன். இப்பொழுது அவள் என்னைக் கண்டால் பார்வையினாலேயே என்னைக் கொன்றுவிடக் கூடும். சுந்தரி அன்று என்னுடன் வாழ விரும்பியபோ நான் முடியாதென்று சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும்? சுந்தரி இன்று சுகமாகத் தாயோடு வாழ்ந்து கொண்டிருப்பாள். சாரதாம்பாளுக்கும் மகளைப் பிரிந்திருக்கும் படியான துன்பம் நேர்ந்திருக்காது. ஆனால் நான் என்ன ஆகியிருப்பேன்! எங்கோ ஒரு பூக்கடையில் சம்பள ஆளாக வறுமையுடன் போராடிக் கொண்டிருந்திருப்பேன். அப்படியாவது இருந்து தொலைந்தேனா! பிறவிக் குருடனுக்குத் திடீரென்று கண்ணைக் கொடுத்து உடனே பழைய படி பிடுங்கிக் கொண்டது போலல்லவா இருக்கிறது இப்பொழுது! குருடன் குருடனாகவே இருந்துவிட்டால் அந்தத் துன்பம் அதிகமாக உணரப்படுவதில்லை. ஆனால் கண் பெற்று இழந்துவிட்டால் அவனால் அதை சகிக்கவே முடியாது. பின் சொன்ன குருட்டு நிலைமைதான் எனக்கு வந்திருக்கிறது. அமர வாழ்வு வாழ்ந்தவனை நரகில் கொண்டு தள்ளிவிட்டால் எப்படி யிருக்குமென்பதை நான் நன்றாக உணரமுடிகிறது. 

எத்தனையோ நண்பர்கள் வந்து எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள். அவர்கள் சொல்வது ஆறுதலாக இருந்தாலும் என் துக்கத்தைப் பல மடங்கு பெருக்கிக் கொண்டே தான் இருக்கிறது. என் மாதிரி அனுபவமுள்ள ஒரு நண்பர் சொன்னார் “நீங்கள் இப்படி சதா துக்கத்தில் ஆழ்ந்திருப்பதில் பயன் ஒன்றுமில்லை. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இப்பொழுது உங்களுடையதாய் விட்டது. அவர்களை நன்றாகக் கவனித்து வாருங்கள்” என்று. 

பிள்ளைகளின் கதியை நினைத்தால் நான் இனி என்ன செய்வதென்றே புரியவில்லை. முருகனைப்பற்றி எனக்கு அவ்வளவு கவலையில்லை. மோகனாவை எப்படி வளர்ப்பது! அதன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் சுந்தரியின் ஞாபகம்தான் வருகிறது. அவளை என் அக்காளிடம் அனுப்பி விடலாமென்றால், அதனால் பலவித இடையூறுகள் ஏற்படலாம். இங்கேயே வைத்திருக்கவும் முடியாது. ஐந்து வயதுப் பிள்ளையை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் என்ன செய்வது! இனி முருகனோடு நானும் சேர்ந்து தோட்ட வேலையைக் கவனிக்க வேண்டும். சிறு பையன் தனியாகவே எத்தனை வேலைகளைக் கவனிப்பான். நானும் அவனும் தோட்டவேலையைப் பார்க்கப் போய் விட்டால் மோகனாவை யாரிடம் விட்டுவைப்பது. ஏதோ கொஞ்ச நேரத்திற்கு என்றால் பக்கத்து வீட்டாரிடம் விட்டு வைக்கலாம். தக்க வயதடையும் வரை அவளை எப்படி என்னால் வளர்க்க முடியும். இதோடு நாங்களே சமையல் செய்து சாப்பிடவேண்டியிருக்கிறது. நான் சமையல் செய்வேனா, தோட்ட வேலையில் முருகனுக்கு உதவி செய்வதா, மோகனாவைக் கவனித்துக் கொள்வதா! 

மோகனாவைக் கூட்டிக்கொண்டு போய் அவள் பாட்டியிடமே ஒப்படைத்து விடலாமா என்றுகூட ஒரு சமயம் தோன்றியது. எப்படியும் குழந்தை சுகமாக வாழ வேண் டியதுதானே! சாரதாம்பாளுக்கும் தன் பேத்தியோடிருப்பது ஒருவிதத்தில் ஆறுதலாக இருக்கும். இப்படியெல் நான் யோசித்துப் பார்த்தேன். ஆனால் நான் இப்படிச் செய்வது சுந்தரியின் லட்சியத்திற்கு நேர் விரோதமாக வந்து முடிகிறது. அவளே ஒருசமயம் சொல்லியிருந்தாள் என் குழந்தை மோகனாவின் வாழ்க்கை தாசியின் வாழ்க்கையாக இராதென்று. அதற்கு மாறாக நான் மோகனா வைச் சாரதாம்பாளிடம் கொண்டு ஒப்படைத்தால் என்ன ஆகும்! எங்கள் குழந்தை அந்த வீட்டில்போய் இருப்பதற்கே தகுதியில்லை. ஆனால் மோகனாவை நன்றாக வளர்ப்பதற்கு ஒரு வழி தேட வேண்டுமே! என்ன செய்வது? முருகன் அதைத் தன்னோடு கடைத்தெருவுக்கு அழைத்துக் கொண்டு போய் அதற்குத் தன் தாயின் நினைப்பு உண்டாகாதபடி ஏமாற்றி வருகிறான். இரவில் சுந்தரி படுத்திருந்த கட்டிலைப் பார்த்து அழுகிறது. “அம்மா எங்கே?” என்று அடிக்கடி கேட்கிறது. நான் என்ன பதில் சொல்வது? ஏதாவது கதை சொல்லித் தூங்கவைப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

குழந்தையை வளர்ப்பது லேசான காரியமல்ல. அதிலும் மோகனாவைப் போன்ற அறிவாளியான குழந்தையை என்னால் ஏமாற்றிச் சமாதானப்படுத்தவே முடியவில்லை. அதன் அழகிய முகம் அழுது அழுது கன்னிப்போய் விடுகிறது. மோகனாவை எப்படி வளர்க்கலாம் என்பதைப் பற்றிப் பலர் பலவித யோசனைகளைச் சொல்கிறார்கள். ஆனால் காரியத்தில் நடப்பது மட்டும் சுலபமாகத் தெரிய வில்லை. 

குழந்தையை வளர்க்கும் பொறுப்பை நானும் முருகனும் ஏற்றுக் கொள்வதானால் எங்கள் செலவுக்குப் பணம் சம்பாதிக்க முடியாது. டாக்டருக்கும் மளிகைக்கடைக்கும் பாக்கி ஏறிப்போயிருக்கிறது. நானும் முருகனும் பாடுபட்டுச் சம்பாதித்துத்தான் இந்தக் கடன்களையெல்லாம் அடைக்க வேண்டியிருக்கிறது. குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்றால் நானாவது முருகனாவது வீட்டிலேயே இருந்தாக வேண்டும். நான் வீட்டில் உட்கார்ந்து கொண்டு முருகனை மட்டும் சம்பாதித்துப் பணம் கொண்டு வரும்படி சொல்வது மிகவும் தப்பு. அவன் சிறுபிள்ளை. இப்பொழுது அவன் பார்த்துவரும் வேலையை இரண்டுபேர் இருந்தால் கூடப் பார்க்க முடியாது. இளம் வயதில் இப் படிக் கடுமையாக வேலை செய்தால் அவன் உடல் நறுங்கிப் போய்விடும். 

அவனை வீட்டில் இருந்து குழந்தையைப் பார்க்கச் சொல்லிவிட்டு நான் மட்டும் உழைத்துச் சம்பாதிப்பதென்றால் அதுவும் கூடாத காரியமாக இருக்கிறது. என் உடல் மிகவும் தளர்ந்து போய் விட்டது. முன்னைப் போல் ஓடியாடிப் பாடுபட இயலவில்லை. கடைத்தெருவுக்கு அலைய என்னால் முடியவில்லை. மேலும் முருகனைப் போல அவ்வளவு சாமர்த்தியமாகப் பேசவோ வேலை செய்யவோ எனக்குத் தெரியாது. கடைத்தெருவில் முருகனுக்குத்தான் அதிகப்பழக்கம். அவனால் தான் என் மீதிநாளைய வாழ்வு நடக்க வேண்டியிருக்கிறது. அவனுக்கு நான் உதவியாக இருந்து வந்தால் லகுவாகப் பணம் சம்பாதித்து வாழ்க்கையை நன்றாக நடத்த முடியும். நான் தோட்டத்திலுள்ள வேலை முழுவதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தோட் டத்தில் பூவை எடுத்துத் தயாராக வைத்திருந்தால் முருகன் அதைக் கொண்டு போய்க் கடையில் போட்டுவிட்டு அங்குள்ள வேலையையும் பார்த்து விட்டு செளகரியமாக வீட்டுக்கு வந்துவிடலாம். இதுதான் சரியான திட்டம். 

திட்டமெல்லாம் போட்டுவிட்டேன். ஆனால் மோகனாவைத் தனியே விட்டு விட்டு நாங்கள் வேலைக்குப் போவதெப்படி? தோட்டத்திற்கு ஒரு வேலையாள் போட்டுவிட்டால் சௌகரியமாக இருக்கும். நாங்களே வேலையாளாக இருக்கும் போது எப்படி வேறு வேலையாள் வைத்துச் சம்பளம் கொடுக்கமுடியும். மேலும் எங்களைப் போலப் பாடுபட்டு அந்த வரண்ட தோட்டத்தில் பல னெடுக்க யாரால் முடியும்? ஆகவே வேலையாள் வைப்பதென்பது கூடாத காரியம். 

மோகனாவைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தால் எங்களுக்கு வேலையும் ஓடாது. அதை அழாமல் பார்த்துக்கொள்ள என்னால் முடியவில்லை. மோகனாவை வளர்த்து வருவதற்கு வேறு யாரையாவது ஏற்படுத்தினால் தான் நானும் முருகனும் நிம்மதியாக வேலை பார்த்துப் பணம் சம்பாதித்துப் பொருள் சேர்க்க முடியும். இல்லை யானால் அவன் எனக்குப்பின் நாதியற்றுத் தரித்திரினாகத் தெருவில் நிற்க வேண்டியிருக்கும். இன்னும் நாலைந்து வருஷம் பாடுபட்டுப் பணம் சேர்த்து அவனுக்கு ஒரு கலியாணத்தை முடித்து வைத்துவிட்டால் பின்பு எப்படியும் பிழைத்துக் கொள்வான். தங்கையையும் கவனித்துக் கொள்வான். நான் இப்பொழுது வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டே யிருந்தால், பிள்ளைகள் இரண்டும் சீரழிந்து போய் விடும். இன்று முருகனிடமே கேட்போம் இதற்கு என்ன செய்வதென்று.

– தொடரும்…

– வளர் பிறை (நவீனம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1946, கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை ஸ்டேட்.

சிற்பியின்-கனவு சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *