ஜாயிண்ட் எக்கவுண்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2026
பார்வையிட்டோர்: 1,840 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

பழைய சைக்கிளை மதிலோரம் சாத்திவிட்டு பெரியசாமி வங்கிக்குள் நுழைந்ததே ஒரு போர்க்களத்துக்குள் நுழைவது போலத்தான் இருந்தது. தோளில் அழுக்குத் துண்டு, காலில் தேய்ந்த செருப்பு. கலைந்த தலைமயிர். நேராக மனேஜர்  அறைக்குள் நுழைந்தார்.
வவுனியா வங்கியின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் பெரியசாமி நுழைந்தபோது, வங்கி மனேஜர் சுதாகர் கோப்புகளைப் புரட்டிக்கொண்டிருந்தார். கணனி அவருக்கு முன்பு இருந்தது. ஆனாலும் கோப்புகள் இன்னமும் முற்றிலும் மறைந்து விடவில்லை. இனி வருங்காலத்தில் காலாவதியான முதியவன் போல இந்தக் கோப்புகளை கணனிகள் மொத்தமாக  காணாமல் ஆக்கி விடும்.

பெரியசாமி தனது நைந்து போன சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு, கையில் இருந்த பழைய பையை மேசைமேல்  வைத்தார்.

“என்ன பெரியசாமி, விடியவே வந்திட்டீங்க? நீங்களும் 15 வருடமாக விடாப் பிடியாக  வந்து கொண்டேயிருக்கிறீங்க.. விஷயம் நான் முன்னமே சொன்னதுதான்… முனியம்மா இல்லாம காசு தர முடியாது, அது ஜாயிண்ட  எக்கவுண்ட்” என்றார் மனேஜர் கறாராக.

பெரியசாமி ஒரு நீண்ட பெருமூச்சோடு “தம்பி, முனியம்மா எங்கே இருக்கான்னு எனக்கே தெரியாது. 2009-ல அந்த முள்ளிவாய்க்கால்ல சனம் எல்லாம் திக்குத் திசை தெரியாம ஓடின ஓட்டத்துல, அவ என் கைய விட்டவ தான். டமால்னு ஒரு சத்தம் மட்டும் தான் கேட்டுச்சு. பெரிய செல் வந்து விழுந்து வெடிச்சிச்சு அதுக்கப்புறம் யார் இருந்தா.. யார்  இல்ல..யார் கொல்லப்பட்டாளான்னு யாருக்குத் தெரியும்? சிலர் இப்பவும் சொல்றானுங்க அவ இராணுவ முகாம்ல இருக்கான்னு, பொடியளோட இந்தியா போய்விட்டா ளென்கின்றார்கள் சிலர்.. இன்னும் சிலர் அவ அந்த மண்ணோட மண்ணாய் போயிட்டான்றானுங்க.”

மனேஜர் நிமிர்ந்து பார்த்தார். “புரியுது பெரியசாமி, ஆனா பேங்க் ரூல்ஸ் அப்படி இல்லையே”.
மனேஜர் தலையில் அடித்துக் கொண்டார்.

படிக்காத கிராமத்து விவசாயி.. கண்ணில் எந்தப் பயமுமில்லை. தான் நினைத்ததை சொல்கிற வெள்ளேந்தி. இப்படியான மனிதர்களைத் தான் போர் தின்று தின்று மென்று துப்பிக் கொண்டிருக்கின்றது. பெரியசாமி தான் கொண்டு வந்த பாக்கை மனேஜரிடம் தள்ளி விட்டார்.

“பெரியசாமி, என்ன லஞ்சமா ? நான் ஏற்கனவே சொல்லிட்டேன், உங்க மனைவி முனியம்மா கையெழுத்து இல்லாம ஒரு சதங் கூடத் தர முடியாது. அவங்க வரணும்?”

பெரியசாமி சாவகாசமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, வெற்றிலையை மடிக்க ஆரம்பித்தார். “அதான் ஐயா மேட்டரே! அவ காணாமப் போய் பதினைஞ்சு வருஷம் ஆகுது. அவ கூடப் பழகுகிற  மை போட்டுப் பார்க்கிற கோழிக்கார செல்லம்மாக் கிழவி கூடச் சொன்னா, ‘முனியம்மா சாகிற ஆளில்லை மெட்ராஸ்க்குப் போயிரிச்சு’ன்னு. மாதுளை மரத்தடியில் நின்னுட்டு இருந்ததாய் மை காட்டுது என்பது பொய்யாய் இருக்குமோ ??.. ஒருவேளை மெட்ராஸ்ல மாதுளை மரமுள்ள எங்காவது பெரிய மனுஷன் வீட்ல சோறு ஆக்கிப் போட்டுட்டு இருப்பாளோன்னு தோணுது சார் . நீங்க வேணா ஒரு போன் போட்டுப் பாருங்களேன்?”

மனேஜர் திகைத்தார்.

“மெட்ராஸ்ல மாதுளை இருக்கிற எந்த வீடுன்னு நான் தேடுறது..யாருக்குப் போன் பண்றது?   மையும் மயிரும்….நீ என்ன லூசா பெரியசாமி?” மனேஜர் கோபமாக கேட்டார்.

பெரியசாமி மேசையைக் குத்தினார்.. “அதான் அய்யா சம்பவமே ? அவதான் இப்ப இல்லையே, உங்களால கூடத் தேட முடியாதே சார் அப்புறம் நான் எப்படித் தேடுவது? எங்கே தேடுவது?  எதுக்கு அவளின்ர கையெழுத்து? காசு என்னோடது? நான் வேணா என் ரெண்டு கை ரேகையையும் வச்சுத் தர்றேன். பத்தலன்னா என் கால் பெருவிரல் ரேகையைக் கூட வச்சுக்கங்க. இதோ பாருங்க…” என்று காலைத் தூக்கி மேசை மேல் வைக்கப் போனார்.

“யோவ்… யோவ்… என்ன பண்ற? காலை இறக்குய்யா!” என்று அலறினார் மனேஜர். “இது வங்கிய்யா, காய்கறிச் சந்தை இல்ல. வங்கி ரூல்ஸ் படி ரெண்டு பேர் அக்கவுண்டெண்ணா ரெண்டு பேரும் வரணும்.”

“பதினைஞ்சு வருஷம் ஆச்சு, அவ இல்லன்னு ஒரு ‘டெத் சர்டிபிகேட்’ (இறப்புச் சான்றிதழ்) உன்னால் எடுக்க முடியாதா  பெரியசாமி ?? அப்படி இருந்தா எடுத்துக் குடுங்க, நான் பணத்தைத் தாரேன். அதிலே ஒரு பிரச்சனையுமில்லையே..”

பெரியசாமிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “சர்டிபிகேட்டா? தம்பி… அங்கே விழுந்த செல்லுக்கும், கொத்துக் குண்டுகளுக்கும், துப்பாக்கி ரவைகளுக்கும் கணக்கே இல்லை, இதுல  தப்பினது யாரு,  மிஞ்சினது யாரு  என்னு யாருக்குத் தெரியும்..சர்டிபிகேட்டுக்கு நான் எங்கே போறது? இங்க போராடிய இயக்கப் பொடியங்களுட்பட அனைவரும் இதுக்கு விதிவிலக்கல்லவே. அனைத்தும் இருக்கு எண்ணும் சொல்றாங்க, இல்லையென்றும் சொல்றாங்க.. நாம கும்பிடுகிற கடவுள்களும் அப்பிடித்தான்.. இருக்கெண்டும் சொல்லுவினம் இல்லையெண்டும் சொல்லுறாங்க … எதை நம்பிறது   எதை நம்பாமல் விடுறது ..
என் கண்ணு முன்னாடி முள்ளிவாய்க்காலில செத்து விழுந்தவனையே வீட்டுக்காசு எடுக்கிறதிற்காக உயிரோட எழுப்புகிற ஊர் விதானை எனக்கு மட்டும் ஏதும் பண்ணித் தொலைக்க மாட்டேன்கிறானே சார்…முள்ளி வாய்க்கால்ல செத்தவங்க  கணக்கு  இன்னமும் தெரியாதாம்..கணக்கு இன்னும்  இல்லையாம். நான் எப்படித் தம்பி என் முனியம்மா செத்திட்டான்னு  யாருட்டக் கடிதம்  வாங்கிறது.  நானே எழுதித் தரட்டுமா” என்றான் வெள்ளேந்தியாக  பெரியசாமி..

“டெத் சர்டிபிகேட்… அதாவது இறப்புச் சான்றிதழ் அது நீங்க எழுதுறதுல்ல பெரியசாமி.. அரசாங்கம் தாறது” என்றார் மனேஜர்.

“ஆமா..ஆமா  நீங்க சரியாத் தான் சொல்லுறீங்க சார், அதைக் கொடுக்கிறது நம்மள கொன்ற அரசாங்கம் தானே? ஆனா அந்த அரசாங்கம் என் பொண்டாட்டியைக் கொன்னுட்டோம்னு ஒத்துக்கவா போகுது? இல்லவே இல்லையே சார்..”

மனேஜர் சுதாகர் ஏதோ சொல்ல வாயெடுத்தார், ஆனால் பெரியசாமி கையை உயர்த்தி அதனைத்  தடுத்தபடி

“சார், நியாயத்தைப் பேசணும். முள்ளிவாய்க்கால்ல குண்டு விழுந்தப்ப பல ஆயிரக்கணக்கான சனம் செத்துது..காணாமப் போச்சு. அரசாங்கத்தைப் போய்க் கேட்டா, ‘நாங்க யாரையும் கொல்லலையே… எல்லாரும் எங்கேயோ ஓடிட்டாங்க’ன்னு தான் சொல்றாங்க…அப்படியிருக்கப்ப, அவங்க எப்படி என் பொண்டாட்டிக்கு ‘இறந்துட்டா’ன்னு சர்டிபிகேட் தருவாங்க? செத்தவனையே காணோம்னு சொல்ற அரசாங்கத்துக்கிட்ட போயி, நான் எப்படித் தம்பி அத்தாட்சிப் பத்திரம் வாங்குறது?”

பெரியசாமி ஆவேசமாக பேசினார் .

“அரசாங்கம் சொல்லுது நாங்க கொல்லேல்ல..அவங்க ஓடிப் போயிட்டாங்க ..காணாம  போயிட்டாங்க எண்ணு..  அரசாங்கத்துக்கு தெரியாம யாரும் ஓடலாமெண்ணா என்ன அரசாங்கம் நடத்துறாங்க இவங்க தம்பி…தேடித் தர வேண்டியது  அரசாங்கம் எல்லோ..
ஆனா நீங்க சொல்றீங்க அவளை நேர்ல கூட்டிட்டு வரணும்னு… எங்கயிருந்து நான் தேடுவேன்…உயிரோடு இருக்குன்னு சொல்லுற அரசாங்கத்திட்ட அரச உத்தியோகத்தனாரான நீங்க..  எங்க முனியம்மா எண்ணு  நீங்க ஏன் கேட்கக் கூடாது.. என் மனசு சொல்லுது அவ அந்த மண்ணுக்குள்ள தான் தூங்குறான்னு. இப்ப நான் யாரை நம்புறது? எங்க தேடுவது?”

சுதாகருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. வங்கி விதிகள் ‘சான்றிதழ்’ கேட்கின்றன, ஆனால் ஈழத்து யதார்த்தம் ‘சாட்சிகளையே’ புதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஏழை மக்களுக்கு எதை புரிய வைப்பது? புரிய வைக்க எம்மிடம் எந்த நியாயம்தான் உள்ளது?

“ஒருவேளை அவ எங்கேயாவது மூளை குழம்பி ஒரு மூலையில கஞ்சிக்கு வழி இல்லாம உசிரோட இருந்தா, நான் அவளைச் செத்துட்டான்னு சொல்றதும் சர்டிபிக்கெட் வாங்கிறதும் பாவமில்லையோ தம்பி..” பெரியசாமி நைந்த குரலில் கேட்டார்.

மனேஜர் அமைதியானார். பெரியசாமி தொடர்ந்தார், “நீங்க என்னடான்னா, ஜாயிண்ட் அக்கவுண்ட்ல இருக்கிறவ நேர்ல வரணும்ன்றீங்க. இப்பிடித்தான் இந்தியாவில  ஜாயிண்ட அக்கவுண்ட் காரன் ஒருத்தன்  தன் தங்கையின்  இறப்புச் சான்றிதழுக்கு அலைந்தலைந்து கிடைக்காமல்   சுடலையில் போய்த்தோண்டி தன் தங்கச்சியின் எலும்புக்கூட்டை வங்கிக்கு தூக்கிட்டுப் போனானாமே… நீங்க சொல்றதைப் பார்த்தா, நானும் முள்ளிவாய்க்கால் வரைக்கும் போயி, அங்க இருக்கிற மண்ணைத் தோண்டி, அவளோட எலும்பாவது கிடைக்குமான்னு பார்க்கணும் போல. அதுல முனியம்மாவோட எலும்பு எதுன்னு எனக்கு எப்படித் தெரியும்?”

பெரியசாமியின் குரல் கம்மியது.

“பெரியசாமி, விளையாடாதீங்க. உங்க மனைவி காணாமப் போயிட்டாங்கன்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா? கோர்ட்ல இருந்து ‘இறந்துட்டாங்கன்னு’ சர்டிபிகேட் வாங்குனீங்களா?” திரும்பவும் வங்கி மனேஜர் பழைய பல்லவியைப் பாடினார்.

பெரியசாமி அப்பாவியாகச்்சொன்னார். “போலீஸ் ஸ்டேஷன் போனேங்கய்யா. அந்த இன்ஸ்பெக்டர் ‘பொண்டாட்டியத் தொலைச்சிட்டு வர்றியே, உனக்கெல்லாம் வெக்கமா இல்லையா?’ன்னு பச்சைப்படியே கேட்டாரு சார். அவரு இள இரத்தம் போர்க் காலத்தை பற்றித் தெரியாத ஆளு… இப்ப நீங்க என்னடான்னா கோர்ட், கேஸ்னு பயமுறுத்துறீங்க. சார், அந்த அக்கவுண்ட்ல இருக்கிறது என் காசுங்க. அது முனியம்மா காசே இல்லை. அவளுக்கு ஒரு சதங் கூடச் சம்பாதிக்கத் தெரியாது. அப்புறம் எதுக்கு அவ கையெழுத்து?”

“அது ஜாயிண்ட் அக்கவுண்ட் பெரியசாமி… ஜாயிண்ட் அக்கவுண்ட்!” என்று கத்தினார் மனேஜர்

“அதான் அய்யா சொல்றேன், அவ என் கூட ‘ஜாயிண்டா’ இல்ல, ‘தனிச்சு இப்பிடிப் புலம்ப விட்டிட்டு அவ போயிட்டா! நீங்க வேணா எங்க ஊர்  காரனுகளை கேளுங்க. ‘பெரியசாமி பொண்டாட்டி ஓடிப் போயிட்டா’ன்னு தான் இப்ப ஊரே சொல்லுது, போர் அப்படித்தான் மக்களைப் புலம்ப வைச்சிருக்கு…போருக்குள்ள உழன்ற நாங்களெல்லாம் முட்டாளுகளென்று தான் இப்பத்தை உலகம் நம்புது.. உங்களுக்கு மட்டும் ஏன் புரிய மாட்டேங்குது சார்!

“தம்பி, அந்தச் சேமிப்புப் பணம் நான் காடு, கழனியில விவசாயம் பண்ணிக் கஷ்டப்பட்டுச் சேர்த்தது. எனக்கு இப்ப நீரழிவு வருத்தம்  வந்து முத்திப் போச்சு. ஆஸ்பத்திரிச்ல செலவுக்கு காசு வேணும். முனியம்மா வாறாளோ இல்லையோ அவ வர்ற வரைக்கும், நான்  எப்பிடித் தம்பி உயிரோடை இருக்கிறது.”

“சரி பெரியசாமி, அந்தப் பையில என்ன வச்சிருக்கீங்க?” என்று பேச்சை மாற்ற முயன்றார் மனேஜர்..

பெரியசாமி பையைத் திறந்தார் அதில்  பழுத்த பெரிய கறுத்தக் கொழும்பான் மாம்பழங்கள் இருந்தன . “இது எங்க வீட்டுக் கறுத்தக் கொழும்பான் தம்பி. முனியம்மாவுக்கு இதுன்னா ரொம்ப உசிரு. அவளைக் காணாமப் போனதுல இருந்து நான் இதைத் திங்கிறதே இல்லை. அதைத் தான் உங்களுக்கெண்ணு புடுங்கியாந்தன்”.

பெரியசாமி அந்தப் பையை மறுபடியும் மனேஜரை நோக்கித் தள்ளியபடியே “நீங்க அந்தப் பணத்தைக் குடுத்தீங்கன்னா, அந்தப் புண்ணியத்துல ஒரு வேளை சோறு தின்னாவது நான்  பிழைச்சிருவன் தம்பி” என்றார் .

மனேஜர்  சுதாகருக்கு  இதயம் கனத்தது.

சட்டமும், விதிகளும் இந்தப் போர் தின்று முடித்த உயிர்களை திரும்பியும் பார்ப்பதில்லை. அதை யாரும் பேசுவதும் இல்லை. எல்லோரும் அவற்றை மறக்க முயல்கின்றார்கள். செத்தவர்கள் யார் ?எத்தனைபேர் ?? காணாமல் போனோர் எங்கே ?? என்பதெல்லாம் இன்றுவரை விடையறியாக் கேள்விகள்.

பெரியசாமியின் வாழ்வைச் சிதைத்ததுபோல ஈழத்தே அனைவரின் கண்முன்னாலும்  நடந்து முடிந்த போர்  வெகு அற்பமானது போல இன்றைய  மனிதர்கள் வாழத் தலைப்பட்டிருந்தார்கள். 

மனேஜர்  எழுந்து பெரியசாமியின் தோளைத் தொட்டார்.

“பெரியசாமி, வருத்தப்படாதீங்க. நான் இந்த ஏரியா விதானைக்கு  ஒரு ஸ்பெஷல் கடிதம்  தாறன். ‘காணாமல் போனோர்’ பட்டியல்ல அவங்க பேர் இருக்கான்னு பார்த்துட்டு, அப்படி இல்லைண்ணா மனிதாபிமான அடிப்படையில இதை எப்படிச் செய்யலாம்னு யோசிப்போம் . நீங்க அந்தப் கறுத்தக் கொழும்பான் பழங்களைச   சாப்பிடுங்க, உங்க முனியம்மா நிச்சயம் ஒருநாள் வருவா.”

பெரியசாமி சிரித்தார், ஆனால் அந்தக் கண்களில் ஈரம் மறையவில்லை. “சரி தம்பி, அடுத்த முறை வரும்போது அந்த விதானையையும் கையோட கூட்டிட்டு வர்றேன். ஆனா ஒன்னு, அவர் கிட்டயும் ‘உன் பொண்டாட்டி எங்கே?’கையோட கூட்டி வா ன்னு கேட்டுடாதீங்க”, என்று சொல்லிவிட்டுத் தனது பழைய சைக்கிளை நோக்கி நடந்தார்.

வங்கியின் கண்ணாடிச் சுவர்களுக்குப் பின்னால் இருந்த அதிகாரிகளுக்குத் தெரியவில்லை, அந்தப் பெரியசாமி சுமந்து செல்வது தீரா நோயை மட்டுமல்ல, ஒரு இனத்தின் தீராத வலியை என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *