கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2026
பார்வையிட்டோர்: 2,165 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடப்புல ‘சைக்கில்’ மணி அடிக்குது. எண்டமகன் கொஞ்ச நாளாக்காயிதம் வரக்காட்டல்ல. அவனுக்குக் கொழும்புல கிளாக்கு வேல. அது மிச்சம் பெரிய கயிற்றமான வேலயாம் எண்டு போனமுற காயிதம் போட்டிருந்தான். பாவம், இண் டைக்குத்தானாரிக்கும் எழுதியிரிக்கான். கடப்படிக்கு நடக்கன். ‘பீயோன்’ “கெதியா வாகா” எண்டு கிணத்தடிலபுள்ளய உட் டுத்து வந்தவன் மாதிரி அவசரப்படுறான். அவன் ஊர்முழுக்க எல்லுவா காயிதம் குடுக்கோணும்? காயிதம் எண்ட அண்ணர் அனுப்பினதாம். பெரிய புதுனமா இரிக்கி.

பக்கத்து ஊட்டுக்கந்தையா வாத்தியார்ர பொண்டில் நல்லாப்படிச்சவள். அவள் தான் காயிதம் எல்லாம் வாசிச்சிசொல்ற. அண்ணன் இண்டைக்கு என்னமனம் வச்சி இந்தக் காயிதத்த எழுதி இரிக்காரோ தெரியா! எனக்கு ரெண்டுமூணு தலமயிரும் நரச்சிப் பொயித்து. நான் சின்னப்புள்ளயா இரிக்கக்குள்ள என்ன பள்ளிக்குக் கூட்டிப் போறத்துக்கு வாத்திமார் வருவாங்க. அப் பன், “எண்ட பொம்புளப்புள்ள படிக்கத் தேளுவல்ல’ எண்டு சொல்லுவாரு. அண்ணன் மட்டும் தான் பள்ளிக்குப் போற!

வந்த காயிதத்த கைக்குள்ள பொத்திற்று கந்தையா வாத்தி யார்ர பொண்டிலுட்டப் போறன். கடிநாய் ஒண்டு வளத்து வச்சிரிக்கார் வாத்தியார். அதுக்காமெண்டி கடப்புல நிண்டு ‘புள்ளே பாக்கியம்” எண்டு வாத்தியார்ர பொண்டிலக் கூப்பிடு றன். “என்ன சந்தணக்க” எண்டுத்து வளவுக்க கூட்டிப் போறாள்.

பொட்டையிற்றக் காயிதத்த வாசிக்கக் குடுக்கன். அந்தப் பொட்ட வாசிக்குது. தமிழ்லதான் வாசிக்குது. எனக்கு அது ஒள்ளுப்பமும் வௌங்குதில்ல.

“இத ஒள்ளம் வெளக்கமாச் சொல்லு புள்ள.”

“என்ணெண்டா சந்தணக்க. கொழும்புல வேலசெயிற உண்ட மகன் நடராசா ஆரோ ஒரு பொட்டயோட கூடித்துத்திரியிறா னாம் எண்டு, உண்ட சின்னத்தம்பி அண்ணன் எழுதி இரிக்கார்.”

“அதெப்பிடிப் புள்ள புளியந்தீவீல இரிக்கிற அண்ணனுக்கு கொழும்புல நடக்கிற புதுனம் தெரியிற?”

“அவரு போன கிழம கொழும்புக்குப் போனதாம். நடராசாவோட வேல செயிற பொடியன் ஒருவன் நடராசா பொட்டையோட திரிஞ்சத்தக் காட்டுனானாம்.”

எனக்குப் பத்தி எழும்புது கோவம்.

“இந்த தோஷங்கெட்டவனுக்குக் காரதீவுல பொண் இல்லாமயா கொழும்புக்குப் போயிரிக்கான். எந்த வேசையோட திரியிறானோ?” ஊரார்ர ஊடெண்டும் பாராம கொம்புறன்.

“வேற என்ன புள்ள எழுதி இரிக்காரு.”

”அவருக்கு அது பெரிய வெக்கமா இரிக்காம். அவன அப் பிடி உடப்படாதாம். குடும்பத்துக்கே கெட்டபேராப் பொயித் திருமாம். அவர்ர மகளும் எஸ். எஸ். ஸி. பாஸ் பண்ணி இரிக்கா ளாம். அவன அப்பிடி உட்டா இனியாகுதல் நாம உறவா இரிக்கிறல்லயா எண்டும், எல்லாத்துக்கும் அவரு வாறாராம் எண்டும் எழுதி இரிக்கார்.”

“அந்த மனிசன் இவளவு நல்ல மனதோட இரிக்கக் குள்ள நாசமத்துப் போவான் செஞ்ச வேலையப்பாரன்.” பெத்த புள் ளய இப்பிடித் திட்டப்படா எண்டுதான் வயது போன ஆக்கள் சொல்றாங்க. எண்டாலும் இந்த தப்பிலி வேல செஞ்சா எந்தத் தாய் எண்டாலும் ஏசாம உடுவாளா?

அப்பனையும் அம்மையையும் திண்டன் நான். நடராசா பொறந் தோண்ணே அவய அப்பனத் திண்டுத்தான். அவருக்கு என்னோட நல்ல விருப்பம். வேற பொண்டுகளக் கண்ணாலயும் பார்க்க மாட்டான் மனிசன்! நான் கேக்கிற தெல்லாம் வேண் டித் தருவாரு. எனக்கு ஒண்டும் குறைய உடமாட்டாரு.

அண்ணன் இருந்தாரெண்டு, அவர் என்னத்த வெட்டிக் கிழிச்ச? புளியந்தீவாள் ஒருத்தியக் கட்டித்து இரிக்காரு. பொண் டாட்டியக் கண்ட புறகு இஞ்சாலப்பக்கம் தல வச்சிச் படுக்கிறது மில்ல. அவருக்குக் காசிக்குக்குறைச்சல் இல்ல. அவரு தேத்தாத் தீவில் வாத்தியார். பொண்டாட்டியும் வாத்திதான். எண்டாலும் உடப்பிறப்பா இருந்தபடியா எ ல் லுவா ஆத்திரப்பட்டு மருமகண்ட தப்பிலித்தனத்த எழுதி இரிக்காரு!

நான் வெட்டுக்குத்துக்காலத்தில வட்டைக்கபோவன். கந்து தாவைக்கப் போற பொண்டுகளோடதான் நான் போற. அவளுகளும் என்னப் போல புரிஷன் செத்தவளுகள் தான். விட்ட விடியங் காட்டில கூதல் கொடுகக் கொடுக எழும்பித் துப் போவன். நடராசா பால்குடிக்கிற புள்ளயா இரிக்கக்குள்ள அவன பக்கத்து ஊட்டுப் பாரி அக்கயிற்ற உட்டுத்துப் போவன். பாரி அக்கைக்கும் அவனப்போல ஒரு பொடியன் இரிக்கான். ரெண்டு பேரையும் பாரியக்க பாத்துக்கொள்ளும்.

கந்து தொவைக்கிற நேரம் கால் எல்லாம் முள்ளுக்குத்துறமாதிரி நோகும். எருமமாடு செய்யிற வேலைய பொண்டுகள் செஞ்சா என்ன மாதிரி இரிக்கும்? கம்பால நெல் அடிக்கிற படியா பூப்போல இரிக்கிற கைத்தோல் எல்லாம் உரியும். மாப்போல இரிக்கிற சதிரத்த வெயில் கருக்கும்! அந்நேரத்தில் எல்லாம் இவர நெனச்சி குழறுவவரும். குழறித்தான் என்ன பலன்? வட் டைக்க போறத்தாலதான் நானும் புள்ளயும் சோறு தின்ற! வட்டைக்கபோகாத நேரத்தில் அவல் இடிப்பன்.

ஒரு நாள் நான் வளஞ்ச வட்டைக்க போகக்குள்ள மொத லாம் குறிச்சியில இரிக்கிற பொன்னன் பொன்னன் என்னப் பாத்து பல்லக் காட்டுனான். நான் என்ன வேசையாடுறவளா அவனப்பாத்துச் சிரிக்க? பையத் தலயக் குனிஞ்சித்துப் பொயித்தன்.

நான் ஒள்ளம் வடிவுதான். நடராசாட அப்பன் எண்ட உதடு பயத்தங்கிளிர சொண்டு மாதிரி நல்ல செகப்பா இரிக்காம் எண்டு சொல்லுவாரு. நான் உரமாத்தான் வெத்தில பாக்கும் சப்புற! அம்ம எனக்கு நல்லா மூக்குப்புடிச்சி இரிக்காவாம். எண்ட மூக்கு நல்ல கூராம் எண்டு சொல்லி தலையத் தடவி உடுவாரு. எண்ட தலமயிர் நல்ல சுருட்ட – இறால் சுருண்ட மாதிரி! எண்டமுகம் பாவப்பழம் மாதிரி இரிக்காம் எண்டு கொஞ்சி சொத்தையக் கடிப்பாரு. எனக்கு வெக்கமா இரிக்கும்! எண்ட கண் ஒள்ளம் பெரிசிதான். கொழந்தப் புள்ளயா வெள யாடித்திரியக் குள்ள என்னோட சண்ட புடிக்கிற புள்ளயள் ‘முட்டக்கண்ணி’ எண்டு ஏசுவாளுகள். அத அப்பனுட்டச் சொன்ன ஒடனே பெரியகண் தான் பொம்பிளையளுக்கு வடிவு எண்டு சொல்லுவாரு.

நடராசாவப் பொறமுந்தி இவரு பகலயிலயும் வந்து எண்ட கையப்புடிச்சி இழுப்பாரு. தென்ன பட்டப் பகலையிலயுமா?’ கைய உதறி உடுவன். அந்நேரமெல்லாம் இந்த ஆள் சாகப் போகுதெண்டு ஆருகண்ட? அதநெனைக்க கொழறுவதான் வரப் பாக்குது. அந்த ஆளுக்கு வஞ்சம், சூது தெரியா. அந்தச்சதி ரத்தையும் மண் திண்டுத்தே!

பொன்னன் சிலநேரம் ஊட்டுப் பக்கமும் வருவான். எனக்குப் பயம் வரும். நான் பாரி அக்கையிர ஊட்ட ஓடிருவன்.

ஒரு நாள் பொன்னன் என்னப்பாக்கிறத்தையும், கண்ணடி கிறத்தையும் கந்தையாவாத்தியாருட்டச் சொன்னன். அவரு “ஏன்பெட்ட பின்ன அவன் விரும்பினாக் கட்டிக்கவன்.” எண்டு சொன்னார்.

மரத்தால உழுந்தவன மாடுவெட்டுற கணக்காத்தான் இரிந் திச்சி எனக்கு. ‘வேணாம் ஐயா. கண்ணகத்தா யறிய புரிஷன் வேணாம். எண்ட புள்ளய நான் பாடுபட்டு வளத்துக்குவன்.” வாத்தியார் மறுகா அதப்பத்திப் பேசல்ல. நான் வேற ஆருக்கும் வாண்டு செத்த இவருக்கு ரெண்டகம் செய்யிறதா?

நடராசா ஒள்ளுப்பம் பெருத்துற்றான். அவ்வளவுக்கு அவன வளத்துற்றனே எண்டு பெரிய சந்தோஷம். பாரி அக்கயிர பொடியன் பள்ளிக்குப் போகத் தொடங்க இவனும் பள்ளிக்குப் போகத் தொடங்கிற்றான். அவன் பள்ளில நல்ல கெட்டிக்காற னாம் எண்டு கந்தையா வாத்தியார் சொல்லுவாரு.

நடராசா அஞ்சாம் வகுப்பு பாஸ் பண்ணின உடனே, “நான் அவனக்கொண்டு உப்போடப்பள்ளில சேத்து உடுறன். காசி கட்டத் தேளுவல்ல. நல்லா இங்கிலீஸ் படிக்கலாம்” எண்டு கந்தையா வாத்தியார் சொல்லி, நடராசாவுக்கு ஊசேத்தி கூட் டித்துப் பொயித்தாரு. என்ன செய்யிற? கந்தையா வாத்தியார் சொல்றத்தக் கேக்கத்தானே வேணும். நம்மட நன்மைக்குத் தானே சொல்றாரு. அந்த மனிசண்ட புண்ணியத்தில எல்லுவா ஒள்ளம் மானம் மரியாதையா இரிக்கிற!

இப்பிடி யெல்லாம் கயிற்றப்பட்டு வளத்து… அண்ணன்ட காயிதத்தக் கண்ட பொறகு ஆக்குன சோத்தையும் தின்ன மனம் வருகுதில்ல. எண்ட சீவியத்தில் இவர் செத்தத்துக்கும் இவ்வளவு யோசின யோசிக்கல்ல. இந்தத் தெறிப்பான் எங்கையும் போய் உழுந்திரப் படாதெண்டு கண்ணயம்மாளுட்ட எத்தின நேத்திக் கடன் வச்சிரிக்கன். அதுக்குள்ள இவண்ட கூத்தப்பாரன்!

பாரியக்க சொல்லும் பொட்ட, கொழும்புல வேசைகளும் தாசிகளும் ஒரு கொள்ளப்பேர் இரிக்காளுகளாம். அதோட கந் தோர் வளியயும் கடவளியயும் பொட்டைகள் கொள்ளயா வேல செய்யிறாளுகளாம். அவளுகள் பெரிய வம்புகளாம்! பலசாதியும் கலந்த ஊராமே அது! அதுல இவன் எந்தச் சாதியில் கொண்டு ழுந்துற்றானோ தெரியா. ஒள்ளம் இழப்பான சாதி எண்டா கார தீவுல நான்குடி இரிக்கையும் தேளுவல்ல!

நடராசா சம்பளம் எடுக்கத் தொடங்கின புறகு ஒள்ளம் ஆறுதல் எனக்கு. இப்பநான் வெட்டைக்க போறல்ல. தம்பியப் போல கிளாக்கு மார்ர தாய்மார் எல்லாம் குமருகளப் போல இரிக்காளுகளாம். “நான் உளைக்கக்குள்ள நீ பாடு படப்படா” எண்டு அவன் கட்டள!

கொஞ்ச நாளா காயிதமும் போடாதவன் இனி காசெங்க அனுப்பப் போறான்? மாமனாரப்போல அவனுக்கும் பொண்டாட்டி தான் தஞ்சம். அம்ம எங்க தெரியப் போகுது. பொண்டாட்டி மயக்கிப் போடுவாள்.

பழய குருடி கதவத்திறடி எண்டு இனி வட்டைக்க போகோ ணும். அவல் இடிக்க உலக்க தூக்கோணும். புள்ளய பெத்து வளத்தும் புண்ணிய மில்ல!

யோசிச்சி யோசிச்சி இரிக்க நல்லா பொழுது பட்டுப்போகுது வௌக்கக் கொளுத்தி வைக்கன். இந்த ஊட்டப் பாக்கவே எனக்கு வகுறுபத்துது. நிலகட்டச்சுவர் அப்பிடியே வச்ச வச்ச மாதிரி புகபுடிச்சிக் கறுத்துப் போய்க் கெடக்கு. அவர் இருந்தா என்னவடிவா இதப்பூசி வெள்ளையும் அடிச்சி உடுவாரு. பொண் ணாப் பொறந்தவள் நான் ஒருத்தி என்ன செய்யிற? நடராசாட் டயும் நல்ல ஒரு ஊடுகட்டோணுண்டா மனே எண்டு சொல்லி இரிக்கன். ஒளைக்கத்தொடங்கி ரெண்டு ரெண்டு மூணு சம்பளம் இப்ப தான் எடுத்திரிக்கான். போன முறயும் ஊடுகட்டுற விஷயத் தக் கவனிக்கத்தான் வேணு மெண்டு, காயிதம் போட்டிருந் தான். அதுக்குப் பொறகு காயிதமே எழுதக் காணல்ல. பையப் பைய காயிதங்களும் காசும் அனுப்புறத்த நிப்பாட்டிப் போட்டுரு வானா இரிக்கும். னி அவனுக்கு என்னத்துக்கு அம்ம? ஒரு பொட்டக் குஞ்சாலும் பெத்திரிக்க எண்ட காலடில கெடப்பாளே!

அண்ணன் இவ்வளவு நாளும் காயிதம் எழுதாதவரு இண் டைக்கு எவ்வளவு ஆத்திரமா காயிதம் எழுதி இரிக்காரு. எப் பிடி எண்டான்ன அவர்ர ரெத்தம் கொதியாமலா இரிக்கும்! இவன் கொழும்புல பொட்டயோட திரிஞ்சத்த கண்ணால கண்டு தான் இரிக்காரு அண்ணன்.

அண்டைக்கி யோசிச்சி யோசிச்சி தலைக்காலயும் இடிக்கத் தொடங்கித்து. அண்டு ராவு ஒரு கொள்ளக் கூடாத கனவெல்லாம் கண்டன்!

வெள்ளாப்புல வட்டைக்கபோற ஊத்துக்கு எனக்கு முழிப்பு வரும். அண்டைக்கும் அந்நேரத்தில எழும்பி தேயில வச்சுக் குடிக்கன். அதுக்கு முந்தின நாள் மத்தியானமும் ராவும் சோறு கறி எல்லாம் அப்பிடி அப்பிடியே கெடக்கு. ‘இந்த நாய் போனாப் போகட்டும். இவ்வளவு நாளும் இவ்வளவு நாளும் இவருதானா உளைச்சிக்கொண்டு தந்த?’ சோத்தத்தின்றன்.

பொண்ணாப் புறந்தவள் நான். கைமுனைக்கு அங்கால தெரியா. கைமுனையில் யாப்பாணத்தாண்ட கடைக்கு சில வேள அவல் கொண்டுபோவன். இயினைக்கி இரிக்கிற புளியந்தீவும் தெரியா. எப்பிடி நான் கொழும்புக்குப் போய் நடராசாவப் புடிக்கிற?

கடப்பல்ல மாடுவராம் சாத்தி வச்சிருந்த பனை ஓல உழுந்து சத்தம் கேக்குது. மாரிக்க கெழங்குபுடிக்கட்டும் எண்டு போட்ட “மையோரி”யத்தின்ன மாடுகீடு வந்திரிக்காக்கும் எண்டுத்து கடப் பலடிக்குப் போறன். எண்ட கண்ணயே எனக்கு நம்ப ஒண்ணாம இரிக்கி!

எண்ட மகன் தான் வாறான்!

‘கார தீவில பொண் கெடையாம ஆரோடயோ திரியிற ஒனக்கு இஞ்சஎன்ன அலுவல்ற?’ கேப்பமா எண்டுதான் பாத்தன். அவண்ட குஞ்சி மீசையயும் சிரிச்ச மொகத்தையும் கண்ட ஒடனே எண்ட மனம் எழகிப் போகுது. அதோட எளந்தாரிப் புள்ளயள் வந்த உடனே அப்பிடிக் கேக்கலாமா?

“என்ன மனே காயிதம் ஒண்டும் போடாம வந்திற்றா?”

”ஒரு அவசரமான காரியத்தில் ஓடித்திரிஞ்சபடியா காயிதம் போட நேரமில்லாமப் பொயித்தம்மா.”

”சோறு திண்டுத்து வந்தயாமனே?”

“ஓ நான் மட்டக்களப்புல சாப்பிட்டுத்துத் தான் வந்த நீ அவதிப்படாத.” சொல்லித்து கையில கொண்டு வந்த ‘சூக்கே’ சுப் பெட்டியோட ஊட்டுக்க போய் காச்சட்டயக் களத்திப் போட்டு, சாறன உடுத்துத்து வந்து அவய அப்பன் இரிக்கிற காலத்தில செஞ்சி போட்ட சாய்மானக் கதிரையில படுக்கான்!

“அப்பிடி என்ன அவசரம் மனே ஒனக்கு?” நெஞ்சிக்க சரி யான கோபத்த வச்சிற்று ஆறுதலாத் தான் கேக்கன். எக்கசக்க மாக் கதச்சா என்னத்தையும் குடிச்சிச் செத்தாலும் செத்துப் பொயித்திருவான். இந்தக்காலத்துப் புள்ளயள் இப்பிடித்தானே அநியாயமாச் சாகுதுகள் எண்டு வாத்தியார் ‘பேப்பர்’ வாசிச்சிச் சொல்ற நெனப்பு.

“எனக்கு இனி கல்முனையில தான் அம்மா வேல. இந்த மாறு தல் எடுக்கத்தான் அங்க இஞ்ச எண்டு எண்டு ஓடித் திரிஞ்சத்தில நேர மில்லாமப் பொயித்து. ஒரு மாதிரியா வேலயமுடிச்சித்தன். கொழும்புல சீவிக்கிற பெரிய செலவு. அங்க சீவிச்சி ஊடு கீடு கட்ட ஒண்ணா எண்டு தான் மாறுதல் எடுத்திற்று வந்த.”

நடராசா சொன்ன உடனே எனக் உடனே எனக்கு பெரிய ஆச்சரியமாப் பொயித்து!

அந்தக்கிழட்டு மனிசன் எண்ட புள்ள எவளோடயோ கூடித்துத்திரியிறானாம் எண்டு எழுதி இருந்தென்ன வன் இப்பிடிச் சொல்ற என்ன?

“கைமுனையிலயும் அந்த வேலதானாடா மனே” ஒள்ளம் எரக் கத்தோட தான் கேக்கன்.

”ஓம் அம்மா அந்த கிளார்க்கு வேலதான்.”

“இதென்னடா மனே உண்ட அம்மாச்சி காயிதம் போட்டிருந் தென்ன, நீ கொழும்புல ஆரோ ஒரு பொட்டையோட கூடித் துத் திரியுறயாமெண்டு, நீ இப்பிடிச்சொல்ற என்ன? நான் உனக்கு ஒரே ஏச்சா ஏசித்து இரிக்கன். அது மெய்தானாடாமனே?” எண்ட நெஞ்சுக்க டுக்கு டுக்கெண்டு அடிக்குது!

“என்னம்மா அம்மாச்சி காயிதம் போட்டதா? நான் ஆரு பொட்டை யோட கூடித்துத் திரியிறன்? இது என்ன பச்சப் பொய்! அப்பிடி உனக்கு வஞ்சகம் செய்வனா அம்மா நான்? நீ அத நம்புறயாகா?” சொல்லித்து என்ன பாக்கான் நடராசா. அவண்ட கண் நெருப்பேறி மொகம் செவக்குது! அவன் அப்பிடிச் செய்யக்கூடிய ஆளுமில்லத்தான்.

“அப்ப ஏன் மனே இந்த மனுசன் இப்பிடி எழுதி இரிக்காரு?”

“போன கிழம அம்மாச்சி கொழும்புக்கு வந்தாரு. ஒரு நாளும் எண்ட முகத்தப்பாராதவரு என்னப் பாத்து நல்லாக் கதச்சாரு நானும் சந்தோஷமாத்தான் கதச்சன். அவர்ர மூத்த அவர்ர மூத்த மகள் எஸ்.எஸ்.ஸி.பாஸ் பண்ணி இரிக்காளாம். இனி அவளப்படிப்பிக் கிறல்லயாம். ஆரோ கேட்டு வாறாங்களாம். அதெல்லாம் விருப்ப மில்லயாம்! வைக்கல்ல வௌஞ்சத்த வைக்கல்ல தான் கட்டோணு மாம் எண்டு கத மேல போச்சி. நாங்க கஷ்டப்படுற நேரம் நாயெண்டும் கவனிக்கல்ல. இப்பதா தேவப்படுறம் எண்டு எண்ணித்து, வைக்கல்ல வௌஞ்சத்த சாக்குலையும் கட்டலாம் அம்மாச்சி’ எண்டன் அவர முகம் காஞ்சி கறுத்துப்போச்சி.” அண்ணன் எழுதி இரிக்கிற மெய் எண்டா ஏன் நடராச கைமுனைக்கு மாறி வரப் போறான்?

“அந்தக் கோபத்தில தானா இரிக்கும் வினையகாறன் இப் பிடிக்காயிதம் போட்டிரிக்கான் மனே”. சொல்லித்து எண்ட புள்ளைக்குக் கோப்பி போடப் போறன். எண்ட புள்ளயயும், என்னயயும் பிரிக்கப்பாத்தானே இந்த இடி உழுவான்!

– ரசிகர் குழு போட்டிக் கதைகள், பதிப்பாசியர்: எம்.ஏ.ரஹ்மான், முதற் பதிப்பு: மே 1966, அரசு வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *