கதாபாத்திரங்களின் காலம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 6, 2026
பார்வையிட்டோர்: 141 
 
 

(2026ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி ஒன்று

தன்னைப் படைத்த கதாசிரியரின் உடலுக்கு முன்பு ஒரு கதாபாத்திரம் அழுதுகொண்டிருந்தது. படைப்பாளிகளுக்கு இப்படியொரு மரணம் நிகழ்ந்திருக்கக் கூடாது. அது கொடூரமான சம்பவம். அதற்கு கண்டனம் தெரிவிப்பதாக அறிவித்தது. ஆனால் அங்கே சுற்றியிருந்த யாருக்கும் இப்படியொரு கதாபாத்திரம் வந்து அழுதுக்கொண்டிருப்பது தெரியாது, அழுபவர் யாரோ கதாசிரியருக்குத் தெரிந்தவராக இருக்க வேண்டுமென்று சிலர் நினைத்துக் கொண்டார்கள்.

அந்தக் கதாசிரியர் மரணம் இயற்கையானதல்ல.அவரை யாரோ குத்தி கொன்றிருக்கிறார்கள். குத்தப்பட்ட இடங்களையும் ஆழத்தையும் பார்த்தால் அது திட்டமிடப்பட்டு செய்த கொலையாகத்தான் தெரிவதாக கொலை நடந்த சூழலை வைத்து சிலர் பேசிக்கொண்டார்கள்.

சமீப காலமாக கதைக்குள்ளிருந்த கதாபாத்திரங்கள் உயிர்பெற்று சகஜமாக பூமிக்குள் மனிதர்களோடு மனிதர்களாக உலவிவருவது முன்பெல்லாம் கேலியாகவும் கார்ட்டூன்களைப் போல பார்க்கப்பட்டது. ஆனால் அது பேசும் பேச்சுகளும் அது ஈடுபடும் வன்முறை செயல்களும் மனித சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக விவரமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

காரணம், கதாபாத்திரங்கள் முந்தைய காலத்தைப் போல கதைகளுக்குள்ளே இருப்பதில்லை.. அவைகள் கதைகளிலிருந்து வெளியேறி அரசியல்வாதிகளுடன் கள்ளத்தனமாக உறவு வைத்துக்கொள்கின்றன. அவர்களோடு சேர்ந்துக்கொண்டு வதந்திகளைப் பரப்பும் காரியத்தில் துணிச்சலாக அவைகள் ஈடுபடுகின்றன.

மேலும் கதாபாத்திரங்கள் தன்னை நல்லவர்களைப் போல காட்டிக்கொளவதாகவும் சிலசமயம் புனைவுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரங்கள் வரலாற்றில் இடம்பிடிக்கவும் செய்ய முயற்சிப்பதாகவும் அப்படி முயற்சிக்கும் கதாபாத்திரங்களால் தங்களுக்கு ஆதாயம் இருப்பதாக கருதினால் சாதியும் மதமும் அதற்கு போட்டி போட்டுக்கொண்டு உதவுவதாகவும் செய்திகள் பரவியிருந்தன.

அப்படி உதவும் கதாபாத்திரங்கள் தாங்கள் கதைகளுக்குள் வந்த நாளை மக்கள் பண்டிகையாகக் கொண்டாட வேண்டுமென்றும் சிலர் தங்கள் சிலைகளாக வணங்க வேண்டுமென்றும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்திருப்பதாக அரசல்புரசலாக ஆனால் உறுதிபடுத்தப்பட்ட செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன.

தங்களைப் புனித பாத்திரங்களாக மாற்றி எழுதும்படி கதாசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக காதாப்பாதிரங்கள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது மனிதனாக பிறக்கிறான். ஆனால் யாரோ ஒருவன் அவனைக் கதாபாத்திரமாக மாற்றி விடுகிறான். அந்த கதாபாத்திரங்கள் நல்ல-மனிதர்களோடு பழகும்போது – -எந்தப் பிரச்சினையும் இல்லை. அவைகள் கடைசி வரைக்கும் கதைகளுக்குள்ளே இருந்து விடுகின்றன, ஆனால் அவைகள் வன்முறையாளர்களிடமோ கடத்தல்காரர்களிடமோ சாதிமத வெறியர்களிடமோ அகப்படும்போது அந்தக் கதாபாத்திரங்களை தங்களின் நிழல் பிரதிகளாக மாற்றிவிடும் போக்கும் சமீபத்தில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில்தான் அந்தக் கதாசிரியரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. கதாசிரியரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த கதாபாத்திரம் அந்தக்- கதாசிரியரோடு தனக்கிருந்த உரையாடலை நினைத்து பார்த்தது. அதன் மனதில் சில சம்பவங்கள் நிழலாடின.

காட்சி இரண்டு

இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது.

“இனி நமக்குள் எந்த மோதலும் வேண்டாம். நீ சொல்லும் எந்த கண்டிஷனுக்கும் நான் கட்டுப்படறேன். எழுதும் முதல் கதை தயவுசெய்து என்னை தொந்திரவு செய்யாதே. என் நலம்விரும்பியாக இருந்தால் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடு எனக்கு நிறைய லட்சியங்களிருக்கின்றன. நான் சாதிக்கனும்னு வெறியோட இருக்கேன்” என்றான் கதாசிரியன்.

“உனக்கு எந்த லட்சியம் வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்கு அதை பத்தி கவலையில்லை. நீ பேசினது ரொ ம்ப ப ழைய ஏ தோ அருங்காட்சியகத்திலிருந்து எடுக்கப்பட்ட வசனமா இருக்கு”- என்றது அந்தக் கதைக்குள் இருக்கும் கதாபாத்திரம்.

“இருக்கட்டும்… நான் சாதாரண மனிதன். என் வார்த்தைகள் அப்படித்தான் இருக்கும்.”

“ஏன் சாமானியனுக்கு அழகான வார்த்தைகள் இருக்கக்கூடாதா. அவன் உயிரிலிருந்தும் வார்த்தைகள் அழகானதாக பிறக்கும்”

“நான் அப்படி சொல்லவில்லை”

“என் சொல்லின் பொருளை திரித்து விடாதே. மேலும் நீ பேசுவதை நிறுத்து”

“என்னால் நிறுத்த முடியும், ஆனால் என்னை வடிமைத்துக்கொள்ள நான் பேசித்தானே ஆக வேண்டும்.”

“நான் தவறு செய்துவிட்டேன். உன்னை முதலில் தொட்டிருக்கக்கூடாது. ஆனால் தொட்டுவிட்டேன். அதனால் இப்பொழுது துன்பப்படுகிறேன்”

“இதெல்லாம் ஒரு துன்பமா. அப்படி யென்றால் உண்மையான துன்பத்திற்கு உன்னிடம் என்ன சொல் இருக்கிறது”

“எனக்கு நீ முக்கியமே கிடையாது. ஆனாலும் உன்னை என்னோடு வைத்திருக்கின்றேன்”

“இருக்கலாம் நான் உங்களுக்கு முக்கியம் கிடையாதுதான். நீங்கள் நினைத்தால் என்னை – தூரமாக தள்ளி வைத்து விடலாம். ஆனால் யார் வாழ்க்கையில்-யார் முக்கியமென்று காலம் தீர்மானிக்கும் .நீங்களல்ல.”

“தயவு செய்து என் வேலையில் தலையிடாதே”

“அப்படி என்னால் இருக்க முடியாது. நான் தலையிடத்தான் செய்வேன். அது என் வாழ்க்கை மட்டும் சார்ந்ததல்ல. என் ஒழுக்கம், நீதி நெறிமுறைகளும் சார்ந்தது”

“ஆச்சரியமாக இருக்கிறது. நீயெல்லாம் நீதி, ஒழுக்கம்னு பேச ஆரம்பிச்சிட்டே”

“இங்கே கல் சிலையாகி புனிதமாகி வானளாவிய அதிகாரத்தோடு கதாபாத்திரங்களின் வழியாக பேசிக்கொண்டிருக்கிறது என்பது உனக்குத் தெரியாதா”

“நீயும் கடவுளும் ஒன்றா”

“ஒன்றல்ல. கடவுளை விட மேலானவன். கடவுளுக்கு சக்தி கொடுப்பதில் என் பங்கு அதிகமாக இருக்கிறது”

“உன்னிடம் விவாதம் செய்ய விரும்பவில்லை. உன்னுடன் சமாதானமாக போக சம்மதிக்கின்றேன். கொஞ்சம் நேரம் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இரு”

“இன்னொரு கதையில் என்னைப் போலவே ஒருவன் இருப்பான். ஆனால் அது நான் கிடையாது. இந்தக் கதையில் என் ஒத்துழைப்பு இன்றி உன்னால் எதுவும் செய்ய இயலாது.”

“அதைத்தான் எனக்கு புரிய வைச்சிட்டியே கதாபாத்திரமே.”

“அதென்ன கதாபாத்திரமே…- எனக்கு இன்னும் பெயர் வைக்கவில்லையா. வச்சாச்சு.”

“என்ன பெயர்”

“வாசு”

“அதென்ன வாசு தூசுன்னு. வேற பெயர் கிடைக்கில்லையா”

“செந்தில்ன்னு”

“இதென்ன கிராமத்து சப்ஜெக்ட்டா”

“இல்லை நகரம் சார்ந்த காதல் கதை”

“அப்படின்னா செந்தில் ஒத்து வராது. வேற பெயரை சொல்லு.”

“ஹரி…”

“யாரை தெரியனும்.”

“நீயே உன் பெயரை செலக்ட் பண்ணிக்கோ. என்னை விட்டுடு.”

“சரி விஜய் அல்லது நவீன் வச்சிடு இப்ப கதையை சொல்லு.”

“ஒவ்வொரு விஷயத்திலும் கதாபாத்திரம் குறுக்கிட்டா நான் எப்படி கதை எழுதுவது.”

“மெயின் கதாபாத்திரம் ஓகே ஆயிடுச்சின்னா மத்த எல்லாமே சரியா வந்திடும்… உனக்கொரு கதை வேண்டும். அந்த கதையில் ஒரு முதன்மையான கதாபாத்திரம் வேண்டும். அந்த காதாபாத்திரம் சரியா அமைந்தால்தான் உன் கதை செல்லுபடியாகும். அதற்கு அந்த கதாபாதிரத்தோடு ஒத்துப்போவது தான் உனக்கு நல்லது. என்னை அதிகம் பேச வைக்காதே”

“இப்படி எழுத தொடங்கும் முன்பே கதாபாத்திரம் அடிக்கடி குறுக்கிடுவது கதைக்கு நல்லதல்ல.”

“எந்தக் கதாபாத்திரமும் கதையை தானே எழுதிக்கொள்வதில்லை”

“அப்படி எழுதினால் எழுதப்பட்ட அந்தக் கதை யாருடைய சொத்து அல்லது உரிமையாகும்.”

“சந்தேகமென்ன அது உன்னுடைய சொத்துதான். நீதான் கதையின் உரிமையாளி. ஆனால் நாளைக்கு அந்த கதாபாத்திரம் சரியாக அமையவில்லையென்றால் அது எனக்கு கெட்ட பெயரை வரவழைக்கும். எனக்கு கிடைப்பதோ ஒரு வாழ்க்கை. அது சரியாக அமைய வேண்டுமென்று எனக்கு ஆசையிருக்க கூடாதா.” கதாபாத்திரம் கேட்டது.

கதாசிரியனால் எதுவும் பேச முடியவில்லை. கதாபாத்திரங்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டன என்பது மட்டுமல்ல, அது தன்னை எப்படி வடிவமைக்க வேண்டும் தனக்கு என்ன பெயர் வைக்க வேண்டுமென்பது வரை குறுக்கிட்டால் -குறிப்பிட்ட காலத்துக்குள் கதை எழுதி முடிக்கப்பட வேண்டும் என்ற என் இலக்கு எப்படி முடியும்.

அவன் ஒரு நகரம் சார்ந்த காதல் கதை எழுதுவதாக எண்ணியிருந்தான். அந்தக் காதல் கதையை உயிர் துடிப்போடும் ஜனரஞ்சகத்தோடும் எளிமையாகச் சொல்ல எண்ணியிருந்தான்.

அடிப்படையில் அவன் ஓர் ஓவியன் என்பதால் அந்தக் கதாபாத்திரத்தின் முகத்தை வரைந்து வைத்திருந்தான். அவன் வாழப்போகும் வீடு, நடமாடும் தெருக்கள், அவன் படிக்கபோகும் கல்லூரி, அவன் சந்திக்கப்போகும் அவன் காதலி எல்லாவற்றையும் ஒரு ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தான்.

அவன் காதலி கொள்ளை அழகுடன் இருந்தாள். இந்த அழகை ஒரு வங்காள நடிகையின் சாயலில் வரைந்திருந்தான். அவள் மார்பு திமிறிக் கொண்டிருந்தது. அதன்மேல் மெல்லிய மஞ்சள் வெயில் பூசினாற் போலிருந்த ஆடையை அவள் தாவணியாய் கட்டியிருந்தாள்.

இதையெல்லாம் காட்டிக்கொண்டிருந்த போது அந்தக் கதாபாத்திரம் கேட்டது.

“இந்த மண்ணில்தான் இந்த காதல் நடக்கபோகுது. ஓகே. அந்த காதலி இந்த மாநிலத்தை சேர்ந்தவளா இல்லை வேறு ஊரை சார்ந்தவளா.”

கதையாசிரியன் சொன்னான். “இந்த ஊரை சேர்ந்தவள்தான்.”

“அப்படியெனில் எதற்கு அந்த பெண்ணின் முகத்தை பெங்காலி முகத்தை போல வரைந்து வைத்திருக்கிறாய்.”

“நான் ஏன் பெங்காலி பெண்ணை காதல் செய்ய வேண்டும். ஒரு தமிழ் பெண் கிடைக்கவில்லையா.”

“நீ ஒரு தமிழ் பெண்னைத்தான் காதலிக்கிறாய். அந்த தமிழ் பெண் வேடத்தில் நடிக்கும் ஒரு பெண் வங்காளத்திலிருந்து கூட்டிவரப் போகின்றேன்.”

அவனுக்கு எரிச்சலாக வந்தது. இப்படிக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் இந்தக் கதையை இழுத்து மூடிவிட்டு வேறு கதையை எழுத தொடங்கி விடுவேன்.

கதாபாத்திரம் சொன்னது.

“அது உன் இஷ்டம். ஆனால் இந்தக் கதையை நீ எழுதுவதாக இருந்தால் என் குறுக்கீடு இருக்கும். அதை நீ தவிர்க்க முடியாது. அதைப்போல அடுத்த கதை எழுத தொடங்கும் போது அந்த கதையின் மெயின் கதாபாத்திரம் குறுக்கிடாது என்பதற்கு எந்த உத்ரவாதமுமில்லை.”

“இன்னுமிரண்டு நாளில் கதை அவுட்லைன் எழு முடித்து விட வேண்டும். இப்போதைக்கு கதாபாத்திரத்தின்-பெயர் நவீன் என்று முடிவாகியிருக்கிறது.”

இன்னும் கதையின் நாயகிக்கு பெயர் சூட்ட வேண்டும். அவள் என்னென்ன குறுக்கீடு செய்யபோகிறாளோ. இனி கதை எழுதுவது சிரமமான காரியமாகிவிடும்.

அவன் யோசித்துக்கொண்டிருந்தான். அவனைத் தட்டி எழுப்பியது கதாபாத்திரம். என்ன என்பது போல் பார்த்தான் கதை ஆசிரியன்.

கதாபாத்திரம் பேசத்தொடங்கியது.

“இன்னிக்கு நான் என்ன கலர் சட்டை போட வேண்டும்.”

“ஏன்”

“இன்னிக்கு கதாநாயகியை சந்திக்கப்போகிறேன் அல்லவா.”

“இன்னும் முடிவு பண்ணல. முடிவு பன்ணியிருக்கனும். அதை காஸ்ட்யூம் டிசைனர் பார்த்துக்கொள்வார்.”

“அது நீ கதையை சினிமாவாக எடுக்கும்போது இப்ப நான் என்ன கலர் சட்டை போட்டுக்கொள்ள வேண்டும்.”

“லைட் ஜீன்ஸ் டார்க் புளு சர்ட்”.

“ஓகே.”

“போட்டுக்கி1டேன், உன்கூட நானும் கதை விவாதத்தில் பங்கெடுக்கப் போறேன்”

“வேறு யாராவது வராங்களா. இல்லை நாம் மட்டும் போதுமா.”

“இந்தக் கதையை எழுதி முடித்துவிட்டு சொல்லிடறேன். அதுவரை கொஞ்சம்-பொறுமையாக காத்திரு.”

“நீ என்னை வேறு யாரோ என்று பேசிக்கொண்டிருக்கிறாய். எனக்குத் தெரியாமல் என்னை எப்படி எழுத முடியும். நன்றாக யோசி.”

“சரி எனக் கு பசிக்கிறது. நான் குளித்துவிட்டு-வருகிறேன். நீயும் யோசித்துக்கொண்டிரு. அடுத்த ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் சந்திப்போம்.”

பேனாவை மூடினான். தாள்களை ஒரு பைலில் போட்டுவிட்டு எழுந்து விட்டான். கதை அவனுடைய மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

இது காதல் கதையென்றாலும் அந்தக் கதையை ஓர் அரசியல் பின்புலத்தில் சொல்ல நினைத்திருந்தான்.

காதலில் மதமும் சாதியும் அரசியலும் நுழைந்து தனிமனித வாழ்வில் ஏற்படுத்தும் அவலங்களை, சிதைவுகளை ஒரு மாற்றுப்படம் என்று எண்ணம் வராதவாறு கமர்சியாலாகவும் வெற்றிபெற வைக்க வேண்டுமென்ற என்னத்துடன் அந்தக் கதையின் கருவை நினைத்திருந்தான்.

காதலுக்கு மதமும் சாதியும் அரசியலும் வெளியாட்கள். அந்த வெளியாட்கள் செய்யும் அதிகாரங்களீன்-நடுவில் தெளிந்த நதி போல இருக்கும் காதல் ஒரு வாழ்வை கூவம்நதியைப் போல மாற்றிவிடும் சம்பவங்கள் நிறைந்த கதை தான் அவனுக்குள்ஓகே ஆன கதை.

காட்சி மூன்று

அதுவொரு காவல் நிலையம். காலை மணி பத்திருக்கும். அங்கே உரையாடல் நடந்துகொண்டிருந்தது.

“சார் என்னை- ஒருத்தன் அவமானப்படுத்தி விட்டான். அவனை என்ன ஏதுன்னு ஒரு எட்டு வந்து கேளுங்க சார்” என்றான் அவன்.

“நீ யாருய்யா. எங்க வேலை செய்யறே”.

“வேலை எதுவும் கிடையாது. சும்மாதான் இருக்கேன்”

“சும்மாதான் இருக்கியா. இந்த வயசுல ஒரு வேலையும் செய்யாம சும்மா இருக்கிறதே ஒரு அவமானம் தான். இதிலே இன்னொருத்தன் உன்னை அவமானப்படுத்திட்டான்னு புகார் வேற. அப்படி அவன் என்ன சொல்லி உன்னை அவமானப்படுத்தினான்”

“என்னை மூடிக்கிட்டு போய்யான்னு சொல்லிட்டான்”

“எதை மூடிக்கிட்டு போயான்னு சொன்னான்”

“அதை நீங்கள் எதிரிகிட்டத்தான் கேட்கனும்”

“ஏன்யா உன்ன அவமானபடுத்துவனெல்லாம் உனக்கு எதிரியா”

“விடுய்யா… கோபத்துல ஏதோ ஒரு வார்த்தை தடிச்சி வந்திருக்கும். இதுக்கெல்லாம் கோபப்பட்டா வாழ்க்கை போயிடும்”

“அது எனக்கு அவமானம்தான் சார். அதுவும் அந்த எதிர்வீட்டு பொம்பள என்ன ஏதுன்னு விசாரிக்க வேண்டாமா?”

“நல்லா விசாரிங்க. அப்புறம் நடவடிக்கை எடுங்க”

“யோவ் இங்க வாய்யா. இதெல்லாம் சின்ன விஷயம். அதை பெரிசாக்காம போய் வீட்டில வேற வேலை ஏதாவது இருந்தா பாரும்”

“அப்படி விட முடியாலன்னுதான் உங்கிட்ட வந்திருக்கேன். நானும் இதை விட்டுடலாம்னு நினைச்சேன். ஒவ்வொரு முறையும் அவன் பார்க்கிற பார்வை சரியில்ல. நான் ஏதாவது செய்யனும் சார்” என்றான்.

“சரி நீயும் அவனை அவமானபடுத்து. ரெண்டு பேரும் சேர்ந்து வாங்க சமாதனப்படுத்துறேன்”.

“இப்ப எனக்கு வேற வேலை இருக்கு. நீ போ. பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட கொஞ்சம் விட்டுக்கொடுத்து போய்யா. இல்லைன்னா இதுவே பெரிய பிரச்சனையா உன் மனசை அரிச்சுகிட்டு இருக்கும்”.

“நீங்க சொல்றது உண்மைதான். இது அரிச்சிக்கிட்டு இருக்கிறதால தான் வந்தேன்”

“என்னய்யா உன்னோட ஒரே தொந்தரவா போச்சு. மனுஷனை சும்மா இருக்க விடுறயா”

“இப்ப சொல்லு என்ன நடந்துச்சு…”

“சார் ஒரு வருஷத்துக்கு முந்தி நடந்த சம்பவம்…”

“யோவ் எனக்கு கதை கேட்கிற மூடு இல்ல. இப்ப என்ன நடந்ததோ அதை மட்டும் சொல்லு”

“இப்ப எதுவும் நடக்கல சார்”

“எப்ப அவமானப்படுத்தினான்”

“வேலையும் இல்லைன்னு நினைச்சிட்டீங்களா. எரிச்சலை கிளப்பாமே போயிடு”.

“சார் நீங்க வந்து-இந்த கேஸை சரியாக பாருங்க. சம்பவம் நடந்ததென்னவோ ஒரு வருஷத்துக்கு முன்னாடி. ஆனால் அதை நான் அப்ப்பவே மறந்துட்டேன். ஆனால் என் எதிரி நக்கலா பார்க்கிற பார்வையில என்னை மீண்டும் மீண்டும் ஞாபகபப்டுத்திகிட்டு இருக்கான்”

“நீ இருக்கிற முகவரி சொல்லு”

“முகவரி இல்லை சார், ஆனால் அவனை எனக்குத் தெரியும்”

“நீ என்ன பிளாட் பார்மல வசிக்கிறவனா”

“நீங்க தப்பா நினைக்கிறீங்க. நான் அடுக்கு மாடி குடியிருப்புல வசிக்கிறவன்”

“அந்த அப்பார்ட்மெண்ட் எங்கிருக்கு”

“அது எங்கிருக்குனு தெரியாது சார். ஆனால் நான் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். என் எதிரி அதே அடுக்குமாடி குடியிருப்பில் எனக்கு எதிர் பிளாட்டில் வசிக்கின்றான்.”

“உங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா…”

“நீங்க அப்படி நினைச்சிட்டீங்களா. எனக்கு பைத்தியம் கிடையாது…”

அப்போது காதாசிரியன் வந்தான்.

“சார் வணக்கம்”

‘வணக்கம் யார் நீங்க”

“சார் நான் ஒரு சினிமா காதாசிரியன். எனக்கு ஒரு கதை ஓகே ஆயிடுச்சி.”

“சரி சொல்லுங்க…”

“அது வந்து சார். அந்தக் கதையிலே வர்ற கதாபாத்திரம் ஒண்ண காணோம் சார்”

“உங்களுக்கு என்ன தோணுது”

அப்போது தூரத்தில் கைகளை இறுகக் கட்டிக்கொண்டு வாயை பொத்தியபடி ஒருவன் ‘ம்ம்ம் ம்ம்ம்’ என்று சத்தமாகக் கூப்பிட்டான். சத்தம் வந்த திசையில் பார்த்தால் அது அவன் தேடிவந்த கதாபாத்திரம்.

“சார் நான் தேடி வந்தது இந்த கதாபாத்திரத்தைதான். “

“அவன் அடுக்குமாடியில குடியிருக்கானாம். ஆனா வீட்டின் முகவரி தெரியாதுன்னு சொல்றான்.”

“அது உண்மைதான் சார். அதை நான் இன்னும் எழுதல. அதனால் அந்த கதாபாத்திரத்துக்கு முகவரி தெரியாது சார்”

“யோவ் இவன் மனுஷன்யா. அவனப்போயி கதாபாத்திரம்னு சொல்றே”

“சார் நல்லா சொல்லுங்க சார்… என்னை மனுஷனா பார்க்க மாட்டேங்குகிறார். முதல்ல இவர புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்”

“அந்த ஆளுக்கு என்ன மூளை குழம்பி போச்சா. என்னை ஒருத்தன் அவமானப்படுத்திடார்னு சொல்றான். ஆனால் அவன் அட்ரஸ் எங்கேன்னு கேட்டா சொல்லத் தெரியல. நீ என்னடான்னா அவனை கதாபாத்திரம்னு சொல்றே. -யாராவது கதாபாத்திரம்னு பெயர் வைப்பாங்களா”

“சார் அவர் நிஜம் இல்ல சார் என் கதையில் வருகிறவர்…”

“யாரு…”

“அதோ அவர்தான். அங்க கையை கட்டி நிக்கிறாரே அவருதான்…”

காலையிலங்காட்டியும் நம்மள பைத்தியம் பிடிக்க வச்சிருவாங்க போலிருக்கு.இவங்கள் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளு”

கதாபாத்திரத்தை அழைத்துக்கொண்டு போகும்போது ஏட்டு அழைத்தார்.

“தம்பி நீங்க சொல்றது உண்மையா பொய்யான்னு தெரியாது. கதாபாத்திரத்தை கையாளு ம் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. கதாபாத்திரத்துக்கு சாதி தெரியாது, மதம் தெரியாது. அதற்கு கற்பழிப்பு, ஏமாத்துறது, கள்ளக்கடத்தல் எதுவும் தெரியாது. நீங்க சொல்லிக் கொடுத்து கதைகளை கெடுத்துடாதீங்க..”

கையெடுத்துக் குப்பிட்டுவிட்டு வெளியே வந்தான். வெளியே வந்தவுடன் காதாசிரியன் அந்தக் கதாபாத்திரத்தை கேட்டான்.

“உன்னை எங்கெல்லாம் தேடறது.. ஆமாம் என்ன அது புது பழக்கம் என் அக்கௌண்டுல டிபன் வாங்கி சாப்பிட்டிருக்க. சிகரெட் வாங்கியிருக்க…? என்ன இதெல்லாம்?”

“எனக்கு சிகரெட்னா என்னான்னே தெரியாது. நீதான் எனக்கு அந்தப் பழக்கம் இருக்குதுன்னு எழுதியிருக்கே. நான் தெரியாதுன்னு சொன்னா உனக்கு கோபம் வரும். அதான் குடிச்சி பழகறேன்”

“நல்லா பேச கத்துகிட்டு இருக்கே… ஏது அந்த ஏட்டு சொன்ன மாதிரி உன்னை ஜாக்கிரதையா கையாளனும் போலிருக்கு”

காட்சி நான்கு

அதுவொரு மாலை நேரம். ஒரு பூங்காவில் குறைவானவர்களே நடந்துகொண்டிருந்தனர்.

அந்தப் பூங்காவில் ஓரமாக இருந்த ஒரு பெஞ்சில் இருந்த அந்த மனிதனை இதற்கு முன்பும் பார்த்திருக்கின்றான். தனிமையில் வெகுநேரமாய் இருந்துவிட்டு இருட்டியபின் எழுந்து சென்று விடுகிறார். யாரிடமும் பேசிப் பார்த்ததில்லை.

அவர் நண்பர்கள் யாரும் அவரைத் தேடி வந்ததில்லை. எப்பொழுது வந்தாலும் அந்த மரத்தடியில் போடப்பட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்திருப்பார். அவருடைய உடைகள் இன்றைய நவீன உடைகள் அல்ல.

பழங்காலச் சிற்பங்களில் ஓவியங்களில் தென்படுகிற உடையில் இருந்தார். அவருடைய உடையை போலவே அவரும் பழசாக இருந்தார்.

வாழ்வில் ஏற்பட்ட துயரங்களிடமிருந்து கொஞ்ச நேர விடுதலைக்காக வருகிறவர்களிடம் அந்த தனிமைக்குள் நுழைந்து அதைக் கெடுக்க விரும்பாததால் அவரிடம் பேசவில்லை.

ஆனாலும் யாரையும் பேசத் தூண்டும் அல்லது கவனிக்கத் தூண்டும் மனிதராக இருந்தார்.

அவரை தாண்டி செல்லும் குழந்தைகளிடம் கூட சிரித்த மாதிரியோ கவனித்த மாதிரியாகவோ காட்டி கொள்வதில்லை. ஒரு மனிதர் எந்தவித முகபாவங்களின்றி எப்படி இருப்பார்? மிகவும் ஆச்சரியத்துகுரிய மனிதராக இருந்தார்.

எதற்கும் அந்த மனிதரிடம் கேட்டுவிட வேண்டுமென்று அணுகினான் அந்த மனிதரிடம் கேட்டான்.

“சார் வணக்கம் நீங்கள் கதாசிரியர்தானே. என்னை தெரிகிறதா”

“யாரு தெரியலையே…”

“சார் நீங்க மனிதர்தானே…”

“ஆமாம். நீங்க…”

“நான் கதாபாத்திரம். இப்பவெல்லாம் மனிதர்களை பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது.”

“என்னை எப்படி கண்டுபிடித்தீர்கள்…”

“உங்களை பார்க்கும்போது கவலையில் இருப்பதாக தெரிந்தது. மேலும் நீங்கள் மரணத்தின் படிக்கெட்டில் நிற்பது தெரிந்தது. எனக்கு நினைவு இருக்கிறது நான் உங்கள் முதல் கதையில் வந்த முதன்மை கதாபாத்திரம். நான் இன்றும் இளமையோடு இருக்கின்றேன். என்னைப் படைத்த நீங்கள் முதுமையில் இருக்கிறீர்கள். நாங்கள் எதற்கும் கவலைபடுவதில்லை. கதாபாத்திரங்கள் வாழ்கின்றன ஆனால் சாவதில்லை. ஆமாம் உங்களுக்கு என்னவாயிற்று சார்”

“உன்னை நான்தான் படைத்தேன் என்று நீ சொல்கிறாய். ஆனால் அங்கே ஒருவன் அதை நான்தான் படைத்தேன் என்று சொல்லிக்கொண்டு என் கதையை திருடிவிட்டான். நான் எழுதிய கதை என்னுடையதில்லையாம்.”

“அதெப்படி சார் உங்களுக்கும் எனக்கும்தான் எத்தனை வாக்கு வாதங்கள்நடந்தன. அதையெல்லாம் சொல்ல வேண்டியதுதானே”

“அதை யார் நம்புவார்கள்”

“உன்னைப் போலவே எல்லா அதில் வில்லனுக்காக நாட்டை காட்டிக் கதாபாத்திரங்களையும் படைத்தேன். கொடுக்கும் ஒரு கதாபாத்திரத்தை படைத்தேன். ஆனால் அந்தக் கதாபாத்திரம் உண்மையிலே பணத்துக்காக நாட்டை காட்டி கொடுத்துவிட்டது. அதன்மீது வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்து இதோ கொஞ்ச நாளுக்கு முன்னாலதான் அடிப்படை ஆதாரமில்லையென்று விடுதலை செய்தார்கள். இதோ தினமும் இங்கு வந்து என் தனிமையில் கடந்துபோன நாட்களை நினைத்துப் பார்கின்றேன்”.

“அவர்களால் கதாபாத்திரங்களை எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் படைத்த என்னை சிறையில் தள்ளிவிட்டனர்.”

உலகம் முன்பெல்லாம் மனிதர்கள் அதிகமாக இருந்தார்கள். கதாபாத்திரங்கள் குறைவாக இருந்தன. இப்பொழுது கதைகள் அதிகமாகி கதாபாத்திரங்கள் கதைகளில் நிழல்களை விட்டுவிட்டுட்டு கதையிலிருந்து வெளியே வந்து பூமியில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன”

சாலையில் நடந்து போவோரில் யார் மனிதர் யார் கதாபாத்திரம் என்று கண்டுபிடிப்பது கடினம். ஒரு கதாபாத்திரம் ஒரு நேர்காணலில் சொன்னது:

“எங்களுக்கும் மனிதர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. சிலசமயம் எங்-ளை விட மனிதர்கள் கொடூரமானவர்களாக-இருக்கிறார்கள். கதாபாத்திரங்களினால் சலசலப்பு வரும். எந்த கதாபாத்திரமும் இன்னொரு கதாபாத்திரத்தை தாழ்வாக எண்ணியதில்லை. ஆனால் மனிதர்கள் பிறவியிலே கோளாறானவர்கள் அவர்களால் உலக யுத்தங்கள் நடந்திருக்கின்றன. தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் ஜந்துக்கள். நாங்கள் அப்படியில்லை.”

ஒரு முறை மூத்த படைப்பாளி சொன்னார்.

“மனிதர்கள் சிறுபான்மையினராக வாழும் உலகில் நடமடும் கதாபாத்திரங்கள் எல்லாமும் ஏதோ சாதியின் மதத்தின் தத்துவத்தின் பிரதிகளாக நடமாடுகின்றன. அவைகளிடம் மனிதம் என்பது மருந்துக்கும் இருக்காது. இதற்கெல்லாம் காரணம் மனிதன்தான். அவன் பெருமைகளும் இழிவுகளு ம் மன வக்கிரங்களும் தான் இங்கே கதாபாத்திரங்களாக உலவிக் கொண்டிருக்கின்றன. பாவம் மனிதர்கள். அவைகளிடம் மாட்டிகொண்டு ஒரு அன்னியன் போல வாழ்கின்றனர்”

அந்தக் கதாபாத்திரம் அந்த முதுமையான கதாசிரியனை கேட்டது.

“நீங்கள் என் வீட்டுக்கு வரமுடியுமா”

“முடியும். உங்களால் எனக்கு சாப்பிட ஏதாவது தர முடியுமா”

“முடியும். வாருங்கள்” என்று அழைத்துப்போனது.

அடுத்த நாள் அந்தக் கதாசிரியனின் சடலம் குப்பைத்தொட்டியில் கிடந்தது.

யார் கொலையாளி என்று தெரியவில்லை.

ஆனால் கதாபாத்திரங்கள் முந்திக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கை பதிவுசெய்து விசாரிக்கின்றன. ஏனெனில் நீதி நேர்மை நியாயத்துக்கு கட்டுப்பட்டவைகள் கதாபாத்திரங்கள் என்று தப்பட்டம் அடித்துக்கொள்கின்றன.

ஆனால் மனிதர்கள் நடத்தும் புலனாய்வு பத்திரிக்கையில் மனிதர்கள் அடிக்கடி கொல்லப்படுவது தொடர்வதாகவும் அதற்கு காரணம் கதாபாத்திரங்கள் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியது. ஆனால் அந்த அறிக்கையை எந்தக் கதாபாத்திரங்களும் கண்டுகொள்ளவே இல்லை.

இப்பொழுதெல்லாம் நாட்டில் கதாபாத்திரங்களே ஆட்சி செய்கின்றன. கதாபாத்திரங்களே தத்துவங்கள் பேசுகின்றன. அதனால் புராணக் காலத்திலிருந்து நிறைய கதாபாத்திரங்கள் வெளிவரத் தொடங் கி விட்டன. நீதிமன்றங்கள், நாடாளுமன்றங்கள் அனைத்தும் கதாபாத்திரங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அதனால் கதாபாத்திரங்களுக்கு எதிராக நீதிமன்றத்தால் எந்த தண்டனையும் வழங்க முடியாதென்றனர்.

கொலை நடந்த இடத்தில் அந்த உடலுக்கருகில் வண்டித் தடங்களோ காலடித் தடங்களோ இல்லையென்பதால் சந்தேகம் கதாபாத்திரங்களின் மீது திரும்பியிருக்கிறது. ஏதோ ஒரு கதாபாத்திரம் அந்தக் கொலையை செய்திருக்கலாமென்று விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது.

பின்குறிப்பு :

அந்தக் கதாபாத்திரம் அஞ்சலி செலுத்தியபின் நேராக ஒரு சாதிச் சங்கத்-தலைவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தது.

“ஆமாம் எப்படி கொலை செய்தாய்”

“எல்லாம் நீங்கள் கற்றுக் கொடுத்ததுதான். நயமாக பேசி –அழைத்துக்கொண்டு போய் ஆத்திரம் தீரும் வரை கொன்றேன்… ஆமாம் என்னை ஏன் கொல்லச் சொன்னீர்கள்.”

“அந்தக் கதாசிரியன் நம்ம சாதி பெண்ணை கீழ்சாதிப் பையன் காதலிப்பதாக எழுதியதாக நீதானே சொன்னாய்.”

“நான்தான் சொன்னேன். ஆனால் எனக்கு சாதி மதம் முக்கியமில்லை யென்றேனே. அதற்கு நீங்கள்தான் அது இந்த மண்ணின் கலாச்சாரம். அதை விட முடியாதென்றீர்கள். எனக்கு மீசை வளர்த்து விடவும் அரிவாள் தூக்கவும் பயிற்சி தந்தீர்கள். ஆனால் அவனை மன்னித்து விடலாமென்று சொன்னதை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை…”

“நாம் மன்னிக்கும் பரம்பரையை சார்ந்தவன் அல்ல எப்படி மன்னிப்பது? எனக்கு அந்தக்காதல்-பிடிக்கவில்லை. |அதனால் நான் அந்த கதாசிரியனை கொல்லச் சொன்னேன். நீ எத்தனையோ வருடங்கள் காத்திருந்து பழிதீர்த்துக் கொண்டாய். அதுதான் நம் சாதியின் பெருமை. வீரம்.”

“நானும் அந்தக் கலாசாரத்தின் அங்கமா”

“ஆமாம். உன் உடலிலும் நம் சாதி ரத்தம்தான் ஓடுகிறது.”

“அப்படியெனில் நான் கொலைச் செய்தது தப்பில்லையா”

“என்ன கேள்வி மேல் கேள்வி கேட்கிறாய்”

“வரும் வழியில் ஒரு பொதுவுடமைவாதியை சந்தித்தேன்”.

“பொதுவுடமைவாதிகளை, திராவிடர் கழகத்தினரை சந்திக்காதே. உன்னை குழப்பி விடுவார்கள்”

“இல்லை எனக்கு சிந்திக்கும் ஆற்றல் உண்டு.”

“அப்படியா நல்லது. என்னயோசிக்கிறாய்”

“நான் செய்தது பாவமென்று தோன்றுகிறது. மேலும் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவள் கீழ்சாதியை சார்ந்தவள்.”

“அதனால்…”

“நான் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் நீ உயிரோடு இருக்கக் கூடாது.- உன்னைப் போன்றவர்கள் மனிதர்களை கதாபாத்திரங்களாக மாற்றி, விடுகிர்றீர்கள். நான் மனிதனாக வாழ விரும்புகிறேன்… நான் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் சாதியனாக இருக்க விரும்ப்பவில்லை” என்று தான் மறைத்து வைத்த கத்தியால் எதிரே பேசிக்கொண்டிருந்த சாதிச் சங்கத் தலைவனைக் கொன்றது.

அவன் மெல்லச் சரிந்தான்.

– கணையாழி – மலர் 61 – இதழ் 01 – ஏப்ரல் 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *