தொட்டுப்பேசத்தோணும்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: April 6, 2026
பார்வையிட்டோர்: 240

கவினாவிற்கு சிபியின் செயல்கள் மனதுக்கு பிடித்திருந்தாலும் பலபேருக்கு மத்தியில் தன்னுடனான அவனது செயல்பாடுகளால் சற்று சங்கோஜமாக உணர்ந்ததால் பொது இடங்களின் ஒதுங்கியே சென்றாள்.
சிபி ஒன்றும் தனதளவிற்கு படித்தவன் இல்லை. அழகில் சிறந்தவனும் இல்லை. தான் வாங்கும் மாத சம்பளத்தில் மூன்றில் ஒரு மடங்கு வாங்குபவன் தான் என்றாலும் அலுவலகத்தில் சேர்ந்த நாளிலேயே மற்ற எல்லேரைக்காட்டிலும் அவனை மட்டுமே அவளுக்கு பிடித்திருந்தது.
தனக்கு எந்த நேரத்தில் என்ன தேவைப்படும் என்பதை அறிந்து கொண்டு வந்து கொடுத்து விடுவான். மனம் சோர்வாக இருக்கும் நாட்களில் எதையாவது பேசி சிரிக்கவைத்து விடுவான்.
கவினா சிபியுடன் பழகுவது பலருக்கும் பிடிக்கவில்லை. காது, மூக்கு வைத்து தங்களது கற்பனைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர். குறிப்பாக மேனேஜருக்கே பிடிக்கவில்லை. ஒருநாள் தனது அறைக்குள் அழைத்தவர் முகத்தில் அறைந்தது போல் கேட்டே விட்டார்.
“நீங்க படிச்ச பொண்ணு தானே…?”
“அதிலென்ன சந்தேகம். இண்டர்வியூ பண்ணித்தானே என்னை நீங்க வேலைக்கு எடுத்தீங்க…?”
“அது… வந்து…. அது ஆபீஸ் வேலைக்கு. இது பர்சனல்….”
“பர்சனலா….? நீங்களும் நானும் பர்சனலா பேச ஒன்னுமில்லையே….?” சொல்லி உதட்டைப்பிதுக்கினாள்.
“நேராவே பாயிண்டுக்கு வர்றேன். நீங்களும் கிளர்க் சிபியும் ரொம்பவுமே நெருக்கமா பழகறதை நான் நேர்லயே பார்த்தேன். அவன் உங்களுக்கு பத்து சதவீதம் கூட ஒத்துப்போகாதவன். நீங்க கூடிய சீக்கிரம் அசிஸ்டென்ட் மேனேஜரா பதவி உயர்வு பெறப்போறீங்க. அவன் எப்பவுமே அதே நிலைலதான் இருக்கப்போறான். படிப்பு, பதவில மட்டுமில்லை. பக்கத்துல உட்க்கார்ந்து பேச கூட தகுதியில்லாதவன்…..” பேசிவிட்டு கவினாவின் முகத்தையே உற்று நோக்கினான்.
“நீங்க கூடத்தான் என்னை விட அதிகமா படிச்சிருக்கீங்க. என்னை விட அதிகமா சம்பாதிக்கறீங்க. பார்க்க ஸ்மார்ட்டா வேற இருக்கீங்க. நான் இந்த ஆபீஸ்ல ஜாயின் பண்ணி நாலு மாசமாச்சு. இது வரைக்கும் ஒரு நாள் கூட உங்களை தொட்டுப் பேசத்தோணல. உங்க கூட காபி சாப்பிடப் போகனம்னு தோணலை. ஆனா… எப்பவும் சிபிக்கு அருகாமைலயே இருக்கனம்னு தோணுது. எனக்கு மட்டுமில்ல அவனுக்கும் தோணுது. மனசுல இருக்கிற பாரத்த அவன்கிட்ட இறக்கி வெச்சுக்கறேன். எனக்கு ஆதரவா, அனுசரணையா பேசறான். நடிச்சுப்பேசற மாதிரி தோணல. சொல்லப் போனா அவன கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்தா என்னன்னு மனசுல ஒரு வாரமா எனக்கு ஓடிகிட்டிருக்கு….”
கவினா சொல்லச்சொல்ல வியப்பின் எல்லைக்கே சென்றார் மேனேஜர். ‘இதத்தான் சோதிடத்துல வசியம்கிறாங்களோ…? வசிய ராசிங்கறாங்களோ….?’ என எண்ணியவர் நின்று போன தனது மூச்சை மறுபடியும் சீராக இழுத்து விட்டவர் பேச்சிழந்து போயிருந்ததை புரிந்த கவினா எதுவும் சொல்லாமலேயே எழுந்து வெளியில் சென்றவள், அங்கே நின்றிருந்த சிபியின் கைகளை இதுவரை பற்றியதை விட இறுக்கமாகப்பற்றி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
