சிவந்தது சாக்லேட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 3, 2026
பார்வையிட்டோர்: 80 
 
 

ஈரானின் ஓர் மலைத்தொடரின் அடிவாரம். மணல் காற்று முகத்தில் அறைய, டியாகோ ஒரு பாறை இடுக்கில் சாய்ந்திருந்தான். அவனது இடது காலில் இருந்து வழியும் ரெத்தம், காய்ந்த மண்ணில் கருஞ்சிவப்புப் புள்ளிகளாக விழுந்து கொண்டிருந்தது. 

அவனது கையில் இருந்த துப்பாக்கி இப்போது அவனுக்கு ஒரு பாரமாகத் தெரிந்தது.

அவன் கண்கள் மெல்ல மூடின. நினைவுகள் மெக்சிகோவில் உள்ள தன் வீட்டுக்கு ஓடின.

“டியாகோ, இந்த போதைப்பொருள் மூட்டைகளைச் சுமப்பதை விட, அமெரிக்க எல்லையில் துப்பாக்கியைச் சுமப்பது மேலானது. அங்கே நம் மகனுக்கு நல்ல எதிர்காலம் அமையும்,” என்று அவன் மனைவி மரியா அழுதது இப்போதும் காதில் ஒலித்தது.

திடீரென ஒரு சலசலப்பு…!

டியாகோ திடுக்கிட்டுத் துப்பாக்கியை உயர்த்தினான். எதிரே இருந்த இடிபாடுகளுக்குப் பின்னால் புழுதி படிந்த உருவம். 

ஈரான் நாட்டுச் சிப்பாய். அவனும் காயப்பட்டிருந்தான். கையில் துப்பாக்கி, இருவரும் ஒருவரை ஒருவர் குறிவைத்தனர். 

சிங்கம் புலி இரண்டும், ஒரே பாதையில் சென்ற கால்களின் சுவடுகள் போல்.

“சுடாதே…” என்ற பலவீனமான குரல் பாரசீக மொழியில் கேட்டது. டியாகோவிற்கு மொழி புரியாவிட்டாலும் அந்தத் தொனியில் இருந்த மரண பயம் புரிந்தது.

அவன் பெயர் ஜாவாத். அவன் குர்திஷ் இனத்தவன். ஈரான் இராணுவத்தில் ஒரு கட்டாயத்தின் பேரில் இருப்பவன். இருவரும் சில நிமிடங்கள் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வலி இருவரையும் ஆயுதத்தைக் கீழே வைக்கச் செய்தது.

டியாகோ (ஆங்கிலத்தில்) மெதுவாக “நான்… அமெரிக்கன்.. நீ… ஈரான்?”

ஜாவாத் தட்டுத்தடுமாறி (ஆங்கிலத்தில்) “நான்… குர்தி.. ஈரான் இராணுவம். நீ ஏன் இங்கே வந்தாய்?..”

டியாகோ, கீழே அமர்ந்த படி “எனக்கு நாடே இல்லை நண்பா. நான் மெக்சிகோகாரன். என் மகனுக்கு அமெரிக்கக் குடியுரிமை வேண்டும் என்றால், நான் இங்கே யாரையாவது கொல்ல வேண்டும். இதுதான் நான்.”

ஜாவாத், “விதி எல்லா இடத்திலும் ஒன்றுதான். நான் என் இனத்திற்காக, என் நிலத்திற்காகப் போராடுகிறேன். ஆனால் நான் அணிந்திருக்கும் இந்தச் சீருடை என்னை ஒடுக்கும் அரசாங்கத்துடையது. நாம் இருவருமே நமக்காகப் போரிடவில்லை.” என்று சொல்லிவிட்டு அவனும் அமர்ந்தான். 

சிறிது நேரம் கடந்து, இரவு கவிழ்ந்தது. குளிர் எலும்பைத் துளைத்தது. டியாகோ தன் பையிலிருந்து மெக்சிகன் சாக்லேட் துண்டுகளை எடுத்தான். அதை இரண்டாக உடைத்து ஜாவாத்திடம் நீட்டினான்.

ஜாவாத், “இது என்ன?”

டியாகோ,”என் ஊர் சாக்லேட் இதைப் பார்க்கும்போது என் மகன் முகம்தான் நினைவுக்கு வரும். அவனுக்கு ஐந்து வயது. உன் குடும்பம்?”

ஜாவாத் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தான். அதில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். 

“அவர்கள் ஈராக் எல்லையோரம் இருக்கிறார்கள். நான் திரும்பி வருவேன் என்று அவர்களுக்குத் தெரியாது. குர்திஷ் மக்கள் நாங்கள்… காற்றில் அலைக்கழிக்கப்படும் இலைச் சருகுகள் “

இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தனர். தேசம், மதம், மொழி எல்லாம் அந்த இருட்டு அறையில் கரைந்து போயின. அங்கே இரண்டு தந்தைகள், இரண்டு மனிதர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். 

இருள் ஓடி ஒளிந்தது, அதிகாலைச் சூரியன் மலைகளுக்குப் பின்னால் எட்டிப்பார்த்தது. தூரத்தில் ஈரான் இராணுவ வாகனங்களின் சத்தம் கேட்டது. ஜாவாத் சற்று தயங்கிய படி, “என் ஆட்கள் வருகிறார்கள்! நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். நீ சிறைக்கைதியாக இருக்கலாம், ஆனால் உயிர் பிழைப்பாய்” என்றான்.

வாகனங்கள் நின்றன. ஈரானிய வீரர்கள் உள்ளே நுழைந்தனர். ஆனால் அவர்கள் பார்த்த காட்சி வேறு. குர்திஷ் சிப்பாய் ஒருத்தன் , அமெரிக்க எதிரியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது.

ஈரானியத் தளபதி ஜாவாத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கினான். “துரோகி! நீ இவனுக்கு ரகசியங்களைச் சொல்கிறாயா? குர்திஷ் நாயே, உங்களை நம்பியதே தவறு!” என்று அவர்களின் மொழியில் கத்தினான்.

ஜாவாத், “இல்லை… இவனும் என்னைப் போல ஒரு மனிதன் தான். இவனும் காயப்பட்டிருக்கிறான்…”

தளபதி அவனைப் பேச விடவில்லை. துப்பாக்கியின் பின்பகுதியால் ஜாவாத்தின் முகத்தில் அடித்தான். டியாகோ கத்தினான், “வேண்டாம்! அவன் எதுவும் செய்யவில்லை!”

டியாகோவின் கைகள் கட்டப்பட்டன.

தளபதி தன் கைத்துப்பாக்கியை எடுத்தான். சிறுபான்மையினன் மீது அவனுக்கு இருந்த வெறுப்பு இப்போது தேசபக்தியாக மாறியிருந்தது.

சுடப்பட்டது..

எதிரொலி எங்கயோ சிறு பறவைகளை, துரத்திப் பறந்தது.

ஜாவாத் மெல்லச் சரிந்தான். ரத்தம் அவன் மார்பிலிருந்து தெரித்தது. டியாகோவை ஈரானிய வீரர்கள் இழுத்துச் செல்ல, ஜாவாத் கண்களைத் திறந்தான். 

அவன் பார்வை டியாகோவின் கண்களையே உற்று நிலைத்தது. அந்தப் பார்வையில் மரண வலி இல்லை. மாறாக, “நீயாவது அந்தச் சாக்லேட் துண்டுகளை உன் மகனிடம் கொடு” என்ற அமைதியான செய்தி இருந்தது. 

டியாகோ கதறி அழுதான். ஒரு மெக்சிகோ அகதியின் கண்ணீரும், ஒரு குர்திஷ் போராளியின் குருதியும் அந்த ஈரான் மண்ணில் ஒன்றாகக் கலந்தன. டியாகோ சிறை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

எல்லைகள் மனிதர்களைப் பிரிக்கலாம், ஆனால் மரணத்தின் விளிம்பில் மலரும் மனிதாபிமானத்தை எந்தச் சீருடையாலும் மறைக்க முடியாது.

தொலைக்காட்சியில் ட்ரம்ப்பின் குரல் அதிரத் தொடங்கியது. வெளியே ஈரானியப் பாலைவனக் காற்று பலமாக வீசத் தொடங்கியது.

விடுதலை என்பது காகிதத்திலோ அல்லது அதிபர்களின் பேச்சிலோ இல்லை; அது ஜாவாத்தின் கண்களில் கண்ட அந்த மனிதாபிமானத்தில்தான் இருக்கிறது என்பதை டியாகோ உணர்ந்தான். 

அந்த இரும்புத் திரைக்குப் பின்னால், ஒரு மெக்சிகோ சிப்பாய் தன் அடுத்த விடியலுக்காகவும், தன் சக மனிதனின் நினைவிற்காகக் காத்திருந்தான்.

டியாகோவின் மகன் மத்தியாஸ், ஜன்னல் ஓரம் அமர்ந்து சாலையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கையில் சிறிய பிளாஸ்டிக் எவஞ்சர்ஸ் வீர பொம்மை ஒன்று இருந்தது. மரியா சமையலறையில் இருந்து அவனைப் பார்த்தாள். அவளது கண்கள் கலங்கியிருந்தன. 

“அம்மா, அப்பா எப்போது வருவார்? அவர் இப்போது ஒரு ‘ஹீரோ’ தானே? அந்த பெரிய மனிதர் டிவியில் பேசும்போது என் அப்பா போன்ற வீரர்களைப் பற்றித் தானே சொல்கிறார்?” என்று மத்தியாஸ் கேட்டான்.

மரியாவிடம் பதில் இல்லை. அந்தப் பெரிய மனிதர் டிவியில் “சுவர்” பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சுவருக்கு இந்தப் பக்கம் இருக்கும் மத்தியாஸிற்கு, தன் தந்தை ஒரு தேசத்தைக் காக்கச் சென்ற வீரனாகத் தெரிந்தான். ஆனால், அந்தத் தேசத்திற்கோ, அவனது தந்தை ஒரு ‘பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியப்பட வேண்டிய’ ஒரு அந்நியன் மட்டுமே. 

மத்தியாஸ் தன் நோட்டுப் புத்தகத்தில் சிறு படம் வரைந்திருந்தான். அதில் மெக்சிகோ நாட்டின் கொடியும், அமெரிக்கக் கொடியும் கைகோர்த்துக் கொண்டிருந்தன. அதன் நடுவே அவனது தந்தை சிரித்துக் கொண்டிருந்தார். அந்தச் சிறுவன் எதிர்பார்த்தது இராணுவ பதக்கத்தை அல்ல; தன் தந்தையின் அணைப்பை மட்டுமே.

அதே நேரத்தில், குர்த்தி மக்கள் நிறைந்து வாழும் ஈரான் ஈராக் எல்லையில், ஜாவாத்தின் மகள் பாத்திமா ரோஜின், வீட்டுக்குள் அமர்ந்திருந்தாள். அவளது கையில் யூடுப் காணொலி ஓடிக் கொண்டிருந்தது. அதில் வரும் செய்திகள் அவளுக்குப் புரியவில்லை, ஆனால் தன் தந்தையின் குரல் எங்காவது கேட்காதா என்று அவள் ஏங்கினாள்.

“அப்பா எனக்காக புதிய ஆடைகள் கொண்டு வருவதாகச் சொன்னார். அவர் இப்போது ஒரு பெரிய போரில் இருக்கிறார், அவர் வென்றுவிடுவார் தானே அம்மா?” என்று கேட்டாள் மகள் ரோஜின்.

அவளது தாய் ஜாவாத்தின் பழைய சட்டையை மடியில் வைத்து அழுதுகொண்டிருந்தாள். ரோஜின் காணொலியை அணைத்துவிட்டு, வானத்தைப் பார்த்தாள். அங்கே பறக்கும் பறவைகளுக்கு எல்லைகள் கிடையாது. அவளது எதிர்பார்ப்பு ஏதோ தேசத்தைப் பற்றியது அல்ல; தன் தந்தை தூக்கிக் கொஞ்சும் அந்த ஒரு நிமிடம் பற்றியது. 

அரசியல் தலைவர்கள் “தேசப்பற்று” என்றும் “எல்லைகள்” என்றும் முழங்கிக்கொண்டிருக்கும்போது, இந்த இரண்டு குழந்தைகளும் எதிர்பார்ப்பது ஒன்றுதான். தங்கள் தந்தையின் வருகை. ஆனால், அந்தப் பாலைவன மணலும், சிறைச்சாலையின் இரும்பு கம்பிகளும் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *