வாடாமல்லி
கதையாசிரியர்: கா.அப்பாத்துரை
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 195
(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இதழ் 22-25 | இதழ் 26-28 | இதழ் 29-31
ஏடு 4 – பறவை சிக்கிற்று
இதழ் 26 – பிரிவுக்கு முன்

லாரைனும் மூரட்டும் பகல்முழுதும் அடிலி அகஸ்டி ஆகியவர்களை உடன்கொண்டு அவர்களுடன் விளையா டியும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தும், அவர்கள் மூலமே ஒருவர் உள்ளத்தை மற்றவருடன் பரிமாறிக் கொள்வர். இரவில் அவர்கள் பேச்சிடையே குழந்தை கள் உறங்கும். பேச்சிடையேதான் விழிக்கும். ஆனால் இவ்விரண்டு எல்லைகளுக்கிடையில் பிள்ளைகள் தாம் நேரம் செல்வதறியாது ஒருகணம் கழிந்ததென உறங்கி எழுந்தனர். காதலின் முதிர் பறவைகளோ அதற்குள் தம் உலகைப் பல தடவை வட்டமிட்டுலாவிப் பல சிற் றூழிகள் கழித்துவிடும்.
கணப்படுப்பருகில் எதிரெதிர் இருந்து, ஒருவர் கால்கள் மற்றவர் கால்களுடன் ஊடாட அவர்கள் பேசியிருப்பர். ஒருவரிடுப்பில் ஒருவர் கை கோத்து இரவின் நிலாக் காட்சியில் வெளியே தோட்டத்தில் உலவித் திளைப்பர். பலகணியருகே இருவரும் நின்று காதற் கூண்டிலுள்ள இரு பறவைகள் உலகை எட்டிப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு வாயாடாமலே உளமூடாடுவர். இங்ஙனமாகச் சில நாட்கள் கழிந்தன.
எதிரெதிர் மின்னாற்றலால் இயக்கப்பட்ட இரு இரும்புத் துண்டங்கள் போல அவர்கள் ஒன்றுபட்டு உறவாடினர். ஆனால் அவர்கள் உள்ளங்கள் அடிக்கடி பூசலிட்டன. ஞாயிற்றின் சுழல் விசையினால் எறியப் பட்டும் அப்பால் செல்ல முடியாமல், அதன் ஈர்ப்பாற் றலில் சிக்கி அஞ்ஞாயிற்றையே சுற்றிச் சுற்றியோடும் கோளினங்கள் போல, அவர்கள் உள்ளங்கள் தத்தம் தன் முனைப்பு முற்றும் அழியாத நிலையில் விலக முயன்றும் விலக முடியாமல் ஒன்றை ஒன்று பின்னி வட்டமிட்டுச் சுழன்றன. அச்சுழற்சியில் மூரட் ஞாயிறா யிருந்தான். லாரைனோ கோளினங்களா யிருந்தாள் அவள் தன் முனைப்பும் பெண்மையும் பெரிதும் வலு விழந்தாலும் தாய்மை உணர்ச்சி இடையிடையே வந்து தூண்டச் சிறிது சிறிது வலுப்பெற்று எதிர்த்து நின்று தயக்கமுற்றது.
தன் உள்ளத்தின் இப்போராட்டக் காலத்தின் ஒவ்வொரு வினாடியும் லாரைன் நினைவில் சுட்டதழும்பு போல் பதிந்திருந்தன. தன்முனைப் பழிவுபற்றிப் பின் னாளில் அவள் என்றுமே கழிவிரக்கம் கொண்டதில்லை. அது முற்றிலும் அழியாமல் தலை தூக்கி நின்றதற் காகவே அவள் நெடுநாள் தன்னைப் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் அத்தறுவாய்களிலும் மூரட்டின் ஆண்மை மிக்க உருவம், அவளை எண்ணி எண்ணியே வட்டமிட்ட அவன் உரையாடல் வெள்ளம், அவள் மனத்தை மாற்ற அவன் வாதிட்ட வாதங்கள், முறையிட்ட காதல் முறையீடுகள், அவன் உள்ளத்தில் ஈர்க்கிடையின்றி நிறைந்து நிலவிப் பொங்கி வழிந்த அவன் காதல் கனிவு ஆகியவை அவளுக்குப் பேராதர வும் பேரின்பமும் அளித்தன.
ஆனால் பெண்மை தளர்ந்தும் முறியவில்லை’ கொடி கொழுகொம்பையே தழுவியாடியும் அதனைப் பற்றிச் சுருள மறுத்தது. அவள் தன் கோடு மீறத் துணிந்தாள். ஆனால் கோட்டினை அழிக்க ஒருப்பட வில்லை. மூரட்டின் ஆழந் தேரும் ஆழ்கயக் கரண்டி அவள் காதலுள்ளத்தின், ஆழங்கடந்து எங்கும் அடித் தடம் காண முடியவில்லை. ஆனால் இவ்வோரிடத்தில் அது பாறைமீது மெல்லெனக் கண், கண் என்று மோதிற்று.
அவள் உடலை அவனிடம் ஒப்படைத்தாள். உள் ளத்தை ஒப்படைத்தாள். தன் மானத்தை ஒப்படைத் தாள். தாய்மையைக் கூட ஒதுக்கிவைக்க ஒருப்பட் டாள். ஆனால் தாய்மையை ஒப்படைக்கத் தயங்கி னாள். தயக்கம் நீடித்தது. அவள் எதிர்த்தே நின்றாள்
அவள் திட்டம் மாற்றினாள். ஆண்மை பணிய மறுத்தது. சற்றுத் தன்னை உரப்படுத்திக்கொண்டு அவன் ஒரு நாள் மாலை கூறினான்: “இன்னும் ஒரு. முறை நான் பழைய வெள்ளத்தில் குதித்துப் பார்த்து விடுகிறேன். ஏதாவது உயர் பணியை எப்படியாவது பெற்றுவரப் போகிறேன். என்றும் அது வராமற் போகாது. நம் இடக்கு நிலை நீங்க அது ஒன்றுதான் தற்போதைய வழி. உன்னை உணர்ச்சித் சூதாட்டத் தில் ஏமாற்றிக்கொண்டு நான் இன்னும் நெடுநாள் இருக்கக்கூடாது. எனக்கு எத்தனையோ செல்வாக் குள்ள நண்பர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஒருவர் விடாமல் புரட்டிப் புரட்டி முயலுவேன். நான் ஒரு நற்பணி யடைந்தால் என் லாரைன் என் மனைவியாகத் தடை ஏதுமில்லையே!”
அவள் விடை கூறவில்லை. அவன் மீது சாய்ந்து அவனை இறுக அணைத்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள். அவன் வீரம் அவன் காதலுள் ளத்தைக் கஞ்சித்தாள்போல் படபடத்துத் துடிக்கச் செய்தது. அவள் பெண்மை தோற்கவில்லை. அவன் ஆண்மையும் வென்றது. ஆனால் இடையே காதல்- இன்பம்-கனவு! அவர்கள் போராட்டத்திடையே காதல் தான் நெளிந்து புரண்டது!
“நான் உயர்பணி பெற்று வந்தால் என்னை நீ மணந்து கொள்வாயா?” என்று ஓர் ஆண் குரல் கேட் டது மீண்டும் தொலைவிலிருந்து எழுந்தது போல.
அவள் தன்னை மறந்து உரக்கக் கூவினாள். “ஆம். ஆம். ஆம். கட்டாயம் மணந்து கொள்வேன்.”
“அதற்காக எவ்வளவு நாள், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நீ காத்திருப்பாயல்லவா?”
“ஆ! கடவுளே! எவ்வளவு நாளா? எவ்வளவு காலமா?”
மீண்டும், “ஆம். ஆம். எவ்வளவு காலமாயினும் காத்தே இருப்பேன். உடல் காத்திருக்கும். உயிர் உடலில் இருக்கும் வரை உயிரும் காத்திருக்கும்.”
அவன் பெருமூச்சு விட்டான்.
“ஆம். என் லாரைனின் உறுதி எனக்கும் உறுதி தரும். நான் இனி எதையும் தாங்குவேன். எனக்கு இனி ஆறுதல் தர, ஊக்கம் தர, உறுதிதரப் புறத்தேயுள்ள வேறு எந்தத் தெய்வ வணக்கமும் தேவையில்லை. என் உள்ளக் கோயிலிலேயே காதல் பலி பீடத்தின் பின் நின்று நஞ்சு குழைத்த அமுத நோக்கு நோக்கும் என் காதல் தெய்வத்தினை அகக் கண்ணால் ஒரு தடவை கண்டால் போதும். நான் புது மனிதனாக உழைப் பேன்……. உன்னை விட்டுச் செல்வது ஒன்றுதான் இப்போது எனக்குக் கடத்தற்கரிய ஒரு கடமை. ஆயி னும் அவ்வப்போது பாரிஸில் சந்திப்பேன். அங்கே நீ என்னைக் காண வரும்போது வேறு எத்தனை பேர் வந்து இடைமறிப்பர். ஈட்டி என்று தெரியாமல் எத் தனைபேர் ஈட்டிகள் கொண்டு குத்துவர்.”
“நீ என்னை அந்த அளவு காதலிக்க முடிகிறதா?”
“ஏன் இந்தத் தயக்கம்? நீ இருக்கும்போது நான் உயிர் வாழ்கிறேன். நீ இல்லாதபோது உயிர் வாழ்வ தாகக் கூற முடியாது. ஆயினும் மீண்டும் உன்னைக் கண்டு உயிர் வாழும் வாழ்வைக் கனவுகண்டுகொண்டு அரையுயிர் வாழ்வேன்.”
அவள் தலை சுழன்றது. அவள் புனைகதைச் சுவடி மீது அவள் தலை சாய்ந்தது. அவள் துயிலில் வீழ்ந்தாள்.
தாய்மையின் சாயல்-ஆனால் இளமையின் துடிப்பு அனுபவத்தின் வரித்தடங்கள்-ஆனால் குழந்தையின் தூய்மை. இத்தகைய அழகுக் காவியத்தை அவன் என்றும் கனவிலும் எண்ணியதில்லை. இதனை விட்டுச் செல்ல வேண்டுமே! ஆம்! விட்டுச் சென்றுதான் ஆகவேண்டும்.
காற்று சிறிது அலறிற்று. அவள் எழுந்தாள். தூங்கும் குழந்தையைக் காக்கும் தாய்போல் அவன் இருப்பது கண்டாள். “புயலில் நம் காதல் நம்மைக் கூட்டிற்று. இன்று மீண்டும் புயல். இதனை உன்னுடன் கைகோத்து நின்றே காண விரும்புகிறேன்” என்றாள்.
அவன் கையைப்பற்றி இழுத்துக்கொண்டு அவள் பலகணிப் பக்கம் சென்று கதவைத் திறந்தாள். ஒரே காற்று. எல்லா விளக்குகளும் ஒரே மூச்சில் அணைந்தன. அவள் செய்வதறியாது அவனை நோக்கினாள்:
இருளில் அவன் அவளை அருகே இழுத்து-‘வா போவோம், புயலிடையே!’ என்றான்;
அவன் சொற்கள் வெறியூட்டின.
இருவரும் மட்டுப்பாவில் சென்று புயலிடையே இரு பாறைகளாக நின்றனர். புயல் அவள் நீலக் கூந் தலை இருவர் கழுத்தையும் சுற்றியடித்தது. அவன் ஆடையை அவள் மீதும் அவள் ஆடையை அவன் மீதும் மாற்றி வீசிற்று. இருவரும் ஒருங்கே கொல் லென்று சிரித்தனர்.
நள்ளிரவு மணி பன்னிரண்டு அடித்தது. மூரட் லாரை னை உள்ளே அழைத்து வந்து சாம்பல் பூத் திருந்த தணப்பு சட்டியில் இன்னும் சில கட்டைகளை யிட்டுக் கிளறினான். இருவரும் அடுப்பின் தணலில் சார்ந்து இன்னும் சில நேரம் உறங்குவதற்குக் கூடப் பிரிந்துசெல்ல முடியாத நிலையிலிருந்தனர். அவள் கண்கள் அவன் நீண்ட தோள்களை அளந்தன. அவன் கண்கள் அவள் கண்களின் நீளொளியில் மூழ்கின. சிறிது நேரத்தில் அவள் பார்வை அவன் பார்வையுடன் சந்தித்தது. “உன்னைக் காதலிப்ப நானல்ல, என் உள்ளுறை உயிர்” என்றது அவள் இதழ்கள்.
“ஆ, தேனினும் இனிய என் காதற் கனி! உன்னை நான் ஏன் முன்பே, வாழ்வின் தடம் கரடுமுரடாகு முன்பே, காதலுரிமை மீது திரை விழுமுன்பே சந்தித்திருக்கப்படாது” என அவன் அங்கலாய்த்தான்.
விடியற்கால வெண்மை புயல் மேகத்திடையேயும் மங்கலாய் ஒளி வீசிற்று. காலை மணம் பரவிற்று. துயிலைக் கிழித்த காதலுக்கு நீள் விடை கொடுத்து அவர்கள் பிரிய முனைந்தனர். அவர்கள் கைகள் பிரிய விடாது ஒருவரையொருவர் தழுவிப் பிணைத்தன. பிரியா விடைச் சின்னங்களாக முத்தங்கள் பொழிந் தன. இரவு முற்றிலும் அணைத்த அணைப்பு பொய்யா யிற்று-புத்தார்வத்துடன் அவர்கள் மீண்டும் ஒரு வரை ஒருவர் அணைத்துக்கொண்டு, ஒருவர் உடலை மற்றவர் உடலினின்று கிழித்தெடுத்தனர். அவர்கள் உடல்விட்டு உடல் பிரிந்தது. சில மணி நேரத்தில் அவர்கள் இடம் விட்டு இடமும் பிரியவேண்டும் என் பதை நினைத்து ஏங்கினர்! ஆனால் அந்நிலையிலும் இருவர் உறுதியும் மாறவில்லை. அவள் குழந்தை களுடன் அவனை எண்ணி யெண்ணிப் பொழுதுபோக்கி, அவன் வருங்கால வரவை எதிர் நோக்கியிருக்க- வரையறைப்படாத அந்நாளை வரையறைப்படுத்தி எண்ணி எண்ணிக் கழிக்க அவள் ஒருப்பட்டாள். அவ் வருங்காலத்தை விரைவுபடுத்த-அதற்காக அகலுல கில் அலைந்து திரிந்து, அருந்திருவும் பணிவெற்றியும் நாட அவன் முனைந்தான்.
பகலின் ஒளி அவர்களைப் பிரித்தது; அவள் வாயிற்படியில் நின்றாள். அவன் கண்கள் அவளைத் திரும்பத் திரும்ப நோக்கிக்கொண்டே, அவன் கால் கள் மாளிகையை விட்டேகின. அவர்கள் குழந்தைகள் செய்தி எதனையும் உணரவில்லை-இன்றும் அவன் அவர்களுக்குச் சிற்றப்பனாகவே இருந்தான்-சிற்றப்பன் தன் படைத் துறைப் பணியேற்கச் சென்றான் என்று விடிந்தபின் அவர்கட்குக் கூறப்பட்டது.
லாரைன் துயரை அவர்கள் அறியமாட்டார்கள். ஆனால் வேறு வேறு வகையில் மூரட் இல்லாக் குறை யைப் பிள்ளைகளும் அடிக்கடி எண்ணினர்; பணியாட் களும் அடிக்கடி எண்ணினர். அவன் எல்லார் நட்பையும் அந்த அளவு சார்ந்திருந்தான்.
இதழ் 27 – பிரிவு
ஆண்டுகள் இரண்டு சென்றன. அதன் ஒவ் வொரு நாளும் அவனுக்கு ஓராண்டாகக் கழிந்தது. அவளுக்கோ ஒவ்வொரு நாளும் இரண்டு ஆண்டு களாகக் கழிந்தன: அவளை நேரிடையாக வந்தடைய உதவத்தக்க, தன் மதிப்புரிமையுடன் அவளை உரிமை மனைவியாக்கிக்கொள்ள உதவத்தக்க ஒரு பணிபெறும் முயற்சியவாவில் அவன் உள்ளம் ஈடுபட்டு நாட்கழித் தது. அத்தகைய குறி எதுவுமின்றி, தன் வசத்தி லில்லாத, தன் விருப்பத்துக்குக் கட்டுப்படாத ஒரு எதிர்கால நற்பேற்றை எண்ணி, காதலுள்ளத்தின் நம்பிக்கையன்றி வேறு நம்பிக்கையின்றி, அவள் உள்ளம் ஏங்கிக் கிடந்தது. அவள் உயிர் அவள் உடலில் இல்லை என்பதை அம்மாளிகையிலுள்ள பணி யாட்களும் உணராதிருக்க முடியவில்லை-குழந்தைகள் கூட அவள் மாறுதல் கண்டு ஒன்றும் புரியாமல் மறுகின. பாரிஸ் உயர்குடி மக்களோ, அவள் ஒழுக்க உயர்வினால்கூட அவள் கூட்டுறவின்பத்தை வெறுக்க முடியாதிருந்தவர்களாதலால் திடுமென அவள் வரவு நின்றதுகண்டு மலைவுற்றனர். பலர் வந்து வந்து அவளை அழைத்தனர் – மன்றாடினர். அவள் உள்ளம் தனக்குள் எதையோ சுற்றிச் சுற்றி வந்ததேயன்றிப் புறத்தே எதையும் நாடவில்லை. அவள் சொற்களும் வளைய வளைய ஏதோ கூறின தன்றி எதற்கும் சரியான விடை பகரவில்லை. அவள் மாளிகை அவளுக்கு ஒரு துறவுக் கூடமாயிற்று. பாரிஸ் அவளைப் படிப்படியாக மறந்தது.
பிரிவிடையேயும் அவர்கள் சிறு பிணக்குகள் நின்று விடவில்லை. அவர்கள் கடிதங்கள் பலவற்றை இப்பிணக்குகள் நிறைத்தன.
“நீ, நான் என்று உன்னை அழைக்காமல் நான் வேறு எப்படி அழைக்க முடியும்? நேரிடையே கூடப் பிறர் இருக்கும்போது தான் நீங்கள், நாங்கள் என்று சுட்ட முடிகிறதேயன்றி, தனியே இருக்கும்போது அவ்வாறு பேசமுடிவதில்லையே. கடி தங்களில் எத்தனையோ செய்திகள் எழுதுகிறோம். எதுவும் பிறர் பார்க்கத் தக்கதல்லவே. அப்படி யிருக்கப் பலர் காண எழுதுவதுபோல் எப்படி எழுத முடியும்? அதனால் நான்தான் என்ன ஆறுதல் பெற முடியும்? நீதான் என்ன ஆறுதல் பெற முடியும்? என் கையை, என் முகத்தை, என் உள்ளத்தை நான் ‘நீங்கள், நாங்கள்’ என்று பேசமுடியுமா? நீ அவற்றி னும்எனக்கு நெருங்கிய உரிமையுடையவளாயிற்றே! நீ என்ன கூறினாலும் நான் நீ, என் கண்மணி போன்ற காதலுரிமையை இழக்க முடியாது. இங்கே எனக் கிருக்கும் ஒரே ஆறுதல் அதுதான் – அவை சொற்கள் அல்ல-என் ஓயாத சிந்தனைகளின் பிழிவுகள். கடிதத்தில் மற்றச் சொற்களை யெல்லாம் விட்டுவிட முடியும். கடிதம் முழுவதுமே நீ, நீ, கண்மணி, கண்மணி என்று எழுதினால்கூட எனக்குப் போதும். அச்சொற்களி லேயே என் உயிர் அடங்கியிருக்கிறது. அவற்றைப் பற்றி எழுதுவதைவிட என்னால் எழுதாமலிருந்துவிடக் கூட முடியும்!”
அது அவன் கடிதங்களில் ஒன்று.
அவள் மறுத்துரைத்தாள். வாதாடினாள். ஆனால் அவளுக்கு அவள் உளளத்தின் அவாவைத் தெரிவித் தது அவள் கடிதங்களல்ல. அவன் கடிதங்களே, யார் கையோ தன் கையைப் பிடித்து எழுதுவதாகவும், யார் உள்ளமோ தன் உள்ளத்தினருகிலிருந்து எழுதச் சொல் வதாகவும், அதற்கு மறுமொழி அவனிடம் சென்று தங்கிய தன் உள்ளத்திலிருந்து, அவன் கையை இயக் கிய தன் அரை ஆர்வத்தினாலேயே எழுதப்பெற்று வரு வுதாகவும் அவளுக்குத் தோன்றிற்று. பெண்களுக்குக் காதற் போராட்டம் ஒரு போராட்டம் அன்று, ஒரு நாடகம் மட்டுமே என்பதை அவள் உணர்ந்தாள்.
அவள் திட்டுதல், அவள் கண்டனம், அவன் வெறுப்பு ஆகியவைதாம் அவன் உள்ளத்துக்குத் தெவிட்டாத அமுதமாயிருந்தன. அவன் தனிமை, அவன் மறைபட்ட வாழ்வு, அவன் துயர் ஆகியவற் றைத் தாங்க அவனுக்கு வலிவு தந்தவை அவைகளே.
அவள் கடிதங்களை அவன் தவிர வேறு யாரும் பார்ப்பதில்லை என்பதை அவன் எழுதியபின்தான். அவள் உணர முடிந்தது. தன் உள்ளத்தையே அவள் மற்றொருவர் உள்ளமாகக் கருதி அதனிடமிருந்தே தன் காதலை மறைக்க எண்ணியிருந்திருக்கவேண்டும். தங்கள் மறை காதல் நடிப்பை விட்டுப் படிப்படியாக அவன் கடிதங்களில் தன் உள்ளம் திறந்து காதலிக்கத் தொடங்கினான் என்று அவள் சினங்கொண்டு ஒரு நாள் இரவு உட்கார்ந்து “இனி இப்படி வெளிப்படையாகக் கண்ணே, நீ, நான் என்று எழுதக்கூடாது. நம் உள் ளத் திரை மறைவிலுள்ள காதல் திரை மறைவாகவே இருக்கட்டும். கடிதத்தில் நட்புரிமை தோன்ற நீங்கள், நாங்கள் என்றே எழுதுங்கள்” என்று அவள் எழுதி யிருந்தாள். அவன் அப்படியே எழுதியிருந்தால் அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை அவள். அறியவில்லை!
இரண்டாண்டுகளிலும் மூரட் எதிர்பார்த்ததுபோல, அவனுக்குப் பணி உயர்வு எதுவும் கிட்டவில்லை. அவன் பாடல்கள், அவன் வணங்காமுடி மரபு, அவன் கொடு நாக்கு அவனை என்றும் சிறு படைத்துறைவ னாகவே வைத்திருந்தன. அவன் கனிந்த உள்ளத்தைக் காதல்கூடத் தடுத்தாள முடியவில்லை. ஏழைச் சிறுவர், சிறுமியர், வறுமைக்குழியில் உழலும் எத்தனையோ கன்னியர் அவன் சிறுவருவாயில் பொத்தல்கள் செய்தனர். அவன் இடதுகை கொடுத்துக்கொண்டேயிருந்தது. வலது கை கடன் வாங்கிக்கொண்டே யிருந்தது. அம்பலத்தில் சென்றாடியும் அரங்கன் அரங்கனாகவே அவன் மீள வேண்டிய நிலையிலிருந்தான்.
இரண்டாண்டு வாழ்வில் அவனுக்குக் கிடைத்த செல்வமெல்லாம் இரண்டு நாள் ஓய்வில் ஊர் சென்று மீளும் உரிமைதான்!
இதழ் 28 – காதல் மணம்
லாரைன் தன் நாட்டுப்புற மாளிகையில் அவ் வூர்ச் சமயத் தலைமகனார் அழைப்பை ஏற்று வந்திருந் தாள். அவள் குழந்தைகளும் தாதியும் அவளுடன் பெட்டி வண்டியிலமர்ந்து வந்திருந்தனர். முன்கூட்டி ஏற்பாடு செய்திருந்தபடி ஸ்டானிஸ்லாஸும் (மூரட்) அங்கே வந்து அவர்களைக் கண்டு மகிழ்ந்துற வாடினான்.
முதற் பிரிவின்போது லாரைன் உள்ளத்தில் காதல் முளைவிட்டுத் தளிர்த்திருந்தது. இந்த இரண்டாண்டுப் பிரிவுக்குள் அது அரும்பு விட்டுப் போதாகி மலரும் பருவமடைந்திருந்தது. அவள் காதலனை அடைய மறைந்து வரும் காதலியாய் இப்போது வரவில்லை. மணமகனை வரவேற்க வரும் மணமகளாகவே வந்தாள். அவள் கைமைக் கோலம் மறக்கப்பட்டு நெடுநாளா யிற்று. ஆனால் இப்போது கன்னிக் கோலமும் மறைந் தது. அனற்கொழுந்தெனும்படி செக்கச் செவந்த கச்சு இப்போது அவள் மார்பகத்தை எடுத்துக்காட்டிற்று. அதன் கழுத்துப்பட்டை மூன்றடுக்கான நீல அலை களால் அதற்கு வேலிகளமைத்தது. வெண் பூக்கள் தவழ்ந்து புரளும் மங்கிய பச்சை அங்கி கச்சின் நிறத் தையும் உடலின் வெண்மையையும் எடுத்துக் காட்டின. கழுநீர் மலரின் நிறங்கொண்ட பட்டுக் காலுறைகளும் காலணிகளும் அங்கிகளினடியில் நின்று அடிக்கடி எட்டிப் பார்த்தன. அவள் முகத்திலும் காதலனைக் காண வருகிறோம் என்ற மகிழ்ச்சி தாண்டவமாடிற்று.
சந்தித்த மறுநாளே மாலையில் அருகேயுள்ள பழங் கோட்டையைப் பார்க்கச் செல்வதாக இருவரும் ஏற் பாடு செய்து வைத்திருந்தனர். வர நேரமாகக் கூடு மாதலால், அருந்தகத்தில் உண்டு தத்தம் அறைகளுக்கு நேரே வந்துவிடுவதாக அவர்கள் கூறியிருந்தனர். எனவே யாரும் அவர்களுக்காகக் காத்திருக்கத் தேவை யில்லாதிருந்தது. புறத்தடைகளை இங்ஙனம் நீக்கிய பின் இருவரும் தமக்கு முன்னிரவுக்குப் போதிய உணவுப் பொருள்களுடன் புறப்பட்டனர்.
தலைமகனார் மாளிகையும் சுற்றுப்புறங்களும் மறை வதற்குள் அவர்கள் அவற்றை முற்றும் மறந்து விட் டனர். ஊர்ப்புறவெளி கடந்து மரங்கள் கடந்து வந்த பின் அவர்களைச் சுற்றிலும் புதர்க் காடுகளே காணப் பட்டன. கடல் போலப் பரந்து கிடந்த அவற்றின் கிளைகளும் தழைகளும் அசைவது அலைகள் எழுங் தெழுந்தடங்குவது போல் இருந்தது. அவ்வலைகளின் பரப்பில் வெண் மலர்களும் பொன் மலர்களும் அணியணியாக நின்று மூழ்கி எழுந்தன. ஆங்காங்கு உற்ற புதர்களுக்கிடையில் உயர மிக்கதாகத் தோன்றிய சிறு காமரங்கள் தனித்தும் இணை இணையாகவும் சில சமயம் குடும்பம் குடும்பமாகவும் நின்றன.
தென்றல் தழைகள் மீது உராசி மலர்களைக் கொய்து குறும்பு நகை நகைத்துச் சென்றது. இள முகில்கள் மலைமுகடுகள் மீது தவழ்ந்து விளையாடின. நீரோடைகள் மறைந்து ஓடிச் சலசலத்து இறைந்தன. வானவெளியில் ஓடிச் செல்லும் செக்கர்வானின் பின் தானையை இழுத்துப் பிடித்தணைக்க விரைவதுபோல் இருளின் முரட்டுக்கரங்கள் தாவின. இளவேனில் பரு வத்தின் தொடக்கமாதலால், குளிர்முற்றிலும் விலக வில்லை. ஆதலால் இளவெயில் மறைந்ததுமே உடல் சற்றே பனிக்கத் தொடங்கிற்று. லாரைன் நடை சிறிது தளர்ந்தது. அவள் மூரட்டின் கையை இறுகப் பற்றி அவன் தோள்கள் மீது சார்ந்து அவன் தாவுநடையுடன் ஒத்து நடந்தாள்.
அவள் அன்று உலகை மறந்தாள். தன் செல்வக் குழந்தைகளைக்கூட மறந்தாள்; தன்னையே அவள் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவள் உள்ளத்தில் மூரட்டின் வடிவமொன்றே இடம் பெற்றது. தென்றல் அவன் அங்கியை அவள்மீது கொண்டு வந்து போர்த் திற்று. அதன் குளிர் கலந்த வெதுவெதுப்பு அவள் மேல் ஆடைகளைத் துளைத்து உடலை வாட்டிற்று. அதன் வாட்டத்திலிருந்து தப்ப அவள் அதன் விலாவைச் சுற்றித் தன் தளிர்க்கைகளை வளைத்தணைத்துக் கொண் டாள். அவனும் அவள் தோள்கள்மீது தன் கைகளைச் சேர்த்து அவளைப்பற்றி இழுத்துச் சென்றான்.
மலர்களிடையே வண்டுகள் இரைந்தன. அவனுக்கு அது தன் உள்ளத்தின் இரைச்சல் போலத் தோற்றிற்று முயல்கள் புதர்களிடையே வெருவிப் பாய்ந்து அவர்கள் கால்களிடையே உராய்ந்து சென்றன. மிளாக்களும் மான்களும் தொலைவில் நின்று அவர்களைக் கனிவுடன் பார்த்து மிரள மிரள விழித்தன. மூரட்டுக்கு அவை லாரைனின் உள்ளத்தின் ஓட்டத்தையும் அவள் காதல் மருட்சியையும் நினைவூட்டின. இயற்கை ஐம்புலன் களின் மீதும் தன் தாக்குதல் தொடங்கிற்று; மங்கிய இருளில், பனிக்காற்றில், சலசலக்கும் அருவிகளிடையே, முன்னிரா நங்கையின் மென்மணம் மலர்களின் மணத் துடன் கலந்து எங்கும் பரவிற்று.
இரவின் அணைப்பில் கிடந்தது நீள் நிலம். காதலின் அணைப்பில் கிடந்தது உள்ளம். உடல் துவண்டது. இருவர் கரங்களும் சோர்ந்து மெல்ல ஊர்ந்தன. புதர்க் காட்டின் எல்லையை அணுகியதும் அங்கே ஒரு மணல் வெளியும் அதன் அருகே ஒரு சிறு குன்றும் இருந்தன. அவன் அவளை அவ்வெளியில் சென்று சற்று இளைப் பாறச் செய்தான். கையிலிருந்த மூட்டையைக் குன் றோரம் உள்ள பாறைமீது வைத்துவிட்டு அவள் அருகே அமர்ந்து தன் கைக்குட்டையால் அவள் களையார வீசி னான். அவள் முகம் குளிரில் வாடிய மலர்போல் துவண்டு இருந்தது. நீலமலர்கள் போன்ற கண்கள் இரவின் நிழலால் இன்னும் ஆழ்ந்த நீல நிறம் பெற்று மருட்சியூட்டின. அவன் அவற்றின் கவர்ச்சியில் குளிர் காய்ந்தான்.
பறவைகள் மரத்தில் சலசலத்தன. அவன் பறவைச் சேவலைச் சுட்டிக்காட்டி “அதோ தன் பெடை நோக்கி விரையும் சேவலைப்பார்” என்றான். அவள் குறிப்பறிந்து அவன் தோளில் தன் தலைசாய்த்தாள். கானங் கோழி கள் ஒன்றை ஒன்று துரத்திச் சென்றன. புதர்கள் கலைந்தன. அவற்றிடையே ஒரு குகை குன்றின் அடி வாரத்தில் தென்பட்டது. அதன் வெளிப்புறம் அரை யிருளில் மறைந்திருந்தாலும் உள்ளே வானத்தின் ஒளி நிலவியதை மூரட் கண்டான். “தங்க அதோ நல்ல இடம். இங்கே செல்வோமா?” என்று மூரட் மெல்ல லாரைனின் செவியில் முனகினான். அவள்விடை எது வும் கூறவில்லை. ஆனால் அவளையுமறியாது அவள் தலையசைந்தது. அவன் அவளைக் குழந்தையைத் தூக்குவது போலத் தூக்கிச் சென்றான். குகை அவர் களுக்கு அன்று ஒரு தனி மனையாய், மணவறையாய், மஞ்சமாய் உதவிற்று. லாரைன் உடல் குகையில்கிடங் தது. அவள் உள்ளமெனுங் குகையில் மூரட் கிடந்து புரண்டான். இதுவரை அவன் காதற்கடலில் கரை காணாது அவன் அலமந்திருந்ததுண்டு. இன்று அவள் காதலில் அவன் மூழ்கிக் கரைகாணாமல் தத்தளித்தான். இதுவரை அவன் அவள் காதலுக்குரியவனாயிருந்தான் இப்போது அவள் அவன் காதலில் கரைந்து அவன்காத லன்றி வேறு தனி வாழ்வற்றவளானாள். ஐயங்கள் உருகின. அருளிரக்கம் அகன்றது. அன்பு பறந்தது. தன் மதிப்பு, தன்முனைப்பு எல்லாம் அவளை விட்டோடின. இன்பம், இன்பம், இன்பமொன்றே எங்கும் நிறைந்திருந்தது.
குகையினின்று வெளிவரும்போது நள்ளிருள் அணுகிவிட்டது. தனியே அவனைக் காணக் கூசிய நங்கை காட்டின் இருளினிடையே அவன் தோளன்றிச் சிந்தனையற்று அவனைத் தொடர்ந்து வந்து அவன்குறிப் பில் நின்றாள்.
அவன் குளிர் படாமல் அவளைத் தன் மடிமீது வைத்துத் தன் மேலங்கியால் போர்த்துக்கொண்டு, மூட்டையிலிருந்த சிற்றுண்டிகளை எடுத்து அவளுக்கு ஊட்டினான். சிறிது நேரம் குழந்தைபோல அவள் களை தீர உண்டாள். பின் அவன் முக நோக்கிப் புன்முறு வலுடன், “நான் உண்டால் போதுமா? இதோ, இந்த வாயும் சிறிது உண்ணட்டும்” என்று அவனை உண்பித் தாள். குழந்தை மனம் ஒரு கணத்தில் தாய் மன மாயிற்று. “அன்பே, நேரமாயிற்று. நாம் இனி வீடு விரைவோம்” என்றாள்.
அவளை அவன் அவள் அறைவரை இட்டுச்சென்று அவளைப் படுக்கையில் இட்டுப் போர்வையால் போர்த்த பின் நீண்ட முத்தங்களை விலை தந்து விடைபெற்றுத் தன் அறை சென்று உடலை நீட்டிப்படுத்தான்.
காலைக் கதிரொளி அவன் உடல்மீது தன் ஒளிக் கரம் நீட்டிப் பகல் நேரம் அறிவித்தது. அவன் நேரமும் உணராமல் உறங்கிக் கிடந்தான். ஆனால் அவள் அவன் முன் வந்து நகைத்து நின்றாள். பகலவன் ஒளியாலோ, அந்நகையொலியாலோ அவன் விழித்துக் கண்களைத் துடைத்துக் கொண்டு நோக்கினான்.
‘ஆ, நீயா’ என்றான்.
அவள் சிரித்தாள்.
நாம் இருப்பது “தலைமகனார் மாளிகை!” என்றாள்.
அந்த ஒரு வாசகம் அவர்கள் தற்போதைய நிலை யையும் அவள் புதுத்தொடர்பையும் அவனுக்கு. ஒருங்கே நினைவூட்டின. ஆழ்ந்த சிந்தனை அவன் முகத்தில் நிழலாடிற்று. ஆனால் அவள் முகத்தின் அமைதியும் அதில் நடனமிட்ட களிப்பும் அவனை மீண் டும் ஊக்கிற்று.
லாரைன் தன் நாட்குறிப்பில் இந்நாள் தனிப்படக் குறிக்கப்பட்டது. அவன் நாட்குறிப்பிலும் அப்படியே. அது அவர்கள் காதல் மணநாள். அவர் வாழ்நாளில் ஆண்டுதோறும் இந்நாளை இருவரும் கூடியிருந்த போது அடிக்கடி அவர்கள் அவ்விடத்தைக் காண விழைவதுண்டு. காண முடியா விட்டாலும் அதனையும் அதனிடமாகத் தாம் நுகர்ந்த இன்ப நினைவுகளையும் அவர்கள் ஒருவர்க்கொருவர் கூறி மகிழ்வர். இருவரும் வேறு வேறிடத்தில் அந்நாளில் இருக்க நேர்ந்தால், இருவர் கடிதமும் அந்நாளில் மற்றவர் கையில் இருக் கும். அந்நாளைய ஒருவர் நினைவு மற்றவர் முன் வந்து உலவும்.
காதலன் பல ஆண்டு காத்து, காதலி பலவாண்டு காத்து, காதலின் மறுக்கவொண்ணாக் கவர்ச்சியிலீடு பட்டு இருவரும் காதல் மணங் கண்டனர். ஆனால் அவர்கள் புறவாழ்வு இன்னும் முன் போலவே நிகழ்ந் தது. முன்போல அயலாரிடையே காதலியையும் அவள் செல்வரையும் கண்டு பசப்புரை பேசி, பின் ஒருவரிடம் ஒருவர் விடைகொண்டு பிரியலாயினர்.
– தொடரும்…
– வாடாமல்லி (நாவல்), முதற்பதிப்பு: ஜூலை 1965, சேகர் பதிப்பகம், சென்னை.