கண் சிமிட்டும் வானவில்
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 87
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம் 3 – வழியில் ஒரு போலீஸ் படை

“என்ன நரேன்… என்ன.. செய்வதாக உத்தேசம்..?” கொஞ்சம் பயத்தோடு கேட்டான் வசந்த்.
“என்ன விசயம்..இவ்வளவு பயப்படுகிறாய்?.. “ அசாதரணமாக கேட்டான் நரேன்.
அவன் சாதாரணமாக சொல்லிக்கொண்டிருப்பதை பார்த்து, நரேனைத் திரும்பிப்பார்த்த.. வசந்த்.., “நீ உறுப்படரவன் மாதிரி தெரியல..” என்று கொஞ்சம் பல்லைக்கடித்தான் வசந்த்..
“நரேன், என்ன தான் பண்ணிகிட்டிருக்கே..” திரும்பவும் கேட்டான் வசந்த் .
தூரத்தில் மின்சாரம் செல்கின்ற. நீள கம்பியில் அமர்ந்திருந்த அந்த புறா ஆடி ஆடி அமர்ந்திருந்தவாறு தன் அலகால் உடலில் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்ததை, அதன் கழுத்துப்பகுதியில் சூரியக்கதிகள் பட்டு மின்னிக்கொண்டிருப்பதைக் கண்டு அந்த அழகில் லயித்து ஆழ்ந்து போயிருந்தான் நரேன்.
“எதிரே காவல் துறை வண்டி நின்று கொண்டிருக்கிறது… நீ … நீ .. இப்படி புறாவைப் பார்த்துக்கொண்டு…” தலையிலடித்தான் வசந்த்.
“அடப் போடா… அந்தப்புறாவைப் பாருடா.. எவ்வளவு அழகாக கழுத்தை வளைத்து அதற்கு …. அந்த கழுத்துப்பகுதியை பார்டா.. என்ன அழகா சூரியவெளிச்சத்தில.. பிரகாசிக்குது… இரசிக்கத் தெரியணும்டா… “ என்றான் நரேன்.
”ஆமாமாம்.. இரசிக்கத்தெரியணும் தான்… இன்னும் கொஞ்ச நேரத்திலே இந்த
போலீஸ் காரங்க.. நம்மகிட்ட வரப்போறாங்க… “ என்று திரும்பவும் நெற்றியில் அடித்துக் கொண்டான்.
”ஏண்டா இப்படி உயிரை வாங்குற… நாம் அரசாங்க வேலையில இருக்கிறவங்க..
போலீஸ் வந்து கேட்டா …. கேட்டதுக்கு பதில் சொல்லி விட்டுப் போறோம்..”
என்று முடிப்பதற்குள் காவல் துறை வண்டியிலிருந்து இறங்கிய காவலர் ஒருவர் வந்து“எங்கே போறீங்க?” என்று கேட்டார்.
”சார்.. நாங்க இங்க கொஞ்சம் பச்சிலை மருந்து தேடி வந்திருக்கிறோம்.
நாங்க அரசாங்க ஊழியர்கள்” பையிலிருந்து அடையாள அட்டையை எடுத்து நீட்டினான் நரேன்.
“ஓ… அப்படியா! நீங்கள் அடுத்த கேட் வழியா உள்ளே போங்கள். “ என்று கையைகாட்டினார்.
“சார். இங்க என்ன பிரச்சினை?” என்று கேட்டான் வசந்த்.
“யாரோ சினிமா காரங்க வந்து மானை வேட்டையாடியிருக்காங்க.. மான் செத்து கெடக்குது.. வேட்டையாடுனவங்களைக் காணோம்… நீங்க யாரையாவது பார்த்தீங்கண்ணா தகவல் குடுங்க.. காவல்துறை உங்கள் நண்பன்” என்றார் அதிகாரி.
“சரி சார்… கண்ணன் காரைத்திருப்பு.. “ என்றான் வசந்த்.
”காவல்துறை உங்கள் நண்பனாம். கெடச்சா கிழிச்சிருவாங்க..” என்றான் கண்ணன்.
”ஏய்… அவனவன் பிரச்சினை அவனவனுக்கு.. காரை கவனமாக ஓட்டு” என்றான் வசந்த்.
அடுத்த நுழை வாயிலுக்கு வந்த போது.. “ காட்டிலாகா அதிகாரி உட்கார்ந்திருக்கிறார்” என்றான் கண்ணன்.
“இருக்கட்டுமே..” என்று சொல்லி விட்டு காரிலிருந்து இறங்கிய நரேன், காட்டிலாகா அதிகாரி அருகில் வந்து தாங்கள் வந்த காரியத்தை விளக்கிய போது “தாராளமாய் போங்கள்… கொஞ்சம் கொடிய மிருகங்கள் இருக்கும்.
கவனமாகப் போங்கள்” என்றார்.
நரேன் திரும்ப வந்து காரில் ஏறிக்கொள்ள, கண்ணன் “எப்படி சார் போகணும்?” என்று கேட்டான்.
வசந்த் திரும்பிப்பார்த்து விட்டு” கண்ணன்… கொஞ்சம் வலது பக்கம் போய் காரை நிறுத்து…” என்றான்.
“என்ன?” எனக் கண்களால் கேட்டான் நரேன்.
”அனேகமாக.. நாம் தேடி வந்த செடி இதோ இங்கே தான் இருக்கிறது போல…” என்றான் வசந்த்.
காரை நிறுத்தியதும், வசந்தின் பின்னால் இறங்கிய நரேன்” என்ன விளையாட்டு இது..” என்றான்.
அவனைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் “ கண்ணன் கூட இருந்ததானால் தான் கேக்கல… நான் படம் போட்டு இந்த கேட்டிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்துல போய் அங்கே ஒர் பழைய சித்தர் கல்லறை கிட்டே…” என்ற நரேனைப் பேச விடாமல் தடுத்து அழைப்பு வந்ததும் போனை எடுத்து,”கவிதா சொல்லு” என்றான் வசந்த் .
எதிர்முனையில் “ ஏய்.. என்னடா.. இன்னும் நீங்க.. காட்டுக்குள்ளேயே போகல்ல போலருக்கு..” என்றாள் கவிதா .
“இது என்ன.. எடுத்தோம் கவிழ்த்தோம்ணு செய்யற விசயமா?. அம்மா மெதுவாகத்தான் மூவ் பண்ண முடியும்”
“சரி.. சரி.. எங்க இருக்கிறீங்க..”
”காட்டுக்குள்ளே போறதுக்குத்தான் கிளம்பினோம்.. அதுக்குள்ள ஆயிரம் பிரச்சினைகள்… என்ன செய்தி… என்ன அவசரம்? அதச்சொல்லு மொதல்ல..”
“போனை கொஞ்சம் நரேன் கிட்ட குடு…” என்றாள் எதிர்முனை கவிதா..
“இந்தா.. காதலிக்கிறது என்னை … ஆனா உங்கிட்ட தான் பேசணுமாம்” என்றவாறு அலை பேசியை நரேனிடம் கொடுத்தான் வசந்த்.
அலை பேசியை வாங்கிய நரேன்,” சொல்லு. கவிதா. என்ன செய்தி?” என்றான்.
”நெய்லி கிட்டே பேசிக்கிட்டிருந்தேன்.. அது தான்.. நீங்கள் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகையிலிருந்து ஒம்பது கிலோ மீட்டர் தூரத்திலே தான் நாம தேடிக்கிட்டிருக்கிற அந்த செடியிருக்கு தான். நீங்க.. அந்த சித்தர் கல்லறை கிட்டே தானே போய்க்கிட்டிருக்கீங்க..” சாந்தமாக கேட்டாள்
“இங்க நாங்க.. அவசரமாக இருந்துகிட்டிருக்கோம்… நீ வேற… நான் எல்லாம் நெய்லிகிட்டே பேசியாச்சு.. சாயங்காலம் நாங்க திரும்பி வந்த பிறகு கான்பரன்ஸ் கால்லே பேசலாம்.” எரிந்து விழுந்தான் நரேன்.
“சரி.. சரி..” என்று தொடர்பைத் துண்டித்தாள் கவிதா.
”இவ்வளவு சிரமப்பட்டு பிளான் பண்ணி வந்தா.. இங்க… என்ன தாண்டா பண்றீங்க..” சலித்துக்கொண்ட நரேன் ,” ஏன் வசந்த் காரை நிறுத்த சொன்ன..?” எரிச்சலும் கோபமும் கொண்டவனாக கேட்டான்
“அந்தச் செடியிலே ஏறக்குறைய… நாலு பூ… நாலும் நாலு நிறத்திலே இருக்கும். அப்படித்தானே…” வசந்த் கேட்டான்.
“ஆமா… நாலு பூவும் நாலு விதமா இருக்கும்.. அதாவது ஒரு பூ முல்லைப்பூ மாதிரி இருந்தா இன்னொரு பூ செம்பருத்தி பூ மாதிரி இருக்கும். முல்லைப்பூ வெள்ளையா இருக்கும். செம்பருத்தி பூ மஞ்சள் நிற்த்திலே இருக்கும்.இன்னொரு பூ சூரிய காந்தி பூ மாதிரியும் அது சாம்பல் நிறத்திலேயும் இருக்கும். இன்னொரு பூ தாமரைப்பூ மாதிரியும் அது இளம் நீல நிறத்திலே இருக்கும்.ஆனா எல்லாப்பூவும் ஒரே செடியிலே தான் பூக்கும்.” விவரித்தான் நரேன்.
”அதே மாதிரி ஒரு செடியிலே விதவிதமா பூப்பூத்திருக்கிறத பார்த்ததனால தான் காரை நிறுத்தி இறங்கச் சொன்னேன்” என்றான் வசந்த்.
“அதெப்படிடா இருக்க முடியும்.. நாம ரெண்டு பேரும் தானே வாசித்துப் பார்த்தோம். அந்தக்கல்லு போட்டிருக்கிற இடத்திலேயிருந்து ஏழு மைல் கல் தொலைவிலே சித்தர் கல்லறையிருக்கு.. அந்த கல்லறை பக்கத்திலே”…
என்ற நரேனை இடைமறித்து…”நான் பார்த்தேங்கிறனில்லையா… அதைப் பார்த்து விட்டுப்போய் விடலாமே?” என்றான் வசந்த்.
”சரி.. எங்கே பார்த்தாய்?” என்று கேட்டான் நரேன்.
”நம்ம அந்த கேட்டை விட்டு உள்ள வந்தவுடனே இடது பக்கம் பார்த்தேன் நீ விவரித்த மாதிரி கொஞ்சம் நெறைய பூ ஒரு செடியிலே இருந்த மாதிரி பார்த்தேன்” என்றான் வசந்த்.
“டேய்… ஏற்கனவே நேரம் வீணாகிக்கிட்டிருக்கு”
”ஆமா.. இவரு புறாவை இரசிக்கும்போது மட்டும் நேரம் வீணாகலை…”கடுகடுத்தான் வசந்த்.
“சரி.. வா..” என்று இருவரும் காருக்கு வந்தனர்.
“எங்க சார்.. போகணும்?” என்றான் கண்ணன்
”திரும்ப நம்ம வந்த வழியா போப்பா..” என்றான் வசந்த்.
வசந்த் சொன்ன இடத்திற்கு வந்த அவர்கள் இருவரும் வசந்த் சொன்ன இடத்தை நோக்கி நடந்தனர்.
“எங்கடா பாத்தே…” என்று கேட்டான் நரேன்.
“இதோ அந்தப்பக்கம் அந்த செடியைப் பார்” என்றான் வசந்த்.
நரேன் திரும்பிப் பார்த்த போது அங்கே ஒரு நாகப்பாம்பு படம் எடுத்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்தது….
அத்தியாயம் 4 – பாம்பிற்கு பயப்படவில்லையா?
படம் எடுத்த நல்ல பாம்பைக் கண்ட வசந்த், “இது என்னடா..? புதிய சோதனை..?“ முணுமுணுத்துக் கொண்டு பின் வாங்கினான்.
“என்ன செய்யப்போகிறோம் “ என்றவாறு சுற்று முற்றும் பார்த்தான் நரேன்.
அவர்கள் இருவரும் ஒதுங்கி நிற்பதைக் கண்ட டிரைவர் கண்ணன், காரிலிருந்து இறங்கி வந்து, அருகில் கிடந்த கம்பை
எடுத்து பாம்பை அடிக்க முயல, அது சீறி விட்டு, திரும்ப காட்டுக்குள் ஊர்ந்து மறைந்தது.
“இந்த காட்டுக்குள்ளே பாம்புகள் ரொம்ப சாதாரணம். ஒழுங்கா ஒங்க வேலய பாருங்க சார்” என்று சொல்லி விட்டு, கையிலிருந்த கம்பை தூக்கிப் போட்டு விட்டுத் திரும்பவும் காரை நோக்கி நடந்தான் கண்ணன்.
“பாம்பு உன்னக் கண்டு பயந்து ஓடிப்போச்சி” என்று சிரித்தான் நரேன்.
“சும்மா விளயாடாதே. நரேன். ஒரு நிமிசம்.. அப்படியே ஆடிப்போயிட்டேன்” என்றவாறு கைக்குட்டையை எடுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டான் வசந்த்.
“சும்மா தேவையில்லாமல் நேரத்தை வீணடித்தது யார்? நீயா? னானா? எப்போதும் அவசரப்பட்டுக் கொண்டிருந்தாய்..இப்ப என்னடாண்ணா.. நீ தான் இப்போ… நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறாய்…?”எரிச்சல் பட்டான் நரேன்.
”இவ்வளவு பக்கத்திலே கிடைக்கின்ற செடிக்காக ஏன் வீணா அலையணும்ணு நெனச்சேன்”? என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், அருகில் இருந்த குளத்திற்கு நீர் பருக..புறாக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறங்கிக் கொண்டிருந்தது.
திரும்பிப்பார்த்த நரேனிடம், “இப்பவும் புறாவை இரசிக்க ஆர்ம்பித்து விடாதே ராஜா..” என்று கிண்டலடித்தான் வசந்த்.
”நீ சொன்னாலும் சரி… சொல்லவில்லை என்றாலும் சரி.. நான் புறாவை இரசிக்கிறது என் சொந்த விசயம். என்னா அழகா இருக்கு பாரு…” இரசனையில் மூழ்கினான் நரேன்.
“சரி… சரி… வந்த வேலைய பார்ப்போம்” என்றான் வசந்த்.
”அதுவும் சரி தான். சரி நீ அந்த செடியை எங்கே பார்த்தாய்?”
”நாம் கேட்டிலே எண்டர் பண்ண இடத்திலே தான் தெரிந்தது..
ஆமா … அந்தச் செடி எப்படி இருக்குமுண்ணே?”
”எத்தனை தடவை சொல்லியாச்சு”! என்று ஆயாசப்பட்ட நரேன்
“செடியிலே மூன்று வகையா இலைகள் இருக்கும். ஒன்று தாமரை இலைகளின் வட்ட வடிவத்திலே இருக்கும். ரெண்டாவது இலை வாழை இலை வடிவத்திலே நீளமா இருக்கும். மூன்றாவது இலை செம்பருத்தி இலை வடிவத்திலே இருக்கும்… மற்றபடி…பூக்கள் ஐந்து வகையாக இருக்கும்… ஒன்று தாமரை பூக்கள் வடிவத்திலே இளம் சிவப்பு நிறத்திலே இருக்கும். ரெண்டாவது பூ வாழைப்பூ வடிவத்திலே நீளமா மஞ்சள் நிறத்திலே இருக்கும். மூன்றாவது இலை செம்பருத்தி பூ வடிவத்திலே சிவப்பாக இருக்கும்… நாலாவது பூ முல்லைப்பூ வடிவத்திலே சின்னதா வெள்ளை நிறத்திலே இருக்கும். ஐந்தாவது பூ ரோஜா பூ வடிவத்திலே நீல நிறத்திலே இருக்கும்…” என்று தன் கையிலே இருந்த அலைபேசியைத்திறந்து அதிலே இருந்த படத்தைக்காட்டினான்.
“ம்…ம்… நான் பார்த்த செடியிலேயும் நிறைய வித்தியாசமான பூக்கள் இருந்தமாதிரி தான் இருந்தது.”
“சரி…சரி…எங்கே பார்த்தாய்?”
”இங்கே தான்… ஆஆங்… இந்த வேலியைத்தாண்டி அந்தப் பக்கத்திலே பார்த்த மாதிரி தான் ஞாபகம்..”
“ஆமா.. நரேன்… நான் கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே வந்தேன். நாம நேரடியா அந்தச் செடி இருக்கின்ற இடத்திற்கு தான் போகிறோமா.. இல்லை..” என்று இழுத்தான் வசந்த்.
“வசந்த்… சும்மா… நீ தான் நேரத்தை வீணடிச்சிக்கிட்டேயிருக்க..மொதல்ல நீ பார்த்த செடியைக்காட்டு.. மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” எரிச்சல் பட்டான் நரேன்
“அதுவும் சரி தான்… வா வா…” என்று வேகமாக நடந்தான் வசந்த்.
பின்னால் வந்து கொண்டிருந்த நரேன் “பாரு இன்னும் அந்தக் குளத்திலே புறாக்கள் என்ன அழகாக இங்குமங்கும்….” என்று சொல்லி முடிப்பதற்குள், “எப்பா சாமி… ஆளை விடுப்பா.. நீயும் ஒம்புறாவும்… வந்த வேலையைப் பார்க்கலாம்” என்று குறும்பாக கையெடுத்துக்கும்பிட்டான் வசந்த்.
“சரி… எங்கே பார்த்தாய் …. அதச்சொல்லு மொதல்ல…”
“ ஆங்… அந்தா.. அந்தச் செடிதான்… பாரு… எத்தனை விதமானப்பூக்கள்… “ என்று பின்னால் பல செடிகள் அடர்ந்து இருந்த அந்த இடத்திற்கு வந்தவன், “ நரேன். பார். இதிலே நீ சொன்ன மாதிரி… முல்லைப்பூ… செம்பருத்திப்பூ எல்லாம் இருக்கிறதே” என்று அந்தச் செடியைக்காட்டினான் வசந்த்.
அருகில் வந்து பின்னால் இருந்த செடிகளை எல்லாம் பிரித்துப் பார்த்த.. நரேன், நெற்றியிலடித்துக்கொண்டே, “இவ்வளவு அழகா கிளிப்பிள்ளைக்குச் சொன்னா மாதிரி எவ்வளவு விரிவாகச் சொன்ன பிறகும்… வசந்த்… உன்னைக் கூட்டிக்கிட்டு வந்தேனே…” என்று கத்தினான்.
“என்னடா.. என்னாச்சு…. “
“ம்..ம்… மண்ணாச்சு… யேய்.. வசந்த்… இங்கே பார். முல்லைச் செடியும் செம்பருத்தியும் பக்கத்திலே பக்கத்திலே வளர்ந்து பின்னிக்கிடக்கிறதால் பல வகைப்பூக்கள் ஒரே செடியிலே வளர்ந்த மாதிரியிருக்கு…”கோபத்தில் காரை நோக்கி நடந்தான் நரேன்.
“ஏய் சாரிடா… வீணாக அலைய வேண்டாமே… நாம் தேடி வந்த செடி தான் இங்கேயிருக்குதேண்ணு நெனச்சிட்டேன்” அவனோடு ஓடினான் வசந்த்.
திரும்பிப்பார்த்த நரேன் “ திரும்பவும் சொல்றேன் கேட்டுக்கோ…”எத்தனை தடவை சொல்லியாச்சு!” என்று ஆயாசப்பட்ட நரேன்
“ஒரே செடியிலே மூன்று வகையான இலைகள் இருக்கும். ஒன்று தாமரை இலைகளின் வட்ட வடிவத்திலே இருக்கும். ரெண்டாவது இலை வாழை இலை வடிவத்திலே நீளமா இருக்கும். மூன்றாவது இலை செம்பருத்தி இலை வடிவத்திலே இருக்கும்…
மற்றபடி…பூக்கள் ஐந்து வகையாக இருக்கும்… ஒன்று தாமரை பூக்கள் வடிவத்திலே இளம் சிவப்பு நிறத்திலே இருக்கும். ரெண்டாவது பூ வாழைப்பூ வடிவத்திலே நீளமா மஞ்சள் நிறத்திலே இருக்கும். மூன்றாவது இலை செம்பருத்தி பூ வடிவத்திலே சிவப்பாக இருக்கும்… நாலாவது பூ முல்லைப்பூ வடிவத்திலே சின்னதா வெள்ளை நிறத்திலே இருக்கும். ஐந்தாவது பூ ரோஜா பூ வடிவத்திலே நீல நிறத்திலே இருக்கும்…” என்று தன் கையிலே இருந்த அலைபேசியைத்திறந்து திரும்பவும் அதிலே இருந்த படத்தைக்காட்டினான்.
“இனியாவது குழப்பாமல்… அந்தக் கற்பக மின்னல் செடியைக் கண்டு பிடிக்க வா” என்று கத்தினான் நரேன்…
”ஏய் சாரிடா….”
“போ… போ… நீயும் உன் சாரியும்… ஒழுங்காக.. நான் சொல்ற எடத்துக்குப் போகலாம்.” என்றான் நரேன்.
“சரி” என்று நரேனுடன் காரில் ஏறினான் வசந்த்.
– தொடரும்…
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
