வாடாமல்லி
கதையாசிரியர்: கா.அப்பாத்துரை
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 154
(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இதழ் 19-21 | இதழ் 22-25 | இதழ் 26-28
இதழ் 22 – கவிஞனின் வெற்றி

பருவம், வேளை, சூழல் ஆகியவற்றின் தாக்குதல்” களில் ஈடுபட்டு லாரைன் தன் உள்ளத்தைத் தற்காலிக மாகப் பறி கொடுத்திருந்தாள். ஆகவே அவள் மனம் மூரட்டிடம் தான் வலியுறுத்திய உறுதியில் சற்றுத் தளர்வு கொண்டு அதனை மறந்திருந்தது. ஆனால், அவன் ஒரே நோக்கமுடையவனாயிருந்ததனால், இத் தகைய தளர்வு எதற்கும் ஆளாகவில்லை. தற்காலிக மான அவள் தளர்ச்சியை அவன் நன்கு பயன்படுத்த. விரும்பினாலும், அதன் தற்காலிகப் பலனில் அவள் மனம் நாடவில்லை. அவள் தன் தவறுணர்ந்து தன் இயல்பு மறவாது நடக்கும்படி செய்யவே அவள் எண்ணினாள். ஆகவே தன் தறுவாய்க்குக் காத்திருந்து அவன் போக்குடன் ஒத்துறவாடினாள்.
“நகரின் ஆடல் பாடல்கள் மனத்திற்குச் சிறிது நேரம் மகிழ்ச்சியூட்டக்கூடும். ஆனால் பூந்தோட்டங் களின் எழில், மலர்களின் வனப்பு, தென்றல் காற்றின் இனிமை, பொன்னிள வெயிலின் பூம்பொலிவு ஆகியவையே நிலையான இன்பந் தருகின்றன. இதனாலேயோ நான் மீண்டும் நாட்டுப் புறத்தில் என் கொழுநர் பண் ணைக்கே செல்ல விரும்புகிறேன். அவ்விடத்தில் எல்லா இன்ப நிறைவும் உண்டு-நீங்களும் அங்கே உடன் இருந்தால் நிறைவு மணம் பெறும். நீங்கள் வந்து என் இலத்தீன மொழி பெயர்ப்பில் உதவுவீர் களல்லவா?”
மூரட் புன்முறுவலுடன் “அது மட்டுமா? தங்க ளுடன் இருப்பதால் குடி, சூது முதலிய கீழ்த்தர இன் பங்களை விட்டு விலகி நல் ஒழுக்க வாழ்வு பெறலாம் அல்லவா?” என்றான்.
தன் மன உறுதியையே அவன் கேலிசெய்வதுகண்ட லாரைனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “உன் நாத்துடுக்குத்தனத்தைக் கேட்டுக் கேட்டு என் னால் பொறுக்க முடியவில்லை” என்றாள்.
அப்போதும் அவன் நையாண்டித்தனத்தை விட வில்லை. “உடன் பிறந்தானிடம் உடன் பிறந்தாள் பேசும் அன்பு முறையா இது? உடன் பிறப்புரிமை உறுதி கூறிவிட்டு வேறு ஏதோ உரிமை கொண்டாடு பவள் போல் ஊடற் பசப்புப் பசப்புகிறீர்களே ? என்றான்.
தன் உணர்ச்சிகளைக் குத்திக் காட்டிய இவ்வ வ’ மதிப்பு அவள் உள்ளத்தின் எரிவில் எண்ணெய் ஊற்றிற்று. அவள் உண்மையிலேயே கடுஞ்சீற்றம் கொண்டாள். “ஊடல்! பசப்பு! இத்தகைய பேச்சுக் களை நான் என் காதுகளால் கேட்கப்போவதில்லை. சரி, இதற்குச் சரியான வழி செய்கிறேன். என் நாட்டுப்புறத் தங்கலுக்கு உங்களை அழைத்திருந்த அழைப்பை நான் பின்வாங்கிக் கொாள்கிறேன். தங்கள் தோழமை எனக்குத் தேவையில்லை. என்பிள்ளைகள் இதனால் சிறிது நேரப் போக்கிழந்தாலும் கேடில்லை. நீங்கள் அங்கே வரவேண்டாம்” என்று கூறி அவனருகிலிருந்து அவள் சரேலென்று விலகிச் சென்றாள்.
அவள் போகும்போதும் மூரட் கடகடவென்று சிரிக்கும் ஒலியே அவள் காதுகளைத் துளைத்தன.
இத்தடவை அவள் கோபம் அதன் சூழ்நிலைகளுடன் நிற்கவில்லை. மூரட்டைக் காணாதவிடத்திலும் அவன் உருவமும் அவன் நகைப்பும் முன்வந்து தோன்றி அதனைக் கிளறி விட்டுக்கொண்டே இருந்தன. அவள் வீடு வந்தபோது குழந்தைகள் ஓடி வந்து ‘மூரட் எங்கே, குட்டியப்பா எங்கே’ என்று கேட்டபோது அவள் சீற்றம் அவர்கள் மீதுகூட அலைபாய்ந்து சித றிற்று. உள்ளூர அவள் சினத்துக்கு அவளே ஆளாக வேண்டியிருந்தது. ஆனால் தன்னைத்தான் எந்தக் குற் றத்திற்காக குறைகூறிக் கொள்வதென்றும் அவளுக் குத் தெரியவில்லை. மூரட்டைச் சந்திக்க முடியாமல் போனது தனக்கு உள்ளூர வருத்தம் என்பதை அவள் ஒப்புக் கொள்ளும் நிலையிலில்லை. அவனைத் தான் தண்டித்ததுதவறென்றும் எண் ணமுடியவில்லை. ஆனால் தண்டனை அவனைப் பாதிக்கவில்லை; தன்னைத்தான் பாதித்தது. இதனால் அவள் மனம் புகைச்சல் அவன் மீது இன்னும் மிகுதியாயிற்று.
மூரட்டுடன் நன்கு பழகியிருந்த ஒருவனே அவ ளிடம் வணடியோட்டியா யமர்ந்திருந்தான். அவன் இத்தறுவாயில் அவளிடம் எதுவும் கேட்காமலே குறிப் பறிந்து எல்லா ஏற்பாடுகளும் செய்து வந்தான். அவ ளுக்கு வேண்டிய ஆடையணிமணி வகைகளைப் பற்றிக் கூட அவன் அவளிடம் கேட்கவில்லை. தானாக எடுத்து’ வைத்து அவள் முன் இருந்து கட்டினான். குழந்தை. களுக்கான துணிமணி, விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள் முதலிய யாவும் ஒழுங்குபடச் சேகர மாயின. லாரைன் தூய வெள்ளாடையே அணிந்து புறப்பட்டாள். உலாவியிருக்கும்போது படிக்க அவள் ரூசோவின் ஹிலாயிஸ் ஏட்டையும் எடுத்து வைத்திருந் தாள். சிறுமி அடிலிக்கு இப்போது ஆறு வயது. அவள் நாய்க்கு மூரட் ‘பாள் ஆளி’ என்று பெயர் வைத் திருந்தான். அடிலி அந்நாயை அங்குமிங்கும் பின் தொடர்ந்து துரத்தி விளையாடியவாறே சென்றாள். வண்டியோட்டி மூட்டைகளை எடுத்துக்கொள்ள, மற் றொரு பணியாள் மூன்று வயதுடைய அகஸ்டியைத் தூக்கிக்கொண்டான்.
அன்று அவர்கள் ஓர் ஏரியில் படகிற் சென்று அதன் நடுவிலுள்ள தீவில் உலாச் சோறு உண்ண எண்ணியிருந்தனர். வண்டி யோட்டியே. படகுக்கும் ஏற்பாடு செய்து படகோட்டவும் முன் வந்தான்.
படகு கரையிலிருந்து உகைக்கப்பட்டது. துடுப் புக்கள் தெளிந்த பளிங்குபோன்ற நீரை இருபுறமும் துளைந்து படகை முன் செலுத்தின. துடுப்புகளி லிருந்து கண்ணாடிப் பாளங்கள் போல வெளியோடும் நீர்க்குமிழிகளைப் பார்த்தும், நீர்ப்பூச்சிகளைத் தின்னப் பறந்து வரும் விட்டில்களை வேட்டையாடியும் அடிலி சுற்றித்திரிந்தாள். சிறுவன் அகஸ்டியோ தாயை அகலாது படகின் இப்புறமும் அப்புறமும் சுற்றித் திரிந்தான்.
அவள் மனம் அமைதியுடனிருந்தது. நீர்க் காற்று பகலின் வெப்பிடையே நல்லின்பம் தந்தது. அக்காட்சிகளிடையே ரூசோவின் ஹிலாய்ஸைத் திறந்து அவள் அதில் ஈடுபடலானாள். ஆனால் இவ்வாசிப்புக்கு இது * சமயமல்ல என்பதை அவள் விரைவில் உணரவேண்டிய தாயிற்று. ஏனெனில் விட்டிலொன்றை வேட்டையாடும் போது படகின் விளிம்பு கடந்து சென்று அடிலி நீரில் விழுந்து விட்டாள். லாரைன் கூறுமுன் படகோட்டி படகை நிறுத்திக் குதித்து அவளைப் படகேற்றினான். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு லாரைன் அவளைத் தேற்ற வேண்டியதாயிற்று. மூரட் இருந்தாலன்றி, குழந்தைகள் பற்றிய கவலையில்லாமல் வாசிப்பது என் முடியாது என்ற எண்ணம் அவள் மனத்திரையில் வந்து தலை நீட்டிற்று. ஆனால் அவள் அவ்வெண்ணத் தைத் துரத்தியோட்டினாள். ஒரு கண் பிள்ளைகளிடத் திலும், ஒரு கண் புத்தகத்திலுமாக வைத்துக்கொண்டு படிப்பதாகப் பாசாங்கு செய்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்தாள். ஆனால் கண்தான் இந்த ஏமாற்றில் ஈடுபட்டதே தவிர மனம் நெடுநேரம் வேறு எதிலுமே தங்காமல், அவளையும் மீறி ஆக்டேவ் மூரட் டைச் சுற்றிவட்டமிட்டது.
ஏரியின் நீர்ப்பரப்பு பச்சை வண்ணத் தகடுபோல் பளபளப்பாக மின்னிற்று. அதனிடையே உள்ளூரப் பரப்படியிலிருந்து சிறிது சிறிதாக மேலெழுந்து கரை யருகே வெண்ணுரையுடன் சென்று கலகலத்துக் கை கொட்டி யார்க்கும் சிற்றலைகள் வெண்கோல மிட்டு அழித்த வண்ணமிருந்தன. கரையருகில் வளர்ந்து நீர்த்திரைகளை நுகரத் தலைகளை வளைத்து நிற்கும் மரங்களும் கரையருகில் சதுப்பு நீரில் படர்ந்த அல்லிக் கொடிகளும் கண்ணுக்கு நாற்புறமும் விருந்தளித்தன. தொலைவில் காணப்பட்ட அவ்வல்லி மலரின் வனப் புடன் போட்டியிட்டு அகஸ்டியின் குருதிச் சிவப்பங்கியும் அடிலியின் வெள்ளிய அங்கியும் 3காண்பவர் உள் எங்களைக் களிப்பித்தன. பாரிஸின் செயற்கையழகில் ஈடுபட்டு மகிழ்ந்த கண்கள் இவ்வியற்கை யழகில் தம்மை முற்றிலும் பறிகொடுதன. ஆனால் இவ்வழகுகளுக்கு அழகு தரக்கூடும் ஏதோ ஒன்று குறைபட்ட தாக அவள் உள்ளம் உணர்ந்தது.
அவள் சிந்தனைகளிடையே முத்துப்போன்ற ஒரு “ஒரு கனத்த மழைத்துளி அவள் மூக்கு நுனியில் பட்டுத் தெறித்தது. அவள் சிறிது, அதிர்ச்சியுற்றுச் சுற்று முற்றும் நோக்கினாள். கதிரவன் மேல்பால் விழும் ‘நேரமாகவில்லை யாயினும், கதிரொளி மறைந்து மங்கி விட்டது. வெண்முகிற் குலங்கள் படிப்படியாக நிறங் கறுத்துப் புகைப் படலங்களாகி வந்தன.
வந்தன. முதல் துளியை அடுத்து விரைவில் துளிகள் விழலாயின. திடு மென்று படபடவென்ற இரைச்சலுடன் பெருமழையே கொட்டத் தொடங்கிற்று. இவ்வளவு மாறுதலும் சில நொடிகளுக்குள் விரைந்து நடைபெற்றதனால் அவளால் இன்னது செய்வதென எண்ணக்கூடவில்லை. இருப் பது கரையிலிருந்து தொலைவில்-தன் கண்ணின் கரு மணிகள் வேறு தன்னுடனிருந்து இப்புயலில் சிக்கிக் கொண்டன. கையில் குடையுமில்லை-ஒதுங்கி நிற்க வகையுமில்லை. முன் கருதலின்றி இப்படி வந்துவிட் டோமே என்று அவள் தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.
அகஸ்டியும் அப்போது வாத்துக்கள் மீது கவனம் செலுத்தியிருந்தான். அவை யாவும் கரையை நோக்கி அம்புகள் போல் பாய்ந்துகொண்டிருந்தன. அம்மா, அதோ வாத்துக்கள் விரைந்தோடுகின்றன. மழை வலுக்கும் என்பதற்கு இது அடையாளம் என்று மூரட் மாமா கூறுவாரல்லவா? நாம் இப்போது தம்பியை வைத்துக்கொண்டு என்ன செய்வோம்?” என்றாள் அடிலி.
அவள் கேள்வி தன்னை இடித்துக் காட்டுவதுபோ லிருந்தது. லாரைனுக்கு. அவள் திகைத்தாள். தன் இரு குழந்தைகளையும் இரு விலாப்புறத்திலும் இழுத்தமைத் துத் தன் அங்கியால் அவர்களைப் பொதிந்து கரையைக் கவலையுடன் நோக்கியவண்ணம் படகு செலுத்துபவனை விரைந்து செலுத்தும்படி ஊக்கினாள்.
இச்சமயம் ஒரு புதரடர்ந்த தீவருகிலிருந்து ஒரு படகு அவர்களை நோக்கி விரைந்து வந்தது. அதில் யாரோ குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு வந் தது தெரிந்தது. ஆளணுகியதும் குடையினடியி லிருந்து மூரட்டின் சிறு முகம் அவளை நோக்கிக் குறு நகை நகைத்தது. காலமறிந்து உதவ முன் வந்த இவ் வரவு அவள் முகத்திலும் கவலைக்குறியகற்றி நன்றி யின் புன்னகை வருவித்தது. அடங்கிய அச்சமுழுதும் ஆர்வ வரவேற்பாக மாறிற்று. குழந்தைகளோ தாயைக் கூட மறந்து அவனை நோக்கித் தாவின. அவர்களின் ஆரவாரம் புயலை மறக்கடித்தது.
மூரட் குடையாதரவு மட்டும் கொண்டுவரவில்லை. அடிலி, அகஸ்டி ஆகியவர்களுக்கான தின்பண்டங்கள், உணவுப் பொருள்கள், குழந்தைகளுக்கும் லாரைனுக் கும் வேண்டிய புயலங்கிகள், சேற்றில் நடக்க உதவும் புறக் காற் புதையல்கள் ஆகிய யாவும் அவன் பட கிலே கொண்டுவரப்பட்டிருந்தன. ஆகவே அவர்கள் புயலைச் சட்டைபண்ணாமல் அவரவர் சட்டையணிந்து குடையின் பாதுகாப்பில் வீட்டில் அமர்வது போல் அமர்ந்து புயலை ஒரு கண்காட்சியாகக் காண முடிந்தது. படகோட்டிக்கு வேண்டிய முரட்டுப் பையும் அவன் முன் கருதலுடன் எடுத்து வந்திருந்ததால், படகு புய லிலும் இன்ப உலாப்போல உலா வர முடிந்தது.
லாரைன் உள்ளத்தின் சீற்றம் அகன்றதுடன், தன் புறத்தோடகற்றி இயற்கைக் கனிவுடன் அகமகிழ் வுற்றது. அதனறிகுறியாக அவள் தானே வலிந்து முன்னைய இயற்கை மரபுநின்று மூரட்டுடன் பேசத் தொடங்கினாள். “இப்போது நம் படகு ஒரு பறவைக் கூண்டாய் விட்டது. நாம் எல்லாரும் அதில் உள்ள பறவைகளாய் விட்டோம்” என்றாள்.
“இதோ நம் பறவைக் குஞ்சுகள்” என்று மூரட் அடிலியையும் அகஸ்டியையும் எடுத்து மடியில் வைத் தணைத்துக் கொண்டான்.
தன் பிள்ளைகள் கூடத் தன்னை விட்டு விட்டு அவ னிடம் சென்றிருந்து அகமகிழ்வு காட்டியது லாரை னுக்குச் சிறிது பொறாமையை உண்டுபண்ணிற்று. அவள் சிறிது நேரம் பேசாமலிருந்தாள்.
குடையின் விளிம்பிலிருந்து நீர் தாரை தாரையாய் ஒழுகிற்று. பிள்ளைகள் அதில் கயிட்டு நீரை ஏந்தின. மூரட்டும்கூட நீரை ஏந்திக்கொண்டு “மழை நீர் புயல் நீராயில்லை. அது நல்ல வெதுவெதுப்பாகவே இருக்கிறது?” என்றான்.
“உங்களுக்கு எல்லாம் வெதுவெதுப்பாகவே வந்த மைந்து விடுகின்றன” என்று தன் உள்ளார்ந்த புழுக் கம் தோன்ற நறுக்கென்று கூறினாள் லாரைன்.
அவன் நகைத்தான். “இதுவா தங்கள் நன்றி. தாங்கள் கூறுவதைப் பார்க்க, இந்தப் புயலுக்குக்கூட இயற்கை காரணமல்ல, நான்தான் காரணம் என்று நினைக்கிறீர்கள் போலத் தோற்றுகிறதே” என்றான்.
லாரைன் மனம் மீண்டும் மாறிற்று. “நான் அப்படி எண்ணவில்லை; ஆனால் அதனை நீங்கள் எதிர்நோக்கி யிருக்க வேண்டும்.”
மூரட்: ஆம்:
லாரைன் : எப்படி உங்களுக்கு மட்டும் அது முன் கூட்டித் தெரிந்தது?
மூரட்: காற்று வட க்கிருந்து அடித்ததைக் கவ னித்தேன். வடக்குக் கறுத்து வந்தது. தங்கள் பயணம் பற்றிக் கவலைப்பட்டு நான் பாரிஸ் செல்வதை நிறுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு தீவில் வந்து காத்திருந்தேன்.
தன்னைப்பற்றிய அவன் உள்ளார்ந்த கவலை அவள் உள்ளத்தை உருக்கிற்று. தன் குழந்தைகளிடம் தன் உயிரையே வைத்திருந்ததாக அவள் நினைத்திருந்தாள். ஆனால் குழந்தைகளை இத்தகைய முன் எச்சரிக்கை யில்லாமல் அவள் கூட்டிவந்திருந்தாள்.
மூரட் காதலை ஒரு விளையாட்டாகக் கருதியிருந் தது உண்மையாயிருக்கலாம். இன்று அது அவனுக்கு விளையாட்டாக இருக்க முடியாது என்பதை அவள் கண்டாள். ஆனால் இன்னும் அவள் தன் உள்ளார்ந்த மாறுதலை அவனிடம் காட்டத் துணியவில்லை. நேர் மாறாக அவள் மீண்டும் தன் கையிலுள்ள ரூசோவின் பு னைகதையிடையே கவனம் செலுத்தத் தொடங்கினாள்.
இப்போது பொறாமையின் ஒரு புயல் வீச்சு அவ னுடைய உள்ளத்தையும் தைத்தது.
“அது என்ன புத்தகம்?” என்று கேட்டுக் கொண்டே அவன் அதை வாங்கினான். வாங்கி அதை வெடுக்கென்று ஏரியில் வீசி எறிந்தான்.
அவன் சீற்றம், உணர்ச்சி கண்டு அவள் திகைத் தாள். ஆனால் அவ்வுணர்ச்சியை எதிர்ப்பது உணர்ச் சிப் போராட்டத்தை வளர்ப்பதாகும் என்றெண்ணிப் பல்லைக் கடித்துக்கொண்டு வாளா இருந்தாள்.
“ரூசோ பெருங்குடி மக்களை எதிர்ப்பவன். தாமும் பெருங்குடி மக்களிடையே இடம்பெறவேண்டும் என்று துடிக்கும் போலிகளாகிய நடுத்தரக் குடிச் செல்வர் தாம் அவன் நூல்களை வாசிக்கின்றனர். குடும்பக் கடமைகளை மறந்த சோம்பேறிப் பெண்டுகள் தாம் அதை வாசிப்பதாகப் பாசாங்கு செய்வார்கள்.”
முழுதும் பொய்யும் புனைசுருட்டுமான இத்தாக்கு தல் சூழலுக்குப் பொருத்தமாயிருந்ததனால் அவள் தன்னை மறந்து கலகலவென்று சிரித்தாள். பிள்ளைகள் காரண மறியாவிட்டாலும் கூடஇருந்து விழுந்து விழுந்து சிரித்தன.
“இவர்களெல்லாம் ஏன் சிரிக்கிறார்கள்?” என்று மூரட் படகோட்டியைப் பார்த்துக் கேட்டான். அவனும் சிரிக்கத் தொடங்கினான். அதன்பின் மூரட் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவர்கள் சிரிப்பு மனப்புயலை எட்டிற்று. வான மும் சிரிக்கத் தொடங்கிற்று. அதனால் புறப்புயலும் விடைகொண்டேகிற்று. அதன் தடங்களைச் சிந்திய மலரிதழ்களும் தழைகளும் குளிர்காற்றும் மட்டுமே காட்டின.
புயலின் முன் அமைதி எச்சரிக்கை அமைதி. புய லின் பின் அமைதியோ ஆறுதலும் இன்பமும் தரும் அமைதி. பறவைகள் அப்போது தாவிப் பறந்தன. குஞ்சுகள் கலகலத்தன; அகஸ்டி படகில் ஒதுங்கிய நத்தைச் சிப்பிகளைப் பொறுக்கத் தொடங்கினான்.
அடிலி அடிலி லாரைனுக்கும் மூரட்டுக்கும் இடையே வந்து உட்கார்ந்து இருவர் கைகளையும் எடுத்துத் தன் தோள்கள் மேலிட்டுக்கொண்டு இளவரசிபோல் வீற் றிருந்தாள். அகஸ்டி, அவள் பின்வந்து சாய்ந்து இருவர் தோள்களையும் இருகைகளால் பற்றினான்.
லாரைனின் கைகள் மூரட்டின் கைமீது பட்டன. அவன் அதை மெல்லப் பற்றினான். அவள் அவனைத் தடுக்கவில்லை. கைகள் தழுவிக்கொண்டன. அவள் புன்னகை அவன் மனத்துள் அலையோடிப் பாய்ந்து இன்ப உணர்ச்சிகளைத் தூண்டி எழுப்பின.
இருவர் உள்ளங்களும் கூத்தாடின. ஒருவர் நாடித் துடிப்பு அதனை மற்றவர்க்கு அறிவித்து வந்தது.
அடிலியை அவன் மடிமீது எடுத்து வைத்துக் கொண்டான்.
அகஸ்டியை அவள் மடிமீது எடுத்து வைத்துக் கொண்டாள்.
அடிலியை அணைத்த அவன் கைகள் அவள் தோள்களில் வந்து தழுவின.
அகஸ்டியின் கன்னங்களைக் கிள்ளிய அவள் விரல் கள் அவன் கன்னங்களை மறைத்துப் படிந்த மயிர்களை நீவி அவற்றைத் தடவின.
அவர்கள் உள்ளங்கள் இடையே கரையில் வந்து மோதும் இரண்டு இன்பக் கடல்களாயின.
இதழ் 23 – பிரிவு
படகு கரையில் வந்திறங்கிற்று. மூரட் முன்பே .அமர்த்தி வைத்திருந்த பெட்டி வண்டி சிறிது தொலை வில் கப்பியிட்ட பாதையின் கோடியிலேயே நின்றிருந் தது. படகுத்துறை சதுப்பு நிலத்திலிருந்ததால், வண்டி அதுவரை வரமுடியவில்லை.
மூரட் முதலில் மூட்டைகளைக் கட்டிப் படகோட்டி யிடம் கொடுத்து வண்டிக்கு அனுப்பினான். பின் அடிலியை ஒரு தோளிலும் அகஸ்டியை மறு தோளி லும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். லாரைன் தானும் உடன் செல்ல எண்ணித் தன் அங்கியைத் திரைக்கத் தொடங்கினாள். மூரட் திரும்பிப் பார்த்து “நீங்கள் நடந்துவரத் துணிவதானால், கடைசிவரை நடந்துதான் வரவேண்டும். வண்டியில் வரவேண்டுமானால் நான் திரும்பி வரும்வரை இங்கேயே இருங்கள்” என்றான்.
அவளுக்குத் தெரியும், சேற்றில் தன் காலுறைகள் சிக் கினால், உடைகளும் கெட்டுவிடும்; வண்டியில் தான் ஏறமுடியாது என்பது. ஆயினும் மெய்ப்புக்காகவே அவள் நடக்க முனையவேண்டியிருந்தது. இந்நிலையில் சிறு குழந்தை போலவே அவள் காத்திருக்க வேண்டிய தாயிற்று. மூரட் பிள்ளைகளை விட்டுவிட்டு மீண்டும் வந்ததும் அவளிடம் எதுவும் கூறாமல் அவளைத் தூக்கினான்.
“மூரட்! என் பளுவை உங்களால் தாங்க முடி யுமா?” என்றாள் அவள்.
மூரட்: அது தெரிந்தால் நீங்கள் பேசாமல் என் கழுத்தைக் கட்டிக்கொள்வீர்கள். அது எனக்கு ஏந்தலா யிருக்கும்.
அவன் சொன்னபடியே கழுத்தைக் கட்டிக்கொண் டாள். அவன் உயர்ந்த தோள்கள் அவள் கைக்கு எட்டவில்லை. குனிந்து கையை ஏற்றபோது அவள் அவன் கன்னங்களுக்கு ஒரு முத்தம் தந்தாள்.
அவள் புன்னகை செய்தாள்.
அவளை அவன் ஆர அமர மெள்ளவே தூக்கிச் சென்றான். அவள் மேலங்கி அவன் திண்ணிய உட லில் நெருக்குண்டு கசங்கிற்று. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவள் அவன் கண்ணோக்கி லிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், அதன் மீது படர்ந்த சிவப்பு அவள் அகமகிழ்வை அவனுக்குக் காட்டிற்று.
மூரட் காதலுள்ளத்தினைக் கைப்பற்றுவதில் வெற்றிகண்டான். வெற்றி எவ்வளவு என்பது அவ னுக்கு இன்னும் தெரியாது. ஆனால் தெரிந்த அளவே அவள் வாழ்வில் புத்தொளி தூண்டப் போதியதா யிருந்தது. ஆனால் இவ்வெற்றியின் மகிழ்வை வரவிருந்த பிரிவுவந்து கலைத்தது. அவன் பாரிஸ் வருமுன் ஈடுபட்டிருந்த போர்த் துறையிலிருந்து அவனுக்கு விரைவான அழைப்பு வந்திருந்தது. லாரைனின் பய ணத்துக்காக அவன் தன்பயணத்தைச்சிறிது தாழ்த்திக் கொண்டிருந்தாலும், அவன் படுக்கை தட்டுமுட்டுக்கள் எல்லாம் முன்பே அனுப்பப்பட்டிருந்தன. இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவனும் புறப்பட்டுச் செல்லவேண்டும்.
அரும்பிய காதல், அதனை அப்படியே தொலை யில் வளரவிட்டு அவன் நாடோடி வாழ்வை மீட்டும் மேற்கொள்ளவேண்டி யிருந்தது. எத்தனை மாதத்தில், எத்தனையாண்டில் மீண்டும் ஃபிரான்சு நாடு வந்து காதலியைக் காண்பானோ, அவனுக்கே தெரியாது.
போகுமுன் தன் நினைவுக் குறியாகத் தன் காத லிக்கு ஏதேனும் கொடுக்க நினைத்தான் அவன்.
இப்போது அவர்கள் சமூக உயர்வு தாழ்வு மீட்டும் குறுக்கிட்டது. அரண்மனை வாழ்க்கைப் பரிசுகளை அரும்பொருளாகக் கொள்ளமுடியாத உயர் செல்வப் பெண்டு அவள். அரண்மனை நுழைவே தன் உடை மதிப்புக்கு அப்பாற்பட்டவன் அவன். அவளுக்கு எத்தகைய பொருளைத் தருவது? இராப்பகல் இதுவே அவன் ஓயாச் சிந்தனையாகிவிட்டது.
அரும்பொருட் கடைகள், பட்டாடையணி அங் காடிகள், பொன்னணிமணி வீதிகள் ஆகியவற்றிலெல் லாம் அவன் அலைந்தான். பல பொருள்கள் அவனுக் குப் பிடிக்கவில்லை. பிடித்த பொருள்களின் விலையோ அவன் பணப்பையின் அளவுக்கு மீறியிருந்தது. அந்தோ காதல் ஒருபுறம் முன்னிழுக்க, வறுமை அவனை வாட்டிப் பின்னிழுத்து வதைக்க, அவன் அல்லற்பட்டு நொந்தான்.
அவன் பொது வாழ்வே இப்போது லாரைன் கூட் டுறவால் செலவேறியதாய்விட்டது. ‘பணம், பணம்’ என்றே பண்ணை மேலாளுக்கு எழுதிவந்தான். பணக் கவலையற்ற தலைவனுக்கு இப்போது ஏன் இவ்வளவு தேவைகள் என்பதறியாது மேலாள் திகைத்தான். அவன் அனுப்பும் பணம் எல்லாம் தேவையை என்றுமே நிறைவேற்றவில்லை என்று தோற்றிற்று. பண்ணை நிலங்கள் பலவற்றை அடகு வைத்தாய்விட்டது. அடகு வைத்த பின் பல விற்கவும்பட்டன. இப்போது மூரட் டின் இறுதிக் கோரிக்கைக்கு மறுமொழியாக மேலாள் “இனி அடகு வைக்கவும் இடமில்லை; விற்றால் வாங்க வும் ஆளில்லை. முழுவதும் விற்றுவிட்டால்கூட வாங்க ஆள் கிடைப்பது அருமை” என்று எழுதிவிட்டான்.
நண்பர்களிடமெல்லாம் கடனுதவிக்கு எழுதிப் பார்த்தாய்விட்டது. நண்பர்களின் மதிப்பிழந்தது தான் பலன்.
இறுதியாக மூரட்டுக்கு ஒரே ஒரு புது எண்ணம் தோன்றிற்று. அவன் தன் குதிரைகளையும் தன் பாலாடு களையும் என்றும் விற்க எண்ணியதில்லை. அவை அவன் நண்பர்கள்போல வளர்ந்துவந்தன. இப்போது அவற்றை விற்பதற்கு மாறாக, அவற்றுள் சிலவற் றையே நினைவுப் பரிசாக அனுப்பினால் என்ன என்று எண்ணினான். அங்ஙனமே மேலாளுக்குக் கடிதம் வரைந்தான். அவன் சிறந்த குதிரைகளையும் ஆடுகளில் இரண்டு நல்ல ஆடுகளையும் தன் பேரால் கோமாட்டி சிராம்மோனுக்கு அனுப்பும்படி அவன் கட்டளையிட்டான். பரிசுக்கான நன்றியைக்கூட அவன் நேரிடையே. பெறக் காத்திருக்கவில்லை.
இச்சமயம் மூரட் ஈடுபட்ட போர், பிரஞ்சு நாட்டுக் கான போர் முயற்சியே. இங்கிலாந்தின்மீது படை யெடுப்பதென்று ஃபிரஞ்சு அரசியல் இப்போது திட்ட மிட்டிருந்தது. அதற்காக விரிவான முறையில் ஆளெடுக்கப்பட்டனர். லாரைனை மணந்துகொள்ள வேண்டுமானால், நற்பணியும் வருவாயும் வேண்டு “மென்ற எண்ணங்கொண்ட ஆக்டேவ் மூரட் தன் நண் பர்கள், அரசியல் தோழர்கள் யாவரிடமும் தனக்கு நல்ல பணி ஒன்று பார்த்துத் தரும்படி கூறியும் எழுதி யும் வந்திருந்தான். அவன் பாடல்களின் கருத்துப் போக்கு அரசியல் துறைகளில் அவனுக்குப் பெருத்த எதிர்ப்பை உண்டுபண்ணி யிருந்ததனால், எங்கும் பணி யுதவி கிட்டவில்லை. போர்த்துறையில் மட்டுமே இடம் கிடைத்தது. இங்கிலாந்துப் படையெடுப்பு அணியில் அவன் ஓர் உயர்தர பதவியிலமர்த்தப்பட்டான்.
இங்கிலாந்துப் படையெடுப்பு உண்மையில் நடை பெறவேயில்லை. ஃபிரஞ்சுப் புரட்சி அவ்வெண்ணம் மீண்டும் பல ஆண்டு எழாமல் தடுத்துவிட்டது. நெடு நாட் சென்று நெப்போலியன் மீண்டும் அதே முயற்சி யில் ஈடுபட்டான். ஆனால் அவனாலும் அது நிறைவேற வில்லை. ஆகவே மூரட்டின் தொண்டும் படைத்தளங்களில் சில ஆண்டுக் காலம் மாறிமாறிச் சென்றிருந்த துடன் நின்றது. இவ்வாண்டுகளில்போர் இல்லை-போர்ப் பேச்சே இருந்தது. மூரட்டுக்கு மன அமைதியும் சிறிதும் இல்லை.பணித்துறை அவன் செல்வநிலையை உயர்த்து வதற்குக்கூடப் பயன் படவில்லை. ஏனென்றால் அவன் கனிந்த உள்ளமும் பெரும் போக்குகளும் அவன் வரு வாயை இங்கும் கரைத்தன.
படைவீட்டு வாழ்வு அவன் வாழ்வின் பல நெருப் புத் தேர்வுகளிடையே ஒரு நீண்ட நெருப்புத் தேர்வாக. மட்டும் உதவிற்று. அந் நெருப்புத் தேர்தல்களிடையே லாரைனின் கடிதங்களும் அவள் நினைவுகளும் மட்டுமே அவனுக்கு உயிர்ப்பூட்டும் தென்றல் காற்றுக்களா யுதவின. அவன் முதற் கடிதம் அவன் காதலின் தன் மையையும் உள்ளத்தின் பிரிவுத் துன்பத்தையும் நன்கு எடுத்துக் காட்டிற்று. அவர்களிடையே உள்ள மரபுப் படி ‘காதல், காதலி’ என்ற சொற்களை அவள் வழங்க வில்லை. நட்பு, உடன்புறப்பு என்ற சொற்களே அவற் றில் இடம்கொண்டன. ஆனால் ஆர்வமும் துடிப்பும் நட்பு, உடன்பிறப்பு ஆகியவற்றின் உணர்ச்சியி லிருந்து அவன் உணர்ச்சியையே வேறு பிரித்துக் காட்டின.
அவன் முதற் கடிதம் வருமாறு:
பிரெஸ்ட்
பிப்-21, 1777.
என் அருமை நங்கையீர்! உம்மை நான் மீட் டும் என்று காண்பேன்? பொற்குவையை யிழந்த உலோபிபோல் நான் வருந்துகிறேன் – பொற் குவையை நான் முன்பும் ஆட்கொண்டதில்லை யாயினும் கண்டேனும் களிப்பில் மூழ்கியிருந்தேன். இப்போது எனக்கு முன்னிருந்த வேறு பொழுது போக்கும் வழியில்லை. என் வாசிப்பார்வம், கலை யார்வம் எல்லாவற்றையும் இப்போது நீங்களே கொள்ளை கொண்டு விட்டீர்கள். நீங்கள் இல்லாமல் இப்போது அவற்றில் ஆர்வம் செல்லவில்லை.
தங்கள் ஓவியக் கலையை – தங்களிடம் கண்டு நான் பொறாமைப்படும் கைத்திறத்தை-நானும் பெற்றிருந்தால் இங்கே நான் என் கையெழுத்தி னிடமாக, என் நிலைமையை என் உருவுடனேயே இதன் கீழே தங்கள் காலடிச் சுவட்டுடன் தீட்டி யிருப்பேன். ஆனால் அத்திறமில்லாமல் பெயரை மட்டும் பொறிக்கிறேன்.
தங்களை மறக்க விரும்பியும் மறக்கமுடியாத,
ஆக்டேவ் மூரட்.
படை வீடுகள் அடிக்கடி மாற்றப்படும். அப்போது அவள் கடிதங்கள் பிந்தியும், பல சேர்ந்தும் வரும். சில சமயம் அவன் கடிதங்களும் ஒழுங்காய்ச் சேராமல் போகும். அவள் தன்னை மறந்தாளோ, அவள் பெரு வாழ்வில் தன் சிறு நினைவில் தடம் அகன்றதோ என அவன் ஏங்கி ஏங்கி நெஞ்சம் புண்ணாவான். அவள் சில சமயம் தன் நெஞ்சுநோய் தன்னை வாட்டுவதாக வரைந் திருப்பாள். அப்போது அவன் நெஞ்சம் துடிக்கும். சின்னஞ்சிறு கருமணிகளின் சிறுசிறு நோய் நொடி களைப்பற்றி அவள் குறித்திருப்பாள். அப்போது அவன் கடிதமூலம் அக்குழந்தைகள்மீது தன் பாசத் தைப் பாகாய் உருக்கி அனுப்புவான்.
சில சமயங்களில் அவள் கடிதங்களில் அன்பும் கனிவும் கலந்திருக்கும். அவன் வாழ்வுப் பாலைவனத் தில் அது இசை நீரூற்றாய் அவனைச் சில நாள் மகிழ்ச் சிக் கடலுள் ஆழ்த்தும்.
அவளும் உண்மையில் அவனில்லாதபோது தன் வாழ்வின் வெறுமையை உணர்ந்தாள். அவன் வீட் டாட்சித்திறமை அவள் திறமையின் மையை மூடி வைத் திருந்தது. பணியாட்களை அவன் திறத்துடனும் அதே. சமயம் அன்புக் கனிவுடனும் ஆட்சி செய்திருந்தான்.
ஆட்சிப் பொறுப்பு அற்ற செல்வ இளவரசியாக அவள் நாட்கழித்திருந்தாள். இப்போது அவளே நேரில் ஒவ்வொரு சிறு காரியத்தையும் கவனிக்க வேண்டிவந்தது. கவனித்தும் முன்போல் எல்லாம் சரி வர நடைபெறவில்லை. பல பணியாட்கள் அவளை ஏமாற்றினர். பலர் அவளிடம் கடுஞ்சொல் கூறினர்.
பலர் அவள் சீற்றத்துக்காளானார்கள். அவன் வரு முன் அவள் எல்லாரையும் தன் மனம்போல் விட்டிருந்த படி கூட இப்போது அவளால் முடியவில்லை. உள்ளத்தில் எழுந்து அவளை உள்ளூர ஆட்கொண்டு வதைத்து வந்த உணர்ச்சிகளைத் தனக்கும் தெரியாமல் அடக்க அவள் செய்த முயற்சி அவள் உள அமைதியையும் இன்ப அமைதியையும் குலைத்து, கடுஞ்சொல், கடு கடுப்பு ஊட்டியிருந்தன. அவள் உடல் நிலையையும் அவள் சூழ்நிலையையும் இது கெடுத்து அவள் வாழ்வில் கசப்பூட்டியது.
லாரைன் கத்தோலிக்க சமயத்தில் பற்றுடையவ ருளாகவே நாள் முழுதும் கழித்தவள். அவள் உள்ளார்ந்த கலை வாழ்வு அவள் புறவாழ்வைச் சிறிதும் மாற்றி விட வில்லை. ஞாயிறு தோறும் அவள் கோயிலுக்குப்போக முடிவதில்லையாயினும் கூடுமான மட்டும் போவாள். அவன் உடனிருந்த போது காதல் வாழ்வு கோயிலைப் பெரிதும் மறக்கடிக்க வைத்திருந்தது. பிரிவும் தன் காதல் உணர்ச்சியை அடக்கும் எண்ணமும் இப்போது – ச. மய உணர்ச்சிக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டின.
அவள் இப்போது வழக்கமாகக் கோயில் செல்லத் தொடங்கி யிருந்தாள். அத்துடன் அவள் தன் இரண்டக வாழ்வைத் தானே கண்டிக்கத் தொடங்கினாள். இக்கசப் பினால் அவள் பழைய நெஞ்சு நோய் மீண்டும் தலை காட்டிற்று. கசப்பு நோயூட்டின துடன், நோய் கசப்பை பெருக்கிற்று. தன் இரண்டக வாழ்வுதான் கடவுள் சீற்றத்துக்கு வழிவகுத்து நோய் வருவித்ததென்றுஅப் பேதைப் பெண் எண்ணினாள். ஆகவே அவள் வழக்க மாகக் கத்தோலிக்கர் மதகுருவிடம் பாவமன்னிப்புக் கேட்பது மாதிரி கேட்டாள். காதலனிடம் என்றும் மனம் விட்டுக் கூறாத அவள் உள்ளத்தில் காதல் போராட்டக் கதையை அவள் மதகுருவிடம் கூறினாள். மூரட்டுக்கு- வரைந்த கடிதத்தில் இதை அவள் ஒரு சிறிதுதான் சுட்டியிருந்தாள். “உங்களிடம் கூட நான் கூறியிராத -கூறமுடியாத-என் உள்ளார்ந்த பல மனவேதனை களை மதகுருவிடம் கூறி என் மனப் பாரத்தை ஓரளவு குறைத்துக்கொண்டேன். ஆனால், இன்னும் என் வேதனை குறைந்தபாடில்லை” என்று அவள் எழுதி யிருந்தாள்.
காதலின் கண்கள் எப்போதும் காதலர் வகையில் பொறுப்பற்ற தன்மை உடையவை. அதிலும் பிரிவி னிடையே இப்பொறுப்பற்றதனம் பல வகையில் புகையும். தன் லாரைன் தன்னிடம்கூடக் கூறமுடியாத வேதனையைக் கேவலம் ஒரு மதகுருவிடம் கூறினாள் என்ற எண்ணம் மூரட்டின் மனத்தை வாட்டியது. அந்தோ? அவள் மறைத்த மறை செய்தி வேறு எதுவு மன்று-அவன் எந்தக் காதலுக்காக ஏங்கிக் காத்திருந் தானே அதே காதலுணர்ச்சிதான் என்பதை மட்டும் அவள் அறிந்திருந்தால், அவள் எவ்வளவு துள்ளிக் குதித்திருப்பாள். ஆனால் காதல் வழிபடும். பக்தை இங்கே காதல் தெய்வத்தை நம்பாமல் வேறு தெய்வத் திடம் நம்பிக்கை வைத்து அவதியுற்றாள்!
இவ்வாண்டும் லாரைன் ஓர் இலத்தீன் நூலை- ஸெனெக்காவின் ஒரு காவியத்தை-மொழி பெயர்த்திருந்தாள். ஸெனக்காவின் ஃபிரஞ்சு உருவத்தில் மூரட் தன் காதலியின் கைத்திறங் கண்டு மகிழ்ந்தான். “மொழிபெயர்ப்பாசிரியர் தன் முதலாசிரியர் கருத்துக் களினூடே தன் முகத்தைக் காட்டக்கூடாது. உங்கள் முகத்தையோ உங்கள் மொழி பெயர்ப்பு ஒரு சிறிது தான் தடுக்கிறது. நாம்மொழி பெயர்க்கிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு அவ்வப்போது இல்லாமலிருந் தால், நீங்கள் இலத்தீன ஸெனக்காவின் ஃபிரஞ்சு மொழி பெயர்ப்பாளராயிருக்க மாட்டீர்கள். மற்றொரு ஃபிரஞ்சு ஸெனக்காவாய் விட்டிருப்பீர்கள். அப்போது ஸெனக்கா அன்பர்கள் உங்கள் நூலை வாசிக்கமாட் டார்கள். ஃபிரஞ்சு மக்களும் நானும் மட்டுமே வாசித்து மகிழ்வோம்” என்று அவன் பாராட்டியிருந்தான். அவன் பாராட்டு அவள் எதிர்பார்த்ததினும் அவள் உள்ளங்குளிர்வித்தது. அவள் நோய் சிறிது நாள் அவளை விட்டகன்றது.
அவ்வப்போது அவள் தன் உள்ளத்தில் படிந்த சூழ்நிலைச் சாயலை அகற்ற எண்ணி பாரிஸ் செல்வாள். சில சமயம் அரண்மனை சென்று அரசியின் அவையில் தன் பழைய நண்பர்களுடன் கூடி ஊடாடுவாள். இங்கே எப்போதும் போல எல்லாரும் அவளை வர வேற்று அவள் கூட்டுறவில் மகிழ்வார்கள். அவள் உரையாடல் திறமும் எப்போதையும் விடச் சிரிப்பதாக வும் உயர்வுடையதாகவுமே இருந்தது.
ஆனால் ஏதோ ஒரு பளு-ஒரு நிழல் அவள் வாழ் வின் மீது படிந்திருந்தது என்பதை எவரும் கவனியா திருக்க முடியவில்லை. அவள் எப்போதுமே இன்ப வாழ்விடையிலும் தன் மதிப்பும் பெருமித நடையும் உடையவளா யிருந்ததனால், யாரும் அது பற்றி அவளிடம் உரையாடத் துணியவில்லை. அண்டிக்கேட் பவருக்கோ அவள் தன் ‘தனி வாழ்வை’யோ, தன் குழந் தைகளின் உடல் நிலையையோ சுட்டிக் காட்டுவாள். பாரிஸ் அவ்விளக்கம் கேட்டு உள்நடுக்கமுற்றது; அரண்மனை இன்பவாழ்வில் இடம் பெற்ற ஒரு நங்கை கணவன் இறப்புப்பற்றி இழவு மரபுப்படி பேசலாம்- சில நாளைக்கு! குழந்தை நோய் பற்றிக் கவலைப்படுவ தாகக் கூறலாம்-பிற நிகழ்ச்சி யீடுபாடுகளுக்கிடை யில்! கணவனுக்காகப் பல ஆண்டு கடுந்தவம்-குழந் தைகள் நோய்க்காகக் குறைபட்டழியும் உள்ளம்! அவள் உயர் பண்பு கண்டு இன்ப வேட்டைக் காடாகிய பாரிஸ் நடுங்கியதில் வியப்பில்லை. அவள் உண்மை மனநிலையும் மனப் பண்பும் அறிந்தால் அவர்கள் திகில் இன்னும் மிகுதியாகும் என்பது உறுதி.
ஆனால் அவள் நிலைமையை முற்றிலும் உணர்ந்து கொள்ள முடியாத மூரட் அவள் பாரிஸ் வாழ்வு, அரண்மனை நடமாட்டம் பற்றிப் பொறாமையும் கவலை யும் கொண்டான். எத்தனை உயரிய இன்ப ஆடல் பாடல்கள்! எத்தனை வகை வகை நண்பர்! அவற்றி டையே போலந்து நாடோடியை அவள் மறந்துவிடக் கூடும் என்று அவன் அஞ்சினான்.
“நான் மீண்டும் பாரிஸ் பெருமன்றம், பாரிஸ் என்ற சொல்லைக் கேட்கவே வெறுக்கிறேன். ‘என்னை என் லாரைனிடமிருந்து அனுப்பியது பாரிஸே! அங்கே உன் உள்ளங் கொள்ளை கொள்ள எத்தனை பொருள்கள், நிகழ்ச்சிகள், ஆட்கள்! அவற்றின் நினைவுகள் மேன் மேல் வந்து படிந்து என் நினைவைப் புதைத்துவிடுமே! நான் திரும்பிவரும்போது தங்களுக்கு நான் ஓர் அயலானாய் விடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று எழுதியிருந்தான். இந்தக் கடிதத்தில் அவன் முதன் முதலாக அவளை என் நங்கையீர் என்று விளிக்காமல்” “என் அருமை லாரைன்’ என்று விளித்திருந்தான்.
அவள் அதனைப் பொருட்படுத்தும் நிலையிலில்லை- அவனிடம் தெரிவிக்காமலே அவள் அவன் காதலுக்குத் துடியாய்த் துடித்தாள். அவனிடம் அவள் அதனைத் தெரிவிக்காது தடுத்தது வெறுப்பன்று, நாணமுமன்று -அவன் காதலை அவள் நம்பாதது கூட அன்று— என்ற அவனைத்தான் மணந்து கொள்ள முடியாது எண்ணமே.
அவள் நோய் இப்போது அவளை மீறிப் பெருகிற்று. அவள் பாயும் படுக்கையுமானாள். இதனை அவள் கடிதங்கள் முற்றிலும் மறைக்க முடியவில்லை. அவள் உட்கொள்ளும் வகை வகையான மருந்துகள் பற்றியும் எழுதியிருந்தாள். அவள் உண்மை நிலையைப் படிப் படியாக அவன் ஐயுறத் தொடங்கினான். அவள் கடிதங் களே படிப்படியாக அவற்றைமறைமுகமாக விளக்கின.- அத்துடன் அவன் தன் உணர்ச்சியார்வத்தால் அவளைக் காதலிபோல் கருதி எழுதியபோதெல்லாம், அவள் அவற்றைக் கடியவுமில்லை. அவைபற்றிக் குறிப்பிடவு: மில்லை. ஆகவே அவள் நோய் பற்றித் துணிந்து தன் கருத்தைத் தெரிவித்தான்.
“தங்கள் உடல் நலம், தங்கள் மகிழ்ச்சி, தங்கள் இன்ப வாழ்வு இவை சின்னஞ்சிறு புட்டிகளில் அடைக் கப்பட்டு மருத்துவர்களால் தரப்படக் கூடும் என்று நீங்கள் எத்தனை நாள் நம்பி ஏமாறப் போகிறீர்கள்!’ ஆனால் எத்தனை தடவை ஏமாந்தாலும், நீங்கள் அவற்றைத்தான் நம்புகிறீர்கள். உங்கள் மருந்து நான் தான்; என் உயிர் நீங்கள் தாம். இதோ இதை எழுதும் போதும் என் மனக்கண் முன் நான் உங்களை ஆரத் தழுவிக் கொள்வதாக எனக்குத் தோன்றுகிறது. அந் நாள் எந்நாள்” என்று அவன் எழுதினான்.
“உயர்கலை, உயர் பண்புகள், உள்ளத் தூய்மை இவற்றை நான் உளமாரக் காதலிக்கிறேன்-பண்பு வடிவிலல்ல; மனித வடிவில், தங்கள் உருவில்.”
“கற்பனையில் நான் தங்களுக்கு முத்தங்கள் பொழி கின்றேன். கற்பனை முத்தங்கள் ஏமாற்றந் தரலாம். ஆனால் உண்மை முத்தமில்லாத விடத்தில் பல ஏமாற் றங்கள் ஓர் உண்மை நுகர்வாகாதா? தவிர உண்மை முத்தங்கள் கூட எனக்கு அருமைதானே!”
“என் கடிதங்கள் காதற் கடிதங்கள் போன்றிருக் கின்றன. ஆம், என் காதலை நான் தங்கள் உள்ளத் தினிடமிருந்து மறைக்கவேண்டியதில்லை. செவிகேட்கச் சொல்லக் கூடாதென்பது தங்கள் ஆணை. கடிதத்தில் கூட எழுதப்படாதுதான். ஆனால் கட்டளை யிட்ட தாங்கள் சீறாதிருக்கும்போது, கட்டளையின் பிடி தளரு மல்லவா ? மேலும் நான் எத்தகைய காதலன் ? இது வரை எனக்காக நீங்கள் செலவு செய்திருக்கும் பணத்தை நான் கணக்குப் பார்த்தேன். (நட்பில் கணக் குப் பார்ப்பதை மன்னிக்கவேண்டும். கணக்குத்தானே அதை நட்பெல்லை கடவாமல் தடுக்கிறது!) எனக்காக செலவில் நூறில் ஒரு பங்கில் காதலர் எத்தனை பேர் அகப்படமாட்டார்கள்-காதலரும் அகப்படுவார்கள்— கலைப்பண்பமைந்த நல்ல குதிரைகளும் அகப்படும். ஆகவே நான் உடன்பிறப்பாளனாய் இருந்து குளிர்காய வேண்டியதுதான்.”
அவள் உள்ளத்துயரை அவன் அறியவில்லை. அவன் துயரை அவளும் எண்ணிப் பார்க்கவில்லை. அவன் தன் துயரில் வர வர அவர்கள் கட்டுப் பாட்டை மீறித் துணிந்து காதற் கடிதங்களும் கண்டனக் கடிதங்களும் எழுதலானான். அவற்றில் பல அவள் உள்ளார்ந்த காதல் தீயைக் கிளறின. பல அவளை உயி ருடன் வாட்டி வதைத்தன. அவள் வதைப்படும் ஊமை உயிரினம்போலத் துடியாய்த் துடித்தாள். ஆனாலும் அவள் வாய்விட்டுத் கடிதத்தில் ஒரு வரியும் இதுபற்றி எழுதத் துணியவில்லை. காதலிக்கிறேன் என்றால் எங்கே காதலுரிமையில் மணஞ் செய்து கொள்ள வற்புறுத்து வானோ என்று அவள் அஞ்சினாள். நாடோடிக் காதலனை மணக்கும் துணிவு இன்னும் அவளுக்கு வரவில்லை.
இங்ஙனம் மற்றும் ஓர் ஆண்டு கழிந்தது. போர் முயற்சி இப்போது கைவிடப்பட்டது. மூரட்டுக்குப் பணி யிடம் இப்போது அகன்றுவிட்டது. மூன்று ஆண்டு அவன் தன் உயிர் நிலையான லாரைனை விட்டுப் பிரிந்திருந்தும், அதனால் அடைந்த பயன் பிரிவுத் துன்பமன்றி வேறு எதுவுமில்லை. அவன் வருவாயில் மிகுதியாக எதுவும் மிஞ்சவில்லை. அவன் முன்னினும் வறுமைப்பட்டவனாகவே இருந்தான்.
விடுதலை கிடைத்ததும் அவன் பாரிஸுக்கு மீண்டு வந்தான். அவள் பாரிஸில் இருப்பதாகவே அவன் கேள்விப் பட்டிருந்தான். ஆனால் அவனுக்கு எதுவும் எழுதாமல், அவள் பாரிஸ் விட்டு நாட்டுப்புறத்துக்குச் சென்றிருந்தாள். அவன் தன்னைக் கண்டதே தன் உள்ள நிலைமையை முழுதும் உணர்ந்து கொள்வான் என்று அவள் அஞ்சினாள். அவன் கடைசிக் கடிதம் இதனை அவளுக்கு நன்கு விளக்கிற்று. “உன் நோய், உன் மன வேதனைகள், மத குருவிடம் தெரிவித்த உன் உள்ளத் தின் உள் மறைவுகள் எல்லாவற்றையும் நீ வெளியிட்டுக் கூறவேண்டியது என்னிடமே-வேறு எங்கே? உனக்கு ஆறுதல் தரவேண்டியவன் நான்-வேறு யார்?
ஆனால் நேர்மை வழியையும் அறிவு வழியையும் பின்பற்ற நீங்கள் தயங்கினால், நான் அவ்வழியை உங்க ளுக்குத் திறந்துவிட முடியும்-என் வாழ்வில் அவை பயன்பட்டிராவிட்டாலும் உங்கள் வாழ்விற்குப் பயன் படலாம். நான் உண்மையில் பூனையினும் வலி குறைந் தவன். ஆனால் உங்களைக் காக்க வேண்டி வந்தால், உங்கள் உள்ள மறைவை நான் உணரக் கூடுமானால், நான் ஒரு புலியின் வலிமை உடையவனாவேன். அதே சமயம் தங்கள் உள்ளங் கனிவிக்க ஒரு மென்மை வேண்டுமானால், மற்ற எவ்வகையில் நான் புலி போன்ற வனானாலும், உங்கள் வகையில் நான் உங்கள் மென் கரங்களுக் கியைந்த பூனையாவேன். என்னை நம்பும்படி கோருகிறேன். தங்கள் நண்பர்கள், உறவினர்கள், தங்கள் சிறுகுழந்தைகளைவிட நான் தங்களை நேசிக் கிறேன்” என்று அவன் கடைசிக் கடிதத்தில் குறித்திருந்தான்.
மேலும் அதே கடிதத்தில் மற்றொரு தேதியிட்டு அவன் இன்னும் தெளிவாகத் தன் உள்ளக் கருத்தை வெளியிட்டிருந்தான். “இங்கே ஒரு நண்பர்மூலம் உங்கள் அவசர முடிவு பற்றியும் பாரிஸிலிருந்து என் வரவு கேட்ட பின் விரைந்து சென்றது பற்றியும் கேள்விப் பட்டேன். உங்கள் புரியாப் புதிர்ச் செயல் களுக்கு – உங்கள் உள்ளத்தின் கடுந் துயர்களுக்கு. நோய்களுக்குத்தான் காரணம் என்ன ? . மூன்றாண்டு பிரிவின் பின் அவாவுடன் தங்களைப் பார்க்கவந்த என்னைக் கண்டு அஞ்சியோடுவானேன்? ஓடித்தான் என்ன பயன்? தங்கள் கட்டளை ஒன்றையன்றி இது வரை தங்களிடமிருந்து என்னைத் தடுத்துவைக்கும் சக்தி வேறு எது இருந்து வந்துள்ளது? தாங்கள் ஓடினால் நான் தொடரமாட்டேனா? ஒரு வேளை-என் தற்பெருமை அடிக்கடி என்னிடம் தெரிவித்துப் பார்ப் பதுபோல-தங்கள் நோய் என் பிரிவினால் நேர்ந்ததோ என்றுகூட என்னால் நினைக்காமலிருக்க முடியவில்லை. உங்கள் நோய்-உங்கள் உள்ளத்தின் மறை செய்தி யாவும் என் உள்ளத்தின் இதே நெருப்புத்தானோ என்று என்னால் ஆவலுடன் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
என் ஆவல் சரியாயிருக்கவேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை மட்டும்-நான் வேறெதற் கும் வணங்காத இறைவனிடம் வணங்கி வேண்டிக் கொள்ளத் துணிகிறேன்;
எனது லாரைனுக்குரிய,
ஆக்டேவ்’”
இதழ் 24 – சந்திப்பு
என்னை விட்டு ஏன் ஓடவேண்டும்?
ஏன்? ஏன்? ஏன்?
லாரைன் இக்கேள்விகளுக்கு என்ன விடை கூற முடியும்? கோமாட்டி சிராம்மோன் என்ற நிலையில் அவள் அவன் நாடோடிக் காதலை அடக்கப் பார்த்தாள். அவனிடம் தன் காதலையும் மறைக்கப் பார்த்தாள். ஆனால் அவள் உள்ளம் கோமாட்டி சிராம்மோன் உள்ள மன்று; லாரைனின் உள்ளம், பெண்மையின் உள்ளம். அது அவள் கட்டு மீறி மூரட்டிடம் ஓடியது. அவனுக்காகவே வாதாடியது. கோமாட்டி சிரோம்மோனின் மதிப்பைக் குலைத்து, அமைதியைக் குலைத்த அது மூரட்டிடம் ஓடத் துடித்தது. கோமாட்டி சிரோம்மோன் மதகுருவின் துணை நாடினாள். அது அவள் துயரத்தை யும் துடிப்பையும் பெருக்கிற்று. அவள் ஆருயிர்க் குழந்தைகளிடமிருந்துகூட அவள் உள்ளத்தில் எழும் காதல் அவள் கருத்தைப் பிரித்தது.
இந்நிலையில் அவள் மூரட்டின் உண்மையையும் றுதியையும் அவன் கடிதங்களில் கண்டாள். அவன் காதலின் ஆழத்தையும் கண்டாள். தான் மறைத்த உண்மையை அவனாக அறிந்து கொண்டதையும் உணர்ந்து கொண்டாள். அவன் அறிந்து கேட்பதை ‘ஆம்’ என்று ஒத்துக்கொள்ள அவளால் முடியவில்லை. காதல் எல்லாவற்றையும் மீறிவிட்டது. இன்னும் ‘தான்’ என்ற தன் மதிப்பு நிலையை அது எளிதில் கரைத்து விட முடியவில்லை அவனாக அதை அறியட்டும் என்றுதான் அவள் காத்துக் காத்து – துடியாய்த் துடித் துக் கொண்டிருந்தாள்.
தன்னை அவன் கண்டால் போதும், தன் உண்மை நிலையை அவன் ஒரு நொடியில் அறிந்து கொள்ள முடியும் என்பதில் அவளுக்கு இப்போது ஐயமில்லை. அந்தச் சந்திப்பில் அவள் இதுவரை அரும்பாடுபட்டு நடித்து வந்த நடிப்பு, மறைத்து வந்த மறைப்பு, தன் பெருமிதப் பகட்டு யாவும் தகர்ந்துவிடும் என்பதும் அவளுக்குத் தெரியும். அத்தகைய தறுவாய்க்கு அவள் காதலுள்ளம் காத்திருந்தது. ஆனால் அவள் உயர்குடிப் பெருமை மரபு அதன் நேரடித் தாக்குதலை மிகைப் படுத்திற்று. அவன் பார்வையின் மெய்ம்மை யெதிரில் தன் பொய்ம்மையை எப்படி வெளிப்படுத்துவதென்று அஞ்சியே அவள் அச்சந்திப்பைக் கடத்திப்போட்டு அதில் நின்று அஞ்சியோடினாள்.
அவள் உடல் ஓடிற்று. அவள் உள்ளம் அவன் தன்னை எட்டிப் பிடிப்பதை எதிர்பார்த்துத் துடி துடித்தது.
“நோய், நொடி, மனத்துயர் என்றெல்லாம் அளந்தேனே ! காதல் என்ற சொல்கூட நம்மிடையே கூடாது என்று கட்டளையிட்டேனே! இவை அத்தனை யும் பொய் என்று என் முகம் காட்டிவிடுமே! அப்போது அவர் என்ன சொல்வார்! என்ன நினைப்பார் ! நான் ஒரு நடிகை, ஒரு உணர்ச்சிப் பசப்புக்காரி என்று எண்ணி விடமாட்டாரா?” இவைகள் அவள் உள்ளத் திரை களில் மோதிய எண்ண அலைகள்.
மூரட் பாரிஸ் நண்பன் மூலம் அறிந்த செய்திகள் அவன் ஐயங்களை மேலும் உறுதிப் படுத்தின. அவள் ஓட்டத்தின் உண்மையான காரணமும் அவனுக்கு விளங்காமலில்லை. ஆகவே அவன் அவளைச் சந்திக்கப் பின்னும் விரைந்து துடித்தான். பாரிஸில் அவன் தங்க வில்லை. இளைப்பாறவோ, விடாய் தீர்த்துக் கொள்ளவோ சிறிது காலந் தாழ்த்தவுமில்லை. வண்டி கிடைத்தால் அவன் ஏறினான். கிடைக்காவிட்டால் காலைக் கடுக நடக்க விட்டான். அவனிருந்த ‘ஆள்ஸி’ என்ற சிற்றூர்ப் புறத்தை அடுத்த குன்றின் மீதேறி அவ்வூரைக் கண்டதுமே அவன் கண்கள் அதனைத் துருவத் தொடங்கின. ஆனால் அங்கே சென்றடைய இன்னும் பலமணி நேரப் பயணம் செல்ல வேண்டும். அப்போதோ கதிரவன் மேல் வானில் மறைந்து கொண் டிருந்தான். மாலைச் செவ்வொளி விரைந்து மங்கி வந்தது. இன்னும் இருட்டிலேயே ஒரு புதர்க்காடு கடந்தாக வேண்டும். எனினும் அவன் தயங்க வில்லை. மீண்டும் நடை போட்டான்.
காற்றுக் குளிர்ந்தது. இரவின் இருள் மேலும் இருண்டது. மின்னி மின்னித் தெரிந்த ஒன்றிரண்டு விண் மீண்கள் விரைவில் எங்கோ சென்றொளிந்தன பனித்துளிகள் போல வெப்ப மிக்க சில துளிகள் வீழ்ந்தன. இவை பனியல்ல, மழைத்துளிகள் என்று அவன் அறிந்தான்.
விரைவில் மழை தாரை தாரையாகப் பொழிந்தது. புதர்க்காட்டில் வழியும் நன்கு தெரியவில்லை. ஒதுங்கு மிடமும் இல்லை. ஒதுங்க இடமிருந்தாலும் அன்று அவன் ஒதுங்கியிருக்க மாட்டான். அவன் நீண்ட கால்கள் தம் முழு நீளத்தையும் காட்டி நிலத்தை அளந்து தாவின.
அவன் உடைகள் தொப்பென்று நனைந்தன. உடை கடந்து உடலில் நீர் ஆறாய் ஒழுகிற்று:
அவன் விரைவும் விடா முயற்சியும் வீண்போக வில்லை. அந்தப் புயலிலும் அவன் வருவான் என்ற உறுதியுடன் அவள் காத்திருந்தாள். உள்ளம் சந்திக்கத் துடித்தது. உடல் சந்திக்க அஞ்சிற்று. அவள் மாடி அறையில் வைத்திருந்த விளக்கு அணைக்கப்படவில்லை அதன் ஒளியை அவன் நெடுந் தொலைவிலேயே கண்டான். அது அவன் ஊக்கத்தைப் பன்மடங்காக்கிற்று.
அன்றும் என்றும் போலவே அவள் அவன் கடிதங் களை மீண்டும் மீண்டும் படித்தாள். அவள் கட்டளையை மீறி அவன் காதல் துணிந்து எழுதிய தொடர்கள் “என் அருமை லாரைன்” “என் உள்ளங் கொள்ளைகொண்ட நங்கை”-“என் வாசிப்புத்திறம், கலைத்திறம் யாவும் நீ யில்லாத போது உன்னிடமே வந்து விடுகின்றன”. “கற்பனை முத்தங்கள்” இவை ஒவ்வொன்றும் அவள் சீற்றத்தைக் கிளப்ப வில்லை. அவள் காதல் தீயை எண்ணெய் வார்த்து வளர்த்திருந்தன. அவள் நரம் பெல்லாம் துடித்தது. “அவன் மழையில் நனைந்து வருகிறான். நான் காதல் தீயில் வெதும்பிக் காத்திருக் கிறேன்.” என்று கூறிக் கொண்டது அவள் கலைத்திற உள்ளம்.
ஆயிற்று, முற்றத்தில் அவன் காலடி ஓசை கேட்டது. அவள் அப்பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. திரும்பினால் இடையேயுள்ள சுவர்களைத் துளைத்து அவள் முகத்தை அவன் பார்த்துவிடக் கூடும் என்று அவள் அஞ்சினாள் போலும்! அவனை அவள் வரவேற்க வில்லை. பணியாள் வரவேற்றாள். அவன் ஆடையணி களைக் கழற்ற அவள் உதவவில்லை. பணிப் பெண் உதவினாள். அவன் என்ன நினைப்பான்?
அவள் கொழுநன் தலைமகன் திரு. தேசப்பவாஸ், அவள் பிள்ளைகள் ஆகியவர்களுடன் அவன் உரத்த குரலில் பேசினான். அவளுக்குத் தெரியும், யாருக்காக அவன் உரத்துப் பேசினான் என்று. ஆனால் அவள் கீழே இறங்கத் துணிய வில்லை. அவனும் விரைய வில்லை! அவளைக்காண அமைதியே நல்ல முன்னேற் பாடு என்று எண்ணியவன் போலச் சிரித்து உரை யாடினான்.
பணியாட்கள் அவன் பெருந்தன்மை கண்டு வியந் தனர். அவனுக்குள்ள நட்புரிமையை யாரும் மறந்து விடவில்லை. அதன் அளவையும் அவர்கள் அறிவர். தலைமைப் பணியாள் அவனிடம் வந்து ஆடையகற்றி குளிர் காய்ந்தவுடன் தாங்கள் உண்ணலாம். தங்களுக்கு உணவு லாரைனின் அறையிலேயே வட்டித்திருக்கிறோம்!”
அப்பாடா! தன் பொறுமைக் குரிய பரிசு கிடைத்து விட்டது. அவன் விரைவில் மாடியறை சென்றான். நட்பருமை உணர்ந்த அவனை உள்ளே அனுப்பி மெல்லக் கதவைச் சாத்தினான். நெடுநாட் பிரிவுக்குப் பின் ஏற்பட்ட அவ்வமைந்த சந்திப்பு அவர்கள் உள்ளத்தைக் கனிவித்தது. ஆனால் அவர்களுக்கும் அந் நட்பு நட் பெல்லை கடந்தது என்பது தெரியாமலே இருந்தது. லாரைனின் உள்ளம் எப்பாடு பட்டாலும், அவள் புற நடிப்பின் திறமும் அவள் பெருமித நகையும் அத்தகையவை.
அவள் மாடிப்படியில் சிறிதிறங்கி அவனை வர வேற்றாள், முகத்தைச் சிறிது திருப்பிக் கொண்டே அவள் ஆடை வெளுத்திருந்தது—அவள் மேனியும் விளறியிருந்தது. அவள் முகத்தைப் பார்க்காமலே அவள் உடல் நிலை அவனுக்கு விளங்கி விட்டது.
அவள் பேசவில்லை. ‘வாருங்கள்’ என்ற சொல் அவள் வாய்க்குள்தான் முனகிற்று. அவன் உள்ளத்தின் காதல் செவிதான் அதைக் கேட்டிருக்கக் கூடும். அவள் அவனுக்கு முன்னால், முதுகைக் காட்டிக் கொண்டே உணவு மேடையருகில் வந்து சற்றுப் பின்புறமாகச் சாய்ந்து அமர்ந்தாள். அவன் பசிதீர உண்டான்.
பணியாள் வந்து மேடை துடைத்தான். அருகி லிருந்த கணப்படுப்பில் மேலும் சில கட்டைகள் இட்டுக் கிளறி விட்டு மீண்டும் கதவைச் சாத்திவிட்டுச் சென்றான். “ஐயாவின் அறையிலும் எல்லாம் சரியாகப் போட்டு வைத்து விட்டேன்” என்று அவன் அம்மா விடம் கூறிச் சென்றான்.
ஆம். வந்துவிட்டது சந்திப்பு நேரம். தூக்கு மேடையில் கண்ணியவிழ்த்து விடும்போது அதைக் காணப் பொறாமல் கண் மூடிக் கொண்டு அக்காட்சியை அகக் கண்ணால் பார்க்கும் குற்றவாளிபோல, அவள் கண்ணை மூடிக் கொண்டிருந்தாள். ஆனால் தூக்குக் கண்ணி விழுந்ததாகத் தெரியவில்லை-அவன் பேசவே காணோம். என்ன செய்தி என்று கண்ணைச் சற்றே திறந்து பார்த்தாள். அவன் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறான். அவன் தோற்றம் அவன் விம்மி விம்மிக் கரைவதை எடுத்துக் காட்டிற்று.
“ஸ்தானீ!”
அவன் உடல் நடுங்கிற்று. கை அசையவில்லை.
“என் கண்ணே! என் அருகில் வா.”
அவள் அவன் அருகில் வந்து மண்டியிட்டாள். முகத்தைப் புதைத்த கைகள் விலகின. ஆனால் முகம் மீண்டும் அவள்மடியில் புதையுண்டது. “என் லாரைன், நானே உன் வேலையை எளிதாக்கி விடுகிறேன். நீ எதுவும் விடை கூற வேண்டியதில்லை. நானே உன் உள்ளத்தில் உள்ளதை எல்லாவற்றையும் கூறிவிடுகி றேன். என்னிடம் எப்படி வாய் திறப்பதென்று, எப்படி முகம் கொடுத்துப் பேசுவதென்று மலைக்க வேண்டாம். நான் கேட்ட கேள்விகளுக்கு விடை எனக்கே தெரியும். உன் வாயால் வேறு எதுவும் கேட்கவேண்டியதில்லை. ஒரே ஒரு சொல் தெரிந்தால் போதும். நீ என்னைக் காதலிக்கிறாயல்லவா?
அவள் முழுமன துடன் அமைதியாக ‘ஆம்’ என்றாள்.
“ஆ! அது போதும். மீந்த எல்லாம் நான் அறிவேன். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக் கிறோம். உலகில் எந்த ஆடவன் எந்தப் பெண்ணையும் காதலிப்பதைவிட நான் உன்னை மிகுதியாகக் காதலிக்கிறேன். எந்தப் பெண்ணும் எந்த ஆடவனைக் காதலிப்பதையும் விட நீயும் என்னைக் காதலிக்கிறாய் என்று நான் இப்போது தெள்ளத் தெளியக் காண்கிறேன்.”
“ஆம். அவ்வண்ணமே நான் என்றும் காதலிப்பேன்.”
“நானும் அப்படியே.”
இரண்டு உள்ளங்களும் இவ்வாறு ஒன்று பட்டு ஒழுகின. லாரைன் தன் காதலனைத் துணிவுடன் ஏறிட் டுப் பார்க்க முயன்றாள். அதற்குள் மூரட்,
“கண்ணே லாரைன், என்னை இன்னும் சற்று நேரம் பார்க்க வேண்டாம். என் துயரக் கண்ணீர் ஓய்ந்து விட்டது. ஆனால் இன்னும் இன்பக் கண்ணீர்த் துளிகள் விழக் கூடும். இந்த மழை நேரத்தில் அது உன் ஆடைகளை ஈரமாக்கி விடும்.”
அவள் வெட்டெனச் சிரித்தாள்;
சிரிப்பில் அவர்கள் முதற்காட்சியின் துயரச் சூழல் அகன்றது. “ஆ! நீ சிரித்து விட்டாய். இனி நாம் அச்சமின்றி ஒருவரை ஒருவர் பார்க்கலாம், பேசலாம். துயரத்தின் பெருமித உருவில் நான் உன்னை அணுக முடியாது. சிரிப்பு வாயில் திறந்து விட்டு விட்டது. இதோ!”-
அவன் எழுந்து அவளை வாரி யெடுத்து ஆரத் தழுவினான். அவள் அவன் தோள் மீது துவண்டாள். அவன் முத்தங்கள் தெம்பற்ற அவள் உடலில் பொழிந்து தெம்பூட்டின. அவள் அவன் திரண்ட தோள்களைக் கிள்ளி “உங்களுக்கு இப்போது எத்தனை துணிச்சல்!”” என்றாள்;
பாற்குடமும் தேன் குடமும் மோதி உடைந்தன. பாலும் தேனும் கலந்து பாய்ந்தன.
இரண்டு உள்ளங்களில் தனித் தனியே சிறைபட்டுக் கிடந்த நேர் மின்சாரமும் நிரை மின்சாரமும் இடைமறிப்புத் தகர்த்து ஒன்றுடனொன்று கலந்து பாய்ந்து ஒன்றுபட்டன.
இதழ் 25 – அவள் இணங்கினாள் அவன் பிணங்கினான்
கோமாட்டி சிராம்மோன் அப்போது கோமாட்டி சிராம்மோனாக இல்லை. லாரைனாகவே ஆய்விட்டாள். அரண்மனை வட்டாரங்களிலும் உயர்குடி வட்டாரங் களிலும் ஆடவர் காதற் பசப்பை அடக்கிப் பெண்டிரின் பொறாமைகளுக்கும் அப்பாற் பட்ட அம்மாதரசி இன்று ஒரு காதல் கலைஞனின் மாய வலைவீச்சில் முழுதும் சிக்கினாள். அவன் அவளை இப்போது தேட வேண்டிய தில்லை-அவள் தேடினாள். காதல் பற்றிய அவள் உயர் எண்ணங்கள், பெண்மையின் உயர் மதிப்பு, தன் உறுதியில் தனக்கிருந்த நம்பிக்கையாவும் காதற் சூறா வளியில் பஞ்சாய்ப் பறந்தன. காதல் அவளை அவள் சமூகச் சூழலிலிருந்து தனியே பிரிததது. புறத்தே அவள் தன் சமூகத்தில் உறுப்பு வகித்தாள். ஆனால் அகவாழ்வு அவ் வகுப்புக் கடந்து பரந்த மனித சமூகத்தின் அடிப்படை உணர்ச்சி ஒழுக்கினுள் விரைந் தோடிற்று.
வெளியே புயலும் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆனால் வண்ணக் கண்ணாடிக ளமைத்த பலகணிகள் அவற்றை அவர்கள் அறையில் ஊடாடாமல் தடுத்தன. அவர்களைச் சுற்றி அமைதி நிலவிற்று. அது முன்போல உடன் பிறப்புப் பாசத்தின் அமைதியன்று; புதிதாகக் கட்டறுத்து விடப்பட்ட காதற் பறவைகளின் அமைதி, மூரட் முகத்தில் இப்போது வெற்றியின் வீறும் ண்மையின் இறுமாப்பும் கலந்தொளிர்ந்தன. லாரைனின் முகத்திலோ ஆழ்கடலமைதியும் மலை முகட்டின் மாலை ஒளியும் நிலவின.
மூரட் நாம் இருவரும் ஒருவரைஒருவர் கட்டற்ற காதல் வெறி கொண்டுவிட்டோம். நம் இணைப்பைத் தடுப்பவர் யாரும் இல்லை. ஆயினும்,…, ஆயினும்…,
லாரைன்: ஆயினும் என்ன, ஏன் தயக்கம்?
மூரட்: வேறொன்றுமில்லை. நான் காதல் பரிசாக என் காதலிக்கு எதுவும் உடன் கொண்டுவர முடியாது. என்னைத்தான் அளிக்க முடியும்.
வேண்டும். லாரை ன்: காதலிக்கு வேறென்ன எனக்கு நீ, உனக்கு நான்! வேறு எதனையும் நான் கோரவில்லையே.
மூரட்: அதை நான் அறிவேன். ஆயினும் என் நிலைமையில் என்னை மணக்கும்படி நான் உன்னைக் கோர முடியாது. அது உன்னை அவமதிப்பதாகும். நீ அதை ஏற்றுக் கொள்ளலாம். உன் நண்பர், உன் தோழியர் உன்னைக் குறைவாகப் பேசி ஏளனம் செய் வார்கள். நான் உன்னைக் காதலிக்கத் தொடங்கிய போது நான் பெத்தப் பெரிய கனவுகளெல்லாம் கண்டு கொண்டிருந்தேன். போரில் அருஞ் செயல்கள், புகழ், அரசியல் வெற்றிகள் ஆகியவற்றை ஈட்டி அவற்றை உன் காலடியில் கொண்டு வந்திட்டு அவற்றை என் காதல் படைப்பாக ஒப்படைக்க எண்ணியிருந்தேன். ஆனால் அக்கனவுகள் இப்போது தவிடு பொடியாய் விட்டன. என் வாழ்க்கைத் தோல்வியை இப்போது எல்லாரும் அறிவர். நான் பெருங் கடனாளியாய் விட்டேன். இப்போது உன்னை மணப்பதன் மூலம் என் தோல்விகளை வெற்றியாக்க நாடிய கயவனாகத்தான் நான் உலகுக்குக் காட்சியளிப்பேன். அத்தோற்றம் தவறென்று என்னால் எண்பிக்க முடியாமல் போய் விடும்.
லாரைன் இத்தடைகளை முன்னெல்லாம் அப்படியே ஏற்றிருப்பாள். இப்போது அவள் புதிய லாரைனாக இருந்தாள். அவள் தன்மதிப்பு, மதிப்பு, உலகத்தார் ஒப்புரவு, சமூக வரம்புகள் ஆகிய எல்லாக் கோட்டை களையும் தாண்டிக் காதலனுடன் தீயில் குதிக்கச் சித்தமா யிருந்தாள், “ஊரார் என்ன சொன்னாலும் சொல்லட்டும், நான் அவற்றைப் பொருட்படுத்த. வில்லை. வயது முதிர்ந்த சிராம்மோனை நான் மணக்க முற்பட்ட போது கூட என்னென்னவோதான் முதலில் கூறிக் கொண்டார்கள். இன்றும் அதுபோலவேதான். சொல்வதெல்லாம் சில நாள் சொல்வார்கள். நம் துணி வின் முன் அவை படிப்படியாய் அடங்கிவிடும். நாம் சில நாள் பிறரது கூட்டு வாழ்வில் கலக்காமல் தனி’ மாளிகையில் வசிக்கலாம். நாட்டுப்புறத்தில் நாள் கழிக்கலாம். என் நாட்டுப்புறப் பண்ணைகளை நாமே மேற் பார்வையிட்டு ஒதுங்கியிருக்கலாம். மேலும்…
மூரட் “நான் சமூகத்தைப் பற்றி மட்டுமல்ல” எண்ணுவது. அவர்கள் மறக்கக்கூடும். என்னால் மறக்க முடியாது; “இரவலனாக உன்னிடம் வந்தேன், உன் பொருளின் மீது உயிர் வாழ்கிறேன்” என்று நான் எண்ணப் பொறுக்க முடியாது, மேலும் உனக்கும் உன் செல்வத்துக்கும் உரிய குழந்தைகள் வேறு இருக்கிறார் களே. அவர்கள் உரிமையிடையே நான் எப்படித் திருட்டுத்தனமாக நுழைந்து மன நிறைவுடன் வாழ முடியும்? நீ ஒரு பெருஞ் செல்வச்சீமாட்டியாக இராமல் ஒரு நாட்டுப்புற இடைச் சேரிப் பெண்ணாயிருந்திருந் தால், நம் நிலை இப்படி இருக்காது.”
இப்போது அவள் இணங்கினாள்; அவன் பிணங்கு கிறான். அவன் கெஞ்சி, அவள் கட்டளையிட்ட காலம் மாறிவிட்டது. அவள் கெஞ்சி, அவன் மறுக்கும் காலம் இது; அவன் நாடோடிக் காதலை அவள் பழித்து உயர் நெறிக் கோடிட்டு அவள் நின்ற காலம் போயிற்று. இப்போது அவள் கட்டற்ற காதலில் திளைக்கத் துணிந் திருந்தாள். ஆனால் அவன் உயர்நெறிக் கோடிட்டான்;
‘ஆ! என் செல்வத்தைக்கூட என் பகையாக்கி விட்டாய். அது மட்டுமா? அச்செல்வத்தை ‘சீன்’ ஆற்றில் எறிந்துகூட நான் உன்னைப் பின்பற்றி உன் வறுமையில் பங்கு கொள்வேனே! இந்தக்குழந்தைகளை எண்ணி அதுவும் செய்ய முடியாதவளானேன்!’
அவன் மனம் சிறிது இளகிற்று. ஆனால்தான் நெடு நாளைக்கு முன் செய்துகொண்ட திட்டம் அவன் நினைவுக்கு வந்தது. அவன் முன் இட்ட சமூகக் கோட்டினை இப்போது கடக்கச் சித்தமாய் விட்டான்; ஆனால் அக்கோடு அழியவேண்டும். அது மீண்டும் தன் தன்மதிப்பைக் கெடுக்கக் கூடாது என்று அவன் கருதினான். ஆகவே அவன் “ஆம். உன் செல்வத்தை நீ துறந்துவிடு. குழந்தைகள் அவற்றைப் பின்னால் பெற்றுக்கொள்ளட்டும்; நாம் அதைத் தொடாமல் என் நாட்டில் என் பண்ணையில் சென்று வாழலாம். அங்கும் நாம் பட்டினி கிடக்கப் போவதில்லை. நாட்டுச் சோளமும் காட்டுப் பழங்களும் தின்று நாம் பறவைகள் போல் வாழலாம்” என்றான்.
அவள் பெண்மை வலு விழந்திருந்தது. ஆனால் அது மீட்டும் சிறிது தலைகாட்டிச் சீறி யெழுந்தது. “பிறர் உன்னைப் பார்த்தோ, பாராமல் மறைவாகவோ கேலி செய்வதைக்கூட உனக்குப்பொறுக்க மனமில்லை; உன் விடுதலையைவிட உனக்கு மனமில்லை. ஆயினும் என் விடுதலையையும் என் பெருமையையும் மட்டும் உன் பெருமைக்கு நான் பலியிட வேண்டும் என்கிறாயே!”
அவன் உள்ளத்தில் இக்குற்றச்சாட்டுத் தைத்தது. தன் முகத்தை அவள் தோளில் புதைத்துக் கொண்டு, “என்னை மன்னித்து விடு, என் உள்ளத்திலுள்ளதைப் பேச்சில் சரியாகக் கூறமுடியவில்லை. உன்னுடன் நான் போட்டியிட எண்ணுவேனா? செல்வர் பெருமை யிழந்து வாழ முடியும்; ஏழை பெருமை யிழந்தால் வாழ்வு ஏது? எனக்காக நீ செல்வர் குடிப்பெருமையைத் தான் இழப்பாய். நான் ஏழை குடிப்பெருமையை, மனித உள்ளத்தின் தன்மதிப்பைக்கூட வல்லவா இழக்க வேண்டும்? உன் காதலன் மனத்துயர் இனி உன் மனத்துயர் தானே! இதை எண்ணிப்பார்” என் று பலவாறு வாதிட்டான்;
அவள் உள்ளத்தின் காதல் அவன் பக்கமாகவே நின்று வாதாடியது.
அவள் தன் உள்ளத்தின் உறுதியிழந்தாள்.
அவள் உள்ளம் அவன் உள்ளத்தின் ஒரு கூறாயிற்று.
அவன் தன் வெற்றி தொடர்ந்து மீண்டும் பேசினான்;
“நீயில்லாமல் நான் வாழ்ந்து பார்த்தாய்விட்டது. நானில்லாமல் நீ வாழ்ந்து பார்த்தாய்விட்டது. எதிர் காலத்தைப்பற்றித் திட்டமிட்டு வீண் கோட்டைகள் கட்டிப்பார்ப்பானேன்? எனக்கு நீ, உனக்கு நான். உலகை மறந்து, உலகைக் கடந்து நான் உன்னைத் தொடர முடியும். உலகு கடந்து நீ என்னை அடைய முடியும். உன் பெயரை நான் காக்க முடியும். என் தவறை நீ மறைக்க முடியும். இது போதாதா? நீ உடலாய் முன்போலிரு. நான் உன் உயிராய் உலவி ஊடாடி வருகிறேன்.”
அவன் சொல் அவள் செவியில் முழுதும் புகவில்லை. அவள் உணர்வுசுழன்றது. ‘பெயரிழக்க ஒருப்பட்டேன். செல்வமிழக்க ஒருப்பட்டேன். குழந்தைகள் வாழ்வையும் பாதி மறக்கத் தலைப்பட்டேன். இன்னும் தியாகம் கோருகிறான். இவன் துணிச்சலுக்கு ஓரள வில்லை. இனி நான் என் செய்வேன்’ என்ற எண்ணம் அவள் அரையுணர்வு நிலையிலும் அவளை வாட்டியது. அவளைச் சுற்றி உலகமே, உலகின் படைப்பு முழுவதுமே சரிந்து சுழல்வதாக அவளுக்குத் தோன்றிற்று.
“நான் உன்னிடம் தாயின் பாசம், தந்தையின் அன்பு, கணவனின் காதல், குழந்தையின் பரிவு ஆகிய எல்லா வகை அன்பையும் ஒருங்கே கொண்டுள்ளேன். உனக்கு நான் எல்லாமாக இருக்க முடியும். உலகுக்கு நாம் நண்பராக மட்டும் தோற்றுவோம். நம் தடைக் கல்கள் ஒரு நாள் நீங்குவது உறுதி. அன்று மணந்து கொள்வோம்! அதுவரை கட்டற்ற, கருத்தொருமித்த காதலராய் இருக்கத் தடையென்ன? இதில் என் உயிர், நம் உயிர் தொங்குகிறது. இது இன்றேல் உன் வாழ்வு கசப்பாகும்; எனக்கு வாழ்வே இராது. உன் தனித் தன்மையை விட்டு இதை ஏற்றுக் காதலராயிருப்போம் என்ற ஒரு சொல் கூறுக” என்று அவன் மீண்டும் வற்புறுத்தினான்.
அவள் கனிவுடன் அவன் கையைத் தன் கையில் எடுத்து அணைத்துக்கொண்டு, “குழந்தைகள் செல்வ உரிமையைப் பறிக்கக்கூடாதென்றீர்கள். அவர்கள் தாய உரிமையைப் பறிக்கலாமா?” என மன்றாடினாள். அவன் எதற்கும் துணிந்து புதுப்புது வகை விடுவிப்பு அளித்தான்.
“நாம் மணம் செய்துகொள்ளும்வரை அவர்கள் அறிய வேண்டுவதில்லை. அவர்கள் உறங்கிய பின் மாற்றுடை அணிந்து ஒருவரை ஒருவர் சந்திப்போம். என் வீட்டிற்கே நீ நடந்துவந்து சென்றால், யாரும் தவறாக எண்ணமாட்டார்கள். வண்டியில் வந்தால் தானே முறைப்படி வருவதாக உணரப்படும்.”
“பிள்ளைகள் நேரடியாக எதுவும் அறியாமலிருக் கலாம். ஆனால் என் ஆர்வம் அவர்களிடம் குறைவதை அவர்கள் அறிந்துகொள்ளக்கூடுமே. தவிர நான் மறை வெளிப்புடன் நடந்தால், என்ன துணிவுடன் நான் அவர்களுக்கு நேர்வழி கற்பிக்க முடியும்?”
“இதெல்லாம் உன் துன்பம், உன் கவலை மட்டு மல்லவே. எனக்கும் அதே கவலை உண்டல்லவா? அவர்கள் உன் பிள்ளைகள் மட்டுமல்ல. என் பிள்ளை களும்தான். இந் நிலையே விரும்பத்தக்க நிலை என்று நான் கருதவில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் நமக்கு வேறு வழியில்லை. இது என் விருப்பமன்று இயற்கையின் விருப்பம்.”
அவள் வாதிட்டு வழிகாண முடியவில்லை. வாதிட்டு வழிகாணும் திறமும் அவளிடம் இல்லை. அவள் உடலின் உயிர் அவன் உடலில் புகுந்துகொண்டதாகவே அவளுக்குத் தோற்றிற்று. அவன் நல்லவனா கெட்டவனா; அவன் கூறுவது சரியா, தப்பா என்று, ஆராயும் ஆற்றலைக் கூட அவள் அறிவு இழந்தது, அவன் தோள்கள், அவன் நிமிர்ந்த நோக்கு ஆ கிய இவையே அவள் உடலையும் உயிரையும் ஈர்த்தன. அவள் அவன் கழுத்தைக் கைகளால் பிணைத்துக் கொண்டு அழுதாள்.
அவன் அவள் வெதும்பிய மேனி துடைத்து நீவி மயிர் கோதினான். அவள் முகத்தைத் தன்னை நோக்கி உயர்த்தி “நானிருக்க உனக்கு ஏன் கவலை? என்னிடம் உன்னை ஒப்படைத்துவிடு. உன் துன்பம் எனக்கு, என் இன்பம் உனக்கு” என்றான்.
அவன் அணைப்பு அவளை இறுக்கிற்று.
அவள் உயிர்ப்பு அவனை இனிய நறுமணமுள்ள நெய்யிலிட்டு வாட்டிப் பொரிப்பது போலிருந்தது.
அவன் முத்தங்கள் அவள் உயிரை வாங்கின.
அவள் இன்பத்தில் துன்பமும், துன்பத்தில் இன்பமும் பெற்றாள்.
நன்மை தீமை, உயர்வு தாழ்வு, தக்கது தகாதது ஆகிய பேதாபேதங்கள் யாவும் அவளை விட்டகன்றன. அவள் இரண்டற்ற காதலுணர்ச்சி யலைகளில் மோதி அலைக்கழிக்கப்பட்டு உலகை ஒரு கனவென மறந்து வாழலானாள்.
அக் கனவிடையே-நீண்ட ஆழ்ந்த கனவிடையே அவள் குழந்தைகளின் விளையாட்டாரவாரமொன்றே முன்னைய வாழ்வை ஓரளவு நினைவூட்டுவதாயிருந்தது.
அவள் காதற் கடலில் மூழ்கி அதன் அடித்தலத்தில் சோர்ந்து கிடந்தாள்.
– தொடரும்…
– வாடாமல்லி (நாவல்), முதற்பதிப்பு: ஜூலை 1965, சேகர் பதிப்பகம், சென்னை.