நன்றியால் துதி பாடு
கதையாசிரியர்: அல்போன்ஸ் மோசஸ்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 8, 2026
பார்வையிட்டோர்: 1,416
கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தார். கண்ணில் கண்ட மனிதரையெல்லாம் நலமா என்றார். அப்போது விமலா தன் வீட்டின் முன் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து விமலாவிடம்; சென்று அம்மா தாயே ஏன் அழுது கொண்டிருக்கின்றாய் என்று அன்பாகக் கேட்டார். அதற்கு விமலா அவரை ஏற இறங்கப் பார்த்து தனது அழுகையை அடக்கிக் கொண்டாள். தனது முந்தானியால் முகத்தைத் துடைத்துக் கொண்டு ஐயா என் மீது அக்கரை கொண்டு கேட்கும் நீங்கள் யார்? என்று கடவுளிடம் கேட்டாள் அதற்கு இந்த அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து மனிதனையும் படைத்து அவனிடம் இவைகளை ஆண்டு அனுபவித்துக் கொள் என்று கொடுத்த கடவுள் நான் தான் என்றார்.
ஓ நீ தானா வாயா வா. உன்னைத் தான் நான் தேடிக் கொண்டிருந்தேன் என்னைப்படைச்ச கடவுள் மட்டும் மாட்டினால் நாக்கைப் புடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்கணும்னுதான் இத்தனை நாளாகக் காத்துக் கொண்டிருந்தேன் நல்ல வேளை நீயே வந்து வசமா மாட்டிக்கிட்ட என்றாள் விமலா அதற்கு கடவுள் அம்மா என்ன நடந்தது ஏன் அழுது கொண்டிருக்கின்றாய் என்று தானே கேட்டேன் என்று கூறினார். ஆமா என்ன நடக்கல. எல்லாம் தான் தினமும் நடக்கின்றதே. நான் என்னத்தைச் சொல்ல. நீ பாட்டுக்குப் படைச்சி இந்த பூமியில தள்ளிட்ட. அன்றாடும் நாங்க படற கஷ்டம் உனக்கு கொஞ்சமாவது தெரியுமா. அல்லது புரியுமா. வேலை வெட்டியில்லாம நாங்க படற கஷ்டம், கணவனோடு தினமும் மல்லடிக்கிற கஷ்டம் கொஞ்சமாவது உனக்குத் தெரியுமா.? என் வீட்டுக்காரர் தினமும் குடித்துக் கொண்டேயிருக்கின்றார். குடும்பத்தைப் பற்றியோ, பெத்த பிள்ளைகளைப் பற்றியோ பொண்டாட்டியைப் பற்றியோ கொஞ்சம் கூட கவலையே இல்லாத மனுஷனா இருக்கிறார். தினமும் வேலைக்குப் போய் கூலி வாங்கி, முழுவதையும் குடித்து விட்டு வருகிறார். அவர் வீட்டிற்கு வந்தாலே நானும் பிள்ளைகளும் இன்னைக்கு என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்து நடுங்கிக் கொண்டேயிருப்போம். எப்போதும் வீட்டில சண்டைதான் நடக்கும். மகிழ்ச்சி சந்தோஷமெல்லாம் எங்களுக்கு என்னான்னே தெரியாது. வேதனை, கொடுமை, சோகம், துன்பம், துயரம் இதுதான் எங்கள் வாழ்க்கை. பற்றாதக் குறைக்கு அடிக்கடி என் மேல சந்தேகம் வேறு.
ஆமா சாமி. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். மனிதனை நான் தான் படைச்சேன்னு மார் தட்டிச் சொன்னியே ஆணைப் பெண்ணைவிட உசத்தியா படைச்சிட்டியா பெண்களை அப்படி போட்டு வாங்குறாங்களே என்று கேட்டாள் விமலா. அதற்குக் கடவுள் சே. யார் சொன்னது அப்படி ஒன்றும் இல்லை. மனிதனை என் சாயலாகத்தான் படைச்சி அவனுக்கு ஆதாம் என்றுப் பெயரிட்டேன். படைப்பையெல்லாம் ஒருநாள் பார்வையிடும் போது அனைத்து உயிரினங்களும் தன் ஜோடியோடு நின்று என்னைப் பார்த்து புன்முருவலுடன் வணங்கின, வாழ்த்தின. ஆனால் ஆதாம் மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கே சரியாகத் தெரியவில்லை. ஆதாமுக்கு ஒத்த ஒரு துணையைப் படைக்க நினைத்து அவனது விலாவிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்து அவன் முன் நிறுத்தினேன். அவளை ஆதாம் ஆச்சரியத்தோட பார்த்து ஏ வா என்றான். பின்னர் அதுவே அவளது பெயராயிற்று. எனது படைப்பில் ஆணும் பெண்னும் சரிசமானமானவர்கள் தான் என்றார் கடவுள்.
ஐயா நீங்க சொல்றது என்னமோ காதில தேன் போலத்தான் பாயுது. ஆனா இங்க நடக்கிறதே வேற என்று விழலா சொல்லிக் கொண்டிருக்கும்போதே விமலா வீட்டுக்காரர் ஆனந் குடித்து விட்டு அங்குத் தள்ளாடி வந்து நின்று அமலியைப் பார்த்து ஏய் எவடி இவ ஆம்பிளைக் கிட்ட உனக்கு என்னடிப் பேச்சி என்று அடிக்கக் கை ஓங்கினான் உடனே கடவுள் அவனது கையைப் பிடித்துக் கொண்டார்.
ஏய் நீ யாரறா என் வீட்டில உனக்கென்னடா வேலை என்று அவரைப் பார்த்து முறைத்தான் ஆனந்த்.
நான்தான் உன்னைப் படைத்தக் கடவுள் என்றார் அவர்.
ஆமா வந்துட்டாறையா கடவுள் என்று கிண்டலடித்தான்.
அது சரி நீ ஏன் இந்தக் கோலத்தில் இருக்கிறாய். தினமும் குடிப்பதாகக் கேள்விப்பட்டேனே சரியா என்றார் கடவுள்.
ஓ நான் வருவதற்குள் உன்கிட்ட என் பொண்டாட்டி சொல்லிப்புட்டாளா என்றான் ஆனந்த்.
அது சரி குடிப்பவர்கள் பார்த்தாவது குடிக்காமல் திருந்தி வாழ்வார்கள் என்று நான்தான் குடி குடியைக் கெடுக்கும் குடி குடும்பத்திற்கு நல்லதல்ல என்று அந்தப் பாட்டிலில் ஒட்டச் சொன்னேன் அதைப் பார்த்தும் உனக்கு திருந்தனும்னு தோணலியா. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து விட்டு பலபேர் இறந்து போனார்களே அந்த செய்தியைக் கூட நீ டிவியில பார்த்தியே அப்போதுகூட நாம குடிக்காம திருந்தி வாழனும்னு உனக்குத் தோணலியா என்று கடவுள் கேட்டார்.
அது இருக்கட்டும் சாமி கானாவூர் திருமணத்தில ரசம் தீர்ந்து போய் விட்ட போது நீ ஏன் சாமி தண்ணீர திராட்சை ரசமாக்கிக் குடிக்க வச்சிங்க. அதைத்தான் சாமி நான் நினைச்சி நினைச்சி இது கடவுள் படைச்சதுன்னு குடிக்கிறேன் என்றான் ஆனந்த்.
பாரு சாமி என்னமா கோத்து விடறாரு பாருங்க என்றாள் விமலா ஆனந்த் கானாவூர் கல்யாணத்தில் தண்ணீர் ரசமாக மாற்றியதற்குக் காரணம் எனது தெய்வீக வல்லமையின் அடையாளத்தை வெளிப்படுத்தி எனது ஊழியத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கத்தான். அதை நான் எனது முதல் அருள் அடையாளமாகச் செய்து எனது தந்தையின் மகிமையை வெளிப்படுத்தினேன். அதோடு கூட எனது அன்னை மரியாளின் பரிந்துரையை பூர்த்திச் செய்வும்தான் நான் அவ்வாறு செய்தேன். ஆனால் நீ நினைப்பதுபோல அல்ல. திருமணத்தன்று நீ உனது மனைவி விமலாவிற்கு கடவுள் முன்னிலையிலும் திருச்சபையார் முன்னிலையிலும் என்ன வாக்குறுதி கொடுத்தாய் என்பதை நினைத்துப் பார்க்கின்றாயா? இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாய் இருந்து உன் வாழ்நாள் எல்லாம் உன்னை றேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கின்றேன் என்று தானே கூறினாய். விமலாவும் அவ்வாறுதானே சொன்னாள். அப்ப மதிக்கிறேன் என்றுச் சொல்லி விட்டு இப்போ மிதிக்கிறாயே இதற்கு என்ன அர்த்தம் என்றார் கடவுள்.
வாழ்கின்றபோது விவேகத்துடனும் போதைக்கு அடிமையாகாமலும் வாழ வேண்டும் என்று வேதத்திலே அறிவுறுத்தியும் நீ கேட்கவில்லை. மதுபானத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், மேலும் அது ஒரு நபரின் வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கக் கூடியது என்றுதானே வேதங்கள் போதிக்கின்றன. 1 கொரிந்தியர் 6ம் அதிகாரம் கூறுவது எல்லாவற்றையும் நீ செய்யலாம் ஆனால் எதுவும் உன்னை அடிமைப்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது மது அருந்துபவர்களுக்குப் பொருந்துமே. கொலோசெயர் 3: அதிகாரம் 13ம் வசனங்கள் மற்றவர்களை நேசிக்கவும் மன்னிக்கவும் வலியுறுத்துகிறதே அதை மறந்து விட்டாயா?. மது பானத்தினால் அடுத்தவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதுதானே முக்கியம். கலகோசியர் 5: எந்த வகையிலும் உங்கள் உடலைத் தூய்மையாக வைத்திருங்கள் என்று கூறுகின்றதே அதற்கு என்ன அர்த்தம். போதைப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவர் தன்னடக்கம் காக்க வேண்டும் என்பதுதானே இதன் அர்த்தம். எனவே ஆனந் சுயக்கட்டுப்பாடு தன்னடக்கம் பிறரோடு அன்பு காட்டுவதையும் வலியுறுத்துகிறது அல்லவா. மது அருந்துவது ஒரு நபர் வாழும் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைப் பொறுத்து ஒரு தனிநபர் தனது செயல்களை வேதாகம போதனைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து மது பானத்தைத் தவிர்ப்பதுதான் நல்லது என்று கடவுள் நீண்ட அறிவுரை கூறினார்.
அதுவரை உள்ளேயிருந்த ஆனந்தின் மகள் அவனிடம் ஓடிவந்து ஐ அப்பா வந்துட்டாய்க என்று அவனது காலைக் கட்டிப் பிடித்தாள். உடனே கடவுள் பார் ஆனந்த் உன் மகள் உன்மீது எவ்வளவு பாசமாக இருக்கின்றாள். உனது மனைவி விமலா தன் தாய் தந்தையர் உற்றார் உறவினர் அனைவரையும் திருமணம் ஆனவுடனே உதறித் தள்ளி விட்டு கல்லானாலும் கணவன் புல்லானானும் புருஷன் என்று உன்னையே நம்பி வாழ்கின்றாளே அவர்களை நினைத்துப் பார்.
அட போ சாமி வாழ்க்கையில எனக்கு தினமும் ஆயிரத்தெட்டு பிரச்சனை சாமி அதை மறக்கத்தான் குடிக்கிறேன் என்றான் ஆனந்த்.
ஆனந்த் யாருக்குத்தான் பிரச்சனையில்லை. எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கை பிரச்சனைதான். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் என்றார் கடவுள்.
அது சரி சாமி அதற்கு நான் என்ன பண்ண வேண்டும் என்றான் ஆனந்த்.
அதற்கா சொல்றேன் கேள் ஆனந்த். ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு. நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு என்றார் கடவுள்.
ஆமா நீங்க சொல்லிட்டீங்க. நான் என்ன பண்றது என்றான் ஆனந்த்.
அதற்குக் கடவுள் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து மறைந்து போனார்.
ஆனந்த் மெல்ல மெல்ல தன் நிலை மறந்தான். அவன் மனதில் ஆனந்தம் குடி கொள்ள ஆரம்பித்தது. அமைதி தவழ ஆரம்பித்தது. அமைதியாக ஆனந்த் அங்கிருந்து வெளியே கிளம்ப ஆரம்பித்தான்.
யோவ் எங்கய்யா போற மறுபடியும் சாராயக் கடை உன்னை வா என்று அழைக்கின்றதா. இதுவரை அந்த பெரிய மனுஷன் சொன்னது உனது காதுல விழ வில்லையா நீயெல்லம் மனுஷனாயா என்று புலம்ப ஆரம்பித்து அவனைத் தடுத்தாள் விமலா.
இல்ல விமலா சாமி படத்தை தொடச்சி வை. நான் போயி படத்துக்குப் போட பூ, சாம்பிராணி, வத்தி எல்லாம் வாங்கியாந்துடறேன். நாம மூனு பேரும் சேர்ந்து இந்த அக்டோபர் மாதத்தில ஜெபமாலை மாதாவுக்கு பிராத்தனை செய்து குடும்ப ஜெபமாலை சொல்வோம். அதோடுகூட அந்த பைபிளையும் தொடச்சி எடுத்து வை, தினமும் காலை எழுந்ததும், இரவு படுக்கப் போறதுக்கு முன்னாடியும் பைபிள் படித்து அந்த நாளை கடவுளுக்கு ஒப்புக் கொடுப்போம் என்று நடக்க ஆரம்பித்தான்.
விமலாவிற்கு ஆனந்தம் தாள முடியவில்லை. தனது பிராத்தனை வீண் போகவில்லை. இத்தனை நாளும் எனது பிராத்தனையைக் கேட்ட கடவுளே நேரில் எனது வீடு தேடி வந்து எனது குடிகாரக் கணவரை மனம் மாற்றியுள்ளார்.
கடவுளுக்கு கோடான கோடி நன்றி என்று அங்கேயே முழந்தாள் படியிட்டு வானத்தை நோக்கி அண்ணார்ந்து பார்த்து இரண்டு கைகளையும் உயர்த்தி கடவுளைப் புகழ்ந்து நன்றியால் துதி பாடினாள்.
| நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க... |