சந்தை மாடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 1,720 
 
 
‘தனக்கு பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளை எப்படி இருப்பார்? அன்பாக பேசுபவராக இருப்பாரா? ஆத்திரத்தில் கோபப்படுபவராக இருப்பாரா? அழகாக இருப்பாரா? அறிவோடு இருப்பாரா? வாலிபரா? வயதானவரா? எழுதப்படிக்கத்தெரிந்தவரா? தற்குறியா?’ என பலவாறு யோசித்ததில் மகினிக்கு அன்று தூக்கம் உடலை அரவணைக்க மறந்தது.
“அம்மா…”
“ம்…”
“மாப்ள…?”
“உஸ்… அதெல்லாம் கண்ணாலத்து வரைக்கும் ஒன்னும் கேக்கப்படாது. ஆடு மேச்சையா, சோத்த உண்டையான்னு இருக்கோணும். மாப்ள பாத்தாச்சுங்கற சந்தோசத்துல சோத்தகீத்த எச்சாத்திண்ணு பூதமாட்ட ஊதிக்காதே….பெத்தவங்க எங்குளுக்குத் தெரியாதா எப்புடி மாப்ள உனக்கு பாக்கோணும்னு….?” ஒரே வார்த்தை தான்…. கேட்டதும் பொறிந்து தள்ளிய தாயைக்கண்டு பயத்தில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு காட்டிற்குள் சென்று விட்டாள்.
“என்ன மகினி…. மாப்ள பாத்தாச்சுன்னு சொன்னாங்க…” காட்டிற்குள் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிநேகிதி ரகினி கேட்டதும் வெட்கப்பட்டவளாக நிலத்தில் காலால் கோலம் போட்டவாறு “ஆமா….” என்றாள்.
“நீ வெக்கப்படறத பார்க்கற போது ராத்திரி தூங்கீருக்க மாட்ட போலிருக்குது. உன்ற நெனப்புல கசமுசாவெல்லாம் நடந்திருக்கும் போலிருக்குது…?”
“போடீ….” என தலை குனிந்தபடியே வலது கையின் விரலை நீட்டி ‘தள்ளிப்போ’ என சாடையாக காட்டினாள்.
“அப்ப நா போயிறவா? அதான் தொணை வரப்போகுதில்ல… ஒன்னி நாந்தேவப்படமாட்டனில்ல…” பொய்யாகக்கோபித்துச்சென்ற ரகினியை ஓடிச்சென்று பின்னாலிருந்து இறுகக்கட்டிப்பித்துக்கொண்டாள்.
“என்னடி…. இறுக்கம் ரொம்ப சாஸ்தியா இருக்கறாப்ல தெரியுது. கட்டிக்கப்போற மாப்ளய நெனைச்சுத்தானே என்னைக்கட்டிப்புடிச்சே…?”
“ஆமா…. அப்படியேதான் வெச்சுக்கவே… போதுமா….? ஒன்னம் வேணுமா….?”
“போதும் போதும். என்ற இடுப்பெலும்பு ஒடைஞ்சிடப்போகுது. கண்ணாலத்துக்கப்புறம் கட்டிக்கப்போறவர கட்டிப்பிடிக்க கொஞ்சம் பாக்கி வெச்சிரு. அப்பத்தானே அவருக்கு குடுக்க வேண்டியத கொறையில்லாம குடுக்கமுடியும்….” மறுபடியும் கலாய்த்தாள் சினேகிதி ரகினி.
“எல்லாஞ்சேரி. பருவத்து வயசுல மாப்பிள்ளை வரப்போறத நெனைச்சு வெக்கமா இருந்தாலும் மனசுல என்னமோ, ஏதோன்னு உறுத்தலாவே இருக்குதுடி….” கவலையோடு சொன்ன மகினியை ஆச்சர்யமாகப்பார்த்தாள் ரகினி.
“என்னாச்சு…? கண்ணாலத்துல ஒனக்கு இஷ்டந்தானே…?”
“கண்ணாலத்துல இஷ்டந்தன்தான். கட்டிக்கப்போறவரு ஆருன்னே தெரியலேன்னு மனசுக்கு கொஞ்சம் கஷ்டந்தான்….”
“பாட்டி காலத்துல கண்ணாலமாயி ஒரு மாசமானாத்தான் புருசனோட மொகத்தையே பாப்பாங்களாம். அது வரைக்கும் குனிஞ்ச தலை நிமிராம இருப்பாங்களாம். தண்ணி வாக்கற போது முதுகு தேச்சுடச்சொல்லித்தான் கூச்சம் போக்குவாங்களாம். மொதராத்திரி நடக்கவே பல ராத்திரி போயிரும்பாங்க. அப்பறம் காஞ்சமாடு கம்மங்காட்டுல மேஞ்ச மாதர பத்தோ பதனைஞ்சோ வருசத்துக்கொண்ணு அதே வேலையா பெத்துப்போடுவாங்களாமா…” ரகினி சொன்னதைக்கேட்டதும் கவலை போய் வெட்கம் பிடுங்கித்தின்றது மகினிக்கு.
பொழுது சாய்ந்ததும் மகினி ஆடுகளையும், ரகினி மாடுகளையும் வீட்டை நோக்கி ஓட்டிச்செல்ல ஆளுக்கொரு பக்கமாய் திரும்பிய போது, திடீரென ஞாபகம் வந்தவளாய் ரகினி ஓடி வந்து காதில் சொன்ன வார்த்தை மகினியை அதிர்ச்சியடையச்செய்தது.
“அதெல்லாஞ்சேரி… மாப்ளய கண்ணுல காட்டாம கண்ணாலத்துக்கு ஏற்பாடு பண்ணறது எனக்கென்னமோ புடிக்கல…. படிக்க புடிச்சிருந்தும் ஆடு மேய்க்க ஆளில்லேன்னு அரைப்பரிச்ச முடியாமையே அஞ்சாவதோடு நீ நிறுத்துன போதும் நானும் எதுத்து பேசுல, மாமம்பையன் ராமசாமி என்னைய கட்டிக்கறேன்னு வந்து கேட்ட போது எனக்கும் புடிச்சுப்போயி ஆசப்பட்டு கேட்டபோது பழைய பகையச்சொல்லி வேண்டான்னு நீ சொன்ன போதும் நானும் எதுத்துப்பேசுல…. இப்ப மாப்ல கருப்பா? சொவப்பா? நெட்டையா? குட்டையான்னு கண்ணுல காட்டாமையே கட்டி வெக்கப்பாக்கறே…. இப்ப எதுத்துப்பேசாம என்னால இருக்க முடியலே…..” தாயிடம் உறுதியாகப்பேசினாள் மகினி.
“என்னடி…. வாயி ஏழு மொழத்துக்கு நீளுது. ஆரு ரகினி சிறுக்கி பாம்பாட்டி மகுடிய ஊதற மாதர உன்ற காதுல ஆடு மேய்க்கிற காட்டுக்குள்ள ஊதி அனுப்பி வெச்சாளா….? கேப்பாரு பேச்சக்கேட்டு ஆடுனீன்னு வெச்சுக்கோ…. காலம் பூராம் கன்னியாவே கெடந்து தான் தொலையோனும் தெரிஞ்சுக்கோ….”
“இத பாரு அதெல்லாம் உங்கோத்தா காலம். பொண்ணுக்கு புடிக்காம கண்ணாலம் பண்ணுனா அப்னாத்தாளா இருந்தாலும் பொண்ணு பெராது கொடுத்தா ஜெயில்ல கழி திங்கோணும் பாத்துக்கோ….” தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தாயிடம் உறுதியாகப்பேசினாள் மகினி.
“ஏனுங்கோ…. இங்க கொஞ்சம் வாங்கோ. நாம பெத்த புள்ள எப்புடி பேசறான்னு வந்து கேளுங்கோ…. ஆலைல போட்டு ஆட்டி வெச்சாலும் காச்சாம சக்கரை ஆகாது கரும்பு பாலு. சாளைல வெச்சு பூட்டி வெச்சாலும் கண்ணாலமாகாம கழியாது கன்னித்தோளுன்னு வெயிலு வேனல்னு பாக்காம ஊருலகமெல்லாந்தேடி நாம செத்துப்போனாலும் நாம பெத்த பொம்பளப்புள்ள கௌரவமா சொத்துக்காரியா வாழுட்டுன்னு மாப்பள பாத்தா ஜெயிலு வேன்ல அனுப்பறேன்னு சொல்லறியேடி….” கண்களில் கண்ணீர் பொங்க தேம்பி அழுதாள் மகினியின் தான் மங்கம்மா.
“சும்மா கள்ளழுகாச்சு அழுகாதே…. ஊர்லயே பெரிய சொத்துக்காரன், என்ற அப்பனோட வயசுக்காரன், ரெண்டு கொழந்தைகளுக்கு அப்பங்காரன், பொண்டாட்டி செத்துப்போன அரக்கெழவன். அவனோட ஊட்டுக்கு சோறாக்கிப்போடற வேலக்காரியாத்தானே ரெண்டாந்தாரமா என்னைய கட்டிக்கொடுத்துப்போட அப்பனும், ஆத்தாளுமா சேர்ந்து முடிவு பண்ணியிருக்கறீங்க….? என்னைய வாக்கப்படப்போற உங்க சொந்த பொண்ணுன்னு நெனைச்சீங்களா? இல்ல விக்கப்படப்போற சந்த மாடுன்னு நெனைச்சீங்களா…? ” கண்களில் கண்ணீர் வடிய தேம்பி அழுதவாறு வாசலில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் குப்புறப்படுத்து குமுறினாள் மகினி.
மகளின் குமுறலைக்கண்டு கவலை கொண்ட மகினியின் தந்தை மாரப்பன் மகளின் காலடியில் போய் அமர்ந்து கண்ணீர் சிந்தினார்.
“என்னைய மன்னிச்சுப்போடு சாமி. சொத்து எங்க கண்ண மறைச்சுப்போடுச்சு. ஒன்னி உன்னையக்கேக்காம, உன்ற குட்டக்காட்டாம மாப்பளய முடிவு பண்ண மாட்டேன். சொத்த விட உன்ற சொகந்தா முக்கியம்…. நீ எங்களுக்கு மகளா பொறந்ததே நாங்க செஞ்ச பாக்யம்…” என தன் மனதைத்தேற்ற பேசியவாறு தனது கால்களைப்பிடித்தபடி தந்தை சிந்திய கண்ணீர் தனது கணுக்கால் மேல் சூடாக விழுந்ததும் குமுறுவதை நிறுத்தினாள் குமரிப்பெண் மகினி.
கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *