சபாஷ் சரியான போட்டி…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 4,660 
 
 

(பழைய கதை – புதிய பாடல்)

வானில் திரியும் காற்றுக்கும்
வருத்தி எடுக்கும் பரிதிக்கும்
வீணில் ஒருநாள் சண்டையாம்!
வீரர் யாரெனச் சண்டையாம்!

சாலை தன்னில் நடந்தஓர்
சப்பையான மனிதன்மேல்
சக்தி தன்னைக் காட்டிட
சண்டை போட நினைத்தன!

சப்பையான மனிதன்மேல்
சால்வையொன்று இருந்தது
சால்வை தன்னைக் கழற்றித்தம்
சக்தி காட்ட நினைத்தன!

சப்பையான மனிதனின்
சால்வை கழற்றக் காற்றுமே
குப்பென அடித்து வீசியே
சால்வை தன்னை ஈர்த்தது!

மனிதன் தனது கைகளால்
மார்பிலிருந்த சால்வையை
பிணைத்துக்கொண்டு இறுக்கமாய்
விரைந்து நடக்க லாயினன்!

கண்ட பரிதி கடுமையாய்
கதிரை வீசிக் கொடுமையாய்
வியர்வை வடிக்க வைத்தது
வெம்மை தன்னைக் கொடுத்தது.

மனிதன் அந்தச் சால்வையை
மார்பிலிருந்து வேகமாய்
கழற்றிக் மடித்துக் கக்கத்தில்
இறுக்கிக் கொண்டு நடந்தனன்.

கண்ட காற்றுதன் தோல்வியை
கதிரிடம் ஒப்புக் கொண்டது!
சண்டை போட்டோம் வீணில்நாம்
கண்டேன் எனது சக்தியை..!

சூடும், காற்றும் மனிதனைச்
சுகத்தில் வைக்க மட்டுமே
போடும் சண்டை தன்னிலே
போர்க்களமாகும் உலகமே!

உலகில் உள்ள யாவரும்
ஒருவருகொருவர் உதவியே
உண்மையாக வாழ்ந்திடில்
என்றும் துன்பம் இல்லையே!

‘நானே!’ என்னும் எண்ணமே
நாட்டில் தீமை பண்ணுமே!
ஏனோ சண்டை நமக்குள்ளே?!
இருப்போம் ஒன்றாய் என்றைக்கும்!

என்றே இரண்டும் நட்பாக
இனிதே சென்றன அன்பாக
நன்று இதைநாம் நெஞ்சத்தில்
நாளும் பதித்து உயர்வோமே!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *