39 சைஸ்
இதை இப்போ என்ன செய்யட்டும்?
பார்த்து பார்த்து வாங்கி வந்ததாச்சே.
யாருக்கு கொடுக்கமுடியும்?
அப்படி யாருக்காவது எடுத்துக் கொடுக்க
மனசு வருமா?
ம்கூம்.. மனசை பிழிஞ்சி சக்கையாக்கி
உயிரைக் காய வைப்பதில்.. என்ன கிடைக்கிறது?
இதுதான் அவன் விருப்பமா!
இல்ல இல்ல.. அவன் கட்டாயம் வருவான்..
எப்படியும் வந்திடுவான்.
‘நான் வரமுடியாது”
“உன்னைச் சந்திக்க விருப்பமில்லை”
அவன் ரொம்பவும் தெளிவாகத்தான் குறுஞ்செய்தி
அனுப்பி இருக்கிறான்.
ஆனாலும் எதை வைத்துக்கொண்டு அவன்
வந்துவிடுவான் என்று காத்திருக்கிறேன்!
அவனுக்காக தானே இந்தப் பயணமே.
இது அவனுக்கும் தெரியும் தானே.
புறப்படும் வரை காத்திருப்பதாக சொல்லி
சொல்லி காந்தம் போல இருந்தவன்
ஏன் விலகிவிட்டான்?
எது விலக்கி விட்டது?
யோசிக்க யோசிக்க மண்டைப் பிளந்து
அதிலிருந்து அவன் சொன்ன ஒவ்வொரு
சொல்லும் என்னைக் கொத்தி தின்பதை
முகமெல்லாம் ரத்தம் வடிவதை
கண்களைக் கொத்தி குருடாக்கி
நடுத்தெருவில் தள்ளிவிட்டிருப்பதை..
மெல்ல மெல்ல
கண்கள் இருண்டு போகிறது.
மெதுவாக அங்கிருந்த இருக்கையில் அமர்கிறேன்.
ஏசி குளிரில் இருக்கை குளிர்ந்துப் போய் என்னை
உறைபனியில் தள்ளுகிறது.
என் பின்னால் வந்து நின்று தோளைத் தட்டுகிறான்.
சிலிர்த்துப் போகிறது என் உடல்.
கால்கள் குளிரில் மரத்துப் போகின்றன.
ஓவென கதறி அழ வேண்டும் போலிருக்கிறது.
பயணிகள் அனைவரும் சூட்கேசுகளை எடுத்துக்
கொண்டு வெளியில் போக ஆரம்பித்துவிட்டார்கள்.
நானும் என் சூட்கேசும் அனாதையாக.. கிடக்கிறோம்.
மெல்ல இருள் கவிகிறது.
என்னைச் சுற்றி பூதகணங்கள்.. கடித்து தின்ன
காத்திருக்கின்றன. காற்று எச்சிலைத் துப்புகிறது.
ச்ச்சீ..
கைப்பையை திறந்துப் பார்க்கிறேன்.
ஒரு 500 ரூபாய் நோட்டு, கொஞ்சம் சில்லறை..
பத்திரமாக காந்தி நோட்டைத் திருப்பி திருப்பி
பார்த்துக் கொள்கிறேன். 500 ரூ.. போதுமா. போதும்.
ஏன் அவன் வரவில்லை..
விளையாடுகிறானா..
கையில் போனை எடுத்து வைத்துக்கொண்டு
திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஒரு கப் டீ குடித்தால் நல்லா இருக்கும் போலிருக்கு.
டீ விலை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லையே.
இருள் இன்னும் இன்னும் கனமாக கவிந்து கொண்டிருக்கிறது.
அவன் வரப்போவதில்லை என்ற உண்மையை
ஜீரணித்துக் கொள்ள முடியாமல்
டாக்சியில் ஏறி உட்கார்ந்து கொள்கிறேன்.
எப்படியோ நினைவிலிருந்த தோழியின் முகவரியை
சொல்லிவிட்டு டாக்சியில் கண்மூடி உட்கார்ந்திருக்கிறேன்.
டாக்சி டிரைவர் என்னவெல்லாமொ பேசிக்கொண்டே
வருகிறான். தோழியின் வீடு வந்துவிடுகிறது.
நல்லவேளை அவளிடம் நேரம் கிடைத்தால்
உன்னைப் பார்க்க வருவேன் என்று சொன்னது
நல்லாதாப் போச்சு. அவள் கீழே இறங்கிவந்து
என்னைக் கட்டிப்பிடித்துக் கொள்கிறாள்.
என் உடல் நடுங்குவதை அவள் மெல்ல உணர்வதற்குள்
அவள் அணைப்பிலிருந்து விடுபட்டுக் கொள்கிறேன்.
சூடான தோசையும் ஒரு கப் தேனீரும் ..
தெய்வமே.. எனக்கு ஒரு கப்சாய் வடிவில் வந்த மாதிரி
தொண்டை வறண்டு செத்துக்கொண்டிருந்த உயிர்
கொஞ்சம் கொஞ்சமாக தலையைத் தூக்கிய மாதிரி..
அவன்.. ஏன் வரவில்லை..
அவள் வீட்டு எண்ணிலிருந்து அவன் கைபேசிக்கு
போன் போட்டுக்கொண்டே இருக்கிறேன்
ரிங்க் போகிறது.. .. அவன் எடுக்கவே இல்லை.
என் கைபேசியில் குறுஞ்செய்தி.. வந்தது.
‘உன்னொடு பேச விருப்பமில்லை”
அதற்கு மேல் ஒரு சொல் இல்லை.
ஏன் இதெல்லாம் நடக்கிறது.. எனக்கு எதுவுமே
புரியவில்லை. பாத்ரூமுக்கு போய் கதவைப்
பூட்டிக்கொண்டு அழுகிறேன்.
நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கு..
தூக்கம் வரமா இன்னிக்கு.. இந்த இரவை
எப்படி கழிக்கப்போகிறேன்னு பயம் வந்திடுச்சி.
பிரஷர் மாத்திரையை போட்டுக்கொண்டு வராத
தூக்கம் வரப்போவதாக பாவனை செய்து கொள்கிறேன்.
அவளும் ரொம்ப டயர்டா இருக்கே.. தூங்கு குட் நைட்
என்று சொல்லிவிட்டு மூடுவதற்கு ஒரு போர்வையைத்
தருகிறாள்..
போர்வையை வைத்து முகத்தை மூடிக்கொள்வது
ரொம்பவும் பாதுகாப்பாக இருக்கிறது.
இரவு மணி 3.. தூங்கிட்டேனா.. மெதுவா எந்திருச்சி
போனை பார்க்கிறேன். ம்கூம் அவன் எதுவும் அனுப்பல.
அவன் தூங்கிட்டான் நிம்மதியா தூங்கிட்டு இருக்கான்..
இன்னிக்கு நடந்தெல்லாம் கனவா ..
கனவில் ஏன் இப்படி எல்லாம் நடக்கனும்?
எனக்கு எதுவும் புரியவில்லை.
மறு நாள் அவன் வரக்கூடும்.
கட்டாயம் வருவான்.
விடிந்ததும் கைப்பேசியை பார்த்துக்கொண்டே
கிளம்பினேன்.
வருவான்.. கட்டாயம் வருவான்..
வந்து வாசலில் காத்திருப்பான்.
அதுவும் அவன் வாங்கி இருக்கும் புதுக்காருடன்
என்னை அருகில் அமர்த்தி அழைத்துச் செல்ல
வருவான்.. அப்படித்தானே சொல்லி இருந்தான்..
வருவான்..
இப்படி என்னைப் படுத்துவதில் அவனுக்கு
இனம்புரியாத எதோ ஒரு கிக் கிடைக்கிறதோ..
அவன் எப்போதும் இப்படித்தான்..
எதிர்ப்பார்க்காத போது எல்லாம் செய்வான்.
எதிர்ப்பார்த்து காத்திருக்கும் போது
யாரோ மாதிரி கடந்து சென்றுவிடுவான்..
எப்படியும் இன்று வருவான்..
இந்த நினைப்பே சுகமாக இருந்தது.
அவனுக்குப் பிடித்தமான வெளிர் மஞ்சள் நிற
புடவையை எடுத்து உடுத்திக்கொண்டபோது
அவன் என்ன கலர் சட்டைப் போட்டிருப்பான்..
இவ்வளவு ஆண்டுகள் கழித்துப் பார்க்கிறோமே
கொஞ்சம் குண்டாகி இருப்பானோ..
காதோரம் முடி நரைத்திருக்குமோ..
எப்படி இருப்பான்..
எப்படி இருந்தாலும் அவன் என்னவன் அல்லவா..
‘நான் என்றும் உன்னவன் தான் டீ செல்லம்”
என்று அவன் குரல் காதில் ஒலிக்கிறது..
அதைக் கஷ்டப்பட்டு ஆஃப் செய்து கொண்டு
தோழியிடம் சொல்லிவிட்டு வெளியில் வரும்போது
மணி 9 ஆகிவிட்ட து.
கைப்பையைத் திறந்து பார்த்துக் கொள்கிறேன்.
டாக்சிக்கு ரூ 350 கொடுத்த து போக மீதி ரூ 150
கொஞ்சம் சில்லறை மட்டும் இருந்தது.
இந்தச் சில்லறையை வைத்துக்கொண்டு இந்த ஒரு
நாளை எப்படி கடத்துவது?
இன்னிக்கு இண்டர்வியு.. போகவா வேண்டாமா
போனாலும் என்னால் ஒழுங்காக செய்ய முடியுமா?
உன்னை விட்டால் வேறு யாருக்கு இந்த வேலைக்கான
தகுதி இருக்கிறது? கட்டாயம் உனக்கு கிடைக்கும்.
இண்டர்வ்யு முடிஞ்சி அப்படியே உன்னை என்னோட
பார்ம் ஹவுஸ் தோட்டத்திற்கு அழைச்சிட்டு போறேன்.
அங்க தான் .. இருக்கு உனக்கு..”
அவன் போன வாரம் அனுப்பிய மெசஜ்.
இன்னும் அதன் ஈரம் காயவில்லை. அவன் எப்படி
மறந்தான்?
ஆட்டோகாரன் மீட்டர் போட்டு வர தயாராக இல்லை.
அவன் 250 ரூ கேட்டான்…
ம்கூம்.. எப்படி பார்த்தாலும் கையில் வச்சிருக்கிற
ரூ 150 சொச்சத்தை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய
முடியாது.
டிரெயினில் போனால் என்ன?
நானென்ன டிரெயினில் போகாதவளா!
கூட்ட நெரிசலில் பயணிப்பதும் அவர்களில் ஒருத்தியாக
இருப்பதும் எனக்கு பழகிப்போன வாழ்க்கைதானே.
டிரெயினில் ஏறியதும் முகத்தில் பட்ட காற்று
மெல்ல மெல்ல உயிர்த்துடிப்பை தெளித்துக்
கொண்டே இருந்தது.
இண்டர்வ்யுக்கு பலர் காத்திருந்தார்கள்.
என் முறை வந்தது.
மெல்ல கதவைத் திறந்து கொண்டு நுழைந்தேன்.
அந்த மேசையில் அவன் பெயர் எழுதி இருந்தது.
அவன் பெயரைப் பார்த்தவுடன் எனக்குள்
இருந்த அவள் சிலிர்த்து கொண்டு ஒரு சிறுத்தையைப்
போல எழுந்து கொண்டதை உணர்ந்தேன்.
என் பதில்கள் அந்தக் கூட்டத்தை குலுக்கியது.
அவன் பெயரில் இருந்த அவர் கண்ணாடியை
எடுத்து துடைத்துக் கொண்டார்.
என்னை நோக்கி அவர் புன்னகை செய்தார்.
அந்தப் புன்னகையை வாங்கிக் கொள்ளவா
அங்கேயே விட்டுவிடவா.. புரியவில்லை.
என்னை செலக்ட் செய்திருப்பதாகவும்
கொஞ்ச நேரம் காத்திருக்கும்படி சொன்னாள்
அந்த ஹாலில் இருந்தப் பெண்.
செலக்ட் ஆனதில் சின்னதா ஒரு சந்தோஷம்.
எப்போதுமே கணக்கு விருப்பமான பாடம் தான்.
பரீட்சை எழுதும்போதும் சரி.. கணக்கு மட்டும்
என்னை நிமிர்த்தி விடும்.. அப்படி ஒரு கணக்கு
பெருமிதம் உண்டு. ஆனாலும் வாழ்க்கை கணக்கு
வேறு என்பதை அவன் அடிக்கடி ஒரு பூஜ்யத்தைப்
போட்டு எனக்குப் புரிய வைத்துக்கொண்டே இருக்கிறான்.
நான் தான் புரிந்து கொள்ளவில்லையோ..
இல்லை புரிந்தும் புரிந்து கொள்ள மறுக்கிறதோ
இந்தப் பாழும் மனசு..
எப்படியோ கணக்கு டீச்சர் வேலைக்கு
செல்கட் ஆனதில் மகிழ்ச்சி தான்.
செலக்ட் ஆகாவிட்டால் அது என்னை என்
அவளை அடிச்சிருக்கும்.
இப்போ அவள் அடிவாங்கல. அதுபோதும்.
மெல்ல அந்த ஹாலில் இருந்து வெளியில்
வந்தேன்.
அவனிருக்கும் ஊரில் இனி எப்படி இருக்கமுடியும்?
யு கேந் னாட் மீட் மி. ஐ வில் நாட் மீட் யு”
துருவங்கள் துருவங்களாக மட்டுமே தான்
இருக்க முடியும். இருக்க வேண்டும்.
வெளியில் வந்து டிரெயினைப் பிடிக்கனும்.
அதற்குள் பசி வயிற்றைக் கிள்ளியது.
ரூ 20க்கு வேர்க்கடலைச் சூடா பொட்டலம் வாங்கி
அதை ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடும் போது
பசி அடங்கியதா தூங்கியதா தெரியல.
பையிலிருந்த பாட்டிலை எடுத்து தண்ணீரைக்
குடித்து தொண்டையை நனைச்சப்போ
கொஞ்சம் இதமா இருந்திச்சி.
இன்னும் நேரமிருக்கிறது.
டிரெயினைப் பிடிக்கும் வரை எப்படியும்
நேரத்தைக் கொன்றாக வேண்டும்.
மாலை வெயில் சுள்ளென்று முகத்தில் படும் போது
கண்கள் கூசுகிறது.
மெரினா பீச் வழியாக போகும் பேருந்து
27 ..ஹெச் ஆ அல்லது டி யானு தெரியல..
மெரினா கடற்கரைக்குப் போகும்னு மட்டும்
தெரிஞ்சிது. ஓடிப்போய் அதில ஏறின பிறகு
தான் ஏன்டா இதில ஏறினோம்னு மனசு
படபடக்க ஆரம்பிச்சுது. கடற்கரைக்கு எதிர்த்தாற் போல
இருக்கிற மாநிலக் கல்லூரி பெஞ்சு..
அதில இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிற அவனோட
நிழல் என்னைத் துரத்தினா என்ன செய்யறது..?
அந்தப் பக்கமே திரும்பாமா கடற்கரை ஓரமா
நடந்திடலாம்னா… கண்ணு என்னவோ அந்தக்
கம்பீரமான கட்டிட த்தைப் பார்ப்பதும்
பட்டென திரும்பிக் கொள்வதுமாக ஒரு
நாடகம் நடத்திக் கொண்டே என்னோட
நடந்து வந்தது.
ஒருவழியா அண்ணாவைத் தாண்டி எம்ஜியாருக்கிட்ட
வர்றப்போ.. அந்தப் பெண்ணோட சமாதி..
என்னை ஒரு நிமிடம் கதிகலங்க வச்சிடுச்சி.
இதுவரைக்கும் அந்தப் பெண்ணைப் பற்றி
அப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்லை.
பக்கத்தில் நெருங்க நெருங்க அந்தப் பெண்ணை
எம் ஜி ஆர் இறுதி ஊர்வலத்தில் அந்த வண்டியிலிருந்து
தள்ளிவிட்ட காட்சி மீண்டும் மீண்டும்
கறுப்பும் வெள்ளையுமா ஓடிட்டே இருந்தது.
அடிப்பாவி… இந்த இட த்தில இந்த மனுஷன்
கூட வந்து உறங்குதியே..
ஊர்க்கூடி உன்னைத் தூக்கிவந்து
உன்னை இந்த இடத்தில
விட வச்சியே..
இது தான் உன்னோட வெற்றியா..
இதுக்காகத்தானே இந்த இடத்திற்காகத்தானே
கடைசிவரை நீ போராடினாயோ..
என்னவோ .. அவளுக்காக அழ வேண்டும்
போலிருந்திச்சு..
அது அவளுக்காக அழுவது மட்டுமல்ல
அழதப் பிறகுதான் மனசும் உடம்பும்
மெல்ல மெல்ல நடக்கிற தெம்புக்கு வந்தது.
இந்த அழறது மட்டும் வாய்க்கிலைனா ஒவ்வொரு
பொண்ணும் என்னாவாகி இருப்பாள்..?
கற்பனை செய்யவே முடியல.
அழறது ரொம்பவும் சுகமானது தான்னு
அப்போ தான் புரிஞ்சுது.
அந்தப் பெஞ்சில் உட்கார்ந்து நல்லா அழுது
அழுது புடவை முந்தாணி கசங்கி
ஈரமாகி ..
கண்ணீரும் மெரீனா கடற்கரையின்
உப்புக்காற்றும் கலந்து கன்னத்தில்
யாரோ அறைஞ்ச மாதிரி வடுவடுவா
.. இருக்கட்டுமே..
இப்போ அதனால் என்ன?
இனிமே யாருக்காக இந்த கன்னத்தின்
அழகும் கண் மையின் அழகும்..
மெல்ல இருட்ட ஆரம்பித்தது.
ஆணும்பெண்ணுமாக கடற்கரை நிரம்பிக்
கொண்டே இருந்தது..
அங்கே பார்த்த ஒவ்வொரு பெண்ணிடமும்
போய் இதோ இவன் வரச்சொல்லிட்டு
வரலைனா என்ன செய்வே..? னு கேட்கனும்
போல ஆசையா இருந்திச்சி..
அதனால் என்ன?
அடுத்த முறை வருவான் என்று
ஒருத்தி சொல்லலாம்..
யாருக்குத் தெரியும்..
இவன் வராவிட்டால் என்ன..
வருகிறவன் ஒருவன் இருப்பான் தானேனு’
இன்னொருத்தி சொல்லலாம்.
வராவிட்டால் எனக்கென்ன..
அவனுக்குத் தானே பேரிழப்பு
என்றும் சொல்லலாம்..
சொல்லலாம்ம்ம்..
ஆமாம்..
அவனுக்குத் தானே பேரிழப்பு..
இப்படி சொல்லிக்கிறது கூட எவ்வளவு
ஆறுதலா இருக்கு..
இழப்பு ..இருவருக்குமானது..
என்ற புரிதலை அடைவதற்குள்..
இருட்டிவிடுமோ..
மழை தூற ஆரம்பித்திருந்தது.
தூறலில் நனைஞ்சா நல்லா இருக்குமே..
புடவை நனைஞ்சிட்டா..
அய்யய்யோ.. வேற மாற்றுப்புடவைக்
கொண்டுவரவில்லை என்பது அப்போது தான் நினைப்பு
வந்துச்சு.
இருள் கவியும் போதெல்லாம்
அவன் ஏன் வரல இந்தக் கேள்வி
விசுவரூபமெடுத்து என்னைத் துண்டு துண்டா
பிச்சி திங்கற வலியை மட்டும் தூக்கிச் சுமந்து
கொண்டே ..
“அவன் ஏன் வரல”
இப்போ அவனுக்காக வாங்கிட்டு வந்திருந்த
இதை என்ன செய்யட்டும்?
மழையில் நனைந்து நடுங்கி அந்த டிரெயின்
ப்ளாட்பார்ம் அடியில் படுத்திருந்தவனைப் பார்க்க பாவமா
இருந்திச்சி..
அவன் மேலே போடலாமா…
ம்கூம் மனசு வரலை.
அந்தச் சட்டையில் இருந்த விலை டேக் ரூ 4499/
அதைக் கிழிச்சிட்டு அந்தக் கிழவன் மேலை போட்டுட்டு
வந்திருக்கலாமோ..
குளிரில் நடுங்குபவனுக்கு ஆடை தானே முக்கியம்?
முடியல..
அவனுக்குனு வாங்கியதை வேறு எவன் மேலயும்
போட்டு விட முடியுமா..? போட முடியலயே…
அதுக்கு விலை மட்டும் காரணமில்லை.
ஆனாலும் கொடுத்த விலை ரொம்ப அதிகம் தான்.
மாத வருமானமே எழாயிரம் தான் வருகிறவளுக்கு
அது பெரிய செலவு தான்…
தகுதிக்கு மீறிய ஆசை..
சட்டையின் விலையா சட்டைக்காரனா..
இதற்கான விலையை இன்னும் 6 மாதங்கள்
நான் கொடுக்க வேண்டி இருக்கும்.
எப்படியும் சமாளிச்சிடலாம்..
ஆனா..
அந்தச் சட்டையை சுமந்து கொண்டிருப்பதை
என்ன செய்வது?
இதை வாங்கும் போது ஏனோ இதெல்லாம்
தோணலை. அப்போ அப்படி யோசிக்கிற மனநிலை
இல்லை தானே..
அவன் வந்திருந்தா.. வந்திருந்தா..
அவள் அவளாகவே திரும்பி இருக்க முடியுமா?
நல்லவேளை.. அவள் அவளாகவே கடைசிவரை.
ஆனா அதுக்காக மனசு ஏன் தினம் தினம்
அழுது தொலைக்கிறது?
அந்த அழுவுணி ..அவள்
இரண்டு பேரும் இரட்டைப் பிறவியாய்..
ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டும்
ஏசிக்கொண்டும்.. ஒருவருடன் ஒருவர் போராடிக்
கொண்டும்..
**
இரவில் தூக்கத்தில் அழுது கொண்டே இருப்பது
அவளுக்கு எரிச்சல் தருகிறதோ என்னவோ..
இப்போதெல்லாம் அவள் என்னுடன் அடிக்கடி
சண்டை போடுகிறாள்..
என்னைத் தூக்கி வீசுவதில் முனைப்பு காட்டுகிறாள்..
எப்போதாவது என் அழுகையின் கனமும் ஈரமும்
தாங்காமல் அவளும் ஆடிப்போய்விடுகிறாள்
என்பதை அவள் ஒத்துக்கொள்வதில்லை.…
அவள் என்னருகில் வரும் போது
என் கண்ணீரின் சூடு அவளையும் எரிக்கிறது.
அவள் என் தலையை
எடுத்து தன் மடியில் வைத்துக் கொள்கிறாள்.
ஒவ்வொரு கதையாக சொல்லுகிறாள்.
காளிதாசனின் சகுந்தலையில் ஆரம்பித்து
கடற்கரையில் காத்திருந்த ஆதிரை வரை
அவள் சொன்ன கதைகளில் எல்லாம்
வரும் பெண்கள் காத்திருக்கிறார்கள்..
காலம் காலமாய் காத்துக் கொண்டிருப்பதாகவே
கதைகள்…
கதைகளில் வரும் அவள்களுடன் சேர்ந்து அவளும்
“ஏன் வரல.. அவன் ஏன் வரல”
தூக்கத்தில் ஒவ்வொரு சொல்லாக உதிர்கிறது.
எந்த மொழியில் கேட்டாலும்
அவன் ஏன் வரல என்பதற்கு பதிலில்லை.
வரமாட்டானா..
வரவே மாட்டானா..
அவளிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
அதற்கு மட்டும் அவள் பதில் சொல்லாமல்
இருட்டில் கரைந்துவிடுகிறாள்.. .
என் நெற்றியில் கையை வத்து பார்க்கிறாள்.
கொதிக்கிறது..
என் முதுகில் மெல்ல தடவிக்கொடுக்கிறாள்.
என் மார்பு ஏறி இறங்கி மெல்ல மெல்ல
என் சுவாசம் ..அடங்குவதற்குள்..
அவள் என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள்
மெலிந்து போன என்னுடலை கட்டிலில்
கிடத்திவிட்டு.. அவள் சன்னல் கதவின்
திரைச்சீலையை இழுத்து விடுகிறாள்.
இருள் கவிந்த அறையில் கொஞ்சம் கொஞ்சமாக
அமுதைப் பொழியும் நிலவின் வெளிச்சம்..
அவள் உடலையும் உயிரையும் வருடிக்
கொடுக்கிறது.
அவன் வரவில்லை.
அவன் வருவானா தெரியவில்லை.
அவள் அந்த 39 சைஷ் சட்டையைப் பிரித்து
அந்த விலையைக் கிழித்து எரிகிறாள்.
அந்தச் சட்டையை எனக்கு மாட்டி விடுகிறாள்.
குறுகி சிறுத்துப்போன என்னுடலுக்கு அந்தச் சட்டை
தொள தொளனு இருக்கு.
பெரிய மனிதர்களுக்கான ஆடைகள் எப்போதுமே
சின்ன சின்ன மனிதர்களுக்குப் பொருந்துவதில்லை.
அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு
பனிப்படர்ந்த இருளில் என்னைத் தூங்க வைக்கிறாள்..
மெல்ல கண்களை மூடிக் கொள்கிறேன்
39 சைஷ்..
அவன் என்னை இறுக அணைக்கிறான்.
முத்தமிடுகிறான்.
என் ஆவி துடிக்கிறது.
உன்னைவிட மாட்டேன்.. நீ என்னவள்..என்னவள்..
மூர்க்கமாக என் உடல் மீது அவன் ..
நான் அவனைத் தள்ளிக்கொண்டு
விழித்துக் கொள்கிறேன்.
என்னுடலில் அவள் போட்டுவிட்டிருந்த அந்த
39 சைஸ் சட்டையை வேகமாக க் கழட்டி வீசுகிறேன்.
அவன் சிரிக்கிறான்.
அந்தச் சட்டை அவனுக்குச் சேரவில்லை.
அவன் சைஸ் மாறிவிட்டது.
காலம் எல்லாத்தையும் மாற்றிவிட்டதோ.
39 வருடங்கள் ..
காத்திருந்துவிட்டேன்.
இந்த ஒரு சட்டையை அவனிடம்
கொடுப்பதற்கு.
இருவருக்கும் நடுவில் இருவருக்கும் பொருத்தமில்லாமல்
அந்தச் சட்டை 39 சைஸ்…
போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.
இனி..
இப்படி கனவுகள் வருவதிலிருந்து தப்பித்துக் கொள்ள
வேண்டும்.. அதுவும் நவீன கவிதைகள் மாதிரி
கனவுகள் வந்து தொலைக்கின்றன..
முகத்தை வேறுபக்கமாக திருப்பிக்கொண்டேன்.
அவன் ஏன் வரல..
ஏன் வரல.. கண்ணீர் விட்டு அழுவது
இப்போ எல்லாம் சுகமா இருக்கு..
கண்ணீரே ஒரு விதமான மயக்கமா மாறி
தூங்க வைக்கிறது..
39 சைஸ்..மெல்ல விரிகிறது.
ஒரு பாராசூட் போல நீல நிற ஆகாசத்தில்
என்னைத் தூக்கிக்கொண்டு பறக்கிறது…
மெல்லிய சிறகு ஒன்று.. காற்றில் படபடக்கிறது..