வேலி முள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2026
பார்வையிட்டோர்: 10 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கூரை வீட்டு நடையில் அயற்சியும் குழப்பமுமாய் உட்கார்ந்திருந்த மாரிக்காளை, பன்றிக்குட்டி மாதிரி வீங்கிப்போயிருந்த வலது கால் பாதத்தையே பார்த்தான். அந்தக் கால் ஊன்றிய நிலையில் கூட நடுங்குகிறது. கண்ணில் நீரின் உறுத்தல். 

வேலிமுள் தைத்தது… ஜலம் வைத்து வீக்கம் கண்டது. வீக்கம் விஸ்தீரணமாகி, பாதத்தின் மேல்ப் பகுதிக்கும் பரவி… புடைத்து விட்டது. 

வலி என்றால் வலி… அப்படி வலி. உயிரே சுண்டியதிர்கிற மாதிரியான வலி. காலை எடுத்து ஓர் எட்டுக் கூட வைக்க முடியவில்லை. 

வேலிமுள் இப்படி ஆளை முடக்கிப் போடும் என்று கனாக் கூட கண்டதில்லை, மாரிக்காளை. 

இவனது அன்றாட வேலையே வேலி மரங்களை வெட்டி விறகாக்கி, டீக்கடைகளுக்கும், சத்துணவுக் கூடத்திற்கும் விலைக்குப் போடுவதுதான். 

சீமைவேலி மரமே இவனைக் கண்டால் நடுங்கிச் சாகும். நூறு நூறு நீளக் கைகளைத் தாழ்த்தி பணிவு காட்டும். 

எந்த வறட்சிக்கும் அசராதது வேலி. காற்றிலிருக்கும் ஈரப்பதத்தைக் கூட உறிஞ்சி உயிர் வளர்க்கும் புத்திசாலி மரம். மளமளவென வளரும். சடங்கான பெண் பிள்ளை போல பார்த்திருக்க வித்தியாசம் காட்டி செழிக்கும். 

வெட்ட ஆள் வந்து விட்டால்… முட்கிளைகளை ஆட்டி லேசுமாசாய் எதிர்ப்புக் காட்டும். துரட்டியால் முட்கிளை களைச் செதுக்கி ஒதுக்கி விட்டு, அரிவாள் முன்னேறி விட்டால், பணிந்துவிடும். மற்ற மரங்கள் அரிவாளை ஓங்கிப் போட்டாலும் ‘ணங்க்’கென்று எகிறும். லேசில் பணியாது. வேலி மரம் அப்படியல்ல. அரிவாளை ஓங்கி ஒருச்சாயலாய் இறக்கினால், வெண்ணெயில் வெட்டு விழுந்த மாதிரி… சதக்கென்று பாயும். வெட்ட வெட்ட ஆசையாக இருக்கும். மளமளவென்று விறகு சாயும். 

மாரிக்காளை எட்டு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவான். அரைக்கால் டவுசர், கலர் போன கலர் பனியன், காலா வதியான பழைய பூட்ஸ், வட்டக் கட்டாகக் கட்டிய தலைப்பாகை. இதுதான் அவன் கோலம். துரட்டியும், குத்துக் கம்பியும் (கடப்பாரை தான். கூர், சற்று அகல மாயிருக்கும்), வெட்டரிவாளும், மண்வெட்டியும் சாதனங்கள். தூக்குச் சட்டியில் இவனுக்கான பெட்ரோல். கஞ்சி. 

மதியத்திற்குள், மேல்விறகை வெட்டிக் குவித்து விடுவான். முண்டும் முடிச்சுமாக இருக்கிற தூர்களையும் பெயர்த்து விடுவான். 

வேலிமரத்தை நம்பினார் கைவிடப்படுவதில்லை. எத்தனை காலம் வெட்டினாலும் சரி, வேலி மரம் வற்றவே வற்றாது. சமுத்திரம் மாதிரி. தூரைத் தோண்டி எடுத்து விட்டாலும்கூட, மண்ணுக்குள் ஆழத்தில் ஓடிக் கிடக்கிற சல்லி வேர்களிலிருந்து தளிர்த்து, வெளியே வந்து முகம் காட்டி விடும். மஞ்சணத்தி மாதிரித்தான் வேலி மரமும். சாகடிக்கவே முடியாது. வெட்டுப்பட்டு விழுந்தாலும், சிதறிய ரத்தத்துளியின் எண்ணிக்கையில் மறுபடி மறுபடி தோன்றி விடுகிற ராட்சஸன் மாதிரித்தான், வேலி மரம். 

மாரிக்காளை பதினெட்டு வயசில் வெட்டரிவாளை தூக்கியது; இன்று வரைக்கும் வேலி மரம் அவனுக்கு வேலை தந்து கொண்டேயிருக்கிறது. 

மதியத்திற்குள் விறகை வெட்டிச் சாய்த்து விடுவான். நெஞ்சுக்குழி ரோமங்களில் படிந்திருக்கிற ஈரப் புழுதி, வரி வரியாய் வியர்வைப் பெருக்கு. தேகமெல்லாம் ஒட்டி யிருக்கிற பொடிப் பொடி இலைகள். 

வேலிமுள் அவன் உடம்பில் கீச்சாத இடமில்லை. முட்கள் பதிந்து பதிந்து மரத்துப்போன உள்ளங்கையே அம்மி குத்தின மாதிரி இருக்கும். 

அப்போதெல்லாம் ஒன்றும் செய்ததில்லை, முள். “மாரிக்காளைக்கு முள்ளுங்கிற பயமே இருக்காது. முள்ளுன்னா… அவனுக்கு மயில்ரெக்கை மாதிரி” என்று ஊரில் பேச்சு. 

இப்போது, 

உள்ளங்காலில் தைத்த முள்… ஆளையே மடக்கி ஓடித்து மூலையில் போட்டு விட்டது. ஜென்மப் பகையைத் தீர்த்துக் கொண்டது, விஷ முள். 

பார்வதி கோபித்துக் கொண்டு போன மூன்றாவது நாள். சோறு ஆக்கத் தெரியாமல் ஆக்கி, கெட்டுப் போன சோற்றைச் சாப்பிட்டு, வயிறே கோளாறாகி விட்டது. 

வயிற்றுக்குள் மழைக்கால மேக முழக்கம். ‘கடாபுடா வென்கிற இரைச்சல். உடம்பு கட்டுப்பாடு இழந்து விட்டது. 

ரெண்டு மூன்று தடவை ஓடைக்குப் போய்விட்டு வந் தான். தண்ணீராய் பீச்சியடித்தது. உயிரே வற்றிப் போன மாதிரி கைகாலெல்லாம் சோர்ந்து வந்தது. ஒரே அசதி. எங்கடா விழுந்து சாகலாம் என்றிருந்தது. 

வீட்டிற்கும் போக மனமில்லை. பார்வதியில்லா சூன்யம் நெஞ்சில் வந்து அறையும். 

டீக்கடையில் வந்து துவண்டு விழுந்தான், ஈரத் துணியாக. 

“ஒரு டீத் தண்ணி குடப்பா.” 

டீக்கடையில் தூள் பறக்கிற விவாதம். வங்கிகளையே வாயில் போட்டுக் கொண்ட ஹர்ஷத் மேத்தா, நடிப்பிற்கு அதிகத் தொகை வாங்குவதில் ரஜினிக்கு அடுத்து யார் என்கிற ரகரகமான சர்ச்சை. 

எதையும் காதில் வாங்குகிற மனநிலையிலில்லை. மாரிக்காளை ‘பொத் பொத்’தென்கிற வயிறு, கீறிப்போன மண்பானை மாதிரி இடுப்பிலிருந்து துவங்குற ‘மொடு மொடு’ என்கிற இரைச்சல், குறுக்காக ஓடி, முன் வயிற்றில் முட்டலோடு முடிவடைகிற பயங்கரம். 

சூடான பால் டீ போய் வயிற்றில் விழுந்தவுடன், அடி வயிற்றில் முட்டல் மோதல். ஒரு திணறல். பயங்கரமான உந்துதல். 

பதறியடித்துக் கொண்டு ஓட்டமாய் ஓடினான். ஓடைக்கு போகிற வரைக்கும் தாங்காது போல ஒரு நிலவரம். மனசில் கலவரம். ‘ஐயய்யோ… வேட்டியிலே கழிந்து கொண்டு கிடந்தால், சிரிப்பாணிக் கூத்தாகி விடுமே’ என்கிற பதற்றம். 

நல்லது பொல்லதுக்கு கூடுகிற இடத்திலெல்லாம் ஜனங்க இதைச் சொல்லிச் சொல்லி கேலி பண்ணுவார் களே… அதிலும் மாமா மச்சினன்மார் ஜென்மத்துக்கும் இந்தக் கூத்தைச் சொல்லி நையாண்டிச் சிரிப்பு சிரிப்பார்களே… 

அடி வயிற்றுக்குள் புரட்டிக்கொண்டு வந்து முட்டுகிற அவஸ்தை. 

காய்ந்த முள்ளும் முடலுமாய் கிடக்கிற ஓடைக்குள் கண் மூக்கு தெரியாத வெறி வேகத்தில் ஓட்டமாய் ஓடிய போது- 

நறுக்- 

உள்ளங்கால் சதைவரை ஏறிவிட்டது, ஏறிவிட்டது. வேலிமுள். செமித்துப் போன கறுத்த முள். கட்டை மாதிரி. ஒற்றைக் காலில் நின்று முள்ளைப் பிடுங்கப் பார்த்தான். முடிய வில்லை. ஆழமாய்ப் போய்ச் சொருகிக் கொண்டது. 

வேறு வழியேயில்லை. 

உட்கார்ந்துதான் பிடுங்கவேண்டும். குனிந்து உட்கார்ந் தான். அவ்வளவுதான் பீச்சியடித்துவிட்டது. வேட்டியெல்லாம் ஆய்ய்ய்… மனிதக் கழிசல். 

தலைக்கு மேல் வெள்ளம். சாண் போனால் என்ன முழம் போனால் என்ன, இனி. கழிசல் அருவெருப்போடு உட்கார்ந்து முள்ளைப் பிடுங்கினான். பெரிய மல்லுக் கட்டு. ஒரு சொட்டு ரத்தம் கூட வெளி வரவில்லை. 

வேலி முள் தைத்து, ஜலம் வைத்து, வீங்கிப் போய், அந்த ரணத்திலேயே செத்து மடிந்த ஆட்களின் பெயர்களை மனதில் நினைத்துக் கொண்டான். பயச்சிலிர்ப்பு. 

வலி, கடுகடுத்தது. 

கிணற்றுக்குள் போய் குதித்து, குளித்து முடித்து, துணி மணியை அலசிக் கொண்டு வீட்டுக்குப் போனால்- 

முகத்தில் சப்பென்று அறைகிற சூன்யம். பார்வதி யில்லாத வெறுமையின் வேதனை. வீட்டின் சகல இணுக்கு களிலும் பார்வதியில்லாத வெறுமையின் அமங்கலம். குப்பையும் கூளமுமாய் கிடக்கும் வீடு. பச்சைத் தண்ணீர் தெளிக்காமல் புழுதி பறந்து கிடக்கிற முற்றம். கறுத்துப் போய் நீர்க் கறைகளோடு சட்டி பானைகள். கோழிகள் கிண்டி மேய்ந்த குப்பையாக, அடுப்பங்கரை. 

“அந்தப் பாதகத்தி இருந்திருந்தா… வீடு இப்படியா கிடக்கும்? மினுக்கி வைச்ச குத்துவிளக்காயிருக்குமே…” 

கட்டறுந்து பாய்கிற ஏக்க உணர்வு. அவனுள் பாய்ந்து பரவி அவனை வேதனையில் அலைக்கழிக்கிற ஏக்கம். பெருமூச்சுடன் ஈரத்துணியை கொடியில் காயப்போட் டான். காய்ந்து வெடவெடத்துக் கிடந்த கைலியை உருவி உடுத்திக் கொண்டான். குளித்த உடம்பு. எண்ணெய் தேய்த்தால், நல்லது. 

எண்ணெய்ப் பாட்டிலை எடுத்தான், சூன்யம். எண்ணெ யில்லாத பாட்டிலில் மொய்க்கிற சிற்றெறும்பு. 

“அடச்சே! பொண்டாட்டியில்லாத வீடும், ஒரு வீடா? பரதேசி மடந்தான்.” 

எண்ணெய் இல்லாத ஏமாற்றம், பார்வதியை பிரம் மாண்டமாக்கியது. 

கால் கடுத்தது. முள் தைத்த இடத்தில் சுருக்கிடுகிற வலி. இயல்பாய் பாதம் பதித்து நடக்க முடியவில்லை. கெந்திக் கெந்தி நடக்க வேண்டிய சிரமம். முன் விரல்கள் ஊன்றி, அதன் பலத்திலேயே உடல் பாரம் முழுவதும் விரல்களிலும் நச்சரிக்கிற வேதனை, 

ஏன் என்று கேட்பாரில்லை. வலியைப் பற்றி அனுதாப மாய் விசாரிக்க ஒரு நாதியில்லை. பார்வதி இருந்திருந்தால்… இப்படியா நாதியற்றுக் கிடப்பான்? அதையே நினைத்து நினைத்து மாய்கிற மனம்… 

..ஆளை நுட்பமாய் கவனிப்பாள், பார்வதி. மன நிலையில் சிறு உளைச்சல் என்றால் கூட கண்டுபிடித்து விடுவாள். 

“என்ன… ஒரு மாதிரியாயிருக்கீக?” என்று கேட்டுக் குடைந்து விடுவாள். இம்புட்டுக் கெந்திக் கெந்தி நடந்தால்…அம்புட்டுத்தான். என்னவோ ஏதோவென்று பதைத்துப் போவாள். பதறித் துடித்து அவள் உலுக்குகிற உலுக்கலில் முரட்டுத்தனமாய் கொப்பளிக்கிற அன்பு… 

“முள்ளு மேலே போய் எதுக்கு ஏறுநீக? கண்ணு இல்லே? பாத்து போவக் கூடாது? என் உசுரை புடுங்கு துக்கா?” என்று ஆத்திரமும், ஆங்காரமுமாய் சிடுசிடுக்கிற வசவில் வெளிப்படுகிற மனநெருக்கம். பாசத்துடிப்பு. அந்யோந்யம். 

எதிர்ப்படுகிற பெண்களிடமெல்லாம் அடைக் கோழியாய் அங்கலாய்ப்பாள். “இப்படி ஒரு கூறு கெட்ட ஆம்பளையா எனக்கு வந்து வாய்க்கணும்? ஓடைக்குப் போனாத்தான் என்ன? எல்லாரும் போகலே? வரலே? இப்படியா? முள்ளுமேலே காலை வைச்சு, என்னை ரணப் படுத்தணும்? நா வாங்கி வந்த கொடுமை” என்று வாய்க்கும் கைக்கும் புலம்பிப் புலம்பியே வாயாறுவாள். புலப்பம் புலப்பமாயிருந்தாலும்… பதற்றமும் பாசமுமாய் வேலை செய்து கொண்டிருப்பாள். 

ஆதாளஞ்செடியை பிடுங்கிக் கொண்டு வந்து, இணுக்கு இணுக்காக ஒடித்து, அதன் பாலை தைவாயி’ல் ஒத்தி ஒத்தி வைப்பாள். இரும்புக் கரண்டியை அடுப்பில் காய வைத்து, ‘பொறுக்க பொறுக்க’ ஒத்தடம் கொடுப்பாள். மஞ்சள்த் துண்டை அரைத்துப் பொடியாக்கி, வெள்ளைத் துணியில் வைத்து முள் தைத்த இடத்தில் கட்டி விடுவாள். 

அந்தக் கைப்பக்குவம் செய்கிற வேகம், பரபரப்பு, அதில் முகம் காட்டுகிற பரிவு. பொங்கி வழிகிற பாசத்ததும்பல். 

உள் மனத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிப் பாய்ந்து பரவசப்படுத்துகிற அந்த அன்பின் சுகம். பரிவின் ருசி.அடி மனம் வரைக்கும் தித்திக்குமே… 

…அதெல்லாம் இப்ப இல்லை. உணர்ச்சித் துடிப்பு இல்லை. தனக்காக தவிக்கிற ஒரு ஜீவ இதயம் இல்லை. ஏன் என்று கேட்பாரில்லை. செத்துக் கிடந்தாலும், புரட்டிப் பார்ப்பாரில்லை. 

அடப் பாதரவே… இது எத்தனை கொடிய ‘இல்லை?’ மனசின் ஆழம் வரைக்கும் முள்ளாய்க் குத்தி புண்ணாக்குகிற ‘இல்லை.’ வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தையே பரிகசிக்கிற ‘இல்லை.’ 

வீடு முழுக்க கால் நீட்டிப் படுத்திருக்கும் சூன்யம். அசையக் கூட முடியாமல் மாரிக்காளை. பன்றிக்குட்டி மாதிரி வீங்கியிருக்கிற பாதத்தில் ‘விண்விண்’ணென்கிற வலி. ராவும் பகலும் கண்ணை மூட விடாமல் கொத்திப் பிடுங்குகிற வலி. 

தண்ணீர் மோந்து கொடுக்கக் கூட ஒரு நாதியில்லை. சாப்பிட்டாயா என்று கேட்க ஆளில்லை. கூரை முகட் டையே வெறுமையாய் பார்த்துக் கொண்டிருந்த அவனுள், ‘குபு குபு’வென்று எண்ணங்கள். அதை முந்திக்கொண்டு வந்த அழுகை. கதறியழுது விட்டான். 

பார்வதி… பார்வதி… பார்வதி கூரையின் ஒவ்வொரு கம்பந்தட்டையிலும் அவள் முகங்கள்… பாசமும் அன்பும் குழைந்து கனிகிற முகங்கள். 

பாசக்காரி மட்டுமல்ல பார்வதி, ஆசைக்காரியும் கூட. 

பார்வதி அளவு கடந்த லட்சணக்காரி. தென்னந்தூர் மாதிரி திரேகம். உடுக்கு மாதிரி இடுப்பு. மேலும் கீழும் நல்ல விரிவு. லட்சணம் பொருந்திய உருண்டை முகம். அகலக்கண்கள். கண்ணை 

கண்ணை உருட்டி ஓரத்தில் நிறுத்தி குறும்பும், கிறக்கமுமாய் பார்த்தாளென்றால்… உயிரே கிடந்து அதிரும். கனிந்த உதடுகள். 

மாரிக்காளைக்கு பார்வதி ரதி. சக்திக்கு மிஞ்சிய உயிர்ப் பொக்கிஷம். விரலுக்கு மிஞ்சிய மோதிரம். அவள் மீது அவனுக்கு ஒரு மயக்கம். பிரமை. தீராத பயம். 

ராத்திரி தொட்டால் போதும். அப்படிக் குழைவாள். ஆவேசமாய் இழைவாள். பரவசமாகி மோதி அள்ளிக் கொள்வாள். இவன்தான் திணறிப் போவான். மூச்சு முட்டிப் போய்… சுகத்தில் திளைப்பான். தேனில் சிக்கிய எறும்பாக இவனுக்குப் பதறி வரும். 

ஆள் நடந்து வந்தால், தரையே ‘திங்திங்’கென்றுஅதிரும். வஞ்சகமில்லாமல் பாடுபடுவாள். இன்ன வேலை என்கிற கணக்கு இல்லை. ஆண், பெண் சகலரோடும் எல்லா கூலி வேலைகளுக்கும் போவாள். முரட்டு வேலைகளுக் கும் தைர்யமாய் தோள் தருவாள். 

அவள் இருக்கிற இடத்தையே கலகலப்பாக்கி விடுவாள். இழவு வீட்டில் கூட ஒரு சுறுசுறுப்பை உயிர்ப்பித்து விடுவாள். கல்மிஷமில்லாத கேலி கிண்டல். யாரையும் வம்புக்கு இழுக்கிற – உள் நோக்கமற்ற நையாண்டி. வேலைச் சுமை தோன்றவிடாத சிரிப்பும் கும்மாளமும். வேலைத் தளமே உயிரோடு முறுக்காயிருக்கும். 

அவள் வேலை பார்க்கிற இடம் என்றாலே… கேலி கிண்டல் சிரிப்புச் சத்தம்தான். கபடமற்ற வடிகால். 

…அன்றைக்கு அப்படித்தான். 

ஆடிமாசம், மழையில்லாத காற்று பேய்க்கூத்து போடுகிறது. காடுகளில் ஒரு பயிர் பச்சை கிடையாது. ஜனத்துக்கு ஒரு வேலை ஜோலி கிடையாது. கூலிக்கார ஜனங்கள் கூரை நிழல்களில் பேன் பார்த்துக் கொண்டு புரணி பேசி பொழுதைக் கழித்தனர். தீப்பெட்டியா பீஸுக்குப் போகிற பெண்களிடம் தான்… துட்டு நடமாட்டம். 

இவளையும் தீப்பெட்டியாபீஸுக்குக் கூப்பிட்டார்கள். 

“அந்த இடுப்பொடிஞ்ச வேலைக்கு நா வரலை. பொழுதுக்கும் உக்கார்ந்தே வேலை செய்ய நம்மாலே முடியாதைய்யா” என்று மறுத்து விட்டாள். 

பள்ளிக்கூடத்திற்கான கட்டிட வேலை நடக்கிறது. அதில் சித்தாளாய் பார்வதி. இருபது ரூபாய்ச் சம்பளம். 

அன்றைக்கு… 

வேலி விறகை வெட்டி, டீக்கடைக்கு விலை பேசிப் போட்டுவிட்டு, குளித்து ஈரத்துணிகளோடும், வெட்டுச் சாதனங்களோடும் வந்து கொண்டிருந்தான், மாரிக்காளை. 

சாயங்கால வெயில். ஆடிக்காற்று மண்ணை வாரித் தூற்றுகிறது. அதோ கட்டிடக் கட்டுமானம். 

தலை உயரத்திற்குச் சுவர். சாரத்தில் கொத்தனார். ஓடி ஓடித் தண்ணியெடுத்து டிரம்மில் ஊற்றுகிற பார்வதி. ரெண்டு பேர் உதடுகளிலும் சிரிப்பு. கேலி பேசிய முக மலர்ச்சி. 

கொத்தனார் கண்களில் விஷமம். உள் பொதிவுள்ள குறும்பு. காற்றுவாக்கில் பேச்சுச்சத்தம். வெறுங்குடத்துடன் நின்று பேசுகிற அவளின் குரலில் செல்லக் கோபச் சீற்றம். 

“யோவ்… ஒமக்கு ரொம்ப மப்பு.” 

“ஆமாத்தா மப்புதான். யார் மேலே எறக்குறது? யார் விடுவா…?” 

“வீட்லே போய் எறக்க வேண்டியது தானே, ஒம்ம மப்பை?” 

“அவ கெடக்கா, ஜீவன் செத்துப்போய், எலும்புக்குச்சி. அதை வைச்சுக்கிட்டு மாரடிக்க வேண்டியது தான்.” 

“ஆம்பளைக எல்லாம் கொழுப்பேறிப் போய் திரியுதீக. முறையில்லாம நீளுற நாக்கை இழுத்துப் பிடிச்சு நறுக்கணும். அப்பத்தான்… திமிறு ஒடுங்கும்.” 

அவன் சொல்லிக் கொண்டே சிரித்து நகர, கையி லிருக்கும் சிமிண்டுச் சாந்தை உருட்டி குறி பார்த்து கொத்தனார் ஏறிய, அது அவள் பருத்த மார்பில் ‘சொத்’ தென்று விழ… 

“த்தூ, த்தூ” என்று துப்பிக் கொண்டே வேடிக்கைச் சிரிப்பாய் ஓடுகிற பார்வதி… 

மாரிக்காளைக்குள் திகுதிகுவென்று எரிந்தது. உள்ளுக்குள் பற்றிக் கொள்கிற சந்தேக நெருப்பு. 

உழைப்புக் களத்தில் இயல்பாக நிகழ்கிற கிண்டல் விளையாட்டடுத்தானா, இது? சகஜமான கேலிப்பேச்சு மட்டும்தானா? 

…தொட்டால் குழைகிற பார்வதி. ஆவேசமாய் மோதி அள்ளிக் கொள்கிற பரவசம். அவன் அடங்கிய பின்னும் கூட வெள்ளமாய் பாய்ந்து ஆவிச் சேர்கிற பார்வதி… 

மாறி மாறி நிழலாடுகிற உள் நினைவுகள். நினைவு நிழல். இருட்டான நிழல். சகலத்தையும் தப்புத்தப்பாய் காட்டுகிற இருட்டு நிழல். 

அவள் வீடு வந்து சேர பொழுதடைந்துவிட்டது. 

மனக்கொதிப்போடு இவன். கண்டகண்ட நினைவு களின் தாறுமாறான பாய்ச்சல். அவனுள் ஓர் இறுக்கம். இறுக்க அடர்த்தி. அவளை வெறித்து வெறித்து பார்க்கிற பார்வை. கண்ணில் ஒரு வெறுப்பு. அசூயை. 

அவளும் புருசனைப் பார்த்தாள். வழக்கமான புருசனாகத் தெரியவில்லை. அவளுள் குழப்பம். திகைப்பாட்டம். ‘இந்த ஆளுக்கு என்னாச்சு இன்னைக்கு’ என்கிற யோசனை. ‘என்னவோ ஏதோ’வென்கிற பதற்றம் வேறு. 

“என்ன… ஒரு மாதிரியிருக்கீக?’ 

‘ஒன்னுமில்லே” 

“மண்டையடிக்கா?” 

“இல்லே.’ 

“வெறகைப் போட்டாச்சா?” 

“ம்.” 

“எங்க?” 

“டீக்கடைக்கு.’ 

என்னாச்சு மனுசருக்கு? பேச பணம் கேட்கிறது. என்ன இருக்கு மனசுலே? எங்காச்சும் சண்டை சத்தமா? மூஞ்சி இம்புட்டுச் சினசினப்பா இருக்கே? நாழி காணத்தைப் போட்டு வறுத்து விடலாம் போல… 

“யார் கூடயாச்சும் வாய்ச்சத்தமா?” 

“இல்லே.” 

“சாப்டுரிகளா? சோறு வைக்கட்டா?” 

“ம்.” 

மதிய இடைவேளையில் ஆக்கி வைத்த சோறு. வைத்தாள். வட்டிலின் முன் உட்கார்ந்தான். கை, சோற்றில் அளைந்து கொண்டிருந்தது. அவனுள் யோசனை. அனுமான் வாலாய் நீள்கிற கற்பனை. விதம் விதமான ஆபாசக் கற்பனை. 

…குழைகிற பார்வதி. இழைகிற பார்வதி. ஆவிச்சேர்ந்து ஆவேசமாய்த் தழுவி மூச்சுமுட்டச் செய்கிற பார்வதி… 

அவனுள் கொதிப்பு… உலைபானைச் சோறாய் நினைவுச் சளசளப்பு. 

“என்ன யோசனை? சாப்டலியா?” 

“ம்.” 

அவனிடமிருந்து பெருமூச்சு. ஆழ்ந்த உஷ்ணப் பெரு மூச்சு. உளைச்சல்களில் ஊறி நனைந்த அடர்த்தியான பெருமூச்சு. 

நிமிர்ந்தான். மனசின் இறுக்கம் உதடுகளில். பறவை யாடிய கண்கள் அவளிடம் திகைப்போடு வந்து நின்றது.

“தீப்பெட்டியாபீஸுக்குப் போற பொம்பளைகளோட நீயும் போனா என்ன?” 

“எதுக்கு? விடியுறதுக்கும் முந்திப் போய் இருட்டின பெறகு வரணும். யாரு இங்க கஞ்சி காய்ச்சுறது?’ 

“போற பொம்பளைக எல்லாம்?” 

“அவுகளுக்குப் பிடிச்சிருக்கும். காலை நீட்டிக்கிட்டு பொழுதுக்கும் நம்மாலே உக்காந்துருக்க முடியாது. சம்பளமும் பத்து ரூவாய்க்குள்ளே தான் வரும். சித்தாள் வேலைன்னா இருவது ரூவாய் சம்பளம். வீட்டு வேலையும் பாத்துக்கலாம்.” 

“அப்ப….நீ பொம்பளைகளோடு ஆபீஸ் வேலைக்குப் போவ மாட்டே?” 

“எதுக்காக போவணும்?” 

“சித்தாளு வேலைக்குத்தான் போவே?” 

“போனா… என்ன? போவக் கூடாதா?” 

“வேண்டாம்.” 

“எதுக்கு இப்படி கூறுகெட்டுப் பேசுதீக? சம்பளம் இருவது ரூவா. கைச் செலவுக்கு ஆகும். வீட்லே முழங்காலைக் கட்டிக்கிட்டு மூதேவி கணக்கா உக்காந்துருக்கவா?” 

“அப்ப… சித்தாளு வேலைக்குப் போகத்தான் செய்வே?”

“ஆமா, போனா… என்ன?” 

“இருவது ரூபாய்க்காகவா… போற?” 

“பெறவு?” 

“புருசம்மார்க கூட வெளையாட…” 

திகைப்புக்கு மத்தியில் இயல்பாகவே பேசிக்கொண் டிருந்த பார்வதி கடைசி சொல்லில் சட்டென்று மாறிப் போனாள். ஆணி வேரில், இடிவிழுந்த மாதிரி ஆடிப் போனாள். உயிர்வற்றிப் போன மாதிரி… முகத்தில் ஒரு வெறுமை. வெளுப்பு. 

ஒரு சொல், வேலி முள் மாதிரி. ரெண்டு பிள்ளை பெற்றுச் சாகக் கொடுத்த ஏழு வருசத் தாம்பத்யத்தையே பொய்யாக்கிவிட்ட ரணச்சொல். 

அடித்து வைத்த சிலையாய் இறுகிப் போன முகம். பறவையாடாத அவள் கண்கள். சீண்டப்பட்ட நல்ல பாம்பின் சீற்றம். வெளிப்பட விரும்பாமல், உள்ளுறைந்து போன சீற்றம். 

நிலை குலைந்து போன பார்வதி, செத்துப் போன பிரேதக் கட்டையாய் சுவரில் சாய்ந்த பார்வதி. 

ஒரே பார்வையாய் அவனைப் பார்த்தாள். நேருக்கு பார்த்தாள்.நேருக்கு நேராய் பார்த்தாள். சாக்கடையில் புரண்டு விட்டு கிட்ட வந்த பன்றியைப் பார்க்கிற பார்வை. 

அவ்வளவுதான். பேச்சில்லை, மூச்சில்லை. வெடித்துக் கதறிய அழுகையில்லை. கொதித்த உணர்வுகளெல்லாம் உறைந்து இறுகிக்கொள்ள, ஒரு சொட்டுக் கண்ணீர்கூட சிந்தவில்லை. அப்படியே… சரிந்து படுத்துவிட்டாள். 

அழுக… புலம்ப… பேச… இனி என்ன இருக்கு? விடிந்து பார்த்தால்… ஆளைக் காணோம். 

வீங்கிப் போயிருந்த பாதத்தின் மேல் சொட்டென்று சொட்டடித்து தெறிக்கிற கண்ணீர்த்துளி. 

உடைந்து நைந்து போன மாரிக்காளையின் மனசு, நனைந்த காகிதமாய் கசந்து போன நினைவுகளில் தானே தன்னை அறிய- வீசிய வார்த்தையின் விஷ வீர்யம் உணர- பார்வதியின் அருமை பிரம்மாண்டமாக- 

“பாசக்காரி… வஞ்சகமில்லாத மனசுக்காரி… பாவம், அவளை ஒரே கொத்தாய் கொத்தி கொன்னே போட்டுட் டேன். அவளைப் போய் எப்படிக் கூப்பிட? எந்த மூஞ்சியோடு வந்து சேருன்னு வாய் தொறந்து சொல்ல?” 

தனது சிறுமையை உணர்ந்த வெட்க நினைவோடு முணுமுணுத்துக் கொண்ட மாரிக்காளை. 

பதினைஞ்சு நாளாச்சு, அவள் போய். சரியாய்ச் சாப் பிட்டு பத்து நாளாச்சு. பன்னிக்குட்டி மாதிரி கால். நகரக் கூட முடியவில்லை. வலி உயிரைப் பிடுங்குகிறது. எப்படி மீள? 

வேறு வழியில்லை. காலில் விழுந்தாவது அவளைக் கூட்டிக் கொண்டு வரணும். காலில் விழலாம். தப்பில்லை. நியாயம்தான். 

சரி, எப்படிப் போறது? ரெண்டு முப்பது பைசா டிக்கட் ஆலமர ஸ்டாப்பில் இறங்கி, வெம்பரப்பாகக் கிடக்கிற கரிசல்க் காட்டில் ஒன்றரை மைல் நடந்து போகணும். 

போனால்தான்…. பார்வதியின் அம்மா ஊர். 

எப்படிப் போக? அசையக் கூட முடியாத நிலையில், இந்தத் தூரம்… பெரீய்ய மலை. 

ஒரு பையனைக் கூப்பிட்டு சோலைச்சாமி நாடாரை வரச் சொன்னான். அவர்தான், நானாச்சு என்று பார்வ தியை இவனுக்கு ‘மூய்த்து’ வைத்தவர். அவரைத்தான் கெஞ்சிக் கூத்தாடி… போய்க் கூட்டிக் கொண்டு வரச் செய்யணும். 

பையன் அரை மனசாய்ப் போனான். 

வீடு, வீடாக இல்லை. வெறும் மயானம். மனுசத் தோழ மையில்லாத வனாந்திரம். நெஞ்சின் ஆழம் வரைக்கும் ஊசியாய்ப் பாய்ந்து கொல்கிற தனிமை உணர்ச்சி. 

சோலைச்சாமி நாடார் வந்து சேர்ந்தார். அழுது கசிந்தான். நடந்தது பூராவையும் கொட்டிக் கதறினான். 

“சரியப்பா… ஒன்னைப் பாக்கப் பாவமாத்தான் இருக்கு. நா என்ன செய்யட்டும்? எனக்கு தலைக்கு மேலை வேலைக. நகர்ந்து போக வழியில்லியே… சரி, ரெண்டு நா பொறுத்துக்க… நா போய்ட்டு வாரேன்.” 

போய் விட்டார். இவனுக்கு அவமானமாக இருந்தது.

ரெண்டு நாள். 

சாகக்கிடக்கிறவனுக்கு தண்ணீர் கேட்டால், மேகத்துக்கு ஆள் அனுப்புகிறார். பற்றியெரிகிற கூரைக்கும் வெட்டப் போற கிணற்றுக்கும் கிட்டத்திலேயா இருக்கு? 

அவரது அலட்சியம். சலிப்பான பதில். 

இவனுக்குள் முள் முள்ளாய் உறுத்தல். நாதியற்றுப் போய்- சகலராலும் கைவிடப்பட்ட அனாதையான வனாய் அவமானமாய் உணர்ந்தான். 

ஒருத்தரும் உதவ மாட்டேன் என்கிறார்களே… ஒரு உப்புக் கல்லுக்குக் கூட பெறாதவனாகி விட்டோமே என்கிற உணர்ச்சி. உணர்வின் அவஸ்தை. மனப்பிசைவு. நெஞ்சுக்குள் ஏதோ புரண்டு, கண்ணுக்குள் நீரின் உறுத்தல். முள்ளான உறுத்தல். 

ஓவென்று வெடித்து அழ வேண்டும் போலிருந்தது. விம்மி விம்மித் தணிகிற நெஞ்சுக்கூடு. அப்போது- 

வீட்டு முற்றத்தில் கால் அரவம். உள் மனதுக்குள் பாஷை பேசுகிற- பரிச்சயமான- அரவம். ‘திங், திங்’கென்று தரையே அதிர்கிற அரவம். 

தவிப்பின் விளிம்பில் நின்ற மனம், ‘பார்வதியா’ என்று கூவத் துடித்தது. பார்வதியே தான். 

நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் முகம், உணர்ச்சியற்ற முகம். பிரம்மாண்டமாய்- பெண்மையின் விசுவரூபமாய் – தெரிகிற பார்வதி. 

வெடித்துக் கதறி விட்டான். வெட்க வேதனையும் கசப்புமான உணர்ச்சியெல்லாம் கசிந்து வெளிப்பட… குமுறிக் குமுறி அழுதான், முழங்காலுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு. 

பார்வதி, அவனது பாதத்தையே பார்த்தாள். புடைத்து வீங்கியிருந்தது. அடை அடையாய் தோல் உரிந்து… அதில் தெறித்த அவனது கண்ணீர்த் துளிகள்… அவனது மனக்கசிவு. 

“நீரு செத்தாலுஞ் சரி, இந்த வாசப்படியை மிதிக்கவே கூடாதுன்னுதா நெனைச்சேன். கால்லே முள்ளு குத்தி, நகர மாட்டாமே, கொலை பட்டினியா கெடக்குறது கேள் விப்பட்ட பெறகு… மனசு கேக்கலே. வந்து தொலைச்சேன்.” 

“நீ எத்தனை தடவை வெளக்கு மாத்தாலேயே என்னை அடிச்சாலும் தகும். நாஞ் சொன்ன சொல்லு அப்படி.’ 

“நீரு எம்மேலே சந்தேகப்பட்டதுலே… இப்ப எனக்கு கோவமேயில்லே.” 

“நெசம்மாவா?” 

“சத்தியமா!” 

“அப்படியா?” 

“ஆமா நா எதுக்கு கோவப்படணும்? ஒமக்கே ஒம்ம மேலே வந்த சந்தேகந்தான், நீரு என்னைப் பேசுன பேச்சு. ஒம்ம மூஞ்சியிலே நீரே எச்சிலைத் துப்பிக்கிட்டீரு… ஒமக்குத்தான் அசிங்கம்.” 

அவன் விருட்டென்று நிமிர்ந்தான். அவளது ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு முள்ளாய் உள்ளே சொருகிக் கொள்ள… 

அவனுக்கும் ஏதோ புரிவது மாதிரியுமிருந்தது. புரியாத மாதிரியும் மாய்மாலம் காட்டியது. திகைப்பும் வியப்புமாய் அவளைப் பார்க்க… 

அவள் வீட்டை, மினுக்கி வைத்த குத்துவிளக்காக்கிக் கொண்டிருந்தாள். 

வேலி தைத்து வீங்கிய பாதத்தை பயமில்லாமல் பார்த்தான். அது வலியில் நடுங்கியது. 

தைத்த வேலிமுள்ளை வென்று, வேலி மரம் வெட்ட புறப்படும் பாதம், வாழ்க்கையைப் போல. 

– நவம்பர் 1993, புதிய பார்வை, தீபாவளி சிறப்பிதழ்.

– கணக்கு (சிறுகதைகள்), முதற்பதிப்பு: மார்ச் 1994, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *